ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Julian Assange’s life is in danger

ஜூலியன் அசான்ஜின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது

Eric London
13 April 2019

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் இலண்டனில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட பின்னர், அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஈக்வடோர் அரசாங்கங்கள் ஆவணங்களைப் பகிரங்கப்படுத்திய அவரை வழமைக்கு மாறாக அமெரிக்காவிடம் விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதைச் (rendition) சுலபமாக்கும் வகையில் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஜூலியன் அசான்ஜின் வாழ்க்கையும் சுதந்திரமும் உடனடியான ஆபத்தில் உள்ளன. அவர் அமெரிக்க அரசாங்கத்தின் கரங்களில் வீழ்வதிலிருந்து தடுக்க பேச்சு சுதந்திரத்தை ஆதரிக்கும் அனைவரையும் அணிதிரட்டுவது அவசியமாகிறது.

40 ஆண்டுகளுக்கு முன்னர், Rand Corporation நிறுவன பகுப்பாய்வாளர் டானியல் எல்ஸ்பேர்க் வியட்நாம் போரில் அமெரிக்க அரசாங்கத்தினது சட்டவிரோத நடவடிக்கை குறித்த ஆதாரத்தை வாஷிங்டன் போஸ்டிற்கு வழங்கினார். நேற்று, எல்ஸ்பேர்க் பின்வரும் அறிக்கை வெளியிட்டார்:

இது அரசியலமைப்பின் முதல் திருத்தத்தின் மீதான மிகவும் கடுமையான தாக்குதல். பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பதற்கான ஒரு தெளிவான முயற்சி... இது ஒரு பத்திரிகையாளரும், பதிப்பாசிரியரும், பிரசுரிப்பாளருமான ஜூலியன் அசான்ஜ் மீதான முதல் குற்றப்பத்திரிகையாகும். இது வெற்றி அடைந்தால், இதுவே இறுதியான ஒன்றாக இருக்காது. இது தெளிவாக, அரசின் எதிரி என்று ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிடும் பத்திரிகைகள் மீது அவர் நடத்தும் போரின் பாகமாக உள்ளது. ஜூலியன் அசான்ஜைச் சிறையில் அடைப்பதில் அவர் வெற்றி பெற்றால், அங்கே அவர் வாழ்நாள் முழுவதும் அடைக்கப்படுவார் என்று நான் நினைக்கிறேன், அங்கே அவர் சென்றால், ஒருவேளை அவருக்கு எதிரான முதல் குற்றச்சாட்டு வெறுமனே ஒரு சில ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் அது அனேகமாக பலவற்றில் வெறுமனே முதலாவதாக இருக்கும்.

அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ பாசாங்குத்தனம் ஒரு வெளிப்படையான பொய்யாக உள்ளது. முன்னர் மூடிமுத்திரையிட்டு வைக்கப்பட்டிருந்த மற்றும் வியாழனன்று பகிரங்கமாக வெளியிடப்பட்ட ஒரு குற்றப்பத்திரிகையில், அமெரிக்க நீதித்துறை, அரசு கணினிகளின் கடவுச்சொற்களை முறிக்க சூழ்ச்சி செய்து பெடரல் சட்டத்தை மீறியதற்காக மட்டுமே அசான்ஜ் மீது குற்றம் சுமத்தி இருந்தது.

இந்த உண்மைக்கு வெறும் ஐந்தாண்டு சிறை தண்டனை மட்டுமே இருக்கும், மேலும் இது தேசதுரோக சட்டத்தின் கீழ் வராது என்ற உண்மையானது, இதில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா தரப்புகளுக்கும் அசான்ஜை அமெரிக்கர்களிடம் ஒப்படைப்பதற்கான ஒரு மூடிமறைப்பை வழங்குகிறது. குறிப்பாக, அமெரிக்கா-இங்கிலாந்துக்கு இடையே குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கை தேசதுரோக குற்றச்சாட்டு உட்பட "அரசியல் குற்றங்களுக்காக" ஒப்படைப்பதைத் தவிர்க்கிறது. ஆகவே இந்த விதிவிலக்கைக் கொண்டு அசான்ஜை ஒப்படைப்பதை தடுக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அமெரிக்க நீதித்துறை ஆவணத்தை மேற்கோளிட்டு காட்டி நீதிமன்றங்களில் வாதிடக்கூடும்.

அனைத்திற்கும் மேலாக இந்த குற்றப்பத்திரிகை அவர் மரண தண்டனை அச்சுறுத்தலை முகங்கொடுக்கவில்லை என்று காட்டுவதால் தான், அசான்ஜிற்குத் தஞ்சம் வழங்குவதில் இருந்து பின்வாங்குவதாக ஈக்வடோர் அரசாங்கம் கூறுகிறது.

உண்மையில், அசான்ஜ் அமெரிக்காவின் கரங்களில் சென்றதும், அவர் விரைவிலேயே தேசதுரோக குற்றச்சாட்டு உட்பட கூடுதலாக பல குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார். பத்திரிகை சுதந்திரம் மீதான அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டுவதற்கான முயற்சி மற்றும் அசான்ஜிற்கு எதிராக குற்றச்சாட்டைக் குறைத்துக் குறிப்பிடும் முயற்சிகள், மக்களைச் சமாதானப்படுத்தவும் மற்றும் பணயத்தில் உள்ள முக்கிய பேச்சு சுதந்திர பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்புவதையும் நோக்கமாக கொண்டுள்ளன.

அரசாங்கத்தின் முடிவான உத்தியோகப்பூர்வ குற்றச்சாட்டு என்னவாக இருந்தாலும், அது அசான்ஜை அரசியல் காரணங்களுக்காக இலக்கில் வைத்து வருகிறது என்பதை அந்த குற்றப்பத்திரிகையின் மொழியே தெளிவுபடுத்தி விடுகிறது. அது வலியுறுத்துகிறது: “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இரகசிய இராஜாங்க தகவல்களை விக்கிலீக்ஸ் அதன் வலைத்தளத்தில் பகிரங்கமாக பரப்புவதற்காக அவற்றை வழங்கியதாக [செல்சியா] மேனிங்கின் குற்றச்சாட்டுக்குச் சாதகமாக உதவுவதுமே இந்த சதியின் முதன்மை நோக்கமாகும்.”

விக்கிலீக்ஸ் பகிரங்கமாக வெளியிட்ட தகவல்களில் "ஆப்கான் போர் சம்பந்தப்பட்ட முக்கிய நடவடிக்கை குறித்த ஏறக்குறைய 90,000 தகவல்கள், ஈராக் போர் சம்பந்தப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்த 400,000 தகவல்கள், குவாண்டனாமோ வளைகுடா கைதிகளைக் குறித்த 800 மதிப்புரைகள், அமெரிக்க வெளியுறவுத்துறையின் 250,000 இரகசிய இராஜாங்க கடித பரிவர்த்தனைகள் ஆகியவை உள்ளடங்கி இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது. இந்த ஆவணங்களில் பல 2009 இல் பராக் ஒபாமா கையெழுத்திட்ட 'உத்தரவு எண் 13526' ஐ பின்தொடர்ந்த இரகசிய இராஜாங்க ஆவணங்களாகும். இந்த வெளியீடுகள் "தேசிய பாதுகாப்புக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பது நியாயமானதே" என்று அந்த குற்றச்சாட்டு குறிப்பிடுகிறது.

இந்த மொழி, "தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட" தகவல்களை வெளியிடுவதைத் தடுக்கும் தேசதுரோக சட்டத்தின் வரிகளை எதிரொலிக்கிறது. அதுபோன்ற தகவல்களை "எடுத்துரைப்பவர்கள், வழங்குபவர்கள், அனுப்பி கொடுப்பவர்கள் அல்லது எடுத்துரைக்க, வழங்க அல்லது அனுப்பிக் கொடுக்க காரணமாக இருப்பவர்களை" தேசதுரோக சட்டம் குற்றவாளியாக்குகிறது.

அந்த குற்றப்பத்திரிகை மொழியின் அடிப்படையில், அசான்ஜ் மற்றும் மேனிங் இருவருமே இச்சட்டத்தின் கீழ் குற்றவழக்கை முகங்கொடுக்கக்கூடும். வெளிப்படையாக மேனிங் நடவடிக்கையின் மீது நிலைநிறுத்திக் கொண்டதற்காக அசான்ஜ் வழக்கிற்கு இழுக்கப்பட்டு வருகிறார் என்று அறிவிப்பதன் மூலமாக, அப்பெண்மணியின் எதிர்காலமும் அபாயத்தில் இருப்பதை அரசாங்கம் எடுத்துக்காட்டி வருகிறது. உண்மையில், "செல்சியா மேனிங்" என்பது தான் அக்குற்றப்பத்திரிகையின் முதல் இரண்டு வார்த்தைகளாக உள்ளன.

அசான்ஜிற்கு எதிராக "குற்றச்சாட்டுக்கள்" (பன்மை) இருப்பதால் அவரை ஒப்படைக்க வேண்டுமென வாதிடும் ஆவணங்களை வழக்கில் இழுப்பவர்கள் கடந்தாண்டு "கவனக்குறைவாக" வெளியிட்டனர் என்பதையும், குறைந்தபட்சம் 2011 இல் இருந்து அசான்ஜை விசாரிக்க ஒரு இரகசிய நீதி விசாரணைப் பெருங்குழுவை வழக்கில் இழுப்போர் ஒன்று கூட்டியிருந்தனர் மற்றும் 2012 இல் "தேசதுரோக" குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விக்கிலீக்ஸ் பணியாளர்களை உளவுபார்க்க அமெரிக்க அரசாங்கம் உத்தரவாணைகளைப் பிறப்பித்திருந்தது என்பதையும் அந்த எழுத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

அசான்ஜ் மீது வெறும் கடவுச்சொல் சூழ்ச்சிக்காக மட்டும் குற்றஞ்சாட்டுவதற்காக எட்டாண்டுகளுக்கும் மேலாக ஓர் இரகசிய நீதி விசாரணைப் பெருங்குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பதை ஒன்றும் அறியாதவர்களும் அல்லது உடந்தையாய் இருப்பவர்களும் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆளும் உயரடுக்கு அசான்ஜைப் பிடித்து, படுமோசமான தண்டனைகளைத் திணிக்கவில்லை என்றாலும் ஆயுள் முழுமைக்கும் அவரை அடைத்து வைக்க மிகவும் தீவிரமாக இருக்கிறது என்பதை அமெரிக்காவில் முன்னணி அரசியல் பிரமுகர்களின் விடையிறுப்பும், அத்துடன் அவர்களின் முந்தைய அறிக்கைகளும், தெளிவுபடுத்துகின்றன.

ஜனநாயக கட்சியின் செனட் சபை சிறுபான்மை தலைவர் சார்ல்ஸ் ஸ்கூமர் பின்வருமாறு ட்வீட் செய்தார், “புட்டின் மற்றும் ரஷ்ய அரசாங்கம் சார்பாக நமது தேர்தலில் அவர் தலை நுழைத்ததற்காக விரைவில் அவர் கணக்கில் கொண்டு வரப்படுவாரென நான் நம்புகிறேன்.” ஜனநாயக கட்சி செனட்டர் மார்க் வார்னர் அசான்ஜை "அமெரிக்க பாதுகாப்புக்குக் குழு பறிக்கவும் மற்றும் மேற்கைப் பலவீனப்படுத்துவதற்குமான ரஷ்ய முயற்சிகளின் நேரடி பங்குதாரர்" என்று குறிப்பிட்டார். “இறுதியில் அவருக்குரிய நீதியை அவர் பெறுவதற்காக பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் அவரை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்குமென நான் நம்புகிறேன்,” என்றார்.

“தலை நுழைத்த” ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அசான்ஜை வழக்கில் இழுப்பது, தேசதுரோக குற்றச்சாட்டுக்களையும் சம்பந்தப்படுத்தும்.

சமீபத்தில் ஒரு கைதியைக் கையாண்டு வந்த ஒரு சிறை அதிகாரியைப் போல, ஜனநாயக கட்சி செனட்டர் ஜோ மன்சின் அறிவிக்கையில், “அவர் நம் உடைமை, அவரிடம் இருந்து நம்மால் நிஜத்தையும் உண்மையையும் பெற முடியும்,” என்றார். இந்த அறிக்கையின் அடிப்படையில், விசாரணைக்காக அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுகிறார்—இது வேறொரு நாட்டிடம் ஒப்படைத்தல் (extradition) என்றில்லாமல், மாறாக வழமைக்கு மாறாக விசாரணை கைதியின் ஒப்படைப்பு (rendition) வகையின் கீழ் வரும்.

அசான்ஜ் கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகைகளில் இருந்தும் அரசாங்கத்திடம் இருந்தும் பகிரங்கமான மரண அச்சுறுத்தல்களையும் முகங்கொடுத்துள்ளார். வலதுசாரி வானொலி பிரமுகர் ருஸ் லிம்பாஹ் "மூளைக்கு ஒரு தோட்டா" பெறுவதற்காக அசான்ஜிற்கு அழைப்பு விடுத்தார். முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் Bill O’Reilly அசான்ஜிற்குக் கூறினார்: “நாங்கள் உங்களைத் தூக்கிலிடுவோம்.” பிரதிநிதிகள் சபையின் முன்னாள் குடியரசு கட்சி சபாநாயகர் Newt Gingrich கூறினார், “ஜூலியன் அசான்ஜ் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளார், அவரை ஓர் எதிரி போராளியாக கையாள வேண்டும்.” ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி ஜோ பைடென் அசான்ஜை ஒரு "உயர் தொழில்நுட்ப பயங்கரவாதியாக" குறிப்பிட்டார். ஜனநாயக கட்சி செயல்பாட்டாளர் பாப் பெக்கெல் கூறினார், “இந்நபர் ஒரு துரோகி,” அமெரிக்கா "இந்த b***h இன் மகனை சட்டவிரோதமாக சுட்டுக் கொல்ல" வேண்டும் என்றார்.

அசான்ஜ் கைது செய்யப்பட்டதைப் புகழ்வதற்காக ஊழல்பீடித்த மற்றும் பொய்யுரைக்கும் ஊடகங்களுக்கு ஒரு மூடிமறைப்பை வழங்குவதே இந்த குற்றப்பத்திரிகையின் மற்றொரு செயல்பாடாக உள்ளது. இந்த குற்றப்பத்திரிகையைக் குறைத்துக் காட்டுவதில் நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பாக ஒரு குற்றகரமான பாத்திரம் வகித்துள்ளன. குறைந்த குற்றச்சாட்டைப் பயன்படுத்துவது என்பது அசான்ஜை வழக்கில் இழுப்பது பேச்சு சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை அர்த்தப்படுத்தும் என்று அவை வாதிட்டன.

நேற்றைய ஒரு தலையங்க குழு அறிக்கையில் நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது: “அரசாங்கம் ஜூலியன் அசான்ஜை இரகசிய அரசு தகவல்களைப் பிரசுரித்ததற்காக அல்ல, மாறாக அதை திருடியதற்காக, இப்போதைக்கு அரசியலமைப்பின் முதல் திருத்தம் மீதான முக்கிய கேள்விகளை மீறியதற்காக குற்றஞ்சாட்டியது.”

டைம்ஸ் எழுதியது, கசியவிடப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஒரு பத்திரிகையாளர் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துவதற்கும்—இவ்விதமானதை டைம்ஸ் போன்ற பாரம்பரிய பத்திரிகைகள் எப்போதும் செய்கின்றன—திருடுவது அல்லது சூழ்ச்சிகள் செய்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்குக் குழிபறிக்க முயலும் ஒரு வெளிநாட்டு உளவாளிக்கும் இடையே வித்தியாசம் மீது ஒரு நேரடியான சவாலை" அவரின் கைது நடவடிக்கை முன்னிறுத்துகிறது என்பதையே அசான்ஜிற்கு எதிரான ஒவ்வொரு விபரமும் அர்த்தப்படுத்துகிறது, “... ஒரு சர்ச்சைக்கிடமற்ற குற்றச்சாட்டுடன் திரு. அசான்ஜைக் குற்றஞ்சாட்டியதன் மூலமாக நிர்வாகம் சிறப்பாக ஆரம்பித்துள்ளது,” என்றது குறிப்பிட்டது.

“ஜூலியன் அசான்ஜ் சுதந்திர-பத்திரிகையின் கதாநாயகன் இல்லை. அவரைத் தனிப்பட்டரீதியில் கணக்கில் கொண்டு வருவது நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது,” என்று வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் தலைப்பிட்டுள்ளது.

“திரு. அசான்ஜ் வழக்கு, அவரை பாதுகாப்பவர்கள் தவறுதலாக எச்சரிப்பதைப் போல உள்நாட்டு சுதந்திரத்தின் தோல்வியாக அல்ல, மாறாக சட்டத்தின் ஆட்சியினது வெற்றியாக நிறைவடையும்,” என்று போஸ்ட் எழுதியது. அசான்ஜின் பாதுகாப்பு மீதான கவலைகளை "விக்கிலீக்ஸை ஆதரிக்கும் பிரச்சாரம்" என்று போஸ்ட் முத்திரை குத்தியது. இந்த குற்றப்பத்திரிகை அசான்ஜ் தேசதுரோக சட்டத்தை மீறுகிறார் என்று குற்றஞ்சாட்டவில்லை என்ற உண்மையானது, "சிஐஏ படுகொலையாளர்களின் கரங்கள் மூலமாகவோ அல்லது, ஒப்படைப்பினூடாக, அமெரிக்க மரண தண்டனை மூலமாகவோ, அவர் வாழ்க்கை குறித்து நியாயமாக [அவர்] அச்சப்பட வேண்டியதில்லை" என்பதை நிரூபிக்கிறது என்றது எழுதியது.

“ஊடுருவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு அவரை அனுப்புவது பத்திரிகை சுதந்திரத்தை ஆபத்திற்குட்படுத்தும் என்று பிரிட்டன் பயப்பட வேண்டாம்,” ஏனென்றால் அசான்ஜ் “நெறிமுறையற்ற” பத்திரிகையாளர் என்பதோடு ஒரு “நிஜமான பத்திரிகையாளர்” இல்லை, ஏனென்றால் அவர் “ஆவணங்களின் உண்மையை ஆராய்ந்து பார்க்கவோ அல்லது அதில் பெயரிடப்பட்டவர்கள் கருத்துரைக்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவோ சுதந்திரமாக எந்த முயற்சியும் செய்யாமல் அவற்றை பொதுக்களத்தில் குவித்துவிட்டார்.”

“நிஜமான பத்திரிகையியலை" குறித்து சொற்பொழிவாற்ற நியூ யோர்க் டைம்ஸூம் வாஷிங்டன் போஸ்டும் யார்? இந்த கருத்துக்கள், டைம்ஸ் மற்றும் போஸ்ட் அரசின் பிரச்சார அங்கங்களே தவிர வேறொன்றுமில்லை என்பதை அம்பலப்படுத்துகின்றன.

ஈராக்கில் "பாரிய பேரழிவு ஆயுதங்கள்" இருப்பதாக புஷ் நிர்வாகத்தின் பொய் வாதங்களை முடுக்கிவிட்டதற்கு ஒத்திருக்கின்ற டைம்ஸின் வாதம், சமீபத்தில் பென்டனிடம் இருந்து 600 மில்லியன் டாலர் வினியோக சேவை உடன்படிக்கையை எட்டிய அமசனின் பில்லியனிய தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸ் இக்குச் சொந்தமானது இந்த போஸ்ட்.

அசான்ஜிற்கு எதிரான சூழ்ச்சி அரசியல் ஸ்தாபகத்தின் மற்றும் பெருநிறுவன ஊடகத்தின் எந்தவொரு அதிகார வட்டமும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளன என்பதை அடிக்கோடிடுகிறது. போர் குறித்து பென்டகன் ஆய்வு செய்த Rand அறிக்கைகளின் நகல்களுடன் இன்று எல்ஸ்பேர்க் போஸ்டை அணுகினால், போஸ்ட் பெடரல் புலனாய்வு அமைப்பை (FBI) அழைத்து "தேசிய பாதுகாப்பை" அச்சுறுத்துவதற்காக அவரை கைது செய்ய அழைப்புவிடுக்கக்கூடும்.

ஹிலாரி கிளிண்டன் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் வங்கியாளர்கள் மற்றும் தலைமை செயலதிகாரிகளின் நலன்களை அவர் பிரதிநிதித்துவப் படுத்துவார் என்று அவர்களின் பார்வையாளர்களுக்கு இரகசியமாக கூறி பத்தாயிரக் கணக்கான டாலர்களை பெற்றார் என்பதை எடுத்துக்காட்டும் ஆதாரங்களைப் பிரசுரித்ததன் மூலமாக ரஷ்யாவுக்கு அசான்ஜ் உதவினார் என்று டைம்ஸூம் போஸ்டும் அவற்றின் செல்வ செழிப்பான வாசகர்களை வேண்டுமானால் சமாதானப்படுத்தலாம். இதற்கிடையே, ஜனநாயக கட்சியினர் அசான்ஜ் வெளியிட்டுள்ள குற்றங்களுக்குப் பொறுப்பான இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் தலைவர்களுடன் பொதுவான உடன்பாட்டை எட்டியுள்ளனர். ட்ரம்புக்கு ஜனநாயக கட்சியினர் காட்டும் வலதுசாரி எதிர்ப்பு தன்மை, அசான்ஜ் மீதான அவர் நிர்வாகத்தின் தாக்குதல்களை அவர்கள் ஆதரிக்கின்றனர் என்ற உண்மையால் அம்பலமாகிறது.

செல்சியா மானிங் மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டன் உடன் சேர்ந்து ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்பு என்பது தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் ஒரு மத்திய அரசியல் பிரச்சினையாகும். ஆவணங்கள் பகிரங்கப்படுத்துபவர்களை நோக்கிய மனோபாவம் பெரிதும் வர்க்க கோடுகளின் அடிப்படையில் பிளவுபடுகிறது. ஆளும் வர்க்கம் பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை உடைத்து வரும் நிலையில், உலகெங்கிலும் வர்க்க மோதல் தீவிரமடைந்து வருகிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் தீவிரமாக இருக்கும் அனைவருக்கும் அசான்ஜ், மானிங் மற்றும் ஸ்னோவ்டனைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இணையுமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் பரந்தளவில் முறையிடுகிறது. சர்வதேச அளவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் இத்தகைய வர்க்க போர் கைதிகளைப் பாதுகாக்க உடனடியாக அணித்திரள வேண்டும். அவர்களின் வாழ்க்கை இதைச் சார்ந்துள்ளது.

அசான்ஜின் விடுதலைக்கான போராட்டம், ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசியல் போராட்டத்தின் தாக்குமுகப்பாகும். தொழிலாள வர்க்கத்தின் சக்தி எந்தளவுக்கு அணிதிரட்டப்படுகிறதோ அந்தளவில் தான் இவர்களைப் போன்ற ஆவணங்களைப் பகிரங்கப்படுத்துபவர்களின் பாதுகாப்பை முன்னெடுக்க முடியும்.

வெள்ளிக்கிழமை சிட்னியின் அவசர கூட்டத்தில் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் நிக் பீம்ஸ் கூறியதைப் போல, “ஜனநாயகம் மீதான தாக்குதல் என்பது ஓர் ஆழமான நோயின் அறிகுறியாகும். ஜனநாயகத்தின் மூலஆதாரத்தில் உள்ள பிரச்சினையை, அதாவது நெருக்கடியில் உள்ள ஒரு அமைப்புமுறையான உலகளாவிய முதலாளித்துவத்தின் இலாபகர அமைப்பைக் கையாளாமல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது, இந்த அமைப்புமுறை அதன் வரலாற்று பாத்திரத்தை வகித்துவிட்டது, ஒரு காலத்தில் இந்த அமைப்பு ஜனநாயக உரிமைகளுக்காக நின்றிருந்த போதினும், இப்போது அது அவற்றை கிழித்தெறிகிறது, காலில் இட்டு நசுக்குகிறது, இழிவுபடுத்துகிறது. இந்த போராட்டத்தின் பாகமாக, நாம் ஒரு சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்தைத் தொடங்க வேண்டும். இதன் பின்னர் தான் முதலாளித்துவம் நம்முன் கொண்டு வந்து கொண்டிருக்கும் எல்லா கொடூரங்களையும் துடைத்தழிக்க முடியும்.”