ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වතු සමිති මිලිටරිය සහ පොලිසිය සමග “ආරක්ෂක කමිටු” ඇටවීමට සමාගම් කල යෝජනාවට එකඟවෙති

தோட்ட தொழிற்சங்கங்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் "பாதுகாப்பு குழுக்களை" அமைக்கும் கம்பனிகளின் பிரேரணையை ஏற்றுக்கொள்கின்றன

By M. Thevarajah 
27 May 2017

மே 7 அன்று, இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர்கள், பெருந்தோட்டத் தொழிற்துறையை "பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க" பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் இணைந்து தோட்டங்களுக்குள் பாதுகாப்பு குழுக்களை அமைக்கும் கம்பனிகளின் பிரேரணைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மே 5, தொழிலாளர் தேசிய சங்க (NUW) நுவரெலியா மாவட்ட தலைவர்களுடன் கலந்துரையாடிய அதன் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், "அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய சட்டங்களுக்கு அடிபணிந்து, விசாரணை நடவடிக்கைகளின்போது பாதுகாப்பு படைகளுக்கு" ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரினர்.

கடந்த 8 ஆம் திகதி, சூரியகாந்தி பத்திரிகைக்கு விடுத்த அறிக்கையொன்றில் இராணுவத்திற்கு புகழாரம் சூட்டிய  மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) தலைவர் வி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டதாவது: "முப்படைகளின் நடவடிக்கையால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஆயுதப்படைகளின் நடவடிக்கைகளை கௌரவிக்க வேண்டும். பொது மக்களின் ஆதரவு கிடைக்கின்றது. அந்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த விசேட நிலைமைக்கு (பயங்கரவாத தாக்குதல்) காரணம், கடந்த காலத்தில் நிலவிய வரையறையற்ற சுதந்திரமாகும்.

தொழிலாளர்களின் சம்பளம், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக நல உரிமைகள் தொடர்பாக ஒரு சதவீதம் கூட கருத்தில் கொள்ளாது, பெருந்தோட்ட உரிமையாளர்களின் இலாபத்தை உறுதிப்படுத்த தியாகம் செய்துள்ள தோட்ட தொழிற் சங்கங்கள், தொழிலாளர்களின் பரந்த எதிர்ப்பு வளர்ச்சியடைவதை கருத்தில்கொள்ளாது காட்டிக்கொடுப்பு ஒப்பந்தம் ஒன்றை ஜனவரியில் கைச்சாத்திட்டன. இந்த தொழிற் சங்கங்கள் முன்வந்து, தோட்ட உரிமையாளர்களின் பிரேரணையை அதி உயர்ந்ததாக ஏற்றுக்கொண்டு, தொழிலாளர்களை இந்த மோசடியான பாதுகாப்பு குழுக்களுக்கு அடிபணிய வைக்க எடுக்கும் முயற்சிகளை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அவ்வாறான குழுக்கள் தொடர்பாக கவனமாக இருக்கவேண்டும்.

தோட்டத் தொழிலாளர்கள் நூறுசதவீத சம்பள அதிகரிப்பு கோரியபோது, அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த பெருந்தோட்ட உரிமையாளர்களின் சங்கம், பெருந்தோட்டத் துறையை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என முன்வைக்கும் பிரேரணையை பற்றி தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் அதேவேளை, அதை நிராகரிக்கவும் வேண்டும்.

ஏனெனில், இந்த குழுக்கள் அமைக்கப்படுவது தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு அல்ல, மாறாக இவை அவர்களுக்கு எதிராக உருவாக்கப்படும் அமைப்புகளாகும்.

பயங்கரவாதத்தை நசுக்குதல் என்ற போர்வையில், அரசாங்கமானது அவசரகால சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, பல்லாயிரக் கணக்கான படையினரையும் பொலிசாரையும் கட்டவிழ்த்துவிட்டு முன்னெடுத்துச் செல்லும் ஒடுக்குமுறையின் குறிக்கோள், போராட்டத்துக்கு வரும் தொழிலாளர்களை நசுக்குவதே ஆகும். ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு ஊக்குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்-விரோத இயக்கத்தினது இலக்கும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, அவர்களின் உரிமைகளை அபகரிப்பதே ஆகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 25 அன்று அழைப்புவிடுத்த சர்வகட்சி மகாநாட்டில் கலந்துகொண்ட அரச பங்காளிகளான NUW, ம.ம.மு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியும், அத்தோடு இ.தொ.கா. தலைவர்களும், கொடூரமான அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்த முழுமையான அங்கீகாரத்தை வழங்கின.

இந்த அவசரகால சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக மேற்கொள்ளும் வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும், அத்தியாவசிய சேவை கட்டளைகளின் கீழ் சட்டவிரோதமாக்க முடியும். மற்றும், தொழிலாளர் போராட்டங்களை பயங்கரவாத நடவடிக்கை என குற்றஞ்சாட்டி, போராடுபவர்களை கைது செய்வதற்கும் சிறை வைப்பதற்கும் இந்த சட்டத்தினை பயன்படுத்த முடியும்.

அரசாங்கம் இந்த ஒடுக்குமுறை சட்டத்தினை அமுல்படுத்தி, இராணுவத்தினரையும் பொலிசாரையும் பயங்கரவாத்தை நசுக்குதல் என்ற போர்வையில் அதைவிட மேலதிகமான தேவைக்காகவே ஈடுபடுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை நசுக்க குரல் எழுப்பும் அரச தலைவர்களும் பாதுகாப்புத்துறைக்கு பொறுப்பானவர்களும், அந்த கொலை நடவடிக்கை தொடர்பாக ஏற்கனவே தெரிந்திருந்தும் மௌனமாக இருந்துவிட்டு, தாக்குதல் நடந்தவுடன் உடனடியாக பாய்ந்து இந்த சட்டங்களை அமுல்படுத்தினார்கள் என்பதை தொழிலாளர்களும் இளைஞர்களும் மறந்துவிடக் கூடாது.

பெருந்தோட்ட உரிமையாளர்கள், சர்வதேச ரீதியாக அபிவிருத்தியடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் பாகமாக, இலங்கையினுள் வர்க்கப் போராட்டம் எழுச்சியடைந்து வரும் நிலைமையின் மத்தியிலேயே இந்த அடக்குமுறை நடவடிக்கயின் பக்கம் திரும்பியுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் அண்மைக் கால சம்பள உயர்வு போராட்டம் இந்தப் போராட்டங்களின் பாகமாகும்.

பெருந்தோட்டத் துறையிலும் ஏனைய பகுதி தொழிலாளர்களினதும் வேலைநிறுத்தங்கள், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள், மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் வடக்கு கிழக்கில் யுத்த அழிவுகளிலிருந்து மீள்வதற்கு தமிழ் மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களாலும் பீதியடைந்திருக்கும் ஆட்சியாளர்கள், பயங்கரவாத தாக்குதல் நடந்ததில் இருந்தே, தமது உரிமைகளுக்காகப் போராடும் இந்த மக்களை நசுக்குவதற்கு பொலிஸ் அரச திட்டத்தை தயாரித்து வருகின்றனர்.

பாரியளவிலான போராட்டம் வெடிக்கும் சூழ்நிலையிலேயே தாம் இருப்பதாக உணர்ந்துகொண்டுள்ள தோட்ட உரிமையாளர்கள் சங்கமானது பாதுகாப்பு குழுக்களை அமைக்கப் போவது தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக அல்ல. மாறாக, அவர்கள் போராட்டத்துக்கு வருவதை தடுப்பதற்கும் போராட்டக்காரர்கள் தொடர்பாக தகவல் அறிந்து பாதுகாப்பு துறைக்கு அறிவிப்பதற்குமே ஆகும்.

அரசினதும் கம்பெனிகளினதும் எடுபிடிகளாக செயற்படும் தொழிற்சங்க அதிகாரத்துவம், இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுடன் ஒத்துப் போவதோடு, அதை தொழிலாளர்கள் மீது சுமத்த தயாராகிறது. ம.ம.மு. தலைவர் ராதாகிருஷ்ணன் "வரையறையற்ற சுதந்திரம்" இல்லாமல் செய்யப்படவேண்டும் என வெளியிட்டுள்ள மோசமான அறிக்கை, இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை கொடூரமாக நசுக்குவதற்கு முதலாளித்துவ அரசுடன் எந்தளவு நெருக்கமாக பங்கெடுக்கத் தயாராக உள்ளன என்பதை காட்டுகின்றது.

முப்பது ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, இ.தொ.கா. அதிகாரத்துவமானது போராட்ட குணம் கொண்ட் டசின் கணக்கான தோட்ட இளைஞர்களின் பட்டியலை தயாரித்து பொலிசாருக்கு கொடுத்தது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பரந்த போராட்டத்தின் பகுதியாக, தோட்டப்புற கைதிகளை பாதுகாக்க போராடியது சோசலிச சமத்துவக் கட்சி மாத்திரமே.

இனவாத யுத்தம் முன்னெடுக்கப்பட்டபோது, தொழிற்சங்கங்கள் வேலைத்தளங்களிலும் நிறுவனங்களிலும் அது போன்ற குழுக்களை அமைத்து போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு "சிங்களப் புலிகள்" என முத்திரை குத்தி பொலிசாரிடம் ஒப்படைத்தன. சோசலிச சமத்துவக் கட்சி அதற்கு எதிராகவும் போராடியது.

தோட்ட தொழிற்சங்கங்கள் மாத்திரமல்ல "மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு" வலியுறுத்தி சகல தொழிற்சங்கங்களும் நவ சம சமாஜ கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி உட்பட போலி இடது கட்சிகள், அரசின் இந்த பொலிஸ்-அரச திட்டத்துடன் அணிதிரண்டுள்ளன.

பெருந்தோட்ட உரிமையாளர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து நடைமுறைப்படுத்த தயார்படுத்தும் இந்த மோசடியான பாதுகாப்புக் குழுக்களை தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாக நிராகரிப்பதோடு, தொழிற்சங்கங்களுக்கு அப்பால், சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களையும் அதனுடன் இணைந்ததாக தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களையும் கட்டியெழுப்புமாறு சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் வழிகாட்டலில், ஹட்டன் எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் அவ்வாறானதொரு நடவடிக்கை குழுவினை கட்டியெழுப்பியுள்ளனர்.

அதை முன் மாதிரியாக கொண்டும், அதனுடன் ஐக்கியப்பட்டும் சகல தோட்டங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறும், அதை ஏனைய தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் வியாபிக்கச் செய்யவும், தொழிலாளர்களின் பாதுகாப்பு குழுக்களை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் இந்த போராட்டமானது சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கும் சர்வதேச சோசலிசத்துக்குமான போராட்டத்துடன் ஒன்றிணைந்ததாகும்.