ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Stop the extraordinary rendition of Julian Assange!

ஜூலியன் அசான்ஜை நீதிக்குப்புறம்பான விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதை நிறுத்து!

Eric London
15 April 2019

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் பத்திரிகையாளருமான ஜூலியன் அசான்ஜை பலவந்தமாக வெளியேற்றுவதற்காக பிரிட்டிஷ், ஈக்வடோரிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் முயற்சி ஒரு ஜனநாயக விரோத சூழ்ச்சி என்பதுடன், சர்வதேச சட்டத்தை ஆணவத்துடன் மீறுவதாக உள்ளது.

அமெரிக்க அரசாங்கம் அசான்ஜிற்கு எதிரான நடைமுறைகளை வெளிநாட்டிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளாக (extradition) சித்தரிக்கின்ற அதேவேளையில், வெளிநாட்டிடம் ஒப்படைப்பதற்கும் (extradition) மற்றும் பலவந்தமாக விசாரணைக் கைதியாக (rendition) கொண்டு வருவதற்கும் இடையிலான வித்தியாசம் நடைமுறையளவில் துடைத்தழிக்கப்பட்டு வருகிறது—விசாரணைக் கைதியாக ஒப்படைப்பது என்பது ஓர் அரசு எதேச்சதிகார கைது நடவடிக்கைக்காக, சித்தரவதைக்காக மற்றும் உடனடி தண்டனைக்காக விசாரணையின்றி வேறொரு அரசிடம் விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதைக் குறிக்கிறது.

இதற்காக, அமெரிக்க அரசாங்கம் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" போது விசாரணை கைதிகளைப் பலவந்தமாக கொண்டு வருவதற்குப் பயன்படுத்திய அதே அணுகுமுறைகளை அசான்ஜிற்கு எதிராகவும் பயன்படுத்தி வருகிறது. சிஐஏ, 2001 இல் இருந்து நூற்றுக் கணக்கானவர்களைப் பிடித்து வந்து, அவர்களை உலகெங்கிலும் உள்ள சிஐஏ இன் இரகசிய "இருட்டறை" சிறைக்கூடங்களில் தனிமையில் அடைத்து வைத்து, கடுமையான விசாரணை மற்றும் சித்திரவதைக்கு அவர்களை உட்படுத்தி உள்ளது. அசான்ஜ் அரசின் கரங்களில் வந்து சேர்ந்தவுடன், அவரை மீண்டும் எப்போதேனும் பார்க்க முடியுமா என்பதே கேள்விக்கிடமாக உள்ளது.

இந்த நடைமுறையில் ஊடக அவதூறு பிரச்சாரமும் உள்ளடங்கும், இதற்கு எந்த கட்டுப்பாடும் இருப்பதாக தெரியவில்லை. அசான்ஜின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அவரை ஒரு இராட்சஷனிடம் கைமாற்றுவதே அதன் நோக்கமாக உள்ளது.

மில்லியன் கணக்கான அப்பாவி மக்களையும், ஆயிரக் கணக்கான அமெரிக்க சிப்பாய்களையும் பலி கொண்ட ஏகாதிபத்திய போர் குற்றங்களை அசான்ஜ் அம்பலப்படுத்தி உள்ளார் என்பதை முடிவில்லா இந்த ஊடக செய்திகள் உதறி விட்டுவிடுகின்றன. அரசு மற்றும் பெருநிறுவன ஊடகங்கள், இரகசியமாக வைப்பதற்காக சூழ்ச்சி செய்த கொடூரமான குற்றங்களை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த பத்திரிகையாளர் மீது செய்தி பிரபலங்கள் அவதூறு வாரியிறைப்பதையும் மற்றும் இரவு-நேர நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அசான்ஜைத் தரந்தாழ்ந்து சேறுவாரியிறைக்கும் ஏளனத்தையும் பார்க்கையில், ஒருவர் அவர்கள் ஒவ்வொருவரின் வாயையும் அடைக்க விரும்புவார்.

ஆவணங்களை பகிரங்கப்படுத்திய அவர்மீது, ஒரு கடவுச்சொல்லைக் கடந்து செல்ல செல்சியா மானிங்கிற்கு உதவ முயன்ற ஒரேயொரு குற்றச்சாட்டை மட்டுமே அமெரிக்கா சுமத்தி உள்ளது என்பதால், அசான்ஜை ஒப்படைப்பது முறையானதே என்று அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஈக்வடோரிய அரசாங்கம் வாதிடுகின்றன. ஆனால் அசான்ஜின் கைது நடவடிக்கைக்குப் பின்னர், பெருநிறுவன பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் உத்தியோகபூர்வ விளக்கத்தை மறுத்து, அமெரிக்கா அசான்ஜைக் சிறைக்காவலில் வைக்க விரும்புவதற்கான நிஜமான காரணத்தை வெளிப்படுத்தி உள்ளன.

“திரு. அசான்ஜை அமெரிக்க சிறைக்காவலுக்கு மாற்றுவது, அதைப் பின்தொடர்ந்து சாத்தியமானால் ரஷ்யா சம்பந்தப்பட்ட கூடுதல் குற்றச்சாட்டுகள் அல்லது அவரை ஒத்துழைக்கும் சாட்சியாக மாற்றுவது ஆகியவை மேற்கில் ஜனநாயகத்திற்குக் குழிபறிப்பதற்கான ரஷ்ய உளவுத்துறையின் முயற்சிகளைக் கூடுதலாக அறிந்து கொள்வதற்கு முக்கிய திறவுகோலாக இருக்கும். தனிப்பட்டரீதியில் அவரைக் கணக்கில் கொண்டு வருவது நிச்சயமாக நீண்டகாலமாக நிலுவையில் இருந்துள்ளது,” என்று வாஷிங்டன் போஸ்ட் தலையங்க குழு எழுதியது.

“அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவிற்கு அவர் கொண்டு வரப்பட்டவுடன், கிளிண்டன் பிரச்சாரத்தில் ரஷ்யா எவ்வாறு அதன் தாக்குதல்களை முடுக்கிவிட்டது என்பதற்கு அவர் ஒரு பயனுள்ள ஆதாரமாக ஆகக்கூடும்,” என்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

பிரிட்டிஷ் பொலிஸ் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து அசான்ஜை வெளியே பிடித்திழுத்து வந்த பின்னர், செனட் சபையின் ஜனநாயக கட்சி சிறுபான்மை தலைவர் சார்ல்ஸ் சூமெர் ட்வீட் செய்து, “இப்போது ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார், புட்டின் மற்றும் ரஷ்ய அரசாங்கம் சார்பாக நமது தேர்தல்களில் அவர் தலையிட்டதற்காக அவர் விரைவில் கணக்கில் கொண்டு வரப்படுவார் என்று நான் நம்புகிறேன்,” என்றார். அசான்ஜ் "ஒவ்வொரு சமயத்திலும் இரகசிய இராஜாங்க அரசு ஆவணங்களையும் மற்றும் நமது 2016 ஜனாதிபதி தேர்தல் சம்பந்தப்பட்ட இரகசிய ஆவணங்களையும் பகிரங்கமாக வெளியிட்டு, அமெரிக்கா மற்றும் நமது கூட்டாளிகளின் தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க செய்துள்ளார்,” என்று பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்கள் குழுவின் ஜனநாயகக் கட்சி தலைவர் எலியட் ஏஞ்சல் ட்வீட் செய்தார்.

இத்தகைய கருத்துக்கள், ஒப்படைப்பு நடைமுறைகள் பொய்யான பாசாங்குத்தனங்களின் கீழ் நடத்தப்பட்டு வருவதை எடுத்துக்காட்டுகின்றன. ஒவ்வொரு பகிரங்க குற்றச்சாட்டும் ஒரு மூடிமறைப்பாக உள்ளது. அரசாங்கம் அசான்ஜை விசாரணை செய்யவும், சாட்சியம் வழங்கச் செய்ய அவரை நிர்பந்திக்கவும் மற்றும் அமெரிக்க போர் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அவரை கூடுதலாக தொல்லைப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. ஜனநாயக கட்சி செனட்டர் ஜோ மன்சின் வார்த்தைகளில், “அவர் நமது உடைமை, அவரிடம் இருந்து நாம் உண்மைகளையும் நிஜங்களையும் பெற முடியும்,” என்று உள்ளது.

தானே தனக்கு எதிராக சாட்சியம் கூற வேண்டியதில்லை என்ற ஐந்தாம் அரசியலமைப்பு திருத்த உரிமை அவருக்கு இருப்பதால், அசான்ஜ் அரசாங்கத்திற்கு எந்த சாட்சியமும் அளிக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள், அவரிடம் இருந்து "உண்மைகளை வரவழைக்க" அரசாங்கம் என்ன திட்டமிடுகிறது? அபு கிஹ்ரைப் சிறைச்சாலைகள் மற்றும் பக்ரம் விமானப்படை தளத்தின் சிறைச்சாலைகளில் அனுபவிப்பதற்கு என்ன கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்படும்? என்ற கேள்விகளை யாசிக்கின்றன.

அசான்ஜ் கைது செய்யப்பட்டதில் இருந்து இந்நாள் வரையிலான வழக்கு நடைமுறைகள், எந்தவொரு சட்டரீதியான வழக்கு நடைமுறையிலும் அவர் கையாளப்படக்கூடிய விதத்தை எடுத்துக் காட்டுகின்றன.

ஈக்வடோரிய ஜனாதிபதியும் ஏகாதிபத்தியத்தின் நவநாகரீக சேவகருமான லெனின் மொரேனோவின் அழைப்பின் பேரில், பிரிட்டிஷ் அரசாங்கம் இலண்டன் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து அசான்ஜை இழுத்து வந்ததன் மூலம் தூதரக அடைக்கல கொள்கையை அப்பட்டமாக மீறியது. இது, துருக்கி இஸ்தான்புல்லில் சவூதி தூதரகத்தில் முற்றிலும் போலிக்காரணங்களின் அடிப்படையில் கடந்தாண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைப் படுகொலை செய்ததற்காக, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள், சவூதி அரசாங்கத்தை எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு விடுத்த அறிக்கைகளை அம்பலப்படுத்துகிறது.

வியாழனன்று அசான்ஜின் பிணை கோரிக்கை மீது விசாரணை நடத்திய பிரிட்டிஷ் மாவட்ட நீதிபதி, அசான்ஜின் வழக்கறிஞர்கள் ஒரு நியாயமான விசாரணை கோரிய போது அவரை ஏளனப்படுத்தி நகைத்தனர். “அவருக்கு ஒரு நியாயமான விசாரணை கிடைக்கவில்லை என்ற அவர் வலியுறுத்தல் நகைப்பிற்கிடமானது,” என்று நீதிபதி மிக்கெல் ஸ்னொவ் கூறினார். “தனது சொந்த சுயநலங்களுக்கு அப்பாற்பட்டு எதையும் பெற முடியாத ஒரு சுயமோகியின் நடத்தையைப் போலுள்ளது அவர் நடத்தை,” என்றார். பயங்கரவாதிகளுக்கும் மற்றும் ஏனைய உயர்-அபாய கைதிகளுக்குமான அதிகபட்ச பாதுகாப்புக்குரிய சிறைச்சாலையான பெல்மார்ஷிற்கு அசான்ஜ் அனுப்பப்பட்டுள்ளார், அங்கே உள்ள கைதிகளில் பாதி பேர் வாரத்திற்கு வெறும் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே அவர்களின் சிறையிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமும் அசான்ஜைக் குற்றவாளி என ஏற்கனவே அறிவித்துள்ள அமெரிக்காவில் ஒரு நேர்மையான வழக்கிற்கான உரிமை அவருக்கு மறுக்கப்படும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை. என்ன மாதிரியான "வழக்கு" நடத்தப்பட்டாலும், "தேசிய பாதுகாப்பு" நோக்கங்களுக்காக "இரகசியமானவை" என்ற அடித்தளத்தில், அசான்ஜின் வழக்கறிஞர்களுக்கு அவர்களின் கட்சிக்காரருக்கு எதிரான ஆதாரத்தைக் குறுக்கு விசாரணை செய்யும் உரிமை வழமையாக மறுக்கப்படும்.

அசான்ஜிற்கு எதிரான சதி, ஆளும் வர்க்கத்தில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு அதிகார வட்டாரமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

பலவந்தமாக விசாரணை கைதியாக ஒப்படைத்தல் என்று இப்போது அழைக்கப்படும் இந்த நடைமுறைகள், 18 ஆம் நூற்றாண்டு ஜனநாயக புரட்சியின் தலைவர்களுக்கு, இரண்டாம் சார்லஸ் மற்றும் பதினான்காம் லூயிஸின் அரசியல் கைதிகளால் நிரம்பிய இருண்ட நெரிசலான சிறைக்கூடங்களை நினைவூட்டும். பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த முதலாளித்துவ புரட்சிகள் எதேச்சதிகார சிறையடைப்பை மற்றும் சித்திரவதைகளை அரசியல் பிற்போக்குத்தனத்தின் வெறுக்கத்தக்க அணுகுமுறைகள் என்று நீக்கியதுடன், விசாரணை முறைகளின் உரிமையை, நீதிப் பேராணை, குரூரம் மற்றும் வழமைக்குமாறான தண்டனைகளில் இருந்து விடுவிப்பு ஆகியவற்றைத் தாங்கிப்பிடித்தன. இன்றைய சர்வதேச சட்டத்தின் கீழ், நூரெம்பேர்க் கோட்பாடுகளின்படி பார்த்தால், பலவந்தமாக விசாரணை கைதியாக ஒப்படைப்பது என்பது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும்.

அரசியல் அல்லது ஊடக ஸ்தாபகத்திடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் அசான்ஜிற்கு எதிராக ஆளும் வர்க்கம் இந்நடவடிக்கையை நடத்த முடிந்தால், பின் எந்தவொரு குற்றமும் சாத்தியமாகிவிடும். அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக, ஜேர்மி கோர்பின் போன்ற "இடது" பிரமுகர்கள் எந்தவொரு பொறுப்பிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு பொய்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், அசான்ஜை அது மூர்க்கமாக கையாள்வது சிலி சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினோசேக்கு அதன் விடையிறுப்புடன் முரண்படுகிறது. ஸ்பெயினில் பாரிய படுகொலைக்காக பினோசேவை ஸ்பானிய நீதிபதி Baltasar Garzon வழக்கில் இழுக்கும் முயற்சியில் ஒப்படைக்குமாறு கோரியதற்கு எதிராக பினோசே போராடினார். 2000 இல், அப்போதைய பிரதம மந்திரி டோரி பிளேயரின் தொழிற் கட்சி பினோசேவை ஒப்படைக்க மறுத்ததுடன், சுர்ரேயில் அவர் வசிப்பிடத்தில் வீட்டுக் காவலில் இருந்தும் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.

“இந்த வழக்கில் செனட்டர் பினோசே இக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவரின் நிலைமையில் இருந்து ஆராய்ந்தால், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது முயற்சிக்கப்படும் வழக்கு விசாரணை எந்தவொரு நாட்டிலும் ஒரு நியாயமான வழக்கு விசாரணையாக இருக்க முடியாது என்பதோடு, அது மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய தீர்மானத்தின் ஆறாவது ஷரத்தை மீறுவதாக இருக்கும்,” என்று அந்நேரத்தில் உள்துறை அமைச்சகம் எழுதியது.

செப்டம்பர் 11, 1973 ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் பதவியேற்ற பின்னர் சர்வாதிகாரி பினோசே ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சோசலிஸ்டுகளைப் படுகொலை செய்தார் மற்றும் சித்திரவதை செய்தார் என்ற நிலையில், ஜூலியன் அசான்ஜ் அமெரிக்க போர் குற்றங்கள் மீதான ஆதாரங்களைத் தான் பிரசுரித்தார். அவர் ஏகாதிபத்திய நலன்களுக்குக் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படுத்தி உள்ளார் என்பதால் தான் சர்வதேச ஆளும் வர்க்கம் அவரை வெறுக்கிறது.

ஈக்வடோரிய தூதரகத்தில் அடைக்கலம் கோர அவர் நிர்பந்திக்கப்பட்டதிலிருந்து ஏழு ஆண்டுகள், சர்வதேச அளவில் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியைக் கண்டுள்ளன. இந்த சக்திவாய்ந்த சமூக சக்தி—தொழிலாள வர்க்கம்—ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் செல்சியா மேனிங், எட்வார்ட் ஸ்னொவ்டன் மற்றும் ஜூலியன் அசான்ஜ் போன்ற வர்க்க போர் கைதிகளின் விடுதலையைப் பாதுகாக்கவும் அணிதிரட்டப்பட வேண்டும்.