ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

South African elections
Ramaphosa elected to full term as president amid record low ANC vote

தென் ஆபிரிக்க தேர்தல்கள்

ANC க்கு மிக குறைந்த வாக்குகளின் மத்தியில் ரமாபோசா முழு பதவிக்கால ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

By Eddie Haywood 
13 May 2019

கடந்த புதன் கிழமை நடந்த தேசியத் தேர்தலில், ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress - ANC) கட்சிக்கான ஆதரவில் ஒரு கூர்மையான வீழ்ச்சியும், மொத்த வாக்குப்பதிவில் ஒரு கணிசமான வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்கத் தலைவராக இருந்து பன்முக மில்லியனர் வணிகராக உருவெடுத்த சிரில் ராமபோசா அந்நாட்டின் ஜனாதிபதியாக முழு ஐந்தாண்டு பதவிக்காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வார இறுதியில், நாட்டின் தனிப்பட்ட தேர்தல் ஆணையம், 25 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆபிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை முடிவுக்கு வந்ததில் இருந்து நாட்டை ஆட்சி செய்து வந்த ANC கட்சி தேசிய பாராளுமன்ற தேர்தல்களில் 58 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கிறது. இது, இன ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு பிந்தைய ANC இன் வரலாற்றில் முதன்முதலாக 60 சதவிகிதத்திற்கு குறைவாக அதன் வாக்குகள் வீழ்ச்சி கண்டுள்ளதை குறிக்கிறது. 2014 இல் நடந்த முந்தைய தேசிய தேர்தல்களில், ANC 62 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது.

மாகாண மற்றும் உள்ளூர் அலுவலகங்களின் பதிவுகள் உட்பட தேர்தல்களில் பதிவான மொத்த வாக்குகள் ஐந்தாண்டுக்கு முன்னர் பதிவான 73 சதவிகிதத்தில் இருந்து 66 சதவிகிதமாக குறைந்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில்தான் வாக்காளர் பதிவில் கூர்மையான சரிவு நிகழ்ந்துள்ளது. பெரும்பாலும் 10 மில்லியன் தென் ஆபிரிக்கர்கள் வாக்கு பதிவைப் பற்றி சிறிதும் அக்கறை காட்டவில்லை, அதில் சுமார் 6 மில்லியன் பேர் 30 வயதிற்கு குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோஹன்ஸ்பேர்க் மற்றும் பிரிட்டோரியா போன்ற நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் தலை நகரங்களைக் கொண்ட மற்றும் 1994 இல் நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து பெரியளவில் கறுப்பின தொழிலாளர்களும் ஏழைகளும் வழங்கிய ஆதரவால் தன்னை வளப்படுத்திக் கொண்ட கறுப்பின நடுத்தர வர்க்கத்தின் மையமுமான கவுட்டெங் மாகாணத்தை ANC பெயரளவில் தான் கட்டுப்படுத்தி வந்தது.

சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவரான ரமாபோசா, தென் ஆபிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அவரது தொடர்புகளை பயன்படுத்தி தென் ஆபிரிக்காவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக உருவெடுத்தார். 2017 இல், முன்னாள் ஜனாதிபதி ஜாக்கோப் ஜுமாவை வெளியேற்றிய பின்னர், ரமாபோசா ANC இன் தலைவரானார், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2018 இல் தென் ஆபிரிக்க ஜனாதிபதியாக அதிகாரத்திற்கு வந்தார். ஜுமா வின் கீழ் ANC ஆட்சி பரவலாக ஊழல் நிறைந்து காணப்பட்டதை சுத்தப்படுத்துவதற்கு உறுதியளித்து கட்சி மற்றும் நாட்டின் தலைமைப் பொறுப்பை அவர் கைப்பற்றினார்.

கறுப்பு முதலாளித்துவத்தின் சில அதிருப்தி கன்னைகளை இணைத்துக் கொண்ட இன ஒதுக்கீட்டுக் கொள்கை சகாப்த அனைத்து வெள்ளை ஆளும் கட்சிக்கு பின்வந்தவர்களான ஜனநாயகக் கூட்டணியும், 2014 தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வாக்குகளின் பங்கை இழந்து, சுமார் 22 சதவிகித வாக்குகளையே பெற்றுள்ளது. இருப்பினும், அதன் பாரம்பரிய அடிப்படை கொண்ட மேற்கத்திய கேப் மாகாணத்தையும் கேப் டவுண் நகரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இது Mmusi Maimane தலைமையில் இயங்கி வருகிறது.

ANC இளைஞர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மேலும் ஒரு மில்லியனருமான ஜூலியஸ் மலேமா தலைமையிலான “அதி-இடது” பொருளாதார சுதந்திர போராளிகள் (Economic Freedom Fighters) கட்சி, சுமார் 11 சதவிகித வாக்குகளின் பங்கு அதிகரிப்பை கண்டது, என்றாலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து வாக்கெடுப்பில் எதிர்பார்க்கப்பட்ட ஏற்றத்தைக் காட்டிலும் அது குறைவாக இருந்தது.

ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ், எந்தவொரு முதலாளித்துவக் கட்சியின் மூலமாகவும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் அபிலாஷைகள் மற்றும் நலன்களைப் பற்றி எந்தவித வெளிப்பாட்டையும் காண முடியாத நிலையில், “வெள்ளை சுயாட்சி,” ஐ ஆதரிக்கும் அதிவலது கட்சிகளின் ஒரு கூட்டணியான Freedom Front Plus கட்சிக்கு கிடைத்த அதிகரித்த வாக்குகளில் ஒரு ஆபத்துமிக்க வெளிப்பாடு காணப்பட்டது, இது பாராளுமன்றத்தில் அதற்கான ஆசனங்களின் எண்ணிக்கையை நான்கில் இருந்து பத்தாக அதிகரிக்கச் செய்தது.

தேர்தல் மூலமாக எந்த விதத்திலும் தீர்வு காணப்படாத, ANC இன் ஜுமா மற்றும் ரமாபோசா கன்னைகளுக்கு இடையேயான மோதல் என்பது, ஆட்சியை சீர்கெடுக்கும் நிலைப்பாடுகள் மற்றும் கட்டுப்பாடு குறித்து கறுப்பின உயரடுக்கின் இரண்டு வலதுசாரி கன்னைகளுக்கு இடையில் உருவானது, இவை இரண்டும் முதலாளித்துவத்தையும் பரந்த வெகுஜனங்களுக்கு எதிரான சொந்த மற்றும் மேற்கத்திய பெருவணிக நலன்களையும் பாதுகாக்கின்றன.

ANC வெற்றியுடன் கூடிய நிதி மற்றும் வணிக நலன்களின் ஆதாயம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுவதானது, உண்மையில், தென் ஆபிரிக்க ராண்ட் இன் மதிப்பு அமெரிக்க டாலருக்கு 0.4 சதவிகிதமாக இருந்து 14.3242 அளவிற்கு கடந்த சில வாரங்களில் உயர்வு கண்ட நிலையில், ANC இன் வெற்றி தெளிவாகியது.

தனியார்மயமாக்கலை மையப்படுத்தி, தென் ஆபிரிக்காவை “வெளிநாட்டு முதலீட்டை மிகவும் ஈர்க்கும்” நாடாக உருவாக்கும் ஒரு வலதுசாரி திட்டநிரலை திணிக்க அவர் நோக்கம் கொண்டுள்ளார் என்பதை ரமாபோசா தெளிவுபடுத்தியுள்ளார். 2023 வாக்கில் நேரடி வெளிநாட்டு முதலீடாக 1.2 டிரில்லியன் ராண்ட் டாலர் (83 பில்லியன் டாலர்) தொகையை உள்ளீர்ப்பது தான் இலக்கு என அவர் அறிவித்துள்ளார்.

நிறுவனத்தின் கறுப்பின பொருளாதார மேம்பாட்டின் (Black Economic Empowerment) பங்குதாரராக அவர் இருந்த சமயத்தில், லோன்மின்னின் மரிக்கானா நடவடிக்கையின் போது 2012 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 34 சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலையில் ரமாபோசா வகித்த கொலைகாரப் பாத்திரத்தை நடைமுறையில் காண்பதாக தெரிந்தது. ரமாபோசா, அதன் பின்னர் ANC இன் ஒரு உயர்மட்ட அதிகாரியானார் என்பதுடன், அந்நிறுவனத்தில் 9 சதவிகித பங்கை சொந்தமாக்கிக் கொண்டார். உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களை மீறி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, தொழிலாளர்களை குற்றவாளிகள் என்று கண்டித்ததுடன், அவர்கள் மீது நிர்வாகம் “நடவடிக்கை எடுக்க” வேண்டும் என்றும் கோரினார்.

ரமாபோசாவின் தனியார்மயமாக்கல் மற்றும் “மூதலீட்டை ஈர்த்தல்” திட்ட நிரலை திணிப்பதற்கான ANC இன் நோக்கம், சர்வதேச நிதி மற்றும் பெருநிறுவனங்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. வெள்ளியன்று, Financial Times நாளிதழ், ஒரு தலையங்க கட்டுரையில், ANC இல் “முன்னேறும் எதிரிகள்” பற்றிய விடயங்களை ரமாபோசா ஆழ்ந்து கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தது.

“பிரச்சினை மோசமான ஆப்பிள்கள் பற்றியது அல்ல. ANC பீப்பாயே அழுகிவிட்டது என்பது தான் பிரச்சினை. ரமாபோசா மோசமான குற்றவாளிகளை நீக்குவதன் மூலம் உதாரணங்களை எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம். மேலும், விசாரணைகளைத் தொடர்வதற்கு அரசு வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் அவர் மேம்படுத்துவதும் அவசியம். மிகப் பரந்தளவில், முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதாரம் மீண்டும் மந்த நிலைக்கு போகாமல் தடுக்கவும் அவர் அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நல்ல விதமாக செயல்படுத்த வேண்டும்.

Ramaphosa’s Turn என்ற நூலின் ஆசிரியர் ரால்ஃப் மதேக்கா, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், ANC மிகக் குறைந்த பங்கு வாக்குகளை பெற்றமை அதன் வலதுசாரி திட்டநிரலை செயல்படுத்த எளிதாக்குகிறது: அதாவது, “தேசியளவில் 60 சதவிகிதத்திற்கு குறைவான வாக்குகளை அது பெற்றிருப்பதானது, இழப்பீடற்ற நில அபகரிப்பு போன்ற கட்சியின் இன்னும் தீவிரபட்ட வாக்குறுதிகளுடன் ரமாபோசா குறைவாகவே பிணைந்திருப்பார் என்பதாகிறது.”

தென் ஆபிரிக்க பொருளாதாரம் கடந்த ஆண்டில் வெறும் 0.8 சதவிகித வளர்ச்சியை அடைந்து, தேக்கநிலையில் உள்ளது. உலக வங்கியைப் பொறுத்த வரை, 50 சதவிகித வறுமை விகிதமும், 27.5 சதவிகித உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதமும் அந்நாட்டில் நிலவுவதால், உலகில் மிகுந்த சமூக சமத்துவமின்மை கொண்ட நாடாக அது உள்ளது. 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 50 சதவிகிதமாகும்.

நாட்டின் மொத்த வளத்தில் 70 சதவிகிதத்தை முதல் 1 சதவிகித செல்வந்தர்கள் சொந்தமாக்கிக் கொண்டுள்ள நிலையில், 10 பில்லியனர்கள் கூட்டாக 30 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்தை கட்டுப்படுத்துகின்றனர், அதே வேளை கீழ்மட்ட 60 சதவிகிதத்தினர் வெறும் 7 சதவிகித வளத்தையே தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

இன ஒதுக்கீட்டு கொள்கையின் முடிவுக்குப் பின்னர், தேசியவாதம் மற்றும் முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ANC யும் மண்டேலாவும் ஆட்சிக்கு வந்து, ஒரு கால் நூற்றாண்டிற்குப் பின்னர், மிகுந்த வறுமைக்கும் சமத்துவமின்மைக்கும் தொழிலாள வர்க்கம் ஆளான அதே வேளையில், “கறுப்பு பொருளாதார சக்தி” என்ற பெயரில் பொருளாதாரத்தை கொள்ளையடித்த, ஒரு பேராசை கொண்ட கறுப்பு முதலாளித்துவமும் சலுகை பெற்ற மத்தியதர வர்க்கமும் வளர்த்தெடுக்கப்படுகிறது.

தென் ஆபிரிக்காவில், சமூக நெருக்கடியும் வர்க்கப் போராட்டமும் ஆழமடையும் ஒரு நிலைமையை தேர்தல் உருவாக்கியுள்ளது. ஆபிரிக்கா மற்றும் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்ட அலைகள் எழுச்சிப் பெற்று வரும் நிலைமைகளின் கீழ், ஏற்கனவேயுள்ள ஒட்டுமொத்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு வெளியே ஒரு புரட்சிகர மாற்றீட்டைத் தேடுவதற்கு தென் ஆபிரிக்க தொழிலாள வர்க்கம் முனையும்.