ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

One hundred years since the May 4 movement in China

சீனாவில் மே 4 இயக்கத்திற்கு பிந்தைய நூறு ஆண்டுகள்

By Peter Symonds
4 May 2019

இது ஆங்கிலத்தில் இரண்டு பகுதிகளாக பிரசுரிக்கப்பட்ட தொடரின் முழு வடிவமாகும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக 1919 மே 4 அன்று, 13 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் முதலாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து வேர்சாயில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பெய்ஜிங்கில் இருக்கும் இன்று தியானென்மென் சதுக்கம் என அழைக்கப்படுகின்ற பகுதியில் ஒன்றுதிரண்டனர். பிரதான சக்திகளுக்கு இடையிலான ஏமாற்றும் பேரம்பேசலில் ஷாங்டோங் (Shandong) மாகாணத்தை ஜப்பானுக்குக் கையளித்து, சீனாவின் மீது திணிக்கப்பட்ட சமனற்ற உடன்படிக்கைகளை தொடர்ந்து பராமரித்ததில் அவர்கள் ஆவேசமடைந்தனர். இந்த உடன்படிக்கைகள் பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் சர்வதேச “விட்டுக்கொடுப்புகளை” அல்லது, ஷங்காய் போன்ற நகரங்களில் அவர்களுக்கான பிராந்தியங்களை உருவாக்கியிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டமானது முந்தைய பகலிலும் இரவிலும் இடைவிடாது நடந்த தீவிர விவாதங்கள் மற்றும் கூட்டங்களின் விளைபொருளாய் இருந்தது. இவை, பேச்சுவார்த்தை முடிவுக்கு பெய்ஜிங்கில் இருந்த ஒரு போர்ப்பிரபுவின் அரசாங்கம் உடன்படுவது குறித்த செய்தி கிட்டியதைத் தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்கொண்டுவந்தன. மாணவர்கள் “பீக்கிங்கின் அனைத்து மாணவர் அறிக்கை” என்ற ஒரு உணர்ச்சிபூர்வமான அறிக்கையின் பிரதிகளை விநியோகித்தனர், அந்த அறிக்கை “வெளியுறவு விவகாரத்தில் நமது இறையாண்மை பாதுகாக்கப்படவும் தாயகத்தில் துரோகிகள் அகற்றப்படவும்” தேசம் எழுந்து நிற்க அழைப்புவிடுத்தது:

சீனாவின் வாழ்வா சாவா போராட்டத்தில் அதற்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இதுவாகும். இன்று நாம் எங்கள் சக தேசமக்கள் சகிதமாய் இரண்டு உறுதிப்பிரமாணங்களை எடுத்துக் கொள்கிறோம்: (1) சீனாவின் நிலப்பகுதி கைப்பற்றப்படலாம், ஆனால் அது கையளிக்கப்பட முடியாது; (2) சீன மக்கள் படுகொலை செய்யப்படலாம், ஆனால் அவர்கள் சரணடைய மாட்டார்கள். நமது நாடு அழித்தொழிக்கப்பட இருக்கிறது. சகோதரர்களே பொங்கியெழுங்கள்! [1]

“சீனாவுக்கு மரண தண்டனை [பாரிஸ் மாநாட்டில்] அளிக்கப்பட்டிருக்கிறது”, “அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட மறு”, “ஜப்பானியப் பொருட்களைப் புறக்கணி”, “சீனா சீனர்களுக்கே” போன்ற ஏகாதிபத்திய-எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபடி மாணவர்கள் வீதிகளின் வழியே ஊர்வலம் சென்றனர். அரசாங்க அமைச்சர்களாக இருந்த ஜப்பானிய-ஆதரவு “துரோகிகளை” அவர்கள் கண்டனம் செய்தனர்.


பெய்ஜிங் மாணவர்கள் மே 4 அன்று வேர்சாய் உடன்படிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

பொதுமக்களின் பிரதிபலிப்பை ஒரு அறிக்கை இவ்வாறு எடுத்துரைக்கிறது:

பெய்ஜிங் மக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் பெரிதும் கவரப்பட்டனர். பார்வையாளர்களில் பலரும் வீதிகளில் அமைதியாக நின்றபடி உணர்ச்சி மேலிட அழுதனர், மாணவர்கள் எழுப்பும் முழக்கங்களை கவனமாகக் கேட்டனர், அந்த அளவுக்கு அவர்கள் போராட்டத்தால் நெகிழ்ந்திருந்தனர். மேற்கத்திய பார்வையாளர்களில் பலரும் எழுந்து நின்று அல்லது தங்களது தொப்பியை எடுத்து மரியாதை செலுத்தினர்.... சாரணர் மாணவர்கள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து கொண்டு அவர்களும் துண்டறிக்கைகளை விநியோகித்தனர். [2]

சீனாவுக்கு நீதி வேண்டி வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் விண்ணப்பம் செய்ய லகேஷன் குடியிருப்பு பகுதிக்குள் (Legation Quarter) நுழைவதில் இருந்து போலிசால் தடுக்கப்பட்டு விட்ட நிலையில், மாணவர்கள் ஜப்பானிய-ஆதரவு “துரோகிகள்” மூவரில் ஒருவரது வீட்டை நோக்கி முன்னேறினர். வீட்டிற்குள் நுழைந்த மாணவர்கள் உள்ளே இருந்த பலரையும் அடித்து துவைத்தனர். போலிசுடன் மோதல்கள் வெடித்தன. ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர், அதில் ஒருவர் பின்னர் இறந்து போனார், 32 பேர் கைது செய்யப்பட்டு போலிஸ் தலைமையகத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பரந்து விரிந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்திற்கு தூண்டுதலளித்தது, ஆரம்பத்தில் மாணவர்கள் மட்டும் இடம்பெற்ற இந்த இயக்கம், பின் தொழிலாள வர்க்கத்தில் இருந்தும், புத்திஜீவிகள், வியாபாரிகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளது அடுக்குகளில் இருந்தும் ஆட்களை ஈர்த்தது; வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஜப்பானியப் பொருட்களின் புறக்கணிப்புக்கு இது தூண்டியது. போலிஸ் ஒடுக்குமுறையும் கைதுகளும் எதிர்ப்பு இன்னும் அதிகமாவதற்கே தூண்டுதலாய் அமைந்தன.

துண்டறிக்கைகளை விநியோகம் செய்தும், ஜப்பானியப் பொருட்களுக்கு பதிலாக சீனப் பொருட்களை வாங்கும்படி மக்களை வலியுறுத்தியபடியும் வீதிகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மாணவர் குழுக்களின் மீது ஜூன் ஆரம்பத்தில் அரசாங்கம் ஒரு பாரிய ஒடுக்குமுறையைத் தொடுத்தது. ஜூன் 2 அன்றான முதல் கைதுகளுக்குப் பின்னர், அடுத்தடுத்த நாட்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கினர், இவர்களில் சிலர் சிறைவாசத்திற்குத் தாங்கள் தயார் என்பதை உணர்த்தும் விதமாக முதுகில் படுக்கைகளை சுமந்தபடி வந்தனர். ஜூன் 4 முடிவதற்கு முன்பாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் துருப்புகளால் சூழப்பட்ட நிலையில் இருந்த பீக்கிங் பல்கலைக்கழகத்தின் கட்டிடங்களது தற்காலிக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.


மே 4 அன்று ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜூன் ஆரம்பத்திலான பாரிய கைதுகள் சீனா முழுமையாக ஒரு சீற்ற உணர்வை உண்டுபண்ணியது. ஜூன் 5 அன்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 13,000 மாணவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஒரு வணிக வேலைநிறுத்தம் சீனாவின் பிரதான தொழிற்மையமான ஷங்காயை முடக்கிப் போட்டது. அடுத்துவந்த நாட்களில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் நகர் முழுமையும் பரவின, சுமார் 90,000 தொழிலாளர்கள் வரை இதில் பங்குபெற்றதாக மதிப்பிடப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் ஷங்காயில் இருந்து பிற முக்கிய நகரங்களுக்கும் விரிந்து நீண்டது.

வேலைநிறுத்த இயக்கத்தால் மண்டியிடச் செய்யப்பட்ட பெய்ஜிங் அரசாங்கம் முதலில் மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றது. போலிசும் துருப்புகளும் வளாகங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்டனர், ஆனால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வளாக சிறைகளில் இருந்து வெளியேறுவதற்கு மாணவர்கள் மறுத்து விட்டனர். அரசாங்கமும் போலிசும் மன்னிப்புக் கோரத் தள்ளப்பட்டனர். இறுதியாக, மாணவர்கள் ஜூன் 8 அன்று, “அதிர்வேட்டுகளது முழக்கத்தின் மத்தியிலும் உற்சாகமான பாரிய மக்கள்திரளின் முன்பும் சக மாணவர்கள் மற்றும் குடிமக்களது வரவேற்புக்கு இடையிலும்” [3] தத்தமது சிறைகளில் இருந்து வெளியே வந்தனர்.

ஜூன் 10 அன்று, வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்த நிலையில், ஜப்பானிய-ஆதரவு அமைச்சர்கள் மூவரின் இராஜினாமாவை அரசாங்கம் அறிவித்தது. ஆயினும் சீனா, வேர்சாய் உடன்படிக்கையில் கையெழுத்திடக்கூடாது என்ற முக்கியமான கோரிக்கை பூர்த்தியடையவில்லை. ஜூன் 24 அன்று, பெரும் சக்திகளிடமான அதன் ஆட்சேபம் தோல்வியடைந்தபோதும், ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு சீனப் பிரதிநிதிக் குழுவிடம் அரசாங்கம் உத்தரவிட்டது. கோபமான போராட்டம் பிரவாகம் எடுத்ததற்கு முகம்கொடுத்த நிலையில், ஜனாதிபதி அடுத்த நாளே தனது முடிவை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்தம் பெற்றார். ஜூன் 28 அன்று, ஜேர்மனியுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடுவதில் முக்கிய சக்திகளுடன் இணைந்து கொள்ள சீனாவின் பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர்.


மே 4 ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பின்னர்

இந்த ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் ஒரு பரந்த புத்திஜீவித மற்றும் அரசியல் கொந்தளிப்பின் பகுதியாக இருந்தன. மே 4 அன்று வீதிக்கு வந்த மாணவர்கள், சீனாவின் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சமூகத்தின் அத்தனை அம்சங்களையும் ஜனநாயக இலட்சியங்கள் மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலான விஞ்ஞான முன்னேற்றங்களது அடிப்படையில் நவீனப்படுத்துவது அவசியம் என்று திட்டவட்டம் செய்த புதிய கலாச்சார இயக்கத்தின் சிந்தனைகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருந்தனர்.

பாரம்பரிய சீன அறம், பழக்கவழக்கங்கள், இலக்கிய வடிவங்கள், மெய்யியல் மற்றும் சமூக மற்றும் அரசியல் ஸ்தாபகங்கள் அத்தனைக்கும் எதிரான ஒரு கிளர்ச்சி அதில் சம்பந்தப்பட்டிருந்தது. பாதி-அரசு மதம் ஒன்றின் அந்தஸ்தைக் கொண்டிருந்த கெட்டிப்பட்ட கன்ஃபூசியனிசம் (Confucianism) பிரதான குறியாக இருந்தது. ஆளப்படுபவர்கள் ஆள்பவர்களுக்கும், பெண்கள் தத்தமது கணவன்மார்களுக்கும் பிள்ளைகள் தங்கள் தந்தைகளுக்கும் கேள்விகளற்று கீழ்ப்படிவதன் மீது வலியுறுத்தியதன் மூலம் சீனாவின் உயரடுக்கினருக்குத் தேவையான சித்தாந்த அடிப்படையை அது வழங்கி வந்தது.

புதிய கலாச்சார இயக்கம் வெவ்வேறான பல போக்குகளை கொண்டிருந்தது. ஆயினும், மே-ஜூன் ஆர்ப்பாட்ட இயக்கத்தை ஒட்டி, புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களது ஒரு அடுக்கு சோசலிசத்தை நோக்கி, அத்துடன் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியின் தாக்கத்தின் கீழ், மார்க்சிசம் மற்றும் போல்ஷிவிசத்தை நோக்கித் தீர்மானகரமாகத் திரும்பியது.

முதல் பெய்ஜிங் ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு சற்று அதிகமான காலத்திற்குப் பின்னர், 1921 ஜூலையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்தாபக உறுப்பினர்களில் பலரும் மே 4 இயக்கத்தினால் தீவிரப்பட்ட இளைஞர்களாய் இருந்தனர். 40களின் ஆரம்ப வயதில் இருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவரான சென் துஷியோ (Chen Duxiu), ஒரு புரட்சியாளராகவும் புதிய கலாச்சார இயக்கத்தின் தலைமை புத்திஜீவித் தலைவராகவும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் மரியாதை பெற்றுத் திகழ்ந்தார்.

ஒரு நூறு ஆண்டுகளாகி விட்டது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி  எந்த அடித்தளங்களின் மீது ஸ்தாபிக்கப்பட்டதோ அந்த சோசலிச மற்றும் சர்வதேசிய கோட்பாடுகளை வெகுகாலத்திற்கு முன்பே கைவிட்டு விட்டிருந்ததோடு, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எந்த மூச்சுத்திணறடிக்கும் சீனப் பாரம்பரியங்களுக்கு எதிராக புத்திஜீவிகளும் மாணவர்களும் கலகம் செய்திருந்தனரோ அவற்றுக்கு மீண்டும் உயிர்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி  அதிகாரத்துவமானது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் எந்த விமர்சனத்தையும் அல்லது சுதந்திர சிந்தனையையும் ஒடுக்குவதற்கு அதன் போலிஸ் அரசு எந்திரத்தைப் பயன்படுத்துகிறது, அத்துடன் தொழிலாளர்’ போராட்டங்களை ஆதரித்த “குற்ற”த்திற்காக பெய்ஜிங் பல்கலைக்கழகம் மற்றும் பிற வளாகங்களில் இருந்தான மாணவர்களை சிறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மே 4 ஐ அனுசரிக்கும் விதமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஒழுங்கமைக்கப்படுகின்ற எந்த விழாக்களும், எல்லாவற்றுக்கும் மேல், அத்தினம் இன்றைய இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காய் கொண்டிருக்கும் இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை மூடிமறைக்கின்றதும் மறுக்கின்றதுமான விதத்திலேயே வடிவமைக்கப்பட்டதாக இருக்கும்.

மே 4 இயக்கத்தின் வேர்கள்

சன் யாட்-சென் (Sun Yat-sen) தலைமையில் நடைபெற்ற 1911 சீனப் புரட்சியின் தோல்வியிலேயே மே 4 இயக்கத்தின் வேர்கள் அமைந்திருக்கின்றன. இற்றுப் போயிருந்த மஞ்சு வம்சத்தை இந்த இயக்கம் தூக்கிவீசியது என்றபோதும் அதன் சொந்த இலக்குகளான தேசிய ஐக்கியம் மற்றும் விடுதலை, ஒரு ஜனநாயகக் குடியரசு மற்றும் விவசாயிகளுக்கு நிலம் உள்ளிட மக்களுக்கான சமூக நல உதவிகள் ஆகியவற்றை அமல்படுத்த முடியவில்லை.


சன் யாட்-சென்

சன் யாட்-சென் பிரதிநிதித்துவம் செய்த வர்க்கம், —உதயமாகி வந்த சீன முதலாளித்துவம்— கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்களுடன் கட்டப்பட்டும் உலக அரங்கில் ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிந்ததாகவும் அது இருந்த நிலையில், அதன் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இயல்பிலேயே திறனற்று இருந்ததையே இம்முடிவு விளங்கப்படுத்தியது.

ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாய் நெருக்கடிகளால் நொருங்கிக் கிடந்த சீன சமூகம், வெளிநாட்டு படையெடுப்புகளின் அரிக்கும் பாதிப்பினால் மேலும் சிக்கலடையச் செய்யப்பட்டிருந்தது. பிரிட்டனும் பிரான்சும் சீனாவுக்குள் அவை பெருமளவிலான அபின் விற்பனை செய்வதை —அவை, தமக்குச் சாதகமான விதத்தில் ஒரு நிரந்தர வர்த்தக உபரியைக் கொண்டிருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது— தடுக்க முயன்ற தேய்நிலையில் இருந்த மஞ்சு வம்சத்திற்கு எதிராக இரண்டு அபின் யுத்தங்களை 1842 மற்றும் 1858 இல் நடத்தின. ஐரோப்பிய சக்திகளும் துறைமுக உடன்படிக்கைகளையும் “விட்டுக்கொடுப்பு”களையும் உருவாக்கிக்கொண்டன, அவை விஷேட பிராந்தியங்களாக பயன்படுத்தப்பட்டதுடன், வெளிநாட்டினர் சீன சட்டத்தில் இருந்தும் சீன வரிகள் செலுத்துவதில் இருந்தும் விலக்குப் பெற்றனர்.

பிரதானமாக, மக்களின் மிகப் பெரும்பகுதியாக இருந்ததும் சீனாவின் பொருளாதாரத்திற்கு அடியாதாரமாக இருந்ததுமான விவசாயிகளின் மீது, புதிய வரிச்சுமைகளை திணித்ததுதான் இந்த தோல்விகளுக்கும் வெளிநாட்டு கப்பங்களுக்கும் மஞ்சு ஆட்சி அவை காட்டிய பதிலிறுப்பாக இருந்தது. நாட்டுப்புறங்களின் சீரழிவு மலிவான வெளிநாட்டுப் பொருட்களது வெள்ளத்தால் மேலும் சிக்கலாக்கப்பட்டது, இவை உள்ளூர் கைவினைத் தொழில்களை கிட்டத்தட்ட அழித்தன. ஒடுக்குமுறையான நிலைமைகள் கிராமப்புற கலகங்களைத் தூண்டின, 1850 இல் ஒரு தெளிவற்ற நவ-கிறிஸ்தவ வழிபாட்டுப்பழக்கத்தில் இருந்து வளர்ந்து இறுதியில் 1865 இல் வெளிநாட்டு துருப்புகளின் உதவியோடு தான் நசுக்கப்பட முடிந்த தைபிங் கலகமும் (Taiping Rebellion) இதில் அடங்கும்.

1895 இல் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் கரங்களில் சீனா தோல்வி கண்டது ஒரு அதிர்ச்சியாக வந்தடைந்தது. வெளிநாட்டுத் துண்டாடல்களையும் நாட்டின் அடிமைப்படலையும் எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்த விவாதத்தை அது தீவிரப்படுத்தியது. ஆயினும் இற்றுப்போயிருந்த மஞ்சு வம்சத்தை சீர்திருத்துவதற்கும் வழக்கொழிந்த அரசாங்க எந்திரமுறையை உருமாற்றுவதற்குமான முயற்சிகள் பலனளிக்கவில்லை. 1898 இல், இளம் சக்கரவர்த்தியான குவாங்சுவின் கீழ் கொண்டுவரப்பட்ட “நூறு நாட்கள்” என்று அழைக்கப்பட்ட சீர்திருத்தம், டோவாகர் பேரரசி சிக்ஸியால் திடீரென முடிவுக்குக் கொண்டுவராப்பட்டது. அவர் தனது மருமகன் குவாங்சுவை சிறைப்பிடித்ததோடு அவரது சீர்திருத்த ஆலோசகர்களை தூக்கிலிட்டார் அல்லது சிறையிலடைத்தார்.


1900 இல் பாக்ஸர் போராளிகள்

மஞ்சு வம்சத்தின் நாட்கள் எண்ணப்பட்டன. நூற்றாண்டின் திருப்பத்தில், டோவாகர் பேரரசி ஒரு புதிய கலகத்தை, Society of the Righteous and Harmonious Fists என்ற சீன இரகசிய அமைப்பு ஒன்றின் மூலமாக கைப்புரட்டு செய்து, அதனை வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக செலுத்துவதற்கு முயன்றார். பாக்ஸர் கலகம் (Boxer Rebellion) வெளிநாட்டு துருப்புகளால் ஒடுக்கப்பட்டு வெற்றிபெற்றவர்கள் மூலம் சீனா மீது புதிய கட்டளைகள் விதிக்கப்பட்டன.

மஞ்சு வம்சத்தை சீர்திருத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் தோல்விகண்டதையொட்டி சன் யாட்-சென் முன்னணிக்கு வந்தார். புரட்சியை அவர் ஆலோசனையளித்த போதிலும், ஒரு வெகுஜன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான எந்த முயற்சியிலும் அவர் இறங்கவில்லை, சிறு ஆயுதக் கவிழ்ப்புகள் கொண்ட சதி நடவடிக்கைகள் அல்லது தனித்தனி மஞ்சு அதிகாரிகளுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டார்.

1911 இல், மஞ்சு வம்சம் கிட்டத்தட்ட உள்புறமாக நிலைகுலைந்தது. பெரும் சக்திகள் பல தசாப்தங்களாக சூறையாடியதன் பின்னர் அரசகுல அரசாங்கம் திவால்நிலையின் விளிம்பில் நின்றது. ஹாங்காங், தைவான் போன்ற காலனிகள் மற்றும் பிராந்தியம்-கடந்த “விட்டுக்கொடுப்புகள்” ஆகியவற்றின் வடிவில் சீனப் பிராந்தியங்கள் வெளிநாடுகளுடன் இணைக்கப்பட்டுக் கொண்டதன் ஒரு விளைவாக, அரசியல்ரீதியாக, இது முற்றிலும் மதிப்பிழந்து கிடந்தது.

மஞ்சு வம்சம் இறுதியாக அரசியல்சட்ட சீர்திருத்தத்தை வாக்குறுதியளித்தபோது, மிகவும் காலம் கடந்து விட்டிருந்தது. சீன முதலாளித்துவத்தின், அதிகாரத்துவத்தின் மற்றும் இராணுவத்தின் கணிசமான பிரிவுகள் சன் யாட்-சென்னை நோக்கித் திரும்பி விட்டிருந்தன. 1911 அக்டோபர் 10 அன்று, ஹூபேய் (Hubei) மாகாணத்தில் உள்ள வூசாங் (Wuchang) நகரில் ஆயிரக்கணக்கான துருப்புகள் ஒரு கலகத்தை நடத்தி ஒரு குடியரசைப் பிரகடனம் செய்தன. இந்தக் கலகம் பல சீன மாகாணங்களுக்கும் துரிதமாகப் பரவியது, ஆயினும் உண்மையான வெகுஜன இயக்கம் ஏதும் இல்லாதிருந்தமையால் அதில் கலந்துகொண்ட மக்களின் நலன்கள் மீது கைவைக்கப்படாமலேயே விட்டுவிடப்பட்டிருந்தது.

தளர்வானதொரு கூட்டாட்சியுடைய “சீனக் குடியரசின்” இடைக்கால ஜனாதிபதியாக சன் யாட்-சென் பிரகடனம் செய்யப்பட்டார், ஆனால் தனக்கென்று எந்த கணிசமான சமூக அடித்தளமும் இல்லாத நிலையில், அவர் பழைய இராணுவ-அதிகாரத்துவ எந்திரத்துடன் சமரசப்பட்டார். ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்தான அழுத்தத்தின் கீழ், ஜனாதிபதி பதவியை மஞ்சு வம்சத்தின் கடைசிப் பிரதமரான யுவான் ஷிகாய் (Yuan Shikai) இடம் ஒப்படைத்தார், அவர் அரசியல்சட்டத்தை அகற்றி நாடாளுமன்றத்தையும் கலைத்தார்.

புதிய கலாச்சார இயக்கம்

1915 மே மாதத்தில், யுவானின் அரசாங்கம், மஞ்சூரியா மற்றும் உள் மங்கோலியா உள்ளிட சீனாவின் பெரும்பகுதிகளில் ஜப்பானுக்கு பலன்தரும் கட்டுப்பாட்டை வழங்கிய ஜப்பானின் அவமதிப்பான 21 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் மூலம், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பின் அலை ஒன்று தூண்டப்பட்டது. 1915 டிசம்பரில், யுவான் தனது கைப்பாவை தேசிய மக்கள் அவை மூலமாக சீனாவின் பேரரசராக தன்னைத் தானே “தேர்ந்தெடுத்து” கொண்டபோது, மக்கள் வெறுப்பு தீவிரப்படவே செய்தது.

சன் யாட்-சென் தலைமையின் கீழ் இருந்த சீனாவின் தெற்குப் பிராந்தியங்களில் பலவும் பெய்ஜிங் அரசாங்கத்தில் இருந்து தங்கள் விடுதலையை பிரகடனம் செய்தன, தனது ஆதரவாளர்கள் கலைந்துபோன நிலையில், யுவான், முடியாட்சியை கைவிடும் தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார். 1916 ஜூனில் அவர் இறந்தபோது, போட்டி வெளிநாட்டு சக்திகளால் ஆதரவளிக்கப்படும் போட்டி போர்ப்பிரபுக்கள் மூலமாக ஆட்சி செய்யப்படும் ஒரு பிளவுபட்ட சீனாவை அவர் விட்டுச் சென்றார்.


சென் துஷியோ (இடது)

1915 இல், நிலவிய அரசியல் குழப்பத்திற்கு மத்தியில், 1911 புரட்சியிலும் 1913 இல் யுவான் ஆட்சிக்கு எதிரான ஒரு கலகத்திலும் செயலூக்கத்துடன் இயங்கிய சென் துஷியோ ஜப்பானில் நாடு கடந்து வாழ்ந்த நிலையில் இருந்து ஷங்காய் திரும்பினார். புதிய இளைஞர் (New Youth) என்னும் இதழை அவர் ஸ்தாபித்தார், இது மாணவர்களின் புதிய தலைமுறையை ஈர்க்கும் ஒரு சக்திவாய்ந்த காந்தமாக நிரூபணமாகியது. மக்கள் பெரும்பாலும் அணுகலின்றி இருந்த சீன மொழியின் அறிஞர் பெருமக்களது செவ்வியல் மொழிவடிவத்தைக் காட்டிலும் பெருவாரி மக்கள் பேச்சுவழக்கு மொழிவடிவத்தில் வெளிவந்த முன்னோடியான வெளியீடுகளில் ஒன்றாக அது இருந்தது.

புதிய இளைஞர் உரத்த மற்றும் தெளிவானதொரு அழைப்பை ஒலித்தது. “கன்ஃபூசியனிசத்தை, ஆஸ்தி மற்றும் சடங்குகளின் பழைய பாரம்பரியத்தை, பழைய அறம் மற்றும் பழைய அரசியலை... பழைய கற்றலை மற்றும் பழைய இலக்கியத்தை எதிர்த்துப் போராடுவது” புதிய தலைமுறையின் பணி என்று சென் துஷியோ பிரகடனம் செய்தார். திரு.கன்ஃபூசியஸ் திரு.ஜனநாயகத்தைக் கொண்டும் திரு.அறிவியலைக் கொண்டும் பிரதியிடப்பட வேண்டும் என்று சென் துஷியோ அறிவித்தார்.

தைபிங் மற்றும் பாக்ஸர் கலகங்கள் உள்ளிட சீனாவில் பரந்தளவிலான கிராமப்புற கலகங்கள், பெரும்பாலும் மூடநம்பிக்கை, மதரீதியான பழக்கங்கள் மற்றும் இரகசிய சமூகங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. சன் யாட்-சென் ஒரு ஜனநாயகக் குடியரசின் இலட்சியங்களைத் தழுவிக் கொண்டிருந்தார், எனினும் அவர் மஞ்சு, அல்லது மஞ்சூரியன் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஹான் (Han) சீன இனவாதத்தை சுரண்டிக் கொண்டார்.

ஆயினும், சென் துஷியோ தனது புத்திஜீவித உத்வேகத்தை, ஐரோப்பிய அறிவொளி இயக்கத்தில் இருந்தும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த 18 ஆம் நூற்றாண்டுப் புரட்சிகளில் பொதிந்திருந்த ஜனநாயகப் பாரம்பரியங்களிடம் இருந்துமே ஈர்த்துக் கொண்டார். 1915 இல் புதிய இளைஞர் இல் அவர் எழுதினார்:

சமூக முன்னேற்றத்திற்கு நாம் நம்பிக்கை கொள்ளத் தொடங்கும் முன்பாக, பழைய தப்பெண்ணங்களை, பழைய விதமாக விடயங்களில் நம்பிக்கை வைப்பதை,  நாம் உடைத்து நொருக்கியாக வேண்டும். நமது பழைய வழிகளை நாம் தூக்கிப்போட வேண்டும். வரலாற்றின், பழைய மற்றும் புதிய, மாபெரும் சிந்தனையாளர்களின் சிந்தனைகளை, நமது சொந்த அனுபவத்தைக் கொண்டு, நாம் ஒன்றுபடுத்த வேண்டும், அரசியலில், அறப்பண்பில், மற்றும் பொருளாதார வாழ்வில் புதிய சிந்தனைகளை கட்டியெழுப்ப வேண்டும்.[4]

ஹரோல்ட் ஐசக்ஸ் (Harold Isaacs), சீனப் புரட்சியின் துன்பியல் என்ற அவருடைய பெரும் செல்வாக்கு கொண்ட படைப்பில், இளைஞர்களுக்கான சென் துஷியோவின் விண்ணப்பத்தை, 1919 ஆர்ப்பாட்ட மற்றும் வேலைநிறுத்த இயக்கத்துடன் தொடங்கி, 1925 இல் தேசிய அளவிலான புரட்சிகர எழுச்சிக்கு இட்டுச்சென்று, 1927 இல் துன்பியல்ரீதியாக காட்டிக்கொடுக்கப்பட்டதில் முடிந்த அரசியல் எழுச்சிகள் மற்றும் கொந்தளிப்பைக் கொண்ட “இரண்டாம் சீனப் புரட்சி சகாப்தத்திற்கான தொடக்க அறிக்கை” என்று வருணித்தார். புதிய இளைஞர் இதழின் தாக்கத்தை ஐசக்ஸ் விளக்கினார்:

சென் துஷியோவின் இதழ் நாட்டில் இருந்த ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியின் மாணவர்களாலும் ஆர்வத்துடன் பற்றிக் கொள்ளப்பட்டது. அது பிரசுரத்திற்கு வந்தபோது ஒரு மாணவர் எழுதினார், ’அமைதியற்ற ஒரு கனவின் மத்தியில் எங்களை தட்டியெழுப்பிய ஒரு இடி முழக்கமாக அது எங்களிடம் வந்துசேர்ந்தது... இந்த முதல் இதழ் எத்தனை முறை மறுபிரசுரம் கண்டது என்பது எனக்குத் தெரியாது, ஆனால் 200,000க்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்’. இது இளைஞர்களின் ஊக்கமளிக்கும் மரபுஎதிர்ப்பிற்கு உரமூட்டியது. மக்களின் அத்தனை வர்க்கங்களிலும் வியாபித்திருந்த அசவுகரிய மற்றும் அமைதியில்லாத மனோநிலைக்கு இது வழிகாட்டியது. ஒரு உடனடியான பதிலிறுப்பைத் தட்டியெழுப்பிய ஒரு நடவடிக்கை அழைப்பாக அது இருந்தது. [5]


லி டாசோவ்

1916 இன் பின்பகுதியில், பெருகும் மக்கள் எதிர்ப்பிற்கு முகம்கொடுத்த நிலையில், அரசாங்கம் கவனம்பெற்ற தாராளவாத கல்வியாளரான காய் யுவான்பேய் ஐ பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் சான்சலராக நியமித்தது. காய் யுவான்பேய் அந்த பல்கலைக்கழகத்தை பழமைவாத பாரம்பரியத்தின் ஒரு கோட்டையாக இருந்ததில் இருந்து முற்போக்கு புத்திஜீவித சிந்தனை மற்றும் விவாதத்தின் ஒரு விளைநிலமாக உருமாற்றினார். அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில், அவர் பலகலைக்கழகத்தின் முதுநிலை பள்ளிக்கான துறைத்தலைவராக சென் இனை கொண்டுவந்தார். லி டாசோவ் உள்ளிட்ட மற்ற புத்திஜீவிதத் தலைவர்களும் அவருடன் இணைந்து கொண்டனர், 1918 பிப்ரவரியில் தலைமை நூலகராக நியமிக்கப்பட்ட லி டாசோவ், சென் துஷியோ உடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். 25 வயதான மாவோ சேதுங். லி டாசோவ் இன் உதவியாளர்களில் ஒருவராய் இருந்தார்.

சென் துஷியோவும் லி டாசோவ்வும் வளர்த்தெடுத்த மாணவர்களின் ஒரு புதிய குழு புதிய அலையெழுச்சி (New Tide) என்ற தமது சொந்த மாத இதழை ஆரம்பித்தனர், இது 1919 ஜனவரியில் முதன்முதலில் வெளிவந்தது. மே 4 அன்று வெடித்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிய பலர் புகழ்பெற்ற மாணவர் தலைவர்களாய் ஆகவிருந்தனர். புதிய அலையெழுச்சி குழுக்கள் பல்வேறு புத்திஜீவித நீரோட்டங்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டன என்றபோதும் ரஷ்யப் புரட்சியும் ஏற்கனவே தன்னை உணரச் செய்திருந்தது. முதலாவது பதிப்பில் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவரான லோ சியா-லூன் (Lo Chia-lun), 1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சி இருபதாம் நூற்றாண்டின் புதிய உலக அலையெழுச்சி என்று அறிவித்தார்.

1918 நவம்பரில் முதலாம் உலகப் போர் முடிந்ததும், அத்தனை கண்களும் ஜேர்மனியுடனான சமாதான உடன்பாட்டின் ஷரத்துகளை தீர்மானிக்கவிருந்த வேர்சைய் சமாதான மாநாட்டின் மீது பதிந்தன. போரின் முதலாவது ஆண்டில், 99 வருட குத்தகையில் 1898 முதலாக ஜேர்மனி கொண்டிருந்த ஷாங்டோங் மாகாணத்தை அதனிடம் இருந்து ஜப்பான் கைப்பற்றியது. ஷாங்டோங் ஐ நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, 1915 மேயில் பெய்ஜிங் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட 21 கோரிக்கைகளில் கோடிட்டுக் காட்டியிருந்தவாறாக அதன் பிரசன்னத்தை நீடிப்பதற்கும் ஜப்பான் விரும்பியது என்பதை பாரிஸில் இருந்த ஜப்பானின் பிரதிநிதிகள் தெளிவாக்கினர்.

வெற்றி பெற்ற நேச நாடுகளில் ஒன்றாக சீனாவுக்கும் அந்த மேசையில் ஒரு இடம் இருந்தது. சீனத் தொழிலாளர் படையின் பகுதியாக குறைந்தபட்சம் 140,000 சீனத் தொழிலாளர்கள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு போர் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 இற்கு மேலாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

1918 நவம்பர் 17 அன்று, போர் முடிந்ததை கொண்டாடும் விதமாக பெய்ஜிங்கில் சுமார் 60,000 பேர் கலந்து கொண்ட ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேசநாடுகள் கூட்டணி, கொடுங்கோலாட்சிக்கு எதிராக ஜனநாயகத்தினை பிரதிநிதித்துவம் செய்ததாகவும் ஆகவே ஷாங்டோங்கை மறுபடியும் சீனாவிடம் கொடுத்து விடும் என்றுமான பரவலான நம்பிக்கையை கூட்டத்தின் உரைகள் பிரதிபலித்தன. ஆனால், 1919 ஜனவரியில் வேர்சாய் சமாதான மாநாடு தொடங்கியபோது, இந்த பிரமைகள் சுக்குநூறாயின. ஷாங்டோங் மீது ஜப்பான் கொண்டுள்ள உரிமையை ஆதரிப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஜப்பானுடன் இரகசிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டிருந்ததாக ஜப்பான் அறிவித்தது.


வூட்ரோ வில்சன்

ஆயினும் அமெரிக்கா நீதி பெற்றுத்தரும் என்ற பெரும் நம்பிக்கைகள் தொடர்ந்து இருந்தன. 1918 ஜனவரி 8 அன்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வழங்கிய உரையில், ஜனாதிபதி வூட்ரோ வில்சன், ஜேர்மனிக்கு எதிராக போரில் அமெரிக்கா நுழைந்தற்கான நோக்கங்களை, 14 புள்ளிகளில், கோடிட்டுக் காட்டினார். இந்த உரையானது, எல்லாவற்றுக்கும் மேல், போரினை  சோசலிசப் புரட்சியின் மூலமாக முடிவு கட்டும்படி சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு போல்ஷிவிக் தலைவர்களான விளாடிமிர் லெனினும் லியோன் ட்ரொட்ஸ்கியும் விடுத்த கோரிக்கைகளை எதிர்ப்பதையே நோக்கமாய் கொண்டிருந்தது.

இரகசிய உடன்படிக்கைகள் ஒழிக்கப்படுவதற்கும், காலனியாதிக்க உரிமைகோரல்களை பூர்விக மக்களினதும், அத்துடன் மிக முக்கியமாக சீனாவின் நிலைப்பாட்டிலிருந்து காலனித்துவ சக்திகளின் நலன்களுக்குத் தக்கவாறு திருத்தம் செய்து கொள்ளப்படுவதற்கும், மற்றும் “பெரிய அரசுகள், சிறிய அரசுகளின் அரசியல் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை” உத்தரவாதம் செய்யக்கூடிய தேசங்களின் சங்கம் ஒன்றுக்கும் வில்சன் அழைப்பு விடுத்தார்.

1919 மே அமைதி மாநாட்டின் முடிவு சீன புத்திஜீவிகள், மாணவர்கள் மற்றும் பரந்த மக்களுக்கு ஒரு பெரும் அடியாக வந்து சேர்ந்தது. அவர்களது கோபம் ஜப்பான் மற்றும் அதன் உடனடிக் கூட்டாளிகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி மீதும் மற்றும் பெய்ஜிங் அரசாங்கத்தில் இருந்த ஜப்பானிய-ஆதரவு அமைச்சர்கள் ஆகியோரின் மீது மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் அதன் ஜனாதிபதி மீதும் பெருகியது. பீக்கிங் பல்கலைக்கழகத்தின் ஒரு பட்டதாரி பின்னாளில் இவ்வாறு நினைவுகூர்ந்தார்:

பாரிஸ் சமாதான மாநாட்டின் செய்தி இறுதியாக எங்களை வந்தடைந்தபோது, நாங்கள் பெரும் அதிர்ச்சியடைந்தோம். வெளிநாடுகள் இப்போதும் சுயநலத்துடனும் இராணுவரீதியாகவுமே நடந்து கொண்டன, அத்துடன் அவை பெரும் பொய்யர்களாய் இருந்தன என்ற உண்மையை உடனே நாங்கள் கண்டு கொண்டோம்... எங்களது அரசாங்கத்திற்கும் எமக்கும் பொதுவான எதுவும் இல்லை, அதை நாங்கள் மிக நன்றாய் தெரிந்திருந்தோம், அதேநேரத்தில், உதாரணத்திற்கு, வூட்ரோ வில்சன் போன்ற மகத்தான தலைவராக சொல்லப்படும் எவரின் கொள்கைகளையும் நாங்கள் இனியும் சார்ந்திருக்க முடியாது என்று தெரிந்து கொண்டோம். எமது மக்களையும் பரிதாபத்திற்குரிய அறியாமையுடனான பரந்த வெகுஜனங்களையும் கண்டபோது, நாங்கள் போராடியாக வேண்டும் என்ற உணர்வு வருவதை எங்களால் தடுக்க முடியவில்லை.[6]

1919 மே 4 அன்று தொடங்கிய போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் முன்னோக்கிய பாதை குறித்த ஒரு அனல்பறக்கும் புத்திஜீவித மற்றும் அரசியல் விவாதமும் இணைந்து வந்தது. தாராளவாதிகள் மற்றும் அராஜகவாதிகள், ஜனநாயகவாதிகள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் பல்வேறு வகையான சோசலிஸ்டுகள் என பல போட்டித் தரப்புகளும் இதில் இருந்தன. மே 4 ஆர்ப்பாட்டத்தை ஒட்டி சீனாவுக்கு வந்த அமெரிக்க மெய்யியலாளரான ஜோன் டுவி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், தனது உரைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக ஒரு ஆதரவாளர் கூட்டத்தை கொண்டிருந்தார். பிரிட்டிஷ் மெய்யியலாளரான பேர்ட்ராண்ட் ரஸ்ஸலும் சீனாவில் உரையாற்ற அழைக்கப்பட்ட பின்னர் ஆதரவாளர்களை வென்றெடுத்திருந்தார், 1920 அக்டோபர் முதலாக கிட்டத்தட்ட ஒரு ஆண்டு அவர் அங்கேயே இருந்தார்.


ஷங்காயில் ஜோன் டுவி (முன் வலது), 1919

எவ்வாறாயினும், சீனாவில் மார்க்சிசம் வலுவான பிரசன்னத்தை கொண்டிருக்கவில்லை. காலனி ஆதிக்கத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்ற சீன புத்திஜீவிகளை ஆக்கிரமிருத்திருந்த பிரச்சினையில் பிளவுபட்டிருந்த இரண்டாம் அகிலத்துடன் மார்க்சிசம் அடையாளப்படுத்தப்பட்டது. அகிலத்தின் 1907 ஸ்ருட்கார்ட் காங்கிரசில் இந்த பிரச்சினை விரிவாக விவாதிக்கப்பட்டபோது, சில பிரதிநிதிகள் ”மஞ்சள் இனம்” (“yellow race”) உள்ளிட்ட பேரினவாத மனோபாவங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தினர். உலகை பங்குபோடுவதற்கும் மறுபிரிப்பு செய்வதற்குமான ஒரு ஏகாதிபத்தியப் போரான முதலாம் உலகப் போரின் வெடிப்பு, இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றதுடன் அநேக கட்சிகளும் தலைவர்களும் தத்தமது சொந்த முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அவர்களது கொள்ளையிடும் போர் நோக்கங்களின் பின்னால் நிலைப்பாடு எடுத்தனர்.

லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி இருவரும், இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்புகளை எதிர்த்ததோடு, காலனி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பையும் காலனி நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டங்களுக்கு ஆதரவையும் ஒரேகுரலில் வெளிப்படுத்தினர். 1917 அக்டோபரில் நடந்த ரஷ்யப் புரட்சியை அடுத்து, அந்தச் செய்தி உலகெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 1919 மார்ச்சில் நடந்த மூன்றாம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டு அறிக்கை அறிவித்தது: “ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் காலனி அடிமைநாடுகளுக்கு: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் நேரமே உங்கள் விடுதலைக்கான நேரமாகவும் இருக்கும்.”

ட்ரொட்ஸ்கி வெளியுறவுத்துறை மக்கள் ஆணையராக (People’s Commissar of Foreign Affairs) இருந்த சமயத்தில், பெரும் சக்திகளின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் பொருட்டு ஜாரிச மற்றும் இடைக்கால அரசாங்கங்களின் இரகசிய உடன்படிக்கைகளை கைப்பற்றி வெளியிட்டது அவரது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாய் இருந்தது. 1919 ஜூலையில், வெளியுறவுத் துறை மக்கள் ஆணையத்தின் சார்பாக, லியோ கரஹான், ஜாரிச ஆட்சிக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்த முந்தைய அத்தனை இரகசிய மற்றும் சமமற்ற உடன்படிக்கைகளையும் ஒழிக்கின்றதும், எந்த இழப்பீடும் இன்றி சீனாவில் ரஷ்யா கொண்டிருந்த உரிமைகோரல்களை விட்டுவிடுவதுமான ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.

அந்த செய்தி இறுதியாக 1920 மார்ச்சில் சீனாவைச் சென்றடைந்தபோது, அது ஒரு ஆழமான தாக்கத்தைக் கொண்டிருந்தது. ஏகாதிபத்திய சக்திகள் சீனாவில் அவை கொண்டிருந்த காலனித்துவ உடைமைகளையும் சூழப்பட்ட பகுதிகளையும் தக்கவைத்துக் கொள்வதற்கு உறுதிபூண்டிருந்த நிலைக்கு முற்றிலும் எதிர்மாறானதாக இச்செய்தி இருந்தது. சுமார் 30 பெரும் அமைப்புகள் சோவியத் அரசாங்கத்திற்கு நன்றியை பகிரங்கமாக வெளிப்படுத்தின. ரஷ்ய தூதரகத்து ஜாரிச அலுவலர்களை தொடர்ந்தும் அங்கீகரித்து வந்த பெய்ஜிங் அரசாங்கம் சோவியத் அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிக்க வேண்டும் என்று அநேக செய்தித்தாள்கள் கோரின.

ரஷ்யப் புரட்சியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த சீன புத்திஜீவிகளில் ஒருவராய் சென் துஷியோவுடன் [Chen Duxiu] நெருங்கி வேலைசெய்த லி டாசோவ் [Li Dazhao] இருந்தார். 1918 இல் புதிய இளைஞர் இதழிலில் வெளியான “போல்ஷிவிசத்தின் வெற்றி” என்ற ஒரு கட்டுரையில், அவர் அக்டோபர் புரட்சியை ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று பாராட்டினார்:

போல்ஷிவிசம் என்ற வார்த்தை ரஷ்யர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் ஆன்ம உணர்வு இருபதாம் நூற்றாண்டு மனிதகுலத்தின் பொதுவான உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இவ்வாறாக, போல்ஷிவிசத்தின் வெற்றியானது மனிதகுலம் அனைத்தின் ஆன்ம உணர்வின் வெற்றியாகும். [7]

போரும் அகிலமும் என்ற ட்ரொட்ஸ்கியின் படைப்பினால் உந்தப்பட்டு, லி டாசோவ், முதலாம் உலகப் போரானது “உலகப் பாட்டாளி வர்க்க வெகுஜனங்களுக்கும் உலக முதலாளிகளுக்கும் இடையிலான... வர்க்கப் போரின் தொடக்கத்தை” குறித்ததாக அறிவித்தார். போல்ஷிவிக் புரட்சியானது “சோசலிசத்திற்குத் தடைக்கற்களாக இப்போதிருக்கும் தேசிய எல்லைகளை அழிப்பதையும் முதலாளித்துவ ஏகபோக- இலாப உற்பத்தி முறையை அழிப்பதையும்” நோக்கிய முதல் படி மட்டுமேயாகும். [8]

1919 மே-ஜூன் ஆர்ப்பாட்ட இயக்கத்தை தொடர்ந்து சோசலிச ஆய்வுக்கான சங்கங்கள் பல்கிப் பெருகின. ஆயினும், 1919 மார்ச்சில், லி டாசோவ் இடம் இருந்து ஆதர்சம் பெற்று, பீக்கிங் பல்கலைக்கழக மாணவர்கள் மார்க்சிச தத்துவ ஆய்வுக்கான ஒரு சங்கம் ஒன்றை ஸ்தாபித்தனர். சீனாவில் 1919 இல் நடந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்த மூன்றாம் அகிலம், 1920 ஆரம்பத்தில், தொடர்புகள் உருவாக்குவதற்காக தூர கிழக்கு செயலகத்தில் இருந்து கிரிகோரி வோய்டின்ஸ்கியை பெய்ஜிங்கிற்கு அனுப்பியது. வோய்டின்ஸ்கி லி ஐ சந்திக்க, லி ஷாங்காயில் இருந்த சென் துஷியோவை சந்திக்க அவரை அனுப்பினார்.


சீன கம்யூனிஸ்ட் இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகள் 1924 இல் பாரிஸில்

டுவியின் மெய்யியல் நடைமுறைவாதம் மற்றும் ஜனநாயக கருத்துவாதத்தால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருந்த சென் துஷியோ, மார்க்சிசத்தை தழுவிக் கொள்வதில் லியை விடவும் மெதுவாய் இருந்தார். ஆயினும், மே-ஜூன் ஆர்ப்பாட்ட இயக்கத்தை ஒட்டி, அவரது அரசியல் மனோபாவங்கள் துரிதமாய் மாறின. ஆர்ப்பாட்டங்களின் போதான அவரது நடவடிக்கைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டார், பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 1919 பிற்பகுதியில் அவர் ஷாங்காய் சென்றார், அங்கு அவர் தீவிரப்பட்ட தொழிலாளர் மற்றும் இளைஞர்களது அடுக்குகளைக் கண்டார். ஒரு விவரிப்பு இவ்வாறு தெரிவிக்கிறது:

சென் துஷியோ அங்கு திரும்பியபோது, செயலூக்கமான புத்திஜீவிகளது ஒரு குழு அவரால் உடனடியாக ஈர்க்கப்பட்டது, மார்க்சிச ஆய்வு மற்றும் நடவடிக்கைகளில் அவர்களும் அவருடன் இணைந்து கொண்டனர்... தொழிலாளர் இயக்கத்தை ஊக்குவிப்பதில் சென் துஷியோவும் செயலூக்கத்துடன் இயங்கத் தொடங்கினார், அவர் தொழிலாளர்கள் மத்தியில் அடிக்கடி நிகழ்த்திய ஆவேசமான பேச்சுக்கள் அவரது மார்க்சிச சிந்தனையைப பிரதிபலித்தன.[9]

வோய்டின்ஸ்கி, சென் துஷியோவுடன் ஷங்காயில் சந்தித்ததன் விளைவாய், 1920 மே ஆரம்பத்தில் இரகசியமாய் உருவாக்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத்திற்கான அடிப்படையை வழங்கிய, ஏராளமான குழுக்கள் ஒன்றுபடுத்தப்படும் முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் ஒரு வரைவு அரசியல்சட்டம் நிறைவேற்றப்பட்டது, ஷங்காயை மையமாகக் கொண்ட ஒரு இடைக்கால மைய அமைப்பு உருவாக்கப்பட்டது. சென் துஷியோ அதன் முதல் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1921 ஜூலையில் கட்சி உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது, இதுவே பொதுவாக உத்தியோகபூர்வ தேதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. [10]

இன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

நூறு ஆண்டுகள் கடந்திருக்கின்றன, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1919 மே 4 நிகழ்வுகளை முழுமையாக திரிக்கிறது. புதிய கலாச்சார இயக்கத்தின் ஜனநாயகக் கோட்பாடுகளையும் கட்சியின் ஸ்தாபகத்திற்கு அடித்தளமாய் இருந்த சோசலிச சர்வதேசியவாதத்தையும் அது நீண்டகாலமாய் மறுதலித்து வந்திருக்கிறது. இன்றைய இளம் தொழிலாளர்களும் மாணவர்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் போலிஸ்-அரசு எந்திரத்திற்கு எதிராகவும் அதை சூழ்ந்த செயலிழக்கச்செய்யும் புத்திஜீவித சூழலுக்கு எதிராகவும் தமது சொந்த கலகத்தை முன்வைப்பதற்கு 1919 இன் இளைஞர்மிகு கலகத்தில் இருந்து அவர்கள் உத்வேகம் பெற்றுவிடக் கூடாது என்பதே பெய்ஜிங்கில் இருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தின் எண்ணமாய் இருக்கிறது.


ஷி ஜின்பிங்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த வாரத்தில் மே 4 இயக்க நினைவாக அவர் வழங்கிய உரையை தேசியவாதம் மற்றும் தேசப்பற்றுவாதத்தின் பெருமைகளைப் போற்றுவதற்காய் பயன்படுத்தினார். பரந்த ஒரு ஒடுக்குமுறை எந்திரத்தின் மீது அமர்ந்திருக்கும் ஷி, இளைஞர்கள் “தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சிந்தனைகளை” தவிர்க்க வேண்டும் “கட்சிக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஒரு சுதந்திரமான தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தில், தொழிற்துறை நகரமான சென்ஷேன் இல் உள்ள ஜாசிக் டெக்னாலஜி நிறுவனத் தொழிலாளர்களுக்கு உதவிய “குற்ற”த்திற்காக பீக்கிங் பல்கலைக்கழகம் மற்றும் பிற உயரிய ஸ்தாபனங்களது மாணவர்கள் சென்ற ஆண்டிலிருந்து சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. வளாகத்தின் மார்க்சிச சங்கம் (Marxist Society) மூடல் மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டது, அதன்பின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எடுபிடிகளால் கைப்பற்றப்பட்டது. எந்த பல்கலைக்கழகம் புதிய கலாச்சார இயக்கத்தின் புத்திஜீவித ஊற்றின் வெகு மையமாக இருந்ததோ, எதன் மாணவர்கள் 1919 மே 4 ஆர்ப்பாட்டத்திற்கு துவக்கமளித்தனரோ, அந்தப் பல்கலைக்கழகத்தில் இது நடந்தேறியது.

அதன் சொந்த வரலாறு மற்றும் நடைமுறைகள் குறித்த ஏராளமான கேள்விகளை அது எழுப்புகிறது என்பதால் உண்மையான மார்க்சிசத்தை கற்பதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதன் “சீன குணாம்சங்களுடனான சோசலிசம்” என்பது, 1978 முதலாக அதன் தலைமையில் நடந்து வந்திருக்கின்ற முதலாளித்துவ மீட்சி நடைமுறைகளை நியாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும், ஒரு அபத்தமான சூத்திரமாகும். அதன் விளைவு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்செல்வந்த ஒருசிலவராட்சியினரது செல்வம் மற்றும் சலுகைகளுக்கும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பெரும்பான்மையினருக்கும் இடையில் மலைப்பூட்டும் பேதங்களுக்கு இட்டுச்சென்றிருக்கிறது. சோசலிசக் கோட்பாடுகளது அடிப்படையில் எந்த விண்ணப்பமும் செய்யும் திறனின்றி, ஆட்சியானது சீன தேசியவாதத்தை விசிறிவிடுவதன் மீதும் பின்தங்கிய சீன பாரம்பரியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மீதும் சார்ந்திருக்கிறது.

புதிய கலாச்சார இயக்கத்தின் பிரதான குறியாக இருந்த கன்ஃபூசியனிசத்திற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி புத்துயிரூட்டுவதில் இது உச்சகட்டத்தை அடைகின்றது. பள்ளிகள், பல்கலைக்கழகங்களிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் நாடுகளிலுள்ள கன்ஃபூசியஸ் ஸ்தாபனங்களை வளர்ப்பதன் மூலமும் இது ஊக்குவிக்கப்படுகிறது. கன்ஃபூசியசின் 2,565வது பிறந்த தினத்தை குறிக்கும் விதமாக, 2014 இல் ஒரு சர்வதேச மாநாட்டில் வழங்கிய ஒரு உரையில், ஜனாதிபதி ஷி, “சீன கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரிய சீனக் கலாச்சாரத்தின் வாரிசும் ஊக்குவிப்பாளருமாகும் ஆகும்” என்று அறிவித்தார். கன்ஃபூசியனிசத்தில் காணத்தக்கதாய் இருக்கின்ற சமூகம் குறித்த இறுகிய அடுக்குவாரியான பார்வை சீன கம்யூனிஸ்ட் கட்சி எந்திரத்தின் அதிகாரத்துவ கண்ணோட்டத்துடன் மிகப் பொருந்திப் போகக் கூடியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மார்க்சிசம் மற்றும் 1917 அக்டோபர் புரட்சியில் பொதிந்திருக்கின்ற சோசலிச மற்றும் சர்வதேசியக் கோட்பாடுகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெகுகாலத்திற்கு முன்பே கைகழுவி விட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தினர் இன்று அந்த பாரம்பரியத்தின் வாரிசுகளாக இல்லை, மாறாக “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற பிற்போக்கான தேசியவாதப் பதாகையின் கீழ் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை அபகரித்த மாஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வாரிசுகளாகவே இருக்கின்றனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகிய சிறிது காலத்திலேயே, முதலாளித்துவ கோமிண்டாங் (Kuomintang - KMT) உடன் அதனை ஸ்ராலின் கட்டிப் போட்டார், இது 1925-27 இன் புரட்சிகர எழுச்சிகளில் சீனத் தொழிலாள வர்க்கத்தின் அழிவுகரமான தொடர் தோல்விகளுக்கு இட்டுச் சென்றது.


ஸ்ராலினுடன் மாவோ

சென் துஷியோவின் தோற்றம் மீண்டும் பெரிதாய் விரிகிறது. 1920களில் சீனப் புரட்சி காட்டிக் கொடுக்கப்படுவதை அவர் எதிர்த்தார், சீனாவில் ஸ்ராலினின் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்த லியோன் ட்ரொட்ஸ்கியின் பக்கம் நின்றார். ஐக்கியப்பட்ட சீன இடது எதிர்ப்பாளர்கள் அணியின் முதல் தலைவராக சென் துஷியோ ஆனார். 1931 இல் உருவாக்கப்பட்ட இந்த அணி, ஸ்ராலினிஸ்டுகள் உள்ளிட அத்தனை பக்கங்களில் இருந்தும் வேட்டையாடப்பட்டு துன்புறுத்தப்பட்ட நிலையிலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகக் கோட்பாடுகளுக்காக ஒரு தீரமான போராட்டத்தை நடத்தியது.

சர்வதேச அளவில் போலவே, சீனாவிலும், வேலை மற்றும் வாழ்க்கையிலான ஒடுக்குமுறை நிலைமைகளுக்கு எதிராகவும், எதிர்ப்பு மற்றும் சுதந்திர சிந்தனையின் எந்த வடிவத்தையும் ஒடுக்க முயலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் போலிஸ்-அரசு எந்திரத்திற்கு எதிராகவும் தான் தொழிலாள வர்க்கத்தின் முதல்-நிலை கிளர்ச்சிகள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆயினும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அது பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருசிலவராட்சியினருக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டம் எத்தகைய அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதே சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகம் கொடுக்கும் பிரதான கேள்வியாகும்.

மே 4 இயக்கத்தில் இருந்தான முக்கிய படிப்பினையானது, இந்தக் கேள்விக்கான பதில்கள் சீனாவிற்குள் தேடப்பட முடியாதது என்பதும், மேலும் குறிப்பாக மாவோ சேதுங்கினால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட ஸ்ராலினிசத்தின் சீன வகையை புதுப்பித்தலிலும் தேடமுடியாதது என்பதே ஆகும். 1969 இல், மே 4 நிகழ்வுகளின் 50வது ஆண்டினை ஒட்டி, மாவோ, மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி என்ற செயல்பொருத்தமற்று பெயர்சூட்டப்பட்ட ஒன்றில் முதலாளித்துவ பாதையில் பயணிப்பவர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு எதிராக செங்காவலர் படையின் கும்பல்களை கட்டவிழ்த்து விடுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த இயக்கத்தின் நினைவுகளை சுரண்டிக் கொண்டார், திரித்துரைத்தார்.

உண்மையில், மாவோதான் முதலாளித்துவ பாதையில் பயணித்தவர்களில் தலைமையானவராய் நிரூபணமானார். தனது கன்னை எதிரிகளுக்கு எதிராக செங்காவலர் படையை அவர் ஏவி முடிக்கும் முன்பே, தொழிலாள வர்க்கம், 1967 இல் ஷங்காய் மக்கள் கம்யூன் ஸ்தாபகத்துடன் முன்னணிக்கு வந்தது. சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தை அழைத்ததுதான் மாவோவின் பதிலிறுப்பாக இருந்தது. 1969க்குள்ளாக, செங்காவலர் படையில் இருந்த நோக்குநிலை பிறழ்ந்த இளைஞர்கள் வெறுமனே பெய்ஜிங்கின் கன்னைப் போராட்டங்களில் பகடைக்காய்களாக ஆக்கப்பட்டிருந்தனர்.


1972 இல் மா சேதுங்கும் ரிச்சார்ட் நிக்சனும்

ஆயினும் “தனியொரு நாட்டில் சோசலிசம்” எனும் பிற்போக்கான தேசியவாத முன்னோக்கினால் உருவாக்கப்பட்டிருந்த அடிப்படை பொருளாதார மற்றும் மூலோபாய நெருக்கடியை “கலாச்சாரப் புரட்சியால்” தீர்க்க முடியாது, தீர்க்கவும் இல்லை. தேசியரீதியான எந்த தீர்வும் அங்கே இருக்கவில்லை: உலக சோசலிசப் புரட்சி இல்லையேல் உலக முதலாளித்துவத்திற்குள் ஒன்றிணைவது ஆகியவை மட்டுமே தெரிவுகளாய் இருந்தன. முந்தையதை பல தசாப்தங்களுக்கு முன்பே கைவிட்டிருந்த மாவோ 1972 இல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணக்கத்தை எட்டினார், இது மொத்தமான முதலாளித்துவ மீட்சிக்கு கதவு திறந்து விட்டது.

இன்று, சீனாவின் தொழிலாளர்களும் இளைஞர்களும், முதலாளித்துவ மீட்சியாலும் அமெரிக்காவுடனான போர் அபாயத்தினாலும் உருவாக்கப்பட்ட சமூக பேரழிவுக்கு முகம்கொடுத்திருக்கின்றனர், தவிர்க்கவியலாமல் இன்னொரு பேரழிவில் முடியத்தக்க ஒரு ஆயுதப் போட்டியைத் தவிர வேறு எந்த பதிலும் இதற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இல்லை. 1919 இல் போலவே, வெளியேறுவதற்கான வழி சர்வதேச அரசியல் மற்றும் தத்துவார்த்த தளத்தில் மட்டுமே காணத்தக்கதாகும்.

உலக சோசலிசப் புரட்சி மூலோபாயத்திற்குத் திரும்புவதும் அதற்காகப் போராடுகின்ற சர்வதேசக் கட்சியின், இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு சீனப் பிரிவைக் கட்டியெழுப்புவதுமே அவசியமாக இருக்கிறது. சென் துஷியோ மற்றும் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தீரமிகு போராட்டங்கள் உள்ளிட ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இருபதாம் நூற்றாண்டின் மூலோபாய அனுபவங்களது அத்தியாவசியமான அரசியல் படிப்பினைகளுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே உருவடிவம் கொடுக்கிறது.

குறிப்புகள்

1. Chow Tse-tsung, The May Fourth Movement: Intellectual Revolution in Modern China, Stanford University Press, 1967, pp 106–7.

2. ibid, pp 109.

3. ibid, p 160.

4. Harold R. Isaacs, The Tragedy of the Chinese Revolution, Stanford University Press, second revised edition, 1961, p 53.

5. ibid, p 54.

6. Chow Tse-tsung, The May Fourth Movement (Intellectual Revolution in Modern China), Stanford University Press, 1967, p 93.

7. Benjamin I. Schwartz, Chinese Communism and the Rise of Mao, Harper & Row, 1967, p 14.

8. Maurice Meisner, Li Ta-chao and the Origins of Chinese Marxism , Harvard University Press, 1967, p 68.

9. Thomas C. Kuo, Ch’en Tu-hsiu (1879-1942) and the Chinese Com munist Movement, Seton Hall University Press, 1975, p 79.

10. Chow, op cit, p 248.