ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan think tank warns about growing levels of social inequality

ஆதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை குறித்து இலங்கை சிந்தனை குழு எச்சரிக்கின்றது

By Dilruwan Vithanage 
26 March 2019

இலங்கை: 2018 பொருளாதார நிலைமை என்ற, கொள்கை கற்கைகளுக்கான நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை, வருமன சமத்துவமின்மையானது நாடெங்கிலும் நடைமுறையிலுள்ளதும் அதிகரித்துச் செல்லுகின்றதுமான பிரச்சினை என்று வெளிப்படுத்தியுள்ளது.

அரசாங்க மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினால் நிதியளிப்பு செய்யப்படுகின்ற சிந்தனை குழு, இலங்கையில் தற்போதைய வருமான சமத்துவமின்மையானது ஒரு பாரிய பிரச்சினையாக இருப்பதோடு இதற்கு கொள்கை வகுப்பாளர்களின் உடனடி கவனம் தேவை” என பதட்டத்துடன் குறிப்பிடுகின்றது.

இலங்கை புள்ளிவிபர மற்றும் ஆள் கணக்கெடுப்பு திணைக்களத்தின் தரவுகளை அடிப்படையாயக் கொண்ட இந்த அறிக்கை, 2016ஆம் ஆண்டு ஆய்வுடன் 1990-1991ன் குடும்ப வருமான மற்றும் செலவீனங்களை ஒப்பீடு செய்கின்றது. இலங்கையின் உத்தியோகபூர்வ ஆய்வுகள் மோசமாக மட்டுப்படுத்தப்பட்டு வறுமையின் ஆழம் பற்றிய உண்மையான விபரத்தை வழங்காத போது, இந்த அறிக்கையானது சில கண்ணோட்டத்தை வழங்குகின்றது.

இந்த ஆய்வானது 1990-91 இல் மக்கள் தொகையில் 26.1 சதவீதத்திலிருந்த வருமான வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2016 இல் 4.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதோடு இது குறிப்பிடத்தக்க சாதனை எனவும் கூறுகின்றது.

எவ்வாறாயினும், வறுமைக்கோடு, ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 1.90 அமெரிக்க டாலர் அல்லது 290 ரூபா என்ற கீழ்மட்ட தொகையாகும். உலக வங்கியின் 2016 உலகளாவிய வறுமைக்கோடு நாளொன்றுக்கு 3.20 டாலர் வருமானமாகும். இது இலங்கையின் தொகையுடன் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.

வறுமையின் புவியியல் பரம்பல் வெளிப்படுத்துவதாவது: நகர் புறத்தில் வாழ்பவர்களில் 1.9 சதவீதமானவர்கள் வறியவர்களாவர். இதனோடு ஒப்பிடும்போது, கிராமப்புறத்தில் வசிப்பவர்களில் 4.3 வீதமானவர்களும் பெருந்தோட்டப் பகுதியில் வாழ்பவர்களில் 8.8 சதவீதமானவர்களும் வறியவர்களாவர். வேறு வார்த்தையில் சொன்னால், மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்ட பிரிவினர் தேயிலை மற்றும் பிற பெருந்தோட்டங்களில் வசிப்பவர்களாவர். தோட்டத் தொழிலாளர்கள் அவர்களது 500 ரூபா நாளந்த அடிப்படை ஊதியத்தை 100 சதவீதத்தால் அதிகரிக்க கோரி கடந்த ஆண்டு இறுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற விவசாயிகள் விவசாய மானிய வெட்டுக்களை எதிர்த்தும் அவர்களின் உற்பத்திகளுக்கு நியாயமான விலை கோரியும் கடன் நிவாரணம் கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சமூகத்தின் பணக்கார பிரிவுகள் கடந்த 25 வருட காலப்பகுதில் ஏழைகளுடன் ஒப்பிடுகையில் தமது சொத்துக்களை வியத்தகு அளவில் அதிகரித்துக்கொண்டுள்ளனர்.

கீழ் மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தின் குடும்ப சராசரி மாத வருமானம், 1990-91 இல் 1,661 ரூபாவில் அல்லது 40 டாலரில் இருந்து (அப்போதைய நாணய மாற்று வீதம் $1=41 ரூபா), 2016 இல் 10,419 ரூபா அல்லது 71 டாலர் (நாணய மாற்றுவீதம் $1=146 ரூபா) வரை அதிகரித்துள்ளது. இது அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இரு மடங்கை விட குறைவாகும்.

இதற்கு மாறாக, 10 சதவீதமான பெரும் பணக்காரர்களின் சராசரி வருமானமானது 1990-91 இல் 12,963 ரூபா அல்லது 316 டாலரில் இருந்து 2016 இல் 162,460 ரூபா அல்லது 1,114 டாலர் வரை உயர்ந்துள்ளதோடு, அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கை விட அதிகமாகும். உயர் மட்ட 1 வீதத்தினர் மற்றும் 0.1 சதவீதத்தினரைப் பொறுத்தளவில் இந்த வளர்ச்சி சந்தேகத்திற்கிடமின்றி மிகப் பிரமாண்டமானதாகும்.

2016 இல், 10 சதவீதமான பெரும் பணக்காரர்கள் அல்லது அது செல்வந்த பத்துபேர், 70 சதவீதமான மொத்த குடும்பங்களும் சம்பாதித்தவற்றுக்கு சமமான தொகையை சம்பாதித்துள்ளனர். கீழ் மட்டத்தில் உள்ள பத்து சதவீதமானவர்கள் மொத்த குடும்ப வருமனத்தில் வெறும் 1.6 சதவீதத்திலேயே நிற்கின்றனர்.

இலங்கை: 2018 பொருளாதார நிலை, வறுமையானது இலங்கைப் பிள்ளைகளின் கல்வியை எவ்வாறு கடுமையாகப் பாதிக்கின்றது என்பதை குறித்து காட்டியுள்ளது. 2012-2013 புள்ளிவிபர ஆள் கணக்கெடுப்பு தரவுகளின் படி (2016 இற்கான தரவுகள் வழங்கப்படவில்லை), 15-16 வயதுடைய 23.8 சதவீதமான வறிய பிள்ளைகள், மற்றும் 17-18 வயதுடைய 64.7 சதவீதமான வறிய பிள்ளைகளுக்கும், நிதி பற்றாக்குறை காரணமாக அவர்களின் முறையான கல்வியை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளது.

இந்த அறிக்கை, வறுமையை குறைத்து, ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் என ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள் கூறிக்கொண்ட, சமுர்தி (செழிப்பு) மற்றும் ஏனைய வரையறுக்கப்பட்ட சமூக நலத்திட்டங்களின் தோல்விக்கு இந்தப் புள்ளிவிபரங்களைச் சுட்டிக் காட்டியுள்ளன.

பரந்த அதிருப்தியின் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் சமீபத்திய பாதீடு, ஒரு ஒப்பனை நடவடிக்கையாக சமுர்தி பெறுகின்ற மக்களின் எண்ணிக்கையை 600,000 ஆல் அதிகரித்துள்ளது. தற்போது, இலங்கையில் 3.5 மில்லியன் மக்கள் 1,500 மற்றும் 3,500 ரூபாவுக்கு இடைப்பட்ட சமுர்தி கொடுப்பனவை பெறுகின்றனர்.

கொள்கை கற்கைகளுக்கான நிறுவனத்தின் அறிக்கை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடுரமான 30 ஆண்டுகால யுத்தத்தின் பேரழிவு தாக்கத்தைப் பற்றி சில உணர்வுகளை தருகின்றது. “அதி வறிய குழுவில்” அடங்கும் இலங்கை குடும்பங்களின் ஆகக் கூடிய பகுதியினர் வடக்கு மாவட்டங்களான முல்லைத்தீவு (மக்கள் தொகையில் 71 சதவீதம்) மற்றும் கிளிநொச்சி (மக்கள் தொகையில் 66 சதவீதம்) மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு (மக்கள் தொகையில் 65.2 சதவீதம்) ஆகிய மாவட்டங்களிலேயே வாழ்கின்றனர். இவர்களது மாத வருமானம் 30,000 ரூபாவை விட குறைவாகும்.

2016 இல், இலங்கையின் 50 சதவீத குடும்பங்கள், மாதத்திற்கு தலா 39,855 ரூபாவிற்கும் குறைவான வருமானத்தை ஈட்டுகின்றனர். ஒரு சராசரி குடும்பம் 3.8 சதவீத அங்கத்தவர்களை கொண்டுள்ள அதேவேளை, இந்த அளவு குடும்பத்தை கொண்டு நடத்த இந்த வருமானம் போதாது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் சராசரி விலைகள் 1990-91 முதல் 2016 வரையான இதே காலத்தில் ஆறு தடவைகளுக்கு மேலாக அதிகரித்துள்ளது.

இலங்கையிலான சமுக சமத்துவமின்மை உலகலாவிய சமத்துவமின்மையின் வளர்ச்சியின் ஓரு வெளிப்பாடு ஆகும். 2018 இல், பிரிட்டனை தளமாகக் கொண்ட அறக்கட்டளை நிறுவனமான ஒக்ஸ்ஃபாம், உலக பில்லியனர்களின் சொத்தானது 900 பில்லியன் டாலராக அல்லது 12 சதவீதத்தால் அதிகரித்துள்ள அதே வேளை, உலக மக்கள் தொகையின் அரைவாசியான 3.8 பில்லியன் பேரின் சொத்தானது 11 சதவீதத்தினால் சரிவடைந்துள்ளதை காட்டுகின்றது.

உலக சோசலிச வலைத் தளம்,   இந்த ஆண்டு ஜனவரி 22 தெரிவித்ததாவது: “2008 உலகளாவிய நிதி நெருக்கடி வெடிப்பிலிருந்தான தசாப்தத்தில், அரசாங்கங்களும் நிதி அதிகாரிகளும், தேக்கநிலை, கீழ்மட்ட ஊதியம் மற்றும் சிக்கன நடவடிக்கை திட்டங்கள் போன்ற வடிவத்தில் உலகத் தொழிலாள வர்க்கத்தின் முதுகின் மேல் இதன் முழுத் தாக்கத்ததையும் சுமத்தினர். இந்த சிக்கன நடவடிக்கைகளில் சுகாதாரம் மற்றும் ஏனைய சமூக சேவை வெட்டுக்களில் அடங்கும்.

இந்த நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கள், அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு, அரச-நிறுவனங்களை தனியார்மயமாக்கல், ஊதியத்தை முடக்குதல் மற்றும் சமூக சேவைகளை வெட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அமுல்படுத்தி வந்துள்ளன.

அதே நேரம், பாரிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் இலாபத்தினை அதிகரிக்க வரி வெட்டுக்கள் மற்றும் பல்வேறு ஊக்குவிப்புப் பொதிகளும் வழங்கப்பட்டுள்ளது. 2012 இல் கொழும்பு அரசாங்கமானது கம்பனி வரிகளை 35 சதவீதத்தில் இருந்து 28 சதவீதத்திற்கு குறைத்துள்ளது. 2010 இற்கு முன்ன்னர் 35 சதவீதமாக இருந்த ஆகக்கூடிய தனிநபர் வருமான அளவு, 2011 இல் 24 சதவீதமாகவும் மேலும் கடந்த வருடம் 16 சதவீதத்துக்கும் குறைத்தது.

இலங்கை: 2018 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைமை, “தொடர;ச்சியான வருமான சமத்துவமின்மையின் அடிப்படைக் காரணிகளைப் புரிந்துகொள்ள ஆழமான ஆய்வுகள் அவசியம்” என புலம்புகின்றது. தொடர்ச்சியான வருமான சமத்துவமின்மையின் அடிப்படைக் காரணி இரகசியமானது அல்ல: இது முதலாளித்துவத்தின் மற்றும் இலாப உந்துதலின் தவிர்க்க முடியாத விளைவாகும். இந்த இலாப நோக்கு அமைப்பு முறையையே அரசாங்கமும் கொள்கை கற்கை நிறுவனம் போன்ற சிந்தனை குழுக்களும் பாதுகாக்கின்றன.