ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan SEP denounces political parties’ support for President Sirisena’s police-state measures

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி சிறிசேனவின் பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதை கண்டனம் செய்கிறது

By the Socialist Equality Party (Sri Lanka) 
2 May 2019

கடந்த வாரம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் கட்சிகளுக்கு ஒரு "அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு" அழைப்பு விடுத்து, அவசரகால நிலையை அறிவித்ததன் மூலம், அடக்குமுறை நடவடிக்கைகளை அமுலுக்கு கொண்டு வருவதை அம் மாநாடு அங்கீகரித்தது.

இந்த பொலிஸ்-அரச விதிகளின் பிராதன இலக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்ல, மாறாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச எழுச்சியின் ஒரு பாகமாக போராட்டத்திற்கு வருகின்ற உழைக்கும் மக்களே, என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது.

ஏப்ரல் 21 அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை, இந்த பாரதூரமான ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாக்குப் போக்காக ஜனாதிபதி பற்றிக்கொண்டார். இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பல விடயங்கள் தெளிவாக இல்லை. எனினும், அரசாங்க தலைவர்களும் பாதுகாப்பு சேவைகளும், ஒரு இஸ்லாமிய குழு தேவாலயங்கள் மீது குண்டுவீசத் திட்டமிட்டுள்ளது என்ற தெளிவான எச்சரிக்கைகளை கண்டும் காணதது போல் இருந்து விட்டனர்.

கொழும்புடனான இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இலங்கை புலனாய்வாளர்களுக்கு "உதவுவதற்காக" எஃப்.பி.ஐ மற்றும் இராணுவ வல்லுனர்களை அனுப்பிவைப்பதற்கு இந்த துன்பத்தை அமெரிக்கா பற்றிக்கொண்டுள்ளது. வாஷிங்டன், சீனாவிற்கு எதிரான தனது யுத்த உந்துதல்களுக்கு இலங்கையை ஒரு மையமாக கருதுகிறது.

அனைத்து கட்சி மாநாட்டில் பங்குபற்றிய கட்சிகள், அக்டோபரில் பகிரங்கமாக வெடித்த அரசியல் உள் மோதல்களில் சிக்கிக்கொண்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமராக்கினார். ஆனால் உயர் நீதிமன்றம், சிறிசேனவின் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவித்த பின்னர், வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ் அவர் விக்கிரமசிங்கவை மீண்டும் பதிவியில் அமர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டார். இராஜபக்ஷவை சீனாவுடன் மிக நெருக்கமானவராக அமெரிக்கா கருதுகிறது.

ஆளும் வட்டாரங்களில் கசப்பான பிளவுகள் இருந்தபோதிலும்கூட, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், "தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும்" என்ற பெயரில் இராணுவ-பொலிஸ் எந்திரத்தை வலுப்படுத்துவது பற்றி அவற்றுக்கு இடையில் எந்த முரண்பாடும் கிடையாது. ஒட்டு மொத்த ஆளும் வர்க்கமும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அதிகரித்து வரும் ஆர்ப்பாட்ட மற்றும் வேலைநிறுத்த இயக்கத்தைக் கண்டு ஆழமாக பீதியடைந்துள்ளது.

டிசம்பரில் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் அவர்களுடைய வறுமை-நிலை அடிப்படை ஊதியத்தை இரட்டிப்பாக்க கோரி ஒன்பது நாள் வேலைநிறுத்தம் செய்தனர். கடந்த மாதம் 200,000 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிற்சங்கங்கள் இந்த போராட்டங்களை அடக்குவதற்கும் குழப்புவதற்கும் முயன்ற போதிலும், தொழிலாளர்களின் கிளர்ச்சியைத் தடுப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு உள்ள திறனைப் பற்றி ஆளும் வர்க்கத்திற்குள் ஆழ்ந்த கவலை நிலவுகின்றது.

அவசரகாலச் சட்டம் மற்றும் வீதிகளில் கூட்டங்கள், ஊர்வலம் மற்றும் தொந்தரவுகளை ஏற்படுத்துவதாக கருதப்படும் வெளியீடுகளையும் தடை செய்வதும் அடங்கும். வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்வதற்கு அத்தியாவசிய சேவை பிரிவைப் பயன்படுத்த முடியும்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நாட்டின் மூன்று தசாப்தகால இனவாத யுத்தத்தின் முடிவின் பின்னர் முதல் தடவையாக, இராணுவம் மற்றும் பொலிஸ் தீவு முழுவதும் அனைத்து வீடுகளையும் குடியிருப்பாளர்களையும் சோதனையிடுகின்றன.

படையினரும் பொலிசும் பிடி ஆணை இன்றி மக்களை கைதுசெய்ய முடியும். அவர்கள் ஒரு நீதவான் முன் நிறுத்தப்பட்ட பின்னர், பாதுகாப்பு செயலரின் உத்தரவின் பேரில் அவரை ஒரு வருடத்திற்கு தடுத்து வைத்திருக்க முடியும். கடந்த காலத்தில் போலவே, இந்த கொடூரமான சட்டங்கள், எதேச்சதிகாரமான கைதுகள், விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைத்தல், மற்றும் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படக்கூடிய ஒப்புதல் வாக்குமூலங்களை பெறுவதற்காக சித்திரவதையை மேற்கொள்வதையும் விளைவிக்கும்.

பொலிஸ்-அரச ஒடுக்குமுறையின் இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு படைகள் போரின்போது பயன்படுத்தப்பட்ட கொடூரமான வழிமுறைகளை புதுப்பிக்க முடியும் -கொலைக் குழுக்கள் மற்றும் அரசியல் எதிரிகளையும் விமர்சகர்களையும் சட்டத்திற்குப் புறம்பாக படுகொலை செய்வதும் இதில் அடங்கும்.

இந்த வாரம் ஜனாதிபதி சிறிசேன, ஒரு வாரத்திற்கும் மேலாக நடைமுறையில் இருந்த அனைத்து சமூக ஊடகங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த முன்னெப்போதும் இருந்திராத தடைகளை அகற்றினார், ஆனால் அவர் மீண்டும் அதை அமுல்படுத்த முடியும் என்று எச்சரித்தார்.

அனைத்துக் கட்சி மாநாட்டில் பல்வேறு கட்சிகள் முஸ்லிம்-விரோத இனவாதம் பற்றி பாசாங்குத் தனமாக அக்கறை காட்டி, அமைதி காக்குமாறும் இனவாதக் கலவரங்களை தூண்டுவதை எதிர்க்குமாறும் அழைப்பு விடுத்தன.

என்ன பாசாங்குத்தனம்! ஒட்டுமொத்த கொழும்பு ஸ்தாபகமும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பேரினவாதத்தில் மூழ்கிப் போயுள்ளதோடு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இனவாதக் கலவரங்களை தூண்டிவிடுவதன் வரலாற்றைக் கொண்டது. 1983 இல், ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம், நேரடியாக தமிழர் விரோத படுகொலைகளில் ஈடுபட்டது. அது நீண்ட நீடித்த இனவாத யுத்தத்தின் தொடக்கத்தை குறித்தது.

அனைத்து கட்சி மாநாட்டிற்கு ஒரு சில நாட்களுக்கு பின்னர், அரசாங்கம் அவசரகால சட்டத்தின் கீழ் முஸ்லீம் பெண்கள் பர்க்கா அணிவதை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் விரோத பாரபட்சத்தை தூண்டிவிட்டது. இது ஐரோப்பாவிலும் சர்வதேச ரீதியிலும் தீவிர-வலது குழுக்கள் மற்றும் கட்சிகளின் முஸ்லீம்-விரோத பிரச்சாரங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

பிரதான நாடாளுமன்றக் கட்சிகளும் அவற்றின் கூட்டாளிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டன - சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விக்கிரமசிங்கவின் ஐ.தே.க., இராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன, முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியனவும் இதில் அடங்கும்.

சிறிசேனவின் அவசரகால நிலைமைக்கு ஆதரவாக அனைத்து போலி-இடது குழுக்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அணிதிரண்டன.

நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன மாநாட்டில் கலந்து கொண்டதோடு வெட்கமின்றி அறிவித்ததாவது: "இலங்கையின் உயர்மட்டம் தோல்வியடைந்துள்ள போது உளவுத்துறையினர், பொலிஸ் மற்றும் இராணுவப் படைகள் தமது கடமையை செய்வதற்காக நாங்கள் அவர்களைப் பாராட்ட வேண்டும்."

ஐக்கிய சோசலிசக் கட்சியும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சியும் அரசாங்கம் மீதான மேம்போக்கான விமர்சனங்களை வெளியிட்டன, ஆனால் அவசரகால நிலையை கண்டனம் செய்யவோ அல்லது அதன் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்க்கவோ இல்லை.

பல்வேறு தந்திரோபாய கருத்து வேறுபாடுகளை ஓரங்கட்டி விட்டு, இடதுகளாக காட்டிக்கொள்ளும் கட்சிகள் உட்பட முழு அரசியல் ஸ்தாபகமும் அவசரகால பிரகடனத்திற்குப் பின்னால் ஐக்கியப்பட்டுள்ளன.

இந்த பிற்போக்கு அரசியல் அணிதிரள்வை வெளிப்படையாக எதிர்க்கின்ற ஒரே கட்சியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), உடனடியாக அவசரகால நிலைக்கு முடிவுகட்டுமாறு கோருகிறது.

அனைத்துக் கட்சி மாநாடுகள், எப்பொழுதும் கடுமையான அரசியல் நெருக்கடியின் காலங்களில் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்துவதற்கே அழைக்கப்படுகின்றன. 2000 ஆண்டில், இராணுவம் புலிகளின் கைகளில் தொடர்ச்சியான பேரழிவுகரமான இராணுவத் தோல்விகளை சந்தித்ததை அடுத்து, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அத்தகைய ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அது அந்த அழைப்பை பலம்வாய்ந்த முறையில் நிராகரித்தது. பொதுச் செயலாளர் விஜே டயஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு, "தனது கொள்கைகள் மீதான எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதை நசுக்குவதற்காக அரசாங்கம் பாரதூரமான அவசரகாலச் சட்ட விதிகளை அமுல்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கூட்டம் முழு மோசடியானதாக இருக்கும்" என அறிவித்தார்.

இம்முறை, மாநாடு அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருந்த போதிலும் கூட, சோசலிச சமத்துவக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டவில்லை. அப்படி அழைப்புவிடுக்கப்பட்டிருந்தால், அது அதே விதத்திலேயே பதிலிறுத்திருக்கும்.

சோ.ச.க. ஒரு சோசலிச, சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், முதலாளித்துவத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகளிலும் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுகிறது. அதன் 50 ஆண்டு கால அனுபவத்தில், சோ.ச.க. உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்பட்டவர்களதும் ஜனநாயக உரிமைகளை சளைக்காமல் பாதுகாத்து வந்துள்ளதுடன் அனைத்து விதமான தேசியவாதங்களையும் பேரினவாதங்களையும் எதிர்த்து வந்துள்ளது.

இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலையும் தீவை அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாக மாற்றுவதற்கான அதன் முயற்சிகளையும் எதிர்க்க வேண்டும். சோ.ச.க. மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதன் சகோதரக் கட்சிகளும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு போராடுகின்றன.

ஆளும் வர்க்கம், அவசரகால நிலையை திணிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்துக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கும் எதிரான வர்க்கப் போருக்காக தயாராகி வருவதோடு, மேலும் சர்வாதிகார வடிவத்திலான ஆட்சியை ஸ்தாபிக்க முன்நகர்கின்றது என சோ.ச.க. எச்சரிக்கின்றது.

உழைக்கும் மக்களின் ஜனநாயக, சமூக உரிமைகளை காப்பாற்றுவதற்காக இன, மத பேதங்களைக் கடந்த தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதற்காக வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு சோ.ச.க. அழைப்பு விடுகின்றது.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதென்பது சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்துடன் பிணைந்துள்ளது. தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.