ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amidst mounting social opposition
Indian elite nervously prepares for national elections

பெருகிவரும் சமூக எதிர்ப்புக்கு மத்தியில்

இந்திய உயரடுக்கு தேசிய அளவிலான தேர்தலுக்கு பதட்டத்துடன் தயாராகிறது

By Wasantha Rupasinghe and Keith Jones
27 March 2019

இந்தியாவின் மிகவும் பதட்டமான அரசியல் சூழல் நிலவுகின்ற நிலையில் தேசிய அளவிலான தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்சிக்கான போலியான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சியை பிடித்துக்கொண்ட இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) மீது மட்டுமல்லாமல் மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட நவ தாராளவாத “சீர்திருத்த” வாதத்தின் அழிவுகரமான விளைவுகளுக்கு எதிராகவும் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் மத்தியில் ஆழ்ந்த வேரூன்றிய கோபம் ஏற்பட்டிருக்கிறது.

எவ்வாறாயினும், இந்த கோபம், இந்திய ஸ்தாபக அரசியலில் ஒரு உண்மையான அல்லது சாதகமான வெளிப்பாட்டை காணமுடியாது. பூகோள மூலதனத்திற்காக ஒரு மலிவுகூலித் தொழிலாளர் தொகுப்பை இந்தியாவில் உருவாக்கும் நோக்கத்துடன் “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஸ்ராலினிச இந்திய கம்யூனிசக் கட்சி (மார்சிஸ்ட்) அல்லது சிபிஎம் வரை அனைத்துக் கட்சிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். மேலும் தெற்கு ஆசியாவை ஏகாதிபத்திய சூழ்ச்சி மற்றும் மோதல்களை உண்டாக்கும் பெரிய நீர் சுழலுக்குள் இன்னும் ஆழமாக இழுத்து செல்வது மற்றும் கடந்த மாதம் வெட்ட வெளிச்சமாக காட்டியவாறாக பாகிஸ்தானுடன் ஒரு பேரழிவுகரமான யுத்தத்தை தூண்டும் அச்சுறுத்தலை கொண்டிருந்த போதிலும் அனைத்து கட்சிகளுமே இந்திய முதலாளித்துவத்தின் பெரும் வல்லரசாகும் அபிலாசைகளுக்கு ஆதரவளிக்கின்றன.

இந்த தேர்தல் ஏழு பிராந்திய கட்டங்களாக நடக்கவிருக்கிறது, இப்போதிருந்து ஏப்ரல் 11 வியாழக்கிழமை இரண்டு வாரங்களில் தொடங்கி மே 19 ஞாயிறு முடிவடைகிறது. மே 23 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேசிய தேர்தல்கள் நடைபெறும் அதே சமயத்தில் ஆந்திர பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்கின்றது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் மூலோபாய போட்டியின் மையப் புள்ளியாக இருக்கும் இந்தியாவில் முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரே மாநிலமான ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடக்கவில்லை. கடந்த யூன் மாதம் பெருகிவரும் மக்கள் எதிர்ப்புகளை கையாள்வது குறித்த முரண்பாடுகளினால், பிஜேபி ஐ இளைய பங்காளியாக கொண்டிருந்த மாநில அரசாங்கம் வீழ்ச்சி கண்ட பின்னர், “பாதுகாப்பு” அக்கறைகளை காரணம் காட்டி ஜம்மு காஷ்மீர் மீது காலவரையற்ற மத்திய அரசு ஆட்சியை பிஜேபி அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலும் தவறாக நிரூபிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய பிஜேபி கட்சியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளைப் போலல்லாமல், தங்கள் பாராளுமன்ற பெரும்பான்மைக்காக அவர்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டாளிகளின் வாக்குகளில் அவர்கள் தங்கியிருக்க வேண்டும்.

பி.ஜே.பி இன் சிக்கன நடவடிக்கை மற்றும் பிற்போக்கு குறித்த பதிவு

பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரம், மோடியை தானாக தோன்றிய ஒரு இந்து "பலசாலி" என்றும் உறுதியாக "மேலெழுந்து வரும்" இந்தியாவின் மறுபிறப்பை அவர் வெளிப்படுத்துவதாகவும் கூறி பெருமளவில் அவரை சுற்றியதாக முன்னெடுக்கப்படுகின்றன. பா.ஜ.க பிரச்சாரத்தின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், மோடி அரசாங்கம் "உலகையே அதிசயிக்க வைக்கும்" பொருளாதார வளர்ச்சியை வழங்கியுள்ளது என்ற கூற்றாகும்.

2014 இல், இந்தியாவின் பெருநிறுவன செல்வந்தத் தட்டினர் பி.ஜே.பி. ஐ ஆட்சிக்கு கொண்டு வந்தனர். அதன் மூலமாக நவ-தாராளவாத சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவதற்கும் மற்றும் உலக அரங்கில் அதன் நலன்களையும் அபிலாஷைகளையும் இன்னும் தீவிரமாக நிலை நாட்டுவதற்கும் ஆகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரும் கூட, பி.ஜே.பி, அதன் அனைத்து போட்டியாளர்களிடம் இருந்தும் மேலும் ஒட்டு மொத்தமாக அவை அனைத்திலிருந்தும் கூட மிக கூடுதலாக தொழில்நிறுவன நன்கொடைகளை பெறுவதில் முன்னணியில் உள்ளது.

எவ்வாறாயினும், ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் பி.ஜே.பி ஒரு சுழல்காற்றை  விதைக்கின்றது என்ற அச்சத்தில் உள்ளனர்: அதன் நச்சுத்தனமான வகுப்புவாத அரசியலானது சமூக கட்டமைப்பை      தகர்க்கின்றது மற்றும் அரசு  நிறுவனங்களுக்குள்ள மக்கள் ஆதரவு தன்மையை பலவீனப்படுத்துகிறது மற்றும்  இந்தியாவின் வளர்ச்சி குறித்த அதன் விடாப்பிடியான தம்பட்டம் மற்றும் பொருளாதார புள்ளிவிபரங்களை பொய்யாக மாற்றியமைப்பது மற்றும் மூடிமறைப்பது ஆகியவற்றினால் பெரும்பான்மை மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான யதார்த்தத்தை மறைக்க முடியாது.

இந்தியாவின் வளர்ச்சியின் பலன்களை ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கு ஏகபோகமாக கொண்டுள்ளது. 2015 மற்றும் 2017 க்கு இடையில், உச்சத்திலிருக்கும் 1 சதவீதத்தினருக்கு சொந்தமான இந்தியாவின் செல்வம், 53 இலிருந்து 73 சதவிகிதம் வரை உயர்ந்தது, மீதமுள்ள 99 சதவிகிதத்தை 27 சதவிகிதத்தினர் பகிர்ந்து கொண்டனர்.

பெருநிறுவன ஊடகங்களின் பெரும் பகுதியினரும் கூட இப்போது ஒப்புக்கொள்கின்றவாறு இந்தியாவை ஒரு விவசாய மற்றும் வேலைகள் நெருக்கடி ஆகிய இரண்டும் சூழ்ந்துள்ளது. ஒரு மறைக்கப்பட்ட அரசாங்க அறிக்கையின்படி 2003 ல் தொழிலாளர்கள் பங்களிப்பு விகிதம் 63.7 சதவிகிதம் இருந்து 2017-18 ல் 49.8 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்தது, ஏனென்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்போது இல்லாத வேலையைத் தேடுவதை கைவிட்டுள்ளார்கள்.

பிஜேபி டிசம்பர் மாதம் மூன்று மாநில தேர்தல்களில் —மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் மற்றும் இராஜஸ்தான்— தோல்வி அடைந்ததால் ஆடிப்போயிருக்கிறது, அவை வரலாற்று ரீதியாக அதன் பிரதான ஆதார தளங்களாக ஹிந்தி பேசும் பகுதியை சேர்ந்தவை, மேலும் சமீபத்திய மாதங்களில் உணரக்கூடியதாக வளர்ச்சியடையும் சமூக எதிர்ப்பினாலும் ஆடிப்போயுள்ளது. இது ஜனவரி மாதம் மோடி அரசாங்கத்தின் பெருவணிக சார்பு பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான விவசாயிகள் எதிர்ப்புக்கள் மற்றும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில் கோடிக்கணக்கானவர்கள் பங்குபற்றியதையும் உள்ளடக்கும்.

பெருகிவரும் சமூக கோபத்தை திசை திருப்பவும் அதன் இந்து வலதுசாரி தளத்தை அணிதிரட்டுவதற்குமான முயற்சியில், பாகிஸ்தானுடன் ஒரு போர்  நெருக்கடியைத் தூண்டுவதற்காக ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிப்ரவரி 14 புல்வாமா பயங்கரவாத தாக்குதலை பி.ஜே.பி. பயன்படுத்திக் கொண்டது. அந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தண்டிக்கப் போவதாக பேசிய மோடியின் உறுதிமொழியை நிறைவேற்றி காட்டும் வகையில், 1971 இந்திய-பாகிஸ்தானிய யுத்தத்திற்குப் பின்னர் முதல் தடவையாக பிப்ரவரி 25 அன்று பாக்கிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி சென்று தாக்கின.

இது, பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்துவதில் முடிவடைந்தது, இது தெற்காசியாவின் போட்டி அணுஆயுத சக்திகளை யுத்தத்தின் விளிம்பிற்கு கொண்டுவந்தாலும் கூட, பிஜேபி மற்றும் பெருநிறுவனங்களின் பெரும்பகுதிகள் இந்தியாவின் வான் தாக்குதலை ஒரு மிகத்திறமையான தாக்குதலாக தொடர்ந்து தூக்கிப்பிடிக்கின்றனர். பாகிஸ்தானுடனான இந்தியாவின் "மூலோபாய கட்டுப்பாட்டை" மோடி தகர்த்தெறிந்து விட்டார் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்திய காஷ்மீரில் நடத்தப்பட்ட பெரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை தண்டிப்பதற்கு இந்தியாவுக்குள்ள "உரிமை"க்கு சர்வதேச அங்கீகாரத்தையும் அவர் வென்றார் என்றனர்.

காங்கிரஸ் கட்சி மற்றும் அவர்களுக்கு சக்தி கொடுக்கும் ஸ்ராலினிசவாதிகள்

கடந்த மாத போர் நெருக்கடிக்கு காங்கிரஸ் கட்சியின் பதிலிறுப்பு, மற்றைய எதிர்க்கட்சிகளை போன்றது தான். அதாவது இந்திய வான் தாக்குதல்களை அது பாராட்டியது, ஆனால் அதனை பா.ஜ.க அயராது தங்களது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியபோது முரண்பட்டது, அதற்கான அனைத்து பாராட்டுக்களும் இந்திய இராணுவத்தின் “கதாநாயகர்களுக்கு” தான் செல்ல வேண்டும் என்று எதிர்த்து வாதிட்டது.

ஒரு நீடித்த தேர்தல் தோல்விகளினால் துவண்டு போயிருந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் வரலாற்று ஆளும் கட்சியான காங்கிரஸ், கடந்த டிசம்பர் மாநில தேர்தல்களின் மூலமாக அத்திநெலின் (திடீர் ஊக்க மருந்து) கிடைக்கும் வரையில், அதன் மரணப் படுக்கையில் இருப்பது போன்று தோன்றியது.

இப்போது ராகுல் காந்தி மற்றும் அவரது தாய் சோனியா காந்தி தலைமையிலான ஒரு பரம்பரை கட்சியான காங்கிரஸ், பொருளாதார அல்லது வெளியுறவுக் கொள்கையில் பா.ஜ.க. உடன் கணிசமான வேறுபாடுகள் எதையுமே கொண்டிருக்கவில்லை. உண்மையில், முதலாளித்துவ வர்க்கத்தின், சுதந்திரத்திற்கு பிந்தைய அரசு தலைமையிலான வளர்ச்சி திட்டத்தை கைவிடுவதை மட்டுமில்லாமல் ஒரு இந்திய-அமெரிக்க “பூகோள மூலோபாய கூட்டாண்மையை”யும் அது பின்பற்றியதுடன், இந்தியாவை ஒரு பெரிய இராணுவ வல்லரசாக மாற்றும் முனைப்பிலும் காங்கிரஸ் தீர்க்கமாக முன்னோக்கி சென்றது.

ஆனால், வேலைகள் பற்றாக்குறை, விவசாயத்திற்கு அரசாங்க ஆதரவு இல்லாமை மற்றும் கடன் —  மொத்த தேசிய உற்பத்திக்கு இடையிலான விகிதாசாரத்தை குறைக்கும் பெயரில் பா.ஜ.க திணித்த மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பரவலான கோபத்தை காங்கிரஸ் எவ்வாறாயினும் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறது. ஒரு “உத்தரவாதமான வருடாந்தர வருமான” திட்டம் குறித்து காங்கிரஸ் தம்பட்டம் அடிக்கிறது. அது அதிகபட்சமாக மிக வறியநிலையிலுள்ள 20 சதவீதமான இந்திய குடும்பங்களுக்கு வருடத்திற்கு 72,000 ரூபா (அல்லது சுமார் 1,000 அமெரிக்க டாலர்கள்) வரையில் வழங்கும், அத்துடன் மாதத்திற்கு 12,000 ரூபாவாக (172 அமெரிக்க டாலர்களாக) அவர்களது வருமானத்தை உயர்த்தும் குறிக்கோளை கொண்டது.

இவற்றில் பெரும்பாலானவை வெறும் வெற்று வேட்டுக்கள் தான், காரணம், பல ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இந்த திட்டத்தின் விவரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட தவறி விட்டது மட்டுமல்லாமல், அதன் பெரும் பகுதி, “கட்டுப்படுத்தல்” மூலமாக அதாவது, தற்போதைய சமூகநலச் செலவு திட்டங்களை வெட்டுவதன் மூலமாக வழங்கப்படும்.

பாகிஸ்தான் மீதான மோடியின் "துல்லிய தாக்குதல்கள்" குறித்த தம்பட்டங்கள் பற்றிய ஒரு குறிப்பில், ராகுல் காந்தி புளுகினார், அதாவது காங்கிரஸின் போலியான உத்தரவாதமான வருமானம் திட்டம் "வறுமை மீதான துல்லிய தாக்குதல்" என்றார்.  ஆனால் காந்தியின் சில அரசியல் பகையாளிகள் கூட  குறித்துக் கொண்டார்கள் அதாவது இந்தியர்களை வறுமையிலிருந்து நீக்கப் போவதாக பல தலைமுறைகளாகவே காங்கிரஸ் கூறி வந்துள்ளது. 1971 இல் ராகுல் காந்தியின் பாட்டி, இந்திரா காந்தி “வறுமையை ஒழிப்போம்” (Garibi Hatao) என்ற வாக்குறுதி அளித்து பெருவாரியான தேர்தல் வெற்றி பெற்றார்.

பா.ஜ.க.வின் "பிரிவினைவாத" வகுப்புவாத அரசியையும் காங்கிரஸ் கண்டனம் செய்கிறது. ஆனால் அதுவே வெட்கமின்றி இந்து வலதுடன் சேர்ந்து சதி செய்துள்ளது, அதில் உட்படுவது - உச்சநீதிமன்ற உத்தரவின்படி பெண்களுக்கு ஒரு கேரள சன்னதியை திறப்பதற்கு எதிரான  ஆர்எஸ்எஸ் தலைமையிலான கிளர்ச்சிக்கு முழு மனதான ஆதரவை வழங்குவது, மற்றும்  மத்திய பிரதேச அரசாங்க நிகழ்ச்சி திட்டத்தின் மையத்தில் "பசு பாதுகாப்பை" வைத்திருப்பதாகும்.

காங்கிரஸ் பல தரப்பட்ட பிராந்திய மற்றும் சாதிய கட்சிகளுடன் சேர்ந்து ஒரு "மாபெரும் கூட்டணியை" உருவாக்கும் எண்ணத்துடன் வலம் வந்தது. ஆனால் இறுதியில் அது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தேர்தல் கூட்டணிகளை உருவாக்கியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒரு உண்மையான தேசியக் கட்சியாக தன்னை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான அதன் முயற்சிகள் முழுவதையும் ஒரு ”மாபெரும் கூட்டணி" கீழறுத்து விடும்  என்று காங்கிரஸ் தலைமை அஞ்சியது.  காங்கிரஸின் பலவீனத்தை அறிந்து கொண்ட அதற்கு கூட்டாளிகளாக இருக்கக்கூடிய பல - வட இந்தியாவில் சமாஜ்வாதி கட்சி (SP) மற்றும் பகுஜன்  சமாஜ் கட்சி (BSP) மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ((TDP) மற்றும் தெலுங்கானா – போன்றவை கடினமான பேரம் பேசின.

அவை தங்களது கைகளை சுதந்திரமாக வைத்துக் கொண்டால் தான், ஒட்டுகள் எண்ணிய பின்னர், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடனும் அமைச்சர் பதவிகளுக்கு பேரம் பேசுவதற்கு மிகவும் பலமான நிலையிலிருக்க முடியும் என்று கணக்கு போடுகின்றன – அவற்றில் பல பா.ஜ.க. வின் முன்னாள் கூட்டாளிகள்.

CPM, மற்றும் அதன் சகோதர ஸ்ராலினிச கட்சியான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அவர்களது இடது முன்னணி கடந்த மூன்று தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அடக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. 1991 முதல் 2008 வரையிலான அடுத்தடுத்த வலதுசாரி இந்திய அரசாங்கங்களை ஸ்ராலினிஸ்டுகள் தக்க வைத்துள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் தலைமையிலானவை. மேலும், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா போன்ற அவர்கள் ஆட்சி செய்த இடங்களில், அவர்களே "முதலீட்டாளர் சார்பு கொள்கைகள்" என்று ஒப்புக் கொண்டவற்றை அமுல்படுத்தினர்.

மோடி மற்றும் அவரது பா.ஜ.க வின் வடிவத்தில், முதலாளித்துவ வர்க்கம்  பிற்போக்கு வகுப்புவாதம் மற்றும் சர்வாதிகார போக்கை தழுவி நிற்கும் போது, அதற்கு ஸ்ராலினிஸ்டுகளின் பதிலிறுப்பு, மேலும் வலதிற்கு திரும்புவதாக இருந்தது. அவர்கள் முதலாளித்துவத்தின் கட்சிகள் மற்றும் அதன் அரசுடன் தொழிலாள வர்க்கத்தை பிணைத்து போடும் முயற்சிகளை இரட்டிப்பாக்கினர்.

பாஜக வை எதிர்கொள்வதற்கும் மேலும்  "ஜனநாயகம்” மற்றும் ”குடியரசை காப்பாற்றுவதற்கும்",  தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு ”மாற்று மதச்சார்பற்ற"அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க பாடுபட வேண்டும் – அதாவது மற்றொரு வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கு உதவி செய்ய வேண்டும், அது  காங்கிரஸ் தலைமையிலானதாக இருப்பதற்கான வாய்ப்பை கொண்டதாகவும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை உக்கிரப்படுத்துவதற்கான திட்டத்திற்கு அர்ப்பணித்ததாகவும், அத்துடன் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின்  இராணுவ மூலோபாய தாக்குதலில் அதன் எடுபிடியான இந்தியாவின் பாத்திரத்தை பராமரிக்கவும் விஸ்தரிக்கவும் செய்வதாக இருக்கும். 

ஒரு அச்சுறுத்தலாக இந்து வலது வளர்ந்திருக்க முடிந்தது என்றால், அது திட்டவட்டமாக தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஸ்ராலினிஸ்டுகள் முடமாக்கிவிட்டது தான் காரணம், சமூக நெருக்கடிக்கு அதன் சொந்த சோசலிச தீர்வை முன்னெக்க விடாமல் தடுத்தது மேலும்  வலது சாரி முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அரசாங்களுக்கு அதனை கீழ்படிய செய்தனர்.

இந்திய தொழிலாளர்கள் ட்ரொட்ஸ்கிச நிரந்தர புரட்சி வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்க  வேண்டும்: முதலாளித்துவத்திற்கு எதிரான பூகோள தொழிலாள வர்க்கத் தாக்குதலின் ஒரு பகுதியாக தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் அதன் சுயாதீனமான வர்க்க பலத்தை அணிதிரட்டுவதும் மற்றும் உழைக்கும் மக்களையும் ஏழைகளையும் அதன் பின்னே அணிதிரட்டுவதும் ஆகும்.