ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French intelligence strategy document warns of “insurrectional violence”

பிரெஞ்சு உளவுத்துறை மூலோபாய ஆவணம் "வன்முறை கிளர்ச்சி" குறித்து எச்சரிக்கிறது

By Will Morrow
19 July 2019

பிரெஞ்சு தேசிய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத-தடுப்பு அமைப்பு (La coordination nationale du renseignement et de la lutte contre le terrorisme - CNRLT) திங்களன்று சத்தமில்லாமல் அதன் ஐந்தாண்டுக்கான பொது மூலோபாய ஆவணத்தின் முதல் மேம்படுத்தலை வெளியிட்டது. ஓர் அமைச்சக வலைத் தளத்தில் பதிவேற்றப்பட்ட மற்றும் எந்தவொரு ஜனாதிபதி பத்திரிகை செய்தி வெளியீட்டிலும் குறிப்பிடப்படாத இந்த அறிக்கை, பிரான்சின் பயங்கரவாத-தடுப்பு முகமைகளின் பாத்திரம் "நிலைகுலைக்கும் இயக்கங்கள்" மற்றும் மக்களின் "வன்முறை கிளர்ச்சிக்கு" எதிராக போராடுவதாகும் என்று குறிப்பிடுகிறது.

எலிசே ஜனாதிபதி மாளிகையின் ஓர் அங்கமான பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் தேசிய உளவுத்துறை ஒருங்கிணைப்பு அமைப்பு "தேசிய உளவுத்துறை மூலோபாயம்" என்பதை பிரசுரித்தது. அது ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதுடன், பிரதம மந்திரிக்கு நேரடியாக அறிவிக்கிறது. அந்த அறிக்கை பிரதம மந்திரியுடன் நேரடியாக கூடி செயலாற்றி எழுதப்பட்டது என்பதுடன், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தனிப்பட்ட ஒப்புதலையும் பெற்றதாகும்.

அந்த மூலோபாயம் ஆவணம் "உளவுத்துறை முகமைகளுக்கான வழிகாட்டுதலைக் கொண்டிருக்கிறது,” என்று அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறது. முதல் ஐந்தாண்டு "வழிகாட்டுதல்" உடனான ஓர் ஒப்பீடு அந்த மேம்படுத்தலின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது. 2014 பதிப்பானது, பயங்கரவாதம், உளவுபார்ப்பு மற்றும் பொருளாதார குறுக்கீடுகள், பாரிய பேரழிவுக்கான ஆயுதங்களின் அதிகரிப்பு, இணையவழி தாக்குதல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் ஆகியவற்றை செயல்பாட்டுக்குரிய ஐந்து பகுதிகளாக அடையாளம் காண்கிறது.

இம்மாத அறிக்கை, “நெருக்கடிகளும் மிகப்பெரும் பிளவுகளின் அபாயமும் எதிர்நோக்கப்படுகின்றன" என்ற ஒரு புதிய வகைப்பாட்டை ஸ்தாபிக்கிறது. “வன்முறை குளறுபடிகள்" என்ற தலைப்பின் கீழ் அது குறிப்பிடுகிறது: “நிலைகுலைக்கும் பாங்குள்ள இயக்கங்கள் மற்றும் வலையமைப்புகளின் அதிகரித்து வரும் பலம் நெருக்கடிக்கான ஒரு காரணியைக் கொண்டுள்ளது, அது தான் சிந்தனையில் அனைத்தை விடவும் மிகவும் மேலோங்கி நிற்கிறது ஏனென்றால் அவை வன்முறை கிளர்ச்சிகள் மூலமாக நமது ஜனநாயகம் மற்றும் குடியரசு அமைப்புகளின் அடித்தளங்களையே பலவீனப்படுத்தும் மற்றும் அழிக்கவே கூட நோக்கம் கொண்டுள்ளன,” என்று குறிப்பிடுகிறது.

“நிலைகுலைக்கும்" இயக்கங்கள் என்பதைக் கொண்டு அந்த ஆவணம் விவரிக்கையில், அது வெறுமனே "மக்கள் அல்லது பண்டங்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளை" மட்டும் அர்த்தப்படுத்தப்படுத்தவில்லை, மாறாக "அவர்களைத் தீவிரப்படுத்தவும் மற்றும் அவர்களுள் ஊடுருவவும் இத்தகைய இயக்கங்கள் பயன்படுத்தும் மொத்த மரபார்ந்த கோரிக்கைகளையும்" அர்த்தப்படுத்துகிறது.

இதுதான் சமூக எதிர்ப்பிற்கான மக்களின் எந்தவொரு வெளிப்பாட்டையும் வன்முறையாக ஒடுக்குவதற்குமான மற்றும் குற்றமயமாக்குவதற்குமான சூத்திரம். இந்த கட்டமைப்புக்குள், “மரபார்ந்த கோரிக்கைகள்" என்றழைக்கப்படுவது —அதாவது, வேலைநீக்கங்களுக்கு எதிராக, கூலி உயர்வுகளுக்காக, வறுமைப்பட்ட வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக, போருக்கு எதிராக மற்றும் சமூக சமத்துவத்திற்கானவை— மக்களின் சட்டபூர்வ கோரிக்கைகளாக ஏற்கப்படாது. அவை, வெறுமனே ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கம் கொண்ட "நிலைகுலைக்கும்" சக்திகள் "பயன்படுத்துபவை" ஆக இருக்கும். இது ஒரு பாசிசவாத பொலிஸ் அரசின் வாதமாகும்.

"இத்தகைய நடவடிக்கை முறைகளின் தீவிரப்பாடானது, அனைத்து வகையான வன்முறையையும் மற்றும் நமது அமைப்புகளை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதையும் தடுக்க, உளவுத்துறை சேவைகளின் எதிர்நோக்கப்பட்ட செயல்பாடுகள் மற்றும் அரசு பாதுகாப்பிற்காக உயர்ந்த மட்டத்திலான கண்காணிப்புக்கு அழைப்பு விடுக்கிறது,” என்று அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிடுகிறது.

“பொது ஒழுங்கின் நெருக்கடி" என்ற தலைப்பின் கீழ், அந்த அறிக்கை தொழிலாள வர்க்கத்தினது சமூக எதிர்ப்பின் அதிகரிப்புக்கு உளவுத்துறை முகமைகளினது விடையிறுப்பை விவரிக்கிறது. “சமூகத்தின் நெருக்கடி மற்றும் சமூக இயக்கங்கள் குறித்து உளவுத்துறை முகமைகளின் எதிர்நோக்குதல், பகுப்பாய்வு மற்றும் கண்காணிப்பு இரண்டு மடங்கு முன்னுரிமையைக் கொண்டுள்ளன,” என்று குறிப்பிடும் அது, “உள்நாட்டு வாழ்வைக் குறித்த புரிதலும் மற்றும் அதன் கதாபாத்திரங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், அமைப்புகள், ஊடகங்கள்...) உடனான தொடர்பும் வெவ்வேறு உளவுத்துறை சேவைகளுக்கும் முக்கிய சவால்களாகும்,” என்று குறிப்பிட்டது.

பிரான்சில் முன்னணி “பயங்கரவாத தடுப்பு” முகமை விவரிக்கும் இத்தகைய கொள்கைகள், கடந்த ஒன்றரை தசாப்தத்தில் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்றழைக்கப்படும் பதாகையின் கீழ் பாரியளவில் பொலிஸ் அதிகாரத்தின் விரிவாக்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளின் உள்அம்சங்களை அகற்றுதல் என்பது, எப்போதும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்கு எதிராகவே திருப்பிவிடப்படும் என்பதையும், அதேவேளையில் மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நவ-காலனித்துவ நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மையையும் அடிக்கோடிடுகின்றன.

பிரான்சில், ஒரு பொலிஸ் அரசின் கட்டமைப்பானது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன் குடியரசு கட்சியினர் மற்றும் சோசலிஸ்ட் கட்சி இரண்டின் கீழும் நடத்தப்பட்டுள்ளது —இதே சோசலிஸ்ட் கட்சியில் இருந்து தான் மக்ரோனின் ஆளும் கட்சியான குடியரசை நோக்கிய இயக்கம் மேலெழுந்தது. சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் —ஜோன் லூக் மெலோன்சோனின் இடது முன்னணியின் ஆதரவுடன்— ஓர் அவசரகால நிலையை அறிவிக்க நவம்பர் 2015 பயங்கரவாத தாக்குதல்களை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தினார், இது ஏறத்தாழ இரண்டாண்டுகள் நீடித்தது.

இந்த அறிக்கை பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் எதேச்சதிகார ஆட்சிக்கான தயாரிப்புகள் மிகவும் முன்னேறி இருப்பதற்கான ஒரு எச்சரிக்கையைக் கொண்டுள்ளது. இந்த உலகளாவிய நிகழ்வுபோக்கின் புறநிலை ஆதாரமானது, ஒவ்வொரு நாட்டிலும் சமூக சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் அதிகரிப்பிலும், ஒரு சிறிய பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் கரங்களில் செல்வவளம் குவிவதிலும் உள்ளது, இந்த சிறிய உயரடுக்கு 20 ஆம் நூற்றாண்டு நெடுகிலும் கடுமையான போராட்டங்களினூடாக தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த ஆதாயங்களில் என்னவெல்லாம் எஞ்சியுள்ளதோ அவற்றை அழித்து தன்னை செல்வச் செழிப்பாக்கிக் கொள்ள தீர்மானகரமாக உள்ளது.

ஆளும் வர்க்கம் முதலாளித்துவத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் எதிர்ப்பையும் மற்றும் சோசலிசத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவையும் ஒடுக்க பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை நோக்கியும், பாசிசவாத மற்றும் அதிவலது சக்திகளை ஊக்குவிப்பதை நோக்கியும் திரும்பி வருகிறது.

ஜேர்மனியில், Verfassungschutz (அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான கூட்டாட்சி அலுவலகம்) உளவுத்துறை முகமை, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) ஜேர்மன் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) இராணுவவாதத்திற்கு எதிரான மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பெருந்திரளான புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான அதன் அழைப்பை மேற்கோளிட்டு, கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டிய "இடதுசாரி தீவிரவாத" அமைப்புகளின் பட்டியலில் அதை நிறுத்தி உள்ளது. அதே நேரத்தில், அரசியல் ஸ்தாபகம் நவ-நாஜி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டை ஊக்குவிப்பதுடன், அரசு எந்திரத்திற்குள் உள்ள அதிவலது பயங்கரவாத வலையமைப்புகளுக்கு மூடிமறைப்பை வழங்குகிறது.

அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப, ஏறத்தாழ அவரின் ஒவ்வொரு நாள் அறிக்கையிலும் “அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோசலிச நாடாக ஆகாது,” என்று குறிப்பிடுவதுடன், கம்யூனிச-விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத வன்முறை தாக்குதல்களின் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க முயலும் வகையில் இன்னும் அதிக பகிரங்கமாக ஒரு பாசிசவாதியாக பேசியும், செயல்பட்டும் வருகிறார்.

பிரான்சுக்குள், கடந்த ஆறு மாதங்களாக சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பாரிய “மஞ்சள் சீருடை” போராட்டங்களுக்கு மக்ரோன் நிர்வாகம் விட்டுக்கொடுப்புகள் மூலமாக விடையிறுக்கவில்லை, மாறாக பாரிய கைது நடவடிக்கைகள், இரப்பர் தோட்டாக்கள், கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் இராணுவ நிலைநிறுத்தல்கள் உட்பட பொலிஸ் வன்முறையைத் தீவிரப்படுத்தி இருப்பதன் மூலமாக விடையிறுத்துள்ளார்.

பிரான்சில் எதேச்சதிகார ஆட்சிக்கான முன்னேறிய தயாரிப்புகள் ஜூலை 14 இல் அரசாங்கத்தின் பாஸ்டி தின நடவடிக்கைகளில் அடிக்கோடிடப்பட்டன.

மக்ரோனுக்கு ஒரு அவமானகரமான பின்னடைவாக பாஸ்டி தின அணிவகுப்பிற்காக பாரிஸ் நெடுகிலும் ஆயிரக் கணக்கான சிப்பாய்கள் அணிவகுத்த போதும் போராட்டங்கள் வெடிக்குமென பீதியுற்று, பாதுகாப்பு படைகள், “மஞ்சள் சீருடையாளர்களுடன்” அரசியல் அனுதாபம் கொண்ட எவரொருவரும் சாம்ஸ் எலிசே வீதியில் அணிவகுப்பு பகுதியைச் சுற்றியுள்ள பாரீசின் பெரும்பாலான இடங்களுக்குள் நுழைவதில் இருந்து மூடிமறைப்பின்றி தடை விதித்தது.

அந்த அணிவகுப்புக்கு முன்னதாக, போராட்ட தலைவர்களாக இருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்ட நூற்றுக் கணக்கானவர்களை பொலிஸ் சுற்றி வளைத்தது. எரிக் துருவே, மாக்சிம் நிக்கோல் மற்றும் ஜெரோம் ரொட்ரிக்கேஸ் உட்பட முன்னணி "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, அந்த விழா முடியும் வரையில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் பொலிஸால், பாரீசின் 18 ஆவது வட்டாரத்தில் ஒரு பொலிஸ் நிலையத்திற்கு அருகே பயன்பாடற்ற ஒரு கிடங்கு பகுதியில் சுருள் சுருளான முள்வேலிகள் அமைக்கப்பட்ட ஒரு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

எவ்வாறிருப்பினும் பாஸ்டி தின அணிவகுப்பின் போது சாம்ப்ஸ் எலிசே வீதியில் மோட்டார் வாகனத்தில் பவனி வந்த மக்ரோனை நோக்கி பெருந்திரளான மக்கள் வெறுப்பு கூச்சலுடன் ஏளனப்படுத்தினர்.

பிரெஞ்சு அரசாங்கம் இப்போது பொலிஸ் வன்முறையை இன்னும் கூடுதலாக தீவிரப்படுத்துவதற்கு பச்சைக்கொடி காட்டி வருகிறது. மஞ்சள் சீருடை போராட்டங்களை வன்முறையாக ஒடுக்குவதில் பாத்திரம் வகித்ததை அங்கீகரித்து மக்ரோன் அரசாங்கம் கடந்த மாதம் 9,000 இக்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளுக்கு "மஞ்சள் சீருடை" விருது வழங்கியதாக செய்தி வலைத் தளம் Médiapart இவ்வாரம் தகவல் வெளியிட்டது.

விருது பெற்றவர்களில் Grégoire Chassaing உம் உள்ளடங்குவார், இவர் ஜூன் 22 இல் நாந்தேர் இசை விழாவில் பொலிஸ் வேட்டை நடத்துவதற்கு பொறுப்பேற்றிருந்த பொலிஸ் ஆணையர் ஆவார், அந்த சம்பவத்தில் தான் 24 வயதான Steve Caniço காணாமல் போனார் மற்றும் மூழ்கி இறந்து போனதாக அனுமானிக்கப்படுகிறார்; நீஸில் அமைதியாக போராடிய 73 வயதான "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர் Geneviève Legay அண்மித்து கொல்லப்படுவதற்கான பொலிஸ் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய Rabah Souchi; மார்சைய்யில் Zinab Redouane இன் மரணத்தில் சம்பந்தப்பட்ட கலகம் ஒடுக்கும் பொலிஸ் பிரிவின் தலைவர் Bruno Félix ஆகியோரும் விருது பெற்றவர்களில் உள்ளடங்குவர்.