ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On the spot report: Ecuador’s government colludes with Washington to seize Julian Assange’s possessions

நேரடி அறிக்கை: ஜூலியன் அசான்ஜின் உடைமைகளை கைப்பற்றும் சதியில் வாஷிங்டனுடன் ஈக்வடோர் அரசாங்கமும் இணைகிறது

By Robert Stevens and Chris Marsden 
21 May 2019

நேற்று, இலண்டனில் ஈக்வடோரிய தூதரகத்தில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் தனிப்பட்ட உடைமைகள் குறித்து ஈக்வடோரிய அதிகாரிகள் சட்டவிரோதமாக சோதனை செய்தனர். இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு அறிக்கை, அமெரிக்கா அசான்ஜை நாடுகடத்தும் அதன் முயற்சியில் “நீதிமன்றம் சார்ந்த உதவி”க்கு கோரிக்கை விடுத்திருந்ததன் பேரில் அந்த சோதனை நிகழ்த்தப்பட்டது என்பதை உறுதி செய்தது.


ஈக்வடோரிய தூதரகத்திற்கு அருகேயுள்ள தெருவில் காவலில் ஈடுபட்டுள்ள பெருநகர பொலிஸ்

2012 இல் அசான்ஜிற்கு தூதரகம் அடைக்கலம் வழங்கியிருந்த போதிலும், ஒரு பொலிஸ் திடீர் கைது குழு அசான்ஜை தூதரகத்திலிருந்து இழுத்துச்சென்று 40 நாட்களுக்குப் பின்னர் இந்த சோதனை நடவடிக்கை நிகழ்த்தப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் மருத்துவ ரீதியான ஆவணங்கள், அத்துடன் மின்னணு சாதனங்கள் உட்பட அவரது தனிப்பட்ட அனைத்து உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேற அவர் நிர்பந்திக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பிணை மீறல் நடவடிக்கையில் அசான்ஜ் ஈடுபட்டார் என்பதற்காக மே 1 அன்று குரூரமான வகையில் 50 வார கால சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அசான்ஜின் உடைமைகள் சோதனை செய்யப்படுவது மற்றும் கைப்பற்றப்படுவதற்கு சாட்சியாகவும் கண்டனம் தெரிவிக்கவும் நேற்று தூதரகத்திற்கு வெளியே காலை 8 மணியளவில் அசான்ஜின் ஆதரவாளர்கள் ஒன்றுகூட தொடங்கினர்.


தூதரகத்திற்கு வெளியே திரண்டிருந்த சில ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஆய்வு நடவடிக்கை காலை 9 மணியளவில் மேற்கொள்ளப்படும் என்று அறிக்கைகள் வெளியான பின்னர், அங்கு கூடியிருந்தவர்களில் ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்பு குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களும் இருந்தனர். El Pais நாளிதழ், “அமெரிக்க நீதித்துறை, நீதிமன்றம் சார்ந்த உதவிக்காக ஈக்வடோர் அரசாங்கத்திடம் மனு அளித்திருந்ததன் ஒரு பகுதியாக மே 20 அன்று அசான்ஜின் மூடப்பட்ட அறையில் தேடுதல் வேட்டை நடத்தப்படும்” என்றும், “கணினி தடயவியல் நிபுணர்கள்” என விவரிக்கப்பட்ட “பொலிஸ் உயர் அதிகாரி டியாகோ லோபெஸ் மற்றும் இரண்டாவது சார்ஜெண்ட் மில்டன் ஜாக்” ஆகியோரது மேற்பார்வையில் இந்த ஆய்வு நிகழ்த்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.      


(அடையாளமில்லாதக் காரில் அமர்ந்திருக்கும்) ஒரு SO6 இராஜதந்திர பாதுகாப்பு அதிகாரியிடம் ஈக்வடோரிய தூதரக பணியாளர்களில் ஒருவர் பேசுகிறார்

அன்று, SO6 இராஜதந்திர பாதுகாப்பு பொலிசார் பலர் உட்பட பெருநகர பொலிஸ் அதிகாரிகள், கட்டிடத்தின் முன் நுழைவு வாயிலை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அணுகும் விதமாக தூதரகத்திற்கு அருகே ஆங்காங்கே தங்களை நிலைப்படுத்தியிருந்தனர். SO6 என்பது ஒரு ஆயுதமேந்திய பொலிஸ் அலகாகும். ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய வினாக்களுக்கு, “அமைதியாக இருங்கள்” என்பதைத் தவிர எந்தவொரு பதிலையும் அளிப்பதற்கு பொலிஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


காலை 10 மணியளவில் தூதரகத்திற்கு ஒரு பொலிஸ் கார் வந்தடைகிறது

 

காலை 10 மணியளவில், அடையாளமிடப்பட்ட ஒரு பொலிஸ் கார் ஓட்டப்படுவதற்கு முன்னர் வெளியே கொண்டுவரப்பட்டு தூதரகத்திற்கு எதிர்ப்புறமாக நிறுத்தப்பட்டது. பின்னர், தூதரக கட்டிடத்திற்கு முன்பாக அதிகாரிகள் பலர் அணிவகுத்து நிற்பதற்கு முன்னர், ஒரு Met பொலிஸ் வேன் அங்கு வந்து தூதரகத்திற்கு பக்க நுழைவு வாயில் அருகே நின்றது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அறிய வேண்டுமென அசான்ஜின் ஆதரவாளர்கள் கோரியதுடன், “உங்களைக் கண்டால் அவமானமாக இருக்கிறது!”, “அராஜக கும்பல்காரர்களே!” “ஜூலியன் அசான்ஜ் ஒரு அப்பாவி!,” மற்றும் “இதுவொரு திருட்டுத்தனம், குற்றங்களை நிறுத்து!” என்றவாறு கோஷமிட்டனர்.

அசான்ஜின் தனிப்பட்ட உடைமைகளை பொலிஸிற்கு ஈக்வடோர் ஒப்படைப்பது உண்மையில் ஒரு கொடூரமான குற்றவியல் நடவடிக்கையாகும்.

அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக அவரின் ஒட்டுமொத்த சட்டரீதியான பாதுகாப்பும் தூதரகத்தின் வசம் இருந்தது என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை விடுக்கப்பட்ட ஒரு ஊடக அறிக்கையில், அமெரிக்கா அசான்ஜை தன்வசம் ஒப்படைக்கும் படி இங்கிலாந்திடம் அதன் இறுதி வேண்டுகோளை முன்வைப்பதற்கான காலக்கெடு ஜூன் 14 க்கு வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னர் குறிப்பாக நடத்தப்பட்ட இந்த சோதனை மற்றும் கைப்பற்றுதல் பற்றி விக்கிலீக்ஸ் குறிப்பிட்டது. அசான்ஜை துன்புறுத்துபவர்கள் அவரது சட்டக் குழு பிரதிநிதிகளுடன் அவரது உடைமைகளை தேடித் துருவி எடுப்பதற்கு அங்கு வந்தனர், ஆனாலும் கூட ஒரு ஐ.நா. அதிகாரி அங்கு இருப்பதற்கு தடை செய்யப்பட்டார்.


தூதரகத்தின் முன்பகுதிக்கு பெருநகர பொலிஸ் நகர்கின்றனர்

“சிறைக்காவல் சங்கிலி ஏற்கனவே முறிக்கப்பட்டுவிட்டது,” என்று விக்கிலீக்ஸ் வலியுறுத்தியது, அதாவது ஆதாரங்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பதுடன் நீதிமன்றம் ஏற்கக்கூடியதாக அவை இருக்காது என்பதாகும்.

“கைப்பற்றப்பட்ட பொருட்களில் அவரது இரண்டு கையெழுத்துப் பிரதிகள், அத்துடன் அவரது சட்ட ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் அடங்கும். அவரது உடைமைகள் கைப்பற்றப்படுவது என்பது மருத்துவ மற்றும் சட்ட ரீதியான இரகசியத்தன்மைகளை பாதுகாப்பது மற்றும் ஊடக பாதுகாப்புகள் தொடர்பான சட்டங்களை மீறுவதாகிறது.”

“ஏப்ரல் 25 அன்று பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜை சந்தித்த தனியுரிமை குறித்த ஐ.நா. சிறப்பு புகாராளர், அசான்ஜின் உடைமைகளை ஈக்வடோர் கைப்பற்றுவதை கண்காணிக்க வருகை தரும்படி இந்த வாரம் முற்பகுதியில் கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்த வேண்டுகோளை காரணம்காட்ட இயலாத வகையில் ஈக்வடோர் மறுத்துவிட்டது. …”

அசான்ஜை அமெரிக்க சிறையில் அடைப்பதற்கான உயர்மட்ட முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், வெள்ளியன்று ஊடக அறிக்கைகள், “[ஈக்வடோரிய] ஜனாதிபதி லெனின் மொரேனோ, “நிறைவேற்று உத்திரவு 741 மூலமாக ‘தகவல் தொடர்பு மீறாமை, சங்கம் மற்றும் ஒன்றுகூடுதல் சுதந்திரம் மற்றும் தகவல் பரிமாற்ற சுதந்திரம்’ குறித்த கைதிகளின் உரிமைகளை இடைநிறுத்தம் செய்யும் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்” என்று குறிப்பிடுகின்றன.


ஈக்வடோரிய தூதரகத்தின் முன் கதவிற்கு வெளியே நிற்கும் SO6 இராஜதந்திர பாதுகாப்பு அதிகாரிகள்

“ட்ரம்ப் நிர்வாகம் தனது கூட்டாளிகளை அதன் Wild West நடவடிக்கை போன்று செயல்படும் படி தூண்டுகிறது,” என்று விக்கிலீக்ஸ் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்ஸன் தெரிவித்தார்.

“ஈக்வடோர் குற்றவாளிகளாலும் பொய்யர்களாலும் இயங்கி வருகிறது. ஈக்வடோர் சுயாதீனமாகவும் சரி அல்லது அமெரிக்க விருப்பத்தின் பேரிலும் சரி, அசான்ஜின் உடைமைகளை சீர்குலைத்து அமெரிக்காவிற்கு அனுப்பிவிடும் என்பதில் என்னைப் பொறுத்த வரை எவ்வித சந்தேகமுமில்லை.”

ஜூலியன் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸின் பாதுகாப்பிற்கான சர்வதேச சட்ட ஒருங்கிணைப்பாளர் பால்டஸார் கார்ஸோன், அசான்ஜின் ஆவணங்கள் “அவருக்கு எதிராக அரசியல் துன்புறுத்தல் செய்யும் முகவரான அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது பாதுகாப்பு உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்தும் தகவல்களை அணுகுவது மீதான முன்னொருபோதும் கண்டிராத தாக்குதலாகும்” என்று கூறினார்.

அசான்ஜின் வழக்கறிஞர்களில் ஒருவரான Aitor Martinez, “அடைக்கலம் புகுந்தவரின் தனிப்பட்ட உடைமைகளை தாறுமாறான வகையில் கைப்பற்றி எந்த நாட்டிடம் – அமெரிக்கா- இருந்து அவர் பாதுகாக்கப்பட்டு வந்தாரோ அதே நாட்டிடம் ஒப்படைப்பதன் மூலம் அடைக்கலம் வழங்கும் அமைப்பிற்கான மிக அடிப்படையான விதிகளை அப்பட்டமாக மீறுவதாகவே ஈக்வடோர் செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.

மேலதிக துன்புறுத்தும் நடவடிக்கையாக, சோதனை நடந்த நாளன்று, சுவீடனின் பொது வழக்கு விசாரணையின் துணை இயக்குநர், ஈவா-மேரி பெர்சன், “அசான்ஜ் ஆஜராகவில்லை என்றால், கற்பழிப்பில் ஈடுபட்டிருப்பார் என்று சந்தேகிக்கும் காரணத்தின் பேரில்” அவரை தடுப்புக்காவலில் வைப்பதற்கான ஒரு ஆணையை வழங்கும் படி சுவீடனின் உள்ளூர் மாவட்ட நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தார்.

2010 இல் சுவீடனுக்கு அவர் விஜயம் செய்த நாள் முதல் இன்று வரை, எந்தவித பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களும் அசான்ஜ் மீது சுமத்தப்படவில்லை. இப்போதும் கூட, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டால், அசான்ஜை சுவீடனிடம் ஒப்படைப்பதற்கான ஒரு ஐரோப்பிய கைது உத்திரவு (European Arrest Warrant-EAW) வழங்கப்படுவது தான் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும்.

“இங்கிலாந்து அதிகாரிகள் தான் முன்னுரிமை வரிசையை தீர்மானிக்க வேண்டும்” என்ற நிலையில், அமெரிக்காவின் அசான்ஜ் ஒப்படைப்பு கோரிக்கைக்கு முரணாக சுவீடனின் நடவடிக்கை இருக்கும் என்பதற்கான ஒரு காரணத்தையும் அவர் கண்டறியவில்லை என்று பெர்சன் வலியுறுத்தினார்.

அரசியல் ரீதியாக, நேற்று ஈக்வடோர், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மேற்கொண்ட குற்றவியல் சதித்திட்டத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதாகவே சுவீடனின் வழக்கறிஞர்கள் செயலாற்றினர். ஆனால் முன்னாள் பிரிட்டிஷ் தூதரும், மனித உரிமைகள் ஆலோசகருமான கிரேக் முர்ரே, பெர்சனின் கோரிக்கைக்குப் பின்னால் உள்ள சட்டபூர்வமான கருத்தாய்வுகளைப் பற்றிய முக்கிய அவதானிப்புக்களை உருவாக்கினார்.

EAW “ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு நீதித்துறை அதிகாரிகள் மூலமாக வழங்கப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். என்றாலும், அசான்ஜை நாடு கடத்துவதற்கான சுவீடனின் அசல் கோரிக்கை “எந்தவொரு நீதிமன்றம் மூலமாகவும் வழங்கப்படவில்லை, வெறுமனே வழக்கறிஞர் மூலமாகத் தான் வழங்கப்பட்டது.”

“இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அசான்ஜின் ஆரம்பகட்ட முறையீட்டின் பெரும்பகுதி, உத்திரவு ஒரு நீதிபதியிடம் இருந்து வரவில்லை மாறாக ஒரு வழக்கறிஞரிடம் இருந்து தான் வந்துள்ளது என்ற நிலையில், அது ஒரு நீதித்துறை அதிகாரத்திற்கு உட்பட்டதில்லை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.”

மேலும் முர்ரே தொடர்ந்து, “இங்கிலாந்தில் வேறு ஏதேனும் நபர் குற்றவாளியாக இருந்திருப்பாரானால், ஒரு வழக்கறிஞர் விடுத்த உத்திரவை பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் ஒப்புக் கொண்டிருக்காது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. … உச்ச நீதிமன்றத்தில் உத்திரவுக்கு எதிராக [மே 2012 இல்] அசான்ஜ் அவரது வழக்கை இழந்த பின்னர் உடனே, இனிவரும் உத்திரவுகளை ஒரு நீதிபதி தான் பிறபிக்க வேண்டுமேயன்றி ஒரு வழக்கறிஞர் அல்ல என்று குறிப்பிடும் வகையில் சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் மாற்றியமைத்தது என்ற உண்மையின் மூலம் எனது கருத்து வெளிப்படுகிறது” என்று கூறினார்.


தூதரகத்திற்கு வெளியே நிற்கும் ஒரு ஆர்ப்பாட்டக்காரர்

முர்ரே விவரித்தது போல “ஒரு முற்றிலும் முன்நிகழ்ந்திராத மற்றும் வெளிப்படையான நம்பமுடியாத காரணமாக, லோர்டு [நிக்கோலஸ்] பிலிப்ஸ், EAW உடன்படிக்கையின் ஆங்கில பதிப்பில் “நீதித்துறை அதிகாரம்” சுவீடன் வழக்கறிஞரை உட்படுத்த முடியாது, ஆனால் பிரெஞ்சு பதிப்பில் ‘நீதித்துறை அதிகாரம்’ சுவீடன் வழக்கறிஞரை உட்படுத்த முடியும் என்று நிறைவு செய்திருந்தார். இரண்டு பதிப்புகளுமே சம மதிப்பு கொண்டவை, லோர்டு பிலிப்ஸ் ஆங்கில மொழி பதிப்பை காட்டிலும் பிரெஞ்சு மொழி பதிப்பிற்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்தார் என்பதை இங்கிலாந்து பேச்சுவார்த்தையாளர்கள் ஆங்கில உரை மூலம் வேலை செய்பவர்கள் என்பது ஊகிக்கக் கூடியது என்ற நிலையிலும், இங்கிலாந்து அமைச்சர்களும் பாராளுமன்றமும் அதை உறுதி செய்யக் கூடும் என்ற நிலையிலும் [அசலில் வலியுறுத்துவதாக] ஒரு முற்றிலும் அதிர்ச்சியூட்டும் முடிவாக அது இருந்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜூலியன் அசான்ஜின் விடயத்தில் இது நிகழ்ந்தபோது, உயர்மட்ட நீதித்துறை அதிகாரிகள் வெறுமனே சட்டத்தை மாற்றி அதற்கேற்ப அவர்கள் செயல்படுகிறார்கள்.

அதிகாரபூர்வ குற்றத்தை மேலும் வலுப்படுத்துவதாக, அசான்ஜின் வழக்கறிஞர் பெர் சாமுவெல்சன், சுவீடனில் நீதிமன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை, ஏனென்றால் பெல்மார்ஷில் அசான்ஜின் வழக்கறிஞர்கள் அவர்களது கட்சிக்காரரை அணுகுவதற்கான அனுமதியை வழங்க இங்கிலாந்து மறுத்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார்.

“இங்கிலாந்து சிறையில் அவர் இருப்பதால், அவருடன் தொலைபேசியில் பேசுவது கூட இதுவரை சாத்தியப்படவில்லை,” என்று சாமுவெல்சன் தெரிவித்தார். வழக்கறிஞர் தனது கட்சிக்காரருடன் கலந்தாலோசித்து தடுப்புக் காவல் ஆணையை எதிர்க்க அவர் விரும்புகிறாரா என்பதை அறியாத வரை, வழக்கறிஞர் விடுக்கும் கோரிக்கையை சுவீடன் மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாது என்பதை அவர் எடுத்துக்கூற வேண்டும்.”