ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The murder of German politician Walter Lübcke: a warning

ஜேர்மன் அரசியல்வாதி வால்டர் லூப்க்கவின் படுகொலை: ஓர் எச்சரிக்கை

By Peter Schwarz
19 June 2019

அகதிகளின் பாதுகாப்புக்காக பேசியதற்குப் பின்னர், தீவிர வலதுசாரிகளால் இலக்கு வைக்கப்பட்ட உள்ளாட்சித்துறை ஜேர்மன் அரசியல்வாதி வால்டர் லூப்க்கவின் மரணம், அரசு மற்றும் ஆளும் உயரடுக்கால் வலதுசாரி தீவிரவாத சக்திகள் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுகின்றன என்ற ஜேர்மன் அரசியலின் அழுக்குமிக்க இரகசியத்தை அம்பலப்படுத்தி உள்ளது.

லூப்க்க, வலதுசாரி தீவிரவாதிகளின் வெறுப்பு பிரச்சாரத்தின் இலக்காக வைக்கப்பட்டிருந்தார் என்பதும், அவருக்குப் பல மரண அச்சுறுத்தல்கள் வந்திருந்தன என்பதும் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்த போதும், மத்திய அரசு வழக்குத்தொடுனர் அதன் "சிறப்பு முக்கியத்துவத்திற்காக", அந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, இரண்டு வாரங்கள் ஆனது. இந்த தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னதாக, விசாரணையாளர்கள், முன்னர் வலதுசாரி தீவிரவாத அமைப்பான தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு இயக்கம் (National Socialist Underground-NSU) நடத்திய படுகொலைகள் மீதான விசாரணைகளில் செய்யததைப் போலவே, அவ்வியக்கத்தால் இலக்குவைக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தொடர்புகள் மீதே கவனம் செலுத்தியிருந்தனர். உயர்மட்ட அரசியல்வாதி ஒருவர் ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள் ஒன்றும் நடக்காததைப் போல கையாண்டன.

முந்தைய குற்ற நடவடிக்கைகளது நீண்ட முன்வரலாறின் காரணமாக பொலிஸிற்கு முன்னரே நன்கு அறியப்பட்ட ஒரு நவ-நாஜியின் மரபணு அவரை முக்கிய சந்தேகத்திற்குரியவராக ஆக்கியதும், அக்குற்றத்தில் வலதுசாரி தீவிரவாதியின் தொடர்பை இனியும் மறுக்கவியலாது என்றான போதுதான், புலனாய்வாளர்களும் ஊடகங்களும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.


Dr. Walter Lübcke [Credit: RP Kassel]

மத்திய வழக்குக்குத்தொடுனர் இப்போது அதை தனிநபர் குற்றமாக கட்டுக்கதையை பரப்ப முயன்று வருகிறார். அங்கே, இதுவரையில், "குற்றஞ்சாட்டப்பட்டவர், வலதுசாரி பயங்கரவாத அமைப்புடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டும் எதுவும் இல்லை" என்று மத்திய அரசு வழக்குத்தொடுனரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார், ஆனால் சந்தேகத்திற்குரியவரின் வாழ்க்கை வரலாறு வேறுவிதமான கதையைக் கூறுகிறது.

அந்த படுகொலை அரசு மீதான ஒரு தாக்குதலாக இருக்குலாம் என்றும், இணைய தணிக்கை இல்லாமையே அதன் பிரதான காரணமென்றும் ஊடகங்கள் அறிவித்தன. “டிஜிட்டல் வலையமைப்புகளில் ஆக்ரோஷமாக இருக்கும் மற்றும் கலகங்களைத் தூண்டிவிட்டு வரும் குண்டர்கள், தாம் அடையவிரும்பியதை அடைந்துவிட்டனரா?” என்று Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை ஒரு குறிப்பிடத்தக்க கருத்துரையில் வினவியது. நீண்டகாலமாகவே, நாம் "'சமூக' வலையமைப்புகளின் ஈர்ப்புமிக்க அதிகாரத்திற்கு மண்டியிட்டு" உள்ளோம் என்று எழுதிய அப்பத்திரிகை, “அரசு படிப்படியாக அதிகாரத்தை இழந்து வருவதை" குறித்து குறைகூறியது.

யதார்த்தத்தில், லூப்க்கவின் படுகொலை ஒரு பலவீனமான அரசின் விளைவல்ல, மாறாக அரசு மற்றும் ஆளும் உயரடுக்கால் அதிவலது தீவிரவாதிகள் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுவதன் விளைவாகும். இதுதான் ஜேர்மன் அரசியலின் அழுக்குமிக்க இரகசியம். இந்த ஆதரவானது, வலதுசாரி தீவிரவாத வன்முறை நடவடிக்கைகளது முக்கியத்துவத்தை முற்றுமுதலாக குறைத்துக் காட்டுவது, வலதுசாரி தீவிரவாத குழுக்களை நோக்கி உளவுத்துறை முகமைகளின் பாகத்தில் கண்மூடி இருப்பது, ஜேர்மனிக்கான மாற்றீட்டை (AfD) வேண்டுமென்றே முன்னுக்குக் கொண்டு வருவது, நாஜிக்களின் குற்றங்களைப் பல்கலைக்கழக வளாகங்களில் குறைத்துக் காட்டுவது, பாதுகாப்புத்துறை அமைப்பின் பிரிவுகளால் வலதுசாரி தீவிரவாத குழுக்கள் சகித்துக் கொள்ளப்படுவது என்பது வரையில் நீள்கிறது.

இதுவரையில் லூப்க்க தான் வலதுசாரி தீவிரவாதிகளுக்கு பலியானவர்களிலேயே மிகவும் முக்கியமானவர் என்றாலும், அவர் மட்டுமே ஒரே நபர் அல்ல. மத்திய குற்றவியல் பொலிஸின் பின்னடிப்புமிக்க தகவல்பதிவுகளின் படி, 1990 இல் ஜேர்மன் மறுஐக்கியத்திற்குப் பின்னர் இருந்து வலதுசாரி தீவிர பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு 85 பேர் பலியாகி உள்ளனர். சுயாதீன அமைப்பான Amadeu Antonio Foundation இந்த புள்ளிவிபரங்களை 195 என்று காட்டுகிறது, இதை அது 12 க்கும் மேலான சந்தேகத்திற்குரிய சம்பவங்களுடன் சேர்த்து அதன் வலைத்தளத்தில் பெயர்களுடன் பட்டியலிடுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களைக் குறித்து பொதுமக்களுக்குத் தெரியாது, அல்லது NSU இக்குப் பலியானவர்களைப் போல, பல ஆண்டுகள் கழித்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முரண்பட்ட விதத்தில், புற அதிர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட அகதியின் ஒவ்வொரு வன்முறை நடவடிக்கையும் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டு, AfD பிரச்சாரத்திற்குத் தீனியாக வழங்கப்படுகின்றன. இதற்கும் மேல், அகதிகளுக்கு உதவிவழங்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் வலதுசாரி தீவிரவாதிகளால் அச்சுறுத்தப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர் மற்றும் அடிக்கப்படுகின்றனர், பொலிஸ் அது குறித்து எதுவும் செய்யாமல் உள்ளது. இத்தகைய சம்பவங்கள் அரிதாகவே பத்திரிகைகளில் வெளியாகின்றன.

வலதுசாரி தீவிர பயங்கரவாத வலையமைப்புகள் பாதுகாப்பு முகமைகளுடன் இரகசிய தொடர்புகள் வைத்துள்ளதுடன், இவை அத்தகைய குழுக்களுக்கு மூடிமறைப்பை வழங்குகின்றன. சான்றாக, NSU அமைப்பு எதிலிருந்து உதித்து வந்ததோ அந்த நவ-நாஜிகளுக்கு ஆதரவானவர்களுக்கு உள்நாட்டு உளவுத்துறை முகமையினால் நூறாயிரக் கணக்கான யூரோ நிதி வழங்கப்பட்டது. NSU அதன் இனவாத படுகொலைகளை நடத்தியபோது, பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளின் குறைந்தபட்சம் இரண்டு டஜன் உளவாளிகள், அதன் வட்டத்தினுள் செயல்பட்டு வந்திருக்கின்றனர்.

வலதுசாரி தீவிரவாத வலையமைப்புகள், ஆயுதப்படையினுள்ளும் மற்றும் பொலிஸிலும் உள்ளன. அங்கே அவை தோற்றப்பாட்டளவில் விலக்கீட்டுரிமையுடன் செயல்பட முடிகிறது. கடந்தாண்டு பல ஊடக நிறுவனங்களும், ஆயுதப்படையில் நன்கு-தொடர்புபட்ட வலதுசாரி தீவிரவாத வலையமைப்பு இருப்பதையும், அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டு வருவதாகவும், மற்றும் "X தினம்" எனக்குறிப்பிட்ட நாளில் ஒரு பாசிச கலகத்திற்குத் தயாரிப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிவித்தன. NSU இனால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதிட்ட வழக்குக்குரைஞர் Seda Başay-Yıldız இற்கு அனுப்பப்பட்ட மரண அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணையின் போது ஹெஸ்ச மாநில பொலிஸில் ஒரு வலதுசாரி தீவிரவாத வலையமைப்பு இருப்பது வெளியானது. லூப்க்க கொல்லப்பட்டதில் சந்தேகிக்கப்படும் ஸ்டீபன் E. இற்கும் இத்தகைய குழுக்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் உள்ளன.

வலதுசாரி தீவிரவாத பயங்கரவாத வலையமைப்புகள் ஊக்குவிக்கப்படுவது என்பது அரசு மற்றும் ஆளும் உயரடுக்கிற்குள் வலது நோக்கிய திருப்பத்தின் ஒரு அம்சம் மட்டுமே. மற்றொன்று, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளின் ஜேர்மனியின் பாரிய கூட்டணியால் AfD இன் அகதி கொள்கை நடைமுறையளவில் ஏற்கப்பட்டு வருவதாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெருமைமிகு ஜேர்மன் வரலாற்றில் நாஜி ஆட்சி ஒரு "பறவையின் எச்சம்" என்று வர்ணிக்கின்ற அந்த வலதுசாரி தீவிரவாத கட்சிக்கு மற்ற கட்சிகளால் விட்டுக்கொடுப்புகள் வழங்கப்படுகின்றன என்பதுடன், அரசாங்கத்தில் எதிர்கால பங்காளியாக அது கையாளப்படுகிறது.

ஸ்தாபக கட்சிகள் அனைத்தினாலும் ஆதரிக்கப்படுகின்ற முன்னாள் ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், ஸ்டீபன் E. கைது செய்யப்படுவதற்கு வெறும் ஒரு நாள் முன்னர், Der Spiegel உடனான ஒரு நீண்ட பேட்டியில், “வலதை நோக்கிய கூடிய சகிப்புத்தன்மைக்கு" முறையிட்டார். AfD அங்கத்தவரை துணை பாராளுமன்ற தலைவராக தேர்ந்தெடுக்காததற்காக மத்திய நாடாளுமன்றத்தை விமர்சித்த கௌவ்க், AfD இன் முக்கிய கருத்துக்கள் அனைத்தையும் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார்.

இளம் தலைமுறையினரிடையே நாஜி குற்றங்களுக்கான "வெட்க உணர்வு அல்லது குற்ற உணர்வு" விதைக்கப்பட்டு வருவதாக அவர் குறைகூறினார். “மாறுகின்ற உணர்வு அபாயகரமானது ஏனென்றால் அது நம்மை நம்மிடமிருந்தே அன்னியப்படுத்துகிறது,” மற்றும் இது "அந்நியநபர்களை குறித்த அச்சத்தைப் போலவே, ஒரு மானுடவியல் மாறிலி" ஆகும் என்றவர் வலியுறுத்தினார். “ஓர் எதேச்சாதிகார நபருக்கான ஏக்கங்கள்" அவரால் "மனித இயல்பாக" இருப்பதாக விவரிக்கப்பட்டது.

இவை அனைத்தினது நோக்கம் என்ன என்பது கௌவ்க்கிற்கு நன்றாக தெரியும். ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த போது, அவர் 2013 இல் ஜேர்மன் ஐக்கிய தினத்தில் வெளியுறவு கொள்கை மீது ஒரு முக்கிய உரை வழங்கினார். “உலகில் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக அதன் இடத்தை எடுத்துக்காட்டும்" விதத்தில் ஜேர்மனி உலகளாவிய அரசியல் மற்றும் இராணுவ பாத்திரம் வகிக்க திரும்ப வேண்டுமென அவர் கோரினார். அந்த உரை ஜேர்மன் இராணுவவாதத்தின் ஒரு திட்டமிட்ட புதுப்பித்தலுக்கு முன்னறிவிப்பாக சேவையாற்றியது, ஜேர்மன் இராணுவவாதம் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழகங்களில், முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஜேர்மனியின் போர் குற்றங்களைக் குறைத்துக் காட்டும் ஜேர்மன் வரலாறு பற்றிய புதிய மதிப்பீடு பற்றியுள்ளது.

ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி 2014 இல் Der Spiegel இல் நாஜி அனுதாபி ஏர்ன்ஸ்ட் நோல்டவைப் பாதுகாத்து, “ஹிட்லர் வக்கிரமானவர் இல்லை,” என்று கூறிய போது, “ஜேர்மன் இராணுவவாதத்தைப் புத்துயிரூட்ட, நாஜி காலக்கட்ட குற்றங்களைக் குறைத்துக் காட்டும் புதிய வரலாற்று பொருள்விளக்கம் அவசியப்படுகிறது,” என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது. இதை "எதிர்க்கருத்துள்ளவர்களை பீதியூட்டுவதற்கான மற்றும் எல்லா விமர்சனபூர்வ கருத்துக்களையும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதன் மூலமாக [மட்டுமே]" அடைய முடியும் என்றது குறிப்பிட்டது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினது பார்பெரோவ்ஸ்கி மீதான விமர்சனங்கள் ஒரு சீற்றத்தின் புயலைத் தூண்டியது, அதில் ஏறத்தாழ எல்லா ஊடக நிறுவனங்களும், பல்கலைக்கழக நிர்வாகங்களும் மற்றும் பேராசிரியர்களும் உள்ளடங்கி இருந்தனர். AfD மற்றும் ஏனைய வலதுசாரி தீவிரவாதிகளுடன் பார்பெரோவ்ஸ்கி நெருக்கமான தொடர்புகளைப் பேணுகின்ற போதினும், அவர்கள் இந்நாள் வரையில் அவரைத் தொடர்ந்து பாதுகாக்கின்றனர். முன்னாள் CDU அரசியல்வாதி Erica Steinbach அவரின் மிகவும் ஆரவாரமான ஆதரவாளர்களில் ஒருவராவார், இவர் இப்போது AfD இன் Desiderius Erasmus அமைப்பின் தலைவராக உள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில், Steinbach லூப்க்கவின் மீது பல்வேறு தாக்குதல்களைப் பதிவு செய்ததுடன், அவர் பதிவுகளின் கருத்துரை பிரிவுகளில் பதியப்பட்ட மரண அச்சுறுத்தல்களை சில காலத்திற்கு அழிக்காமலும் இருந்தார்.

லூப்க்கவின் படுகொலையானது, SGP இன் எச்சரிக்கைகள் அனைத்தையும் முழுமையாக உறுதிப்படுத்துகிறது. அதிகரித்து வரும் சமூக பதட்டங்கள் மற்றும் புவிசார்அரசியல் மோதல் நிலைமைகளின் கீழ், ஆளும் உயரடுக்கு அதன் எதேச்சதிகார மற்றும் இராணுவவாத பாரம்பரியங்களை ஏற்று வருகிறது. ஹிட்லரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஜேர்மன் முதலாளித்துவத்திற்கு பூசப்பட்ட ஜனநாயக மறைப்பு விலகி, பாசிசத்தின் நிஜமான மண்ணிறம் தெளிவாக தெரிகிறது.

வைய்மர் குடியரசில், அரசுடன் நெருக்கமாக தொடர்பில் இருந்த துணைஇராணுவப்படை அமைப்புகள் நடத்திய அரசியல் படுகொலைகள், வழமையான நிகழ்வுகளாக இருந்தன. Matthias Erzberger மற்றும் Walther Rathenau போன்ற பிரபல முதலாளித்துவ அரசியல்வாதிகளின் படுகொலைகள், ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுந்தான். ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் இன் படுகொலையில் இருந்து பாவேரிய சோவியத் குடியரசு மீதும், எண்ணற்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மீதும் நடத்தப்பட்ட இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறை வரையில், மற்றும் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் முதலில் தொழிலாளர்களின் தலைவர்கள் கைது செய்து அடைக்கப்பட்ட கொடூர சிறை முகாம்கள் வரையில்—நிஜமான பயங்கரம் தொழிலாள வர்க்க பிரதிநிதிகளுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டது.

லூப்க்கவின் படுகொலை ஜேர்மனியின் உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, மாறாக உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கும் ஒரு தீவிர எச்சரிக்கையாகும். போர், வர்த்தகப் போர், மற்றும் கடுமையான சமூக சமத்துவமின்மை ஆகிய நிலைமைகளின் கீழ், முதலாளித்துவ ஆட்சியை இனியும் ஜனநாயக வழிவகைகள் மூலமாக பேண முடியாது. ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் பாதுகாப்பைப் போலவே, அதிவலது அபாயத்திற்கு எதிரான போராட்டமும், முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராட தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதில் இருந்து பிரிக்க முடியாததாகும்.