ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

An exposure of “human rights” imperialism

Burma’s Suu Kyi joins Hungary’s Orbán in promoting anti-Muslim chauvinism

“மனித உரிமைகள்" ஏகாதிபத்தியத்தின் ஒரு வெளிப்பாடு

முஸ்லீம்-விரோத பேரினவாதத்தை ஊக்குவிப்பதில் பர்மாவின் சூ கி ஹங்கேரியின் ஓர்பனுடன் இணைகிறார்

Peter Symonds
12 June 2019

பர்மா அரசு தலைவர் ஆங் சான் சூ கிக்கும் ஹங்கேரியின் அதிவலது பிரதம மந்திரி விக்டொர் ஓர்பனுக்கும் இடையிலான கடந்த வார சந்திப்பு, சூ கியை "ஜனநாயகத்தின் ஓர் அடையாளமாக" ஊக்குவித்த "மனித உரிமைகள்" ஏகாதிபத்தியத்தினது ஊடக பிரச்சாரகர்கள் மீதான ஒரு நாசகரமான குற்றப்பத்திரிகையாக உள்ளது.

அது புடாபெஸ்ட் சிந்தனைகளின் ஒரு நிஜமான கூட்டமாக இருந்தது. அவர்களின் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஹங்கேரி அரசாங்கம் வெளியிட்ட ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையில், புலம்பெயர்வோர்களே “அவ்விரு நாடுகளின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று” என்பதில் உடன்பட்டிருந்த அவ்விரு தலைவர்களும், “முஸ்லீம் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது" குறித்து அவர்களின் பரஸ்பர கவலையையும் வெளியிட்டிருந்தனர்.

ஓர்பன் அவரின் வக்கிரமான புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகள் மற்றும் முஸ்லீம்-விரோத வெறுப்பு மனோபாவத்திற்காகவும், அத்துடன் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜேர்மனியுடன் கூட்டு சேர்ந்திருந்த ஹங்கேரியின் பாசிசவாத ஹோர்தெ ஆட்சியை பெருமைப்படுத்துவதற்காகவும் இழிபெயர் பெற்றவராவார். அவர் அதிவலது மற்றும் பாசிச வட்டாரங்களில் சர்வதேச அளவில் ஊக்குவிக்கப்படும் "மாபெரும் மீளமைப்பு" (The Great Replacement) எனும் இனவாத சூழ்ச்சி தத்துவத்தை பகிரங்கமாக ஆமோதித்துள்ளார். அத்தத்துவம், வெள்ளை கிறிஸ்துவ மக்கள், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து வரும் முஸ்லீம்களால் மாற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என வாதிடுகிறது.

இந்த அனுபவம், எப்போதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின் நலன்களுடன் நெருக்கமாக அணிசேர்ந்த தாராளவாதத்தினது பாத்திரம் மீது தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு மதிப்பிடவியலா அரசியல் படிப்பினையை வழங்குகிறது. “தாராளவாத" ஊடகங்கள் மற்றும் அரசு-சாரா அமைப்புகள் ஆதரித்த "மனித உரிமை" பிரச்சாரங்கள், இராணுவ தலையீடுகளையும், போர்கள், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் மற்றும் ஏனைய இராஜாங்க தில்லுமுல்லு வேலைகளையும் நியாயப்படுத்தவே செல்கின்றன என்பதற்கு வெறுமனே பர்மாவில் சூ கி குறிப்பாக உயிர்சித்திரம் போன்றவொரு எடுத்துக்காட்டாக உள்ளார்.

இதுவரையில் நடைமுறையில் இருந்ததைப் போலவே பர்மா (மியான்மர்) அரசுக்குத் தலைமை வகிக்கும் அரசு ஆலோசகராக சூ கி, பர்மாவின் ராகைன் மாநிலத்திலிருந்து ரோஹிங்கியா முஸ்லீம்களின் "இனச் சுத்திகரிப்பு" என்று ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எதை விவரித்தாரோ அதற்கு தலைமை தாங்கியுள்ளார். “ரோஹிங்கியா மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் அந்நாட்டிலிருந்து தப்பி ஓடியபோது, அதை விவரிக்க ஒரு சிறந்த சொல்லை உங்களால் காண முடியுமா?” என்று குட்டெரெஸ் 2017 இல் வினவினார்.

பர்மாவில் "முஸ்லீம் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது" குறித்து பேசுவது மிகப்பெரும் பொய்யைச் சார்ந்திருப்பதாகும். நூறாயிரக் கணக்கான முஸ்லீம் அகதிகள் பர்மிய இராணுவத்தின் கற்பழிப்பு மற்றும் படுகொலை வெறியாட்டத்திலிருந்து தப்பிக்க பங்களதேஷ் எல்லைக்குள் பெருக்கெடுத்தனர், அச்சம்பவங்களில் ரோஹிங்கியா கிராமங்கள் எரித்து தரைமட்டமாக்கப்பட்டன. பெரும்பாலும் பங்களதேஷில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் சுத்தமான தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இழிவார்ந்த முகாம்களில் உயிர்வாழ போராடுகின்றனர்.

பர்மிய இராணுவத்தின் மரணகரமான நடவடிக்கைகளுக்கு சூ கி உதவ இயலாத பார்வையாளராக இருக்கவில்லை, மாறாக அதன் நடவடிக்கைகளுக்குச் செயலூக்கமான பாதுகாவலராக, ஆதரவாளராக இருந்துள்ளார். இராணுவத்தின் வெறியாட்டத்தை ஐ.நா. “இனச் சுத்திகரிப்பாக" குணாம்சப்படுத்தியதை நிராகரித்த அவர், கடந்தாண்டு ஐ.நா. விசாரணையாளர்கள் மனிதாபிமான குற்றங்களுக்கு எதிராக இராணுவத்தின் தலைமை தளபதி அல்லது ஏனைய தளபதிகளை வழக்கில் கொண்டு வர பரிந்துரைத்திருந்த போதும் கூட, அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரோஹிங்கியா மக்களில் பலர் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்து அந்நாட்டில் அவர்களின் வேர்களைக் கொண்டிருக்கின்ற போதும் கூட, அடிப்படை குடியுரிமைகள் மறுக்கப்பட்டு, சட்டவிரோத புலம்பெயர்ந்தோராக கையாளப்படும் அவர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக பாகுபாடு காட்டப்படுவதற்குப் பக்கவாட்டில் சூ கி நிற்கிறார். “ரோஹிங்கியா" என்ற வார்த்தை அவர்களைச் சட்டபூர்வ சிறுபான்மை இனமாக எடுத்துக்காட்டும் என்பதால், பர்மிய அரசியலமைப்புக்கு முரண்பட்ட விதத்தில், அந்த சொல்லைப் பயன்படுத்தவும் கூட அப்பெண்மணி மறுக்கிறார்.

ஹங்கேரியின் வலதுசாரி எதேச்சதிகாரி உடனான சூ கியின் தொந்தரவற்ற பேச்சுவார்த்தைகள் சர்வதேச ஊடகங்களில் முணுமுணுப்பான விமர்சனங்களைக் கூட கொண்டு வரவில்லை. சூ கி க்கு கொடுக்கப்பட்ட விருதுகளைத் திரும்ப பெற வேண்டும் என்ற அறிவுறுத்தல்களோடு, தாராளவாத வட்டாரங்களில் கடந்த இரண்டாண்டுகள் ஒருமித்த கசகசப்பையும் நரநரப்பையும் கொண்டு வந்துள்ளன என்றாலும், யாருமே அவரை பாரிய படுகொலையில் கூட்டு-சதியாளர் என்றும், பர்மிய தளபதிகளுடன் சேர்ந்து அவரைக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்றும் அழைக்கவில்லை.

சூ கி யை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலராக சந்தைப்படுத்துவது எப்போதுமே ஒரு மோசடியாக இருந்துள்ளது. அவர் ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்க மற்றும் மேற்கத்திய அரசியல் சொத்திருப்பாக விதைக்கப்பட்டார். பர்மிய இராணுவ ஆட்சிக்கு அவரின் எதிர்ப்பு, தேவைப்படுகின்ற வெளிநாட்டு முதலீட்டை எப்பாடுபட்டாவது ஊக்குவிப்பதற்காக தடையாணைகளை நீக்குவதற்கு விரும்பிய மற்றும் பொருளாதாரம் மீதான இராணுவத்தின் மேலாதிக்கத்தால் கொதித்து போயிருந்த அந்நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தினது ஒரு பிரிவின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. இராணுவ ஆட்சிக்குழுவைப் போன்றே, அப்பெண்மணியின் தேசிய ஜனநாயக கழகம் (NLD) எப்போதுமே பர்மிய புத்தமத மேலாதிக்கவாதம் மற்றும் ரோஹிங்கியா-விரோத பேரினவாதத்தில் மூழ்கி இருந்தது.

நோபல் விருது பெற்ற அனைவரையும் போலவே, ஏகாதிபத்தியத்திற்கு சேவைகளை வழங்கியதற்காக 1991 இல் சூ கி க்கும் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டது. நோபல் விருது வழங்கும் நோர்வே தேர்வுக்குழு "ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான [அவரின்] அஹிம்சை போராட்டத்தையும்" மற்றும் "சமாதான வழிவகைகளில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கத்தை அடைவதற்கான... அவரின் சளைக்காத முயற்சிகளையும்" பாராட்டியது.

குறிப்பாக 1988 இல் பர்மிய இராணுவ ஆட்சியை மட்டுமல்ல, மாறாக முதலாளித்துவ ஆட்சியையே ஒட்டுமொத்தமாக அச்சுறுத்திய மிகப்பெரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், “அனைத்து விதமான வன்முறை பயன்பாட்டையும்" அவர் எதிர்த்ததை நோபல் விருது தேர்வுக்குழு சுட்டிக்காட்டியது. 1990 இல் ஒரு தேர்தல் வாக்குறுதியைத் தளபதிகள் சர்வசாதாரணமாக புறக்கணித்திருந்த நிலையில், அதன் மீது புரட்சிகரமான நிலையை ஏற்று வந்த ஒரு பாரிய இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் சூ கி மத்திய பாத்திரம் வகித்தார்.

அதற்கடுத்த இரண்டு தசாப்தங்களில், சூ கி விடாப்பிடியாக வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளால் ஜனநாயகத்திற்கான தியாகியாக ஊக்குவிக்கப்பட்டார். 2011 இல், சீனாவுடன் அதிகரித்து வந்த அமெரிக்க மோதலுக்கு மத்தியில், பர்மிய இராணுவ ஆட்சி அமெரிக்காவை நோக்கி மறுநோக்குநிலை கொள்வதற்கும், சூ கி மற்றும் அவரின் NLD இக்கு ஓர் அரசியல் பாத்திரம் காண்பதற்கும் அதன் விருப்பத்தைச் சமிக்ஞை செய்தது.

தோற்றப்பாட்டளவில் இரவோடுஇரவாக, அமெரிக்க பிரச்சாரம் பர்மாவை ஒரு "அடாவடி அரசு" என்று முத்திரைக் குத்துவதில் இருந்து அதை "ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் ஜனநாயகம்" என்று புகழும் நிலைப்பாட்டுக்கு மாறியது. வெட்கக்கேடான 2016 தேர்தல்களில் NLD இன் வெற்றி, இன்றியமையா நிறைவேற்றும் சாதனங்களின் அதிகாரப் பொறுப்பை இராணுவத்திடமே விட்டு வைத்திருந்த நிலையிலும், ஜனநாயகத்திற்கான ஒரு மாபெரும் வெற்றியாக அது உலகெங்கிலும் புகழப்பட்டது.

அமெரிக்காவின் சாதனை பத்திரிகை நியூ யோர்க் டைம்ஸ், “மியான்மரின் ஜனநாயகத்தில் ஒரு மைல்கல்" என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில் அறிவித்தது: “இறுதியில் மியான்மரில் ஜனநாயகம் இடத்தை எடுக்கிறது.” அதற்கு முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போலவே இராணுவம் தொடர்ந்து பொறுப்பில் இருந்ததைக் குறித்து டைம்ஸ் அக்கறை காட்டவில்லை, “மியான்மரின் ஜனநாயகத்தின் பரிணாமம் இராணுவத்துடன் திருமதி. ஆங் சான் சூ கி செயல்படுவதைப் பொறுத்துள்ளது,” என்று அறிவித்தது.

துல்லியமாக சூ கி அதை தான் செய்துள்ளார். அவரும் மற்றும் NLD உம் இற்றுப்போன ஜனநாயக அலங்கார மேற்பூச்சுக்களை வழங்கியுள்ள அதேவேளையில், இராணுவமோ தொடர்ந்து அடிப்படை கொள்கையை தீர்மானித்து கொண்டிருக்கிறது. இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான இனச்சுத்திகரிப்புக்கான அவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் ஒரு "ஜனநாயக பிம்பமாக" அவரின் மதிப்பை அழித்துவிட்டுள்ள அதேவேளையில், அதிவலதிடம் இருந்து உளங்கனிந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் தொழிலாள வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சிக்கு இடையே உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்கள் அதிகரித்தளவில் அதிவலது மற்றும் பாசிசவாத சக்திகளை நோக்கி திரும்பி வருகின்றன. பர்மாவில் ஆகட்டும் அல்லது வேறெங்கும் ஆகட்டும் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு நிஜமான போராட்டம், மனிதகுலத்திற்கான ஒரு சோசலிச எதிர்காலத்திற்காக சண்டையிட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுடன் எந்தளவுக்கு பிணைக்கப்படுகிறதோ அந்தளவுக்கே முன்னோக்கிச் செல்ல முடியும்.