ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A letter to the New York Times on the resurgence of anti-Semitism in Germany

ஜேர்மனியில் யூத-எதிர்ப்புவாதத்தின் மீளெழுச்சி குறித்து நியூ யோர்க் டைம்ஸிற்கு ஒரு கடிதம்

By David North
8 June 2019

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த், நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட "புதிய ஜேர்மன் யூத-எதிர்ப்புவாதம்" என்ற ஜேம்ஸ் ஆங்கெலொஸின் கட்டுரைக்கு பதிலளித்து அப்பத்திரிகையாளருக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

** ** ** **

மே 31, 2019

அன்புடன் திரு. ஆங்கெலொஸ்,

ஜேர்மனியில் யூத-எதிர்ப்புவாதத்தின் மீளெழுச்சி குறித்து நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி அப்பத்திரிகையின் சர்வதேச பதிப்பின் முதல் பக்கத்தில் மே 29, 2019 இல் வெளியான உங்கள் அறிக்கையை நான் ஆர்வத்துடன் வாசித்தேன். அமெரிக்க பத்திரிகைகளில் கண்டித்தக்க வகையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகப்படும் இந்த விடயம் குறித்து நீங்கள் கிடைத்த விபரங்களின்படி சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.

ஆனால், உங்கள் கட்டுரையின் நீளம் மற்றும் நீங்கள் பேர்லினில் இருப்பவர் என்ற உண்மையைக் கொண்டு பார்த்தால், நீங்கள் பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளுக்கான துறைத் தலைவர் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியின் அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளை உங்கள் அறிக்கையில் எங்கேயும் குறிப்பிட தவறியிருக்கிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative für Deutschland) என்ற போர்வையின் கீழ் நவ-நாஜி வலதின் மீளெழுச்சியானது, நடத்தப்பட்டு வரும் வரலாற்று திருத்தல்வாத நடைமுறைகளால் ஒத்துழைக்கப்படுகிறது என்பதும், இதில் பார்பெரோவ்ஸ்கி, இழிபெயர்பெற்ற நாஜி ஆதரவாளர் ஏர்ன்ஸ்ட் நோல்ட இறந்ததற்குப் பின்னர், முக்கிய பாத்திரம் வகித்து வருகிறார் என்பதும் மறுக்கமுடியாத ஓர் அரசியல் உண்மையாகும்.

“AfD அரசியல்வாதிகளில் சிலர் எதை தேசிய 'குற்ற மரபு' என்று குறிப்பிடுகிறார்களோ அதற்கு எதிர்நடவடிக்கை எடுப்பதற்காக பெரும்பாலும் அவர்கள் நாஜி குற்றங்களைக் குறைத்துக் காட்டுகிறார்கள்" என்ற உண்மை மீது நீங்கள் குறிப்பாகவும், சரியாகவும், கவனத்தைக் கொண்டு செல்கிறீர்கள் என்றாலும், பார்பெரோவ்ஸ்கியைக் குறித்து எதுவும் குறிப்பிடாதது எல்லாவற்றையும் விட அதிகமாக மலைப்பூட்டுகிறது. AfD தலைவரான அலெக்சாண்டர் கௌலாந்தின் இழிவார்ந்த அறிக்கையையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், இவர் நாஜி சகாப்தத்தை, "1,000 ஆண்டுகால வெற்றிகரமான ஜேர்மன் வரலாற்றில் வெறுமனே ஒரு பறவையின் எச்சம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் கௌலாந்தின் அறிக்கையானது, குறிப்பாக பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் ஜேர்மன் கல்வியாளர்கள் மத்தியில் ஓர் அபாயகரமான அபிவிருத்தியின் விளைபொருளாகும். பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி யூத இனப்படுகொலையை "குறைத்துக் காட்ட", அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாரிய படுகொலைகள் வெறுமனே பல சம்பவங்களில் ஒன்று என்பதாக சித்தரிக்கும் சமகாலத்திய இயக்கத்திற்குத் தலைமை ஏற்றுள்ளார். நாஜி குற்றங்கள் மீதான ஒட்டுமொத்த வருத்தத்தையும் திசைமாற்றி, பார்பெரோவ்ஸ்கி யூத-இனப்படுகொலையை சோவியத் ஒன்றியத்தின் குற்றகரமான காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு புரிந்துகொள்ளத்தக்க விடையிறுப்பாக முன்வைக்கிறார். நாஜி தலைவர்களின் நிர்மூலமாக்கும் திட்டத்திற்கு அவர்கள் வழங்கிய நியாயப்பாடுகளுக்கு ஒத்த முற்றிலும் அதே போக்கில் உள்ள, அடாவடித்தனமான இந்த கம்யூனிச-விரோத வரலாற்று பதிப்பு குறிப்பிடத்தகுந்த "வரலாற்றாளர்களுக்கு இடையேயான சர்ச்சை" இன் (Historikerstreit) போக்கில் 1980 களில் மதிப்பிழந்திருந்தது. ஆனால் வரலாற்று திருத்தல்வாதம் இப்போது ஜேர்மனியில் மிகப்பெரும் புத்திஜவித அரசியல் சக்தியாக ஆகியுள்ளது.

பெப்ரவரி 2014 இல், பார்பெரோவ்ஸ்கி Der Spiegel இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு பேட்டியில் பின்வருமாறு அறிவித்தார்: “ஹிட்லர் மனநோயாளி இல்லை, அவர் வக்கிரமானவரும் இல்லை. அவரின் மேசையில் யூதர்களின் படுகொலை குறித்து பேசுவதையும் அவர் விரும்பவில்லை,” என்றார்.

பார்பெரோவ்ஸ்கி ஜேர்மன் கல்வித்துறை வாழ்வில் ஓர் ஓரத்தில் ஒதுங்கி நிற்கும் மனிதர் இல்லை. அவர் இப்போது ஜேர்மனியின் மிக முக்கிய வரலாற்றாளர்களின் ஒருவராக உள்ளார், சிறப்பு நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொள்வதற்கு அடிக்கடி அழைக்கப்படும் ஒரு ஊடக பிரபலமாக உள்ளார். வரலாறு மற்றும் அரசியல் மீதான அவர் கண்ணோட்டங்கள் AfD ஐ சட்டபூர்வமாக்கவும் மற்றும் கௌலாந்து போன்றவர்களைச் சட்டபூர்வமாக்குவதற்காகவும் செல்வாக்கு செலுத்துகிறது, சேவையாற்றுகிறது. உலகெங்கிலுமான வலதுசாரியாளர்கள் பார்பெரோவ்ஸ்கியை தீவிரமாக பின்தொடர்கிறார்கள், அவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் மீதான அவரின் கண்டனங்களைப் பதிப்பிக்கிறார்கள். அவரின் கருத்துக்கள் வக்கிரமான இணையவழி நாஜி பிரசுரங்களான Breitbart News மற்றும் Daily Stormer இல் வெளியிடப்படுகின்றன.

அந்த பேராசிரியரை சட்டபூர்வமாக ஒரு வலதுசாரி தீவிரவாதி என்று குறிப்பிடலாமென ஜேர்மன் நீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர் அவர் ஒரு அவதூறு வழக்கைத் திரும்பப் பெற நிர்பந்திக்கப்பட்டார் என்றபோதும் கூட, சிறிதும் விட்டுக்கொடுப்பின்றி ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பார்பெரோவ்ஸ்கி பாதுகாக்கப்படுகிறார், அவரின் கண்ணோட்டங்கள் மீதான மாணவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென அது பகிரங்கமாக அறிவித்துள்ளது. தற்போதைய கல்வித்துறை அமைச்சர் Anja Karliczek, பார்பெரோவ்ஸ்கி மீதான விமர்சனத்தைச் சிந்திப்பதற்கான சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான ஒரு தாக்குதல் என்று கண்டித்து சமீபத்தில் மே 23 இல் ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டார். ஜேர்மன் வரலாறு மற்றும் அரசியலின் உள்ளடக்கத்தில், ஹிட்லரை பார்பெரோவ்ஸ்கி பாதுகாப்பது ஒரு சட்டபூர்வ கருத்தாக மற்றும் சவாலுக்கிடமற்ற “கருத்தாகவும்” கூட இருக்கிறது என்றும், மாணவர்கள் அவரை நடைமுறையில் விமர்சிப்பதற்கு அனுமதிக்கப்படக்கூடாது என்றும் ஓர் அரசு அமைச்சரின் இந்த அறிவிப்பானது மூன்றாம் குடியரசின் அரசு-முன்னெடுத்த நேர்மறை மறுமதிப்பீட்டிற்கான பாதைக்கு வழி வகுக்கிறது. இந்த அமைச்சரின் அறிக்கை, பார்பெரோவ்ஸ்கியை அம்பலப்படுத்திக் காட்டிய மாணவர்கள், மற்றும் குறிப்பாக, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியைக் கண்டித்து வலதுசாரி ஜேர்மன் பத்திரிகை Cicero இன் சமீபத்திய பதிப்பில் வெளியிடப்பட்ட ஒரு தலைப்பு செய்தியைப் பின்தொடர்ந்து வந்தது.

பார்பெரோவ்ஸ்கியின் விடயம் வெறுமனே ஜேர்மன் விடயம் அல்ல. பார்பெரோவ்ஸ்கிக்கு உலகெங்கிலுமான கல்வித்துறையில் சட்டபூர்வத்தன்மையை வழங்க ஒரு முயற்சி நடந்து வருவதாக தெரிகிறது. “சர்வாதிகாரங்களின் மாற்றங்கள்" என்ற அவரின் ஆய்வை மேற்கொள்வதற்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் சமீபத்தில் அவருக்கு அசாதாரணமான கல்வி உதவித்தொகையாக 300,000 டாலர் வழங்கி உள்ளது. ஒரு நாஜி அனுதாபியின் படைப்புக்கு அது ஆதரவு வழங்குவதைக் குறித்து எந்த விளக்கமும் அளிக்க பிரின்ஸ்டன் பல்கலைகழகம் மறுக்கிறது.

ஜேர்மனியில் அதிகரித்து வரும் அபாயகரமான புத்திஜீவித சூழலைக் குறித்து —அதுவும் குறிப்பாக நாஜி-ஆதரவு வரலாற்று திருத்தல்வாதத்தின் நிகழ்வுபோக்கு குறித்து— ஆழமான ஆய்வுடன் உங்கள் கட்டுரையை இணைத்துக்கொள்ள நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள் என்றால், நீங்கள் வரலாற்று திருத்தல்வாதம் மற்றும் நவ-நாஜி யூத-எதிர்ப்புவாதத்தின் மீளெழுச்சி உடனான அதன் தொடர்புகள் பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் விரிவான எழுத்துக்களை மீளாய்வு செய்யுமாறு நான் அறிவுறுத்துகிறேன். அவர்கள் மீண்டும் ஏன் வந்துள்ளார்கள்? வரலாற்று பொய்மைப்படுத்தல், அரசியல் சூழ்ச்சி, ஜேர்மனியில் பாசிசவாதத்தின் மறுவருகை என்ற கிறிஸ்தோப் வாண்ட்ரியரின் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட நூலின் நகலை நீங்கள் பெற வேண்டுமென்றும் ஆலோசனை வழங்க என்னை அனுமதியுங்கள். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei – SGP) தலைவரான வாண்ட்ரியர், சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாசிசத்தின் வளர்ச்சியில் வரலாற்று பொய்மைப்படுத்தல் வகிக்கும் பாத்திரம் குறித்து பிரதான அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் உரையாற்றினார். உலகெங்கிலும் பாசிசவாதம் மற்றும் யூத-எதிர்ப்புவாதம் உட்பட இனவாதத்தின் அனைத்து வடிவங்களது மீளெழுச்சியால் ஆழமாக கவலையுற்ற பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் அந்த சொற்பொழிவுகளில் கலந்து கொண்டனர். ஏப்ரல் 11, 2019 இல் டெட்ராய்ட் வாய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் வாண்ட்ரியரின் சொற்பொழிவு காணொளியை இங்கே அணுகலாம்: https://www.wsws.org/en/articles/2019/05/22/vide-m22.html.

உங்கள் உளமார்ந்த,

டேவிட் நோர்த்

தலைவர், சர்வதேச ஆசிரியர் குழு

உலக சோசலிச வலைத் தளம் [www.wsws.org]