ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French police interrogate donors to “yellow vest” protester

பிரெஞ்சு பொலிஸ் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரருக்கு நன்கொடை அளித்தவர்களை விசாரணை செய்கிறது

By Will Morrow
18 June 2019

கலகம் ஒடுக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கைமுட்டியால் குத்தியதற்காக ஜனவரியில் கைது செய்யப்பட்ட தொழில்ரீதியான முன்னாள் குத்துச்சண்டை வீரரும் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரருமான கிறிஸ்தோப் டெற்ரான்ஜே ஐ ஆதரித்து பணம் வழங்கியவர்களை விசாரணை செய்ய பிரெஞ்சு பொலிஸ் அழைப்பாணை அனுப்பி வருகிறது.

பாரீஸ் பொலிஸிடம் இருந்து பெற்ற மின்னஞ்சல் அழைப்பாணைகளை அவர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள தொடங்கியதும் ஜூன் 11 இல் அரசின் நடவடிக்கைகள் வெளிப்பட்டன. குறைந்தபட்சம் 50 பேர் இதுவரையில் அழைப்பாணைகளைப் பெற்றுள்ளனர், ஆனால் நிஜமான எண்ணிக்கை இதையும் விட அதிகமாக இருக்கலாம். 8,800 இக்கும் அதிகமானவர்கள் நிதி வழங்கி இருந்தார்கள்.

விசாரணைக்கு நேரில் வர இயலாது என்று குறிப்பிட்டவர்களிடம் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் வழங்குமாறு கேட்கப்பட்டன: “என்ன காரணத்திற்காக கிறிஸ்தோப் டெற்ரான்ஜேக்கு ஆதரவாக நிதி வழங்கினீர்கள்? எந்த தேதியில் நன்கொடை வழங்கினீர்கள், அந்த வலைத் தளத்திற்கு நிதி வழங்குவதற்கான நோக்கம் என்ன?”

டெற்ரான்ஜேக்கும் மற்றும் அவர் குடும்பத்திற்கும் ஆதரவாக நிதி வழங்கியவர்கள், மறைமுகமாக ஒரு குற்ற நடவடிக்கைக்கு நிதி வழங்கினார்கள் என்று ஆக்குவதே வெளிப்படையான உள்நோக்கமாக உள்ளது. அரசின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாத கொள்கைக்கு எதிரான மற்றும் அரசுக்கு எதிரான அரசியல் எதிர்ப்பை மிரட்டுவதும் குற்றமயமாக்குவதுமே அரசாங்க நடவடிக்கைகளின் நோக்கமாக உள்ளது.

மிகப்பெரிய வங்கியான Crédit Mutuel க்குச் சொந்தமான தனியார் நிதிவசூல் வலைத் தளமான Leetchi இடமிருந்து நன்கொடையளித்தவர்களின் முழு பட்டியலை பொலிஸ் கேட்டுப் பெற்றது. டெற்ரான்ஜேயின் ஒரு நண்பரோ அல்லது உறவினரோ ஜனவரியில் நன்கொடைகள் பெறுவதற்காக அந்த தளத்தைப் பயன்படுத்தி இருந்தார். நன்கொடையாளர்கள் நிதியுதவியை அநாமதேயேரீதியில் வழங்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்கள். அழைப்பாணை பெற்றவர்கள் கூட்டாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல் வடிவில் அறிவிப்பைப் பெற்றிருந்தார்கள், இது மேலதிகமாக 30 அல்லது 40 நபர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களைப் பலர் அறியச் செய்திருந்தது.

“அவர்கள் ஏன் நிதி வழங்கினார்கள் என்றறிய இப்போது முழு அளவில் விசாரணை நடத்தப்படும். அது ஏறத்தாழ அரசியல் பொலிஸ், அல்லது சிந்தனை பொலிஸ் முறை,” என்று டெற்ரான்ஜே குடும்பத்திற்கான வழக்கறிஞர் Laurence Léger ஐரோப்பா1 க்கு தெரிவித்தார்.

கலகம் ஒடுக்கும் தலைகவசங்கள் மற்றும் உடல் கவசங்கள் அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் ஒரு குழுவை எதிர்த்து, அவர்களில் ஒருவரைக் கைமுட்டியால் குத்துவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜனவரி 11 இல் டெற்ரான்ஜே கைது செய்யப்பட்டார். அந்த காணொளியின் முந்தைய நொடிகளில், அதே பொலிஸ் நிராயுதபாணியான அமைதியான போராட்டக்காரர்களின் ஒரு குழுவை கண்ணீர் புகைகுண்டுகளைக் கொண்டு தாக்கியதை காணமுடியும். அந்நேரத்தில், “மஞ்சள் சீருடை" போராட்டத்தின் போது, பொலிஸ் தன்னை தாக்கியபோதுதான் டெற்ரான்ஜே தலையிட்டார் என்று ஒரு இளம் பெண் பாரீசில் சான்றொப்பம் சமர்பித்தார், அவர் அப்பெண்மணியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவ்வாறு செய்திருக்கலாமென அறிவுறுத்துவதாக உள்ளது.

டெற்ரான்ஜேக்கு, கணுக்காலில் இலத்திரனியல் பட்டையுடன் அரை-சுதந்திரத்தோடு ஓராண்டு சிறையில் இருக்க பெப்ரவரியில் தண்டனை விதிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் டெற்ரான்ஜே க்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவது (மொத்தமாக 130,000 டாலருக்கும் அதிகமான அனைத்து நன்கொடைகளும் 48 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் குவிந்திருந்தன) மக்ரோன் அரசாங்கத்திடமிருந்து கொந்தளிப்பான மற்றும் விஷமத்தனமான நடவடிக்கையைத் தூண்டியது. அது, டெற்ரான்ஜே பொலிஸில் சரணடைவதற்கு முன்னதாக அவரின் வீட்டை சோதனையிட்டதுடன் நாடுதழுவிய மனிதவேட்டையாடலையும் தொடங்கியது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே சமத்துவம் செயலகத்தின் செயலர் மார்லின் ஷியாப்பா கூறுகையில், Leetchi நிறுவனம் அந்நிதி சேகரிப்பை நிறுத்த வேண்டுமென கோரியதுடன், அதற்கு நன்கொடையளித்த ஒவ்வொருவரையும் பகிரங்கமாக அடையாளம் காட்ட அழைப்புவிடுத்தார்.

“இதற்கு நன்கொடையளித்தவர்கள் யாரென்று அறிவது நன்மையாக இருக்கும், ஏனென்றால் அது ஒரு சிக்கலான வடிவம் என்று நினைக்கிறேன்,” என்றவர் பிரான்ஸ்இன்போவுக்கு தெரிவித்தார். “மிகவும் மரணகதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒருவர், தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த —பொது ஒழுங்கைப் பேணி வந்த— ஒரு பொலிஸ்காரரைத் தாக்கிய ஒருவர், நம்மிடையே இருக்கிறார் — அது மூர்க்கத்தனமானது. அதை ஆதரிப்பதென்பது அந்நடவடிக்கைக்கு உடந்தையாய் இருப்பது மற்றும் அதை ஊக்குவிப்பதாகும்,” என்றார்.

நன்கொடையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை ஒப்படைப்பதென்ற Leetchi/Crédit Mutuel இன் முடிவு பழிவாங்கும் விதமாக டெற்ரான்ஜேயை இன்னலுக்கு உட்படுத்தும் வங்கியினது சமீபத்திய நடவடிக்கை என்பதோடு, அது மக்ரோன் அரசாங்கத்தின் பொலிஸ் ஒடுக்குமுறையில் ஒத்துழைப்பதாகவும் உள்ளது.

அந்த நிதி சேகரிக்கத் தொடங்கி 48 மணி நேரத்திற்குள் Crédit Mutuel, குறிப்பாக பொது "அழுத்தம்" என்று கூறி, அந்த நன்கொடைகளைப் பெறுவதை நிறுத்தியதுடன், அதற்கும் கூடுதலாக மொத்த பணத்தையும் முடக்கி, டெற்ரான்ஜேக்கு அதை ஒப்படைக்கவும் மறுத்தது. வெறும் ஒரு நாள் முன்னதாக Leetchi இன் பகிரங்க அறிக்கை, அது நிதியின் சட்டபூர்வமான தன்மையை சுட்டிக்காட்டியது என்ற “ஒரு வழக்கறிஞரின் பதில்” நிராகரிக்கப்பட்டது.

இப்போது அந்த வங்கி, அந்நிதியை சட்ட பாதுகாப்பு கட்டணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறி, டெற்ரான்ஜேக்கும் அவர் குடும்பத்திற்கும் உதவுவதற்காக வழங்கப்பட்ட நூறாயிரக் கணக்கான யூரோக்களில் ஒரு சென்ட்டைக் கூட வழங்க மறுக்கும் அதன் பழிவாங்கும் உணர்ச்சியை நியாயப்படுத்த முயன்று வருகிறது.

நிதி வழங்கிய 8,000 இக்கும் அதிகமான நன்கொடையாளர்கள் இப்போது பொலிஸால் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையானது, டெற்ரான்ஜேக்கு எதிரான அரசு நடவடிக்கை எப்போதும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், அரசியல் எதிர்ப்பைக் குற்றகரமாக்கவும் திரும்பி உள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.

டெற்ரான்ஜே மற்றும் அவரது குடும்பத்திற்காக தான் நிதி வழங்கப்பட்டது என்பதால் அவர்களுக்குச் சேர வேண்டிய நிதியை வழங்கி Leetchi நிறுவனம் அதன் கடமையைச் செய்ய வேண்டுமென கோரி, அந்நிறுவனத்திற்கு எதிராக 50 இக்கும் அதிகமான நன்கொடையாளர்கள் சட்ட வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து, பாரீஸ் பொலிஸ் நிர்வாகம் உத்தியோகபூர்வ விசாரணை மேற்கொண்டு வருகிறது என்பதே, பெருந்திரளான மக்களை மிரட்டும் பொலிஸ் நடவடிக்கைக்கு ஓர் அப்பட்டமான சாக்குபோக்காக உள்ளது.

ஏப்ரல் மாத மத்தியில் பதிவு செய்யப்பட்ட அந்த சட்ட வழக்கு, நன்கொடையாளர்கள் "மக்களின் நல்லிணக்கத்தை 'மஞ்சள் சீருடையாளர்களுக்கு' காட்ட" விரும்பினார்கள் என்றும், அந்நிதி சேகரிப்பை நிறுத்துவதற்கு முன்னதாக அவ்விதமான நிதி சேகரிப்பு சட்டபூர்வமானது என்று Leetchi நிறுவனமே பகிரங்கமாக மீண்டும் மீண்டும் கூறியிருந்த நிலையில், அதன் நிலைப்பாட்டால் நன்கொடையாளர்கள் "மிகவும் அதிர்ச்சி" அடைந்திருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அந்நிதி சேகரிப்பு ஒன்றரை மாதங்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்றபோதும், Leetchi இரண்டே நாட்களில் எதேச்சதிகாரமாக அதை நிறுத்தியதால் ஏற்பட்ட நஷ்டங்களைப் பின்தொடர்வதற்காக, டெற்ரான்ஜேயும் மற்றும் அவர் மனைவி கரீனும் அந்நிறுவனத்திற்கு எதிராக சுதந்திரமான இரண்டாவது சட்ட வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். அவர்கள் 3 மில்லியன் யூரோவுக்கும் அதிகமாக நஷ்டஈடு கோரி வருகின்றனர்.

வெறும் கைகளோடு ஒரேயொரு பொலிஸ்காரரைத் தாக்கியதற்காக டெற்ரான்ஜே மீதான இந்த மூர்க்கமான விடையிறுப்பானது, பொலிஸ் தொடர்ந்து கண்ணீர் புகைகுண்டுகள், இரப்பர் தோட்டாக்கள், லத்தியடிகள் மற்றும் உணர்விழக்கச் செய்யும் எறிகுண்டுகளைக் கொண்டு அமைதியான "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களை வன்முறையாக தாக்கி வரும் சூழலில் நடத்தப்படுகிறது.

பாரீசில் கடந்த சனிக்கிழமை "மஞ்சள் சீருடை" போராட்டத்தின் போது, உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் டெற்ரான்ஜேக்கு நன்கொடை அளித்திருந்தவர்களில் ஒருவரைச் சந்தித்தனர். 13 ஆண்டுகளாக Electricité de France இல் ஒரு தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றும் அவர், அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையையும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் சிக்கன கொள்கைகளையும் எதிர்ப்பதற்காக, நவம்பரில் இருந்து "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் கலந்து கொள்ள தொடங்கினார். பொலிஸிடம் இருந்து அவருக்கு இதுவரையில் அழைப்பாணை கடிதம் எதுவும் கிடைத்திருக்கவில்லை.


மிக்கெல்

“கிறிஸ்தோப் மற்றும் அவர் குடும்பம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மற்றும் அன்றாட செலவுகளைச் சமாளிக்கவும் உதவுவதற்காக நான் ஒரு குறிப்புடன் சேர்த்து நன்கொடை வழங்கி இருந்தேன்,” என்றார். “நான் அந்த குடும்பத்திற்கு உதவ விரும்பினேன் என்பதோடு, பொலிஸ் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டக்காரர்களை பாதுகாக்க முயன்ற அவர் நடவடிக்கையை நாங்கள் மதிக்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன். அதுவொரு பாதுகாப்பு நடவடிக்கை, அங்கே களத்தில் ஒரு பெண் இருந்தார்.

“அவர்களுக்கு எதிராக மக்கள் எதிர்த்து நிற்பதை அரசு விரும்பவில்லை, அதனால் தான் இந்த நிதியுதவி இந்தளவுக்கு அவர்களை ஆத்திரப்படுத்தியது,” என்றவர் தொடர்ந்து குறிப்பிட்டார். “அவரது நடவடிக்கைகளை நீங்கள் அங்கீகரித்தால், நீங்கள் உடந்தையாய் இருக்கிறீர்கள் என்றவர்கள் கூறினார்கள். ஆனால் பின்னர் ஒருவர் உடந்தையாய் இருக்கிறார் என்றால், பின் அவரை வழக்கில் இழுக்க முடியும். இதை தான் அரசு கூறுகிறது.

“நான் சாம்ப்ஸ்-எலிசே வீதியில் இருந்தேன், மக்கள் செல்லும் வழியில் ஆயுதந்தாங்கிய காவற்படை (gendarmes) இருந்ததைப் பார்த்தேன், பின்னர் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. அவர்கள் என்னை தள்ளி, தாக்கினார்கள். கண்ணீர் புகைக்குண்டு முகமூடி வைத்திருந்த எனக்கு அடுத்திருந்தவர் கழுத்தில் தாக்கப்பட்டார். நான் காலில் தாக்கப்பட்டேன். அவர்கள் எந்த கோரிக்கைகளையும் செவிமடுக்கவில்லை, இப்போது மக்ரோன் டிசம்பருக்கு முந்தைய அதே திட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்,” என்று கூறிய அவர், ஓய்வூதியங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை உதவித்தொகைகளில் வெட்டுக்களை அறிவித்த எட்வார்ட் பிலிப்பின் சமீபத்திய உரையைச் சுட்டிக்காட்டுகிறார்.

பிரான்சில் அரசியல் எதிர்ப்பை குற்றமயமாக்குவதை நோக்கிய திருப்பம், சர்வதேச அளவில் பொலிஸ் அரசு ஆட்சி வடிவங்கள் கட்டமைக்கப்பட்டு வரும் சூழலில் நடக்கிறது. அதன் மிகவும் முன்னேறிய வெளிப்பாடு தான் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மீதான இன்னல்படுத்தல், அவர் வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளது போர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் அச்சுறுத்தலில் உள்ளார்.

பிரான்சில் ஒரு பொலிஸ் அரசு கட்டமைக்கப்படுவது அசான்ஜ் மற்றும் சர்வதேச அளவில் ஏனைய இரகசிய ஆவண வெளியீட்டாளர்கள் மீதான இன்னல்படுத்தலுடன் தொடர்புபட்டிருப்பதை மிக்கெல் சுட்டிக்காட்டினார். “அரசு மக்களைக் கண்டு பீதியடைந்துள்ளது, அது பல விடயங்களை மறைத்து வருகிறது,” என்றார். “அவர்கள் நிஜமாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுபிடித்துவிடுவோமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். ...”

“ஜூலியன் அசான்ஜ் தகவல்களை வெளியிடுவார் அது அவர்களை மதிப்பிழக்கச் செய்யும் என்று அமெரிக்க அதிகாரிகள் பயப்படுகின்றனர்,” என்று கூறிய அவர், “அமெரிக்கா அவரைப் பிடிக்க விரும்புகிறது என்பதும், அதனிடம் ஒப்படைப்பதைக் கொண்டு அவரை அச்சுறுத்துகிறது என்பதும் பயங்கரமானது,” என்றார்.

முதலாளித்துவம், போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தின் அடித்தளத்தில், அசான்ஜ் மற்றும் இரகசிய ஆவண வெளியீட்டாளர் செல்சியா மேனிங் மீதான இன்னல்படுத்தலுக்கு அரசியல் எதிர்ப்பை ஒழுங்கமைக்க பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’Égalité Socialiste) அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்கமைத்து வருகிறது.