ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron to deploy French army against “yellow vest” protests

“மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு எதிராக மக்ரோன் பிரெஞ்சு இராணுவத்தை நிலைநிறுத்த உள்ளார்

By Anthony Torres
21 March 2019

புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், பிரெஞ்சு அரசு செய்தி தொடர்பாளர் பென்ஜமின் கிறிவோ அறிவிக்கையில் இந்த வாரயிறுதி "மஞ்சள் சீருடை" போராட்டங்களின் போது ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆயுதப் படைப்பிரிவுகளைச் செயல்படுத்த இருப்பதாக அறிவித்தார். மக்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளுக்காக பிரெஞ்சு மண்ணில் ஆயுதப்படை அணிதிரட்டப்பட இருப்பது, 1954-1962 அல்ஜீரியா போருக்குப் பின்னர் இதுவே முதல்முறையாகும்.

அந்த நடவடிக்கையில் “அவர்களின் பணியுடன் சேர்ந்து குறிப்பிட்ட நிலையான இடங்களைப் பாதுகாக்கின்ற, அதாவது பிரதானமாக உத்தியோகபூர்வ கட்டிடங்களை பாதுகாக்கும்" பணியும் இருக்கும் என்று கிறிவோ அறிவித்தார். பொலிஸ் படைகள் "போராட்ட இயக்கங்களின் மீது முழுமையாக கவனம் செலுத்துவதற்கும், பொது ஒழுங்கைப் பேணுவது மற்றும் மீள-ஸ்தாபிப்பதற்கு" அவற்றை அனுமதிக்க இது அவசியப்படுவதாக கூறி ஆயுதப்படைகளிடம் தஞ்சமடைவதை அவர் நியாயப்படுத்தினார்.

இந்த சனிக்கிழமை நிலைநிறுத்தப்படவிருப்பதன் மீதான நடவடிக்கை விபரங்களை விவாதிக்க இன்று மதியத்திற்குப் பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரென்ஸ் பார்லி பொலிஸ் படைகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளார்.

இராணுவப் படைப்பிரிவுகளை அணிதிரட்டுவது, செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட அரசின் பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு கூடுதலாக வருகிறது. போராட்டங்களில் "தீவிரக் கொள்கையினர்" கலந்து கொண்டால் போராட்டங்களுக்கு தடைவிதிக்க மாநிலங்களை அனுமதிப்பது, தடைவிதிக்கப்பட்ட போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் மீதான அபராதத்தை 38 யூரோவில் இருந்து 135 யூரோவாக அதிகரித்திருப்பது, பொலிஸில் "குண்டர்-எதிர்ப்பு படைப்பிரிவுகளை" அமைப்பது, டிரோன்களைப் பயன்படுத்துவது, ஆர்ப்பாட்டக்காரர்களைப் பின்தொடர்ந்து பொலிஸ் கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் இரசாயன குண்டுகளை வீசுவது, ஆர்ப்பாட்டக்காரர்களை நிறுத்தி அடையாளம் காண பொலிஸ் சாவடிகளைப் பயன்படுத்துவது ஆகியவை அந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் உள்ளடங்கும்.

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டங்களை அச்சுறுத்துவதற்கு பிரெஞ்சு ஆயுதப்படைகளிடம் தஞ்சமடைவதென்பது சர்வதேச முக்கியத்துவம் மிக்க ஒரு வரலாற்று திருப்புமுனையைக் குறிக்கிறது. தசாப்தகால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதம் மீது அதிகரித்து வரும் அரசியல் கோபத்தால் உந்தப்பட்டு, உலகெங்கிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலை பரவி வருகிறது. இவை “மஞ்சள் சீருடையாளர்களின்” போராட்டங்களில் இருந்து, ஐரோப்பா எங்கிலும் தசாப்தங்களாக இருந்து வரும் நீண்ட நெடிய சம்பள உயர்வின்மைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள், அல்ஜீரிய இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான பெருந்திரளான மக்கள் போராட்டங்கள், அமெரிக்க ஆசிரியர்கள் மற்றும் மெக்சிக்கோவின் மக்கில்லாடோரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், இலங்கை மற்றும் இந்தியாவில் பாரிய வேலைநிறுத்தங்கள் வரையில் நீள்கின்றன.

“மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக இராணுவத்தை நிலைநிறுத்துவதென்ற மக்ரோனின் முடிவானது, தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்பை மிரட்டுவதற்காகவும், அது தோல்வியடைந்தால், ஆயுதப் படைகளைக் கொண்டு அதை ஒடுக்க முயற்சிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்காகவும் சர்வதேச அளவில் ஆளும் வர்க்கத்தின் அதிகரித்த பெரும் பிரயத்தன முயற்சிகளின் பாகமாகும்.

கடந்த சனிக்கிழமை "மஞ்சள் சீருடை" போராட்டங்களின் போது பாரீசின் சாம்ப்ஸ்-எலிசே வீதியில் நடந்த சூறையாடலைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஊடகங்களின் பிதற்றல்களுக்கு மத்தியில், அரசாங்கம் ஆயுதப்படைகளை நிலைநிறுத்துகிறது. ஆனால் இந்த சூறையாடலை "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் தான் செய்தார்கள் என்பதற்கு அங்கே எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. பாரீஸ் நகரத்தலைவர் ஆன் இடால்கோ (Anne Hidalgo) உட்பட உயர்மட்ட அதிகாரிகள் கூறுகையில், இந்த நடவடிக்கைகள் அதிவலது குழுக்களால் நடத்தப்பட்டதாகவும், அவர்கள் பொலிஸ் படையின் கட்டளைச் சங்கிலி முறிந்ததைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், அவர்களில் சிலர் சாம்ப்ஸ்-எலிசே வீதி கடைகள் சூறையாடப்படுவதில் இணைந்து படமெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை சம்பவத்தின் தெளிவின்மைக்கு மத்தியில், அரசாங்கமோ போராட்டக்காரர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை வேகமாக அதிகரிப்பதன் மூலமாக விடையிறுக்கிறது. உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்னர் சனிக்கிழமை ஆணவத்துடன் அறிவிக்கையில், பொலிஸ் "10,000 குண்டர்களை" முகங்கொடுத்திருப்பதாக தெரிவித்தார், அதாவது அமைதியான "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களில் பாரிய பெரும்பான்மையினர் வன்முறையான குற்றவாளிகள், அவர்களை பொலிஸ் அவ்விதத்தில் தான் கையாளும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். சனிக்கிழமை வன்முறை குறித்து குறிப்பிட்டு மக்ரோன் அவர் பாகத்தில் ஆத்திரமூட்டும் வகையில் அறிவிக்கையில் "மஞ்சள் சீருடை" இயக்கத்தின் ஆதரவாளர்கள் "தங்களையும் அதற்கு உடந்தையாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்" என்றார்.

சனிக்கிழமை சூறையாடல், நீண்டகாலமாக தயாரிப்பு செய்யப்பட்டு வந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு சாக்குபோக்கு மட்டுமே ஆகும். ஜனாதிபதி பிரான்சுவா ஹாலாண்டின் கீழ் சோசலிஸ்ட் கட்சி (PS) ஆட்சியிலிருந்த போதே அது மார்சைய்யின் தொழிலாள வர்க்க மாவட்டங்களுக்கும் மற்றும் ஏனைய நகரங்களுக்கும் ஆயுதப்படைகளை அனுப்ப அழைப்புவிடுக்கத் தொடங்கி இருந்தது, அப்போதிருந்தே பிரான்சுக்குள் ஆயுதப்படை மீது தஞ்சமடைவதற்கான சாத்தியக்கூறு குறித்து பகிரங்கமாக பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்குத் துருப்புகளைப் பயன்படுத்துவதென்பது, வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் தொடங்கிய "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" மக்களைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டவை என்ற மோசடியான வாதங்களை WSWS தொடர்ந்து எதிர்த்து வந்ததன் சரியானத்தன்மையை அடிக்கோடிடுகிறது. சிரியப் போரில் நேட்டோ சக்திகள் பயன்படுத்திய இஸ்லாமியவாத வலையமைப்புகளால் நவம்பர் 13, 2015 இல் பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த போதினும், அதற்குப் பின்னர் சோசலிஸ்ட் கட்சி அறிவித்த அவசரகால நிலையின் கீழ் அக்கட்சி Operation Sentinel என்பதைத் தொடங்கியது. சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரான இப்போதைய மக்ரோன், “மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக அவர் திருப்பி வருகின்ற இடம்பெயரும் பொலிஸ் படைப்பிரிவுகளை மீளப்பலப்படுத்த இத்தகைய "பயங்கரவாத-எதிர்ப்பு" துருப்புகள் என்றழைக்கப்படுவதைப் பயன்படுத்தி வருகிறார்.

சர்வதேச அளவில் தொழிலாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வெறுக்கப்படுவதை உணர்ந்தும், பிரான்ஸ் மற்றும் அல்ஜீரியா இரண்டு இடங்களிலும் அதிகரித்து வரும் போராட்டங்களால் பீதியுற்றும், நிதியியல் பிரபுத்துவம் ஈவிரக்கமின்றி வர்க்க போரைத் தொடுக்க உத்தேசித்துள்ளது. “பிரான்சில் வர்க்க போராட்டங்கள்" என்று தலைப்பிட்டு Monde diplomatique பத்திரிகையில் வெளியான ஒரு பெப்ரவரி கட்டுரை, இப்போது பெரிதும் அமைதியாக உள்ளதும் ஆனால் பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஆழமாக உள்ளதுமான இந்த அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் ஸ்தம்பித்திருப்பதைச் சுட்டுக்காட்டியது.

அந்த மாதயிதழ் எழுதியது, “தேர்தலில் தோற்றுவிடுவோமோ, அல்லது 'சீர்திருத்தம்' செய்ய தவறிவிடுவோமோ, அல்லது பங்குச்சந்தை இழப்புகளை ஏற்க வேண்டியிருக்குமோ என்பதல்ல பயம். மாறாக கிளர்ச்சி குறித்தும், கலகம் குறித்தும், கொடிய வறுமைநிலை குறித்தும் பீதி நிலவுகிறது. ஓர் அரை நூற்றாண்டாக, பிரெஞ்சு உயரடுக்குகள் இதுபோன்றவொரு உணர்வை அனுபவித்ததில்லை. ... ஒரு கருத்துக்கணிப்பு அமைப்பின் இயக்குனர் அவர் தரப்பில் கூறுகையில், 'பெரிய தலைமை செயலதிகாரிகள் உண்மையில் மிகவும் கவலை கொண்டிருப்பதாகவும்,' '1936 அல்லது 1968 குறித்து நான் என்ன படித்திருக்கிறேனோ [இரண்டு பிரெஞ்சு பொதுவேலைநிறுத்தங்கள்] அதற்கு ஒத்த' ஒரு சூழலைக் குறித்தும் குறிப்பிட்டார். அத்தியாவசியமானதை இழப்பதைத் தவிர்க்க நாங்கள் நிறைய பணத்தைச் செலவிட தயாராக இருக்கிறோம் என்று அவர்களே கூறும் ஒரு தருணம் வரும்.”

ஆகவே நிதியியல் பிரபுத்துவம் ஒடுக்குமுறைக்குள் ஆதாரவளங்களைப் பாய்ச்சி வருவதுடன், மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு ஆயுதப்படைகள் அனுப்பப்படாது என்ற நீண்டகால உத்தரவாதங்களை எல்லாம் உடைத்து வருகிறது. 2013 இல் மார்சைய்க்கு ஆயுதப்படைகளை அனுப்புமாறு முன்னாள் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் செகொலென் ரோயால் (Ségolène Royal) அழைப்புவிடுத்ததும், வரலாற்று பேராசிரியர் ஜோன்-மார்க் பேர்லியேர் (Jean-Marc Berlière) பொலிஸ் நடவடிக்கைகளுக்காக பிரெஞ்சு ஆயுதப்படை பயன்படுத்தப்பட்ட வரலாறு குறித்து Le Monde உடனான ஓர் நேர்காணலில் மீளாய்வு செய்தார்.

19 ஆம் நூற்றாண்டில், வேலைநிறுத்தங்கள் மற்றும் மே தின பேரணிகளின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட தொழிலாளர்களை இராணுவம் மீண்டும் மீண்டும் படுகொலை செய்தமை மிகப் பாரியளவில் வர்க்க கோபத்தைத் தூண்டியது என்று பேர்லியேர் விவரித்தார்: “ஃபூர்மி, நார்போன் மற்றும் இன்னும் பல இடங்களிலும் அவ்வப்போது நடந்த அதுபோன்ற படுகொலைகள் அதன் தோற்றத்தை கடுமையாக பாதித்தது, வேலைநிறுத்தங்களின் போது முதலாளிமார்களின் தரப்பில் அது தரப்பெடுத்ததன் காரணமாக சமூக மற்றும் அரசியல்ரீதியில் அது நயவஞ்சக கூட்டு வைத்திருக்கும் சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே அதன் பிம்பம் படுமோசமாக சேதமடைந்திருந்தது.”

முதலாம் உலக போரின் போது ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னர், பிரெஞ்சு இராணுவத்தினுள் பாரிய கலகங்கள் வெடித்திருந்த நிலையில், அரசு இனியும் உள்நாட்டு பொலிஸ் வேலைக்கு இராணுவத்தை நம்ப முடியாதென முடிவெடுத்தது. “1914-1918 போரின் வெற்றி மற்றும் தியாகங்களுக்குப் பின்னர், வெற்றி பெற்று வந்த அந்த ஆயுதப்படைகளை அதற்கு மேல் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாமல் போனது,” என்று பேர்லியேர் தெரிவித்தார். முதலாம் உலகப் போருக்கு பின்னர் பிரெஞ்சு இராணுவத்தை உள்நாட்டு பொலிஸ் வேலைகளுக்காக தற்போதைய பிரான்ஸ் எல்லைகளுக்குள் தீவிரமாக பயன்படுத்த முடிந்ததா என்று வினவிய போது, அவர் தொடர்ந்து கூறினார்: “அடிப்படையில், முடியவில்லை. அரசியல் அபாயம் மிகவும் அதிகமாக இருந்தது: கட்டாய இராணுவச் சேவையாளர்களின் மனோபாவம் என்னவாக இருந்திருக்கும்?”

1954-1962 விடுதலை போரின் போது அல்ஜீரியாவைப் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் வைப்பதற்கான ஒரு தோல்வியடைந்த முயற்சியில் ஆயுதப்படைகள் பெருந்திரளான மக்கள் மீது கீழ்தரமாக சித்திரவதை மற்றும் படுகொலைகளை நடத்தியதற்குப் பின்னர், [இப்போது] மக்ரோன் மீண்டும் ஆயுதப்படைகளுக்குத் திரும்பி வருகிறார். அவர் கடந்தாண்டு நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானையும் மற்றும் முதலாம் உலக போருக்கு முன்னர் உள்துறை அமைச்சராக இருந்து 18 தொழிலாளர்கள் படுகொலை செய்வதற்கு இட்டுச் சென்ற இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டவருமான ஜோர்ஜ் கிளெமொன்ஸோ (Georges Clemenceau) ஐயும் புகழ்ந்துரைத்தமை, ஒடுக்குமுறையை சட்டபூர்வமாக்குவதற்கான உத்தியோகபூர்வ தொடர் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

இடதுசாரி, சோசலிச மற்றும் தொழிலாள வர்க்க அரசியல் பொருத்தமற்றது என்றும் செத்துவிட்டது என்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருந்து வரும் தொடர்ச்சியான பிரகடனங்களின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. சிறிதும் சட்டபூர்வத்தன்மை இல்லாமல், உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆயுதப்படைகளை நிலைநிறுத்துவதற்கான நிலைமைகளை அவர்கள் உருவாக்குவது, உத்தியோகபூர்வ பிரெஞ்சு அரசியல் வாழ்வில் அர்த்தமுள்ள எந்தவித எதிர்ப்புமின்றி நடக்கிறது. ஓர் ஆரம்ப கட்டத்தை குறித்துநின்ற போதிலும் “மஞ்சள் சீருடை" போராட்டங்களின் மத்திய பணி, இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்திற்கான இந்த முனைவுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்பைச் சுயாதீனமாக அணிதிரட்டுவதாக இருக்க வேண்டும்.