ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan Muslim ministers resign amid growing threats of anti-Muslim violence

இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்-விரோத வன்முறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இராஜனாமா செய்கின்றனர்

By K. Ratnayake 
6 June 2019

இலங்கை அரசாங்கத்தின் ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள், திங்களன்று பாசிச பெளத்த பிக்குகள், சிங்கள இனவெறியர்கள் மற்றும் பிற பிற்போக்கு சக்திகளினால் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தும் வகையில் புதுப்பித்த அச்சுறுத்தலுக்கு பதிலிறுப்பாக தங்கள் பதவிகளை இராஜனாமா செய்தனர்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு பௌத்த பிக்குவுமான அத்துரலிய ரத்தனவால் சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்ட "சாகும்வரை உண்ணாவிரதம்" என்ற ஒரு ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தை அடுத்தே அமைச்சர்கள் இராஜனாமா செய்தனர். முஸ்லிம்களான அமைச்சரவை அமைச்சர் ரிசாத் பதியுதீன், மேற்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களான முறையே அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை அகற்ற வேண்டும் என ரத்தன கோரிக்கை விடுத்தார்.

ஏப்ரல் 21 அன்று இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர விடுதிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அதிதீவிரவாத தேசிய தவ்ஹீத் ஜமாத் குழுவிற்கு இந்த நபர்கள் உதவியதாக ஆதாரமற்ற ஆதாரங்களை ரத்தன முன்வைத்தார். அவரது எதிர்ப்பு, முஸ்லிம்-விரோத உணர்வை தூண்டிவிடுவதற்கான இலங்கை ஆளும் உயரடுக்கின் நோக்கத்தின் பாதையில் இருந்தது. ரத்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு ஆலோசகர் ஆவார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) சிறிசேன கன்னையின் பிரதிநிதிகள், சனிக்கிழமையன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பிக்குவை சந்தித்து, அவருடைய கோரிக்கைகளுடன் உடன்பாட்டை வெளிப்படுத்தினர். இதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க. கன்னையின் பிரதிநிதிகளும் நடந்துகொண்டனர். இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சி குழு, பாராளுமன்றத்தில் பதியூதீனை எதிர்த்து ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைப்பதன் மூலம் முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை முடுக்கிவிட பேரினவாத குழுக்களுக்கு ஊக்குவிப்பளித்தனர்.

ஞாயிறன்று, பாசிச பொது பல சேனா குழுவிற்கு தலைமை தாங்கும் கலேகொட ஆத்தே ஞானசரா, ரத்தனேவை சந்தித்து, அடுத்த நாள் மதியத்துக்குள் அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் நாடு தழுவிய எதிர்ப்புக்கள் இடம்பெறும் என அறிவித்தார். திங்களன்று, கண்டி, கொழும்பு, மற்றும் பல நகரங்களில் வன்முறைக்கு தயார் செய்வதற்காக பௌத்த துறவிகள் இனவாத குண்டர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான துருப்புக்களும் பொலிசாரும் அணிதிரட்டப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். முஸ்லீம் பகுதிகளில் கண்மூடித்தனமான கைதுகள் நடைபெற்றுள்ளன. ஆனால், வன்முறை அச்சுறுத்தல் விடுத்த இனவாத கும்பலை நிறுத்துவதற்கு எதுவும் செய்யப்படவில்லை.

மே 12 மற்றும் 13 ம் திகதி, சிங்கள இனவெறி குழுக்கள், வடமேற்கு பிரதேசத்திலும் மேல் மாகாணத்தில் மினுவங்கொடவிலும் முஸ்லிம் மக்களை தாக்கி சொத்துக்களை அழித்தன. இதன் போது ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர். பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், முஸ்லிம்-விரோத தாக்குதல்களை கண்டும் காணாதது போல் இருந்தனர்.

திங்களன்று, ஆசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் அவர்களின் இராஜினாமாக்களை சிறிசேனவுக்கு அனுப்பியதை அடுத்து, தனது ஆத்திரமூட்டல் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவருமாறு ரத்தனேவுக்கு அவர் அழைப்புவிட்டார். அவர் உடனடியாக கீழ்ப்படிந்தார். பின்னர் அமைச்சரவை அமைச்சர் பதியூதீனும் இராஜினாமா செய்தார்.

ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் மற்ற முஸ்லிம் அமைச்சர்களுடன் தோன்றிய முக்கிய அமைச்சரவை அமைச்சர் ரவூப் ஹக்கீம், நெருங்கிவரும் அச்சுறுத்தல்களால் "திகிலடைந்துள்ள" முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக, எல்லா 9 அமைச்சர்களும் இராஜநாமா செய்ய முடிவு செய்ததாக அறிவித்தார். முஸ்லீம் தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அரசாங்கம் ஒரு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் விரும்புவதாக கூறினார். "எங்களில் யாராவது குற்றவாளிகளாக இருந்தால், நாங்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று அவர் அறிவித்தார்.

விசாரணை முடிவடையும் வரை, முஸ்லிம் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என ஹக்கீம் தெரிவித்தார். கொழும்பு ஸ்தாபகத்தின் பகுதியாக உள்ள மற்றும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தின் முடிவானது சிங்கள இனவாத மற்றும் பெளத்த தீவிரவாத குழுக்களை ஊக்குவிப்பதை மட்டுமே செய்யும்.

முஸ்லீம்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் முழு இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். எதேச்சதிகார ஆட்சிக்கான தயாரிப்புக்களின் பாகமாக, ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும் தொழிலாள வர்க்கத்தை இன, மத வழியில் பிளவுபடுத்துவற்காக இஸ்லாமிய விரோதத்தை திட்டமிட்டு பயன்படுத்துகின்றன.

தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தை பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்கவும் செயற்படுவதில் இலங்கை ஆளும் வர்க்கம் பேர்போனது. அதன் தமிழர்-விரோத பாகுபாடு மற்றும் படுகொலைகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால யுத்தத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தன. தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் கொழும்பின் "திறந்த சந்தை" மறுசீரமைப்பு மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பை உடைக்கவும் 1983 இல் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் இனவாத படுகொலைகளை தூண்டியது.

இலங்கை ஆளும் உயரடுக்கும் செய்தி ஊடகமும் முஸ்லிம் விரோத வெறித்தனத்தை தூண்டிவிடும் அதே வேளை, ஏப்ரல் 21 அன்று ஒரு பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்பானது இலங்கை பாதுகாப்பு ஸ்தாபகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது உண்மையே. அரசாங்க தலைமைத்துவத்தின் ஒரு பகுதியும் வரவிருந்த பேரழிவைப் பற்றி அறிந்திருந்தும், அதை நடக்க அனுமதித்தது என்ற ஆதாரங்கள் இப்போது வெளியே கசியத் தொடங்கியுள்ளன.

இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் செயலற்ற தன்மைக்கு எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை, ஆனால் கடுமையான அவசரகால நிலைமையை சுமத்தவும், நாடு முழுவதும் பரந்த அதிகாரங்களுடன் ஆயுதப்படைகளை நிலைநிறுத்தவும் இந்த தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். "பயங்கரவாதிகள்" பற்றி தகவல் தருமாறு முஸ்லீம்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதோடு பர்க்கா மற்றும் நிஜாப் உள்ளிட்ட முஸ்லீம் பெண்களின் பாரம்பரிய உடைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கும் கொழும்பு ஊடகங்கள், பொலிஸ் மற்றும் இராணுவத் தேடுதல்களையும் வன்முறையான கைது நடவடிக்கைகளைப் பற்றியும் எரியூட்டும் மற்றும் உணர்ச்சிபூர்வமான கட்டுரைகளை வெளியிட்டு, ஒரு வெறுக்கத்தக்க முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை பேணி வருகின்றன.

இந்த அடக்குமுறை நடவடிக்கைகளின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமே ஆகும். கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் எழுச்சி அலை, தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடதுகளின் ஆதரவுடன் அரசாங்கத்தின் பயங்கரவாத-எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் அடிபணிய வைக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமானதே ஆகும்.

டிசம்பரில், 100,000 தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் தினசரி அடிப்படை ஊதியத்தை இரட்டிப்புக் கோரி ஒன்பது நாள் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தினர். மார்ச் மாதத்தில், 200,000 ஆசிரியர்கள் ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தியதுடன் மே மாதத்தில் இரு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்தனர். கிராமப்புற அமைதியின்மை வளர்ந்து வருவதோடு கல்வி தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான இந்த எதிர்ப்பினால் பீதியடைந்த ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இராஜபக்ஷவும் எதேச்சதிகார ஆட்சி முறைக்கு தயாராகி வருகின்றனர். ஆளும் உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளும் பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக "சர்வதேச பயங்கரவாதத்தை தோற்கடித்தல்" என்ற போலி பிரச்சாரத்தை பயன்படுத்துகின்றன.

சிறிசேன திட்டமிட்டு இஸ்லாமிய-எதிர்ப்பு குழுக்களை ஊக்குவித்ததோடு, மே 23 அன்று பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசாராவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி அவரை சிறையிலிருந்து விடுதலை செய்தார். நீதிமன்ற அவமதிப்புக்காக ஞானசாரவிற்கு ஆறு ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டிருந்தது. முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான ஆத்திரமூட்டல்களுக்கு பொதுபல சேனா பேர்போனதாகும். 2014 மார்சில், அளுத்கமையிலும் அதை அண்டிய சிறு நகரங்களிலும் முஸ்லிம்களுக்கு எதரான வன்முறைத் தாக்குதல்களை ஞானசார தொடக்கி வைத்தார். குண்டர் தாக்குதல்களில் பெருந்தொகை சொத்துக்கள் அழிக்கப்பட்டன, நான்கு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமுற்றனர்.

கடந்த வாரம் பிரதமர் விக்கிரமசிங்க யாழ்ப்பாணக் கூட்டத்தில் உரையாற்றிய போது, தனது அரசாங்கம் "தனது அரசியல் முனைப்புகளை அடைய இனவாத விதைகளை விதைப்பவர்களுக்கு இரக்கம் காட்டாது" என்று கூறினார். வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளை பற்றியும் சம்பந்தப்பட்ட நபர்களை பற்றியும் உளவுத்துறை தகவல் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

விக்கிரமசிங்கவின் தோரணை போலியானது. ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கமும் அதன் அரசியல் பங்காளிகளும் முஸ்லிம்-விரோத வெறிக்கு ஆதரவளித்ததுடன் இராணுவ மற்றும் அரச எந்திரத்தை பலப்படுத்தும் பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.

இராஜபக்ஷ தலைமையிலான கன்னை, இதேபோல் முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அதே நேரம், இராணுவத்தையும் அதன் உளவுத்துறை பிரிவுகளையும் "பலவீனப்படுத்தியமைக்காக" அரசாங்கத்தை கண்டனம் செய்ததோடு, பயங்கரவாத தாக்குதல்களுக்கு அதுவே வழிவகுத்ததாக கூறிக்கொண்டது.

இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), இராணுவத்தின் பிரிவின் ஆதரவுடன் அரசாங்கந்நை வெல்ல எதிர்பார்க்கின்றது. அதன் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய இராஜபக்ஷவே என்று ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அறிவித்துள்ளது. பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இரத்தம் தோய்ந்த இறுதி கட்டத்திற்கு அவர் பொறுப்பாளியாக இருந்ததுடன் தொழிலாளர்களும் ஏழைகளும் நடத்திய போராட்டங்களை நசுக்குவதற்காக ஈவிரக்கமற்ற முறையில் இராணுவத்தையும் பொலிசாரையும் அணிதிரட்டினார்.

திங்களன்று இலங்கை வர்த்தக சபையின் செயலாளர் தாரா விஜேதிலக, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதிக்கு கடிதம் எழுதி, குண்டு தாக்குதல்களின் ஆபத்தை பற்றி கவலை தெரிவித்தார். "சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பாக இருப்பதோடு, நீங்கள் சமாதானம், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதை உறுதி செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்…" என்று அந்த கடிதம் அறிவித்தது.

விஜேதிலகவின் "சட்டம் மற்றும் ஒழுங்கு" கடிதம், அரசாங்கத்துடனும் நிறுவனங்களுடனும் மோதலுக்கு வரும்போது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்த கோருவதற்கு இலங்கை வர்த்தக தலைவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கான இன்னொரு அறிகுறியாகும்.

இலங்கை தொழிலாளர்கள் இந்த சூழ்நிலையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலாள வர்க்கம் ஆளும் உயரடுக்கின் முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தையும், அதன் அவசரகால ஆட்சி நடவடிக்கைகள் அனைத்தையும் உறுதியாக எதிர்ப்பதோடு இன, தேசிய வழிகளுக்கு அப்பால் தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டும். வேலைத் தளங்கள், பெரிய தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதற்கு தொழிலாளர்கள் முன்நடவடிக்கை எடுப்பதுடன் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகளின் ஆதரவுக்காக அழைப்பு விடுக்க வேண்டும்.

சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, சர்வாதிகார ஆட்சிக்கான உந்துதலை தோற்கடிக்க முடியும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம் ஆகும்.