ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US threatens Iran with war

அமெரிக்கா ஈரான் மீதான போருக்கு அச்சுறுத்துகிறது

Keith Jones
7 May 2019

ஈரானில் அமெரிக்க குண்டுகள் மற்றும் ஏவுகணை மழை விரைவில் பொழியுமா?   பாரசீக வளைகுடா பிராந்தியத்திற்கு அமெரிக்க போர் விமானங்களும் விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் ஏனைய தீவிர போர் நடவடிக்கைகளுடன் சேர்ந்து, ஈரான் மீதான தாக்குதலுக்கு வாஷிங்டன் தயாராகவுள்ளது என்ற “ஒரு தெளிவான மற்றும் சரியான செய்தியை” அனுப்புகிறது. இது, பெரும்பாலும் ஒரு பேரழிவுகர போரைத் தூண்டக்கூடிய ஆத்திரமூட்டல் தயாரிப்புகளில் வாஷிங்டன் மிகவும் முன்னேறியிருப்பதை காட்டுகிறது.

ஞாயிறன்று மாலை, அமெரிக்க தேசிய பாதுகாப்புச் செயலர் ஜோன் போல்டன், ஈரானை அச்சுறுத்துவதற்கு USS ஆபிரகாம் லிங்கன் என்ற விமானந்தாங்கி கப்பலும், அமெரிக்க விமானப் படை குண்டுவீச்சு விமானங்களும் அங்கு பிரசன்னப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தார். மேலும் அங்கு, “பிரச்சினைக்குரிய மற்றும் படை விஸ்தரிப்பு அடையாளங்களும் எச்சரிக்கைகளும்,” நிலவுவதாகக் கூறி, “அமெரிக்க நலன்கள் மீது அல்லது அதன் நட்பு நாடுகள் மீது தொடுக்கப்படும் எந்தவொரு தாக்குதலும் தீவிரமான படை எதிர்ப்பை எதிர்கொள்ளும்,” என்று போல்டன் சபதம் செய்தார். மேலும், “இஸ்லாமிய புரட்சிகர காவல் படை போன்ற பினாமி படை அல்லது வழமையான ஈரானியப் படைகள் என எந்த படை தாக்குதல் தொடுத்தாலும் அதை எதிர்க்க” “நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்,” என்று சேர்த்துக் கூறினார்.

போல்டனின் அச்சுறுத்தல்களை அவருடைய சகாவான ஈரான்-விரோத போர்-வெறி அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோவும் எதிரொலித்தார். ஈராக்கில் ஷியா போராளிகள் மற்றும் யேமனில் ஹௌத்தி போராளிகள் தொடங்கி பாலஸ்தீனிய ஹமாஸ் குழு மற்றும் லெபனானின் ஹெஸ்பொல்லா குழு வரையிலான போராளிக்  குழுக்களுக்கு தெஹ்ரான் ஆதரவளிப்பதாக வாஷிங்டன் கடுமையாக குறைகூறி வருகின்றதான அத்தகைய நீண்ட மற்றும் வேறுபட்ட குழுக்களின் பட்டியலில் இருந்து அமெரிக்க “நலன்கள்” மற்றும் அதன் கூட்டாளிகள் மீது தொடுக்கப்படும் எந்தவொரு “தாக்குதல்” உட்பட, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு சாத்தியம் இருப்பதை துல்லியமாக நியாயப்படுத்துவதில் அவரும் முன்நிற்கிறார்.

ஞாயிறு பிற்பகுதியில், “அமெரிக்க நலன்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரானியர்களைத்தான் நாங்கள் பொறுப்பாக்குவோம்,” என்றும், “ஷியா அல்லது ஹௌத்தி அல்லது ஹெஸ்பொல்லா போராளிக் குழு என ஏதோவொரு மூன்றாம் தரப்பு பினாமிகள் மூலம் அத்தகைய நடவடிக்கைகளில் உண்மையில் அவர்கள் ஈடுபட்டால், அது குறித்து ஈரானியர்களையும், ஈரானியத் தலைமையையும் நாங்கள் நேரடியாக பொறுப்பாக்குவோம்” என்றும் செய்தியாளர்களிடம் பொம்பியோ தெரிவித்தார்.

அத்தகைய “எச்சரிக்கைகளை” விடுப்பதன் மூலம், அது தெரிவு செய்யும் நேரத்தில், ஈரான் மீது போர் தொடுப்பதற்கான ஒரு சாக்குப்போக்கை வழங்கும் உரிமத்தை வாஷிங்டன் தீர்க்கமாக பிரகடனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க “நலன்கள்” மற்றும் அதன் கூட்டாளிகள் மீதான “தாக்குதல்” என்பது, ஈராக்கில் வேறுபட்ட ஷியா போராளிகள் குழுக்களில் ஏதோவொன்றிற்கும் மற்றும் ஈராக்கில் பிரசன்னப்படுத்தப்பட்டுள்ள 5,500 அமெரிக்கத் துருப்புக்களில் ஏதோவொன்றிற்கும் இடையேயான ஒரு மோதலில் இருந்து, காசா பகுதியில் இருந்து ஏவப்பட்டும் ஒரு பழையகாலத்து ராக்கெட் மூலம் ஒரு இஸ்ரேலிய-அமெரிக்க குடிமகன் கொல்லப்படுவது வரை கிட்டத்தட்ட அனைத்தும் உள்ளடங்கும்.

சிரியாவில், ட்ரம்பின் “வெளியேற்றல்” அறிவிப்புக்கள் ஒருபுறம் இருந்தாலும், சுமார் 2,000 அமெரிக்க சிறப்புப் படை துருப்புக்களும் மற்றும் அவர்களின் பினாமி படைகளும் அந்நாட்டின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்திருப்பது தொடர்கின்ற நிலையில், அமெரிக்க இராணுவம் அடிக்கடி இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு ஆதரவுள்ள போராளிகளை இலக்கு வைக்கிறது. அமெரிக்க படையினர், பென்டகன் அல்லது சிஐஏ க்கு இத்தகைய போராளிகள் தொடர்ந்து நெருங்கிய பினாமிகளாக இருந்துவருவதானது எந்த நேரத்திலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பதுடன், வரவிருக்கும் மோதலை ஒரு ஈரானியத் “தாக்குதல்” என்று முத்திரை குத்தவும் வழி ஏற்படுத்தும்.

ஈவிரக்கமற்ற மற்றும் குற்றவியல் தன்மைமிக்க வாஷிங்டனின் நடவடிக்கைகளை மிகைப்படுத்த முடியாது. 1991 முதல் மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான தொடர்ச்சியான சட்டவிரோத போர்கள் பரவியுள்ளதால் ஏற்கனவே அப்பிராந்தியம் கொதிநிலையில் உள்ளது. ஈராக்கை காட்டிலும் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சொந்த ஆக்கிரமிப்பு நலன்களை தொடர்கின்ற நிலையில், அதன் இளைய பங்காளிகளாக சேவை செய்து வரும் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கும், மற்றும் சிரியா, ஹெஸ்பொல்லா, ஈராக்கி ஷியா போராளிகள் மற்றும் தெஹ்ரானின் ஏனைய கூட்டாளிகளுக்கும் இடையே அனைத்து வகைகளிலுமான ஒரு பிராந்தியப் போரை அது பற்றவைக்கும்.

மேலும், ஆரம்பத்தில் இருந்து, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளையும், அத்துடன் வாஷிங்டன் அதன் முக்கிய “மூலோபாய விரோதிகள்” என தற்போது அதிகாரபூர்வமாக குறிப்பிடுகின்ற ரஷ்யா மற்றும் சீனாவையும் இத்தகைய பேரழிவுகர மோதலுக்குள் இழுத்துவிடுவதற்கு அச்சுறுத்துவதாக உள்ளது.

ஏனென்றால், உலகின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பிராந்தியமாகவும் புவிமூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மேலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் இணைப்பு மையமாகவும், மத்திய கிழக்கில் குறுக்கீடு செய்யும் அனைத்து ஏகாதிபத்திய மற்றும் பெரும் வல்லரசுகளின் நலன்களில் ஈரானின் பங்கு இருக்கின்ற நிலையில், போரின் மூலமான அதன் மறுபங்கீட்டினால் ஒரு பெரும் மூலோபாய ஆதாயத்தை அனைத்து நாடுகளும் பெறக்கூடும்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான போர் அமெரிக்காவில் உள்நாட்டு வர்க்க உறவுகளில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், ஆளும் உயரடுக்கு போருக்கான மொத்த செலவினங்களையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கும், மேலும் அது குறித்து பாரிய எதிர்ப்பு விரைவில் எழுச்சி பெறக்கூடும் என்று குற்றம்சாட்டவும் முனையும்.

போல்டன் அவரது ஞாயிறு அறிக்கையில், “ஈரானிய ஆட்சியுடன் போரிடுவதற்கு அமெரிக்கா முயலவில்லை” என்று கூறினார். இது ஒரு ஆணவமான பொய் என்பதே உண்மை.

சர்வதேச சட்டத்தின் கீழ் போருக்கு வழிவகுக்கும் ஒரு நடவடிக்கையாக, ஈரானின் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கும், தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் நோக்கம் கொண்டு அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரான், உடன்படிக்கையின் ஷரத்துக்களை பின்பற்றியுள்ளது என்று சர்வதேச அணுசக்தி அமைப்பும் (International Atomic Energy Agency) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா என உடன்படிக்கையின் ஏனைய அனைத்து கட்சியினரும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், கடந்த மே மாதத்தில், ஐ.நா. வின் ஒப்புதல் பெற்ற அந்த அணுசக்தி உடன்படிக்கையை, அல்லது JCPOA (Joint Comprehensive Plan of Action) ஐ ட்ரம்ப் இரத்து செய்துவிட்டார், இது ஒபாமா நிர்வாகமும் மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளும் சேர்ந்து 2015 இல் ஈரானுடன் எட்டப்பட்ட உடன்படிக்கை ஆகும்.

JCPOA ஐ தகர்ப்பதை முன்னிட்டு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளில் பாதிப்பை ஏற்படுத்தவும் அதன் வெளிநாட்டு வர்த்தகத்தை முடக்கவும் என, 2011 முதல் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ஈரானை தண்டித்ததைக் காட்டிலும் இன்னும் கடுமையாக அதன் மீது பொருளாதாரத் தடைகளை விரைவில் திணிக்கவிருப்பதாக ட்ரம்ப் பெருமை பீற்றிக் கொண்டார்.

கடந்த வியாழனன்று, ஈரானிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிகள் மீது முழுமையான தடைகளை அமல்படுத்துவதற்கு உறுதிபூண்டு, ட்ரம்ப் நிர்வாகம், ஈரான் மீது தனது பொருளாதாரப் போரை மோசமான அளவில் முடுக்கிவிட்டுள்ளது. நவம்பரில், உலக வங்கி அமைப்பில் இருந்து ஈரானை வெளியேற்றி அதனை செயலிழக்க செய்த மற்றும் ஈரானிய எரிசக்தி ஏற்றுமதிகள் மீதான தடைகளை மீளசுமத்திய சமயத்தில், வாஷிங்டன் எட்டு நாடுகளை ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை குறைந்த அளவில் இறக்குமதி செய்து கொள்ள அனுமதித்து, அந்நாடுகளுக்கு பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளித்தது.

இந்நிலையில், சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் துருக்கி உட்பட, ஈரானிய எரிசக்தி ஏற்றுமதிகளின் பிரதான நுகர்வோர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் எழுந்தபோதும், போல்டனும் பொம்பியோவும் மே 2 அன்று காலாவதியாகும் எந்தவொரு பொருளாதாரத் தடை விலக்கையும் நீட்டிப்பு செய்வதற்கு மறுத்துவிட்டனர்.

ஈரானிய எரிசக்தி ஏற்றுமதிகள் மீது முழுமையான வெட்டுக்களைத் திணிப்பதில் தற்போது வாஷிங்டன் உறுதியாகவுள்ளது. ஈரானிய எண்ணெயினை பெருமளவில் கொள்முதல் செய்யும் சீனா உட்பட ஏனைய நாடுகள், பெடரல் ரிசர்வ் வாரியத்தையும் (Federal Reserve Board) மற்றும் உலக நிதிய அமைப்புமுறை மீதான வோல் ஸ்ட்ரீட்டின் ஆதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா சுமத்தவிருக்கும் இரண்டாம்பட்ச பொருளாதாரத் தடைகள் குறித்த அச்சுறுத்தலுக்கு உடன்படுவதற்கு நிர்பந்திக்கப்படும்.

அமெரிக்க பொருளாதாரத் தடைகள் ஈரானிய பொருளாதாரத்தின் மீது ஏற்கனவே ஒரு பேரழிவுகர தாக்கத்தைக் கொண்டிருந்தமை, கடந்த ஆண்டு வசந்த காலம் முதல் அங்கு வேலையின்மையை அதிகரிப்பதுடன், 50 சதவிகித விலையேற்றத்திற்கும் எரியூட்டுகின்ற நிலையில், நாட்டில் வறுமையும் சமூக சமத்துவமின்மையும் அதிகரித்து நீண்டகால சீரழிவிற்கு அது உட்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான ஒரு இராணுவ ஆத்திரமூட்டலுக்கான வாஷிங்டனின் தயாரிப்புக்கள், ஈரானின் ஒட்டுமொத்த வங்கி மற்றும் எரிசக்திக்கான தடை பிரகடனம் என்பவை, உலகம் முழுவதுமான அமெரிக்கா ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவவாதத்தின் பாரிய விரிவாக்கத்தின் ஒரு பாகமாக உள்ளது. வாஷிங்டன் தனக்குதானே பொறுப்பு சொல்லும் ஒரு சக்தியாக செயல்பட்டு, எதிரிக்கும் பெயரளவிலான நண்பர்களுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆணையிடுகிறது.

ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுவேலாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவிற்கு எதிராக தனது ஆட்சி மாற்ற சதித்திட்டத்தை அங்கு நிறைவேற்றும் நோக்கத்தில் அந்நாட்டின் மீதான இராணுவத் தாக்குதலுக்கு அது அச்சுறுத்துவது போல, ஈரான் மீதான அதன் தாக்குதலையும் அதிகப்படுத்தி வருகிறது.

ஞாயிறன்று, ட்ரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீதான வர்த்தக போர் சுங்க வரிகளை 25 சதவிகிதமாக உயர்த்தப் போவதாகவும், மேலும் இந்த வார வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க கோரிக்கைகளுக்கு பெய்ஜிங் ஒத்துப்போகத் தவறினால், கூடுதலாக 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீது சுங்க வரிகளை திணிக்கவிருப்பதாகவும் அச்சுறுத்தினார். மேலும் திங்களன்று, மேலதிக ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக, பென்டகனின் சமீபத்திய “கடல்வழி சுதந்திர” பயிற்சியை நடத்துகையில், சீனா உரிமை கோரும் தென் சீனக் கடல் பகுதியில் தீவுகளுக்கு அருகில் இரண்டு அமெரிக்க போர்க் கப்பல்களை அது நிலைநிறுத்தியுள்ளது. இருப்பினும், சீன கடலோரப் பகுதியில் போர்க் கப்பல்களின் தொகுதியை பிரசன்னப்படுத்துவதற்கு பென்டகன் “உரிமை” கொண்டிருப்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் தான் இத்தகைய பயிற்சிகள் அங்கு நடத்தப்படுகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார பலத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஈடுகட்டும் ஒரு முயற்சியில், 1991 முதல் அது கட்டவிழ்த்துவிட்டுள்ள போர்களால், அமெரிக்க பூகோள ஆதிக்கத்தின் அரிப்பை தடுப்பதற்கு வெளிப்படையாக அது தவறிவிட்டது. ஆனால், அமெரிக்க ஆளும் வர்க்கம், நிதிய ஒட்டுண்ணித்தனத்திலும் குற்றவியல் தன்மையிலும் மூழ்கிக் கிடக்கின்ற நிலையில், ஆக்கிரமிப்பும் வன்முறையும் அதிகரித்துள்ளதைத் தவிர வேறெந்த பிரதிபலிப்பையும் அது கொண்டிருக்கவில்லை.

தெஹ்ரான் உடனான அனைத்து மோதல்களுக்கும் சிறப்புரிமை வழங்குவதில் கொண்டிருக்கும் புத்திசாலித்தனம் உட்பட, வெளியுறவுக் கொள்கைகள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புடன் சில தந்திரோபாய சர்ச்சைகளைக் கொண்டுள்ளனர். என்றாலும், ஆக்கிரமிப்பு மற்றும் போர் மூலமாக அமெரிக்க பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் அவர்களும் சற்றும் உறுதி குறைந்தவர்கள் இல்லை. இராணுவ புலனாய்வு எந்திரத்தின் பிரிவுகளின் உடனுழைப்பாளர்களுடன், நிர்வாகத்தின் மீது இன்னும் கூடுதல் ஆக்கிரோஷமான ரஷ்ய விரோத கொள்கையை திணிப்பதற்காக ரஷ்யாவுடன் கூட்டுச்சதி செய்வதாக குற்றம்சாட்டி, ட்ரம்பிற்கு எதிராக நவ-மெக்கார்த்தி வகை பிரச்சாரத்தை அவர்கள் நடத்தியுள்ளனர். மேலும், பெய்ஜிங்கிற்கு எதிரான ட்ரம்பின் தாக்குதலையும் அவர்கள் ஆதரிக்கின்றனர் என்று பேர்னி சாண்டர்ஸின் சமீபத்திய சீன விரோத கண்டனம் அடிக்கோடிட்டுக் காட்டியது.

இருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டும் தான் வேட்டையாடுதல் குழுவின் தலைமையாக உள்ளது. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும், தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்காகவும், இராணுவவாதம் மற்றும் போருக்காக ஒரு அரசியல் தொகுதியை கட்டமைப்பதற்காகவும், தீவிரமாக மறுஆயுதமயமாவதிலும், அதிவலது மற்றும் பாசிசக் கட்சிகளை வளர்த்தெடுப்பதிலும் தாமே ஈடுபட்டுள்ளன.  

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சியின் விளைவாக ரஷ்யாவிலும் சீனாவிலும் எழுந்த தன்னலக்குழு ஆட்சிகள், அவர்களது பங்கிற்கு, பிற்போக்கு தேசியவாதத்தை கிளறிவிடுவதுடன், ஒருபக்கம் இராணுவ சாகசத்திற்கும், மறுபக்கம் வாஷிங்டனுடனும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுடனும் ஒரு உடன்பாட்டை எட்டிப்பிடிப்பதற்கான விரக்தியடைந்த முயற்சிகளுக்கும் இடையே ஊசலாடுகின்றனர்.

அதேபோல, ஈரானின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சியும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எந்தவொரு பதிலையும் கொண்டிருக்கவில்லை. தற்போது முறிக்கப்பட்டுள்ள அணுசக்தி உடன்படிக்கை கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு சமாதான முயற்சியை மேற்கொள்வதில் அது சமீபத்தில் கண்ட தோல்வியாக இருந்தது. ஈரானிய முதலாளித்துவ வர்க்க சலுகைகளை பாதுகாப்பதற்கு உறுதியளித்து, ஷியா ஜனரஞ்சகவாதம் மற்றும் தேசியவாதத்தை அடிப்படையாக கொண்டு சித்தாந்த ரீதியாக நிறுவிய இஸ்லாமிய குடியரசு, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மத்திய கிழக்கில் வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கு இயல்பிலேயே திறனற்று உள்ளது.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் போரையும் எதிர்ப்பதற்கு, முதலாளித்துவத்தையும், மற்றும் அது வரலாற்று ரீதியாக வேரூன்றியுள்ள காலாவதியாகிப்போன தேசிய அரசு அமைப்பு முறையையும் தூக்கியெறிவதற்கான சக்தி படைத்த சமூக சக்தியை அணிதிரட்டுவது ஒன்று மட்டுமே தேவைப்படுகிறது: அதுதான் தொழிலாள வர்க்கம்.

உலகெங்கிலுமான வர்க்கப் போராட்ட மீளெழுச்சி —பிரான்சில் மஞ்சள் சீருடையாளர்களின் ஆர்ப்பாட்டங்கள், அல்ஜீரியாவில் நடந்த பெரும் ஆர்ப்பாட்டங்கள், மெக்சிக்கோவில் மத்தாமோரோஸ் தொழிலாளர்கள் செய்த கிளர்ச்சி, மற்றும் அமெரிக்காவில் ஆசிரியர்கள் மற்றும் ஏனையோரின் வேலைநிறுத்தங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதான— ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்கத் தலைமையிலான உலகளாவிய இயக்கத்தின் தோற்றத்திற்கான புறநிலை அடிப்படையை உருவாக்குகியுள்ளது.

அத்தகையதொரு இயக்கம், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகளான ஈரானையும் வெனிசுவேலாவையும், அவற்றுக்கு எதிரான எந்தவொரு மற்றும் அனைத்து போர் தயாரிப்புக்களையும் எதிர்த்தும், மேலும் அவர்கள் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்குவதற்கு போராடியும், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஐயத்திற்கு இடமின்றி அந்நாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

முதலாளித்துவத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் மீதான எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு, இது, முதலாளித்துவ சிக்கன நடவடிக்கை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்துடன் போருக்கு எதிரான போராட்டத்தை ஐக்கியப்படுத்த வேண்டும்.