ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

WikiLeaks warns US Justice Department preparing more charges against Assange

அசான்ஜூக்கு எதிரான மேலதிக குற்றச்சாட்டுக்களுக்கு அமெரிக்க நீதித்துறை தயாரிப்பு செய்து வருவதாக விக்கிலீக்ஸ் எச்சரிக்கின்றது

By Oscar Grenfell 
7 June 2019

பத்திரிகையாளரும் வெளியீட்டாளருமான ஜூலியன் அசான்ஜூக்கு எதிராக மேலதிக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு அமெரிக்க நீதித்துறை தயாரிப்பு செய்து வருவதாக வியாழனன்று விக்கிலீக்ஸ் எச்சரித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள், முன்னர் மோசடிக்காக குற்றம்சாட்டப்பட்ட ஒரு FBI உளவாளியான Sigurdur Thordarson வழங்கும் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று விக்கிலீக்ஸ் கூறியது. இவர், ஒரு புதிய குற்றச்சாட்டுக்கு தயாரிப்பு செய்வதற்கு நோக்கம் கொண்ட வினாக்களுக்கு பதிலளிப்பதற்காக சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நாளில், அசான்ஜின் உடல்நலம் மிகவும் மோசமடைந்து வருவது பற்றி புதிய எச்சரிக்கைகள் குறித்த செய்திகள் வெளிவந்தன. அசான்ஜின் தந்தை, ஜோன் ஷிஃப்டன், அவரது மகனை பெல்மார்ஷ் சிறையில் சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தார், ஆனால் அத்திட்டத்தை மாற்றியமைத்து, அசான்ஜிற்கு ஒரு வெளிப்படையான அவசரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மருத்துவரின் விஜயம் தான் தற்போது அவருக்கு தேவைப்படுகிறது என்று சொல்லப்பட்டது.   

“அசான்ஜை சென்று பார்ப்பதற்கு நான் இரண்டு முறை பதிவு செய்திருந்தேன், ஆனால் அது இரத்து செய்யப்பட்டுவிட்டது,” என்று ஆஸ்திரேலியாவின் Herald Sun நாளிதழுக்கு அவர் தெரிவித்தார். “இரண்டு முறை பதிவுகள் செய்யப்பட்டுவிட்டதால், மருத்துவர் அவரை பார்வையிடுவதற்கு குறுகிய காலத்திற்குள்  ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இந்த வாரம் ஆரம்பத்தில், சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸர், அசான்ஜ் மீதான துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால் அவர் சிறையிலேயே இறக்க நேரிடும் என எச்சரித்தார்.

ABC செய்தியாளர் பிலிப் வில்லியம்ஸ் மெல்ஸரிடம், “உங்களுடைய தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலில்லை என்பதால், உண்மையில் சிறையிலேயே அவர் இறந்துவிட நேரிடலாம் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டபோது, மெல்ஸர் அதற்கு “நிச்சயமாக, ஆம், என் கருத்துப்படி, இது மிகவும் யதார்த்தமானது என்பதால் எனக்கு அச்சமாக உள்ளது…” என்று பதிலிறுத்தார்.

அசான்ஜ் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவது தொடர்பாக பிரிட்டனுக்கு முற்றுமுழுதான கோரிக்கையை முன்வைப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் ஜூன் 14 வரையிலான கால அவகாசத்தைக் கொண்டுள்ளது. தற்போதைய குற்றச்சாட்டு, அமெரிக்க போர் குற்றங்களையும், மற்றும் உலகளாவிய இராஜதந்திர சதிகளையும் அம்பலப்படுத்தியதில் அசான்ஜின் பங்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியது என்பதுடன், 175 ஆண்டுகால அதிகபட்ச சிறை தண்டனையை இது விளைவிக்கக் கூடியது.

ஆயினும், விக்கிலீக்ஸின் செய்தி வெளியீடு, ஒரு மேலோங்கிய குற்றச்சாட்டிற்கு அமெரிக்கா தயாரிப்பு செய்து வருவதாகத் தெரிகிறது என்று தெரிவித்தது. இது, அசான்ஜூக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுக்களும் சேர்ந்து ஏற்கனவே கட்டவிழ்த்துவிடப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

விக்கிலீக்ஸ் இவ்வாறு குறிப்பிட்டது: “டச்சு பொது ஒளிபரப்பு NOS, சென்ற வாரம் Sigurdur Thordarson அமெரிக்காவிற்கு சென்றார் என்றும், அங்கு அடுத்த வார இறுதிக்குள் ஜூலியன் அசான்ஜிற்கு எதிராக ஒரு புதிய அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கான தயாரிப்புக்கள் தொடர்பாக ‘விரிவான விசாரணைக்குட்படுத்தப்பட்டார்’ என்றும் தெரிவித்தது.”

விக்கிலீக்ஸ் செய்தி தொடர்ந்து இவ்வாறு தெரிவித்தது: “இந்த ஆண்டில் மே 6 அன்று, அசான்ஜிற்கு எதிரான FBI விசாரணையை நடத்திய FBI சிறப்பு முகவரான மேகன் பிரவுன், ஐஸ்லாந்து பொலிஸ் உதவியுடன் FBI உளவாளி Thordarson இனை மறுவிசாரணை செய்வதற்காக, வழக்கறிஞர் கெல்லென் ட்வைரை உடனழைத்துக் கொண்டு கிழக்கு மாவட்டமான வேர்ஜீனியாவில் இருந்து ஐஸ்லாந்திற்கு சென்றார் என்று NOS தெரிவித்தது.”

நீதித்துறை மற்றும் Thordarson இடையேயான ஒத்துழைப்பு, அசான்ஜ் கையளிக்கப்படுவதற்கான மேலும் அவர் துன்புறுத்தப்படுவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் அடிப்படை சட்ட விதிகளை மீறுவதாக நடத்தப்பட்டுவரும் ஒரு அரசியல் இட்டுக்கட்டல் தான் என்பதை மேலும் நிரூபித்துள்ளது.

FBI உளவாளி நம்பத்தகுந்தவரில்லை. மோசடி பற்றிய குற்றங்களையும், சிறார்களுக்கு எதிரான மோசடி மற்றும் பாலியல் குற்றங்களையும் உள்ளடக்கிய குற்றவியல் பதிவு உட்பட, சட்டவிரோதமான உளவு பார்ப்புக்களிலும் மற்றும் அரசு ஆத்திரமூட்டல்களிலும் ஈடுபட்டதற்கான ஒரு மிக நீண்ட முன்வரலாற்றை அவர் கொண்டுள்ளார். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான நடைமுறை உரிமையை உறுதி செய்வது குறித்த எந்தவொரு முறையான வழக்கு விசாரணையிலும் ஒரு நம்பகமான அல்லது நேர்மையான சாட்சியாக Thordarson இனை கருத முடியாது.

17 வயதாக இருந்த ஒரு ஐஸ்லாந்து நாட்டவரான Thordarson, 2010 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல், விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு தன்னார்வத்துடன் வேலை செய்து அதற்கு தன்னை உகந்தவராக காட்டுவதற்கு முனைந்தார் என்று கூறப்படுகிறது.

அவர் இணைந்து செயற்பட ஆரம்பித்து ஓராண்டிற்குள், நிறுவனத்தில் இருந்து பணம் திருடுவதாக Thordarson ஐ விக்கிலீக்ஸ் சந்தேகித்தது. அதனைத் தொடர்ந்து, 2014 இல் ஐஸ்லாந்தில், விக்கிலீக்ஸிற்கு நன்கொடைகளாக வழங்கப்பட்ட நிதியுதவிகளை அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அவர் திருப்பிவிட்டது உட்பட, திருட்டு தொடர்பான 18 குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் தண்டனைக்குள்ளானார். Thordarson அவர்களிடம் இருந்து 50,000 டாலர் வரை திருடிவிட்டார் என்று ஊடக அமைப்பு தெரிவித்தது.

ஆகஸ்ட் 2011 இல், ஐஸ்லாந்தில் ரெய்க்ஜாவிக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு, அசான்ஜூக்கு எதிராக “அமெரிக்காவில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் குற்றவியல் விசாரணை”க்கு உதவுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்ததாக Thordarson கூறினார். பின்னர், FBI மூலம் ஒரு தகவல்வழங்குபவராக அவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Thordarson தானாக ஒத்துக்கொண்டபடி, 2011 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையே ரெய்க்ஜாவிக்கில் பல முறை FBI முகவர்களை சந்தித்தார். அந்த காலகட்டத்தில், விக்கிலீக்ஸ் பற்றிய இரகசிய கூட்டங்களில் அவரை கலந்துகொள்ள செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகள் டென்மார்க்கிற்கு மூன்று முறையும் அமெரிக்காவிற்கு ஒரு முறையும் அவரை அனுப்பினர்.

விக்கிலீக்ஸிடம் இருந்து எடுத்ததாக அவர் கூறிய எட்டு hard drives களை Thordarson FBI ஐ வசம் ஒப்படைத்தார். அதற்கு வெகுமதியாக அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து ஆயிரக்கணக்கான டாலர்களை அவர் பெற்றார்.

அசான்ஜ் மீது தரவு திருட்டு குற்றங்களை சுமத்துவதற்கு அமெரிக்க அதிகாரிகள் தீட்டிய சதியில் FBI உளவாளி ஈடுபடுத்தப்பட்டார். 2011 ஆரம்பத்தில், Lulzsec தரவு திருட்டு குழுவை அவர் அணுகி, ஐஸ்லாந்தின் அரசு அமைப்புக்கள் மற்றும் பெருநிறுவனங்களில் உள்ள கணினி அமைப்புக்களை இரகசிய உளவு பார்க்க உதவுமாறு அவர்களை கேட்டதாகக் கூறினார்.

Lulzsec தரவு திருட்டு குழுவை Thordarson தொடர்பு கொண்ட அந்த நேரத்தில்,  “சாபு” என அறியப்படும் அதன் தலைவர் ஹெக்டர் சேவியர் மோன்சேகுர், குற்றச்சாட்டுக்களை தவிர்ப்பதற்காக FBI உடன் ஒத்துழைக்க ஏற்கனவே அவர் ஒப்புக் கொண்டிருந்தார்.

Thordarson மற்றும் Lulzsec குழு இடையேயான உரையாடல்கள், அமெரிக்க அரசாங்கம் இயக்குவித்த மற்றும் கட்டுப்படுத்திய ஒரு தரவு உளவு பார்ப்பு நிறுவனத்திற்கும், மற்றும் விக்கிலீக்ஸ் நிறுவனத்தில் இருந்து பணம் திருடியதாக ஏற்கனவே சந்தேகத்திற்கு ஆளான ஒரு சந்தேகத்திற்குரிய ஐஸ்லாந்திய இளவயது இளைஞருக்கும் இடையிலானவை என்பதால் அவை அதிக வலிமைமிக்கதாக இருந்தன. Lulzsec குழுவை Thordarson அணுகியது தொடர்பான எந்தவொரு விடயத்தையும் அறிந்திருக்கவில்லை என அசான்ஜூம் விக்கிலீக்ஸூம் மறுத்துவிட்டனர்.


2012 இல் ஜூலியன் அசான்ஜ்

ஜூன் 2011 இல், அமெரிக்க அதிகாரிகள், ஐஸ்லாந்து ஒரு உடனடி இணைய தாக்குதலை எதிர்கொண்டுள்ளது என எச்சரிக்கை செய்தனர். ஆகஸ்டில், எட்டு அல்லது ஒன்பது FBI முகவர்கள் ரெய்க்ஜாவிக்கிற்கு  விமானத்தில் வந்தனர். அவர்கள் கிழக்கு மாவட்டமான வேர்ஜீனியாவில் இருந்து வந்திருந்தனர், முந்தைய வருடம் விக்கிலீக்ஸூக்கு எதிரான ஒரு இரகசியமான விசாரணைக் குழு அங்கு உருவாக்கப்பட்டது. ஐஸ்லாந்தின் அப்போதைய உள்துறை அமைச்சர், Ögmundur Jonasson அவர்கள் வெளியேற வேண்டும் என்று கோரினார்.

2013 இல் Katoikos உடனான ஒரு பேட்டியின்போது, ஜோனாசன், “ஜூலியன் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் மீது குற்றம்சுமத்துவதற்கான ஒரு இட்டுக்கட்டல் நடவடிக்கையாக நான் அறிந்து கொண்டதில் எங்களது ஒத்துழைப்பை” நாடி முகவர்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர் என்று தெரிவித்தார். அவர், அசான்ஜ் பொறியில் சிக்கவைக்கப்பட்டது, 2011 இல் அமெரிக்கா எச்சரித்த இணைய தரவு உளவு பார்ப்பு நடவடிக்கைகள் தொடர்பானது என்பதை தெளிவு படுத்தினார்.

ஜோனாசன் இதையும் சேர்த்துக் கூறினார்: “ஐஸ்லாந்தில் பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐலாந்த் அதிகாரிகள் அவர்களுக்கு அங்கீகாரம் அளித்திருந்ததன் பின்னரும், என்னுடைய திட்டநிரலில் இல்லாத விக்கிலீக்ஸ் மீதான தாக்குதலுக்குப் பின்னரும், குறைந்தபட்சம் சொல்வதானால், அவர்கள் உடனான அனைத்து ஒத்துழைப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென நான் உத்தரவிட்டதுடன், ஐலாந்தில் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் நிறுத்த வேண்டும் என்பதையும் நான் தெளிவுபடுத்தினேன்.”

NOS பேட்டியின்போது, Thordarson அவரது சாட்சியத்தின் அடிப்படையிலான, அசான்ஜிற்கு எதிரான புதிய குற்றச்சாட்டுக்கள் 2011 இட்டக்கட்டல் நடவடிக்கையைக் காட்டிலும் அதிகப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார். மேலும் அவர், அவரது சமீபத்திய FBI நேர்காணல்கள் Monsegur உடனான அவரது தொடர்புகள் மீது கவனத்தைக் கொண்டிருந்தது என்று தெரிவித்தார்.

விக்கிலீக்ஸ் அதன் அறிக்கையில் பின்வருமாறு எச்சரித்தது: “நம்பத்தகுந்த சாட்சியாளர்கள் அல்லாத Thordarson மற்றும் Monsegur அளிக்கும் சாட்சியங்களை இந்த வழக்கு நம்பியிருப்பதால் அமெரிக்காவில் இது தகர்ந்து போகும் என்ற நிலையில், அமெரிக்கா அவர்களது வெற்றிக்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இங்கிலாந்து கையளிப்பு நடைமுறைகளின் போது அவர்களது சாட்சியாளர்களின் அடையாளங்களை மூடிமறைக்கக் கூடும்.”

மேலும் தொடர்ந்து இவ்வாறு தெரிவித்தது: “ஜூன் 14 அன்று தொடங்கப்படவுள்ள, இங்கிலாந்து கையளிப்பு நடைமுறைகளின் போதான சாட்சியங்களின் நம்பகத்தன்மைக்கு சவால் செய்வதாக அசான்ஜூக்கு இதை சாத்தியமற்றதாக்கும்.”

சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸர், “அமெரிக்காவில் மட்டுமல்ல, இங்கிலாந்து, சுவீடன் மேலும் சமீபத்தில் ஈக்வடோரிலும் சேர்ந்து அசான்ஜூக்கு எதிராக மேற்கொள்ளப்படுவது இரக்கமற்ற மற்றும் இடையறாத வகையிலான வெளிப்படையான துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் அவதூறு பரப்புதல் பிரச்சாரமாகும்” என்று அசான்ஜின் தற்போதைய நிலைமையை பற்றி மே 31 அறிக்கையில் அவர் முத்திரைகுத்தியதற்கு ஏற்ப அசான்ஜூக்கு எதிராக கூடுதல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான தயாரிப்புக்கள் உள்ளன.

அசான்ஜின் அடிப்படை சட்ட மற்றும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற மெல்ஸரின் எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துவதாக விக்கிலீக்ஸ் அறிக்கையை உள்ளது. மேலும், “உளவியல் சித்திரவதை” காரணமாக அசான்ஜ் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் மெல்ஸர் கண்டறிந்தார்.

நேற்று Canary க்கு கருத்து தெரிவிக்கையில், மெல்ஸர், “எனக்கு கிடைத்த ஆதாரங்கள், திரு அசான்ஜ் மீது தொடர்ச்சியான ஒருங்கிணைந்த துன்புறுத்தலை விளைவித்ததற்கு இங்கிலாந்து, சுவீடன், அமெரிக்கா மேலும் மிக சமீபத்தில் சேர்ந்ததான ஈக்வடோர் அரசாங்கங்கள் தான் முதன்மை பொறுப்பாளிகள் என்று வலுவாக அறிவுறுத்துகின்றன” என்று சேர்த்துக் கூறினார்.

மேலும் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “அதன்படி, இந்த அரசாங்கங்கள் அவற்றின் நடத்தையின் எதிர்வரும் ஒட்டுமொத்த விளைவுக்கு கூட்டு பொறுப்பாளிகளாக இருக்கும், என்றாலும் அவற்றின் தனிப்பட்ட பங்களிப்புகளுக்கு ஏற்ப தனித்தனியான பொறுப்பாளியாகவும் இருக்கும், அது, நேரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டதற்கான, தூண்டுதலளித்ததற்கான, ஒப்புதலளித்ததற்கான, அல்லது ஒத்துழைப்பு வழங்கியதற்கான என ஏதோவொன்றை காரணமாக கொண்டிருக்கலாம்.

அசான்ஜூக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சுவீடனின் போலியான விசாரணைகள் பற்றியும், அத்துடன் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை ஆயுள் சிறைவாசத்திற்கு உட்படுத்த அச்சுறுத்துவதான “அமெரிக்காவில் சுமத்தப்படவுள்ள இரகசியமான மாபெரும் தீர்ப்புக் குழுவின் குற்றச்சாட்டு” பற்றியும், அவரது அரசியல் அடைக்கலத்தை ஈக்வடோர் சட்டவிரோதமாக நீக்கியது பற்றியும், மேலும் “திரு அசான்ஜ் கைதுசெய்யப்பட்டதற்கு பின்னர் அவருக்கு எதிராக பிரிட்டிஷ் நீதிபதிகள் காண்பித்து வரும் வெளிப்படையான ஒருபக்க சாய்வு பற்றியும் சிறப்பு அறிக்கையாளர் குறிப்பிட்டார்.

அசான்ஜூக்கு எதிரான சர்வதேச பிரச்சாரம், கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் உட்பட, அடிப்படை ஜனநாயக விதிமுறைகளை ஒழித்துக்கட்டுவதற்கான சர்வதேச அளவிலான அரசாங்கங்களின் தாக்குமுகப்பாக உள்ளது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறை சட்ட குற்றச்சாட்டுக்கள், சர்வதேச அளவில் புதிய நிறுவனங்களுக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கைகளை மடைதிறந்துவிட்டுள்ளது, இது, அரசாங்கத்தின் உளவு நடவடிக்கை மற்றும் போர் குற்றங்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் இந்த வாரம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கைகள் மூலம் நிரூபனமாகியது.

இது, அசான்ஜின் உடனடியான விடுதலையை பாதுகாப்பதற்கும் மேலும் அனைத்து ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும்  தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் உரிமைகளின் அனைத்து ஆதரவாளர்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச இயக்கம் கட்டியெழுப்புவதன் அதிமுக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முக்கியமான போராட்டத்தில் பங்கெடுப்பதற்கு உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தொடர்பு கொள்ளுங்கள்.