ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Le Pen’s far-right National Rally wins European election vote in France

லு பென்னின் அதி-வலது தேசியப் பேரணி பிரான்சில் ஐரோப்பியத் தேர்தல் வாக்கினை வெல்கிறது

By Will Morrow
29 May 2019

பிரான்சில் ஞாயிறன்று வெளியான ஐரோப்பியத் தேர்தல் வாக்கு முடிவுகள், ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராய் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய அசாதாரண மட்டத்திற்கு குரோதமும் அந்நியப்படலும் வளர்ச்சி கண்டிருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறது.

ஆயினும், மரின் லு பென்னின் தேசியப் பேரணி (RN) ஒரு குறுகிய வித்தியாசத்தில் வெற்றியைப் பெற இயலும் மட்டத்திற்கு சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஜோன் லுக் மெலன்சோனின் அடிபணியா பிரான்ஸ் போன்ற உத்தியோகப்பூர்வ ”இடது” மற்றும் போலி-இடதுகளது இற்றுப் போன தன்மை இருக்கிறது. லு பென் சமூக துன்ப நிலைமைகள் மீதான கோபத்தை சுரண்டிக் கொண்டார், உயரடுக்கினருக்கு எதிரான ஸ்தாபக-விரோத “மக்களின் (le peuple)” காவலராக தன்னை காட்டிக் கொண்டார், முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடிக்கு வாய்வீச்சுடன் புலம்பெயர்ந்தோர் மீது பழிசுமத்தினார்.

ஆறு மாதங்களாய் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு பாரிய கைதுகள், கண்ணீர் புகை, இரப்பர் புல்லட்டுகள் மற்றும் இராணுவ நிலைநிறுத்தம் ஆகியவற்றை பதிலாய் கொடுத்திருக்கும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கட்சி 22.41 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது, தேசியப் பேரணி கட்சி 23.3 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.

Ipsos கணக்கெடுப்பின்படி வாக்காளர்களின் மிகப் பெரும் பகுதியாக 48.7 சதவீதம் பேர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க மறுத்திருந்தனர். மாதத்திற்கு 1,200 யூரோக்களுக்கும் குறைவாய் வருவாய் ஈட்டுவோர் மத்தியில், வாக்களிக்காதோர் விகிதம் 58 சதவீதமாக இருந்தது. 1,200 முதல் 2,000 யூரோக்கள் வரை சம்பாதிப்போர் மத்தியில் இந்த விகிதம் 52 சதவீதமாக இருந்தது. இளைஞர்களில் கணிசமான பெரும்பான்மையினர், 34 வயதுக்குக் கீழானவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை.

தொழிலாளர்களில் ஓரளவுக்கு பெரும் எண்ணிக்கையிலானோர் லு பென்னின் கட்சிக்கு வாக்களித்திருந்தார்கள் என்றால் அக்கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவு காட்டியதால் அல்ல, மாறாக ஒரு வேட்பாளராக இல்லாத போதும் அவரது முகம் மட்டுமே இடம்பெற பத்தாயிரக்கணக்கான துண்டறிக்கைகளை அச்சிட்டிருந்த “பணக்காரர்களின் ஜனாதிபதி”யின் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு வாக்காகவே அவர்கள் வாக்களித்திருந்தனர். எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று கூறிய வாக்காளர்களில் 26 சதவீதம் பேரின் வாக்குகளை RN பெற்றது, இது இதுவரையானதில் மிகப்பெரும் சதவீத எண்ணிக்கையாகும்.

1950கள் மற்றும் 1960களின் ஆரம்பத்தில் அல்ஜீரிய சுதந்திரப் போர் காலம் தொடங்கி பிரான்சை ஆட்சி செய்து வந்திருக்கும் சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய பிரான்சின் இரண்டு பாரம்பரியமான கட்சிகளும் சேர்ந்து வெறும் 14 சதவீத வாக்குகளைப் பெறும் நிலைக்கு சுருக்கப்பட்டு விட்டிருந்தன.

கோலிச குடியரசுக் கட்சியினர் பெற்ற வாக்குகள் வெறும் 8 சதவீதத்திற்கு சற்று அதிகமானதாய் வீழ்ச்சி கண்டிருந்தது. 2017 ஜனாதிபதி தேர்தலின் போது முதல் சுற்றில் குடியரசுக் கட்சி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோனுக்கு வாக்களித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் மக்ரோனுக்கு வாக்களிக்க மாறி விட்டிருந்ததாக Ipsos தெரிவித்தது.

PS 6 சதவீத வாக்குகளைப் பெற்றது, இதுவரை அது பெற்றிருப்பதில் மிகக் குறைந்த அளவாகும் இது. நாடாளுமன்றத்தில் நுழைவதற்கான 5 சதவீத அளவு என்னும் கோட்டை அது தட்டுத்தடுமாறி தாண்டியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலிலான அதன் வாக்குவீதம் 2004 இல் 28.9 சதவீதமாக இருந்ததில் இருந்து 2009 இல் 16.5 சதவீதமாக சரிந்து 2014 இல் 14 சதவீதத்திற்கு வீழ்ச்சி கண்டது. துறைப் பணியாளர்களில் (நிர்வாகத் துறை, சேவைத் துறை மற்றும் விடுதித்துறை தொழிலாளர்கள்) வெறும் 3 சதவீத வாக்குகளையும், ouvriers களில் (தொழிற்துறை மற்றும் உற்பத்தித் துறை தொழிலாளர்கள்) எட்டு சதவீத வாக்குகளையும் அது பெற்றதாக Ipsos கணித்தது.

இக்கட்சி, பல தசாப்த காலங்களாய் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களது வாழ்க்கைகளை சின்னாபின்னமாக்கிய பெருநிறுவன-ஆதரவுக் கொள்கைகளை திணித்து வந்திருக்கும், பெருவணிகங்களது ஒரு கருவியாக இழிவுடன் பார்க்கப்படுகிறது. PS இல் இருந்து வந்தவரும், தனக்கு முன்பிருந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டிடம் நிதி அமைச்சராக இருந்திருந்தவருமான மக்ரோன், பெருநிறுவனங்களுக்கு பாரிய ஆட்குறைப்புக்கு வழிவகை தரும் வகையில் தொழிலாளர் சட்டத்தை சிதைத்தது உள்ளிட்ட ஹாலண்டின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் அனைத்தையும் தொடர்ந்தும், தீவிரப்படுத்தியும் வந்திருக்கிறார்.

PS இன் பொறிவானது, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த கூட்டரசாங்கத் தேர்தல் உள்ளிட, சர்வதேச அளவில் சமூக ஜனநாயக மற்றும் “மத்திய-இடது” முதலாளித்துவ கட்சிகள் தொழிலாள வர்க்கத்தினால் நிராகரிக்கப்படுவதை பிரதிபலிக்கிறது.

PS இன் வீழ்ச்சியால் மிக நேரடி ஆதாயம் பெற்றிருப்பது பசுமைக் கட்சியாகும், இது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் விஞ்சி 14 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது பெருவாரியாக இளைஞர்களின் ஆதரவு வாக்கினால் விளைந்திருந்தது, 25-34 வயதினரில் 28 சதவீதம் பேரும் 18-24 வயதினரில் 25 சதவீதம் பேரும் இக்கட்சிக்கு வாக்களித்தனர். “வருங்காலத்திற்காக வெள்ளி” ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு அரசாங்கங்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு ஆகியவற்றில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றவாறாக, இளைஞர்களது மிகப் பரந்த அடுக்குகளின் பெருகும் அரசியல்மயமாக்கத்தில் இருந்து பசுமைக் கட்சியினர் தகுதியின்றி பலனடைந்தனர்.

பசுமைக் கட்சியினர் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கு எதுவும் செய்யப் போவதில்லை, ஏனென்றால் உலக வெப்பமயமாதலின் மூலவளமான முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையையும் மிகப் பெரும் பெருநிறுவன முதலைகளின் நலன்களுக்கு சமூகத்தை கீழ்ப்படியச் செய்வதையும் அவர்கள் ஆதரிக்கின்றனர். இது பெரு வணிகங்களது ஒரு கட்சியாக இருக்கிறது, அரசாங்கத்தில் இருந்த சமயத்தில், மிகக் குறிப்பாக 1998-2005 வரை ஜேர்மனியிலும் 2012 முதல் 2015 வரை ஆஸ்திரேலியாவிலும், போர்களையும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களையும் ஆதரித்து வந்திருக்கின்றனர்.

எந்தக் கட்சிகளிலுமான வாக்கு வீழ்ச்சியிலும் மிகக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாக இருப்பது ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் வாக்குகள் வீழ்ச்சி. இது 6 சதவீத வாக்குகளைப் பெற்றது, 2017 இல் 19.58 சதவீதம் —அல்லது ஏழு மில்லியன் மக்கள்— பெற்றிருந்த நிலையில் இருந்து இது வீழ்ச்சி கண்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் மெலோன்சோனுக்கு வாக்களித்தவர்கள் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலைப் புறக்கணிப்பதில் வேறெந்த கட்சியினரை விடவும் அதிகமாய் இருக்க சாத்தியமிருந்த வேளையில், அவர்களில் 64 சதவீதம் பேர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்துச் சென்றனர்.

கடந்த 18 மாதங்கள் மெலன்சோனின் கொள்கைகளை கூர்மையான விதத்தில் அம்பலப்படுத்தியிருக்கின்றன. சமூக சமத்துவத்திற்கான “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய எதனையும் முன்வைக்க அவர் மறுத்து விட்டார். மாறாக, சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை நோக்கிய எந்த முன்னோக்கையும் அவர் கண்டனம் செய்ததோடு, ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு “நிறுவனத் தீர்வு” (“institutional solution”) இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வெறுப்பைச் சம்பாதித்திருந்த சோசலிஸ்ட் கட்சியுடன் ஒரு “ஜனரஞ்சக கூட்டமைப்பு” கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், ஏப்ரலில் இதனை அவர் மேலும் வெளிப்படையாக்கினார்.

“மக்களின்” ஒரு இயக்கத்திற்கான மெலன்சோனின் தேசியவாத அழைப்புகள் RN இன் ஜனரஞ்சக வாய்வீச்சின் கவர்ச்சியை வலுப்படுத்தவே செய்கிறது. வாக்களிப்புக்கு முன்பாக, மெலன்சோனின் முன்னிலை உறுப்பினர்களில் ஒருவரான, ஆண்ட்ரியா கோட்டராக், அவர் RN ஐ ஆதரிப்பதாக அறிவித்தார், தான் நீண்டகாலமாக கொண்டிருந்த மற்றும் பகிரங்கமாக வெளிப்படுத்தி வந்திருந்த தேசியவாதம் மற்றும் புலம்பெயர்வுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அக்கட்சி மிகச் சீர்மையுடன் வாய்மொழிந்து வந்திருப்பதாக அவர் அறிவித்தார். வாக்களிப்பின் பின்னர் லு பென் பகிரங்கமாக கோட்டராக்கிற்கு நன்றி தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்தில் தொழிற் கட்சித் தலைவரான கோர்பின், ஸ்பெயினில் பொடெமோஸ் மற்றும் கிரீஸில் சிரிசா ஆகியோரைப் போலவே, மெலன்சோனும் அவர் சுயரூபத்தில் -தொழிலாள வர்க்கத்திடம் இருந்தான எந்த சவாலில் இருந்தும் எப்பாடு பட்டேனும் முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்பு முறையைக் காப்பாற்றுவதற்கு உறுதிபூண்ட முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு விசுவாசமான சேவகனாக- அதிகமான அளவில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறார். தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நோக்குநிலை பிறழச் செய்து, ஒரு உண்மையான சோசலிச முன்னோக்கினைக் காண்பதில் இருந்து அவர்களைத் தடுப்பதே அவரது அத்தியாவசியமான பாத்திரமாக இருக்கிறது.

விளைவு, நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் அரசியல் வம்சாவளிகள் சமூகத் துயரத்தை சுரண்டிக் கொண்டு, வேலைவாய்ப்பற்றோரில் 29 சதவீதத்தினரின் வாக்குகளையும், தொழிற்துறை தொழிலாளர்களில் (Ouvriers) 40 சதவீதத்தினரின் வாக்குகளையும், மற்ற தொழிலாளர்களின் 27 சதவீதத்தினரின் வாக்குகளையும் பெற முடிந்தது, இது வேறு எந்தக் கட்சிக்கு கிடைத்ததை விடவும் கணிசமாய் அதிகமாகும். மாதத்திற்கு 3,000 யூரோக்களுக்கு குறைவான ஊதியமளிக்கப் பெறும் ஒவ்வொரு தொழிலாளர் பிரிவிலும் லு பென் மக்ரோனைத் தோற்கடித்திருந்தார், அத்துடன் 2014 இல் போல, கடந்த மூன்று தசாப்தங்களில் பாரிய ஆட்குறைப்பைக் கண்டிருக்கும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள கிராமப்புற மற்றும் தொழிற்துறைமயமகற்றப்பட்ட பகுதிகளையும் அள்ளிச் சென்று விட்டார்.

மக்ரோன் அரசாங்கம் தேர்தலுக்கான தனது பதிலிறுப்பாய் அது இன்னும் வலது நோக்கித் திரும்பவிருப்பதை ஏற்கனவே தெளிவாக்கி விட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவில், பிரதமர் எட்வார்ட் பிலிப் RN இன் வெற்றிக்கு தனது அரசாங்கத்தின் பொறுப்பை மறுக்க விழைந்தார், நவ-பாசிச கட்சியை அங்கீகரித்துப் பேசினார். வாக்களிப்பு “கோபத்தை” அல்லது ”நிராகரிப்பை காட்டியிருப்பதாக பேசுவது மட்டும் போதுமானதல்ல...மாறாக RN உம் "மிகப்பெரும் அரசியல் சக்திகளில் ஒன்றாய்” ஆகி விட்டிருந்தது, “அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் பிரெஞ்சு மக்களின் இந்த செய்திக்கு செவிமடுத்தாக வேண்டும்...நாம் அதை மிக உரத்த குரலில் தெளிவுபட கூறப் பெற்றிருக்கிறோம்.”

சென்ற நவம்பரில் நாஜி ஒத்துழைப்புவாதி மார்ஷல் பிலிப் பெத்தானுக்கு மக்ரோன் புகழுரை பாடியது மற்றும் பதவியேற்புக்குப் பின்னர் உடனடியாக லு பென்னுக்கு அவர் “குடியரசுவாத வணக்கம்” செய்தது ஆகியவை உள்ளிட அதி-வலதுகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்வதை இது காட்டுகிறது. மக்ரோன், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினருடன் சேர்ந்து, RNக்கு எதிராக செய்த பிரச்சாரத்தில், ஒரு ஐரோப்பிய இராணுவத்திற்கு RN காட்டும் எதிர்ப்பு சர்வதேச அளவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களை மூர்க்கமாகத் திட்டவட்டம் செய்வதில் ஒரு தடைக்கல்லாய் ஆகி விடும் என்ற தேசியவாத மற்றும் இராணுவவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்தார்.

முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தில் எந்த முற்போக்கான கன்னையும் இல்லை என்ற உண்மையையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் “மஞ்சள் சீருடை” இயக்கம் உள்ளிட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைக் கொண்டு மக்ரோனுக்கு எதிராய் ஒரு ஆரம்பகட்ட தாக்குதலை முன்னெடுக்கின்ற நிலையில், ஆளும் வர்க்கமானது அது போருக்குத் தயாரித்துக் கொண்டிருப்பதோடு, சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது, அத்துடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான அதன் தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.