ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Free Julian Assange!

ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!

Statement of the World Socialist Web Site Editorial Board
12 April 2019

உலக சோசலிச வலைத் தளம், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை பலவந்தமாக பிடித்து கைது செய்ததை ஆணித்தரமாக கண்டிக்கிறது. அசான்ஜைப் பாதுகாக்கவும், அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படுவதை எதிர்க்கவும், மற்றும் அவரை விடுதலை செய்து எதிர்காலத்தில் எந்தவித தொல்லைப்படுத்தலும் இருக்காது என்ற உத்தரவாதங்களுடன் அவரை ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பவும் பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் நாங்கள் ஒரு முழுமையான பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்.

அசான்ஜ் மரணகதியிலான அபாயத்தில் உள்ளார். அசான்ஜ் குற்றவாளியென கண்டறியப்பட்டால் அவருக்கு ஐந்தாண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுக்களை மட்டுமே அவர் முகங்கொடுப்பதாக கூறி அமெரிக்க நீதித்துறை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவொரு அப்பட்டமான பொய்யாகும், அசான்ஜை அமெரிக்காவுக்குக் கொண்டு வருவதைச் சுலபமாக்குவதும், ஈக்வடோரிய மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் அவரை சித்திரவதை மற்றும் மரண தண்டனைக்கு உள்ளாக்கக்கூடிய ஓர் அரசிடம் ஒப்படைக்கவில்லை என்று ஒரு போலிக்காரணத்தை வழங்குவதுமே இதன் நோக்கமாகும்.

அவர் அமெரிக்காவின் சிறைக்காவலுக்கு மாற்றப்பட்டால், ஓர் "எதிரிப் போராளியாக" மரண தண்டனை அல்லது காலவரையற்ற சிறையடைப்புக்கு உட்படுத்தும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் உட்பட எதுவும் சாத்தியமாகலாம்.


வியாழனன்று காலை இலண்டனின் ஈக்வடோரிய தூதரகத்தில் ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டார்

பத்திரிகையாளர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதையே அவர் செய்தார் —அதாவது உண்மையை அம்பலப்படுத்தினார்— என்பதாலேயே அசான்ஜ் இலக்கில் வைக்கப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியருக்கு எதிராக சாட்சி கூற மறுத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்சியா மானிங் உடன் சேர்ந்து, அசான்ஜ், பொய்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட போரில் நடந்த குற்றங்களை அம்பலப்படுத்தினார், அந்த போர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

புதிய குற்றங்களுக்கும் இப்போது தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்றன. அசான்ஜிற்கு எதிரான சூழ்ச்சி கட்டவிழ்ந்து கொண்டிருந்த போதே கூட, கெய்ரோவின் படுகொலையாளர் அல்-சிசியை ட்ரம்ப் சந்தித்தார், வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை வெளியிட்டு கொண்டிருந்தார்.

இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும், நீதி விசாரணைக்கான பாசாங்குத்தனம் கூட இல்லாமல் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான நாசகரமான தாக்குதலில் குற்றவாளிகளாக நிற்கின்றனர்.

ஊழல் நிர்வாகத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பால் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு நெருக்கடியால் சூழப்பட்டு, ஈக்வடோரிய ஜனாதிபதி லெனின் மொரேனோ, வெள்ளை மாளிகை வழங்கிய விருப்பத்திற்குரிய பொருளாதார உதவியுடன் சேர்ந்து, அசான்ஜை வெளியேற்றுவதற்காக தஞ்சம் வழங்கும் ஈக்வடோரின் சொந்த சட்டங்களையே உடைத்தார். அவரின் நடவடிக்கைகள், அசான்ஜைப் பெருவாரியாக ஆதரிக்கும் ஈக்வடோரிய தொழிலாளர்களின் மரியாதையை அவமதித்துள்ளன.

தெரேசா மே தலைமையிலான இங்கிலாந்து அரசாங்கம், தெளிவாக எந்தவொரு சட்ட விசாரணைக்கும் கேடு உண்டாக்கத்தக்க அறிவிப்புகளை வெளியிட்டு, அசான்ஜ் கைது செய்யப்பட்டதன் மீது குரூர திருப்தியை வெளியிட்டு வருகிறது. மே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “மகாநகர பொலிஸ் ஜூலியன் அசான்ஜைக் கைது செய்துள்ளது என்ற இன்றைய காலை செய்தியை ஒட்டுமொத்த சபையும் வரவேற்கும்" என்று அறிவித்த போது, டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல தொழிற் கட்சி உறுப்பினர்களும் ஒப்புதலைக் காட்ட உற்சாக ஒலி எழுப்பினர்.

அசான்ஜை வெளிநாட்டிடம் ஒப்படைப்பதை "பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்க்க வேண்டும்" என்று அறிவித்து தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் சம்பிரதாயமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார், ஆனால் நாடாளுமன்றத்தில் மே அவரின் அவதூறுகளை வெளியிட்ட போது அவர் வாய்மூடி இருந்ததுடன், ஈக்வடோரிய தூதரகத்தில் அசான்ஜ் தஞ்சமடைய நிர்பந்திக்கப்பட்டதைக் குறித்தும் அவர் மவுனமாக இருந்தார்.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில், அசான்ஜிற்கு எதிரான பிராச்சாரத்திற்கு இப்போது ட்ரம்ப் நிர்வாகம் தலைமை கொடுத்து வருகிறது, ஜனநாயகக் கட்சியோ அவரைத் தொல்லைக்கு உட்படுத்துவதன் பின்னால் உறுதியாக நின்று, குற்றங்களை அம்பலப்படுத்துவதில் பங்களிப்பு செய்ததற்காக அசான்ஜைக் குறைகூறுகிறது, இந்த குற்றங்களுக்காகத் தான் ஹிலாரி கிளிண்டன் மிகச் சரியாக பாரியளவில் வெறுக்கப்பட்டார். ஜனநாயகக் கட்சியினரின் ரஷ்ய-விரோத பிரச்சாரத்தினது மத்திய நோக்கங்களில் ஒன்று, இணைய தணிக்கை மீதான ஒரு பரந்த பிரச்சாரத்தின் பாகமாக விக்கிலீக்ஸ் மீதான தாக்குதலை நியாயப்படுத்துவதாகும்.

இதற்கு பொறுப்பானவர்களின் பட்டியலில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் அமைப்புகளான போலி-இடதும் சேர்கின்றன, இவை அவர் மீதான தொல்லைப்படுத்தல்களையும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அசான்ஜை ஒப்படைக்கும் அவர்களின் கோழைத்தனத்தையும் நியாயப்படுத்த அவருக்கு எதிராக ஆரம்பத்தில் முடுக்கிவிடப்பட்ட மோசடியான பாலியல் குற்றச்சாட்டுக்களை பற்றிக்கொண்டன.

அரசின் கரமாக செயல்படுகின்ற ஸ்தாபக ஊடகங்கள், அதன் பங்கிற்கு, அசான்ஜ் மீதான தாக்குதலை ஆதரிக்க துள்ளிக்குதித்தன.

வியாழனன்று மாலை, நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இன் தலையங்க குழு அசான்ஜ் வேறு நாட்டிடம் ஒப்படைக்கப்படுவதை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டன. “அரசின் இரகசிய இராஜாங்க தகவல்களை வெளியிட்டதற்காக அல்ல, மாறாக அதை திருடியதற்காக தான் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மீது அரசு குற்றஞ்சாட்டுகிறது,” என்று நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்தது, “இந்த நிர்வாகம் திரு. அசான்ஜ் மீது சர்ச்சைக்கிடமற்ற குற்றத்தைப் பதிவு செய்வதன் மூலமாக சிறப்பாக தொடங்கியுள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.

வாஷிங்டன் போஸ்ட் அசான்ஜிற்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் பிரச்சாரத்தை ஆதரிப்பதில் இன்னும் பகிரங்கமாக இருந்தது, “திரு. அசான்ஜின் விடயம், அவரின் பாதுகாப்பவர்கள் தவறுதலாக எச்சரித்து வருவதைப் போல சிவில் உரிமைகளின் தோல்வியாக அல்ல, சட்ட ஆட்சியின் வெற்றியாக இருக்கும்,” என்று அறிவித்தது.

“திரு. அசான்ஜ் சுதந்திர-பத்திரிகையின் கதாநாயகன் இல்லை,” என்று போஸ்ட் அறிவித்தது. “நிஜமான பத்திரிகையாளர்களைப் போலில்லாமல், விக்கிலீக்ஸ் ஆவணங்களை பொதுக்களத்தில் குவித்தது.” போஸ்ட் வரையறையின்படி, பென்டகன் சார்பாக சுய-தணிக்கை செய்து கொள்பவர்கள் மட்டுமே "நிஜமான பத்திரிகையாளர்களாக" ஆகிறார்கள்.

ஒருசமயத்தில் பென்டகன் ஆவணங்களை பிரசுரித்த இதே பத்திரிகைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்குபவை அல்லாமல் வேறொன்றுமில்லை. ரஷ்ய அரசாங்கம் அதன் வெளிநாட்டு கொள்கையை விமர்சித்த ஒரு பத்திரிகையாளரைப் பலவந்தமாக பிடித்து கைது செய்திருந்தால், ஊடங்களில் இருந்து வரும் ஓலங்களை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம்!

ஈக்வடோர் தூதரகத்தில் அசான்ஜ் அடைந்து கிடந்த ஏழாண்டுகளில், நிறைய மாறியுள்ளன. மிகவும் முக்கியமானது சர்வதேச அளவில் வர்க்க போராட்டம் வெடித்துள்ளது. முதலாளித்துவத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்புடன் சேர்ந்து, வர்க்கப் போராட்டம் மேலெழுந்து வருவது மீதான அச்சம் தான், கருத்துச் சுதந்திரம் உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் அழிக்க ஆளும் உயரடுக்குகளை நிர்பந்தித்து வருகிறது, இதற்கு அசான்ஜ் தொலைப்படுத்தப்படுவதே மிகவும் அவலட்சணமான எடுத்துக்காட்டாகும்.

தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்தளவில் அசான்ஜ் மீது அனுதாபம் உள்ளது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் ஒரு பிரிக்கும் கோடு ஏற்பட்டுள்ளது. ஆளும் உயரடுக்குகள் அவற்றின் ஜனநாயக பாசாங்குத்தனங்களை விலக்கி வருகின்றன. அவற்றின் ஊடகங்களும் போலி-சோசலிச எதிர்தரப்புகளும் —அதாவது செல்வச் செழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்க அரசியலின் பிரதிநிதிகளும்—அரசு மற்றும் நிதியியல் பிரபுத்துவ சர்வாதிகாரத்திற்கான பாதுகாவலர்களாக செயல்படுகின்றனர்.

ஜூலியன் அசான்ஜை, செல்சியா மானிங்கை மற்றும் அனைத்து வர்க்கப் போர் கைதிகளையும் பாதுகாக்க, மக்கள்தொகையில் பாரிய பெருந்திரளான தொழிலாள வர்க்கம் தான் அணிதிரட்டப்பட வேண்டும். அவர்களை விடுவிப்பதற்கான கோரிக்கை உலகளாவிய தொழிலாள வர்க்கத்திற்கான தொடர்ச்சியான அறைகூவலாக இருக்க வேண்டும்.

ஜூலியன் அசான்ஜைப் பாதுகாப்பதில் முன்னுக்கு வந்து தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு, உலக சோசலிச வலைத் தளம் அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாங்கிப் பிடிக்கின்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. அவரை உடனடியாக விடுவிக்கவும் மற்றும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு பாதுகாப்புடன் திரும்ப அனுப்புமாறும் கோரி கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமையுங்கள்!