ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The election of Zelensky in Ukraine and the way forward for the working class

உக்ரேனில் ஜெலென்ஸ்கி தேர்ந்தெடுக்கப்பட்டமையும், தொழிலாள வர்க்கத்திற்கான முன்னோக்கிய பாதையும்

Clara Weiss
25 April 2019

உக்ரேனில் இப்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோவின், மற்றும் ஏகாதிபத்தியம்-முடுக்கிவிட்டு அவரை பதவிக்குக் கொண்டு வந்த 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் பாரிய நிராகரிப்பாக, நகைச்சுவை நடிகர் வொளோடிமிர் ஜெலென்ஸ்கி 73 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் ஞாயிற்றுக்கிழமை உக்ரேனிய ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

“சாக்லெட் செல்வந்தர்" பொறோஷென்கோ, விக்டொர் யானுகோவிச்சின் ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்தைக் கவிழ்த்த பெப்ரவரி 2014 நடவடிக்கையை அடுத்து ஜனாதிபதியானார். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் பிரதான ஏகாதிபத்திய சக்திகள், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவும் ஜேர்மனியும் நின்றிருந்தன. உக்ரேனிய செல்வந்த அடுக்குகள் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள் மீது தன்னை நிலைநிறுத்தி இருந்த அவை, அவற்றின் பொருளாதார நலன்கள் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளுக்கு உடனடியாக அடிபணிய கூடிய ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்காக பாசிச சக்திகளை அணித்திரட்டின.

முதலாளித்துவ ஊடகங்கள் இந்த பாசிசவாத தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒரு "ஜனநாயக புரட்சியாக" புகழ்ந்தன. இந்த "புரட்சியை" உருவாக்கியதில் தீவிர வலதும் அமெரிக்க வெளியுறவுத்துறையும் வகித்த பாத்திரத்தைக் குறைத்துக் காட்ட திட்டமிட்டு செயல்பட்ட, இப்போது கலைக்கப்பட்டு விட்ட, சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) போன்ற அமைப்புகள் உட்பட நடுத்தர வர்க்க இடதுகளும் இவற்றுடன் இணைந்திருந்தன.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில் 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைவுகள் பேரழிவுக்குக் குறைவாக இருக்கவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில், பொறோஷென்கோ ஆட்சி ரஷ்யாவுக்கு எதிராக ஏகாதிபத்திய இராணுவ ஆயத்தப்படுத்தலின் முன்னிலையில் நின்றுள்ளது. உக்ரேனிய இராணுவ செலவுகள் மலைப்பூட்டும் அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிக சமீபத்தில் அஜொவ் கடலில் அதன் பொறுப்பற்ற ஆத்திரமூட்டலை போல, கியேவ் ஆட்சி ரஷ்யாவுடன் பதட்டங்களைத் திட்டமிட்டு தூண்டுவது, துரிதமாக மற்றொரு உலக போராக தீவிரமடையக் கூடிய, முழு அளவிலான போர் அபாயத்தை ஐரோப்பாவில் படிப்படியாக அதிகரித்துள்ளது. கிழக்கு உக்ரேனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் 13,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில், உக்ரேனிய செல்வந்த தட்டு, முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னர் இருந்து ஏற்கனவே குறைந்து போயுள்ள உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீது இன்னும் கூடுதலாக நீண்டகாலத்திற்கான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. ஏறத்தாழ ஒரு மில்லியன் உக்ரேனியர்கள் இப்போது பட்டினியின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; பத்தாயிரக் கணக்கானவர்கள் குளிரில் உறைய விடப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவற்காக, பொறோஷென்கோ ஆட்சி இழிபெயரெடுத்த அஜொவ் படைகள் போன்ற பாசிசவாத சக்திகளை அணித்திரட்டியது. இரண்டாம் உலக போரின் போது ஆயிரக் கணக்கான யூதர்கள், போலந்தியர்கள் மற்றும் உக்ரேனியர்களைப் படுகொலை செய்த OUN-B மற்றும் UPA இன் நாஜி ஒத்துழைப்புவாதிகளைப் பெருமைப்படுத்துவது, உத்தியோகபூர்வ அரசு கொள்கையாக ஆகியுள்ளது. கம்யூனிசம் குறித்த கருத்துக்களும் மற்றும் அந்த போரில் நாஜிக்களைத் தோற்கடித்த சோவியத் செம்படையின் அடையாளங்களும் குற்றமயமாக்கப்பட்டுள்ளன. ரஷ்ய கலைஞர்களும் மற்றும் கலை படைப்புகளும் அந்நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நிலைமைகள் தான், உக்ரேனிய மக்களின் பாரிய பெரும்பான்மையினரை தேர்தல்களில் ஒதுங்கி இருக்க செய்தது—வாக்குப்பதிவு வெறும் 62 சதவீதமாக இருந்தது—அல்லது ஜெலென்ஸ்கிக்கு வாக்களிக்க செய்தது. மேற்கு உக்ரேனில் ஒரு சிறிய மாகாணம் மற்றும் அந்நாட்டின் பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் கியேவ் மாவட்டத்திற்குப் அப்பாற்பட்டு பொறோஷென்கோவினால் எந்த குறிப்பிடத்தக்க ஆதரவையும் பெற முடியாமல் போனது.

சமூக சிக்கன நடவடிக்கைகள் மீதான பெரும் கோபத்திற்கும் மற்றும் போர்-எதிர்ப்பு உணர்களுக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெலென்ஸ்கி என்ன தான் முறையீடுகள் செய்திருந்தாலும், அவரும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக உக்ரேனிய செல்வந்த தட்டுக்களின் நலன்களையே பாதுகாப்பார் என்பதோடு ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து செயல்படுவார்.

ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும், ஜெலென்ஸ்கி வேண்டுமென்றே அவரின் நிஜமான அரசியல் மற்றும் பொருளாதார திட்டநிரலை மறைத்திருந்தார். அதற்கு பதிலாக அவர் பொறோஷென்கோ மீதான பரந்த வெறுப்புக்கு ஏறத்தாழ இடத்திற்கு ஏற்றாற்போல் பிரத்யேக முறையீடுகள் மீது சார்ந்திருந்தார். அப்பிரச்சாரத்தின் போது, ஜெலென்ஸ்கி, கிழக்கு உக்ரேனில் சமாதானமான போர் தீர்வுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் நேரடியான பேச்சுவார்த்தைகளுக்குள் நுழைய உறுதிமொழிகள் வழங்கினார். இருப்பினும் தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட ஒரு பேட்டியில், அவர் புட்டினை "எதிரியாக" குறிப்பிட்டதுடன், மக்கள் நாஜி ஒத்துழைப்பாளர் பண்டாராவை "மாவீரராக" கருதினால் அது "மிகச் சரியாகவும் மகத்தானதாகவும்" இருக்கும் என்றார்.

ஏப்ரல் 12 இல், ஜெலென்ஸ்கி பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனைச் சந்தித்தார். அவரின் குழு, ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடனும் செல்வாக்கான சிந்தனைக் குழாம் பிரமுகர்களுடனும் சந்திப்புகளை ஏற்பாடு செய்ய வாஷிங்டனின் பொதுத்தொடர்பு நிறுவனம் ஒன்றை அமர்த்தி உள்ளது. செல்வந்தர் Ihor Kolkomoisky உடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுகின்ற ஜெலென்ஸ்கி, இப்போது அமெரிக்க ஆதரவிலான "வண்ணப் புரட்சி" மூலமாக பதவியில் இருந்தவரான ஜோர்ஜியாவின் முன்னாள் ஜனாதிபதி Mikheil Saakashvili உடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறார்.

ஏகாதிபத்தியத்திற்கும், செல்வந்த தட்டுக்களின் சிக்கன மற்றும் போர் கொள்கைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தில் நிலவும் பாரிய எதிர்ப்பானது, ஜெலென்ஸ்கிக்கு இடப்பட்ட வாக்குகளில் ஓர் ஆரம்ப, பெரிதும் குழப்பமான வெளிபாட்டை மட்டுமே கண்டுள்ளது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச மேலெழுச்சிக்கான நிலைமைகளின் கீழ், இந்த எதிர்ப்பு விரைவிலேயோ அல்லது சற்று தாமதமாகவோ பகிரங்கமான வர்க்க போராட்ட வடிவை எடுக்கும்.

பிரான்சில், நூறாயிரக் கணக்கான “மஞ்சள் சீருடையாளர்கள்” மாதக் கணக்காக சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தாண்டின் ஆரம்பத்தில், மெக்சிகோவின் மத்தாமோரொஸ் வாகன உதிரிபாங்கள் உற்பத்தித்துறை தொழிலாளர்கள் இரண்டு தசாப்தங்களில் வட அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய வேலைநிறுத்தமாக இருந்ததைத் தொடங்கினார்கள். உலக ஏகாதிபத்தியத்தின் மையமாக விளங்கும் அமெரிக்காவில், வேலைநிறுத்தத்தில் இறங்கிய தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 20 மடங்கு அதிகரிப்பைக் கடந்த ஆண்டு கண்டது. உக்ரேனின் வடமேற்கு எல்லையில், 300,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் (PiS) வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சி வரலாற்று முன்னோக்கு மற்றும் தலைமை குறித்த அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. உக்ரேனில் கட்டவிழ்ந்து வரும் அரசியல் இராணுவ நெருக்கடியில், தொழிலாளர்கள், 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் விளைவுகளை முகங்கொடுக்கின்றனர்.

அவர்கள் எதிர்கொண்டுள்ள அபாயங்களை எதிர்த்து போராடுவதற்கு, தொழிலாளர்கள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் இது அக்டோபர் புரட்சி மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் தொடுத்த போராட்டத்தின் படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்வதால் மட்டுமே சாத்தியமாகும்.

1923 இல் லியோன் ட்ரொட்ஸ்கி உருவாக்கிய இடது எதிர்ப்பு, ஸ்ராலினிசம் மற்றும் "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற அதன் வேலைதிட்டத்தை, அக்டோபர் புரட்சியின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிரந்தரப் புரட்சியின் சர்வதேசியவாத புரட்சிகர வேலைத்திட்டத்திற்கு எதிரான ஒரு தேசியவாத பிற்போக்குத்தனமாக அங்கீகரித்தது. அதற்கடுத்த தசாப்தங்களில், ஸ்ராலினிசவாதத்தின் தேசிய சந்தர்ப்பவாத கொள்கைகள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களது தோல்விக்கும் எண்ணற்ற காட்டிக்கொடுப்புகளுக்கும் இட்டுச் சென்றது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்கள், ரஷ்ய புரட்சியின் தலைவர்களையும் மற்றும் சோசலிச புரட்சியாளர்களின் ஒட்டுமொத்த தலைமுறைகளையும் சரீரரீதியில் ஒழித்துக் கட்டிய மாபெரும் பயங்கரம் (Great Terror) மற்றும் 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கியையே கூட படுகொலை செய்ததில் உச்சத்தை அடைந்தது.

1938 இல் ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்த நான்காம் அகிலம், தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் புரட்சியில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தூக்கிவீசப்படாவிட்டால் அது தவிர்க்கவியலாமல் சோவியத் ஒன்றியத்தை அழித்து, முதலாளித்துவத்தை மீட்டமைத்து, புதிய ஆளும் வர்க்கத்திற்குள் தன்னை மாற்றிக் கொள்ளும் என்று எச்சரித்தது. துல்லியமாக இது தான் 1989-1991 இல் நடந்தது.

1980 களின் இறுதியில் போலாந்தில் தொழிலாளர்களின் ஒரு சக்திவாய்ந்த பாரிய இயக்கம் அபிவிருத்தி அடைந்த போது, இறுதியில் தொழிலாள வர்க்கத்திற்குள் இருந்த அதிகாரத்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு பகிரங்கமாக வெடித்தது. போலாந்து போராட்டங்கள், சேர்பியா மற்றும் கிழக்கு உக்ரேனை மையப்படுத்தி சோவியத் ஒன்றியத்தின் பிரதான நிலக்கரி சுரங்கங்களில் வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்க உதவின.

ஆனால் ஸ்ராலினிசம் தசாப்த காலமாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் வரலாற்று நனவுக்குக் கடுமையாக குழிபறித்திருந்தன. ஸ்ராலினிச சர்வாதிகாரத்தின் சோசலிசம் மற்றும் மார்க்சிச சமன்பாடு சோசலிச புரட்சியின் வேலைத்திட்டத்தைச் சேற்றில் புதைத்துவிட்டது. அதேநேரத்தில், நான்காம் அகிலத்திற்குள் எழுந்த ஒரு திரித்தல்வாத போக்கான பப்லோவாதிகள் ஸ்ராலினிசவாதத்தின் எதிர்புரட்சிகர கொள்கைகளுக்கு ஒரு "இடது" மூடிமறைப்பை வழங்கினர். பப்லோவாதிகள், அதிகாரத்துவத்தை ஒரு முற்போக்கான வரலாற்று சக்தியாகவும் முதலாளித்துவ மீட்டமைப்புக்கான அதன் வேலைத்திட்டத்தை "சுய-தீர்திருத்தம்" என்றும் புகழ்ந்துரைத்து, தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களில் தலையீடு செய்தனர்.

இது சோவியத் ஒன்றியம் கரைக்கப்படுவதற்கும், முதலாளித்துவ மீட்டமைப்பின் மூலமாக சமூக ஆதாரவளங்களைத் தனியார்மயமாக்கியதிலிருந்து தங்களைப் பாரியளவில் செழிப்பாக்கிக் கொள்வதற்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்குச் சாத்தியமாக்கியது. முதலாளித்துவ மீட்டமைப்பைத் தொடர்ந்த சமூக மற்றும் அரசியல் சீரழிவு குறிப்பாக உக்ரேனில் ஒரு கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது, அது அதற்குப் பின்னர் இருந்து தொடர்ந்து வெவ்வேறு ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே மாற்றி மாற்றி சூழ்ச்சிக்கையாளல்களை செய்து, ஆழமாக ஊழல்பீடித்த மற்றும் அதிதீவிர தேசியவாத செல்வந்த தட்டால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.

இன்று, தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தினுள் நுழைந்து வருகையில், அவர்கள் இத்தகைய முக்கிய வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளைத் தங்களின் அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் வரவிருக்கும் போராட்டங்களுக்குத் தலைமை வகிக்க, ICFI இன் உக்ரேனிய பிரிவாக ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டமைக்க போராடுவதில் தான் முன்னோக்கிய பாதை உள்ளது.