ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

WSWS republishes ICFI statements on Tiananmen Square massacre on June 4, 1989

1989 ஜூன் 4 தியனென்மென் சதுக்க படுகொலை மீதான ICFI இன் அறிக்கைகளை உலக சோசலிச வலைத் தளம் மறுபிரசுரம் செய்கிறது

4 June 2019


நான்காம் அகிலம் சஞ்சிகை, ஜனவரி-ஜூன் 1989

பெய்ஜிங்கில் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது ஒரு கொடூரமான இராணுவ ஒடுக்குமுறை ஸ்ராலினிச சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) தலைமையின் உத்தரவின் கீழ் நடந்து இன்றுடன் 30 ஆண்டுகளாகின்றன. இறந்தவர்கள் எண்ணிக்கை 6,000 ஐ தொடும் என்றும், பத்தாயிரக்கணக்கானோர் இதில் காயமடைந்தனர் என்றும் சுயேச்சையான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன, டாங்கிகள் மற்றும் ஆயுத வாகனங்கள் சகிதமாக 40,000 கன-ரக ஆயுதமேந்திய துருப்புகள் தியனென்மென் சதுக்கத்திலும் மற்றும் தொழிலாள-வர்க்க புறநகர்ப் பகுதிகளிலும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வெளிப்படுத்திய எந்த எதிர்ப்பையும் கொடூரமான விதத்தில் நசுக்கின.

இந்த சம்பவங்கள் தியனென்மென் சதுக்க படுகொலை என்று குறிப்பிடப்படுகின்றன, சர்வதேச ஊடகங்களில் மாணவர்களே இவற்றில் பிரதான பாத்திரங்களாக காட்டப்படுகின்ற வேளையில், இந்த போராட்டங்களின் வீச்சுஎல்லை சீனத் தலைநகரையும் கடந்து மிகத் தொலைதூரம் சென்றது என்பதுடன் இது தொழிலாள வர்க்கத்தின் மிகப்பரந்த அடுக்குகளை உள்ளடக்கியிருந்தது. ஏப்ரலில் ஜனநாயக சீர்திருத்தங்கள் கோரி மாணவர்கள் தொடங்கிய ஆரம்ப ஆர்ப்பாட்டங்களில், டெங் சியோபிங் தலைமையிலான சந்தை-சார்பு மறுசீரமைப்பின் பின்விளைவுகளாய் இருந்த ஊழல், உயர் பணவீக்கம் மற்றும் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக தமது சொந்த வர்க்கக் கோரிக்கைகளுக்கு குரல்கொடுத்த தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளின் பிரிவினர் துரிதமாக கரம்கோர்த்தனர்.

மே மத்திக்குள்ளாக, நூறாயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டங்கள் தியனென்மென் சதுக்கத்தில் நடைபெற்றன, இதன் உச்சமாக மே 17 அன்று இரண்டு மில்லியன் மக்கள் பங்குபெற்ற ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 20 அன்று ஆட்சி இராணுவச் சட்டத்தை அறிவித்ததன் பின்னர், ஒரு மில்லியன் மக்கள் இந்த சதுக்கத்தில் வெள்ளமாய் சூழ்ந்தனர், மற்றவர்கள் வீதி தடையரண்களை அமைத்தனர். CCP ஆட்சியில் இருந்து சுயாதீனமாக பெய்ஜிங்கில் உருவாக்கப்பட்ட தொழிலாளர்கள் தன்னாட்சி சங்கம் (Workers Autonomous Union) நாடெங்கிலும் முக்கிய நகரங்களில் பிரதிபலித்தது. 1989 ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடையில் தியனென்மென் ஆவணங்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அரசாங்கத்தில் இருந்து கசிந்த ஆவணங்களது கணக்கின் படி, 341 சீன நகரங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்களின் செய்தி கிடைக்கப் பெற்றது.

“அது தேசிய அளவிலானதாய் இருந்தது. அது ஒரேயொரு பெரிய ஆர்ப்பாட்டமாய் இருக்கவில்லை. அதுவே அரசாங்கத்திற்கு மிகவும் அச்சமூட்டுவதாகவும், படைவலிமையைப் பயன்படுத்தும் அவசியத்தை அது உணர்ந்ததற்கான ஒரு காரணமாகவும் அமைந்தது” என்று ஜோனாதன் உங்கர் என்ற ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக கல்வியாளர் ஒருவர் சென்ற வார இறுதியில் கார்டியன் பத்திரிகையிடம் கூறினார்.

எதிர்ப்பை நசுக்குவதற்கும் ஒட்டுமொத்த மக்களையும் பீதிக்குள்ளாக்குவதற்காக ஒரு தேசிய அளவிலான போலிஸ்-அரசு ஒடுக்குமுறை பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் ஆட்சி கொண்டிருந்த தீர்மானகரமான உறுதிக்குப் பின்னால், போராட்டங்களின் அளவு மட்டுமல்ல, அவற்றின் வர்க்கத் தன்மையிலான மாற்றமும் காரணமாய் அமைந்திருந்தது. கூடுதல் பழமைவாத மாணவர் தலைவர்களை வரம்புபட்ட ஜனநாயக சீர்திருத்தங்களைக் கொண்டு சமாதானம் செய்யும் ஜனாதிபதி ஜுயூ சியாங்கின் ஆலோசனைகளைக் கொண்டு CCP தலைமை விளையாடிக் கொண்டிருந்த அதேவேளையில், ஆட்சியானது அதன் இருப்புக்கே அச்சுறுத்தலாகும் வகையில் தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் நுழைந்ததைக் கொண்டு எச்சரிக்கை பெற்றது.

இன்று முதலாக உலக சோசலிச வலைத் தளம், நான்காம் அகில அனைத்துலகக் குழுவின் பதிலிறுப்பை ஆவணப்படுத்துகின்ற அறிக்கைகள் மற்றும் கருத்துரைகளது ஒரு வரிசை மற்றும் தியனென்மென் சதுக்க படுகொலைக்கு பத்து ஆண்டுகளின் பின்னர் எழுதப்பட்ட ஒரு இன்றியமையாத கட்டுரை மற்றும் 30 ஆண்டுகளின் பின்னர் நிகழ்வுகளை மதிப்பீடு செய்கின்ற இன்னுமொரு கட்டுரை ஆகியவற்றை வெளியிடுகிறது.

“சீனாவில் அரசியல் புரட்சிக்கு வெற்றி” என்ற தலைப்பில் கீழே இருக்கும் ICFI இன் அறிக்கை 1989 ஜூன் 8 அன்று, பெய்ஜிங்கில் இராணுவ ஒடுக்குமுறை நடந்ததற்கு சில நாட்களின் பின்னர், கொலைபாதக ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஏராளமான நகரங்களில் வெடித்துக் கொண்டிருந்த நிலையில், விடுக்கப்பட்டதாகும். சம்பவங்களுக்குள்ளும் CCP இன் தன்மைக்குள்ளும் ஒரு ஊடுருவும் உட்பார்வையை வழங்கியதோடு, சீனத் தொழிலாள வர்க்கத்திற்கு போராட்டத்திற்கான அடித்தளத்தை கொடுக்கின்ற ஒரு அரசியல் முன்னோக்கையும் இந்த அறிக்கை வழங்கியது.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இந்தப் படுகொலையை கபடத்துடன் கண்டனம் செய்ததோடு CCP ஆட்சியை சோசலிசம் மற்றும் கம்யூனிசத்துடன் சமானப்படுத்தி காட்டிய வேளையில், ICFI, சீனாவில் மட்டுமல்லாது கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் சோவியத் ஒன்றியத்திலும் நெருக்கடியில் இருந்த ஸ்ராலினிசமே இதற்கு பொறுப்பு என்பதை வலியுறுத்தியது. இந்த அறிக்கை, சீனாவில் அரசகுல நேரடி மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த 1949 சீனப் புரட்சிக்கு பின்னர் CCP அடைந்த பரிணாமவளர்ச்சியை பின்தொடர்ந்தது. “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சீன ஆட்சியானது தொழிற்துறையின் முக்கியமான பிரிவுகளை தேசியமயமாக்கியதோடு, சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, தொழிலாள வர்க்கம் முற்றிலும் எந்தவொரு அதிகாரமும் கொண்டிராத அதிகாரத்துவரீதியாக மையப்படுத்தப்பட்ட திட்டமிடலை அமல்படுத்தியது. ICFI சீனாவை ஒரு ஊனமுற்ற தொழிலாளர்’ அரசு (deformed workers’ state) என குணாம்சப்படுத்தியது.

1930களில், சோவியத் ஒன்றியம் ஸ்ராலின் மற்றும் அவரது கூட்டத்தின் கீழ் சீரழிவைக் கண்டபோதும், 1917 ரஷ்யப் புரட்சியின் மூலமாக அங்கு ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளை தொழிலாள வர்க்கம் பாதுகாக்க வேண்டும் என்று லியோன் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தூக்கிவீசுவதற்கும் தொழிலாளர்’ ஜனநாயகத்தை மீட்சி செய்வதற்கும் ஒரு அரசியல் புரட்சிக்கு அவர் அழைப்பு விடுத்தார். 1989 இல் சீனத் தொழிலாள வர்க்கத்திற்கும் அதுவே முன்னோக்கிய அரசியல் பாதையாக இருந்தது.

CCP ஆட்சியின் பாசிச-வகைப்பட்ட கொடூரக்குணம், தொழிலாள வர்க்கத்தை ஒடுக்காமல் முதலாளித்துவ மீட்சி சாதிக்கப்பட முடியாது என்று அது தெளிவாக அறிந்து வைத்திருந்ததில் இருந்து திண்மை பெற்றிருந்தது என்பதை ICFI இன் அறிக்கை விளக்கியது. மிகப் பெரும் முன்னறிவுடன் அது எச்சரித்தது:

"ஸ்ராலினிச ஆட்சியால் சீனப் பாட்டாளி வர்க்கம் தீர்மானகரமாய் தோற்கடிக்கப்படுவதன் —இது எந்த வகையிலும் இன்னும் அடையப்பட்டிருக்கவில்லை— பின்விளைவுகள் சீனப் புரட்சியின் எஞ்சியிருக்கும் சமூக வெற்றிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுவதாகவும் பொருளாதாரம் புதிய முதலாளித்துவ அடித்தளங்களின் மீது வரம்பின்றி மறுஒழுங்கமைக்கப்படுவதாகவும் இருக்கும். அத்தகைய ஒரு எதிர்ப்புரட்சிகர உருமாற்றத்திற்கு தலைமை கொடுக்கின்ற ஆட்சியானது அவசியத்தின் பொருட்டு ஒரு பாசிச குணமுடையதாய் இருக்கும். சொல்லப் போனால், அத்தகைய ஒரு ஆட்சியின் அம்சங்கள், கரு வடிவத்தில் தான் என்றாலும் கூட, இன்று பெய்ஜிங்கை ஆளும் இராணுவ பயங்கரத்தில் ஏற்கனவே காணக்கூடியதாய் இருக்கின்றன.”

முதலாளித்துவ அரசியல்வாதிகள் தியனென்மென் சதுக்கத்தில் இறந்தவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்தபோதும், இந்தப் படுகொலை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு மலிவான, ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிலாளர் படைக்கு அளிக்கப்பட்ட ஒரு உத்தரவாதம் என்பது மேற்கத்திய தலைநகரங்களிலும் இயக்குநர் அறைகளிலும் புரிந்துகொள்ளப்பட்டது. 1992 இல் டெங்கின் தென்னக சுற்றுப்பயணத்தை ஒட்டி, வெளிநாட்டு முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்தது, ஒட்டுமொத்த நாடும் உலகின் கொத்தடிமைக்கூடமாக உருமாற்றப்பட்டது.

பெய்ஜிங் ஆட்சி பங்குச் சந்தைகளை ஸ்தாபித்தது, பண அமைப்புமுறை மற்றும் வங்கியமைப்புமுறைக்கு மீண்டும் உயிர்கொடுத்தது, தனியார் உடைமைகளுக்கான உரிமையுடன் சேர்த்து தொழிலாளர்களை இஷ்டம் போல் எடுப்பதற்கும் நீக்குவதற்குமான திறனையும் புனிதப்படுத்தியது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்றுத்தள்ளியது, சூறையாடியது அல்லது மூடி விட்டது, அத்துடன் அரும்புவிட்ட முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வந்த உறுப்பினர்களுக்கு கட்சியைத் திறந்து விட்டது.

1992க்கும் 2010க்கும் இடையில் 11 மடங்காகப் பெருகி உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக ஆகியிருக்கும் சீனப் பொருளாதாரத்தின் மலைப்பூட்டக் கூடிய வளர்ச்சி குறித்து CCP இன் உயர்மட்டத் தலைவர்கள் இன்று பெருமையடிக்கின்றனர். ஆனால், சீனத் தொழிலாள வர்க்கத்தை ஒட்டச் சுரண்டுவதன் அடிப்படையிலான அந்த வளர்ச்சியென்பது மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது. ஆட்சி இப்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு எந்த முற்போக்கான தீர்வுகளும் அதனிடம் இல்லை.

டெங் சியோபிங் மற்றும் அவருக்குப் பின்வந்தவர்களால் பெருமையடிக்கப்பட்டபடி சீனா அமைதியாக ஒரு உலக சக்தியாக ஆவதற்கான சாத்தியமென்பது ஒரு கானல்நீராக நிரூபணமாகியிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகள், எல்லாவற்றிற்கும் முதலில் அமெரிக்கா, அவற்றின் பெரும் இலாபங்களுக்கான ஒரு மூலவளமாக இருக்கும் அதேநேரத்தில் அவற்றின் மேலாதிக்கத்தை சவால் செய்யாத மட்டத்திற்கு, வளர்ந்து வந்த சீனாவுடன் சகவாழ்வு காண தயாரிப்புடன் இருந்தன. ஆயினும், வாஷிங்டனின் அரசியல், இராணுவ மற்றும் உளவு ஸ்தாபகத்தின் ஆதரவுடன், ட்ரம்ப் நிர்வாகம், சீனாவை அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான தலைமை சவாலாகக் காண்கிறது. சீனா மீது பெருகிச் செல்கின்ற அமெரிக்காவின் பொருளாதாரப் போர், அவற்றுடன் இந்தோ-பசிபிக் முழுமையாக ஒரு பாரிய இராணுவப் பெருக்கம் ஆகியவை, அமெரிக்கா அதன் எதிரியைத் தடுத்து நிறுத்துவதற்கு அணு-ஆயுத சக்திகளிடையேயான ஒரு போர் உள்ளிட்ட எதனைக் கண்டும் தயங்கி நின்றுவிடப் போவதில்லை என்பதை விளங்கப்படுத்துகிறது.

சீனாவுக்குள்ளாக, முதலாளித்துவ மீட்சியானது பிரம்மாண்டமான சமூகப் பதட்டங்களை உருவாக்கியிருக்கிறது. நான்கு தசாப்த இடைவெளியில், இந்நாடு உலகின் மிகவும் சமத்துவமிக்க நாடுகளில் ஒன்றாக இருந்ததில் இருந்து உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக ஆகி விட்டிருக்கிறது. பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வறுமை-நிலை ஊதியங்களில் உயிர்வாழப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவிற்கு வெளியில் டாலர் அடிப்படையிலான பில்லியனர்களை மிகப்பெரும் எண்ணிக்கையில் இது கொண்டிருக்கிறது. 1949 புரட்சியை ஒட்டி கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்டிருந்த அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர், போதைமருந்துப் பழக்கம் மற்றும் விபச்சாரம் ஆகிய சமூகத் தீங்குகள் அத்தனையும் முதலாளித்துவ சந்தையின் கீழ் மீண்டும் செழித்திருக்கின்றன, மில்லியன் கணக்கான வாழ்க்கைகளை பாழ்படுத்தியிருக்கின்றன.

தியனென்மென் சதுக்க படுகொலை நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், CCP இன் தலைவர்கள், “எதிர்ப்புரட்சிகர கலக”த்தை அல்லது “அரசியல் “குழப்ப”த்தை வன்மையாக ஒடுக்கியது நியாயமானது என்ற பொய்யை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். இந்த ஆண்டிலும், ஒவ்வொரு ஆண்டையும் போலவே, அரசியல் எதிர்ப்பாளர்கள் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் இருப்பதை அல்லது பெய்ஜிங்கிற்கு வெளியில் அனுப்பப்படுவதை உறுதி செய்கிற விதத்தில் மிகப் பரந்த போலிஸ் அரசு எந்திரம் அணிதிரட்டப்படுகிறது, சம்பவங்கள் குறித்த எந்த விவாதத்தையும் தடுப்பதற்கு சமூக ஊடகங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன, சீன ஆட்சி குறித்து விமர்சனப் பார்வை கொண்ட வலைத் தளங்களுக்கான அணுகல் தடுக்கப்படுகிறது. தியனென்மென் சதுக்கமும் கூட, எந்த ஆர்ப்பாட்டமும் துரிதமாக அமைதியாக்கப்படுவதை உறுதி செய்யும் விதமாய் போலிஸ் மற்றும் சீருடையில் இல்லாத முகவர்களின் வெள்ளத்தால் நிரப்பப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் வலிமையின் அடையாளமல்ல, மாறாக அரசியல் பலவீனத்தின் அடையாளமே ஆகும். ஊழலடைந்தும் தனிமைப்பட்டும் இருக்கும் சீனத் தலைவர்கள் தவிர்க்கவியலாமல் 1989 இன் எழுச்சியை விஞ்சக் கூடிய ஒரு மட்டத்தில் மிக விரிந்து பரந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கம் வெடித்து விடக் கூடிய மரண பயத்தில் வாழ்கின்றனர். இனி வரப்போகும் புரட்சிகரப் போராட்டங்களுக்கு தேற்றம் செய்ய வேண்டியதாயிருக்கும் அத்தியாவசியமான அரசியல் படிப்பினைகள் இந்த வாரத்தில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியாகவிருக்கும் அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளில் அடங்கியிருக்கின்றன. போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு ஒரு சோசலிச மாற்றை விரும்பும் அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளாலும் தீவிரமாய் கற்கப்படுவதற்கு அவை தகுதி கொண்டிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேல், சீனாவில் ICFI இன் ஒரு பிரிவை உருவாக்குவது என்பதே அதன் அர்த்தமாய் இருக்கும்.