ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On Australian TV, Julian Assange’s father calls for son’s freedom

ஆஸ்திரேலிய தொலைக்காட்சியில், ஜூலியன் அசான்ஜின் தந்தை மகனின் விடுதலைக்கு அழைப்பு விடுக்கிறார்

By Oscar Grenfell 
29 April 2019

சென்ற இரவில், தேசியளவில் ஒளிபரப்பான “60 நிமிடங்கள்” நிகழ்ச்சியில், ஜூலியன் அசான்ஜின் தந்தை, ஜோன் ஷிப்டன், அவரது மகனின் விடுதலைக்காக ஒரு சக்திவாய்ந்த அழைப்பை விடுத்தார். இந்த நிகழ்ச்சி, 2012 இல் அசான்ஜிற்கு அடைக்கலம் வழங்கிய ஈக்வடோரின் லண்டன் தூதரகத்தில் இருந்து சட்டவிரோதமாக அவரை வெளியே இழுத்துவந்து பிரிட்டிஷ் பொலிஸ் கைது செய்து சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சானல் ஒன்பது இல் ஒளிபரப்பானது.  


சென்ற இரவு நிகழ்ச்சியில் ஜோன் ஷிப்டன் (“60 நிமிடங்கள்நிகழ்ச்சிக்கு நன்றி)

அந்த மிருகத்தனமான கைது நடவடிக்கையின் காட்சிகளைக் கண்டு அதற்கு பிரதிபலித்த ஷிப்டன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்: “எனது வயதோ 74. அவனது வயதோ 47. ஆனால் என்னை விட வயதானவனாக அவன் தெரிகிறான். இது மிகவும் கொடுமையானது.” அந்த நேரத்தில் அசான்ஜ் என்ன உணர்ந்திருப்பார் என நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டபோது, அவர் இப்படிக் கூறினார்: “வெளியே இழுத்துவந்ததைக் கண்டு, நான் குழம்பிப் போனேன் என்பதுடன் மிகவும் கலங்கிவிட்டேன் என்றுதான் நான் நினைக்கிறேன்.”

நீடித்த துன்புறுத்தலின் விளைவாக, அசான்ஜ், தனது பெற்றோர், தனது வயதுவந்த மகன் மற்றும் ஆரம்ப பள்ளி செல்லும் மகள் ஆகியோருடன் கொண்டிருந்த வழமையான தொடர்பு உட்பட, “பெரும்பாலும் அனைத்து மனிதர்களையும்” இழந்துவிட்டான் என்றும் கூறினார்.

இருப்பினும், ஷிப்டன், பல ஆண்டுகள் சிறையையொத்த தடுப்புக் காவலில் தனது மகன் இருந்துவரும் நிலையிலும், அசாதாரண மனவுறுதியையும் எதிர்க்கும் தன்மையையும் அவர் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இவ்வாறு தெரிவித்தார்: “அவனது கண்கள் பார்ப்பதற்கு நன்றாகவும், உறுதியுடனும், மேலும் நிலையாகவும் தெரிகின்றன. அவனது கண்களில் இன்றளவும் போராடும் தீரம் நிறைந்திருக்கிறது. எல்லாம் சரியென்றுதான் தோன்றுகிறது.”

“60 நிமிடங்கள்” நிகழ்ச்சி, புனையப்பட்ட சதி குற்றச்சாட்டுக்களின் பேரில் அமெரிக்காவிடம் அசான்ஜை ஒப்படைக்குமாறு கோரும் ட்ரம்ப் நிர்வாக முறையீட்டின் மீதான விசாரணைக்காக மே 2 அன்று அவர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு முந்தைய நாட்களை திரையிட்டது.

அமெரிக்காவின் போர் குற்றங்கள், பாரிய பொதுமக்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள், மற்றும் சட்டவிரோதமான இராஜதந்திர சூழ்ச்சிகளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய காரணத்திற்காக அமெரிக்கா, அசான்ஜின் வாழ்க்கையை “சீரழிக்க தீர்மானித்து” விட்டது என்று ஷிப்டன் எச்சரித்தார்.

மேலும், “வெளியீட்டாளர்களும், இரகசிய செய்தி வெளியீட்டாளர்களும் அழிக்கப்படுவார்கள் என்பதை நிரூபிக்க அவர்கள் விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறியதோடு, அசான்ஜ் “அமெரிக்காவிற்கு இழுத்துச்செல்லப்பட்டு, ஒருபோதும் அவரை வெளியே கொண்டுவர முடியாதபடி அவர் சிறையில் தள்ளப்படக்கூடும்” என்று அவர் அஞ்சுவதாகவும் சேர்த்துக் கூறினார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில், அசான்ஜின் நீண்டகால சட்ட ஆலோசகரான கிரெக் பார்ன்ஸ், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை பாதுகாப்பாக விடுவிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படமாட்டார் என்ற உத்தரவாதத்துடன், ஆஸ்திரேலியாவிற்கு அவர் திரும்புவதற்கான ஏற்பாடுகளையும் அது மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினார்.

மேலும், பார்ன்ஸ் இவ்வாறு தெரிவித்தார்: “ஊடகங்களுக்கு அவர்கள் ஒரு பாடம் கற்பிக்க விரும்புகின்றனர், அது என்னவென்றால்: ‘நீங்கள் எங்களை தேடினால், எங்களது பாதுகாப்பு நிலைகளை நீங்கள் தேடினால், எங்களுடைய இரகசியங்களை நீங்கள் அம்பலப்படுத்துகிறீர்கள் என்றால், ஒன்பது அல்லது பத்து ஆண்டுகள் கடந்தாலும் உங்களை பின்தொடர்ந்து துன்புறுத்துவோம்’” அத்துடன், அமெரிக்காவில் அசான்ஜ் சித்திரவதைக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

அசான்ஜ் மீதான பெருநிறுவன ஊடக விரோதப்போக்கிற்கு இணங்க, பொதுமக்கள் கருத்தில் நஞ்சூட்டுவதற்கு நோக்கம் கொண்டு பல பொய்களும் வர்ணிப்புகளும் நிறைந்ததாக அந்த நிகழ்ச்சி இருந்தது.

இது, ஜனாதிபதி லெனின் மொரேனோவின் ஊழல் நிறைந்த ஈக்வடோரிய ஆட்சி விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிராக அதன் இழிந்த தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்து சமன் செய்வதையும் உள்ளடக்கியது. ஐ.நா. உறுதி செய்துள்ள ஒரு அரசியல் அகதி என அசான்ஜின் அந்தஸ்தை சட்டவிரோதமாக தான் நீக்குவதை நியாயப்படுத்த அது முனைந்துக் கொண்டிருக்கிறது.

அசான்ஜ் வெளியேற்றப்பட்டு சில நாட்களிலேயே, சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்க ஒப்புதலுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 4.2 பில்லியன் டாலர் கடனை ஈக்வடோர் பெற்றுள்ளதை ஷிப்டன் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியை நடத்திய தாரா பிரவுன், ஷிப்டனிடம், அசான்ஜ் ஒரு “ரஷ்ய சொத்தாக” இருந்தார் என்று அவர் நினைத்தது உண்டா எனக் கேட்டார். இது, ஒரு கொடிய ரஷ்ய சதித் திட்டத்தின் விளைவாக 2016 ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளின்டன் தோல்வியுற்றார் என்பது போன்ற அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்றும் உளவுத்துறை முகமைகளின் வெறித்தனமான கூற்றுக்களுக்கு இசைந்ததாக இருந்தது.

மெக்கார்த்தி வகை பிரச்சாரத்தில் அசான்ஜ் இலக்கு வைக்கப்பட்டார், ஏனென்றால், விக்கிலீக்ஸ் உண்மையான மற்றும் சுவாரஸ்யம் மிக்க செய்திகளை உள்ளடக்கிய மின்னஞ்சல்களை வெளியிட்டது, அவை ஜனநாயகக் கட்சி தேசியக் குழு, பேர்னி சாண்டர்ஸூக்கு எதிராக, மேலும் கிளின்டனுக்கு ஆதரவாக கட்சியின் முதன்மை கொள்கைகளை மூடிமறைக்க முனைந்ததை நிரூபிக்கின்றன. வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு கிளின்டன் வழங்கிய அந்த இரகசிய உரைகளில், தமது கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அவர் உறுதியளித்திருந்தமையும் சேர்ந்தே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிப்டன் காரசாரமாக பதிலடி கொடுத்தார். கிளின்டனின் “சரியான தேவை” “ரஷ்யர்கள்” மீது அவரது இழப்பை சுமத்துவதும், ட்ரம்பின் வெற்றி குறித்து தனது சொந்த பொறுப்பை மூடி மறைப்பதுமாகும் என்பது போன்ற கூற்றுக்களை அவர் குறிப்பிட்டார். அவர் விவரித்தபடி, கிளின்டன் “அமெரிக்காவின் பாதி மக்கள் தொகையை “துயரத்துக்குரியவர்கள்” என்று அழைத்ததுடன், ஒரு 2011 ஆட்சி மாற்ற நடவடிக்கையில் “லிபியாவை அழித்தார்” என்பதுடன், அந்நாட்டின் ஜனாதிபதி முவம்மர் கடாபி அமெரிக்க ஆதரவு இஸ்லாமியவாதிகளால் துப்பாக்கிமுனை கத்தியால் கொல்லப்பட்ட சமயத்தில் “ஒரு பைத்தியக்கார பெண்ணைப் போல பரிகசித்து சிரித்தார்.”

இந்த நிகழ்ச்சி, அசான்ஜ் துன்புறுத்தப்படுவதற்கு ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவு இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது. அவர் ஒரு ஆஸ்திரேலிய குடிமகனாக இருந்தாலும், ஜூலியா கில்லார்டின் பசுமைக் கட்சி ஆதரவு தொழிற் கட்சி அரசாங்கம் தொடங்கி அடுத்தடுத்த அரசாங்கங்கள், விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பழிவாங்கலுக்கு ஆதரவளித்து, அவரை பாதுகாக்க மறுத்துவிட்டன என்பதே உண்மை.

தாராளவாத தேசிய கூட்டணி அரசாங்கத்தின் ஒரு முக்கிய செனட்டரும், அமெரிக்க இராணுவ-புலனாய்வு எந்திரத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட முன்னாள் உயர்மட்ட ஜெனரலுமான ஜிம் மோலனுக்கு அசான்ஜூக்கு கண்டனம் தெரிவிப்பதற்கான ஒரு தளம் வழங்கப்பட்டது.

மோலன், அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா உட்பட அதன் கூட்டணி நாடுகளின் குற்றங்களையும் சூழ்ச்சிகளையும் அசான்ஜ் அம்பலப்படுத்தியதை கண்டனம் செய்து இவ்வாறு அறிவித்தார்: “எனது கருத்துப்படி, அவர் ஒரு வில்லன். ஏனென்றால், உத்திகள், நுட்பங்கள், நடைமுறைகள் என்று நாங்கள் அழைப்பனவற்றை அவர் அம்பலப்படுத்திவிட்டார். நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை அவர் வெளிப்படுத்திவிட்டார். மேலும் உங்களுக்கு எதிராக வேலை செய்யும் ஒரு எதிரியைப் பொறுத்தவரை, அது முற்றிலும் தங்கம் போன்றது.”

மோலனின் கருத்துக்கள் ஊடகங்கள் மீதான பொலிஸ் அரசு ஒடுக்குமுறைக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த கருத்தாய்வின் படி, இது ஒரு சர்வாதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது, ஏனென்றால், பத்திரிகையாளர்கள், அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் குற்றங்களை மூடிமறைப்பது உட்பட அடிமைத்தன ஊதுகுழல்களாக செயலாற்ற வேண்டும் என்பதாகிறது.

அசான்ஜை துன்புறுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாக முயற்சிகளுக்கு செனட்டர் பகிரங்கமாக ஆதரவளித்தார். மேலும், விக்கிலீக்ஸ் “ஒரு ஊடக நிறுவனம் அல்ல,” என்றும், அசான்ஜ் “ஒரு பத்திரிகையாளர் அல்ல” என்றும் அவர் அறிவித்தார். எனவே, இரண்டும், “கொள்கைப் படி, பத்திரிகை சுதந்திரத்தை நம்பியிருக்க” முடியாது என்றும் கூறினார்.

அசான்ஜ் கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு குறிப்பிடப்படாத “தூதரக உதவிகளை” அவர்கள் வழங்குவார்கள் என்ற அரசாங்க அமைச்சர்களின் கூற்றுக்களை மோலனின் அறிக்கை பொய்யாக்குகிறது.

அசான்ஜ் மீது வழக்குத் தொடரப்படுவதன் மூலம் ஊடக சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் பறிக்கப்படும் என்பதற்கான ஒரு முன்மாதிரியை உருவாக்க வகை செய்யும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளுடன் ஆஸ்திரேலிய அரசாங்கமும் கூட்டு சதிகாரவேலை செய்து வருகிறது என்பதை அவர்கள் நிரூபிக்கின்றனர். அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சியான தொழிற் கட்சி இரண்டும், அமெரிக்காவின் சூறையாடும் போர்களில் பங்கேற்பது மற்றும் அவற்றை அம்பலப்படுத்துபவர்களை ஒடுக்குவது என அமெரிக்க இராணுவ கூட்டணிக்கு கடைமைப்பட்டுள்ளன.

பார்ன்ஸ், ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் பங்கு குறித்து கடுமையான கண்டனம் செய்து, இவ்வாறு தெரிவித்தார்: “உதாரணமாக, இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் சீனாவில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தவறாக நடத்தப்பட்டிருப்பாரானால், அரசாங்கத்தின் பங்கு குறித்து மட்டுமல்லாது, ஆஸ்திரேலிய ஊடகத்தின் மீதான பெரும் சீற்றமும் அங்கு எழுந்திருக்கும். ஏனென்றால், இது அமெரிக்கா என்பதால், சில வடிவங்களிலான விதிவிலக்குகள் இங்கு இருப்பதாக நாம் நினைக்கிறோம்.”

ஆஸ்திரேலிய அரசாங்கம் பாரிய அழுத்தத்தின் மூலம் நிர்ப்பந்திக்கப்பட்டால் மட்டுமே அசான்ஜிற்கான அதன் கடமைகளை அது நிறைவேற்றும் என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்தது.

சோசலிச சமத்துவக் கட்சி, கூட்டாட்சித் தேர்தல்களில் போட்டியிடுகின்ற நிலையில், அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிரான உத்தரவாதத்துடன் பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தி வருகின்றது.

அத்தகைய இயக்கத்திற்கான அடிப்படை என்பது, பல மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் அசான்ஜூக்கு இருக்கும் பெரும் ஆதரவில் தங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான பேர், “60 நிமிடங்கள்” முகநூல் பக்கத்தில், மோலனை கண்டித்தும், ஊடக அவதூறுகளை நிராகரித்தும், அசான்ஜின் அளப்பரிய தியாகங்களுக்கு பாராட்டுக்களை வெளிப்படுத்தியும், மேலும் அவரின் உடனடி விடுதலைக்கு அழைப்பு விடுத்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Authorised by James Cogan for the Socialist Equality Party, Suite 906, 185 Elizabeth Street, Sydney, NSW, 2000.