ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington orders US personnel out of Iraq amid war buildup against Iran

ஈரானுக்கு எதிரான போர் தயாரிப்புக்களுக்கு மத்தியில், ஈராக்கில் இருந்து அமெரிக்க அதிகாரிகளை வெளியேறும் படி வாஷிங்டன் உத்திரவிடுகிறது

By Bill Van Auken 
16 May 2019

பாக்தாத்திலும் மற்றும் ஈராக்கிய குர்திஷ் பிராந்தியத்தின் நடப்பு தலைநகரம் எர்பிலிலும் உள்ள அதன் தூதரகங்களிலிருந்து அவசியமற்ற அனைத்து அமெரிக்க அதிகாரிகளையும் வெளியேறும் படி உத்திரவிட்டதன் மூலம் பாரசீக வளைகுடாப் பகுதியில் வாஷிங்டன் போர் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

"ஈராக்கில் நாங்கள் காண்கின்ற வகையில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால்" அதற்கு பதிலடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார், ஆனால் ஆபத்து என அவர் குறிப்பிடுவது பற்றி எந்த விபரங்களையும் வழங்க மறுத்துவிட்டார்.

ஈரானில் இருந்து பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு அல்லது ஷியைட் போராளிகளில் ஈரானின் "பினாமிகள்" என்று அழைக்கப்படுபவற்றின் அச்சுறுத்தலுக்கு பதிலிறுப்பதற்காக இப்பிராந்தியத்தில் அமெரிக்கா பெருமளவில் இராணுவத்தை கட்டியெழுப்பியுள்ளது. இவற்றில் ISIS க்கு எதிரான போராட்டத்திற்கான ஈராக்கில் உருவாக்கப்பட்ட "மக்கள் அணிதிரட்டல் அலகுகள்", பின்னர் ஈராக்கிய பாதுகாப்புப் படைகளில் ஒருங்கிணைக்கப்பட்டவை, லெபனானில் ஹெஸ்பொல்லா இயக்கமும் யேமனில் ஹூடி போராளிகளும் உள்ளடங்கும்.

“அமெரிக்க நலன்களுக்கு அல்லது அதன் குடிமக்களுக்கு எதிராக ஈரானிய ஆட்சி அல்லது அதன் பினாமிகள் எந்தவொரு தாக்குதலை நடத்தினாலும் அதற்கான ஒரு விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியை அமெரிக்காவில் இருந்து அவர்கள் எதிர்கொள்வர்” என ஒரு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் CNN இற்கு புதன்கிழமை தெரிவித்தார்.

புதன்கிழமை முழுவதும் தூதரகத்தில் இருந்து அமெரிக்க அதிகாரிகளை டைக்ரிஸ் ஆற்றின் மேலாக ஹெலிகாப்டர்கள் பாக்தாத் விமான நிலையத்தில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ தளத்திற்கு -உலகிலேயே மிகப் பெரிய இராணுவ வசதிகள் கொண்டவை - கொண்டு சென்றன என்று பாக்தாத்தில் இருந்தான ஆதாரங்கள் தெரிவித்தன. ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மோசூலை ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றிய பின்னர், பாக்தாத்தில் அணிவகுத்துச் செல்லத் தயாராக இருந்தவேளையில்தான் முன்னர் 2014 இல் இத்தகைய ஒரு வெளியேற்றம் உத்தரவிடப்பட்டது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மத்தியில், ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படுத்தப்பட்ட அமெரிக்க மேலாதிக்க தலையீடான, "Operation Inherent Resolve" (OIR) இன் ஒரு பகுதியாக உயர்மட்ட பிரிட்டிஷ் ஜெனரல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார், இவர், ஈரானிய ஆதரவு பெற்ற போராளிகளிடம் இருந்து மேற்கத்திய சக்திகளுக்கு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று பென்டகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"ஈராக் மற்றும் சிரியாவில் ஈரானிய ஆதரவுப் படைகளிடம் இருந்து அதிகரித்தளவிலான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை," என்று உளவுத்துறை மற்றும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளியான OIR இன் துணை தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்தோபர் கிகா கூறினார். மேலும், "ஈராக்கிலும், சிரியாவிலும் கணிசமான எண்ணிக்கையிலான போராளிகள் குழுக்கள் உள்ளன, இந்த கட்டத்தில் அவர்களில் பலரிடமிருந்து அதிகபட்ச அச்சுறுத்தல்கள் எதுவும் விடுக்கப்படுவதாக நாங்கள் காணவில்லை" என்றும் அவர் கூறினார். உத்தியோகபூர்வமாக, இந்த ஆயுததாரிகள், ISIS ஐ தோற்கடிக்கப் போராடும் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் பக்கம் நிற்பவர்கள். உண்மையில், ஈரானிய செல்வாக்கை எதிர்ப்பதற்கு ஈராக்கில் 5,000 துருப்புக்களையும் சிரியாவில் சுமார் 2,000 துருப்புக்களையும் அமெரிக்கா தயார்நிலையில் வைத்திருக்கிறது.

ஈரானிய கடற்கரைப் பகுதியில், USS ஆபிரகாம் லிங்கன் விமானந்தாங்கிக் கப்பல் தலைமையிலான கடற்படை தாக்குதல் குழு, மற்றும் அணுவாயுத தாக்குதலுக்கு ஏற்ற B-52 ரக விமானங்களை உள்ளடக்கிய ஒரு குண்டுவீச்சு தாக்குதல் படை ஆகியவற்றின் பிரசன்னத்துடன் கூடிய அமெரிக்க போர் கட்டமைப்பு குறித்து வழங்கப்படுகின்ற நியாயப்படுத்துதலை கிகாவின் அறிக்கை குறைத்து மதிப்பிட்டது. இது, அமெரிக்க கடற்படையினர், போர்க்கப்பல்கள் மற்றும் கடற்கரையில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள், அத்துடன் ஒரு Patriot ஏவுகணை பாட்டரி ஆகியவற்றை உள்ளடக்கிய USS Arlington எனும் கடல்வழி தாக்குதல் போர்க்கப்பல் அப்பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டது.

ஈரானுடன் ஒரு முழுப் போரை நிகழ்த்துவதற்கான பகிரங்கமான முன்னேற்பாடாக அந்த பிராந்தியத்திற்கு கிட்டத்தட்ட 120,000 அமெரிக்க துருப்புக்களை கப்பலில் அனுப்பி வைப்பதற்கான போர் திட்டங்களை பென்டகன் வகுத்துள்ளது என சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் ஜெனரலின் அறிக்கை, மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகின்ற அமெரிக்க மத்திய கட்டளையகத்திடம் இருந்து ஒரு அசாதாரண கண்டனத்தை தூண்டியது. கிகாவின் கருத்துக்கள் "உளவுத்துறைக்கு கிடைத்த அடையாளம் காணப்பட்ட நம்பகமான அச்சுறுத்தல்களுக்கு முரண்பட்டவையாக இருந்தன" என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த அறிக்கை, "அச்சுறுத்தல்கள்" பற்றிய விவரங்களை வழங்க மீண்டும் தவறிவிட்டது.

"அவருடைய கருத்துக்கள் தினசரி இராணுவ நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை" என்ற ஜெனரலின் மதிப்பீட்டிற்கு ஆதரவளித்த பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைப்பின் பிரதிபலிப்பு சமமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாத நிலையில், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவது என்பது இரண்டு நோக்கங்களில் ஒன்றை மட்டும் கொண்டிருக்க முடியும். அப்பிராந்தியத்தில் பதட்டங்களை அதிகரிக்கவும் ஈரானுக்கு எதிராக இராணுவ அச்சுறுத்தல்களை அதிகரிக்கவும் இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஈரான் மீதான உடனடி அமெரிக்க இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்புக்களின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என்ற நிலையில், இது, ஈராக்கிற்கு உள்ளே ஈரானிய சார்பு போராளிக் குழுக்களைக் கொண்டு பதிலடி கொடுப்பதற்கான தூண்டுதலாக இருக்கும்.

எவ்வாறாயினும், தூதரகத்தை விட்டு அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்றுவது என்பது அமெரிக்க அரசாங்கத்தின் மற்றொரு ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும், இது ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இடைவிடாது தொடரப்படும் முயற்சி நடவடிக்கை என்பதுடன், அந்த இலக்கை மேலும் எட்டுவதற்கு எந்த சாக்குப்போக்கையும் பயன்படுத்தவும் அது தயாராகவுள்ளது.

இந்த சாக்குப்போக்குகளுக்கு மத்தியில், வார இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates-UAE) கடற்கரையின்(லிருந்து) நான்கு எண்ணெய்க் கப்பல்களுக்கு எதிரான நாசவேலை பற்றிய மர்மமான கூற்றுக்களும் நிலவுகின்றன. போருக்கான கட்டமைப்புக்களில் ஒரு ஒத்தூதும் பிரச்சார அமைப்பாக செயல்படும் அமெரிக்காவின் பெருநிறுவன ஊடகங்கள், ஈரான் மீதான நாசவேலைக்கு கூறப்படும் காரணத்திற்கு அடையாளம் தெரியாத அமெரிக்க இராணுவ அதிகாரிகளை கைகாட்டுகின்றன, அதே நேரத்தில், இந்த கூற்றுகளுக்கான ஆதாரங்களை வழங்கவும் மறுக்கின்றன.

கூறப்படும் நாச வேலை, சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் உட்பட ஈரானில் அமெரிக்க தாக்குதலைத் தூண்டுவதற்கு முயன்றவர்களின், இல்லையென்றால் அமெரிக்காவின் சிறப்புப்படைகளின் வேலை என்று ஈரானிய அதிகாரிகள் மறுத்து கூறியுள்ளனர். வெளியுறவு அமைச்சர் ஜவாத் சரிஃப் அவரது இந்திய சகாவுடன் சேர்ந்து கொண்டு, "நமது பிராந்தியத்தில் நிகழ்த்தப்படும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மற்றும் நாசவேலைகள்" பற்றி அவர்கள் விவாதித்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "பதட்டங்களை அதிகரிக்க இந்த வகையான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள் என முன்பே நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்" என்று அவர் மேலும் கூறினார்.

சவுதி அரேபியாவின் ஆளும் முடியாட்சி அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான சவுதி அராம்கோவின் எண்ணெய் வெளியேற்று நிலையங்களின் மீது நிகழ்த்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து பதட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. யேமனில் உள்ள ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த நடவடிக்கைளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர், இது யேமனுக்கு எதிராக அமெரிக்க தலைமையில் சவுதி அரேபியா நடத்திய இனப்படுகொலை தொடர்ச்சிக்கு பதிலடி கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர், இந்நிகழ்வு சுமார் 80,000 குடிமக்களை பலி கொண்டதுடன், 10 மில்லியன் பேரை பட்டினியின் விளிம்பிற்குள் தள்ளியது.

போர் அச்சுறுத்தலை அங்கீகரிக்கும் விதத்தில், ஈராக்கில், பிராந்திய பதட்டங்கள் அதிகரிப்பதை குறிப்பிட்டு, ஜேர்மனி 160 சிப்பாய்களையும், நெதர்லாந்து 169 சிப்பாய்களையும் கொண்டு நடத்திவந்த இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்துள்ளன. இதேபோன்று, பாரசீக வளைகுடாப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவிலிருந்து தனது போர்க்கப்பலை ஸ்பெயின் திரும்பப் பெற்றது.

அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு மற்றொரு சாத்தியமான சாக்குப்போக்கு ஈரானின் அணுசக்தி திட்டம் ஆகும். ஒராண்டுக்கு முன்னர், ஈரான் மற்றும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய ஆறு வல்லாதிக்க நாடுகளுக்கு இடையில் 2015 இல் எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக இரத்து செய்தது.

ஈரான் அதன் அணுவாயுத திட்டங்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஒத்துப்போகும் ஒரு கடுமையான ஆட்சி என்றாலும், "அதிகபட்ச அழுத்தம்" மிக்கது மற்றும் போருக்கு சமமானது என்று அமெரிக்க அதிகாரிகளால் விவரிக்கப்படும் தண்டனைக்குரிய பொருளாதாரத் தடைகளை அதன் மீது வாஷிங்டன் மீண்டும் திணித்துள்ளது. நாட்டின் எண்ணெய் ஏற்றுமதிகளை பூஜ்ஜியத்திற்குக் குறைப்பதற்கும், ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக பொருளாதார இழப்பு மற்றும் குழப்ப நிலைமைகளை உருவாக்குவதற்கும் பொருளாதார தடைகள் நோக்கம் கொண்டுள்ளன.

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற ஐரோப்பிய சக்திகள் அணுசக்தி உடன்படிக்கையை ஆதரிப்பதாக முறையாக அறிவித்திருந்தாலும், அவர்கள் அமெரிக்க பொருளாதாரத் தடை விதிப்புக்களுக்கு அதிகரித்தளவில் நம்பகமான எதிர்ப்பைக் காட்டத் தவறிவிட்ட நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீடூகளை இயல்பாக்குவதான உடன்படிக்கையின் ஷரத்துக்களில் உறுதியளிக்கப்பட்டுள்ள நன்மைகளை அனுபவிக்க  ஈரான் மறுத்து வருகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானுடனான டாலர் அல்லாத வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலம் அமெரிக்க பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்க (ஒரு வர்த்தக கருவிகளை) வர்த்தக சந்தைகளை ஆதரிக்கும் கருவி (Instrument in Support of Trade Exchanges-INSTEX) ஒன்றை அறிமுகப்படுத்தும் தங்கள் வாக்குறுதிகள் குறித்து ஐரோப்பிய சக்திகளை அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு முயற்சியாக, அதன் அராக் நிலையத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் கனரக நீர் உற்பத்தியை மேற்கொள்வதற்கான அதன் உறுதியளிப்புகளை 60 நாட்களுக்கு தெஹ்ரான் இடைநிறுத்தம் செய்துள்ளது.

தெஹ்ரான் மற்றும் முக்கிய வல்லரசுகளிடையே ஜூலை 2015 ல் கையெழுத்தான கூட்டு விரிவாக்க செயல் திட்டம் (JCPOA) எனும் அணுசக்தி உடன்படிக்கைக்கு ஈரானின் நடவடிக்கைகள் இன்னமும் இணங்கினாலும், ஒரு இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்த வாஷிங்டன் அணுசக்தி திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் அணு ஆயுத ஒப்பந்தத்தை தொடர்வதற்கு ஈரானிய அரசாங்கம் உறுதியாக மறுத்துவிட்டது.

அத்தகைய ஆக்கிரமிப்பு போர் அந்த முழு பிராந்தியத்தை மட்டும் ஒரு இரத்தக்களரியான மோதலுக்குள் இழுத்துவிடும் என்றல்லாமல், அமெரிக்கா மற்றும் அவற்றின் போட்டி அணுசக்தி “வல்லரசு நாடுகளான”, ரஷ்யா மற்றும் சீனாவையும் உள்ளிழுக்கும் ஒரு மூன்றாம் உலகப் போருக்கான முன்னேற்பாடாக அது மாறிவிடக்கூடும்.