ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany: State prosecutor persecutes artists group for criticising far-right AfD

ஜேர்மனி: அரசாங்க வழக்குத்தொடுனர் தீவிர வலதுசாரி AfD ஐ விமர்சித்த கலைஞர்களின் குழுவை விசாரணை செய்கிறார்

By Justus Leicht and Peter Schwarz 
9 April 2019

கடந்த 16 மாதங்களாக, ஜெரா நகரில் உள்ள அரச வழக்கறிஞரின் அலுவலகம் "ஒரு குற்றவியல் அமைப்பை உருவாக்கியமை" என்ற சந்தேகத்தின் பேரில் அரசியல் அழகு மையம் (Center for Political Beauty - ZPS) என அறியப்படும் கலைஞர்கள் கழகத்தை விசாரணை செய்து வருகிறது. துரிங்கியா மாநிலத்தில், வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) தீவிரவலதுசாரி பிரிவின் தலைவர் பியோர்ன் ஹொக்க இற்கு எதிராக ZPS கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையே இந்த விசாரணைக்கான தூண்டுதல் ஆகும்.

பொதுவாக பயங்கரவாத வன்முறை அல்லது குற்றவியல் குழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்ற ஜேர்மன் குற்றவியல் சட்டக் கோவையின் 129 ஆம் பந்தியை இந்த வழக்கு அடிப்படையாகக் கொண்டது. இது பெரிய அளவிலான இரகசிய நடவடிக்கைகளை பயன்படுத்த விசாரணையாளர்களுக்கு அனுமதிக்கிறது.

குற்றவியல் மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளின் விசாரணைகள் தொடர்பாக, மாநில பாராளுமன்றக் குழுவான இடதுசாரி கட்சியின் ஒரு வழக்கமான கேள்விக்குப் பின்னரே, அரசியல் அழகு மையத்தின் விசாரணைகள் பற்றிய தகவல்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மட்டுமே வெளிப்பட்டது. அதிகாரபூர்வ பதிலில், விசாரணையின் கீழ் இஸ்லாமிய அரசு (IS) மட்டுமல்ல, அல்-நுஸ்ரா முன்னணி, காற்பந்து அடிதடியாளர்களின் வலையமைப்புக்கள் மற்றும் யூதப் படுகொலைகளை மறுப்பவர்களுடன் ஒரு "கலை நிகழ்ச்சி கலைஞர்களின் குழுவும்" அடங்கும் என்ற தகவல் கிடைத்தது. இது விரைவிலேயே ZPS என்று அறியப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில், அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் வலதுசாரி பக்கம் திரும்புவதற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையாக பொதுக் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள, 70 க்கும் மேற்பட்ட கலை நிகழ்வு கலைஞர்களின் சங்கமே ZPS ஆகும். "யூத இனப்படுகொலைகளிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை தொடரும் அரசியல் அக்கறையின்மை, அகதிகளை வெறுத்தல் மற்றும் கோழைத்தனத்தால் பயனற்றுப் போகச் செய்யப்படுகிறது மற்றும் ஜேர்மனி, வரலாற்றில் இருந்து மட்டும் கற்றுக் கொள்ளவது மட்டுமல்லாது, அதற்கேற்ப செயல்படவும் வேண்டும், என்பதே நமது அடிப்படை உறுதிப்பாடு ஆகும்" என்று ZPS வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ZPS பயங்கரவாத அச்சுறுத்தல்களின் இலக்காகிவிட்டது. ஜேர்மன் இராணுவத்தின் அதிகாரியாக இருந்த பிரங்கோ . ஆ என்பவரின் பயங்கரவாத வலையமைப்பின் மரணப் பட்டியலில் அதன் பெயர் இருந்தது.

துரிங்கியாவில் உள்ள போர்ன்ஹாகன் நகரில் ZPS ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலை நடவடிக்கையே விசாரணைக்கான காரணமாக ஜெரா நகர வழக்கறிஞரால் மேற்கோள் காட்டப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று, “ஹொக்கவின் வீட்டின் முன் கொலோகோஸ்ட் நினைவகம் கட்டுதல்!” எனும் செயற்திட்டத்தின் கீழ், பேர்லினில் உள்ள உண்மையான நினைவு மையத்தின் ஒரு சிறிய மாதிரியை கலைஞர் குழு அமைத்தது. இது AfD தலைவரின் வீட்டிற்கு அண்மையாக உள்ள ஒரு குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் அமைந்திருந்தது.


ஹொக்க வீட்டின் முன்னால் கொலோகோஸ்ட் நினைவகத்தின் மாதிரி [படம்: ZPS]

ஜனவரி 2017 இல் டிரெஸ்டென் நகரில், ஹொக்கவால் நிகழ்த்தப்பட்ட ஒரு உரைக்கு, அதன் எதிர்ப்பு நடவடிக்கை மூலம் ZPS கவனத்தை ஈர்க்க முயன்றது. ஹொக்க அவரது உரையில், கொலோகோஸ்ட் நினைவு சின்னத்தை கடுமையாக தாக்கி, "முட்டாள்தனமான சமாளிப்பு கொள்கை" அது ஜேர்மன் வரலாற்றுக்கு "கெட்ட பெயரைக் கொடுத்தது" என்று விபரிக்கிறார். "நாங்கள் ஜேர்மனியர்கள், எமது மக்கள் தான், உலகிலேயே தங்கள் தலைநகரத்தின் இதயத்தில் ஒரு அவமான நினைவுச்சின்னத்தை வைத்திருக்கும் ஒரே மக்கள்" என்று அவர் "நினைவுச் சின்னக் கொள்கையை முற்றுமுழுதாக மாற்றுவதற்கு" அழைப்பு விடுத்து வெளியிட்டார்.

ZPS நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹொக்க அவரது குடும்பத்துடன் வாழ்கின்ற வீட்டின் ஒரு நையாண்டித்தனமாக நடாத்தப்பட்ட கண்காணிப்பு ஆகும். "பல ஆண்டுகளாக துருஞ்சியன் உள்நாட்டு உளவுத்துறை நிறுவனமான NSU [ஒன்பது புலம்பெயர்ந்தவர்களையும் மற்றும் ஒரு பெண் போலிசையும் கொன்ற ஒரு பாசிச பயங்கரவாதக் குழு] இன் பயங்கரவாதத்தை மூடிமறைத்து உதவியது. அதனால்தான் நாங்கள் மக்கள் துருங்கியா உளவுத்துறை போன்ற ஒன்றை நிறுவியது" என்று ஒரு ஒளிப்பதிவில் ZPS கூறியது. ஹொக்க 10 க்கும் மேற்பட்ட மாதங்கள் கண்காணிக்கப்பட்டு வந்ததாக ZPS கூறியது.

ஆனால், 10 நாட்களுக்குள், இந்த கண்காணிப்பு ஒரு நையாண்டி வகைப்பட்ட தன்மையைக் கொண்டிருந்தது என்று குழு தெளிவுபடுத்தியது. ஏனைய இவ்வாறான நடவடிக்கைகளிலும் மழைக்கு அணியும் அங்கிகள் மற்றும் Star Wars Chewbacca அங்கியுடன் ஒரு பாரிய தொலைநோக்கியுடன் புற்தரையில் ஓடுவது போன்றவற்றை ZPS ஆதரவாளர்கள் செய்தனர். ஹொக்க பகிரங்கமாக கூறியதை அல்லது பேஸ்புக் மற்றும் நேர்காணல்களில் எழுதப்பட்டிருப்பதை அந்தக் குழு வெளியிட்டது.

கொலோகோஸ்ட் நினைவு சின்னத்துக்கு எதிராக டிரெஸ்டனில் ஹொக்கவின் வெறுப்பு பேச்சு சட்ட ரீதியான அல்லது அரசியல் விளைவுகளை சந்திக்கவில்லை. பதிலாக AfD, அதே போல் தற்போதைய மத்திய அரசாங்கத்தின் பகுதியாக இருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்கள் கூட்டாக கலைஞர்களுக்கு எதிரான ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தை தொடங்குவதன் மூலம் பதிலளித்தன.

அந்த நேரத்தில் துருங்கியா மாநில பாராளுமன்றத்தின் தலைவரான கிறிஸ்தியான் காரியுஸ் (CDU), கலைஞர்களின் முயற்சியை நாஜிக்கள் மற்றும் கிழக்கு ஜேர்மனிய இரகசிய பொலிஸ் ஸ்ராசி முறைகளுடன் ஒப்பிட்டார். அவர் அதை "உளவியல் பயங்கரவாதம்" என்று விபரித்தார் மற்றும் ZPS மீது வழக்குத் தொடர அழைப்பு விடுத்தார்.

"அதனால்தான், இந்த கண்காணிப்பு என்று அழைக்கப்படுவது உடனடியாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும், தேவையான புலனாய்வுகளை ஆரம்பிக்க உறுதிப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சரை தொலைபேசி அழைப்பில் நான் கேட்டுக் கொண்டேன். சுதந்திர ஆணையை தடையின்றி செயல்படுத்தும் வகையில், நான் ஒரு குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள அறிவிக்கிறேன், "என்று காரியுஸ் மாநில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

துருங்கியாவில் உள்ள AfD, ஒரு ட்வீட்டில் ZPS "ஒரு குற்றவியல் அமைப்பின் உருவாக்கம்" என்று குற்றம் சாட்டியது. ZPS க்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்த ஹொக்க இன் கூட்டாளியும் கட்சி உறுப்பினரும், நீதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜென்ஸ் மையர், அதேபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தினார். துருங்கியாவில் உள்ள AfD "உளவியல் போர்" குறித்து புகார் அளித்தது.

நடவடிக்கை எடுக்கப்பட்ட சிறிது காலத்திற்குப் பின்னர், லைப்சிக் நகரில் ஜூர்கன் எலசஸரால், தீவிர வலதுசாரி Compact சஞ்சிகை வெளியீட்டு ஆதரவுக் கூட்டத்தில் ஹொக்க உரையாற்றினார். அத்தகைய ஒரு காரியத்தை செய்யும் எவரும் பயங்கரவாதியாவர் என்று அவர் கூறினார். "அதனால்தான் இந்த கலைஞர்களின் குழு ஒரு கலைஞர்கள் குழு அல்ல. இது ஒரு குற்றவியல் அமைப்பு; ஆம், ஒரு பயங்கரவாத அமைப்பு." என்றார்.

"பயங்கரவாதம்" என்ற கருத்திலிருந்து அன்னியப்படாத வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் நவ-நாஜிக்களின் ஒரு கூட்டத்தில் ஹொக்க உரையாற்றினார். மேடையில் அவருடன்  NSU உடன் தொடர்பு கொண்ட ஒரு வலதுசாரி ரொக் இசைக்குழுவின் ஒரு இசைக்கலைஞர்; பெகிடா இயக்கத்தின் முன்னர் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனர் லூட்ஸ் பாக்மான், மற்றும் அவரது ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர் சீக்ப்ரிட் டாப்ரிட்ஜ் மற்றும் கிறைஸ்ட் சேர்ச் பயங்கரவாதி பென்டன் டாரன்ட் இடமிருந்து நன்கொடை பெற்ற ஆஸ்திரிய அடையாள இயக்கத்தின் தலைவரான மார்ட்டின் செல்னர் போன்ற பல நன்கு அறியப்பட்ட வலதுசாரி தீவிரவாதிகள் இருந்தனர்.

ஹொக்க, ZPS ஐ ஒரு "பயங்கரவாத அமைப்பு" என அழைத்த நான்கு நாட்களுக்கு பின்னர், ஜெராவில் உள்ள வழக்கறிஞர் அவரது தூண்டுதலை எடுத்து, பந்தி 129 இன் கீழ், குழுவுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பித்தார்.

கலை, கருத்து, சங்கம் ஆகியவற்றின் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை மீதான இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கான பொறுப்பிற்கு, அரச வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் AfD, CDU ஆகியவற்றில் உள்ள அதன் உதவியாளர்கள் மட்டுமல்லாது, ஆனால் துருங்கிய மாநில அரசாங்கத்துடன், இடது கட்சி, பசுமை மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியிலும் தங்கியுள்ளது. இடது கட்சி உறுப்பினரான போடோ ராமலோவின் தலைமையிலான ஒரே ஜேர்மன் மாநிலம் துருங்கியா ஆகும்.

நீதிபதிகள் போலல்லாமல், அரச வழக்குத்தொடுனர்கள் பொதுவாக சுதந்திரமானவர்கள் அல்ல, ஆனால், அரசாங்க ஊழியர்கள் போல, கீழ்நிலைப் பதவியிலுள்ளவர் மற்றும் நீதித்துறை அமைச்சரின் ஆலோசனைகளை பின்பற்றுவதற்கு அறிவுரை வழங்கப்படுகிறது என்பதை நினைவுபடுத்துவது அவசியம். தற்போது நீதித்துறை பசுமைக் கட்சியிலிருந்து Dieter Lauinger ஆல் துருங்கியாவில் நடத்தப்படுகிறது.

துருங்கியா மற்றும் அயல்லுள்ள சாக்சோனி ஆகியவற்றில் நீதித்துறை, போலிஸ் மற்றும் உளவுத்துறையானது தீவிர வலதுசாரி சதித்திட்டங்கள் நிறைந்தவையாகும். உளவுத்துறையிலிருந்து தாராளவாத நிதி ஆதரவுடன் இப்பிராந்தியத்தில் ஒரு தீவிர வலதுசாரி தீவிரவாத அமைப்பு வளர்ந்து கொண்டிருக்கிறது. 10 இனவாத கொலைகள் மற்றும் பல தாக்குதல்களை நடத்திய, நவ-பாசிச NSU பயங்கரவாத கும்பல் பல ஆண்டுகளாக, தெளிவாக பல டஜன் மாநில பிணைப்பு முகவர்களின் கீழ் தான் விரும்பியதைச் செய்ய முடிந்தது.

இடது கட்சி, சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரின் அரசியல்வாதிகள் இந்த வலதுசாரி சதிகாரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். பல ஆண்டுகளாக, மாநில பிரதமர் ராமலோ, துருஞ்சியன் இரகசிய சேவையின் கண்காணிப்பிற்கு உட்பட்டவராக இருந்தார். கண்காணிப்பை நிறுத்துவதற்காக மத்திய அரசியலமைப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போதே, இடது கட்சி, சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைவாதிகள் அரச அமைப்பில் தீவிர வலதுசாரி சதிகார சக்திகளை மூடிமறைக்க முற்படுகின்றனர்.

இந்த செயல்முறையானது, ZPS விசாரணைக்குப் பொறுப்பான Martin Zschächner என்பவரால் வழங்கப்பட்ட உதாரணமாகும். அவர் AfD யுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார், மற்றும் அவருடைய பணி இடதுசாரிகள் மற்றும் பாசிச-விரோதவாதிகள் மீதான ஆக்கிரோஷ ஒடுக்குமுறைகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அவர் தொடர்ந்து வலதுசாரி தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளார். இதை ராமலோ நிர்வாகமும் அதன் பசுமைக் கட்சியின் நீதித்துறை அமைச்சரும் பொறுத்துள்ளனர்.

Zeit online இல் ஏப்ரல் 5 ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், Zschächner இன் பின்னணி குறித்து ஆராயப்பட்டது. அந்த கட்டுரையின் படி, Zschächner ஏப்ரல் 1, 2018 அன்று தனது தனிப்பட்ட அஞ்சல் முகவரி மூலம், ஹொக்க இன் கட்சிக்கான அவரது அரசியல் இணைப்புகளின் தெளிவான அடையாளமாக, AfD க்கு 30 யூரோ நன்கொடை வழங்கினார்.

இடதுசாரியினர் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக Zschächner பலமுறையும் சோதனைகளை அங்கீகரித்துள்ளார். அவரது இலக்குகளில் ஒன்று ஜெனா நகர இளைஞர் போதகர் லோதார் கோனிக் ஆவார். அவருடைய பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகளால் சாக்சோனி அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார். ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்பட்ட பின்னர் தான் கோனிக்கின் வதிவிடங்கள் தேடப்பட்டன. கோனிக் AfD ஆதரவாளர்களை "நாஜிக்கள்" என்று அழைத்த பின்னர், கொனிக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவருடைய ஆக்ரோஷமான வார்த்தைக்கு எதிராக Zschächner விசாரணைகளைத் தொடர்ந்தார்.

இடது கட்சியின் இளைஞர் குழுவான Linksjugend Solid அலுவலகம் குர்திஸ் PKK யை ஆதரித்தமைக்காக தேடப்படுவதாக கூறப்படுகிறது. உண்மையில், அவ் அமைப்பு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பேரணியை வெறுமனே பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தியது.

மறுபுறத்தில், Zschächner வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக மிகவும் வித்தியாசமான ஒரு நடவடிக்கையை எடுத்தார். இனவெறி மனப்பான்மைக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு யூதப் படுகொலைக்கு எதிரான ஒரு வழக்கில், Zschächner இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனைக்கு ஆதரவாக வாதாடினார். அஸ்விட்ஸ் அழிப்பு முகாமுக்கு யூதர்களை அனுப்பிவைக்கும் யூத- விரோத “U-Bahn பாடலை" பாடிய AfD ஆதரவாளர்களைப் பற்றிய விசாரணையில், இந்த பாடல் தூண்டுதலாகவோ அல்லது அவதூறாகவோ இருக்கவில்லை என்ற அடிப்படையில் நிறுத்தப்பட்டது.

கார்ல் வொன் ஒசிட்ஸ்கி மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற போரிற்கு எதிரானவர்கள் நீதித்துறையால் இரக்கமற்ற முறையில் குற்றம்சாட்டப்பட்டபோது, வலதுசாரி மற்றும் நாஜி குற்றவாளிகள், அதாவது ரோசா லுக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் மற்றும் 1923 சதிக்கு பின்னர் ஹிட்லர் ஆகியோரின் கொலைகாரர்கள் காப்பாற்றப்பட்டார்கள் அல்லது அற்பமான தண்டனை பெற்றனர். வைமார் குடியரசில் நிலவும் நிலைமைகளை ZPS க்கு எதிரான நடவடிக்கைகள், நினைவுபடுத்துகிறது.

ZPS விசாரணையை அடிப்படையாக கொண்ட குற்றவியல் சட்டக் கோவையின் 129 வது பந்தி இதையே தெரிவிக்கிறது. 1871 முதல் 1945 வரையான காலப்பகுதியில், "நாட்டிற்கு எதிரான குழுக்களுக்கு" எதிராக அது இயக்கப்பட்டது. அதன் அரசியல் தன்மை தொடக்கத்தில் இருந்து தெளிவாக இருந்தது. ஜேர்மன் அதிபர் ஓட்டோ வான் பிஸ்மார்க், சமூக ஜனநாயகவாதிகளை விசாரிப்பதற்கும், முதலாம் உலக யுத்தத்தை பின்தொடர்ந்தும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இப் பந்தியைப் பயன்படுத்தினார். 1950 களில், சமீபத்தில் நாஜி சித்திரவதை முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த KPD உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டனர். மீண்டும் ஆயுதமயமாக்கலை எதிர்ப்பவர்களையும் மற்றும் தடை செய்யப்பட்ட KPD இன் உண்மையான அல்லது ஆதரவாளர்களை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டது.

சட்டபூர்வமாக, ZPS க்கு எதிரான விசாரணை ஆதாரமற்றது. Zeit வலைத் தளத்துடன் ஒரு நேர்காணலில், ஜேர்மன் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான ஜூர்கன் மோத்ராத், அரச வழக்கறிஞரின் அலுவலகம் ஹொக்க குழுவின் கண்காணிப்பின் காரணமாக ZPS க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்தார். தெளிவாக அவரது பதில் இல்லை என்பதாகும்.

பந்தி 129 அடிப்படையில் விசாரணை செய்வதற்கு, பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு கடுமையான குற்றத்திற்கான சான்றுகள் இருக்க வேண்டும் "என்று மோத்ராத் கூறினார். "நீங்கள் பியோர்ன் ஹொக்கவைக் அவதானித்தால், அல்லது நீங்கள் அவரது மின்னஞ்சலை இடைமறித்தாலும் கூட, அது பந்தி 129 அடிப்படையிலான விசாரணையை நியாயப்படுத்தாது. அரசியல்வாதிகளுக்குப் பின் புகைப்படமெடுக்கும் பத்திரிகையாளர்கள் தொழில் ரீதியாக துரத்துகிறார்கள், ஆனால் அவர்கள் யாரும் குற்றவியல் அமைப்பை உருவாக்கியமைக்காக விசாரிக்கப்படவில்லை."

AfD பற்றி விமர்சித்த ஒரு கலைஞர்களின் குழுவின் மீது நடத்தப்பட்ட வழக்கு விசாரணையானது, தீவிர வலதுசாரிக் கட்சி மிக உயர்ந்த அரசியல் மட்டத்திலிருந்து ஆதரவு மற்றும் ஊக்குவிப்பை பெறுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. அரசாங்க வழக்கறிஞரான Zschachner போன்ற அரச அமைப்பின் ஆதரவுக்கு அவை நம்பியிருக்க முடியும். அக்கட்சியை பொறுத்தவரையில், அதன் உயர் மட்டத்தில் அதிக எண்ணிக்கையான போலிஸ் அதிகாரிகளையும் படையினரையும் கொண்டுள்ளது. மத்திய மற்றும் மாநில பாராளுமன்றங்களில் உள்ள அனைத்து AfD பிரதிநிதிகளில் ஆறில் ஒருவர் அரசு ஊழியர்கள் ஆவர்.

அதே நேரத்தில், தீவிர வலதுகளுக்கு எதிரான எதிர்ப்பு, விசாரிக்கப்படுவதுடன் குற்றமாக்கப்பட்டுள்ளது. இது ZPS க்கு மட்டுமல்லாது, ஏனையோருக்குமாகும். ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங் ஆகியோர் ஏகாதிபத்திய போர் குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதால் சிறையில் உள்ளனர் மற்றும் தங்கள் உயிர்களைப் பற்றி பயப்பட வேண்டும். தீவிர வலதுகளின் எழுச்சி மற்றும் பல்கலைக் கழகங்களில் அதன் தத்துவார்த்த இரகசிய வேலைகளுக்கு எதிராக முறையாகப் போராடுவதால் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP), மத்திய உள்துறை உளவுத்துறையால் (BfV) கண்காணிக்கப்பட்டு வருகின்றது மற்றும் அதன் வருடாந்த அறிக்கையில் "இடதுசாரி தீவிரவாதிகள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளது. BfV இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் SGP பதிலளித்துள்ளது.

வறுமை, சமூக வெட்டுக்கள், மோசமான வாடகைகள், இராணுவவாதம் மற்றும் இராணுவ மற்றும் போலிஸ் மீள ஆயுதமயமாக்கல் ஆகியவற்றிற்கான பெருகிய எதிர்ப்பை அடக்குவதற்கு ஆளும் வர்க்கத்திற்கு தீவிர வலதுசாரி தேவையாகின்றது. இது ஜேர்மனியில் மட்டுமல்ல, மாறாக ஒரு சர்வதேச நிகழ்வாகும். வலதுசாரி தீவிரவாதிகள் ஏற்கனவே அமெரிக்கா, பிரேசில், பிலிப்பைன்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் மிக உயர்ந்த அரசாங்க அலுவலகங்களில் அமர்ந்துள்ளனர்.

பாசிசம் மற்றும் போரை மீண்டும் தடுப்பதற்கு ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது முக்கியம் ஆகும். துருங்கியாவின் உதாரணம் தெளிவாக காட்டுவதுபோல் SPD, பசுமைவாதிகள் அல்லது இடது கட்சி மீது எந்த நம்பிக்கையையும் வைக்க முடியாது என்பதைக் கட்டுகிறது. இந்த கட்சிகள் ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரச கட்டமைப்புகளில் ஆழமாக இணைந்துள்ளன. அவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தை காப்பாற்றவும் மற்றும் தீவிர வலதுசாரிகளை விடவும் மிக அச்சத்தைத் தூண்டுவதற்கும் உறுதியாக உள்ளனர்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நலன்களை பாதுகாப்பதற்கு ஒரு சர்வதேச, சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் அவசியமாகும்.