ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK home secretary signs US extradition request for Julian Assange

ஜூலியன் அசான்ஜ் குறித்த அமெரிக்காவின் நாடுகடத்தல் கோரிக்கையில் இங்கிலாந்து உள்துறைச் செயலர் கையெழுத்திட்டுள்ளார்

By Mike Head 
14 June 2019

ஜூலியன் அசான்ஜ் குறித்த அமெரிக்காவின் நாடுகடத்தல் கோரிக்கையை புதனன்று ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் உள்துறைச் செயலர் ஸஜித் ஜாவித் வியாழனன்று பெருமையடித்துக் கொண்டார், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மற்றும் செய்தியாளரை அமெரிக்காவிடம் கையளிக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ட்ரம்ப் நிர்வாகம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்த அடுத்த நாளிலேயே இது நிகழ்ந்துள்ளது.

ஒரு வானொலி நேர்காணலில், அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடுகடத்தும் நடைமுறைக்கு பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் முதலில் ஒப்புதலளிக்க வேண்டிய அவசியம் பற்றி ஜாவித் வெறும் உதட்டவில் கூறியுள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள அசான்ஜை துன்புறுத்துபவர்களிடம் அவரை கையளிப்பு செய்வதற்கு பிரிட்டிஷ் அரசியல் ஸ்தாபகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மேலும் அது தெளிவாக்கியது.


ஜூலியன் அசான்ஜ்

 “பொலிஸ் அவரை கைது செய்ய முடிந்தது குறித்தும், தற்போது சரியாக அவர் காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்தும் முதலில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவர் இங்கிலாந்தின் சட்டத்தை மீறிவிட்டார்,” என்று வியாழனன்று பிபிசி வானொலி 4 இல் பேசுகையில் ஜாவித் தெரிவித்தார். மேலும், “அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட நாடுகடத்தல் கோரிக்கை நாளைதான் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வரும், என்றாலும் நேற்றே நாடுகடத்தல் ஆணையில் நான் கையெழுத்திட்டுவிட்டேன்….” என்றும் கூறினார்.

“இதுதான் நீதிமன்றத்தின் இறுதி முடிவாகவும் இருக்கும், என்றாலும் உள்துறைச் செயலருக்கு அதில் மிகமுக்கிய பங்கு இருக்கிறது என்ற நிலையிலும், எல்லா நேரங்களிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நான் விரும்புவதாலும், எங்களிடம் ஒரு நியாயமான நாடுகடத்தல் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதில் நான் கையெழுத்திட்டுவிட்டேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள், இலண்டன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அசான்ஜின் வழக்கு மீதான முதல்கட்ட விசாரணையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நாளான வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டன. ஏப்ரல் 11 அன்று அசான்ஜ் கைது செய்யப்பட்டு, பின்னர் உடனே சிறையிலிடப்பட்ட நடவடிக்கைகளுடன் நாடுகடத்தல் நடைமுறையை நேரடியாக தொடர்புபடுத்துவதன் மூலமாக, ஒரு ஆஸ்திரேலிய குடிமகனான அசான்ஜூக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் தீட்டி வரும் கூட்டுச் சதியை மட்டுமே ஜாவித் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மிகச்சிறிய பிணை மீறல் குற்றங்களை போலிமூடுதிரையாக பயன்படுத்தி, ஏப்ரல் 11 அன்று, அசான்ஜ் அரசியல் அடைக்கலம் புகுந்திருந்த ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்தில் இருந்து பிரிட்டிஷ் பொலிசார் மூலம் அவர் வெளியே இழுத்து வரப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில், அமெரிக்க வழக்கறிஞர்கள் அவர்களது சதித்திட்டத்தின்படி, ஒரு இரகசிய அமெரிக்க அரசாங்க கணினியை அணுகுவதற்கு அசான்ஜ் முயற்சித்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டியதாக அவர்கள் கூறினர்.

அசான்ஜூம், மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் 2010 முதல் எச்சரித்து வந்தது போல, முன்னாள் இராணுவ உளவுத்துறை ஆய்வாளரான செல்சியா மானிங் என்ற துணிச்சலான இரகசிய செய்தி வெளியீட்டாளரின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்ட, இரகசிய தகவல்களை வழங்குவதற்கு ஊக்குவித்தல், பெறுதல் மற்றும் வெளியிடுதல் குற்றங்களுக்கு உளவுத்துறை சட்டத்தின் கீழ் குற்றங்களை சுமத்தியது உட்பட, 17 புதிய குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்க அரசாங்கம் சென்ற மாதம் சேர்த்துக் கொண்டது. இது, செய்தித்துறை மற்றும் ஊடகத்துறை சுதந்திரம் மீதான ஒரு முன்னணி தாக்குதலாக உள்ளது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் இராணுவ போர்க் குற்றங்கள், கியூபாவில் உள்ள அமெரிக்க குவண்டநாமோ வளைகுடா தடுப்புக் காவல் முகாம்களில் நடத்தப்படும் சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்கள், மேலும் உலகெங்கிலுமான அமெரிக்க தலைமையிலான இராஜதந்திர சூழ்ச்சிகள், பரந்த வெகுஜன உளவு பார்ப்பு மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான நூறாயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் 2010 வெளியீட்டுடன் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்புபட்டவை.

பிரதமர் தெரசா மே பதவி விலகியது தொடங்கி, விரைவில் அசான்ஜூம் கைது செய்யப்பட்டார் என்ற நிலையில், அதனை பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டாடியதுடன் பொலிஸின் நடவடிக்கையையும் பாராட்டியது. “சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை” என்பதை காட்டுவதாக இது இருந்தது என்ற பொய்யான கூற்றை பதிவிடுவதற்கு ஜாவித் கூட உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்திற்கு விரைந்தார்.

உண்மை இதற்கு முற்றிலும் மாறாக உள்ளது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இரண்டுமே, அரசியல் தஞ்சம் கோரும் உரிமை, ஊடகத்துறை, மற்றும் நடைமுறை சுதந்திரம் உள்ளிட்ட, அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை துச்சமாக மதித்து நசுக்கி வருகின்றனர். இலண்டனின் இழிபுகழ் பெற்ற பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற நிலையில், அசான்ஜின் உடல்நலம் தீவிரமாக மோசமடைந்தது மட்டுமல்லாமல், அவரது தந்தை ஜோன் ஷிஃப்டன் இந்த வாரம் தெரிவித்தது போல, அசான்ஜ் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக சட்டரீதியான சவாலை அவர் எதிர்கொள்வதற்கான எந்தவித தயாரிப்பையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளன.

சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸரின் அறிக்கையை மீறுகின்ற வகையில், அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதற்கு உதவுவதற்கும் அதை முடுக்கிவிடுவதற்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. அத்துடன், அசான்ஜ் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்ற மருத்துவரின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய ஆவணம் உட்பட, அசான்ஜின் எதிர்காலம் பற்றிய தனது கவலைகளையும் சுருக்கமாக தெரிவித்து, இங்கிலாந்து, அமெரிக்கா, சுவீடன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஒரு விரிவான அறிக்கையை மெல்ஸர் அனுப்பியுள்ளார்.

“எனது மிக அவசரமான கவலை என்னவென்றால், அமெரிக்காவில் திரு அசான்ஜ், அவரது கருத்து சுதந்திரம், நியாயமான விசாரணை குறித்த அவரது உரிமை, மற்றும் சித்திரவதை மற்றும் பிற கொடுமைகள், மற்றும் மனிதாபிமானமற்ற அல்லது இழிவான வகையில் நடத்தப்படுதல் அல்லது தண்டனை வழங்கப்படுதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுவது ஆகியவை உள்ளிட்ட அவரது மனித உரிமைகள் தீவிரமாக மீறப்படக்கூடிய ஒரு உண்மையான அபாயத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு அவர் தள்ளப்படுவார்” என்று தனது வாக்குமூலம் பற்றி மெல்ஸர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார், இந்த அறிக்கை இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

அதேபோல, அமெரிக்காவிலும் நீதி மீதான ஒரு பரிகசிப்பு தொடர்கிறது. அதாவது, ஒரு மறைமுக நீதிமன்றம் நியமிக்கப்படுவதற்கு முன்னதாகவே அசான்ஜூக்கு எதிராக பொய் சாட்சியம் வழங்க நிர்பந்திப்பதற்கான ஒரு முயற்சியில், செல்சியா மானிங், எந்தவித குற்றச்சாட்டுமின்றி காலவரையற்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விக்கிலீக்ஸ், 2011 இல் ஐஸ்லாந்தில் “கணினி தரவு திருட்டில்” ஈடுபட்டார் என்று அசான்ஜ் மீது குற்றம்சாட்டுவதற்கு மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) மூலமான ஒரு முயற்சிக்கு புத்துயிரூட்ட அமெரிக்காவும் முனைந்து வருகிறது என்று சென்ற வாரம் எச்சரித்தது.

அசான்ஜ் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்படுவது, அதனைத் தொடர்ந்து விரைவில் சென்ற வாரம் ஆஸ்திரேலியாவில் முன்சம்பவிக்காத வகையிலான ஊடகவியலாளர்கள் மீதான பொலிசாரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டதும், சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கையை வழங்கியதுடன், பல நாடுகளில் செய்தியாளர்களையும் ஊடகத்துறை ஊழியர்களையும் வெளிப்படையாக பேசுவதற்குத் தூண்டியது. பல வருடகால மவுனத்திற்குப் பின்னர், ஊடகத்துறை சுதந்திரத்திற்கு எதிராக உலகளாவிய தாக்குதல்களுக்கான மடைதிறந்துவிடப்பட்டுள்ளது என்பதை ஊடகவியலாளர்கள் அங்கீகரித்து வருகின்றனர்.

இந்த வாரம், ஜேர்மன் ஊடகவியலாளர்கள் சங்கம் (DJU) அசான்ஜை விடுதலை செய்ய வேண்டுமென பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கோரியது. மேலும் இது, “விக்கிலீக்ஸ், செய்திகளை வெளியிடுவதன் மூலம் தேசத் துரோகத்திற்கு துணைபுரிந்துள்ளது என்று எது குறித்து அது குற்றம்சாட்டப்பட்டுள்ளதோ அதுவொரு குற்றவியல் குற்றமே அல்ல” என்றும் தெரிவித்தது. ஜேர்மன் ஊடகவியலாளர்கள் சங்கத் (DJU) தலைவரான ரீனா குருட்ஜ் (Tina Grudge), “ஊடகத்துறை தொடர்பான அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரத்தில் ஒரு பாரிய தலையீடு செய்வதாக,” எச்சரித்ததுடன், அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். இது, “ஊடக பணிகளில் தீவிர பின்விளைவுகளை கொண்டிருப்பதுடன்” “ஆற்றல்மிக்க இரகசிய செய்தி வெளியீட்டாளர்களுக்கு ஒரு தடையாக” செயலாற்றும்.

தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் உரிமைகளின் வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகின்றது என்றாலும், பெரும்பாலும் ட்ரம்ப் நிர்வாகத்தைப் போலவே, பிரிட்டிஷ் அரசாங்கமும் அசான்ஜை வாழ விடாமல் தடுப்பதற்கு தீர்மானித்துவிட்டது.

விக்கிலீக்ஸை மவுனமாக்குவது, மற்றும் அனைத்து இரகசிய செய்தி வெளியீட்டாளர்களையும் மற்றும் ஊடக நிறுவனங்களையும் அச்சுறுத்துவது என்பது, இன்னும் கூடுதலான போர்க் குற்றங்கள் மற்றும் ஜனநாயக விரோத துன்புறுத்தல்களுக்கான தயாரிப்புக்களுடன் முற்றிலும் பிணைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது அடைந்த உலகளாவிய மேலாதிக்கத்தை மீளஸ்தாபிப்பது குறித்த வாஷிங்டனின் உந்துதலின் ஒரு பாகமாக, குறிப்பாக பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதன் கூட்டணி நாடுகளின் ஆதரவுடன், சீனா, ஈரான், வெனிசுவேலா மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

அசான்ஜ் அவரது உடல்நிலை அனுமதிக்கும் பட்சத்தில், வெள்ளியன்று பெல்மார்ஷ் சிறையில் இருந்து நடைபெறவுள்ள நாடுகடத்தல் கோரிக்கை மீதான விசாரணையில் காணொளி இணைப்பின் மூலம் தோன்றவிருக்கிறார். முறையான விசாரணையின்றி, எந்தவொரு வழிகாட்டியும் இல்லாத நிலையில் பிணை குற்றச்சாட்டுக்களின் பேரில் அசான்ஜ் விரைவாக சிறையிலிடப்படுவாரானால், நீதிபதிகள் அவரை நாடுகடத்துவதற்கான நடைமுறையை விரைந்து முடிக்க முனைவர்.

அசான்ஜின் வழக்கறிஞர்கள் அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படக் கூடாது என்று விவாதிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றனர், ஏனென்றால் அமெரிக்காவில் ஒரு நியாயமான விசாரணையை அவர் எதிர்கொள்ள மாட்டார் என்பதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் “அரசியல்” குற்றங்களாக கருதப்படுகின்றன.

சட்டரீதியாக, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பின் மீதும் மேல்முறையீடு செய்வதற்கு அசான்ஜூக்கு உரிமை உண்டு, மேலும் அதன் மூலம் அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதை சில மாதங்களுக்கு தாமதிக்கவும் முடியும். ஆயினும், நீதிமன்ற நடைமுறைகள் முடிந்தவுடனே, ஜாவித், அல்லது பிரிட்டிஷின் அடுத்த உள்துறைச் செயலராக யார் பதவிக்கு வந்தாலும், நாடுகடத்தல் நடைமுறை மீது விரைந்து முத்திரைகுத்தும் அதிகாரத்தை அவர் கொண்டிருப்பார்.

அந்த இறுதி கட்டத்தில், அசான்ஜ் மரண தண்டனையை எதிர்கொள்ள மாட்டார் என்பதற்கும் —வேண்டுமானால், அமெரிக்க வெளிவிவகாரச் செயலரிடம் இருந்து அது நிகழாமலிருக்க ஒரு உத்தரவாதத்தை ஏற்க முடியும்— மேலும், அசான்ஜ் எந்த குற்றங்களுக்காக நாடுகடத்தப்படுகிறாரோ அந்த குற்றங்கள் மட்டுமே அவர் மீது சுமத்தப்படும் என்பதற்கும் உள்துறைச் செயலர் சான்றளிக்க வேண்டும் என்பதாகும், ஆனால் அதற்கு சில விதிவிலக்குகளும் உள்ளன. அதாவது, அசான்ஜ் ஒருமுறை அமெரிக்க காவலின் கீழ் சென்றுவிட்டால் கூட, அத்தகைய உத்தரவாதங்கள் எதுவும் பயனற்றவையே.

விக்கிலீக்ஸ் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான ஆதரவாளர்கள், அமெரிக்க நாடுகடத்தல் நடைமுறையை எதிர்த்தும் அசான்ஜையும் மானிங்கையும் விடுவிக்கக் கோரியும் இந்த வாரம் பேரணிகளை நடத்தி வருகின்றனர். வெள்ளியன்று, காலை 9 மணியளவில், இலண்டனில், அசான்ஜ் மீதான விசாரணை நடத்தப்படவுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவில், சோசலிச சமத்துவக் கட்சி (SEP) சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களில் அடுத்த சுற்று பேரணிகளை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலிய அரசாங்கம், அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிரான உத்தரவாதத்துடன், அவர் உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவதை பாதுகாக்க அதன் சட்ட மற்றும் இராஜதந்திர ரீதியிலான அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஆஸ்திரேலிய குடிமகனான அசான்ஜிற்கு அதன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று SEP கோரிக்கை விடுக்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் ஆகியவற்றின் தலைமையிலான உலகளாவிய போராட்டத்தில் இணையுமாறு எங்களின் அனைத்து வாசகர்களையும் நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.