ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan president denounces opponents of the death penalty

இலங்கை ஜனாதிபதி மரண தண்டனையை எதிப்பவர்களை கண்டனம் செய்கிறார்

By Vijith Samarasinghe
15 February 2019

பெப்பிரவரி 06 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரணதண்டனை மீதான நாட்டின் 43 வருடகால ஒத்திவைப்பினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஏனைய மனித உரிமைக் குழுக்களும் தனது முயற்சிகளைத் தடுக்கக்கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.

மரணதண்டனையை மீண்டும் நிறைவேற்றுவதற்கு தான் அழைப்பு விடுத்ததில் இருந்தே, மரண தண்டனைக் கைதிகள தங்களின் குற்றங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தாலும், “நாங்கள் மரண தண்டனையை ஓரிரு மாதங்களில் அமுல்ப்படுத்துவதற்கு இயலக் கூடியவர்களாக இருப்போம்” என பாராளுமன்றத்தில் சிறிசேன கூறினார். “இதற்கு எதிரான எந்தவொரு எதிப்புகள் வந்தாலும், நான் அதை அமுல்ப்படுத்துவதற்கு உறுதியான முடிவை எடுத்துள்ளேன்” என அவர் மேலும் கூறினார்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரிலும் மரணதண்டனைகளை மேற்கோளிட்டு, “ஒரு சட்டத்திற்கு கீழ்ப்படிகின்ற மற்றும் புனிதமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு கடுமையான சட்டங்கள் எமக்கு அவசியம்” என அவர் சிடுமூஞ்சித்தனமாக அறிவித்தார்.

சிறிசேனவின் பிலிப்பைன்சுகான கடந்த மாத விஜயத்தின் போது, பொருள் முகவர்கள் என கூறப்படும் ஆயிரக்கணக்கானவர்களை சட்டத்துக்குப் புறம்பாக கொன்றொழித்த ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்றவின் “போதைப்பொருள் மீதான யுத்தத்தை” “முழு உலகிற்குமான ஒரு உதாரணம்” என பாராட்டியதோடு இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த சபதம் செய்தார்.

சிறிசேனவின் மரண தண்டனைக்கான பிரச்சாரமும் டுரேற்ற பற்றிய அவரின் பாராட்டுக்களும் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் மனித உரிமைக் குழுக்களிடமிருந்து உடனடி விமர்சனத்தை தூண்டி விட்டது.

இதற்குப் பிரதிபலித்த சிறிசேன, போதைப் பொருள் கடத்தல் பாதாள உலகம் சம்பந்தமான எந்தவொரு மனித உரிமை பிரச்சினையை எழுப்புவதும் “பிழை” என பாராளுமன்றத்தில் கூறியதோடு தனது மரண தண்டனை பிரச்சாரத்தை “எதிர்க்க வேண்டாம்” என மனித உரிமை அமைப்புகளைக் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல் இல்லாத இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்திக்கொண்ட சிறிசேன, கடந்த நவம்பரில் அகுனகொலபெலஸ்சவில் சிறைக் கைதிகளை விசேட அதிரடிப் படையினரும் சிறை உத்தியோகத்தர்களும் கொடூரமாகத் தாக்கியமை சம்பந்தமான விடயத்தை சுட்டிக் காட்டினார்.

இச் சம்பவம் தொடர்பாக இரகசியமாக பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளி அரசாங்கத்தின் மீது பரவலான விமர்சனத்தை தூண்டி விட்டது. அதிரடிப் படையை அனுப்புவதற்கு யார் கட்டளையிட்டது என அதிரடிப்படை கட்டளை அதிகாரியை கேட்க துணிந்தமைக்காக சிறிசேன, இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் தலைவரை விமர்சித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பேசுகையில், “எங்களால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக் குழு, எங்களைப் பாதுகாத்திருக்க வேண்டும். மாறாக, அது அதிரடிப் படை தளபதியை விசாரிக்கின்றது” எனத் தெரிவித்தார். ஐ.நா. சமாதானப் பாதுகாப்பு பணி எனப்படுவதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், மனித உரிமைகள் மீறல்களுக்காக இலங்கை இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்தமைக்காகவும் மனித உரிமைகள் ஆணைக் குழுவை அவர் கடிந்துகொண்டார்.

மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடகம, “மனித உரிமைகள் சட்டத்தின் படியே இந்த நடவடிக்கைகள்” மேற்கொள்ளப்பட்டுள்ளன மற்றும் அது “குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கான ஆணைக்குழுவின் முயற்சியல்ல” என்று சிறிசேனவின் குற்றச்சாட்டுகளுக்கு எழுத்தில் பதிலளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சிறிசேனவின் தாக்குதலானது ஓருயொரு அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. அவர், மரண தண்டணையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையோ அல்லது அரசாங்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமை மீறல்கள் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையோ பொறுத்துக்கொள்ள மாட்டார். சிறிசேன, பொலிஸ் மற்றும் அதன் இழிபெயரெடுத்த விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்திற்கும் அனைத்து நிலைமைகளிலும் அவர் அவர்களின் பக்கம் இருப்பார் என்ற ஒரு தெளிவான தகவலை அனுப்புகின்றார்.

சிறிசேன இராணுவத்தைப் பாதுகாப்பது ஒரு குறிப்பானதாகும். 1983 மற்றும் 2009 இடையில், அது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட இனவாத யுத்தத்தினை நடத்தியது. இந்த கொடுரமான மோதல், இன மற்றும் மத கோடுகள் மூலமாக தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் 1948 இலிருந்து ஆளும் தட்டுக்களினால் முன்னெடுக்கப்பட்ட இனவாதக் கொள்கைகளின் உச்சக் கட்டமாக இருந்தது.

தனது முன்னோர்களைப் போலவே சிறிசேனவும், 1983 இலிருந்து அனைத்து போர்க் குற்றங்களுக்கும் பொறுப்பான ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ உயர் மட்டத்தினரைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளார்.

1976 இலிருந்து உத்தியோகபூர்வ மரண தண்டணை நிறைவேற்றம் நடக்கவில்லை எனினும், இலங்கை அரசானது நீதிக்குப் புறம்பான கெலைகளினூடாக அதன் அரசியல் எதிரிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இல்லாதொழித்த ஒரு கொடூரமான பதிவினைக் கொண்டுள்ளது.

இராணுவம் மற்றும் அதனோடு சேர்ந்த துணைப்படை கொலை குழுக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போதும், இலங்கையின் தென்பகுதியில் 1987-89 இல் இளைஞர் எழுச்சிகளை நசுக்கிய போதும் பத்தாயிரக் கணக்கான மக்களை விசாரனையின்றி கடத்தி கொலை செய்திருக்கின்றன.

சிறிசேனவின் பாராளுமன்ற உரையில் அரசியலமைப்பு சபை இன்னொரு இலக்காக இருந்தது.

2015 இல் சிறிசேன ஜனாதிபதியின் கீழ் அரசியல் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசியமைப்புச் சபை, நீதி மற்றும் அரச சேவையின் “சுதந்திரத்தினை” உறுதிப்படுத்த அமைக்கப்பட்டதாக இருந்தது. ஜனாதிபதியின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற கட்சிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற சபாநாயகரின் தலமையின் கீழ் உள்ள இந்த சபை, எந்த வித்திலும் சுயதீனமானதல்ல.

நீதிபதிகள் மற்றும் பிரதம நீதியரசருக்கான அவரது பரிந்துரைகளை அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொள்ளவில்லை என சிறிசேன புகார் இட்டார். “அவர்கள் அந்தப் பெயர்களைக் கைவிட்டமைக்கான காரணங்களை இன்னும் எனக்குத் தெரிவிக்கவில்லை” என அவர் தெரிவித்தார்.

இந்த ஆத்திரமூட்டும் மற்றும் சர்வதிகார வெளிப்பாடுகளில் ஜனாதிபதி தனியாள் அல்லர். அவரின் கருத்துக்கள், அரச அடக்குமுறை கருவிகளை பலப்படுத்துவதற்கு நெருக்கமாகச் செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகங்களினாலும் ஆதரிக்கப்பட்டது. இறுதி வாரத்தில், நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, ஐந்து போதைப்போருள் குற்றவாளிகளின் மரண தண்டணைக்கான நிர்வாக நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று அறவித்தார்.

ஆளும் தட்டுக்களின் ஒவ்வொரு கன்னையும் பொலிஸ்-அரச ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்புகின்றன. கடந்த ஆண்டின் இரண்டு மாதங்களாக, இந்தக் கன்னைகள் வெளிப்படையான அரசியல் போரில் ஈடுபட்டிருந்தன. சிறிசேன சட்டத்திற்கு புறம்பாக விக்கிரமசிங்கவை பதவியிருந்து நீக்கி, அவரின் பிரதான போட்டியாளரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பதவியில் இருத்தினார். இராஜபக்ஷ ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்கு தவறியதை அடுத்து, பாராளுமன்றத்தை கலைத்தார்.

அமெரிக்கா, இராஜபக்ஷவிற்கு எதிராக இருப்பதால் இந்த சதி தோல்வியடைந்தது. இராஜபக்ஷ பெய்ஜிங்கிற்கு ஆதரவானவராக வாஷிங்டன் கருதுகிறது. உயர் நீதிமன்றமும் சிறிசேனவுக்கு எதிராக தீர்ப்பளித்த காரணத்தால், அவர் மீண்டும் விக்கரமசிங்கவை பதவியில் அமர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டார்.

தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் தட்டுக்களுக்குள்ளான உட்கட்சி மோதல்களுக்குப் பின்னால், சர்வதேச தொழிலாள வர்க்க எழுச்சியின் பகுதியாக தோட்டத் தொழிலாளர்களின் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் போராட்டங்களின் வெடிப்பு இருக்கின்றது.

சிறிசேனவின் மரணதண்டணை உரைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், முன்னொருபோதும் இல்லாத அளவில் சுதந்திரதின பேச்சை தயாரித்தார். அதில் இராணுவத்தைப் பாராட்டியதோடு, அரசாங்கம், நாட்டின் ஜனநாயக மற்றும் சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதில் தோல்வியடைந்துள்ளது என அறிவித்தார்.

மரண தண்டனையானது கொடுரமான மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனையாகும். இதில் அதிகமான குற்றவாளிகள் உலகம் முழுவதுமுள்ள அதிகமாக அடக்குமுறைக் உள்ளாக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

அனைத்து பிரதான பாராளுமன்ற கட்சிகளின் ஆதரவுடன் இந்த கொடூரமான நடைமுறையினை மீண்டும் துரிதமாக அமுல்படுத்துவற்கான சிறிசேனவின் அழைப்பானது, முதலாளித்துவ வர்க்கம் சர்வாதிகார ஆட்சி வடிவத்தை நோக்கி நகர்வதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

சிறிசேன அரசாங்கம் அதன் பிற்போக்கு நிகழ்ச்சி நிரலுடன் முன்நோக்கி செல்வதைக் காட்டும் சமிக்ஞையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான டெயிலி மிரர் பத்திரிகை, பெப்பிரவரி 11 அன்று, உத்தியோகபூர்வ அலுகோசுவாக வேலை செய்ய விண்ணப்பிக்குமாறு ஒரு இழிவான விளம்பரத்தை செய்திருந்தது. மரண தண்டனையை நிறைவேற்ற ஒப்படைக்கப்படும் இரண்டு பேரும் 18 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும் “மன உறுதியுள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இன்னொரு மனிதனை தூக்கில் இடுவதற்கு ரூபா 36,410 அல்லது 203 டாலர் ஊதியமாக வழங்கப்படும்.