ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan government imposes island-wide curfew amid anti-Muslim violence

இலங்கை அரசாங்கம் முஸ்லிம் விரோத வன்முறைகளுக்கு மத்தியில் தீவு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

By K. Ratnayake,
14 May 2019

முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், இலங்கை அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், நேற்று இரவு 9 மணியிலிருந்து காலை 4 மணிவரை தீவு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திணிக்கப்பட்டுள்ள கொடூரமான அவசரகாலச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது உட்பட பரந்த அதிகாரங்கள் பொலிசுக்கு வழங்கப்பட்டுள்ளன.

முஸ்லீம் விரோத வன்முறையானது ஏப்ரல் 21 அன்று 250 அப்பாவி நபர்களை கொன்ற மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களை தொடர்ந்து, அரசாங்கமும், எதிர்க் கட்சி, பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிசாலும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இனவாத பிரச்சாரத்தின் விளைவாகும்.

இந்த பயங்கரவாத தாக்குதல்கள், இஸ்லாமிய அடிப்படைவாத ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசு இயக்கத்தால் இலங்கையில் உள்ள இஸ்லாமிய குழுவான தேசிய தவ்ஹீத் ஜம்மாத் உடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டிருப்பது வெளிப்படையானதாகும். இது குண்டுத் தாக்குதல்களுக்காக முஸ்லீம் சமூகத்தின் மீது குற்றம் சாட்டுவதற்கு பற்றிக்கொள்ளப்பட்டது.

ஞாயிறன்று, கொழும்பில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு மாகாணத்தில் சிலாபம் நகரில் கைவிடப்பட்ட தவ்ஹீத் ஜமாத் மசூதியையும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு கடைகளையும் சிங்கள கும்பல் ஒன்று தாக்கிய பின்னரே ஊரடங்குச் சட்டத்தை பொலிஸ் அமுல்படுத்தியது. பின்னர், அந்த ஊரடங்கு அதே மாகாணத்தில் குலியாபிட்டிய, தும்மலசூரிய, பிங்கிரிய மற்றும் ஹெட்டிபொல போன்ற இடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

நேற்று காலை 4 மணியளவில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டபோதிலும், தாக்குதல்கள் தொடர்ந்த காரணத்தால் சிலாபம் தவிர ஏனைய பகுதிகளில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொட மற்றும் அயலில் உள்ள முஸ்லிம் கிராமங்கள் மீதான பரந்த தாக்குதல்களை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஒளிந்துவிட்டார்கள் அல்லது இடம்பெயர்ந்துள்ளனர். சேதத்தின் முழு அளவும் தெரியவில்லை.

தொடர்ந்து தீவு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு வன்முறைகளைத் தடுப்பதற்கானதாக இருக்கலாம். எனினும், இந்த முஸ்லீம் எதிர்ப்பு தாக்குதல்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கூட பொல்லுகள் சகிதம் இருந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களால் தொடர்ந்தும் நடத்தப்பட்டன. பொலிசும் பாதுகாப்புப் படைகளும் கண்டும் காணாதது போல் இருப்பதை இது காட்டுகின்றது. கடந்த காலங்களில் தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதும் இது போன்ற இனவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட வேளையில் பொலிசும் படையினரும் இவ்வாறே நடந்துகொண்டிருந்தனர்.

சிலாபத்தில், குண்டர்கள் ஒரு முஸ்லீம் இளைஞருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிசை கேட்டுக்கொண்டனர். அந்த இளைஞன் முகநூலில் குற்றத்தன்மையுடைய ஒரு பதிவை இட்டிருந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். பொலிசாரின் "மெதுவான பிரதிபலிப்பே" ஒரு கும்பல் தாக்குதலுக்கு வழிவகுத்ததாக ஐலண்ட் பத்திரிகை கூறியது. உண்மையில், தாக்குவதற்காக குண்டர்களுக்கு நேரம் கொடுப்பதே போலீஸ் அனுதாபத்தின் யதார்த்தமாகும். முஸ்லீம் இளைஞன் கைது செய்யப்பட்டாலும், குண்டர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

பிங்கிரியாவில், ஒரு சிங்கள கும்பல் பொலிஸ் நிலையத்தை சூழ்ந்து கொண்டு கைது செய்யப்பட்ட குண்டர்களை விடுவிக்க கோரியது. அந்த பிரதேசத்தின் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான தயாசிறி ஜயசேகர பொலிஸ் நிலையத்திற்கு சென்று, பொலிஸ் பிணையில் அவர்களை விடுவித்துக்கொண்டு செல்வதை தொலைக்காட்சி கானொளிகள் காட்டின.

ஞாயிற்றுக்கிழமை மாலை, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது. அரசாங்க தகவல் தொடர்பு ஆணையாளர் நாலக களுவெவ, அது "தற்காலிகமான" தடை என கூறினாலும், அது சமூக ஊடகப் பயன்பாட்டின் மீதான தணிக்கை மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதி ஆகும்.

ஆரம்பத்தில் இருந்தே, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), கொழும்பு அரசியல் ஸ்தாபகம் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை ஜனநாயக உரிமைகளை மேலும் கீழறுக்கவும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு முஸ்லீம்-விரோத உணர்வுகளை தூண்டிவிடவும் பயன்படுத்திக்கொள்ளும் என்று எச்சரித்து வந்துள்ளது.

அரசாங்க தலைவர்களும் பாதுகாப்புப் படைகளும் தாக்குதல்களை பற்றிய ஒரு வெளிநாட்டு புலனாய்வு முகமையிலிருந்து கிடைத்த முன்கூட்டிய எச்சரிக்கையை புறக்கணித்தனர். ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எச்சரிக்கை ஒரு குறிப்பிட்ட திகதியையும், இடங்களையும், குண்டுத் தாக்குதல்களை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த இஸ்லாமிய குழுவையும் உள்ளடக்கியதாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டது. இந்த ஆவணம் பகிரங்கப்படுத்தப்படவில்லை மற்றும் ஏன் இந்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது என எவரும் விளக்கமளிக்கவில்லை.

அவசரகால நிலைமையின் கீழ் இப்போது அமுலில் உள்ள கடுமையான அதிகாரங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பாரியளவிலான நிலை நிறுத்தல்களும், தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு எதிராகவும், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களிடையே வளரும் அமைதியின்மையை நசுக்குவதற்கும் பயன்படுத்தப்படும் என சோ.ச.க. எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை கடுமையாக சீரழித்த அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பெருகிய சமூக போராட்டங்களைக் கண்டது. கடந்த டிசம்பர் மாதம் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வறுமை-நிலை தினசரி ஊதியத்தை இரட்டிப்பாக்க கோரி ஒன்பது நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்தனர். மார்ச் மாதம் தீவு முழுவதும் 200,000 ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர்.

அவசரகால நிலைமையின் கீழ், இராணுவம் மற்றும் பொலிசுக்கு மிகப் பரந்தளவிலான அதிகாரங்கள் உள்ளன. குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் மக்களை கைது செய்வது, ஆணையின்றி தேடல்களை நடத்துவது, ஊர்வலங்களை தடை செய்வது, பிரசுரங்களை கட்டுப்படுத்துவது, சொத்துக்களை கைப்பற்றுவது, தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய பயன்படும் அத்தியாவசிய சேவையை பிரகடனம் செய்வதும் இவற்றில் அடங்கும். ஸ்தாபகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ஜனநாயக விரோத ஒழுங்குமுறைகளுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளன.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் பெயரில், ​​அரசாங்கமும் அரச எந்திரமும் முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. பாதுகாப்புப் படைகள் முஸ்லீம் சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன், கண்டுபிடித்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், இராணுவச் சீருடைகள் மற்றும் இஸ்லாமிய வெளியீடுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தின. சில சந்தர்ப்பங்களில், ஊடகங்கள் வெளிப்படையாக தவறான தகவல்களை "திருத்தியும்" உள்ளன, வேறு சில சந்தர்ப்பங்களில் பொய்கள் மற்றும் பாதி உண்மைகளை புறக்கணித்துவிட்டன.

ஜனாதிபதி சிறிசேன, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்கா மற்றும் நிக்காப்பை தடை செய்வதற்கு அவசரகால நிலையைப் பயன்படுத்திக்கொண்டார். சிங்கள பௌத்தர்களை தொந்தரவு செய்யாத வகையில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி பிரசங்கங்களை செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு முஸ்லிம் மத குருக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எந்தவொரு "பயங்கரவாதியை" பற்றியும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு அறிவறுத்தின. இவை முஸ்லீம்-விரோத உணர்வுகளையும் வன்முறைகளையும் மட்டுமே ஊக்குவித்தன.

பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், பல்வேறு சிங்கள பௌத்த அதிதீவிரவாத குழுக்கள், சமீபத்திய ஆண்டுகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளன. பௌத்த பிக்குகள் தலைமையிலான பொதுபல சேனா, ராவணா பலய, சிங்ஹலே மற்றும் இதே போன்ற குழுக்கள், ஜூன் 2014 இல் அளுத்கமவில் மற்றும் மார்ச் 2018 இல் திகனவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நடத்தியது. சொத்துக்களை அழித்து பல பேரைக் கொன்றது.

நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் விக்கிரமசிங்க, "நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை மீட்பதற்கு பாதுகாப்பு படைகளுக்கும் பொலிசுக்கும் அனைத்து தேவையான அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன," என்று அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த இராஜபக்ஷ ஒரு அறிக்கையை வெளியிட்டார்: "முழு நாட்டையும் ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொள்கையில் அது அமுல்படுத்தப்பட வேண்டும்," என அவர் கூறினார்.

ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு கன்னையும் சர்வாதிகார ஆட்சிக்கான மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை நிறுவுகின்றன. இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க, நேற்று நியூஸ் ஃபெஸ்ட் தொலைக் காட்சி செய்திக்கு பேசுகையில், "அரசாங்கத்தால் அல்லது ஆயுதப்படைகளால் விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை அழிக்கவோ அல்லது அவமதிக்கவோ எவரேனும் முயற்சித்தால் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்," என பிரகடனம் செய்தார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதான மேஜர் ஜெனரல் ரவீந்திர விஜேகுனரத்ன, பாதுகாப்பு படைகளுக்கு தமது ஆதரவை வழங்குமாறு மக்களை அழைத்தார். இராணுவமானது நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சீருடை அணிந்த சிப்பாய்களை மட்டுமல்லாமல் சிவில் உடையில் இரகசியமாகவும் நிறுத்தியுள்ளது, என அவர் தெரிவித்தார்.

இனவாத வன்முறையைக் கட்டுப்படுத்தும் சாக்குப் போக்கில் அவசரகால நிலைமையின் கீழ் ஒரு சர்வாதிகாரத்தை நோக்கிய அபிவிருத்தி இடம்பெறுகின்றது. பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, இராணுவம் குறிப்பாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள், பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் நெருக்கமாக வேலை செய்து வருகிறது.

தொழிலாள வர்க்கம் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத வன்முறையை எதிர்ப்பதோடு, இன பாகுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக போராட வேண்டும். அவர்கள் பெருந்தோட்டங்களில், வேலைத் தளங்களில் மற்றும் சுற்றுப்புறங்களில் சுயாதீன நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதோடு, அனைவரதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்காக இளைஞர்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் ஆதரவு கோரி அழைப்பு விடுக்க வேண்டும்.

சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்திலும் மட்டுமே ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். சோசலிச சமத்துவக் கட்சியை இந்த போராட்டத்தை வழிநடத்த தேவையான தலைமைத்துவமாக கட்டியெழுப்புவதே இப்போதைய அவசரத் தேவையாகும்.