ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Two hundred attend meeting on the struggle against fascism at Leipzig Book Fair

லைப்சிக் புத்தக கண்காட்சியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான கூட்டத்தில் இருநூறு பேர் கலந்துகொண்டனர்

By our reporters 
26 March 2019

சனிக்கிழமையன்று, லைப்சிக் புத்தக கண்காட்சியில் மெஹ்ரிங் வெளியீட்டகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "1930 களின் படிப்பினைகளும் இன்று தீவீர வலதுகளுக்கு எதிரான போராட்டமும்" எனும் தலைப்பினாலான ஒரு பொதுக் கூட்டம் ஒரு சக்திவாய்ந்த ஆதரவை பெற்றிருந்தது. லைப்சிக்கின் புறநகர் பகுதியான பிளாக்விட்ஸ் இல் நடைபெற்ற இந்த நிகழ்வு ஓரளவு தொலைவில் இருந்தாலும், சுமார் 200 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


லைப்சிக் கூட்டத்தின் ஒரு பகுதியினர்

"சமீபத்திய ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான பல கூட்டங்களை நாங்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளோம் என்பதால் லைப்சிக் பல்கலைக்கழகத்தில் இந்த கூட்டத்தை நடாத்த நாங்கள் விரும்பினோம்" என்று கூட்டத்தை ஆரம்பிக்கையிலே சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தேசிய செயலாளர் உல்ரிச் ரிப்பேர்ட் கூறினார். "ஆயினும், பல்கலைக்கழக நிர்வாகம் எந்த விரிவுரை மண்டபங்களும் வழங்கக்கூடியதாக இல்லை என்று கூறி ஒரு அறைக்கான எங்கள் வேண்டுகோளை மறுத்துவிட்டது."

இது ஜேர்மனியின் மாற்றீட்டு கட்சிக்கு (AfD) ஒரு தெளிவான சரணடைவாகவும் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச இயந்திரத்தின் முக்கிய பகுதிகள் ஆகியவற்றின் ஆதரவுகளை தீவிர வலதுசாரிகள் எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது என்பதையும் "எங்களது கூட்டம் துல்லியமாக இதற்கு எதிரானது" என்றும் ரிப்பேர்ட் குறிப்பிட்டார்.

மெஹ்ரிங் வெளியீட்டகம், புத்தக கண்காட்சியில் வரலாற்று நூல் கருத்துக்களம் என்னும் பகுதியில் அதிவலதுகளுக்கு எதிரான போராட்டமும் சோசலிச இயக்கத்தின் வரலாறும் என்னும் தலைப்பில் இரு புத்தகங்களை வெளியிட்டது. சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலாளர் கிறிஸ்தோப் வான்ட்ரேயர், ஏன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்? வரலாற்று பொய்மைப்படுத்தல், அரசியல் சதி மற்றும் ஜேர்மனியில் பாசிசம் திரும்புதல் என்ற அவரது புத்தகத்தை அறிமுகப்படுத்தினார் அத்துடன் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தலைவருமான டேவிட் நோர்த், "நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு" எனும் தனது நூலின் புதிய பதிப்பை வெளியிட்டார்.

இரு புத்தகங்களும் சனிக்கிழமை மாலை கூட்டத்தின் மையப்புள்ளியாக இருந்தன,  மற்றும் ரிப்பேர்ட் தனது ஆரம்ப கருத்துக்களில், சமகால பொருத்தப்பாடு மற்றும் அவற்றுக்கிடையே உள்ள உட்தொடர்பில் கவனத்தை ஈர்த்தார். "மார்க்சிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்றை பற்றி விரிவான புரிதல் இல்லாமல், ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட முடியாது" என்று அவர் அறிவித்தார். "ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டாமல், பாசிசவாதிகளுக்கு எதிராக போராடுவது சாத்தியமில்லை."

அவர் தனது புத்தகத்தின் சமகால பொருத்தப்பாட்டை சுட்டிக்காட்டியதன் மூலம் தொடங்கி, பிரதான உரை கிறிஸ்தோப் வான்ட்ரேயரால் வழங்கப்பட்டது. பரந்த அளவிலான புதிய நாஜி வலையமைப்பு அரச அமைப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தால் மாத்திரமே நியூசிலாந்தின் மிருகத்தனமான பயங்கரவாத தாக்குதலானது சாத்தியம் என்று அவர் விளக்கினார். "இது ஒரு தனிப்பட்ட நவ-நாஜி நடவடிக்கையல்ல," என்று வான்ட்ரேயர் வலியுறுத்தினார். "இது ஒரு அடிப்படை சமூக போக்கின் வெளிப்பாடு ஆகும்." "அமெரிக்கா, பிரேசில் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரி அரசாங்கங்களை பற்றி பேச்சாளர் குறிப்பிட்டார். ஜேர்மனியில், தீவிர வலதுசாரி AfD பாராளுமன்ற பிரதிநிதிகள் நாஜி சகாப்த ஜேர்மன் இராணுவத்தை புகழ்ந்து பாராட்டினார்கள் மற்றும் யூதப் படுகொலையை குறைத்துக்காட்டுகின்றனர். "ஏன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்? எனும் புத்தகம் வலதுக்கான திருப்பம் எவ்வாறு சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக விபரிக்கிறது.


கிறிஸ்தோப் வான்ட்ரேயர்

Der Spiegel  இதழ் பெப்ரவரி 2014 இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் ஜேர்மனிய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்று கோரியது, இதன் மூலம் வரலாற்று திருத்தல்வாதத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தது. அந்தக் கட்டுரையில், மற்ற விஷயங்களிடையே, ஹிட்லர் தீயவராக இல்லை என்றும், 1918 இல் ரஷ்ய உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடுகளுக்கு சமமாக யூதப் படுகொலைகளை ஒப்பிடப்படலாம் என்றும் பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி மேற்கோளிட்டுள்ளார். நாஜிக்களின் குற்றங்களை குறைத்துக்காட்டி, அகதிகளுக்கு எதிரான வன்முறை மற்றும் கிளர்ச்சியை தூண்டியமைக்காக நவ-நாஜிக்கள் பார்பெரோவ்ஸ்கியை ஒரு கதாநாயகனாக பாராட்டினார்கள்.

ஆனால், பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகளைக் காட்டிலும், கல்விச்சமூகம், ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபகம் அவர்களுக்கு பதிலளித்த விதம்தான் முக்கியமானதாக இருந்தது. 1980களின் "வரலாற்றாசிரியர் விவாதத்தினை" போலல்லாமல், நாஜிக்களின் குற்றங்களை குறைத்துக்காட்டுவதற்கு எதிராக இந்த அடுக்குகளில் இருந்து எதிர்ப்புக்கள் ஏதும் வரவில்லை. அதற்கு பதிலாக, IYSSE உம் SGP உம் கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கிய நாளேடுகளாலும் தாக்கப்பட்டதோடு, இராணுவவாதம், தேசியவாதம், மற்றும் AfD க்கான கட்சியின் கொள்கை ரீதியான எதிர்ப்பின் காரணமாக பெரும் கூட்டணி அரசாங்கத்தின் இரகசிய சேவை வெளியிட்ட அறிக்கையில் "இடது-சாரி தீவிரவாதிகள்" என்று அடையாளம் காட்டப்பட்டது.

"தீவிர-வலதுசாரிகளின் எழுச்சி எவ்வாறு தயாரிக்கப்பட்டது," என்று வான்ட்ரேயர் கூறினார். வலது நோக்கிய நகர்வின் மோசமான தன்மையும் அதன் சர்வதேச அளவிலான நோக்கமும் ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடியில் வேரூன்றிய ஒரு அடிப்படை சமூக போக்கு என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. "ஆளும் உயரடுக்கினரின் நலன்கள் இனி ஒருபோதும் ஜனநாயக உரிமைகளுடன் ஒத்துப்போகப்போவதில்லை. ஏன் ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்குகள் பெருகிய முறையில் சர்வாதிகார வழிமுறைகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன, மற்றும் ஏன் பாசிசவாதிகள் மீண்டும் ஆதரவாளர்களை வெல்கிறார்கள் என்பதற்கு இதுதான் காரணம்” என்று வான்ட்ரேயர் விளக்கினார்.

ஆனால், 1930 களில் போலல்லாமல் இன்று பாசிசவாதிகள் ஒரு வெகுஜன இயக்கம் அல்ல; அவர்கள் வெறுக்கப்பட்ட சிறுபான்மையினர். உலகெங்கிலும் உள்ள மக்கள் இடது பக்கமாக நகரும் அதேவேளை வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் உள்ள மையப் பிரச்சினை அரசியல் முன்னோக்கும் தலைமைத்துவமும் ஆகும். "தொழிலாளர்கள் அதிகாரத்தை எடுத்து சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக ரீதியான பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும், அல்லது ஆளும் உயரடுக்குகள் மனிதகுலத்தை மீண்டும் ஒரு பேரழிவிற்குள் தள்ளுவர்" என்று வான்ட்ரேயர் முடித்தார்.

டேவிட் நோர்த், வான்ட்ரேயரின் திறனாய்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டினார். அவருடைய புத்தகம் ஜேர்மனிக்கு மட்டுமல்ல ஆனால் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சர்வதேச பகுப்பாய்வின் சுருக்கமாக உள்ளது. "ஏன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்?" என்ற ஆங்கிலப் பதிப்பை ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் ஒரு விரிவுரை தொடரில் வான்ட்ரேயர் முன்வைப்பார் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

இந்த இலையுதிர் காலம் ஜேர்மன் மறு இணைப்பிற்கான 30 வது ஆண்டு நிறைவை குறிக்கும் என்று தனது உரையின் தொடக்கத்தில் நோர்த் நினைவு கூர்ந்தார். இதற்கு ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டும் தான் பரந்த அளவிலான அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை புரிந்துகொள்ளும் விதத்தில் தயாரிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில், கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஜேர்மனி இல் இருந்த ஆட்சிகள் சோசலிசம் அல்ல, ஸ்ராலினிசமாக இருந்தன என்பதே  நாங்கள் காக்கும் மரபியத்தின் முக்கிய செய்தி ஆகும். அவர்களது கொள்கையானது மார்க்சிசத்தை அடிப்படையாகக் கொண்டதோ அல்லது சோசலிசக் கொள்கைகளோ அல்ல, மாறாக ஸ்ராலினிச மற்றும் அந்த கருத்தாக்கங்களின் இருந்து எழுந்த தேசியவாத தப்பாக்கங்களை அடித்தளமாக கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் அரசியல் புரட்சியின் அடித்தளத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த ஆட்சிகள் தூக்கி எறியப்படாவிட்டால் அவற்றை அவை கலைத்து, முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று அப்புத்தகம் மிகத் தெளிவாக எதிர்வு கூறியதாக நோர்த் கூறினார்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, இந்த வளர்ச்சியின் முழு விளைவுகளும் காணப்படுகின்றன என்று நோர்த் தொடர்ந்தார். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு "வரலாற்றின் முடிவு" அல்லது "ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் ஒரு புதிய காலப்பகுதியை" அதன் விளைவாகத் தரவில்லை, அதற்கு நேர்மாறாக வெளிப்படையான சமூக சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளது. ஜேர்மன் பாராளுமன்றத்தில் வலதுசாரி தீவிரவாதக் கட்சி, பல ஐரோப்பிய அரசாங்கங்களில் பாசிசக் கட்சிகள், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப், மற்றும் மீழ் ஆயுதபாணியாகுதல் மற்றும் உலகளாவிய போர்த் தயாரிப்புக்கள் ஆகியவற்றையே விளைவாக்கியுள்ளது. மூன்றாம் உலகப் போருக்கான ஒரு அச்சுறுத்தல் இப்போது முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது என்று அவர் எச்சரித்தார்.

இந்த அழிவுகரமான நிலைமை மீண்டும் திரும்புவது முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியுடன் இணைந்திருப்பதாக நோர்த் வலியுறுத்தினார். பரந்த அளவிலான சமூக சமத்துவமின்மை மற்றும் ஆளும் வர்க்கத்தின் இராணுவ மறுகட்டமைப்பு மற்றும் போருக்கு திரும்புவதற்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெருகிவரும் எதிர்ப்பை எதிர்கொள்கையில் அவற்றை எதேச்சதிகார ஆட்சி, பாசிசம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே திணிக்க முடியும். எல்லா இடங்களிலும், ஆளும் வர்க்கம் சோசலிசத்தின் ஆவியுருவை கண்டு அஞ்சுகிறது என்று அவர் தொடர்ந்தார். உண்மை என்னவெனில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சோசலிசத்திற்கு எதிராக ஒரு எச்சரிக்கையை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் என்பது சோசலிசம் ஏற்கனவே எவ்வளவு செல்வாக்கை கொண்டிருக்கின்றது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


டேவிட் நோர்த்

நோர்த் பின்னர் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் அதிகரிப்புக்கு திரும்பினார். "தொழிலாள வர்க்கம் சர்வதேச வர்க்கம், அது தனது சர்வதேச அடையாளத்தை பற்றி அதிகளவில் அறிந்திருக்கிறது. தொழிலாளர்கள் குறைவாக தேசியரீதியாக இல்லாமல் சர்வதேசரீதியாக சிந்திக்கின்றனர் என்று அவர் கூறினார். மெக்சிக்கோவில் வேலைநிறுத்தம் செய்யும் மக்கில்லாடோரா தொழிலாளர்கள், சமீபத்தில் டெட்ராயிட்டில் ஆலை மூடல்கள் மற்றும் வாகன தொழிலில் பரந்த பணிநீக்கங்கள் ஆகியவற்றிற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவை தெரிவித்தனர் என்று நோர்த் தெரிவித்தார்.

இன்று, ஜேர்மனியில் சமூக போராட்டங்களின் வளர்ச்சி ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்களின் ஒரு பாரிய இயக்கத்தை கொண்டுவரும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இருக்கமுடியாது. அதேபோல், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி அல்லது கிழக்கு ஐரோப்பாவில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி கிட்டத்தட்ட ஒரு இரவில் ஒரு ஐரோப்பிய அளவிலான அல்லது உலகளவிலான சமூகப் போராட்டமாக மாறும். எமது முன்னோக்கானது அதன் அமைப்பு வடிவத்திலும், அரசியல் மூலோபாயத்திலும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியின் அடிப்படையில் அமைந்தது என்று நோர்த் அறிவித்தார். இந்த வகையிலேயே தீவிர-வலதுகளின் எழுச்சி நிறுத்தப்பட முடியும்.

"அவர்கள் மீண்டும் வெற்றி பெற மாட்டார்கள்," என்று நோர்த் அறிவித்தார். "நாங்கள் அதில் உறுதியாக இருக்கிறோம். 1930 களின் அனுபவங்களை திடுமென நினைவில் இருந்து அழித்துவிட முடியாது. 1933 க்கும் 1945 க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களால் ஜேர்மனி அதிர்ச்சியடைந்து போயிருந்தது. பார்பெரோவ்ஸ்கியும் பல்கலைக் கழகத்தில் உள்ள அவரது குழுவினரும் மற்றும் அவரை ஆதரிக்கும் நிர்வாகத்தில் உள்ள உதவியாளர்களும் அவர் நாஜிக்களின் குற்றங்களை அழிக்க முடியும் மற்றும் என்ன நடந்தது என்பதை எல்லோரும் மறந்து விடுவார்கள் என்று நினைக்கலாம், ஆனால் அது சாத்தியமில்லை.

"இந்த நாட்டில், மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை அறிகையில் கிட்டத்தட்ட ஒரே இரவில், சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு பாரிய வளர்ச்சியை எடுக்குமென எதிர்பார்க்கிறோம்," என்று நோர்த் கூறினார். "அது குறைவாக இருக்கப்போவதில்லை. ஆனால் என்ன அவசியப்படுகிறது என்றால், மிக உயர்ந்த மட்டத்திலான அரசியல் மற்றும் வரலாற்று புரிந்துணர்வு தேவைப்படுகிறது.

"ஜேர்மன் முதலாளித்துவமும் ஜேர்மன் ஆளும் உயரடுக்கும் தனிநபர்களாக அல்ல, மாறாக ஒரு சமூக அமைப்பின் பிரதிநிதிகளாக பாசிசத்தின் அழிக்கமுடியாத வைரஸ்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது," என்று அவர் தொடர்ந்தார். "இது வரலாற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது."

"இந்த கூட்டத்திலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்ளுங்கள், கிறிஸ்தோப் வான்ட்ரேயரின் புத்தகத்தையும் மற்றும் அனைத்துலகக் குழுவின் படைப்புக்களையும் படியுங்கள், சோசலிச சமத்துவக் கட்சியில் சேருங்கள். இந்த முறை, உலகப் புரட்சியின் ஒரு பாகமாக ஜேர்மன் புரட்சி வெற்றிபெறுவதை உறுதி செய்வது அவசியம்." என நோர்த் தனது முடிவுரையில் தெவிவித்தார். இது ஒரு வலுவான ஆதரவை பெற்றது.