ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Three months since arrest of WikiLeaks publisher
UK government holds “media freedom” conference while imprisoning Assange

விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் கைது செய்யப்பட்டதிலிருந்து மூன்று மாதங்கள்

அசான்ஜை சிறையில் அடைத்து வைத்து கொண்டு, பிரிட்டன் அரசாங்கம் "ஊடக சுதந்திரத்திற்கான" மாநாட்டை நடத்துகிறது

Oscar Grenfell
13 July 2019

விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் ஈக்வடோர் தூதரகத்திலிருந்து இழுத்து வரப்பட்டு இலண்டனின் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து மூன்று மாதங்கள் ஆனதை நேற்று குறித்தது. 175 ஆண்டு கால சிறை தண்டனை கொண்டுள்ள தேசதுரோக நடவடிக்கை குற்றச்சாட்டுக்கள் மீதான ஒருதலைபட்சமான பழிவாங்கும் ஒரு வழக்குக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்காக அவர் பெல்ஷ்மார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களின் போர் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்தியது மட்டுமே அசான்ஜின் ஒரே "குற்றமாகும்.” விக்கிலீக்ஸ் இக்கு தகவல்களைக் கசியவிட்ட மிகவும் துணிச்சலான இரகசிய ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங் ஓர் அமெரிக்க நீதி விசாரணை பெருங்குழுவுக்கு முன்னால் அசான்ஜிற்கு எதிராக பொய் சாட்சி கூற மறுத்ததற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க பிரதம மந்திரி தெரேசா மே அரசாங்கம் அசான்ஜைச் சிறையில் அடைத்ததற்குப் பின்னர், அண்மித்து மொத்த ஊடகங்களும் இதை இருட்டடிப்பு செய்துள்ளன. சித்திரவதை வடிவில் அவர் கையாளப்படுகிறார் என்று குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை புதைக்கப்பட்டுவிட்டதும் இதில் உள்ளடங்கும்.

இது, பிரிட்டிஷ் அரசாங்கம் இவ்வாரம் இலண்டனில் இரண்டு நாள் "ஊடக சுதந்திரத்திற்கான உலகளாவிய மாநாடு" நடத்தியது என்ற எரிச்சலூட்டும் மைல்கல்லின் பின்புலத்தில் இருந்தது. அரசியல் பிரமுகர்கள், பெருநிறுவன பத்திரிகைகளின் பிரதிநிதிகள் மற்றும் "மக்கள் சுதந்திரத்திற்கான" தொழில்ரீதியிலான நடவடிக்கையாளர்கள் உட்பட இதில் கலந்து கொண்ட மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 பேர், கட்டுப்பாடற்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு அவர்களின் கடமைப்பாட்டையும் மற்றும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கு அவர்களின் உறுதியான பாதுகாப்பையும் பிரகடனப்படுத்த ஒன்று கூடினர்.

இந்த மாநாடு பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கின் எல்லையில்லா சிடுமூஞ்சித்தனத்திற்கு ஒரு நகைப்பிற்கிடமான எடுத்துக்காட்டாக மட்டுமே நினைவு கூரப்படும். இது, பெல்மார்ஷ் சிறையிலிருந்து சுமார் ஏழு மைல் தூரத்தில் நடத்தப்பட்டது. படுகொலையாளர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கொண்டு வரப்பட்ட உச்சபட்ச-காவல் ஏற்பாடுகளின் கீழ், இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள உலகின் மிகவும் பிரபல பத்திரிகையாளர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார்.

அசான்ஜ் அவரின் சிறையிலிருந்தே இம்மாநாட்டின் பாசாங்குத்தன துர்நாற்றத்தை உணரக்கூடும் என்று விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர்.

ஏப்ரல் 11 இல் பிரிட்டிஷ் பொலிஸ் அசான்ஜை மூர்க்கமாக கைது செய்ததில் இருந்து, அவர் பிணையை நிபந்தனைகளை மீறினார் என்ற போலிக் குற்றச்சாட்டுகளின் மீது சிறையில் அடைத்துள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் அதேவேளையில் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்குச் செயல்பட்டு வருகிறது. அங்கே அமெரிக்காவில் பெருந்திரளான மக்கள் மீதான உளவுபார்ப்பு, போர் குற்றங்கள் மற்றும் உலகளாவிய இராஜாங்க சதித்திட்டங்களை அம்பலப்படுத்திய ஆவணங்களை பிரசுரித்ததற்காக அவர் நிர்மூலமாக்கப்பட உள்ளார்.

பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் ஜெர்மி ஹன்ட் அக் கைது நடவடிக்கைக்குத் தலைமை தாங்கினார். பத்திரிகை சுதந்திரத்திற்கான அந்த சுய-பாணியிலான பாதுகாவலர், ஏப்ரல் மாதம், ஊழல்பீடித்த ஈக்வடோர் அரசாங்கம் சட்டவிரோதமாக அசான்ஜின் அரசியல் தஞ்சத்தை நீக்கியற்காக அதை பாராட்டினார். விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் "கதாநாயகன் இல்லை" என்று அறிவித்த அவர், அசான்ஜை அவர் அமெரிக்காவுக்கு அனுப்ப விரும்புவதாகவும் தெரிவித்தார், அங்கே அந்த துணிச்சலான பத்திரிகையாளர் அவரின் சட்டத்திற்குட்பட்ட பதிப்பு நடவடிக்கைகளுக்காக மரண தண்டனையை எதிர்கொள்ளக்கூடும்.

ஹன்ட், கடந்த மூன்று மாதங்களாக, அசான்ஜிற்கு எதிரான இந்த கொடிய தாக்குதல்களைப் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பை நோக்கமாக கொண்டதென கூறப்படும் ஒரு பிரச்சாரத்துடன் இணைத்து நடத்தி உள்ளார். ஜூன் மாதம் உத்தியோகபூர்வ "உலக பத்திரிகை சுதந்திரம்" நிகழ்வுகளில் அவர் முக்கிய பேச்சாளராக இருந்தார். ஹன்டின் அரசாங்கம் அசான்ஜிற்கான அடிப்படை சட்ட உரிமைகளை மறுத்துள்ளதுடன், அது அவரை "மனோரீதியில் சித்திரை" செய்த ஒரு கட்சி என்று சித்திரவதைகள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிவிக்கையாளர் நில்ஸ் மெல்சர் கண்டறிந்து வெறும் ஒருசில நாட்களிலேயே இந்நிகழ்வுகள் நடந்திருந்தன.

இந்த இரட்டை-வேஷம் அந்த வெளியுறவுத்துறை அமைச்சரின் முக்கிய உரையில் புதன்கிழமை மீண்டும் பார்வைக்கு வந்தது. அனுமானிக்கத்தக்க வகையில், அவர் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரைக் குறித்து குறிப்பிடவே இல்லை. எவ்வாறிருப்பினும் ஹன்ட் இன் கருத்துக்கள், அவரின் சொந்த அரசாங்கத்தினது நடவடிக்கைகள் மீது ஒரு அப்பட்டமான குற்றப்பத்திரிகையாக நிற்கிறது.

அவர் அறிவித்தார்: “கணக்கில் கொண்டு வருவது மற்றும் நுண்ணோக்கிய அணுகுமுறை ஆகியவை அதிகாரத்தின் இருண்ட பக்கத்திற்கு எதிரான பலமான பாதுகாப்பாகும் — சுதந்திர ஊடகத்தை தவிர்த்து வெகு சில அமைப்புகளே இந்த பாத்திரத்தை மிகச் சிறப்பாக பூர்த்தி செய்கின்றன,” என்றார். “கட்டுப்படுத்த முடியாத அல்லது கையூட்டுப் பெறாத ஓர் ஊடகத்தின் அம்பலப்படுத்தும் அபாயத்தில் இருந்துதான் நிஜமான கணக்கில் கொண்டு வரும் நடவடிக்கை நடக்கிறது,” என்று கூறுமளவுக்குச் சென்ற அவர், “வெளிப்படைத்தன்மையின் ஒளியை" “தவறு செய்வதைத் தடுக்கக்கூடிய மிகப்பெரிய தடுப்பரணாக" பாராட்டினார்.

பிரிட்டன் மற்றும் அதன் கூட்டாளிகளின் ஏகாதிபத்திய நலன்களை அச்சுறுத்தாத வரையில் மட்டுமே அத்தகைய அம்பலப்படுத்தல்கள் அனுமதிக்கப்படுகின்றன என்பதையும் ஹன்ட் சேர்த்திருக்க வேண்டும்.

வெளியுறவுத்துறை அமைச்சரின் பாசாங்குத்தனத்தை அவரின் “ஊடக சுதந்திரத்திற்கான சிறப்பு தூதர்" அமால் குலூனி மட்டுமே விஞ்சி நின்றார். அமெரிக்காவுக்கு அசான்ஜை விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதற்கு ஒரு மாற்று பாதையை உருவாக்குவதற்காக ஜோடிக்கப்பட்ட பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் மீது அவரை சுவீடனுக்கு நாடு கடத்தும் முயற்சிகளை எதிர்த்து அசான்ஜ் போராடிக் கொண்டிருந்த போது, அந்த வழக்கறிஞர் [அமால் குலூனி] 2012 இல் அசான்ஜின் சட்ட பாதுகாப்புக் குழுவில் இருந்தார்.

குலூனி விக்கிலீக்ஸ் ஸ்தாபகரைக் கைவிட்டு நீண்டகாலமாகி விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், அப்பெண்மணி நடிகர் ஜோர் குலூனியைத் திருமணம் செய்து, அரசியல் மற்றும் சட்ட ஸ்தாபகத்தின் ஒரு கொண்டாடப்படும் உறுப்பினராக ஆகியுள்ளார். அசான்ஜைத் தொல்லைப்படுத்துவதில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் மத்திய பாத்திரம் வகித்துள்ள நிலையில், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக தலா 176,000 டாலர் நிதிதிரட்டியவர்களில் குலூனி இடம் பெறுகிறார்.

பிரிட்டிஷ் பொலிஸ் அசான்ஜை இலண்டனின் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து பிடித்து இழுத்து வருவதற்கு ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களுக்கு முன்னர் தான் ஹன்டின் "சிறப்பு தூதராக" அமால் குலூனி நியமிக்கப்பட்டார். இந்த நேரம் தற்செயலாக அமைந்ததில்லை என்பது க்லூனெ இக்குச் சந்தேகத்திற்கிடமின்றி தெரியும். பிரிட்டிஷ் அரசாங்கம் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் சட்ட உரிமைகள் மீதான அதன் தாக்குதலைச் சட்டபூர்வமாக்கும் முயற்சியின் பாகமாக, அது அசான்ஜின் முன்னாள் வழக்கறிஞரை "பத்திரிகை சுதந்திரத்திற்கான" அதன் ஊதுகுழலாக பணியமர்த்திக் கொண்டது.

அம்மாநாட்டில் அவர் குறிப்பிடுகையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் “விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான குற்றப்பத்திரிகை உலகெங்கிலுமான செய்தியிதழ்களில் பத்திரிகையாளர்களை எச்சரிக்கைப்படுத்தி உள்ளது... ஏனென்றால், வாஷிங்டன் போஸ்ட் பதிப்பாசிரியர் குறிப்பிடுவதைப் போல, அது... 'நீண்டகாலமாக மக்கள் நலனுக்குச் சேவையாற்றிய பத்திரிகையியலின் பொதுவான நடைமுறைகளை குற்றமயமாக்குகிறது'” என்று குறிப்பிட்டதே, அம்மாநாட்டில் அசான்ஜைக் குறித்து குலூனி குறிப்பிட்ட ஒரே மேற்கோளாக இருந்தது.

ஆனால் அந்த வழக்கறிஞர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பாத்திரம் குறித்து எதுவும் கூறவில்லை, அதன் வெளியுறவுத்துறை செயலர் அவரிலிருந்து வெகுசில மீட்டர் தூரத்தில் தான் அமர்ந்திருந்தார். அசான்ஜ் குறித்த இந்த மழுப்பலான குறிப்பே கூட, பெருநிறுவன பத்திரிகையாளர்கள் கையாண்டதை விட அதிகமாக இருந்தது. அங்கிருந்த செய்தியாளர்களில் பெரும்பாலானவர்கள் அம்மாநாடு குறித்த அவர்களின் கட்டுரைகளில் அசான்ஜ் குறித்து குலூனி குறிப்பிட்டதைச் சர்வசாதாரணமாக புறக்கணித்து, “ஊடக சுதந்திரம்" குறித்த அவர்களின் சொந்த பிரகடனங்களின் பாசாங்குத்தன இயல்பை நிரூபித்தனர்.

அங்கே கலந்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் ஏற்கனவே மிகவும் கவனமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்ததுடன், நிலவும் நடைமுறைக்கு உண்மையான சேவகர்களாக இருந்து முடிவெடுத்தனர். அங்கே இல்லாத பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவுக்குச் சொந்தமான RT, Ruptly மற்றும் Sputnik News நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அலுவலகம் அறிவிக்கையில், “தவறான செய்திகளைப் பரப்புவதில் அவர்கள் வகித்த பாத்திரத்திற்காக”, அதாவது அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் தலைமையிலான போர்கள் குறித்தும், அசான்ஜ் இன்னல்படுத்தப்படுவது குறித்தும் அவர்கள் விமர்சனபூர்வமாக செய்தி வெளியிட்டார்கள் என்பதால், அவர்கள் தவிர்க்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்றும் அசான்ஜைக் குறித்து ஹன்ட் என்ன நினைக்கிறார்கள் என்றும் Ruptly பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தவாறு, பாதுகாவலர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் வியூகம் சூழ ஹன்ட் அம்மாநாட்டுக்குள் நுழையும் ஒரு காட்சி, அம்மாநாட்டின் நிஜமான தன்மையைப் பதிவு செய்திருந்தது.

இது ஒரு பத்திரிகையாளருக்கு ஹன்ட் கூறிய கருத்திலும் தொகுத்தளிக்கப்பட்டது. அதன் "மதிப்பு சேதம்" அடைந்த நிலையில், அவ்விதத்தில் சவூதி அரேபியா ஏற்கனவே அதன் ஜமால் கஷோகியின் குரூர படுகொலைக்கு "விலை கொடுத்து" இருந்ததாக அவர் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரிட்டிஷ் ஆயுதங்களைக் கொள்முதல் செய்பவர்களும் மற்றும் அதன் கூட்டாளிகளும் அதிருப்தி பத்திரிகையாளர்களை எலும்பு-அறுவை கருவிகளைக் கொண்டு துண்டாட அனுமதிக்கப்படுகின்றனர், ஆனால் மழுப்பலான கண்டனங்களையும் மற்றும் மோசமான பத்திரிகைகளின் சில செய்திகளையும் மட்டும் அவர்கள் "விலையாக" கொடுத்தால் போதுமானது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மையநலனுக்காக ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிராக இராணுவ ஊடுருவல்களுக்கான "மனித உரிமைகள்" சாக்குபோக்கை உருவாக்குவதற்கே, ஹன்ட் இன் இந்த போலி ஊடக சுதந்திர பிரச்சாரம் சேவையாற்றுகிறது, அதேவேளையில் அது பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் கூட்டாளிகளின் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை மூடிமறைக்கிறது.

அதேநேரத்தில், அது "போலி செய்திகள்" மற்றும் "தவறான தகவல்களை" எதிர்கொள்வதற்காக என்ற ஓர்வெல்லியன் பாணியில் இணைய தணிக்கையைத் தீவிரப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது உலக சோசலிச வலைத் தளம் மற்றும் விக்கிலீக்ஸ் உட்பட முற்போக்கு, சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களுக்கு வரும் பயனர் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாக கொண்டு கடந்த இரண்டாண்டுகளாக கூகுளும் பேஸ்புக்கும் திணித்த நடவடிக்கைகளுடன் பொருந்தி உள்ளது.

அரசியல் அல்லது ஊடக ஸ்தாபகத்திலிருந்து அசான்ஜின் பாதுகாப்பிற்கு எந்த கன்னையும் இல்லை என்பதை "ஊடக சுதந்திரத்திற்கான" இந்த மாநாடு மீண்டும் எடுத்துக்காட்டியது.

உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) வலியுறுத்தி உள்ளதைப் போல, என்ன தேவைப்படுகிறது என்றால் அசான்ஜிற்கு எதிரான சர்வதேச அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடிக்கவும், அவரை விடுவிக்கவும் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தின் அபிவிருத்தியாகும்.

உலக சோசலிச வலைத் தளமும், ICFI உடன் இணைந்துள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளும் அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதை நிறுத்தவும், அவரையும் மற்றும் செல்சியா மானிங்கை இருவரையும் விடுவிக்கவும் உலகளாவிய பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்குவதற்கான ஓர் அழைப்பை கடந்த மாதம் வெளியிட்டன.

“இந்த பிரச்சாரத்தின் நோக்கம்,” “மக்கள்தொகையில் பெரும் பெரும்பான்மையாகவும் இப்புவியில் மிகவும் சக்திவாய்ந்த சமூக சக்தியாகவும் விளங்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்புக்காகவும், உண்மையில், அனைத்து தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் பாதுகாப்புக்காகவும், அரசியல்ரீதியில் எழுச்சி பெறச் செய்து அணிதிரட்டுவதாகும்,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்குத் தீவிரமாக பொறுப்பேற்றுள்ள அனைவரும் ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்புக்காக போராடுவதில் இணையுமாறும், இப்போதே பதிவு செய்யுமாறும் WSWS வலியுறுத்துகிறது.