ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French rail workers protest one year after rail privatization

இரயில்வே தனியார்மயமாக்கலுக்கு ஓராண்டுக்குப் பின்னர் பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்குகின்றனர்

By Anthony Torres
6 June 2019

இரயில் நிலையங்களை மூடியதன் மீதும் மோசமடைந்து வரும் வேலையிட நிலைமைகள் மீதும் இரயில்வே தொழிலாளர்களிடையே கோபம் அதிகரித்து வருகின்ற நிலையில், தொழிற்சங்கங்களோ ஜூன் 4 இல் ஓர் அடையாள ஒருநாள் வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்க நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தன. நான்கு தொழிற்சங்க கூட்டமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த தேசிய போராட்டமானது, பிரெஞ்சு தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயமாக்கிய மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் பாதுகாப்பு சட்ட சாசனத்தை நீக்கிய, இரயில்வே சீர்திருத்த பிரகடனம் வந்ததற்குப் பிந்தைய முதல் போராட்டமாகும். தொழிற்சங்க ஆதாரநபர்களின் தகவல்படி, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தனியார்மயமாக்கலைக் கண்டித்து பாரீசில் பதினைந்தாயிரம் இரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர் மற்றும் அணிவகுத்தனர்.

SNCF இன் தனியார்மயமாக்கல் தொழிலாளர்களுக்கு ஒரு சமூகப் பேரழிவை உருவாக்கி உள்ளது, இரயில்வே தொழிலாளர்கள் அவர்களின் போராட்டத்தின் மீதான கட்டுப்பாட்டை ஊழல்பீடித்த தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து எடுக்க வேண்டிய அவசியத்தை இது அடிக்கோடிடுகிறது.

இந்தாண்டு சுமார் 2,100 வேலைகளும், அத்துடன் 300 விமானச் சேவைகளும் வெட்டப்பட இருக்கின்றன, அதேவேளையில் பல இரயில் நிலையங்களும் முழு இரயில் பாதைகளும் கூட, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் மூடப்பட்டு வருகின்றன. இந்தாண்டு தொடக்கத்திலிருந்து SNCF இன் மறுசீரமைப்புடன் தொடர்புபட்ட இருபது தற்கொலைகள் அங்கே நடந்துள்ளன. இது, பிரெஞ்சு டெலிகாமில் தொழிலாளர்களை உளவியல்ரீதியில் வேதனைப்படுத்தி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி அவர்களை இராஜினாமா செய்ய வைப்பதற்கான நிர்வாகத்தின் முடிவு ஏற்படுத்திய தற்கொலைகளின் அலையுடன் ஓப்பீடுகளைத் தூண்டிவிட்டுள்ளது.

இப்போது "மஞ்சள் சீருடை" இயக்கம் ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழிற்சங்கங்களுக்கு வெளியே சென்றிருப்பதுடன், போர்ச்சுக்கல்லில் இருந்து போலாந்து ஆசிரியர்களின் தேசிய வேலைநிறுத்தம் வரையில், ஐரோப்பா எங்கிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் பரவி வருகின்ற நிலையில், பிரெஞ்சு இரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பைக் காட்டுவதைப் போன்ற பாசாங்குத்தனத்தை மேற்கொள்ள கடமைப்பட்டிருப்பதாக உணர்கின்றன. “அரசாங்கம் எதிர்வினையாற்றவில்லை என்றால், நிச்சயமாக இந்தாண்டின் முடிவில் அங்கே தொழில்துறை நடவடிக்கை இருக்கும்,” என்று ஸ்ராலினிச தொழிற்சங்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) லோரோன்ட் ப்ரன் பிரெஞ்சு பத்திரிகை நிறுவனத்திற்கு (AFP) தெரிவித்தார்.

தொழிலாளர்களின் கோபமும் போர்குணமும் தொழிற்சங்கங்களின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை அடிக்கோடிடுகின்றன, இவை SNCF ஐ தனியார்மயமாக்கப் பயன்படுத்தப்பட்ட தொழிற்சட்டத்தைப் பேரம்பேசியதுடன், பின்னர் மக்ரோனின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒரு "தொடர்ச்சியற்ற" பலவீனமான வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைத்தன. SNCF இல் வேலைகள் மற்றும் வேலையிட நிலைமைகள் மீதான ஆழ்ந்த தாக்குதல்களுக்கு இரயில்வே தொழிலாளர்களிடையே நிலவிய பலமான எதிர்ப்பைத் தொழிற்சங்கங்கள் மூச்சுத் திணறடித்தன.

பாரீசில், அலைய்ர் பிராந்தியத்தின் நிலைய தலைவர் லோரன்ட் உடன் WSWS செய்தியாளர்கள் கலந்துரையாடினர், இவர் வாழ்க்கை தரங்களைக் குறைக்கவும் மற்றும் பொதுவாக பொதுச் சேவையாக இருக்க வேண்டிய SNCF இல் இரயில்வே தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் விரும்புகின்ற மக்ரோன் அரசாங்கத்தின் இந்த தாக்குதலுக்கு" எதிராக போராடி வருகிறார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் பொதுச் சேவையின் ஒரு முன்னேற்றத்தை விரும்புகிறோம். எங்களுக்கு ஆலைமூடல்களோ அல்லது நபர்களின் குறைப்போ வேண்டாம்,” என்றார்.

SNCF இன் தற்போதைய நிலைமையை, லோரோன்ட், பிரிட்டனில் தாட்சரின் கீழ் நடத்தப்பட்ட இரயில்வே தனியார்மயமாக்கல் மற்றும் 1980 களில் ரீகனின் சுதந்திர சந்தை கொள்கையுடன் ஒப்பிட்டார். “தொழிலாளர்களுக்கும் சரி பயணியர்களுக்கும் சரி இருசாராருக்கும்,” அவர் கூறினார், “என்ன நமக்கு தேவையென்றால் சமூக பிரச்சினைகள் மீது போட்டித்தன்மை கொண்ட சலுகை.” “நாம் தாட்சர் காலத்தில் எதைக் கண்டோமோ அதையே கண்டு வருகிறோம், அவர் ஒவ்வொன்றையும் உடைத்தெறிந்தார். அது ஒரு மோசமான வினியோக முறைக்கும் பயணச்சீட்டு விலை உயர்வுகளுக்கும் இட்டுச் சென்று, பயணியர்களை அசௌகரியப்படுத்தியது. ரீகன் மற்றும் தாட்சருக்குப் பின்னர், நாம் எப்போதும் அதே முறைகளையே பயன்படுத்துகிறோம்... பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் தான் என்பதை நாம் உணர்ந்து வருகிறோம்,” என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு முன்னாள் உள்ளூர் தொழிற்சங்க பிரதிநிதியுடன் WSWS கலந்துரையாடியது. அவர் கூறுகையில், “இரயில்வேயை பொதுத்துறையில் வைத்திருக்க" ஆர்ப்பாட்டம் செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார். அவர் விவரித்தார், “முற்றிலும் இதுவொரு தாக்குதல் தான். பிரான்சில், இரண்டாம் உலக போருக்கு முன்னர் மக்கள் முன்னணி காலத்தின் முடிவில் இரயில்வே தேசியமயமாக்கப்பட்டது. அந்த போரின் முடிவில், அங்கே 525,000 SNCF இரயில்வே தொழிலாளர்கள் இருந்தனர். இப்போதோ, பயணியர் எண்ணிக்கையும் மற்றும் அவர்களின் தேவைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன, நாங்களோ சுமார் 145,000 ஆக உள்ளோம்,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “அடுத்தடுத்து, நாங்கள் தொழிலாளர் சட்டங்களால் பாதுகாக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் இழந்துவிடக்கூடும், நாங்கள் இன்னமும் அச்சட்டங்கள் மூலமாக காப்பீட்டையும் இரயில் பயணத்தில் சலுகை கட்டணங்களையும் பெற்று வருகிறோம். அவை அனைத்தும் படிப்படியாக தொலைந்து போகும். தொழிலாளர் சட்டங்களால் பாதுகாக்கப்பட்ட வேலைகளை வைத்திருப்பதில் இருந்து மிகவும் மோசமான வேலைகள், தற்காலிக வேலைவாய்ப்பு ஆகியவற்றை நோக்கி ஒவ்வொருவரையும் நகர்த்தி கொண்டிருக்கிறோம். பிரிட்டனில் தனியார்மயமாக்கலைத் தொடர்ந்து வந்த மாதங்களில் அங்கே பிரிட்டிஷ் விமானச்சேவை மற்றும் இன்னும் பல பெருநிறுவனங்களும் முறிந்து விழுந்ததை நாம் கண்டோம். இப்போது பிரான்சின் இரயில்வேயிலும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் அதேதான் செய்யப்பட்டு வருகிறது, அதனால் தான் ஜேர்மன் தோழர்கள் எங்களுடன் போராட வந்திருப்பதைக் காண்கிறேன்,” என்றார்.

SNCF இல் தொழிலாளர்களின் தற்கொலை குறித்து வினவிய போது, அந்த முன்னாள் பிரதிநிதி கூறினார், “அது மிகவும் வெறுக்கத்தக்கது. பிரான்ஸ் டெலிகாம் போன்ற நிலைமைகளை ஏற்படுத்துவதிலிருந்து நாம் அவர்களைத் தடுத்தாக வேண்டும்,” என்றார்.

மக்ரோனின் இரயில் சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒழுங்கமைத்த தொடர்ச்சியற்ற வேலைநிறுத்தம் குறித்து அவர் கூறுகையில், அது ஒன்றையும் உருவாக்காது என்றவர் கருதினார். “அதிகாரம் இங்கே ஜனநாயக விரோதமாக இருக்கையில்" “அவர்கள் எதையும் செவிமடுக்க மாட்டார்கள்,” என்றார்.

கடந்தாண்டு இரயில் வேலைநிறுத்தக்காரர்களை மக்ரோன் எவ்வாறு தோற்கடித்தார் என்பதை விளக்க மக்ரோனின் ஜனநாயக-விரோத ஆட்சி மட்டுமே போதுமானதல்ல. தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் அவற்றுடன் சேர்ந்த அரசியல் கட்சிகளும் ஏற்கனவே பிரெஞ்சு அரசாங்கத்துடனும் மக்ரோனுடனும் ஒட்டுமொத்த தனியார்மயமாக்கல் நிகழ்முறையை பேரம்பேசி ஒப்புக் கொண்டிருந்தனர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர், அப்போதே அவர்கள் SNCF ஐ எவ்வாறு தனியார்மயமாக்குவது என்றும் இரயில்வே தொழிலாளர்களின் தொழிலாளர் சட்டத்தை எவ்வாறு முறிப்பது என்றும் பேரம்பேசிக் கொண்டிருந்தார்கள். இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது, CGT மற்றும் SUD- Rail தொழிற்சங்கங்கள், அவை இந்த முறையை எதிர்க்கவில்லை என்று கூறியதுடன், பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்புடன் பேரம்பேசுவதற்குக் கோரினர்.

Challenges சஞ்சிகை எடுத்துக்காட்டியதைப் போல, மக்ரோன் அரசாங்கம் அதிகாரத்தைப் பிடித்ததும் தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் அதிகமாக முன்னேறின.

CGT அல்லது SUD-Rail சங்கங்களிடம் இருந்து தொழிலாளர்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது, அவை பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியுடன் தொடர்புபட்டுள்ளது. அவை பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் இப்போதுள்ள அதிகார சக்திகளுக்கு எதிராக பாரியளவில் போராட்டத்தினுள் செல்லும் மக்கள் இயக்கத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்று அஞ்சி, சர்வதேச அளவில் எரிசக்தித்துறை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், ஏர் பிரான்ஸ் போன்ற ஏனைய வேலையிட வேலைநிறுத்தங்களில் இருந்து இரயில்வே தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தின.

இந்த இரயில்வே சீர்திருத்தமானது 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர்களின் சமூக உரிமைகளைப் பரந்தளவில் கைகழுவுவதன் பாகமாகவும், மற்றும் குறிப்பாக இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்டவைகளை மறுத்தளிப்பதாகவும் இருந்தது. SNCF இன் தனியார்மயமாக்கலைத் தொடங்கிய அரசாங்கம் இப்போது ஓய்வூதியங்கள், வேலைவாய்ப்பின்மை காப்பீடு மற்றும் கல்வியில் ஆழ்ந்த வெட்டுக்களை அறிவித்து வருகிறது. செல்வந்தர்களின் வரி வெட்டுக்களுக்கும் மற்றும் இன்னும் பலமாக ஆயுதப்படைகளைத் தயார் செய்யவும் பில்லியன் கணக்கான யூரோக்களை வழங்குவதற்காக தொழிலாளர்களின் பைகளில் இருந்து எடுத்து நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள் நிதியியல் பிரபுத்துவத்திற்கு கைமாற்றப்பட்டது.

தொழிற்சங்கங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ச்சியற்ற வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதன் மூலமாக, அந்த சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு நிஜமான வேலைநிறுத்தத்தையும் ஒழுங்கமைக்க நடைமுறையளவில் மறுத்தது, அத்தகைய தொடர்ச்சியான போராட்டங்கள் முதலாளித்துவ வர்க்கத்துடனான அவர்களின் உறவுகளையும், சமூக பேச்சுவார்த்தை என்ற பின்னணியில் அவை நிதிக்காக சார்ந்திருக்கும் அரசு மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அவை பெறுகின்ற பத்து மில்லியன் கணக்கான யூரோக்களையும் அத்தகைய போராட்டங்கள் அச்சுறுத்தி இருக்கும்.

தொழிற்சங்கங்களால் இரயில்வே வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒரு சில மாதங்களுக்கு பின்னர் வெடித்த "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளை தொழிலாள வர்க்கத்தின் நிஜமான அபிலாஷைகளில் இருந்து பிரிக்கும் சமூக இடைவெளியை வெளிப்படுத்தி உள்ளன. இது, அதிகாரத்திற்கான ஒரு போராட்டமாக மட்டுமே இருக்கக்கூடிய ஒரு உண்மையான போராட்டத்தில் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களிடையே பரந்த ஆதரவை அணித்திரட்டி, தொழிற்சங்கங்களில் இருந்து தொழிலாளர்களைச் சுயாதீனமாக ஒழுங்கமைக்க வேண்டிய அவசியத்தை அடிக்கோடிடுகிறது.