ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany: Protest vigil in Dusseldorf demands release of Julian Assange

ஜேர்மனி: டுஸ்ஸெல்டோர்ஃப் நகரில் நடந்த எதிர்ப்பு ஊர்வலம் ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்யக் கோருகிறது

By our reporters 
17 June 2019

சென்ற வாரம் புதனன்று, “ஜேர்மனியின் அசான்ஜின் விடுதலைக்கான குழு”, ஜூலியன் அசான்ஜூக்கு உடனடியாக நிபந்தனையற்ற விடுதலை வழங்கக் கோரி வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியன் (North Rhine-Westphalian) பகுதியில் உள்ள டுஸ்ஸெல்டோர்ஃப் நகரின் பிரித்தானிய மற்றும் அமெரிக்க தூதரகங்களின் முன்பாக ஒரு எதிர்ப்பு ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தது.

அமெரிக்கா தற்போது, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மற்றும் செய்தியாளரை தன்னிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பிணை நிபந்தனைகளை அசான்ஜ் மீறினார் என்பதற்காக அதிகபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை நாடுகடத்துவதற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஊர்வலத்திலும் மற்றும் பேரணியிலும் ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei-SGP) உறுப்பினர்கள் பங்கேற்றுக் கொண்டனர் என்பதோடு, உலக சோசலிச வலைத் தளத்தின் The Global War on Journalism கட்டுரை அடங்கிய துண்டு பிரசுரங்களை அப்போது அவர்கள் விநியோகித்தனர். பேரணியின் போது SGP உறுப்பினரான டீட்மார் கைய்சன்கெர்ஸ்டிங் (Dietmar Gaisenkersting), டுஸ்ஸெல்டோர்ஃப் மத்திய புகையிரத நிலையம் முன்பு பேசினார். அவரது உரையும் அதே போல குழுவின் செய்தித் தொடர்பாளரது உரையும் முகநூல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

டுஸ்ஸெல்டோர்ஃப் நகரில் முக்கிய இரயில் நிலையம் அருகே பெர்த்தா-வொன்-சுற்னர்-பிளாட்ஸில் உள்ள இரண்டு தூதரகங்களின் முன்பாக, “ஜேர்மனியின் அசான்ஜ் பாதுகாப்பு குழு”வின் Isi என்பவர் பேசுகையில் அசான்ஜின் தலைவிதியைப் பற்றிய கவனத்தை ஈர்த்தார்.


இஸி

“அவர் உண்மையை முன்வைத்ததைத் தவிர வேறெந்த குற்றத்தையும் செய்துவிடவில்லை, குறிப்பாக அமெரிக்க போர்க் குற்றங்களைப் பற்றிய உண்மையை வெளியிட்டார்,” என்று அவர் கூறினார். அதனால் தான் ஏழு ஆண்டுகளாக தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், “எங்கும் நகர முடியாத, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத, மேலும் சூரியஒளியைக் கூட காண முடியாத” வெறும் 20 சதுர மீட்டர் அறைக்குள் அடைந்து வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார். தினமும் தனது உயிரை நினைத்து பயந்து அவர் வாழ வேண்டியுள்ளது. அதிலும் “ஆறு ஆண்டுகளாக அவரது தடுப்புக் காவலில் பார்வையாளர்களை சந்திப்பதற்கான அனுமதியும் அவருக்கு மறுக்கப்பட்டுவிட்டது, அவரது இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டது, அவரிடமிருந்து படுக்கை பறிக்கப்பட்டது, அவருக்கு வெப்பமூட்டுதல் வசதி நிறுத்தப்பட்டது, இன்னும் பல துன்புறுத்தல்கள் அவருக்கு நிகழ்த்தப்பட்டன.” அதனைத் தொடர்ந்து ஏப்ரலில், உயர் பாதுகாப்பு சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

ஒரு முக்கியமான ஊடகவியலாளர் இவ்வாறு நடத்தப்படுவது ரஷ்யா, சீனா அல்லது துருக்கியில் அல்ல, மாறாக, இங்கிலாந்தில் “ஜனநாயக மேற்கில்,” நடக்கிறது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

மேலும், “அசான்ஜின் விதியைப் பொறுத்துத்தான் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் நிலைத்து நிற்பதும் வீழ்வதும் உள்ளது,” என்றும் அவர் கூறினார். அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது என்பது, போர்க் குற்றங்கள், பொதுமக்கள் உளவு பார்ப்பு, அல்லது அரசாங்க சூழ்ச்சிகள் மற்றும் சதிகள் ஆகியவை பற்றிய செய்திகள் இனிமேல் வெளியிடப்பட மாட்டாது என்பதாகிறது. செய்தித்துறை பணியைச் செய்ததற்காக ஜூலியன் அசான்ஜ் குற்றவாளியாக்கப்பட்டார் என்றால், பிற ஊடகவியலாளர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட வேண்டும். ஆஸ்திரேலியாவிலும், பிரான்சிலும் அது ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதுடன், எதிர்வரும் காலத்தில் ஜேர்மனியிலும் அது நடந்தேறும்.

ஜூன் ஆரம்பத்தில், ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் அதிகாரிகள் 24 மணிநேர காலத்திற்குள் இரண்டு தனித்தனி ஊடக அலுவலகங்களில் நுழைந்து திடீர் சோதனை செய்தனர். இரண்டு சோதனை நடவடிக்கைகளுமே கசியவிடப்பட்ட செய்திகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன. அதன் மூலம், ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய சிறப்பு படையினர் நடத்தவுள்ள போர்க் குற்றங்கள் பற்றியும் மற்றும் ஆஸ்திரேலிய புலனாய்வு முகமைகள் நடத்த திட்டமிட்டுள்ள சட்டரீதியான பாரிய உள்நாட்டு கண்காணிப்பு பற்றியும் செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரான்சில், இம்மானுவல் மக்ரோனின் அரசாங்கம், சவுதி அரேபியாவின் குற்றச்செயலில் கூட்டுச் சேர்ந்து யேமனுக்கு எதிரான சட்டவிரோத போரில் பிரான்ஸ் பங்குகொண்டுள்ளது என்ற தகவல்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களை துன்புறுத்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைப்பதற்கான மக்ரோன் அரசாங்கத்தின் முயற்சிகளையும் அவர்கள் ஆவணப்படுத்திவிட்டனர்.

ஜேர்மனியில், “இரகசிய சேவை சட்டத்தினை ஒருமுகப்படுத்தல்” என்பதன் கீழ் செய்தி ஆசிரியர் அலுவலகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான ஒரு உடனடி தாக்குதலுக்கு அரசாங்கம் தயாரிப்பு செய்து வருகிறது.

ஐரோப்பிய தேர்தல்களின் போது ஜூலியன் அசான்ஜையும் செல்சியா மானிங்கையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் அதன் பிரச்சாரங்களை SGP தீவிரப்படுத்தியபோது SGP இனை இஸி சந்தித்தார்.


டீட்மார் கைய்சன்கெர்ஸ்டிங்

டீட்மார் கைய்சன்கெர்ஸ்டிங் அவரது உரையில், இதில் சம்பந்தப்பட்டுள்ள வர்க்கப் பிரச்சினைகள் பற்றி பேசினார். ஜூலியன் அசான்ஜூம் செல்சியா மானிங்கும் ஆளும் உயரடுக்கின் வர்க்கப் போராட்டங்களினால் பாதிக்கப்பட்டு கைதிகளாக இருப்பவர்கள் என்று கூறினார். மேலும், “சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவைகளுக்காக உலகின் மிகுந்த சக்திவாய்ந்த அரசாங்கங்களினால் கருணையின்றி அவர்கள் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள்” என்றும் கூறினார்.

அசான்ஜ் துன்புறுத்தப்படுவதும் மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் ஆளும் வர்க்க கொள்கைகள் மீதான அனைத்து எதிர்ப்புக்களுக்கும் எதிராக இயக்கப்படும் நடவடிக்கைகளாகும். “அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கடந்தகால குற்றங்கள் மட்டுமல்லாமல், வந்து கொண்டிருக்கும் இன்னும் மிகப்பெரிய ஒரு குற்றமும் தான் நீர்த்துப் போக செய்யப்படவிருக்கிறது.”

அனைத்திற்கும் மேலாக ஈரான் மீதான, அத்துடன் சிரியா மற்றும் வெனிசுவேலா நாடுகளுக்கு எதிராகவும் அதன் அச்சுறுத்தல்களை வாஷிங்டன் தீவிரப்படுத்தி வந்ததுடன், சீனா உடனான அதன் பொருளாதாரப் போரையும் அதன் இராணுவ மோதலையும் அதிகரித்து வருகிறது.

ஐரோப்பிய அரசாங்கங்கள் – அனைத்திற்கும் மேலாக பேர்லினில் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் அடங்கிய பெரும் கூட்டணி அரசாங்கம் - நாட்டை சீரமைப்பது, வெளிநாட்டில் இராணுவவாதம் மற்றும் உள்நாட்டில் பொலிஸ் அரசு சட்டங்கள் ஆகியவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் விடையிறுத்தன. ஜேர்மனியில், முதலாளித்துவம் குறித்த அனைத்து விமர்சனங்களையும் “இடதுசாரி தீவிரவாதம்” ஆகவும் மற்றும் “அரசியலமைப்புக்கு எதிரானதா”கவும் இருந்து வருவதாக இரகசிய சேவை ஏற்கனவே கண்டித்து வந்தது.

பெரும்பாலான ஊடகங்களும் போலி இடது அமைப்புக்களும் அவர்களது ஆளும் உயரடுக்கின் போர்களை ஆதரிப்பதற்கு வளைந்துகொடுத்தது போலவே, அசான்ஜ், மானிங் மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் அவை பாதுகாத்தன.

“பேச்சு சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாப்பது என்பது இந்த சமூக வட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது,” என்று கைய்சன்கெர்ஸ்டிங் வலியுறுத்தினார். மாறாக, “அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் தங்கியிருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

இணையத்தில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் என்பவை, போர், இனவாதம், சர்வாதிகாரம், சமத்துவமின்மை, மேலும் முதலாளித்துவத்தின் மற்ற அனைத்து சமூக கேடுகளுக்கும் எதிரான போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியமானவையாக இருக்கின்றன. “தற்போது உலகெங்கிலுமாக அதிகரித்தளவிலான போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்ற நிலையில், அசான்ஜையும் மானிங்கையும் விடுதலை செய்யவும் ஊடகவியலாளர்களை துன்புறுத்துவதை தடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டும்.

இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கைசன்கெர்ஸ்டிங் அழைப்பு விடுத்தார். அத்துடன், இந்த முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்கு நின்று செவிமடுத்த வழிப் போக்கர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

உரைகளைத் தொடர்ந்து, கைய்சன்கெர்ஸ்டிங்கும் மற்றும் பிற SGP உறுப்பினர்களும் பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசினர். எஸன் நகரில் இயந்திர வல்லுநர் ஒருவரான திமோ என்பவருடனும் பேசினர். அசான்ஜ் உடனான ஒற்றுமையை வெளிப்படுத்த இந்த ஊர்வலத்தில் பங்கேற்க அவர் வந்திருந்தார். “ஊடகவியல் சுதந்திரத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன்,” என்று அவர் கூறினார். மேலும், “துன்புறுத்தப்படுவோமோ என்று அச்சத்திற்கு இடமின்றி ஊடகவியலாளர்கள் அவர்களது தொழிலை நடத்திச் செல்ல வேண்டும். அவர்கள் விஷேட பாதுகாப்பை கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் தகவல் வழங்கும் உரிமையை செயல்படுத்துகின்றனர்” என்றும் கூறினார்.

அசான்ஜ் மற்றும் மானிங் மீதான துன்புறுத்தல், அடிப்படையில் அவர் தொடர்பான பல நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. “உண்மையில், என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ விரும்புகிறோம், மேலும் அரசாங்கங்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் எதிர்ப்பதற்கு ஏற்றபடி செயல்படுகிறோமா? என்ற கேள்விகளை நாம் அனைவரும் நமக்குத் நாமே கேட்டுக் கொள்ள வேண்டும், ஏனென்றால் இனிமேல் அவர்கள் நமது உரிமைகளை கட்டுப்படுத்தவோ, நம்மை கண்காணிக்கவோ கூடாது.” ஆயினும், பிரான்சில் “மஞ்சள் சீருடையாளர்களை” எதிர் கொள்ளும் “உள்நாட்டு போர் போன்ற நிலைமைகளை” நினைவுபடுத்தி, அரசாங்கங்கள் தாமே முன்வந்து அவற்றின் அதிகாரங்களை கைவிட்டுவிடாது என்று அவர் கூறினார். அங்கு, எதிர்ப்புக்களுக்கு எதிராக அரசு படையை பயன்படுத்தியது. அதனால் தான் “நமது சுதந்திரத்திற்காக நாம் எழுந்து நிற்கும்போது, அங்கு வன்முறை தாக்குதல்கள் நிகழ்த்தப்படக் கூடும் என்று நான் அஞ்சுகிறேன்” என்றும் கூறினார்.