ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP (Australia) rallies demand freedom for Julian Assange

சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) பேரணிகள் ஜூலியன் அசான்ஜை விடுவிக்க கோருகின்றன

By our reporters 
13 April 2019

சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா), விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் அரசியல் அடைக்கலம் சட்டவிரோதமாக நீக்கப்பட்டதை எதிர்த்து நேற்று சிட்னியிலும் மெல்போர்னிலும் பேரணிகளை நடத்தியதுடன், அவரது விடுதலையை பாதுகாக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பரந்த இயக்கத்தை அணிதிரட்டுவதற்கும் அழைப்பு விடுத்தது.

ஈக்வடோரின் லண்டன் தூதரகத்தில் இருந்து அசான்ஜ் வெளியே இழுத்துவரப்பட்டு, பிரிட்டிஷ் பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் 24 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அசான்ஜ் போலியான பிணையிலெடுக்கும் குற்றச்சாட்டுக்களின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், அமெரிக்க போர் குற்றங்கள், சட்டவிரோத இராஜதந்திர சூழ்ச்சிகள் மற்றும் பாரிய கண்காணிப்பு ஆகியவற்றை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதில் அவரின் பங்கிற்காக அவரை தண்டிக்க முனையும் அமெரிக்க அரசாங்கத்தின் நாடுகடத்தப்படும் நடவடிக்கைகளுக்கும் அவர் முகம்கொடுக்கிறார்.     
அசான்ஜை பாதுகாக்க நடத்தப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் மெல்போர்ன் பேரணியின் ஒரு பகுதி

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் அன்னை கிறிஸ்டின் அசான்ஜ் சோசலிச சமத்துவக் கட்சி ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து, “ஜூலியனை பாதுகாக்கவும் அவரை வீட்டிற்கு அழைத்து வரவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி நாளை நடத்தப்படவுள்ள பேரணிகளில் கலந்து கொள்ளும் படி” அனைத்து மக்களையும் வலியுறுத்தும் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.

லண்டன், அமெரிக்கா மற்றும் ஜேர்மனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுடன், ஆஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களும் சேர்ந்து அசான்ஜ் மீதான தாக்குதலுக்கு இருக்கும் பரந்த மக்கள் எதிர்ப்பை பிரதிபலித்தன.

ஒவ்வொரு ஆஸ்திரேலிய பேரணியிலும் 150 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்களில் அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், கட்டுமான மற்றும் மின்சார துறைத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அடங்குவர். சில எதிர்ப்பாளர்கள் தமது ஒரு நிலைப்பாட்டை காட்டுவதற்கு ஐந்து மணி நேரங்கள் வரை பயணம் செய்தனர்.

அசான்ஜின் முக்கிய பாதுகாப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். அவரது தந்தை ஜோன் ஷிப்டன் மெல்போர்ன் பேரணியில் கலந்து கொண்டார். ஒரு பிரபல கிராஃபிக் டிசைனரும் விக்கிலீக்ஸின் ஆதரவாளருமான சோமர்செட் பீன் கூட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக அசான்ஜை ஆதரித்து வந்துள்ள ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களோடு இணைந்து, சிட்னியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு பிரபல முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான மேரி கோஸ்ட்டாக்கிடிஸூம் கலந்து கொண்டார். சிட்னியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு வெளியே ஏற்கனவே திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் பேரணியில் சேர்ந்து கொள்வதற்காக மார்டின் பகுதிக்கு அணிவகுத்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நேரடி ஒளிபரப்பு காணொளிகள் உலகில் கிட்டத்தட்ட 5,000 க்கும் அதிமானோரால் பார்க்கப்பட்டுள்ளன.

சிட்னியில் நடந்த ஏப்ரல் 12 சோசலிச சமத்துவக் கட்சிப் பேரணியின் நேரடி ஒளிபரப்பு

அசான்ஜூக்கு இருக்கும் பரந்துபட்ட ஆதரவு குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளின் பதட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக, சிட்னி பேரணியில் கலகம் மற்றும் பொது ஒழுங்கு அணியின் அதிகாரிகள் உட்பட, ஒரு கணிசமானளவு பொலிஸ் பிரசன்னத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சிட்னி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த, SEP உதவி தேசியச் செயலர் செரில் கிரிஸ்ப் இவ்வாறு அறிவித்தார்: “ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டதையும், அவரது அரசியல் அடைக்கலம் சட்டவிரோதமாக நீக்கப்பட்டதையும் சோசலிச சமத்துவக் கட்சி ஐயத்திற்கு இடமின்றி கண்டனம் செய்கிறது.”

“இந்த சூழ்நிலைக்கு ஈக்வடோரிய மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் தெளிவாக பொறுப்பேற்கின்றன என்றாலும், இது நடப்பதற்கான சூழ்நிலைகளை ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகம் தான் உருவாக்கியுள்ளது. இந்த நாட்டிற்கு அவரை திரும்ப அழைத்து வருவதற்கான பாதுகாப்பான வழியை பாதுகாக்க அவர்களது சட்ட ரீதியான மற்றும் இராஜதந்திர அதிகாரங்களை பயன்படுத்த மறுத்து, தாராளவாத-தேசிய மற்றும் தொழிற் கட்சி அரசாங்கங்கள் ஒரு ஆஸ்திரேலிய குடிமகனை கைவிட்டுவிட்டன.” 


செரில் கிரிஸ்ப்

2011 இல் “சட்டவிரோத செயல்கள்” புரிந்ததாக விக்கிலீக்ஸை தவறாக குற்றம்சாட்டி, அசான்ஜை துன்புறுத்துவதில் ஜூலியா கில்லார்டின் தொழிற் கட்சி ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது என கிரிஸ்ப் தெரிவித்தார்.

அசான்ஜிடம் அரசியல் ஸ்தாபகம் கொண்டுள்ள கொடூரமான விரோதப் போக்கு, வெள்ளியன்று தொழிற் கட்சியின் துணைத் தலைவர் தான்யா பிலிபெர்சேக் ஒரு டவீட்டை மறுபகிர்வு செய்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டது, இது அசான்ஜின் ஆதரவாளர்களை “தனிநபர் வழிபாட்டுவாதிகள்” என கண்டிப்பதுடன், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் “ஜனநாயகத்தை கீழறுக்கும் வகையில் ஒரு அசல் பாசிச நாடான ரஷ்யாவின் முகவராக செயலாற்றி” வருகிறார் என்று அவதூறாக குற்றம்சாட்டுகிறது.”

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) தேசியத் தலைவர் ஒஸ்கார் கிரீன்பெல், அசான்ஜின் கைது “ஒரு வரலாற்று ரீதியான அரசியல் குற்றம்” என்று குறிப்பிட்டார். கிரீன்பெல் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தல்களில் பாரமட்டா தொகுதியில் போட்டியிடும் ஒரு SEP வேட்பாளர் ஆவார்.

“இந்த நாட்டிலும் மற்றும் உலகெங்கிலுமுள்ள தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்று கிரீன்பெல் கூறினார். “எங்களால் முடியாது, ஏனென்றால் அசான்ஜ் மீதான தாக்குதல் என்பது நமது ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலாகும். இது செய்தி ஊடகங்களுக்கான பேச்சு சுதந்திரத்தையும் மற்றும் சுதந்திரத்தையும் நசுக்குவதற்கான ஒரு முன்மாதிரி  என்பதற்கு குறைவில்லாத வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கை உள்ளது.”

பல தசாப்த கால SEP தலைவரான நிக் பீம்ஸ் இவ்வாறு அறிவித்தார்: “தோழர்களே, ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களே, ஏப்ரல் 11, 2019 ஆம் தேதி வரலாற்றின் ஒரு இழிந்த நாளாக கீழ் நிலையை அடையலாம். அந்த நாளில், லண்டனில், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் போராடிப் பெறப்பட்ட அகதி உரிமை கோருவதற்கான ஜனநாயக உரிமை அவமதிப்பிற்குள்ளானது, கிழித்தெறியப்பட்டது, மேலும் காலுக்கடியில் மிதிக்கப்பட்டு தரையில் மண்ணோடு மண்ணாக சேர்த்து மிதித்து நசுக்கப்பட்டது.”

பீம்ஸ், அசான்ஜ் மீதான தாக்குதல் என்பது, உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் சர்வதேச அளவிலான வர்க்கப் போராட்ட எழுச்சி போன்றவற்றின் பின்னணியில் உருவானது என்று கருத்து தெரிவித்தார். மேலும், தொழிலாள வர்க்கத்தினர் மத்தியில் பெருகிவரும் சமூக எதிர்ப்பைக் கண்டு பீதியடைந்த அரசாங்கங்களால் தான் அசான்ஜை துன்புறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் விவரித்தார்.

பலத்த கரகோஷத்திற்கு மத்தியில், பீம்ஸ் பின்வருமாறு தெரிவித்தார்: “ஒரு பத்திரிகையாளராக, உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பரந்தளவிலான சாமான்ய மக்கள் என அனைவருக்குமாக ஜூலியன் அசான்ஜ் அவரது கடமையை நிறைவேற்றியுள்ளார். தற்போது, அவர் நமக்கு கொடுத்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கடமைப்பட்டவர்களாக நாம் இருக்கிறோம். அவரை பாதுகாப்பதற்காக ஒரு இயக்கத்தை உருவாக்க நாம் அணிவகுப்போம், ஒழுங்கமைப்போம், மற்றும் கிளர்ந்து எழுவோம்.”    


நிக் பீம்ஸ்

“மேலும், வெறுமனே அவர் செய்தவற்றிற்காக மட்டுமல்லாமல், நமக்காக அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதும் முக்கியம். ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது என்பது உலகம் முழுவதிலுமான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை பாதுகாப்பதுடன் ஒன்றிணைந்ததாகும். அவரது பாதை நமது பாதை. அவரது பாதுகாப்பு நமது பாதுகாப்பு.”

உலக சோசலிச வலைத் தளத்தின் ஒரு நிருபரும் பிரிஸ்பேனில் ஆக்ஸ்லே தொகுதிக்கான SEP இன் வேட்பாளருமான மைக் ஹெட், “ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்படுவது வெறுமனே அவரது கடந்தகால குற்றங்களைப் பற்றி மட்டுமல்ல. தயாரிக்கப்பட்டு வரும் எதிர்கால குற்றங்களுக்கான ஒரு எச்சரிக்கையாகவும் தான் இது உள்ளது” என்று எச்சரித்தார்.

ஹெட், அசான்ஜ் கைது செய்யப்பட்டது குறித்து பிரதிபலிப்பை  கண்டித்தார். மேலும், அசான்ஜேக்கு எதிரான சர்வதேச சதியில் இரு கட்சிகளும் பங்கேற்றிருந்தன என்பதையும், அவரது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக எதையும் செய்யவில்லை என்பதையும் அவை தெளிவுபடுத்தியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மெல்போர்னில், ஒரு SEP உறுப்பினரும், பொதுக் கல்வியை பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சூயு ஃபிலிப்ஸ், இவ்வாறு தெரிவித்தார்: “அமெரிக்க அரசாங்கத்தின் இழிவான நடவடிக்கைகள், அவர்களது கொடூரமான போர் குற்றங்கள் மற்றும் பாரிய சாமான்ய மக்களுக்கு எதிரான அவர்களது பெரும் ஒற்று நடவடிக்கைகள் போன்றவை பற்றி சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்கத்திற்கு மிக தைரியமாக பகிரங்கப்படுத்திய அசான்ஜ் ஒரு கதாநாயகன் ஆவார்.”

“அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸின் வெளிப்படுத்தல்கள் பாரியளவிலான சாமான்ய மக்களுக்கு படிப்பினையை வழங்குவதுடன் அவர்களது நனவிலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. அவர்கள், இரகசிய முகத்திரையை கிழித்துக் காட்டியுள்ளதோடு, எகிப்து, துனிசியா மற்றும் பல்வேறு பகுதிகளிலுள்ள ஊழல் நிறைந்த மற்றும் குற்றவியல் அரசாங்கங்களை தூக்கியெறியவும் ஊக்குவிக்கின்றன.”

மெல்போர்னில் கால்வெல் தொகுதியில் போட்டியிடும் SEP வேட்பாளரான பீட்டர் பைரன்,  தாய்லாந்தில் இருந்து அவரது சொந்த நாடான பஹ்ரைனுக்கு நாடுகடத்தப்படுவதற்கு அச்சுறுத்தப்பட்டு வந்த ஒரு ஆஸ்திரேலிய குடியிருப்பாளரான ஹக்கீம் அல்-அராபி  விடுவிக்கப்படுவதை பாதுகாப்பதில் ஆஸ்திரேலிய அரசாங்கம் சமீபத்தில் தலையீடு செய்தது. எனவே, அசான்ஜுக்கும் அதேபோல உதவி வழங்க மறுக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை அவர் கண்டித்தார்.”

WSWS நிருபரும் ஆசிரியருமான பாட்ரிக் ஓ’கோன்னோர் இவ்வாறு தெரிவித்தார்: “நேற்று, மத்திய லண்டனில் ஜூலியன் அசான்ஜ் ஜேர்மனியின் மூன்றாம் குடியரசின் இரகசியப் பொலிஸான கெஸ்டாபோ பாணியிலான திடீர் சோதனையில் வெளியே இழுத்து வரப்பட்டு குற்றமிழைக்கப்பட்டதற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். கான்பெர்ரா, வாஷிங்டன் மற்றும் லண்டன் போன்றவற்றின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக தீட்டப்பட்ட சதியைப் பற்றி தான் தற்போது நடந்துகொண்டிருப்பவை குறிப்பிடுகின்றன.”   


கெய்ட்லின் ஜோன்ஸ்டோன்

ஒரு பிரதான இணையதள பத்திரிகையாளரான கெய்ட்லின் ஜோன்ஸ்டோன் பேரணியின் போது இவ்வாறு கூறினார்: “நாம் எந்த நாட்டின் காலணிகளின்கீழ் வாழ்கிறோமோ அந்த  சர்வாதிகார அரசின் முகத்தில் இருந்து முகத்திரையை ஒரு நல்ல இளைஞன் கிழித்தெறிந்த ஒரு நாளாகும்.” அசான்ஜ், “யாருடைய தவறான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினாரோ அந்த சக்தியினால் அவர் தாக்கப்பட்டு வருகிறார். மேலும் அந்த சக்திவாய்ந்த மக்கள் அவரை ஒரு உதாரணமாக்க விரும்புவதுடன் நம் அனைவருக்கும் ஒரு செய்தியை அனுப்பவும் விரும்புகின்றனர்.”

“ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளும் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்களும், இன்றைய தினத்தைப் போல நாங்கள் அமைதியாக கீழ்படிந்து கிடக்க மாட்டோம் என்பதை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்…” என்று ஜோன்ஸ்டோன் கூறினார்.

IYSSE இன் ஒரு முன்னணி உறுப்பினரான ஈவ்ரிம் யாஸ்கின் இவ்வாறு அறிவித்தார்: “ஜூலியன் அசான்ஜின் விடுதலையை பாதுகாப்பதற்கு ஏற்ற ஒரு பாரிய இயக்கத்தை கட்டமைப்பதற்கான இந்த முக்கியமான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய அனைத்தையும் IYSSE மேற்கொள்ளும்!” 


டெஸ்ஸா பியெட்ஸ்ச்

செனட்டிற்கான ஒரு SEP வேட்பாளரும் மற்றும் அசான்ஜ் முன்னர் கல்வி பயின்ற மெல்போர்ன் பல்கலைக்கழகத்திற்கான IYSSE இன் தலைவருமான டெஸ்ஸா பியெட்ஸ்ச், “ஜூலியன் அசான்ஜ், போர் குற்றங்கள், பொதுமக்களை உளவு பார்ப்பது மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் சட்டவிரோதமான நடவடிக்கைகளைப் பற்றி அம்பலப்படுத்துவதற்கான போராட்டத்திற்கு தலைமை வகித்தார்” என்று குறிப்பிட்டார்.

“மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் நமது அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது பற்றி இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும், நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அசான்ஜ் துன்புறுத்தப்படுவதையோ அல்லது இணையதளம் தணிக்கை செய்யப்படுவதையோ நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.”

நகரின் மிக முக்கியமான தினசரி வெளியீடுகளில் ஒன்றான Age நாளிதழ் மெல்போர்ன் பேரணி பற்றி குறிப்பிட்டிருந்தது. இது ஷிப்டனின் பங்கேற்பை சுட்டிக்காட்டியதுடன், ஓ.கோன்னோர் மற்றும் பைரனின் கருத்துக்களை முக்கியத்துவப்படுத்தியது. கடந்த 18 மாதங்களாக விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை பாதுகாப்பதில் SEP இன் நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்து வந்த பெருநிறுவன ஊடகங்களுக்கு மத்தியில், SEP இன் பேரணிகள் பற்றிய முக்கிய ஊடக வெளியீடாக, Age கட்டுரை ஒன்று மட்டுமே இருந்தது.

சிட்னி பேரணியை நிறைவு செய்கையில், வரவிருக்கும் தேர்தல்களில் அசான்ஜ் துன்புறுத்தப்படுவதை ஒரு முக்கிய பிரச்சினையாக SEP முன்வைக்க வேண்டும் என்று கிரிஸ்ப் வலியுறுத்தினார். மேலும், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் விடுதலைக்காக SEP தொடுக்கவிருக்கும் ஒரு நீடித்த போராட்டத்தின் ஆரம்பமாகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Authorised by James Cogan for the Socialist Equality Party, Suite 906, 185 Elizabeth Street, Sydney, NSW, 2000