ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Two years since the Grenfell inferno: The case for socialism

கிரென்ஃபெல் தீவிபத்திற்குப் பின்னர் இரண்டாண்டுகள்: சோசலிசத்திற்கான சம்பவம்

By Socialist Equality Party (UK)
14 June 2019

ஜூன் 14, 2017 கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து, இலண்டன் மற்றும் உலகெங்கிலுமான உழைக்கும் மக்களின் நனவில் பதிந்த ஒரு நிகழ்வாக ஆகியுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 72 பேர் அவர்களின் வீடுகளில் எரிந்து பலியானார்கள்.

அதன் "மறுகட்டமைப்பு" திட்டங்களின் பாகமாக, கென்சிங்டன் செல்சியா அரச பெருநகர கவுன்சிலும் அதன் குடியிருப்போர் நிர்வாக அமைப்பு (KCTMO) உம், ஒரு சிறிய சமையலறை தீப்பிடித்தாலே நிமிடங்களில் கட்டிடத்தையே தீ சூழும் அளவுக்கு மலிவான, தீப்பிடிக்கக்கூடிய மேல்கட்டுமானங்களைக் கொண்டு கிரென்ஃபெல்லில் கட்டப்பட்டிருந்தன.

“வரவிருக்கும் ஆண்டுகளில், பிரிட்டனின் அரசியல் வாழ்வை கிரென்ஃபெல்லுக்கு 'முன்னரும்' 'பின்னரும்' என்று குறிப்பிட வேண்டியிருக்கும். ஏனென்றால் இது வர்க்கங்களுக்கு இடையிலான சமூக உறவு யதார்த்தத்தின் அடித்தளத்தை அந்தளவுக்கு குரூரமாக அம்பலப்படுத்தி உள்ளது—அதுவும் இச்சம்பவம் உலகின் மிகவும் பணக்கார நகரங்களில் ஒன்றான இலண்டனில், அதுவும் இலண்டனின் மிகப் பணக்கார தொகுதியில் நடந்துள்ளது” என அவ்வேளையில் சோசலிச சமத்துவக் கட்சி எழுதியது.

அந்த தீவிபத்து வெறுமனே ஒரு துயர சம்பவம் மட்டுமல்ல, மாறாக அதுவொரு குற்றம் என்பதை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் புரிந்திருந்தார்கள். இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமை என்பதில், பிரெடெரிக் ஏங்கெல்ஸ் விவரிக்கையில், “சமூகம், நூற்றுக் கணக்கான பாட்டாளிகளைக் குறைந்த ஆயுளில் இயற்கைக்கு மாறான மரணத்திற்கு உள்ளாகும் நிலைமையில் நிறுத்தி இருக்கையில்" "அதுவுமின்றி இதே நிலைமைகள் நீடித்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கையில், ஒரு தனிநபரின் நடவடிக்கையைப் போல அதேயளவுக்கு நிச்சயமாக அதன் நடவடிக்கையும் படுகொலை நடவடிக்கை தான்,” என்று குறிப்பிட்டார்.

அந்த 72 நபர்களின் சமூக படுகொலையானது, தசாப்த காலமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலின் விளைவாக இருந்தது. “சமூகம் என்ற ஒன்று கிடையாது,” என்பதே சுதந்திர-சந்தை முதலாளித்துவத்திற்கு மார்கரெட் தாட்சரின் துதிபாடலாக இருந்தது, கட்டிட மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு நெறிமுறைகள் உட்பட பெரும் செல்வந்தர்களின் செல்வவளத் திரட்சி மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் கிழித்தெறியப்படும் மற்றும் வீட்டுவசதி கவுன்சில் தனியார்மயப்படுத்தப்படும் என்பது அவரின் சூளுரையாக இருந்தது.


கிரென்ஃபெல் கோபுர தீவிபத்து [படம்: ட்வீட்டர், நத்தலி ஆக்ஸ்போர்ட்]

டோனி பிளேயரின் புதிய தொழிற் கட்சி அதே பாணியைப் பின்தொடர்ந்தது. "இழிவார்ந்த விதத்தில் பணம் சேர்ப்பவர்கள் மீது [அவர்கள்] பெரிதும் ஆசுவாசப்பட்டு" இருந்ததாகவும், வங்கியாளர்கள் மற்றும் செல்வந்த தட்டுக்களுக்கான விளையாட்டுக் களமாக இலண்டன் மாறுவதை அவர்கள் மேற்பார்வை செய்து வருவதாகவும் அது அறிவித்தது. வீட்டுவசதி, சமூக கவனிப்பு, போக்குவரத்து மற்றும் தேசிய சுகாதாரச் சேவை என பெரும்பாலான பிரிவுகள் தனியார்மயமாக்கப்பட்டன அல்லது அரசு-தனியார் பங்காண்மை மூலமாக கிடுக்கிப்பிடி போடப்பட்டது. “சமூக சுத்திகரிப்பு” “திறந்தவெளியில் படுத்துறங்குதல்" மற்றும் "உழைக்கும் ஏழைகள்" ஆகிய வார்த்தைகள் அன்றாட பேச்சுவழக்கில் வந்தன.

ஜூன் 2017 வாக்கில், செல்சியாவில் முழுமையாக ஓர் உடற்பயிற்சி கூடம் மற்றும் திரையரங்கத்துடன் கூடிய பெரிய வீட்டை 16.5 மில்லியன் பவுண்டுக்கு வாங்க முடிந்தது, ஆனால் 30 மீட்டருக்கும் கூடுதலாக நீட்டக்கூடிய ஏணியுடன் ஒரு தீயணைப்பு வாகனத்தைக் காண முடியவில்லை—இதைத்தான் இலண்டன் தீயணைப்பு வீரர்கள் "குற்றகரமான" நிலைமை என்று விவரித்தார்கள். ஒரு பெருநகரில் அரசுரிமை கொண்ட, லான்செஸ்டர் வெஸ்ட் வீட்டுவசதி அடுக்கில் வசித்தவர்கள் தீயணைப்பு நீர்பீய்ச்சிகள் இல்லாததால் அந்த அடுக்குமாடி பகுதியில் கொல்லப்பட்டனர். கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் வெளியேறுவதற்கான ஒரேயொரு படிக்கட்டு மட்டுமே இருந்தது, தீயணைப்பு எச்சரிக்கை ஒலிப்பான்கள் இல்லை, அக்கட்டிடத்தின் அவசர வழியில் விளக்குகள் உடைந்திருந்தன. எளிதில் தீப்பற்றக்கூடிய மேல்கட்டுமானப் பொருட்களால் அடர்த்தியான கியானைட்-நிறைந்த புகை உண்டாக்கப்பட்டு வளாகங்கள் மற்றும் மாடிப்படிக்கட்டுக்களில் நிரம்பியிருந்த நிலையில், 999 க்கு அழைத்தவர்களுக்கு "காத்திருக்குமாறு" கூறப்பட்டது. இலண்டன் தீயணைப்புப்படை வீரர்கள் செலவின வெட்டுக்களால் சீரழிந்த ஒரு சேவையைக் கொண்டு தீரத்துடன் போராடினர்.

தீப்பற்றக்கூடிய அபாயங்களைக் குறித்து கிரென்ஃபெல் நடவடிக்கை குழு விடுத்திருந்த தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வேண்டுமென்றே கவுன்சில் அதிகாரிகளால் கைவிடப்பட்டிருந்தன என்பதை மில்லியன் கணக்கானவர்கள் அதற்கடுத்த நாள் காலை கண்டுகொண்டனர்: “அது உண்மையிலேயே ஒரு பயங்கரமான நினைப்பு தான் என்றாலும், நம் நிலத்தினரின் அறியாமையும் ஆக்கப்பூர்வமற்ற தன்மையும் ஒரு பேரழிவுகரமான சம்பவத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று கிரென்ஃபெல் நடவடிக்கை குழு உறுதியாக நம்பியது.”

அதிகாரிகளின் வர்க்க இறுமாப்பு சீற்றத்திற்கு எரியூட்டியது, அந்த தீவிபத்து சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் கென்சிங்டன் மற்றும் செல்சியா கவுன்சில் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன.

கிரென்ஃபெல் தீவிபத்து முதலாளித்துவத்தின் தோல்வியை அம்பலப்படுத்தியது. அதன் பின்னர் தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சமூக சக்தி எடுத்துக்காட்டப்பட்டது. உழைக்கும் மக்கள்தான் நிவாரண முயற்சிகளை ஒழுங்கமைத்தனர், உணவு, உடை, கழிவறை வசதிகள், மருந்து, போர்வைகள் மற்றும் அவசர தங்குமிடங்களுக்கான நன்கொடைகளை அவர்கள் தான் ஏற்பாடு செய்தனர். முதலில் அவர்கள்தான் காணாமல் போனவர்களின் பட்டியல்களை தயாரித்தார்கள்.

இனம், வம்சம், மதம், பாலினம் என இந்த மேலாட்டமான வேறுபாடுகளைக் கடந்து, சமூகம் அடிப்படையில் வர்க்கங்களாக பிரிந்துள்ளது என்பது உழைக்கும் மக்கள் சுயாதீனமாக செயல்பட்டதில் எடுத்துக்காட்டப்பட்டது.

அரசு பின்நகர்ந்து கட்டுப்பாட்டைத் தக்க வைக்க செயல்பட்டது. சர் மார்ட்டீன் மூர்-பிக் தலைமையில் அரசு விசாரணை என்பதே அது தேர்ந்தெடுத்த அரசியல் இயங்குமுறையாக இருந்தது. ஆனால் இந்த கண்துடைப்பு, தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின், உள்ளாட்சி தொழிற் கட்சி நாடாளுமன்ற தலைவர் Emma Dent-Coad மற்றும் தீயணைப்புத்துறை தொழிற்சங்க தலைவர் Matt Wrack ஆகியோரது ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. அவர்கள்தான் அங்கு வசித்தவர்களின் கோபத்தை ஒரு மோசடிக்குப் பின்னால் திருப்பி விட்டார்கள். ஒரு "சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தன்மை" இன் எந்த காரணங்களையும் Moore-Bick புலனாய்வு செய்வதை கைவிட்டார் என்பதுடன், அந்த விசாரணைக்கு எந்த குற்றச்சாட்டையும் சுமத்த அதிகாரம் இருக்கவில்லை. குற்றவாளிகளை என்றைக்கும் பாதுகாக்க மட்டுமே செய்யக்கூடிய ஒரு நிகழ்முறைக்கு, நீதி கோரிய அனைத்து கோரிக்கைகளையும் அடிபணிய செய்ய வைப்பது மட்டுமே அதன் ஒரே செயல்பாடாக இருந்தது.

இரண்டாண்டுகள் கடந்து விட்டன ஆளும் வர்க்கம் வழக்கம் போல அதன் நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் 17 கிரென்ஃபெல் குடும்பங்கள் இன்னமும் தற்காலிக வசிப்பிடத்தில் தங்கியுள்ளன. பெருநிறுவன குற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்த அலட்சியத்தின் மனிதப்படுகொலைக்காக சந்தேகிக்கக்கூடியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற போதினும், “குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என்பதை இலண்டன் பெருநகர பொலிஸ் ஒப்புக் கொண்டதுடன், வெறும் 13 பேர் மட்டுமே "எச்சரிக்கையோடு" விசாரிக்கப்பட்டிருந்தனர்.

வக்கிரமான வர்க்க நீதி நடவடிக்கையால், குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவி வருகையில், அந்த தீவிபத்தில் குடும்பத்தையும் நண்பர்களையும் இழந்த மதிப்புக்குரிய கிரென்ஃபெல் தீவிபத்து பிரச்சாரகர் Reis Morris அவரின் புகார்களைக் கிரென்ஃபெல் தள நிர்வாகி புறக்கணித்ததை எதிர்த்ததற்காக, இன்று இந்த நினைவுதினத்தில் அவர் கம்பிகளுக்குப் பின்னால் நிற்கிறார்.

இலண்டன் நகரசபை தலைவர் போரிஸ் ஜோன்சனின் கடுமையான வெட்டுக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்துமென தீயணைப்பு வீரர்கள் எச்சரித்ததும், அவர் "முடிந்தவரை அழுத்தத்தில் செயல்படுமாறு" போராடிய அந்த தீயணைப்பு வீரர்களுக்குத் தெரிவித்தார். இந்த அரசியல் தீவிபத்து தான், இப்போது டோரி தலைமைக்கு போட்டியிட்டு ஜெயிப்பதற்கும் பிரதம மந்திரியாக மே ஐ பிரதியீடு செய்வதற்கும் போரிஸ் ஜோன்சனுக்கு அனுகூலமாக உள்ளது.

கிரென்ஃபெல்லைப் போலவே எளிதில் தீப்பிடிக்கக்கூடிய அதேபோன்ற மேல்கட்டுமான பொருட்களால் ஆன அடுக்குமாடிக் கட்டிடங்களில் 200,000 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், விற்பனை மையங்கள், வேலையிடங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் என ஆயிரக் கணக்கான கட்டிடங்கள் இன்னமும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டவையாக உள்ளன.

கிழக்கு இலண்டனின் பார்கிங்கில் 20 வீடுகளுக்குப் பரவிய கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிபத்து எதுவும் மாறவில்லை என்பதைக் காட்டுகிறது. கட்டிடங்கள் மற்றும் தீயணைப்பு பாதுகாப்புக்கான முறிந்து போன ஓர் அமைப்பால் ஒப்புதல் வழங்கப்பட்ட மேல்கட்டுமானங்கள் மற்றும் மரத்திலான பால்கனிகள் வழியாக 12 நிமிடங்களுக்குள் அனைத்து ஆறு மாடிகளுக்கும் நெருப்பு பரவியது. வசிப்போரின் பாதுகாப்பு மீதான அக்கறைகள் மீண்டுமொருமுறை புறக்கணிக்கப்பட்டிருந்தன. அந்த தீவிபத்து நண்பகலில் நடந்ததால் பெரிய உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது மட்டுமே ஒரே உண்மை.

தனிநபர் சொத்துத்திரட்சி மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வைச் சீரழிக்கின்ற நிலையிலும் கூட, அதை நிரப்பிக் கொண்டுள்ள ஓர் ஒட்டுண்ணித்தனமான ஆளும் வர்க்கத்தை தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கையில், உலகெங்கிலும் முதலாளித்துவம் என்பது ஓர் அருவருக்கத்தக்க வார்த்தையாக மாறி வருகிறது. 2012 இல் இருந்து பிரிட்டனில் நடத்தப்பட்ட சிக்கன கொள்கைகளால் தான் தவிர்த்திருக்கக்கூடிய 130,000 மரணங்கள் நடந்திருந்ததாக இம்மாதம் ஓர் ஆய்வு கண்டறிந்தது. கிரென்ஃபெல் சம்பவம் நடந்து இரண்டாண்டுகளில், 41 குழந்தைகள் உட்பட 64 பேர் கொல்லப்பட்ட ரஷ்யாவின் கெமெரோவொவில் இருந்து, 80 க்கும் அதிகமானவர்கள் தீயில் கருகி இறந்த பங்களதேஷின் டாக்கா வரையில், நூற்றுக் கணக்கானவர்கள் கொடூரமான தீவிபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

அந்த தீவிபத்து நடந்த இரவு மயிரிழையில் உயிர் தப்பிய Edward Daffarn இவ்வாரம் கார்டியனுக்குக் கூறுகையில், கிரென்ஃபெல் பிரச்சாரகர்கள் ஒரு முட்டுச்சந்தில் இருப்பதாக தெரிவித்தார். அமைச்சர்கள் மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் டஜன் கணக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு Grenfell United அரசுடன் செயல்பட தயாராகி இருந்தது என்றாலும் இந்த மூலோபாயம் தோல்வியடைந்தது: “அவர்கள் பயப்படும் ஒரு விடயம் சமூக அமைதியின்மை—மிகச் சரியாக அதற்கு தான் பயப்படுகிறார்கள். கென்சிங்டனில் எந்தவொரு கூட்டத்திற்கு சென்றாலும் அங்கே இன்னமும் கோபமும் உள்ளது. அது தணியவில்லை. இவ்விதத்தில் செய்ய முயன்று நாங்கள் 22 மாதங்கள் வீணாக்கிவிட்டோம், இப்போது நாம் வேறு தீர்வைக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. நாம் நிறைய கற்றுள்ளோம். அவர்கள் நம்மை தோற்கடித்துள்ளார்கள்,” என்றார்.

ஒரு புதிய அரசியல் மூலோபாயம்—சோசலிசத்திற்கான போராட்டம்—அவசியப்படுகிறது. நிதியியல் செல்வந்த தட்டுக்கள் மற்றும் அதன் அரசியல் பாதுகாவலர்களின் செல்வவளம் மற்றும் அதிகாரம் மீது தொழிலாள வர்க்கத்தின் ஒரு முன்னணி தாக்குதல் இல்லாமல், கிரென்ஃபெல்லுக்கான நீதியைப் பெற முடியாது.

எளிதில் தீப்பற்றக்கூடிய மேல்கட்டுமானங்களை உற்பத்தி செய்த Arconic மற்றும் Celotex நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அதை நிறுவிய Harley Facades மற்றும் Rydon கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதிகள், அதை பயன்படுத்த ஒப்புதல் வழங்கிய கவுன்சில் அதிகாரிகள் மற்றும் ஜோன்சன் உட்பட அதில் நேரடியாக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் என இந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்.

அரசின் அழுகிப்போன இந்த விசாரணைக்கு எல்லா ஒத்துழைப்புகளையும் திரும்பப்பெறுமாறு சோசலிச சமத்துவக் கட்சி கிரென்ஃபெல் குடும்பங்களையும் மற்றும் அவர்களின் சட்ட வல்லுனர் குழுக்களையும் வலியுறுத்துகிறது. கோர்பின் மற்றும் அதை தொடர்ந்து ஆதரித்து வரும் Dent-Coad போன்றவர்கள் அரசு மூடிமறைப்புக்கு ஒத்துழைத்து வருகிறார்கள்.

அனைவருக்கும் பாதுகாப்பான இடர்பாடற்ற வீடுகளை உருவாக்க பில்லியன் கணக்கிலான பவுண்டுகள் கிடைக்கச் செய்ய வேண்டும். நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளங்களைப் பறிமுதல் செய்வது, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களைத் தேசியமயப்படுத்தி அவற்றை மக்களின் உடைமையாக ஜனநாயக கட்டுப்பாட்டில் நிறுத்துவது, பிரிட்டன் பொருளாதாரம் மற்றும் உலக பொருளாதாரத்தை இலாபத்திற்காக அல்ல, மாறாக மனிதயினத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மறுஒழுங்கமைப்பது என்பதே இதன் அர்த்தமாகும்.