ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Protesters oppose US extradition proceedings against Julian Assange

ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கின்றனர்

By Robert Stevens 
3 May 2019

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் நேற்று பெல்மார்ஷ் சிறையில் இருந்து வீடியோ இணைப்பு வழியாக லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி, பிரிட்டனில் இருந்து அவரை நாடு கடத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை கடுமையாக எதிர்த்தார்.

"பல விருதுகளை வென்று பல மக்களைப் பாதுகாத்த பத்திரிகைத்துறைக்கு நான் செய்தவற்றுக்காக நாடு கடத்தப்படுவதற்கு நானே சரணடைய விரும்பவில்லை” என்று அசான்ஜ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

"இதை ஒரு தரக்கேடு என நான் கருதுகிறேன்" என நீதிபதி மைக்கல் ஸ்னோ இறுமாப்புடன் பதிலளித்தார்.

வெளியே, 100 க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு நேரடியான ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஏழு ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்திற்கு முன்னால் விழிப்புணர்வு நடாத்திய ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்புக் குழுவின் ஆதரவாளர்களையும், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களையும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களையும் அவர்கள் கொண்டிருந்தனர்.


நீதிமன்றத்திற்கு வெளியே அசான்ஜை ஆதரிக்கும் எதிர்ப்பாளர்களின் ஒரு பகுதி

இதற்கு முதல் நாள், Southwark Crown நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பிணை விதிமுறைகளை மீறியதற்காக அசான்ஜிற்கு அதிகபட்ச தண்டனைக்கு இரண்டு வாரங்கள் குறைவான, 50 வார சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்வடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியமையே அவரது குற்றம் ஆகும்.

ஏப்ரல் 11 அன்று ஈக்வடோர் தூதரகத்தில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதில் இருந்து, அசான்ஜ் "பிரிட்டிஷ் குவாண்டனாமோ" என அழைக்கப்படும் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர், அசான்ஜை உடனடியாக கைது செய்து பிணை விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டபோது நீதிபதி ஸ்னோ, அவரை "சுயநலவாதி" என்று தாக்கிக் கூறினார். மூத்த அமெரிக்க அரசியல்வாதிகள் அவரை மரணதண்டனைக்கு உள்ளாக்க விரும்புவதாக கூறியதை தொடர்ந்து, அசான்ஜ் நியாயமான முறையில் தனது உயிருக்கு பயந்திருக்கையில், அசான்ஜ் "அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும்" என்றும், "அவரது வாழ்வை தொடர வேண்டும்" என்றும் ஸ்னோ கூறியுள்ளார்.

"ஒப்படைப்பு செயல்முறை பல மாதங்கள் எடுக்கும்" என்று நேற்று ஸ்னோ கூறினார். அசான்ஜை நாடுகடத்தும் முயற்சிகளின் அளவைக் குறைப்பதற்கான முயற்சியில், "மே 30 ம் தேதி மற்றொரு முறையான விசாரணை நடைபெறும், அங்கு இன்னும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

ஜூன் 12 ம் தேதி ஒரு முக்கியமான விசாரணை நடைபெறும், இதன்போது அசான்ஜை ஒப்படைக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் அமெரிக்கா பிரிட்டிஷ் நீதிமன்றங்களுக்கு வழங்க வேண்டும்.

பிரிட்டிஷ் பழமைவாத அரசாங்கமும் நீதித்துறையும் ஒரு பிணைக் குற்றத்தால் மட்டுமே குற்றவாளியாகக் கூறப்படும் ஒரு வீரமிக்க பத்திரிகையாளரை ஒப்படைப்பதற்காக அனைத்தையும் செய்கின்றன.

நேற்றைய விசாரணை 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. வாஷிங்டன் ஏன் அசான்ஜை அவசரமாக ஒப்படைப்பதில் முன்னிற்கிறது என்று அமெரிக்க அரசு வழக்கறிஞரான பென் பிராண்டன் வெளிப்படுத்தினார். "விக்கிலீக்ஸ்" க்கு அனுப்பிய பெரிய அளவிலான "இரகசிய ஆவணங்களின்" ஒரு அணுகலைப் பெறுவதற்கு அமெரிக்க இரகசிய தகவல் வெளியீட்டாளரான செல்சி மானிங்கிற்கு ஒரு கடவுச்சொல்லை அணுக அசான்ஜ் உதவினார் என்று அவர் கூறினார்.


நீதிமன்றத்தின் முன் பிரதான வீதியை மறித்து நிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

90,000 ஆப்கானிய போர் தொடர்பான அறிக்கைகள், 400,000 ஈராக் போர் தொடர்பான அறிக்கைகள், 800 குவாண்டனாமோ வளைகுடா கைதிகள் மதிப்பீடுகள் மற்றும் 250,000 அமெரிக்க அரசுத் துறை கேபிள்கள் ஆகியவை இதில் அடங்கும் என்று பிரண்டன் கூறினார். அசான்ஜ் "கடவுச்சொல்லை (இரகசிய கணினிக்கு) உடைக்க முயற்சி செய்தார் அத்துடன் மானிங் மேலும் தகவலை வழங்க அவரை ஊக்குவித்தார்" என்று அவர் கூறினார்.

மார்ச் 8 ம் திகதி கைது செய்யப்பட்ட பின் மானிங்கும் சிறையில் இருக்கிறார். அமெரிக்க அரசாங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏப்ரல் 22 அன்று அவரது பிணையில் செல்லும் விண்ணப்பத்தை நிராகரித்தது. அசான்ஜிற்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு ஒரு பெரிய நீதிபதிக்கு முன் சாட்சியமளிக்க மறுத்தமையால் மானிங்கிற்கு எதிரான ஒரு அவமதிப்பு உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது.

அசான்ஜிற்கு எதிராக வேகமாக செயற்படுவதற்காக, பிரிட்டிஷ் அரசியல் மற்றும் நீதித்துறை ஸ்தாபகங்களின் ஒவ்வொரு குற்றவியல் நடவடிக்கைகளையும் பொதுமக்களின் விமர்சனங்களில் இருந்து விலக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

நேற்றைய விசாரணை வெஸ்ட்மின்ஸ்டரின் 3 ஆம் இலக்க சிறிய நீதிமன்றத்தில் நடைபெற்றது. டஜன் கணக்கான அசான்ஜ் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களில் பலர், பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்தும், நுழைவு மறுக்கப்பட்டது. உத்தியோகபூர்வ ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்கள், மறுக்கப்பட்ட மற்றவர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக் கொள்ள முயற்சித்தனர், ஆனால் உடனடியாக அவற்றை நீக்குமாறு கேட்கப்பட்டனர்.

அசான்ஜ் எவ்வாறு நடத்தப்படுகிறாரென அறிய மக்கள் உட்செல்லக் கோரியபோது, ஒரு நீதிமன்ற அதிகாரி கதவைத் அடைத்து அவர்களிடம் கூறினார்: ஊடகங்களில் இருந்து என்ன நடந்தது என்பது பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்." பூமியில் மிகப்பெரிய அரசியல் கைதியுடன் சம்பந்தப்பட்ட விசாரணைக்கு நீதிமன்ற அறை மிகவும் சிறியதாக இருந்தது, இதனால் உட்செல்ல அனுமதிக்கப்பட்ட சிலரும் கூட நிற்க அல்லது தரையில் உட்காரக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தில் நுழைய முயற்சித்தவர்களில் ஒருவரான ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்பு குழுவிலிருந்த எம்மி பட்லின் வெளியே எதிர்ப்பாளர்களுக்கு கூறினார்: "மேலும், அது ஒரு இரகசிய நீதிமன்றத்தில் ஒரு இரகசிய நடைமுறையாகத் தோன்றுகிறது. நாம் அதை எதிர்க்க வேண்டும்!."

எண்ணற்ற போர் குற்றங்கள் மற்றும் உலக மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை வெளிப்படுத்திய விக்கிலீக்ஸை மௌனமாக்குவதற்கு அமெரிக்காவிற்கு அசான்ஜை ஒப்படைப்பது பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் திட்டங்களில் மிக முக்கியமானதாகும்.

வெளியில் இருந்த எதிர்ப்பாளர்களில், முதல் நாள் பாரிஸிலும் பிரான்சின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்ற மே தின ஊர்வலங்களில் கலந்து கொண்டு பின்னர் வருகை தந்திருந்த பல டஜன் மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்களும் உள்ளடங்கியிருந்தனர்.


போராட்டம் மட்டுமே வெற்றியைத் தரும் என்ற வாசகத்தைக் கொண்ட அட்டையை ஏந்தியுள்ள ஒரு மஞ்சள் சீருடை போராட்டக்காரர் 

பிரிட்டிஷ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் சேர்ந்து டென்மார்க் மற்றும் ஸ்பெயினிலிருந்தும் விமானம் மூலம் தங்கள் ஆதரவைக் காட்ட வந்தனர். சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்து ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கோஷங்களை எழுப்பியமை மூலம் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸின் தைரியமான பணிக்காக மில்லியன் கணக்கான மக்களால் உணரப்படும் நன்றியுணர்வுக்கான சான்றாகும்.

இவற்றினுள் "விக்கிலீக்ஸிற்கு நன்றி," "ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்," "ஒரே ஒரு முடிவு, நாடு கடத்தல் இல்லை!" "கருத்து சுதந்திரம், அசான்ஜை விடுதலை செய்" மற்றும் "அமெரிக்கா, இங்கிலாந்து, அசான்ஜை தொடாதே! "அமெரிக்க மக்கள்-ஜூலியன் அசான்ஜை பாதுகாக்க" என்பது மிகவும் சக்தி வாய்ந்த வரிகளில் ஒன்று.

விசாரணையின் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் குறுகிய நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு வெளியில் உள்ள Marylebone சாலையை ஆக்கிரமித்தனர்.

விசாரணையின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய விக்கிலீக்ஸ் ஆசிரியரான Kristinn Hrafnsson கூறினார்: "போராட்டம் தொடங்கிவிட்டது. இது ஒரு நீண்ட மற்றும் கடினமான ஒன்றாகும்." "நாங்கள் பொதுவாக தனிச் சிறை என்று அழைக்கும்", ஒரு நாளில் 23 மணித்தியாலங்கள் கூண்டில் அடைக்கப்பட்டு அசான்ஜ் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் "பயங்கரமான" நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.


நீதிமன்றத்திற்கு வெளியில் உள்ள ஊடகவியலாளர்களிடம் பேசிய Kristinn Hrafnsson (நடுவில்)

உலக சோசலிச வலைத் தளத்திடம் Hrafnsson கூறினார்: "இன்று, இந்த மாத இறுதி வரை அதிக தகவல்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி பெற்றுள்ளது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து எழும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக இன்னும் கூடுதலான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

"அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் சாதாரண பத்திரிகையாளர் நடவடிக்கைகளை மட்டுமே விவரிக்கின்றமையால் நான் அபத்தமானதாகவே சொல்கிறேன். அமெரிக்க நீதித்துறை அதன் பத்திரிகை வெளியீட்டில் அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தாலும், உண்மையில் அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் இடம்பெறவில்லை. சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமான நாளை, ஜூலியன் அசான்ஜ் பெல்மார்ஷ் சிறையில் இருக்கிறார் என்பது அபத்தமானது.

இன்று, தகவலைக் கசியவிட்டமைக்காக கவின் வில்லியம்சன் [பாதுகாப்பு செயலர்] நீக்கப்பட்டார் என்பதே அனைத்து பிரித்தானிய செய்தி ஊடகங்களின் தலைப்பாக இருக்கிறது. தகவலைக் கசிய விட்டமைக்கு அவர் பொறுப்பாளரா, அவருடைய நோக்கம் என்னவென்பது பற்றி நிறைய கலந்துரையாடல்கள் உள்ளன. அது என் கவலை அல்ல. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இந்த தகவலை வெளியிட்ட டெய்லி டெலிகிராப்பின் அடிப்படை உரிமையை கேள்விக்குட்படுத்தவில்லை.

"யாரும் அதை சந்தேகிக்கவில்லை. தகவலைக் கசிய விட்ட நபரின் நோக்கத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்கினாலும் ஊடக வெளியீட்டுத் தகவல்களின் நம்பகத்தன்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. டெய்லி டெலிகிராப் ஆசிரியர் ஜூலியன் அசாஞ்சுடன் பெல்ர்மஷில் இருக்கவேண்டும் என ஏன் மக்கள் கோரவில்லை ?"

"இந்த நாட்களில் எங்கள் முக்கிய கவனம் எங்கள் வெளியீட்டாளரின் விடுதலைக்கான போராட்டம் என்றாலும் எங்கள் வேலை தொடரும்" என்று அசான்ஜின் தன்னிச்சையான மற்றும் தொடர்ச்சியான சிறைவாசம் விக்கிலீக்ஸின் பணியை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைக் குறித்து Hrafnsson கூறினார்.

அசான்ஜின் சட்டக் குழு உறுப்பினரான ஜெனிபர் ரொபின்சன், இந்த வழக்கில் ஆஸ்திரேலிய குடிமகனைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் வழக்கில் தலையிடுவற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில் நடவடிக்கை மற்றும் ஜூலியன் அசான்ஜிற்கு வழங்கப்படும் இராஜதந்திரப் பாதுகாப்பு ஆகியவற்றை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என்று அவர் AAP க்கு கூறினார்.

அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுதல், அவர் தற்போது எதிர்கொள்ளும் வழக்கு ஆகியவற்றிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் பெற ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் 2010 ஆம் ஆண்டு முதல் நாங்கள் கேட்டு வருகின்றோம். ஆஸ்திரேலிய அரசாங்கம் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்றார்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச வெகுஜன இயக்கம் மட்டுமே அசான்ஜ் மற்றும் மானிங்கின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும். அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் உலகம் முழுவதும் எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.