ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Tamil Nadu government bans strikes in auto component industries

வாகன உதிரிப்பாக தொழில்துறை வேலைநிறுத்தங்களை தமிழ்நாடு அரசு தடை செய்கிறது

By Arun Kumar and Kranti Kumara 
6 July 2019

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் வணிக சார்பு அரசாங்கம் ஜூன் 25 அன்று பிறப்பித்த ஒரு உத்தரவு, வாகன உதிரிபாகங்கள் உற்பத்தித் தொழில்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை அடிப்படையிலேயே தடை செய்கிறது.

ஆளும் அஇஅதிமுக கட்சி, மாநிலத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வாகன உதிரிபாகங்கள் உற்பத்தித் தொழில்துறைகளின் ஒட்டுமொத்த வரம்பையும் “பொது பயன்பாட்டு சேவைகள்” என்று வகைப்படுத்துவதன் மூலம் இந்த நடவடிக்கையை திணித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு மாநில கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது,  இது தேசிய தொழிலாளர்கள் சட்டமான தொழில்துறை விவகார சட்டம், 1947 (IDA) இன்படி, “பொது நலன்” குறித்து செய்யப்பட்டது என்றவர் குறிப்பிட்டார்.

மாபெரும் நாடுகடந்த பெருநிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற மற்றும் அவற்றின் விருப்பத்திற்குரிய முகவராக இருக்கும் அஇஅதிமுக அரசாங்கம், பெரியளவில் சுரண்டலுக்குள்ளான வாகன மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலாளர்கள் சென்ற ஆண்டில் நடத்திய வெடிப்புறும் வகையிலான மற்றும் பரவலான போராட்டங்களின் பின்னணியில் இந்த இரும்புப் பிடியிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டில், குறிப்பாக வாகன மற்றும் வாகன உதிரிபாகத் தொழில்துறைகளில் முழு அளவிலான போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் வெடித்தன. மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களான யமஹா மோட்டார்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்ட் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி நிறுவனமான மியோங் ஷின் இந்திய தானியங்கி (Myoung Shin India Automotive - MSI) ஆகியவற்றில் பெரியளவில் வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டதுடன், அவையனைத்தும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தன. இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் (CPM) உடனிணைந்த தொழிற்சங்கமான CITU, இந்த வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்துவதன் மூலம் அவற்றை ஒரு முட்டுச்சந்துக்கு இட்டுச் சென்றது. இறுதியில், தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும்படியும், மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு அஇஅதிமுக அரசாங்கத்தையும் நீதிமன்றங்களையும் நம்பும்படியும் அவர்கள் வலியுறுத்தினர்.

வேலை செய்வதற்கு முன்னர் தொழிலாளர்களின் செல்போன்களை அடாத்தாக பறித்து வைப்பது, புகார்களை அளிக்க மனிதவள பிரதிநிதிகளை தொழிலாளர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்க மறுப்பது, மற்றும் கூடுதல் நேர வேலைகளை பதிவு செய்யாத தவறான நேர பதிவு இயந்திரங்களின் பயன்பாடு போன்ற நிர்வாக முறைகேடுகளால் இந்த நடவடிக்கைகள் தூண்டப்பட்டன.

யமஹா மோட்டார்ஸில் தங்களது சொந்த, சுயாதீனமான தொழிற்சங்கத்தை உருவாக்க கிளர்ச்சிகளை தொடங்கியதற்காக முக்கிய வேலைநிறுத்த தலைவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சில நேரங்களில் இத்தகைய வேலை நடவடிக்கைகள் மாநிலத்தில் தானியங்கி மோட்டார் வாகன உற்பத்தியை முடக்கியதுடன், உற்பத்தியாளர்களிடமிருந்து புகார்கள் வரும் நிலைக்கு இட்டுச் சென்றது.

தமிழ்நாடு உயரடுக்கின் தரப்பிலான இந்த கடுமையான நகர்வுகள், தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த ஏற்றுமதி மதிப்பான 47 பில்லியன் டாலரில் 13 சதவிகித (6 பில்லியன் டாலர்) தானியங்கி மோட்டார் வாகன ஏற்றுமதிகளை உள்ளடக்கிய தானியங்கி மோட்டார் வாகன உற்பத்தியின் ஒரு முக்கிய உலக மையமாக இந்த பிராந்தியம் உருவெடுத்துள்ள நிலைமைகளின் கீழ் நிகழ்த்தப்பட்டுள்ளன.

ஆணை விதிகளின் கீழ், தானியங்கி வாகன உதிரிபாகப் பிரிவின் தொழிலாளர்கள், IDA இல் பொது பயன்பாட்டு சேவையை கையாளும் தொடர்புடைய பிரிவின் கீழ் தற்போது நிர்வகிக்கப்பட உள்ளனர். உண்மையில், இரயில்வே, தபால் மற்றும் தந்தி, கப்பல்துறைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களை “பொது பயன்பாட்டு சேவைகள்” என சட்டம் வரையறுக்கின்றது என்றாலும், அரசாங்க அதிகாரத்தை அஇஅதிமுக அப்பட்டமாக தவறாக பயன்படுத்துவது 1947 சட்டத்தால் பெயரளவில் அனுமதிக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் ஒரு ஆறு வார கால அறிவிப்பை வழங்காவிட்டால், பொது பயன்பாட்டு சேவைகளில் எந்தவொரு வேலைநிறுத்தம் செய்யப்படுவதையும் 1947 சட்டம் தடை செய்கிறது. இந்த காலகட்டத்தில், தலையீடு செய்து, பல ஆண்டுகள் தொழிலாளர் நீதிமன்றங்களில் பிணைக்கப்படக்கூடிய கட்டாய மத்தியஸ்தத்தை திணிப்பதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது.

பெருநிறுவன நலன்களின் நேரடி சேவகர்களாக திகழ்வதில் தமிழ்நாடு அதிகாரிகளின் பங்கு பற்றி, தமிழ்நாட்டில் உற்பத்தித் துறையில் “முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக” வேலைநிறுத்தத் தடை விதிக்கப்பட்டது என்று செய்தியாளர்களிடம் ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் மூலம் நிரூபிக்கப்பட்டன.

நீதிமன்றங்களில் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து தொழிற்சாலை நிர்வாகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மற்றொரு பிரபலமான மூத்த வழக்கறிஞர் இன்னும் வெளிப்படையாக பேசினார். இந்திய நாளிதழ் Hindu இற்கு வழங்கிய கருத்துக்களில் அவர் இவ்வாறு அறிவித்தார்:

“மிக சமீபத்திய காலங்களில், தொழிற்சங்கங்கள் திடீர் வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவதற்கான போக்கு உள்ளது. மாநில அரசின் இந்த அறிவிப்பு ஸ்ரீ பெரும்புதூர் தானியங்கி மோட்டார் வாகன மையத்தில் வேலைநிறுத்தத்தைத் தடுக்கும். இது தானியங்கி மோட்டார் வாகன திணைமண்டலத்தில் தொழில்துறை அமைதியை உறுதி செய்யும் என்பதுடன், தொழிற்சங்கங்கள் அவற்றின் பொறுப்பை புரிந்துகொள்ளச் செய்யும், மேலும் அவை மத்தியஸ்தம் செய்து பிரச்சினையை இணக்கமாக தீர்ப்பதையும் உறுதி செய்யும். [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]

இந்த ஆணை ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்று அரசாங்கம் அறிவித்த போதிலும், பெருநிறுவன ஊடகங்கள் இந்த காலத்தை காலவரையின்றி நீட்டிக்க முடியுமென ஒப்புக் கொண்டுள்ளன.

கடந்த இரண்டு தசாப்தங்களாக அஇஅதிமுக மற்றும் அதன் அரசியல் போட்டியாளரான திமுக இரண்டினது அடுத்தடுத்த ஆட்சிகளின் கீழ், ஜப்பானிய, அமெரிக்க மற்றும் கொரிய நிறுவனங்களுக்கான மலிவான தொழிலாளர் புகலிடமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது. அஇஅதிமுக அதன் மறைந்த எதேச்சதிகார தலைவர் ஜெயலலிதாவின் கீழ், 1990 களின் மத்தியில் இருந்து, மலிவான மற்றும் நம்பகமான மின்சார விநியோகம், மூலதன மானியங்கள் மற்றும் அதி மலிவான தொழிலாளர் சக்தி ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மாபெரும் நாடுகடந்த பெருநிறுவனங்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை முடுக்கிவிட்டது.

அதன் விளைவாக, ஃபோர்ட், ஹூண்டாய், நிசான், யமஹா மற்றும் பல்வேறு செல்வ வளமிக்க 500 நிறுவனங்கள் உட்பட, சர்வதேச உற்பத்தியாளர்களுக்கான ஒரு தேர்வு இடமாக இந்த மாநிலம் மாறிவிட்டது.

மாநிலத்தின் தலைநகரமான சென்னை (முன்னர் மெட்ராஸ்) மற்றும் அதன் புறநகரப் பகுதியான செங்கல்பட்டு-ஒரகடம் தொழில்துறை பகுதிகள் தற்போது இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகின்றன. அரசாங்கத்தைப் பொறுத்த வரை, 2017-18 ஆம் ஆண்டில் இந்தியாவின் வாகன மற்றும் வாகன உதிரிபாக ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பங்கை இந்த மாநிலம் கொண்டிருந்ததாக கணக்கிட்டது. மேலும் இந்த அரசு, 1.71 மில்லியன் கார்களையும், ஒரு நிமிடத்திற்கு மூன்று கார்களையும், ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு ட்ரக்கையும் தயாரிப்பதற்கான ஒரு நிறுவப்பட்ட உற்பத்தித் திறனை கொண்டிருப்பதாக பெருமை பேசிக் கொள்கிறது.

38 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு, இந்தியாவில் எந்த மாநிலமும் கொண்டிராத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான அத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களைக் கொண்டுள்ளது. சிறப்பு உதவிகளையும், மானியங்களையும் மற்றும் வரி விலக்குகளையும் நாடுகடந்த நிறுவனங்கள் அனுபவிக்கின்ற போதிலும், இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வேலை நிலைமைகளை கடுமையாக நசுக்குவதற்கும் சுற்றுச்சூழலை நச்சுத்தன்மையாக்குவதற்கும் அவற்றிற்கு சிறப்பு அனுமதிகளையும் வழங்குகின்றன.

இவ்வாறாக, அஇஅதிமுக, இந்த கொள்கைகள் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவை என்று கூறி, பன்னாட்டு நிறுவனங்களின் இலாப நலன்களைப் பூர்த்தி செய்வதை தனது முக்கிய அரசியல் கடமையாக கருதுகிறது.

பெருவணிகங்களின் தீவிர ஆதரவாளரும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கொடிய எதிரியுமான இந்து மேலாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி தேசிய அரசாங்கத்தின் நோக்குநிலையும் இதுபோன்று தான் உள்ளது.

இந்திய ஆளும் உயரடுக்கின் குறிக்கோள் இந்தியாவை உலகின் வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் முதன்மை மையமாக மாற்றுவதாகும். 2018 இல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அண்மித்து 10 சதவிகித அளவிற்கு பங்களிக்கும் வகையிலான தானியங்கி மோட்டார் வாகன மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தியை உள்ளடக்கி, நாட்டிலிருந்து 4 மில்லியனுக்கு அதிகமான வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

பூகோள அளவிலான உற்பத்தியாளர்களை ஈர்க்கும் மையமாக இந்தியாவை பராமரிப்பதற்கு, பெருவணிக பிஜேபி, அஇஅதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உட்பட, இந்திய ஆளும் உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளும், இந்திய தொழிலாளர்களை மிருகத்தனமான வேலை நிலைமைகளுக்கு கட்டாயமாக அடிபணியச் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கின்றன. அதனால்தான் வடக்கு மாநிலமான ஹரியானாவில் மாருதி சுசூகி வாகனத் தொழிலாளர்கள் மீது வெட்கமின்றி சுமத்தப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில், மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் ஒட்டுமொத்த தலைமையும் உட்பட, 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதன் மூலம் முன்மாதிரியான தண்டனை வழங்குவதற்காக அவர்கள் குறிவைக்கப்பட்டனர்.

மோடி, பாராளுமன்றத்தில் சவால் செய்ய முடியாத பெரும்பான்மையை வென்ற பின்னர், பெருமளவில் வணிக சார்பு நடவடிக்கைகளை திணிப்பார் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகங்கள் இரண்டும் தற்போது எதிர்பார்த்திருக்கின்றன.

அதிகாரத்திற்கு வந்தவுடன், மோடியின் தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் செய்தியாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்:

“தொழிலாளர் சீர்திருத்த திட்ட நிரலை நிறைவேற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம். அவர்கள் [வெளிநாட்டு முதலீட்டாளர்கள்] மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்கள் இருக்கும். பெரும் எண்ணிக்கையிலான சீர்திருத்தங்களை நீங்கள் காண்பீர்கள், உங்களுக்கு அதற்கு நான் உத்தரவாதம் அளிக்க முடியும். நாங்கள் மிகவும் நேர்த்தியாக களத்தில் இறங்கி அடிக்கப் போகிறோம்.”

சாதாரண மொழியில், தொழிலாளர் “சீர்திருத்தங்கள்” என்பது பணி நிலைமைகளின் எந்தவொரு சட்டரீதியான பாதுகாப்பையும் முற்றிலுமாக அகற்றுவதைக் குறிக்கிறது என்பதுடன், பெருவணிகங்கள் இந்திய தொழிலாளர்களைத் தடையின்றி சுரண்டுவதற்கு அனுமதிக்கும் வகையில் ஊதியம் வழங்கும்.

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் (CPM) உடனிணைந்த தொழிற்சங்கமான CITU (Center of Indian Trade Union) இன் முதன்மை தலைவரான எஸ். கண்ணன், Hindu நாளிதழில் அவர் வழங்கிய கருத்துக்களில் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாக உறுதியளித்தார். தானியங்கி மோட்டார் வாகனத் தொழில் ஏற்கனவே ஒரு பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்கப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டார்.  தற்போது, வாகன உதிரிபாகங்கள் தொழில் துறைக்கும் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. “நாம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கையை எதிர்ப்போம். அதாவது இதன் அர்த்தம் தொழிலாளர் குறைகளுக்கு தாமதமான நீதி கிடைப்பதாகும்,” என்றவர் கூறினார்.

ஆயினும், சிபிஎம் மற்றும் அதன் சகோதரக் கட்சியான சிபிஐ (Communist Party of India-CPI) இரண்டும், திமுக அல்லது அஇஅதிமுக எதனுடனாவது நீண்ட காலமாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. 2001 இல், அவை இரண்டுமே கடுமையான தொழிலாள வர்க்க எதிர்ப்பு ஜெயலலிதா அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்தன.

இரண்டு கட்சிகளும் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களான CITU மற்றும் சிபிஐ கட்சியின் AITUC (All India Trade Union Congress) என அனைத்தும் இந்தச் செயலை எதிர்க்கவும் தோற்கடிக்கவும் எந்த திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்திய தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு அவர்களால் முடியாது என்பதையும் மேலும் அதற்கு அவர்கள் விரும்பவில்லை என்பதையும் நிரூபித்துள்ளனர்.

இந்திய முதலாளித்துவத்தின் நவ-தாராளவாத திட்ட நிரலுக்கு – சிக்கன நடவடிக்கை, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயன்பாட்டை அதிகரித்தல், தனியார்மயமாக்கல் மற்றும் கட்டுப்பாட்டை தளர்த்துதல் உள்ளிட்ட - இருக்கும் ஸ்ராலினிச எதிர்ப்பு என்பது முற்றிலும் போலியானது, நடைமுறையில் அவர்கள் எப்போதுமே இந்த அல்லது அந்த வலதுசாரி முதலாளித்துவக் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்பதுடன், அவர்களை முற்போக்கானவர்கள் என்றும் ஊக்குவிக்கிறார்கள். கூடுதலாக, 33 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தின் அவர்களது பழைய கோட்டையில் அதிகாரத்தில் இருந்தபோதும் மற்றும் தற்போது அவர்கள் ஆட்சியில் இருக்கும் தென் மாநிலமான கேரளாவிலும், “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகளை இரு கட்சிகளுமே ஊக்குவித்து வந்துள்ளன.