ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Algerian army purges intelligence agencies as anti-regime protests grow

ஆட்சி-எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரிக்கின்ற நிலையில், அல்ஜீரிய ஆயுதப்படை உளவுத்துறை முகமைகளைக் களையெடுக்கிறது

By Alex Lantier
9 April 2019

அல்ஜீரிய இராணுவ சர்வாதிகாரம் விலக வேண்டுமெனக் கோரி ஏழு வார கால பாரிய மக்கள் போராட்டங்களுக்குப் பின்னர் மற்றும் ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவின் இராஜினாமா குறித்து ஆயுதப்படையின் கடந்த வார அறிவிப்புக்குப் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இளைஞர்களை படைப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து பிரிக்கும் பிளவு முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது.

அல்ஜீரிய மக்களின் பெரும் பிரிவுகள், அவர்களால் கைவரப்பெற முடியுமென நம்பி கொண்டிருக்கும் புட்டஃபிளிக்காவின் இராஜினாமா மட்டுமே வெற்றி இல்லை என்று சரியாகவே தீர்மானித்துள்ளனர். 2013 இல் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டதிலிருந்து பேச முடியாமல் ஒரு சக்கர நாற்காலியில் முடங்கி போயுள்ள புட்டஃபிளிக்கா இந்த சர்வாதிகாரத்திற்குத் தலைமை தாங்கி கொண்டிருக்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. இப்போது, சபாநாயகர் அப்தெல்காதர் பென்சலாஹ் (Abdelkader Bensalah) உள்ளடங்கலாக, ஒரு புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இந்த மாற்றத்தை மேற்பார்வை செய்யவிருக்கின்ற அதிகாரிகளை வெளியேற்றுவதற்கான கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன மற்றும் ஆயுதப்படையின் தலைமை தளபதி அஹ்மெட் கய்ட் சலாஹ் இற்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

2011 இல் ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து வெளியேற்றிய எகிப்தின் புரட்சிகர போராட்ட அலையை நசுக்கிய 2013 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியைச் சுட்டிக்காட்டும் விதமாக, “மீண்டும் எகிப்திய சூழல் வேண்டாம்" என்றும், “கய்ட் சலாஹ், மக்களை முட்டாளாக்க முடியாது" என்றும் இதுபோன்ற கோஷங்களை முழங்கிய தொழிலாளர்களின் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்களுக்குப் பின்னர், தேசிய விடுதலை முன்னணியும் (FLN) ஆயுதப்படையும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகளை வெளியேற்ற தயாரிப்பு செய்து வருகின்றன.

ஆட்சியை-ஆதரிக்கும் நாளிதழான El Moudjahid ஞாயிறன்று ஒரு கட்டுரை மற்றும் ஒரு தலையங்கத்தை ஏந்தி வந்தது, அது பென்சலாஹை நீக்குவதற்கான சாத்தியக்கூறை உயர்த்திக் காட்டியது. RFI தகவல்படி "பென்சலாஹ் வெளியேற வேண்டும்,” என்று அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் கூறுவதாக அப்பத்திரிகை மேற்கோளிட்டிருந்தது, அதேவேளையில் "சாத்தியமில்லாதது எதுவும் இல்லை,” என்று தலைப்பிட்ட அந்நாளிதழின் தலையங்கம் குறிப்பிடுகையில், பென்சலாஹ் இல்லாமல் ஜனாதிபதி மாற்றம் என்பது "பகுத்தறிவற்றதோ அல்லது செய்வதற்கு சாத்தியமில்லாததோ இல்லை,” என்று குறிப்பிட்டது.

ஆட்சியின் உயர்பதவிகளுக்குள் மிகவும் முக்கிய இலக்கில் இருப்பவர், அல்ஜீரிய உள்நாட்டு உளவுத்துறை இயக்குனரான உளவுத்துறையின் தலைமை மேஜர் ஜெனரல் அத்மன் தர்டாக் (Athmane Tartag) ஆவார். ஏப்ரல் 5 இல் தர்டாக் நீக்கப்பட இருப்பதாக வந்த வதந்திகளுக்குப் பின்னர், பலம் வாய்ந்த பாதுகாப்புச் சேவை இயக்குனரகத்தின் (DRS) தலைவராக அவரை கய்ட் சலாஹ் பிரதியீடு செய்யப்படுவார் என்று ஏப்ரல் 7 இல் அறிவிக்கப்பட்டது.

இது, உள்நாட்டு பாதுகாப்பு இயக்குனரகத்திற்குத் (DSI) தலைமை வகித்த மேஜர் ஜெனரல் Boura Rezigue Abdelkader மற்றும் வெளிப்புறப் பாதுகாப்புக்கான பொது இயக்குனரகத்திற்குத் (DGSE) தலைமை வகித்த ஜெனரல் Abdelhamid Bendaoud ஆகியோரை கய்ட் சலாஹ் நீக்கியதை தொடர்ந்து வந்தது. DGSE மற்றும் DSI இப்போது ஆயுதப்படையின் தலைமைத் தளபதியின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் வகையில், கய்ட் சலாஹ், கட்டளைச் சங்கிலியை மறுஒழுங்கமைத்து, அதிகாரத்தை அவரின் சொந்த கரங்களில் குவித்து வருகிறார்.

உளவுத்துறை சேவைகளில் களையெடுப்பதன் மூலமாக, அனைத்திற்கும் மேலாக ஆயுதப்படை அந்த ஆட்சி மீதான மக்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்தவும் மற்றும் 1992-2002 அல்ஜீரிய உள்நாட்டு போரின் போது அந்த ஆட்சி நடத்திய குற்றங்கள் ஆயுதப்படைக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பின் குவிமையமாக மாறுவதில் இருந்து தடுக்கவும் முயன்று வருகிறது. தர்டாக் நீக்கப்பட்டமை உள்நாட்டு போரின் போது அவரது இரத்தந்தோய்ந்த முன்வரலாறு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் முகங்கொடுக்க இட்டுச் செல்லக்கூடும் என்று ஏற்கனவே அல்ஜீரிய பத்திரிகைகள் ஊகங்களை வெளியிட்டு வருகின்றன.

உள்நாட்டு போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட கைதிகளின் உறவினர்கள், அவர்களின் அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு, முழு விசாரணைகள் கோரி கடந்த வாரம் அல்ஜியேர்ஸின் பிரதான தபால் நிலையத்திற்கு வெளியே ஒரு பேரணி நடத்தினர். Mondafrique கருத்துரைத்தது, “ஜனாதிபதி புட்டஃபிளிக்கா எப்போதுமே இந்த 'காணாமல் போனவர்கள்' குறித்து விசாரணைகளைத் தொடங்க மறுத்தார்; இந்த போராட்டமானது, மாற்றத்தின் போது தலைமை வகிக்க மக்கள் கோரிக்கைகள் மற்றும் கோப அலைகளின் மீது பவனிவர முயன்று வருகின்ற, தலைமை தளபதிகளின் தலைவர் அஹ்மெட் கய்ட் சலாஹின் கவனத்திலிருந்து நிச்சயமாக தப்பாது.”

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் "பென் அக்நூன் அசுரனை" (monster of Ben Aknoun) கண்டித்தனர், இது இஸ்லாமியவாத சந்தேகத்தின் பேரில் அல்லது ஏனைய எதிர்ப்பு அரசியலுக்காக பிடிக்கப்பட்ட கைதிகளை இட்டுச் சென்று, சித்திரவதை செய்து, பெரும்பாலும் சுட்டுத்தள்ளிய முக்கிய மையங்களில் ஒன்றாகும். 1990 இல் இருந்து 2001 வரையில் பிரதான இராணுவ விசாரணை மையம் (CPMI) என்று உத்தியோகபூர்வமாக அறியப்பட்டு வந்த பென் அக்நூன் மையத்தை தர்டாக் தான் இயக்கி வந்தார். FLN இன் முன்னாள் தலைவர் Kasdi Merbah இஸ்லாமியவாத சக்திகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயன்ற நிலையில், 1993 இல் அவர் கொல்லப்பட்டதில் தர்டாக் தனிப்பட்டரீதியில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அல்ஜீரியாவில் பிரெஞ்சு உளவுத்துறையினது பிரதான தொடர்புகளில் ஒன்றாக தர்டாக்கின் பெயரும் வந்துள்ளது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் அல்ஜீரிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்குள் நகர்ந்து வருகின்ற நிலையில், உள்நாட்டு போரில் அல்ஜீரிய இராணுவ சர்வாதிகாரத்தினது வரலாறு எழுப்பும் முக்கிய கேள்வி என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அமைப்பின் அவசியமும் மற்றும் அதை புரட்சிகரமானரீதியில் அணித்திரட்டுவதுமாகும்.

ஒரு “ஜனநாயக பரிமாற்றத்திற்கு” தலைமை வகிக்க அஹ்மெட் கய்ட் மீதோ அல்லது அல்ஜீரிய படைப்பிரிவின் உயரதிகாரிகள் மீதோ எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. பல தசாப்தங்களாக அல்ஜீரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைச் சூறையாடியுள்ள ஆட்சிக்கு அவர்கள் சேவையாற்றுகின்றனர், அவர்கள் அந்த செல்வ வளங்களைப் பிரான்ஸ் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள வெளிநாட்டு வங்கி கணக்கிற்கு அனுப்பினர், அதேவேளையில் தொழிலாளர்களோ வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையில் விடப்பட்டு ஓர் இரத்தக்களரியான இராணுவ ஆட்சியால் ஒடுக்கப்பட்டனர். விசாரணைகள் சுதந்திரமாக நடத்தப்பட்டால் அவர்கள் என்ன பதில் கூறுவது என்று தளபதிகள் பீதியுற்றுள்ளனர் என்பதால், அல்ஜீரியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சியைப் பேணுவதற்கு அவர்களின் அதிகாரத்தைக் கொண்டு அனைத்தும் செய்வர்.

அல்ஜீரிய இராணுவ ஆட்சியை ஜனநாயகமயப்படுத்துவதற்கான, 1988 சீர்திருத்தங்கள் செய்வதற்கான மற்றும் பல கட்சி ஜனநாயகத்திற்கு மாற்றுவதற்கான தோல்வி அடைந்த கடைசி முயற்சியிலிருந்து 1992-2002 அல்ஜீரிய உள்நாட்டு போர் வெடித்தது. இஸ்லாமியவாத இரட்சிப்பு முன்னணியின் (FIS) 1991 தேர்தல் வெற்றியை அந்த ஆட்சி தற்காலிகமாக இடைநிறுத்தியது, இது அல்ஜீரியாவை 10 ஆண்டுகள் உள்நாட்டு போருக்குள் மூழ்கடித்ததில் 200,000 உயிர்கள் பலியாயின. இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் தான் இராணுவத்தின் பாசாங்குத்தனமான இலக்குகள் என்றாலும், FLN இன் வலதுசாரி பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளது எதிர்ப்பை நசுக்க பரந்த தொழிலாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தவும் படுகொலை செய்யவும் அது இஸ்லாமிய அமைப்புகளுக்குள் ஊடுருவியது.

சுதந்திரமான அல்ஜீரிய அதிகாரிகள் இயக்கம் (MOAL) மற்றும் Algeria Watch அமைப்புகள் "அல்ஜீரியா: மரண எந்திரம்" என்று தலைப்பிட்டு வெளியிட்ட ஒரு 2005 அறிக்கை இந்த இரத்தந்தோய்ந்த இராணுவ ஒடுக்குமுறையின் மீது, குறிப்பாக, பென் அக்னொவ்னில் தர்டாக் மேற்பார்வையிட்ட செயல்பாடுகள் மீது ஒரு விரிவான மற்றும் குரூரமான சித்திரத்தை வழங்குகின்றது.

அது எழுதுகிறது, “1992 இல் ஏறக்குறைய வசந்தகாலத்தின் தொடக்கத்தில், 'மீட்டெடுக்க முடியாத அடிப்படைவாதிகளை' நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டாமென, தர்டாக் அவரின் உயரதிகாரி தளபதி Kamel Abderrahmane வசமிருந்து உத்தரவுகள் பெற்றார்: இது தெளிவாக கொலை செய்வதற்கான ஒரு உரிமமாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக, அவர்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். அங்கே 1993-1994 இல் தண்டிக்கும் வகையிலான கடல் பயணங்கள் இருந்தன, அதில் நாளொன்றுக்கு 10 இல் இருந்து 40 பேருக்கு இடையே உயிரிழந்தார்கள். முற்றுமுதலான படுகொலை அதிரடிபடைகளுக்கு இந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டன, இஸ்லாமியவாதிகளைப் பின்தொடர்ந்து, அவர்களை ஒழித்துக்கட்டவும் மற்றும் மக்களைப் பீதியூட்டவும் அவை பணிக்கப்பட்டிருந்தன.

அந்த அறிக்கையின்படி, தர்டாக்கின் நடவடிக்கைகளில் மற்றொரு முக்கிய பாகமாக இருந்தது என்னவென்றால், FLN மற்றும் ஆயுதப்படையை எதிர்த்தவர்கள் என்ற சந்தேகத்திற்குரிய உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தர்டாக்கும் அவர் உதவியாளர் "லெப்டினென்ட் மொஹம்மத்" உம் எவ்வாறு தளபதி மொஹம்மத் அப்பாஸாவைச் சித்திரவதை செய்தார்கள் என்பதை அது விவரிக்கிறது, அவர் மின் அதிர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, தீக்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இறுதியாக அந்த அறிக்கை அறிவிக்கிறது, “இரண்டாம் நாள் மாலை, அது அடையாளம் காணக்கூடிய உடலாக இருக்கவில்லை, வீங்கிப் புடைத்திருந்தது, ஒன்றுமில்லாமல் போயிருந்த கண்களில் கூட தீக்காயம் ஏற்பட்டிருந்தது, கேட்க முடியாதவாறு ஒருசில வார்த்தைகள் மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருந்தது. படைப்பிரிவினர் கண்ணியமாக அடக்கம் செய்வதற்குரிய உரிமையைக் கூட மறுத்தனர்.”

கெய்த் சலாஹின் தலையீடு மூலமாக அல்லது ஒருவேளை FLN இன் அரசு கட்டுப்பாட்டிலான அல்ஜீரிய தொழிலாளர் பொதுச்சங்கத்தின் (UGTA) தலையீடு மூலமாக ஜனநாயகத்தை மலரச் செய்ய காத்திருப்பதாக அல்ஜீரிய இராணுவ சர்வாதிகாரத்தைச் சித்தரிக்கும் முயற்சிகள், பிற்போக்குத்தனமான அரசியல் மோசடிகளாகும்.

முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சர்வதேச போராட்டத்தின் உள்ளடக்கத்தில், அந்த ஆட்சி முறையற்று சேர்த்த செல்வவளங்களைப் பறிமுதல் செய்து, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மற்றும் சோசலிசத்தைக் கட்டமைப்பதற்காக தொழிலாள வர்க்க தலைமையிலான ஒரு போராட்டம் மட்டுமே அல்ஜீரியாவில் ஒரு ஜனநாயக ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான ஒரே வழியாகும்.