ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Minutes to disaster: Lessons to be learned from the confrontation with Iran

அழிவுக்கான நிமிடங்கள்: ஈரான் உடனான மோதலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

Andre Damon
24 June 2019

நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச்செலும் மிகப்பெரிய புதியதொரு போரைத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தி, வியாழனன்று மாலை, அமெரிக்க இராணுவம் ஈரான் மீது தொடர்ச்சியான பல வான்வழி தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தது.

இராணுவ, இராஜாங்க மற்றும் அரசியல் விளைவுகள் சம்பந்தமாக வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனின் உயர்மட்டங்களில் நிலவிய ஆழ்ந்த கருத்துவேறுபாடுகளுக்கு மத்தியில், அந்த தாக்குதல்கள் கடைசி தருணத்தில் நிறுத்தப்பட்டன, அது ஒட்டுமொத்த ட்ரம்ப் ஜனாதிபதி பதவிகாலத்திய மிகவும் அபாயகரமான மற்றும் பொறுப்பற்ற ஒரு நடவடிக்கையாக இருந்திருக்கக்கூடும்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தலைமையிலான ட்ரம்பின் வெளியுறவுத்துறை கொள்கை குழு "ஒருமனதாக" அந்த தாக்குதலை ஆதரித்த போதினும், முப்படை தளபதிகளின் தலைமை தளபதி ஜோசப் டன்ஃபோர்ட் "அது அமெரிக்க படைகளை ஆபத்திற்குட்படுத்தும் என்று எச்சரித்து, ஒரு தாக்குதலுக்கு சாத்தியமான எதிர்விளைவுகளைக் குறித்த எச்சரிக்கையூட்டினார்,” என்று டைம்ஸ் எழுதியது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல்படி, ட்ரம்ப் "இராணுவ மற்றும் அரசியல் விளைவுகளைக் குறித்து இரண்டாம் சிந்தனை கொண்டிருந்ததால் அவர் மனதை மாற்றிக் கொண்டார்.” அல்லது, ஸ்ட்ராட்ஃபோர் குறிப்பிட்டதைப் போல, “ட்ரம்ப், இன்னும் பெரிய தீவிரப்பாட்டுக்கு அஞ்சி, மென்மையானார்.”

விவாதத்தின் பெரும்பான்மை அமெரிக்க ஜனாதிபதியின் கடைசி நிமிட முடிவின் மீது மையமிட்டுள்ளன என்றாலும், ஒட்டுமொத்த அத்தியாயமும் அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையின் அனைத்து அம்சங்களிலும் பரவியுள்ள பொறுப்பற்றத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

150 ஈரானிய உயிர்கள் பறிபோகுமென்ற கழிவிரக்கம் தான் குண்டுவீசுவதை நிறுத்துவதற்கான அவரது முடிவுக்கு உந்துதலாக இருந்தது என்ற ட்ரம்பின் வாதத்தை விடுத்துப் பார்த்தால், இராணுவ விளைவுகளை ஆழமாக ஆராயாமல் அமெரிக்கா ஒருசில நிமிடங்களில் ஒரு போரைத் தொடங்க இருந்தது என்பது தான் காணக்கூடியதாக உள்ளது.

இந்த திட்டமிட்ட சாகச முயற்சி, மீண்டும், அழிவு ஏற்படுத்தும் தவறான கணக்கீடுகளின் அடிப்படையில், அதாவது அமெரிக்க இராணுவம் இவ்வாறு மற்றொரு குண்டுவீச்சு அலையைத் தொடங்கினால் ஈரான் நிராதரவாக நிற்கும் என்ற அடிப்படையில் இருந்தது.

ஆனால் வியாழக்கிழமை 130 மில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவிய வேட்டையாடலுக்குரிய RQ-4 உயர்-ரக உளவுபார்ப்பு விமானம் ஒன்றை ஈரான் சுட்டுவீழ்த்தியது என்பது, இதுதான் அந்த திட்டமிட்ட தாக்குதலுக்குப் பெயரளவிலான சாக்குபோக்காக இருந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகளைத் தெளிவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இறுதி நிமிடங்களில், ஈரான் அந்த டிரோனைச் சுட்டிவீழ்த்தியமை, ஈரான் மீதான அவர்களின் திட்டமிட்ட தாக்குதலின் விளைவுகள் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் கடுமையாக இருக்குமென கடைசி நிமிடத்தில் இராணுவத்தின் பிரிவுகளும், மற்றும் ட்ரம்புமே கூட, நம்பியதாக தெரிகிறது. இந்த அபிவிருத்தியே அவர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தது என்றால், ஒரு போர் தொடங்கி இருந்தால் என்ன மாதிரியான மற்ற ஆச்சரியங்கள் தொடர்ந்திருக்கும்?

அமெரிக்க இராணுவத்தின் வெல்ல முடியாத ஆற்றல் என்ற பிரமையை உடைத்து, அமெரிக்க போர்கப்பல்கள் மூழ்கி இருக்கும், அமெரிக்க போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கும் என்ற அச்சமே, அப்பட்டமாக, அந்த பின்வாங்கலுக்கான நிஜமான காரணமாக இருந்தது.

அந்த அமெரிக்க வேவுபார்ப்பு டிரோன், ரஷ்யா தயாரிப்பான S-300 மற்றும் S-400 ஐ விட, இவையும் ஈரானிய இராணுவத்திடம் உள்ளன என்கின்ற நிலையில், பொதுவாக அவற்றை விட மிகவும் குறைந்த தகைமை கொண்டதாக கருதப்படும் ஈரானின் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணையான Raad வான்வழி பாதுகாப்பு தளவாட அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.

ட்ரம்ப் வழமையாக "பார்வைக்குப் புலனாகாது" என்று புகழும் அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள், அல்லது 2 பில்லியன் மதிப்பிலான B-2 ரக "கண்டறியவியலாத" மாய குண்டுவீசி உட்பட ஏனைய போர்விமானங்களையும் சுட்டுவீழ்த்தும் தகைமை தெஹ்ரானுக்கு உள்ளது என்பதே தெளிவான சேதியாக இருந்தது.

ஈரான் சமீபத்தில் புதிய ரக போர்க்கப்பல் தகர்ப்பு ஏவுகணைகளையும் நிலைநிறுத்தியது, அதற்கு ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்க நடுத்தர ரக போர்க்கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் ஆற்றல் இருப்பதாக அது கூறுகிறது. "சிறிதளவு முட்டாள்தனத்தை செய்தாலும், நாங்கள் அவர்களின் மாலுமி குழுவினர் மற்றும் விமானங்களுடன் அந்த கப்பல்களை கடலின் அடிப்பகுதிக்கு அனுப்புவோம்” என ஈரானிய ஜெனரல் மோர்டெஸா கோர்பானி RT க்கு எச்சரித்தார்.


USS ஆப்ரகாம் லிங்கன் [படம்: அமெரிக்க கடற்படை]

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தால், அனேகமாக அது USS ஆப்ரகாம் லிங்கன் போர்க்கப்பல் விமானங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குறைந்தபட்சம் மூன்று நடுத்தர ரக போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு விரைவு போர்க்கப்பலை உள்ளடக்கிய போர்ப்படை குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நிலைமைகளின் கீழ், அமெரிக்க இராணுவம் இந்த கப்பல்களை வெறுமனே இராணுவ சொத்திருப்பாக மட்டுமல்ல, மாறாக கடமைப்பாடுகளாகவும் பார்க்க நிர்பந்திக்கப்பட்டிருந்தது. 2 பில்லியன் டாலர் மதிப்பிலான நடுத்தர ரக போர்க்கப்பலை மூழ்கடித்து, அதன் சுமார் 300 மாலுமிகளில் கணிசமானவர்களைக் கொல்வதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

5,000 கடற்படை ஆட்கள் மற்றும் விமானப்படை ஆட்களைக் கொண்டுள்ள Nimitz ரக போர்க்கப்பல் USS ஆப்ரகாம் லிங்கனை ஈரான் மூழ்கடித்தால், அதன் விளைவுகளைக் கணக்கிட இயலாது.

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப்படையின் முன்னாள் அங்கத்தவர் ஒருவர் டைம்ஸிற்குக் கூறுகையில், “கடந்த 48 மணி நேரத்தில் என்ன நடந்ததோ அது ஈரானின் பலத்தைக் காட்டுவதிலும் மற்றும் அமெரிக்காவை மீளக்கணக்கீடு செய்ய நிர்பந்திப்பதிலும் மிகவும் முக்கியமானதாக இருந்தது...  நீங்கள் அதை எப்படி பார்த்தாலும் பரவாயில்லை, ஈரான் தான் வென்றது.”

ஆனால் ஈரானியர்களின் பெருமைபேசல் விவேகமற்றதாகவே இருக்கும். அமெரிக்கா, விளைவுகளை நினைத்தும் பார்க்கவியலாத, ஒரு போரை ஒருசில நிமிடங்களில் தொடங்க இருந்தது. இந்த முறை மயிரிழையில் தவிர்க்கப்பட்டிருந்த அந்த பேரழிவுகரமான விளைவு அடுத்த சம்பவத்தில் ஏற்படாது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை—அது ஈரானுக்கு எதிராகவோ அல்லது வேறொரு இலக்காகவோ இருக்கலாம். (1983 இல் பெய்ரூட் இராணுவ குடியிருப்புகள் மீதான குண்டுவீச்சில் சுமார் 250 அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டதும், இரண்டே நாட்களுக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ரீகன் கிரேனாடா மீது படையெடுத்து விடையிறுத்தார் என்பதை மட்டுமாவது ஒருவர் நினைவுகூர வேண்டும்.)

ஈரான் மீதான ஒரு தாக்குதலின் விளைவுகள் குறித்து அங்கே போதுமானளவுக்கு பரிசீலிக்கப்படவில்லை என்று ஒப்புக்கொள்வதற்கு சிலர் தயாராக இருந்தாலும் கூட, முழு அமெரிக்க வெளியுறவு கொள்கை ஸ்தாபகமும் இந்த விளைவால் ஆழமாக விரக்தியடைந்து போயுள்ளது.

“ஈரான் மீதும் மற்றும் ஹௌதி வான்-பாதுகாப்பு சொத்திருப்புகள் மீதும், தாக்குவதற்கான ஏவுகணை அமைப்புகள் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப்படையின் தளங்கள் மீதும் ட்ரம்ப் நிர்வாகம் அதன் சொந்த தாக்குதல்களைக் கொண்டு இந்த சமீபத்திய தாக்குதல்களுக்கு விடையிறுக்க வேண்டும்,” என்று ஒபாமாவின் கீழ் வேவுபார்ப்பு பிரிவின் பாதுகாப்புத்துறைக்கான துணை செயலராக இருந்த மைக்கல் ஜி. விக்கெர்ஸ் வாஷிங்டன் போஸ்டுக்குத் தெரிவித்தார். “திருப்பி தாக்க தவறினால் அவர்களை மேலும் தைரியப்படுத்த மட்டுமே செய்யும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ABC இன் This Week நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் Martha Raddaz, “அவர்கள் 130 மில்லியன் டாலர் மதிப்பிலான டிரோனை ஓர் ஆத்திரமூட்டல் இல்லாத தாக்குதலில் சுட்டுவீழ்த்திய பின்னர்” "பழிவாங்கும் ஓர் இராணுவ தாக்குதலுக்குக் குறைவின்றி வேறெதுவும்" பொருத்தமாக இருக்குமா என்று டெக்சாஸ் போர்வெறியர் Mac Thornberry க்கு அழுத்தமளித்தார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களின் பொறுப்பற்றதன்மையை, உலகளவிலும் மற்றும் உள்நாட்டிலும், அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய நெருக்கடியால் மட்டுமே விவரிக்க முடியும்.

ட்ரம்ப், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெறிபிடித்த உந்துதல்களுக்கு மிகவும் விகாரமான வெளிப்பாட்டை கொடுப்பதற்கு கூடுதலாக ஒன்றும் செய்யவில்லை. ஈரானுக்கு எதிரான ஓர் ஏவுகணை தாக்குதலைத் தொடங்கும் அந்த ஒருசில நிமிடங்களில் அவர் ஒரு தருணத்தில், அப்போது அவர் "ஈரானை மீண்டும் மகத்தானதாக" ஆக்குவது குறித்து பேசி கொண்டிருந்தார், பின்னர் அவர் அந்நாட்டை "துடைத்தழிக்க" அச்சுறுத்தி கொண்டிருக்கிறார்.

இந்த மட்டத்திலான நிலைகுலைந்த நிலை அதன் மூலவேர்களைத் தனியொருவரில் கொண்டிருக்கவில்லை. ட்ரம்ப் அவராலேயே புத்திஜீவிதரீதியில் புரிந்து கொள்ளவியலாத சக்தியால் ஆட்டுவிக்கப்படுகிறார்.

முப்பதாண்டு கால முடிவில்லா போர் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் கண்கூடாக இராணுவவாத மரபை உருவாக்கி உள்ளது, இவர்களின் வழிகாட்டும் அனுமானம், அமெரிக்காவுக்கு உள்ளேயே உள்ளடங்கலாக கடுமையான உலகளாவிய விளைவுகள் இல்லாமல் போர்களை நடத்தி விடலாம் என்பதாக தெரிகிறது.

1914 இக்கு முன்னர் மேலோங்கி இருந்த பொறுப்பற்றத்தன்மைக்கும், 1939 இல் இரண்டாம் உலக போர் தொடங்க ஹிட்லர் தலைமையில் இருந்த மூர்க்கத்தனத்தைக் குறிப்பிட வேண்டியதே இல்லை, 78 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தின் மீது நாஜி ஜேர்மனி பேரழிவுகரமாக படையெடுத்த நாளான நேற்றைய பொறுப்பற்றதன்மைக்கும் சமாந்தரங்கள் உள்ளன.

அமெரிக்கா ஒவ்வொரு வெளிநாட்டு கொள்கை தோல்விக்கும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புகளில் இருந்து சிரியா மற்றும் லிபியா மீது குண்டுவீசியது வரையில், இன்னும் பெரிய, புதிய போர்களுக்குத் தயாரிப்பு செய்ததன் மூலமாக விடையிறுத்துள்ளது.

எந்தளவுக்கு பேரழிவுகரமாக இருந்தாலும், அமெரிக்க ஆளும் உயரடுக்கு அல்லது அரசியல் ஸ்தாபகத்திற்குள் போரை எதிர்க்கும் எந்த அதிகார வட்டமும் இல்லை. 2003 இல் உலக சோசலிச வலைத்தளம் முன்கணித்தவாறு, அமெரிக்க ஏகாதிபத்தியம் "பேரழிவுடன் முன் நகர்கிறது.” எஞ்சியிருக்கும் மனிதகுலத்தை அமெரிக்காவின் முதலாளித்துவவாதிகள், அவர்களின் தளபதிகள், அவர்களின் உளவாளிகள் கைப்பற்றுவதிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைகளால் மட்டுமே தடுக்க முடியும்.