ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Former Egyptian President Mohamed Mursi dies during show trial

போலிநாடக விசாரணையின் போது முன்னாள் எகிப்திய ஜனாதிபதி மொஹமத் முர்சி மரணமடைந்தார்

By Alex Lantier 
17 June 2019

67 வயதான எகிப்தின் முன்னாள் இஸ்லாமிய ஜனாதிபதி மொஹமத் முர்சி, தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் மீதான வழக்கு விசாரணையின் போது கண்ணாடி கூண்டிற்குள் சரிந்து விழுந்ததுடன், அதனையடுத்து சிறிது நேரத்தில் மருத்துவமனையில் மாரடைப்பால் அவர் காலமானார். அவர் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood - MB) எனும் இயக்கத்தின் உறுப்பினராவார்.

எகிப்திய அரச வழக்குத்தொடுனர் நபில் சாதிக் விடுத்த ஒரு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “குற்றம்சாட்டப்பட்ட மொஹமத் முர்சி ஏனைய பிரதிவாதிகளின் முன்னிலையில் கூண்டிற்குள் இருந்தவாறே மயங்கி கீழே விழுந்தார் என்ற நிலையில், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பூர்வாங்க மருத்துவ அறிக்கை, அவருக்கு வழங்கப்பட்ட வெளிப்புற மருத்துவ சோதனை மூலம், அவரது நாடித் துடிப்பும் சுவாசமும் நின்றிருந்ததும், விளக்கு வெளிச்சத்தைக் கண்டு அவரது கண்கள் இமைக்காமல் இருந்ததும் கண்டறியப்பட்டது எனத் தெரிவித்தது. அவர் பிற்பகல் 4.50 மணியளவில் இறந்துள்ளார், அத்துடன் உடம்பில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை”


மொஹமத் முர்சி

எகிப்திய இராணுவமும் உள்துறை அமைச்சகமும், முஸ்லீம் சகோதரத்துவ உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் மத்தியில் ஆர்ப்பாட்டங்களோ அல்லது கலகங்களோ வெடிக்கக்கூடும் என்று அஞ்சி, உயர்ந்தபட்ச எச்சரிக்கையுடன் அவர்களது படைகளை நிலைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முர்சியின் மரணம் இரத்தத்தை உறைய வைப்பதான ஒரு கொடூரமான அரச கொலையாகும் என்ற நிலையில், அதற்கு எகிப்திய இராணுவ சர்வாதிகாரியான அப்தெல் பத்தா எல்-சிசி யும், வாஷிங்டனும் மற்றும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டணி நாடுகளும் தான் அரசியல் ரீதியாக பொறுப்பாளிகளாகின்றனர். 2013 இல் ஒரு இரத்தக்களரியான சதித்திட்டத்தில் அவரை கவிழ்த்த பின்னர் ஆறு ஆண்டுகளாக, அவருக்கு மரண தண்டனையும் வேறுபட்ட சிறைத் தண்டனைகளும் விதிக்கப்படும் வகையில், சிசி ஆட்சிக்குழு அவர் மீது தொடர்ச்சியான இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை இடையறாது சுமத்தி வந்தது. எப்போதும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசு தலைவர்களுடன் சிசி நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் என்ற நிலையில், அவரது அரசு தான் எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை ஒடுக்குவதற்கான இன்றியமையாத கருவி என்று அவர் கருதினார்.

முர்சி சிறையில் இருந்த சமயத்தில், அவர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் நோய் போன்ற பல நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்றாலும் கூட அவரை மருந்து எடுத்துக் கொள்ள விடாமல் சிசி ஆட்சிக்குழு தடுத்தது. சிசி ஆட்சி அவரை நாளொன்றுக்கு 23 மணி நேரங்களுக்கு தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்தது என்பதுடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை பார்வையிட வருவதையும் கட்டுப்படுத்தியது, மேலும், அழுகிப்போன உணவுப் பதார்த்தங்கள் தான் அவருக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது.

முர்சியின் குடும்பமும் மனித உரிமை குழுக்களும், அவரது சிறைவாச நிலைமைகள் அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தன என எச்சரிக்கும் அறிக்கைகளை பலமுறை விடுத்து வந்தனர். 2016 இல் அவரது குடும்பம், நீரிழிவு கோமாவிற்கு (உணர்விழந்த முழு மயக்க நிலை) முர்சி சென்றுவிடக் கூடும் என்று அவர்கள் அஞ்சுவதாக நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தனர், மேலும், 2017 இல் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, முர்சிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு எகிப்திய ஆட்சி மறுத்து வந்தது குறித்து எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டது.

2018 இல், முர்சியின் குடும்பத்தால் நியமிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழுவான தடுப்புக் காவல் மதிப்பாய்வு குழு (Detention Review Panel), முர்சியின் தடுப்புக் காவல் பற்றிய விசாரணையை தொடங்கியது. இது, முர்சி நடத்தப்படும் விதம் “கொடூரமானது, மனிதாபிமானமற்றது மேலும் இழிவானது,” என்பதுடன் அவர் “எகிப்திய மற்றும் சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதையை எதிர்கொள்ளக் கூடும்” என்று நிறைவு செய்தது. அந்த சமயத்தில், முர்சி அவ்வப்போது நீரிழிவு கோமா நிலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார், தாடையில் இருந்த கட்டிக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் அதனாலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார், சீமேந்து தரையில் அவர் படுத்து தூங்கியதால் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தன, மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவரது சிறுநீரகமும் கல்லீரலும் செயல்பாட்டை இழந்து கொண்டிருந்தன.

தடுப்புக் காவல் மதிப்பாய்வு குழுவில் பணியாற்றும் ஒரு பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினரான கிறிஸ்பின் பிளாண்ட், முர்சியின் மரணம் குறித்து நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “டாக்டர் முர்சிக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால், அவரது உடல்நலத்தில் ஏற்படும் சேதம் நிரந்தரமானதாகவும் இறுதியானதாகவும் இருந்துவிடக்கூடும் என்று நாங்கள் அஞ்சினோம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் கூறியது சரியாகிவிட்டது.”

துருக்கியின் இஸ்லாமிய ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன், பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு ஹமாஸ், மேலும் கட்டார் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி என அனைவரும் இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். முர்சி சார்ந்திருந்த முஸ்லீம் சகோதரத்துவம் என்ற இஸ்லாமிய அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்தது: “அவரது மரணம் பற்றிய செய்தியின் அதிர்ச்சியோ அல்லது அம்மரணம் பற்றிய விபரமான செய்திகளை பரப்புவதில் விரைவு காட்டப்படுவதோ, இது ஒரு முழு அளவிலான கொலை என்பதை மாற்றிவிடாது.” மேலும் இவ்வமைப்பு, முர்சியின் இறுதிச் சடங்கில் அதிகரித்தளவில் மக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது.

முர்சியின் மகன் அப்துல்லா மொஹமத் முர்சி நேற்று ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்தில், முர்சியை அவர்களது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் உரிமையை அவர்களுக்கு வழங்க எகிப்திய அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்றும், அவரது உடலையும் குடும்பத்தினரிடம் திரும்பத் தரவில்லை என்றும் கூறினார்.

முர்சி ஒரு வலதுசாரி பிரமுகராக இருந்ததுடன், அவர் பதவியில் இருந்தபோது தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த எதிர்ப்பு தூண்டப்பட்டது  நியாயமானதே. இயல்பாகவே 2012 தேர்தலில் அவர் வெற்றிபெற்றதற்கு காரணம் புரட்சிகர சோசலிஸ்டுகள் (Revolutionary Socialists-RS) போன்ற குட்டி முதலாளித்துவக் கட்சிகள் 2011 இல் நிகழ்ந்த ஆரம்பகட்ட புரட்சிகர எழுச்சியின் போது தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுத்தது, அச்சமயம் கலகப் பிரிவு பொலிசாருடன் மில்லியன் கணக்கான எதிர்ப்பாளர்கள் போராடியதும் மற்றும் எகிப்திய தொழிலாள வர்க்கம் செய்த பொது வேலைநிறுத்தமும் இராணுவ சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை வீழ்த்தியது. ஜனாதிபதியாக, முபாரக்கின் சிக்கன நடவடிக்கை, பொலிஸ் அரசு ஒடுக்குமுறை, மற்றும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் அவர் கொண்டிருந்த ஒத்திசைவு என அனைத்தையும் முர்சி அப்படியே பின்பற்றினார்.

ஆனால், ஜூலை 2013 இல் முர்சி வெளியேற்றப்பட்ட போது, முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு எதிராக பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இது இராணுவத்தால் வழிநடத்தப்பட்டது என்பதுடன், RS இன் ஆதரவுடன், இராணுவ சார்பு கட்சிகளின் தமரோட் (“கிளர்ச்சி”) கூட்டணி வழங்கிய அரசியல் மூடிமறைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டது. இது, தெருக்களில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டு வீழ்த்திய ஒரு இரத்தக்களரியான ஒடுக்குமுறையை தொடங்கிவைத்த சிசி யின் கரங்களுக்கு அதிகாரத்தை மாற்றியது. இந்த ஒடுக்குமுறை, ஒரு கடுமையான இராணுவ சர்வாதிகாரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதுடன், இராணுவம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதாகக் கூறும் பிரச்சாரத்தின் அடிப்படையில் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

அதேபோல, எகிப்தின் இராணுவ ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களையும் குற்றப்படுத்துவதற்கும் மற்றும் முதன்மையாக தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்ட பொலிஸ்-அரசு பயங்கரவாத ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் ஏற்ற வகையில், முர்சியின் விசாரணை, வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் எகிப்திய பொதுப் பணியாளர் மேற்கோண்ட முயற்சிகளின் தாக்குமுகப்பாக மாறியது.

முபாரக் தூக்கியெறியப்படுவதற்கு சற்று முன்னர் சிறையில் இருந்த முஸ்லீம் சகோதரத்துவ உறுப்பினர்களை தப்பிக்கச் செய்ய பொலிஸ் மீது இரகசிய தாக்குதல்களை நடத்தியதாக கூறப்பட்ட போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் 2015 இல் முர்சி குற்றம்சாட்டப்பட்டு பின்னர் கண்டனத்துக்கு உள்ளானார். இந்த குற்றச்சாட்டுக்கள், அந்த வாரங்களில் கலகப் பிரிவு பொலிசாருடன் போராடிய மில்லியன் கணக்கான எகிப்தியர்களை குற்றவாளிகளாக்கியதுடன், புரட்சிகர போராட்டம் மரண தண்டனைக்குரியது என்று ஒரு தெளிவான செய்தியையும் அனுப்பியது. அதே சமயத்தில், இராணுவம், போலிநாடக விசாரணைகளின் போதே நூற்றுக்கணக்கானவர்களுக்கு பாரிய மரண தண்டனைகளை வழங்கியதுடன், இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமக்கு எந்தவொரு பாதுகாப்பையும் முன்வைப்பதற்கான வாய்ப்பையும் கொண்டிருக்கவில்லை, மேலும் அண்ணளவாக 60,000 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பதுடன், அவர்களில் பலரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை முர்சியின் தேர்வு தடுக்கும் என்று நம்பியபோது எகிப்தின் “ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட” முதல் ஜனாதிபதி என்று அவரை பாராட்டியவர்களான வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் உள்ள ஏகாதிபத்திய அரசியல்வாதிகள், கிட்டத்தட்ட ஒரே இரவில், அவரை கைவிட்டு, சிறையில் கிடந்து அவர் சீரழிந்து போவதற்கும் விட்டுவிட்டனர்.

ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர் உடனடியாக ஜூலை 2013 இன் பிற்பகுதியில் சிறையில் சென்று முர்சியை பார்வையிட்ட அப்போதைய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவி கேத்தரின் ஆஷ்டனிடமிருந்து மிகவும் மோசமான மற்றும் கோரமான கருத்துக்கள் வெளிப்பட்டன. சிசியின் சதித்திட்டத்தில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒப்புதலுக்கான முத்திரை பதிக்கப்பட்டுள்ள நிலையில், நானும் முர்சியும் “சூழ்நிலையைப் பற்றி பேச முடிந்தது, மேலும் முன்னேறிச் செல்ல வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எங்களால் பேச முடிந்தது. அவரைச் சுற்றியிருப்பவர்கள் அவரை கவனித்துக் கொள்கிறார்கள். அங்குள்ள வசதிகளை நான் பார்த்தேன்” என்று ஆஷ்டன் கூறினார்.

அப்போதிருந்து, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரின் கீழான அமெரிக்க நிர்வாகங்களும், எகிப்திய இராணுவத்திற்கு பில்லியன் டாலர்களில் நிதியுதவிகளை பொழிந்தன. மேலும், ட்ரம்ப், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரோன், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் என அனைவருமே அவர்களது தலைநகரங்களுக்கு சிசி அரசுமுறை பயணமாக வருகையில் அவருக்கு சிவப்புக் கம்பள மரியாதை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்ரோனின் முன்னோடியான, பிரான்சுவா ஹோலண்ட் உம், சிசி யைப் போல உழைக்கும் மக்கள் மீது ஆழ்ந்த சமூக தாக்குதல்களை நடத்த அவசரகால சட்டத்தை பயன்படுத்தினார், மேலும் இவர் தன்னை சிசியின் நண்பராக கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று, அல்ஜீரியாவிலும், மற்றும் அண்டை நாடான சூடானிலும் இராணுவ ஆட்சிகள் வீழ வேண்டும் என்ற கோரிக்கையுடனான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலான பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலுமாக எழுச்சிபெற்று வரும் வேலைநிறுத்தங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் மத்தியில் கெய்ரோவின் தூக்கிலிடுவோன் உடன் எப்போதும் மிக நெருக்கமான உறவுகளை  ஏகாதிபத்திய சக்திகள் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு, அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் மைக் பொம்பியோ ஈரானுக்கு எதிராக போர் அச்சுறுத்தல்களை விடுப்பதற்கு கெய்ரோவிற்கு சென்றார், அதே சமயம், “மஞ்சள் சீருடையாளர்கள்” ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் சிசிக்கு ஆயுதங்களை விற்பதற்காக அவரை பார்க்க மக்ரோன் அங்கு சென்றார். மார்ச்சில், கெய்ரோவில் இருந்து மக்ரோன் திரும்பியவுடன் சிறிது நேரத்தில், மஞ்சள் ஆடை விற்பனையை சிசி தடை செய்துவிட்டார், மேலும், “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களை தெருவில் கண்டவுடன் சுடுவதற்கு அது அதிகாரம் கொண்டிருப்பதாகவும் பிரெஞ்சு இராணுவ தலைவர் அறிவித்தார்.

இவ்வாறு முர்சியை சிறையில் அடைத்து அவரது மரணத்திற்கும் வழிவகுத்த சிசி ஆட்சியின் கொடூரமான துஸ்பிரயோகங்களில் இந்த அனைத்து அரசாங்கங்களுமே அரசியல்ரீதியாக தொடர்புபட்டுள்ளன.