ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Tanks on the streets of Washington, DC for the Fourth of July

ஜூலை நான்காம் தேதிக்காக வாஷிங்டன் டிசியின் வீதிகளில் டாங்கிகள்

Eric London
2 July 2019

ஜூலை 4 ஆம் தேதி காலையில், வாஷிங்டன் டிசி நகர எல்லை இராணுவத் தளங்கள், இராணுவ நடவடிக்கையில் ரீங்காரமிடும்.

சுதந்திர தினத் திட்டங்கள் மீது இராணுவத்தினுள் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு மேலோங்கினால், M1A1 அப்ராம்ஸ் டாங்கி படைப்பிரிவுகள் தேசிய மண்டபத்தை நோக்கி பொடொமக் (Potomac) ஆற்றைக் கடந்து செல்ல தயாராகி விடும், அதேவேளையில் நீலக்கடல் ஏஞ்சல் போர்விமான ஆர்ப்பாட்ட படைப்பிரிவு, கடற்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவுகள் மற்றும் F-35 கண்டறியவியலா போர்விமானங்கள் ஆகியவை மதியம் கேபிட்டல் ஹில்லை (தலைமைச் செயலகம்) நோக்கி பறக்க தயாராகிவிடும்.

அந்தி சாயும் முன்னதாக, தாக்கும் ஜெட் விமானங்களின் உறுமல் பின்புலத்தில் ஒலிக்க, கூடியிருக்கும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு ட்ரம்ப் தேசியளவில் தொலைக்காட்சியில் உரை வழங்குவார்.

வெள்ளை மாளிகையிலிருந்து காங்கிரஸைப் பிரிக்கும் நிலப்பகுதியில் இராணுவப் படைகளின் இந்த காட்சிப்படுத்தல், நீண்ட நாட்களாக ட்ரம்பும் அவர் பாசிச ஆலோசகர்களும் திட்டமிட்டு வந்த ஓர் ஆழமான அரசியல் ஆத்திரமூட்டலாகும். மரபார்ந்த சுதந்திர தின வானவேடிக்கை நிகழ்ச்சிகளை, நடைமுறையளவில் ஓர் இராணுவ அணிவகுப்பு அம்சங்களைக் கொண்ட ஒரு பிரச்சார-பாணியிலான பேரணியைக் கொண்டு பிரதியீடு செய்ததன் மூலமாக, ட்ரம்ப் அவரின் பலத்தைப் பரிசோதித்து வருகிறார்.

இராணுவம் மீதான நிர்வாக பிரிவின் தனிப்பட்ட அதிகாரத்தை உறுதிப்படுத்துவதன் மூலமாக, ட்ரம்ப் எதேச்சதிகார ஆட்சி மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை நீக்குவதற்கான வரலாற்று பாதையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே “தேசிய அவசரகாலநிலை" பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தை ட்ரம்புக்கு வழங்கியுள்ளதும் மற்றும் அவரின் எல்லையோர ஒடுக்குமுறைக்கு நிதி வழங்குவதற்கு உரிய பில்லியன்களை வழங்கியுள்ளதுமான சட்டப் பேரவை, இப்போது தலைமை செயலக (கேபிட்டல்) கட்டிடத்தின் நிழலில் டாங்கிகளின் சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறது. கடந்த வாரம், ஜனநாயகக் கட்சி பின்வருவனவற்றுக்கு வாக்களித்தது (1) ட்ரம்பின் புலம்பெயர்ந்தோர் மீதான ஒடுக்குமுறைக்கான நிதியாக 4.9 பில்லியன் டாலரை அவருக்கு வழங்குவதற்கு, (2) மிகப் பெரியளவில் முன்னொருபோதும் இல்லாதளவில் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு நிதி வழங்குவதற்கு, மற்றும் (3) ஒரு எல்லைச் சுவர் கட்டுவதற்காக ட்ரம்ப் பென்டகனிடம் இருந்து பெற்ற பணத்தை "மீண்டும் வழங்குவதற்கு". ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டுமே ஒரே சமூக நலன்களையே, அதாவது நிதி மூலதனத்தையே பிரதிநிதித்துவம் செய்வதால், ஜனநாயகக் கட்சி ட்ரம்பின் நடவடிக்கைகளை எதிர்க்கத் தகைமையற்று உள்ளது.

ட்ரம்ப் அவரின் ஜூலை 4 திட்டங்களை பெப்ரவரியில் அறிவித்தார், அந்நிகழ்வு "அமெரிக்காவுக்கு வீரவணக்கம்" என்றழைக்கப்படும் என்றும், அது "உங்கள் விருப்பத்திற்குரிய ஜனாதிபதி, எனது, உரையை" கொண்டிருக்கும் என்றும் ட்வீட் செய்திருந்தார்.

அந்த விடுமுறைக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களுக்கு முன்னதாக, வெள்ளியன்று ட்ரம்பின் உள்துறை செயலகம் அறிவிக்கையில், அந்நிகழ்வு தலைநகரில் இராணுவ விமான சாகசங்களை உள்ளடக்கி இருக்குமென முன்னொருபோதும் இல்லாத அறிவிப்பை வெளியிட்டது. மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, உள்துறை செயலர் டேவிட் பெர்ன்ஹார்ட் கூறுகையில் அதில் "நமது தலைமை தளபதியின் உரை" இடம் பெறும் என்றார். ட்ரம்ப், டாங்கிகள் மற்றும் ஏனைய இராணுவ வாகனங்களையும் கோரியிருப்பதாக திங்களன்று பத்திரிகைகள் அறிவித்தன.

ட்ரம்பின் ஜூலை 4 நிகழ்வுக்கான தயாரிப்புகள் பின்னோக்கி ஜனவரி 2017 வரையில் நீள்கிறது, அப்போது அவரின் பதவியேற்பு குழு அவரின் பதவியேற்பு அணிவகுப்பில் இராணுவ சிப்பாய்களையும் மற்றும் தளவாடங்களையும் உள்ளடக்க மல்லுக்கட்டினர். பதவியேற்பு விழாவுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, ட்ரம்ப் வாஷிங்டன் போஸ்ட் இக்குக் கூறுகையில், “நாம் நமது இராணுவத்தைக் கட்டமைத்து வரும் விதத்தை மக்களுக்குக் காட்ட இருக்கிறோம், நாம் நமது இராணுவத்தைக் காட்ட இருக்கிறோம். இராணுவம் பென்சில்வேனியா வீதியில் அணிவகுக்கும்,” என்றார்.

இந்த காட்சிப்படுத்தலை நடத்துவதில் இருந்து இராணுவம் ட்ரம்பை தடுத்து நிறுத்தியது என்றாலும், ட்ரம்ப் அவரின் பதவியேற்பு உரை வழங்கிய போது சிப்பாய்களை அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வைத்துக் கொண்டார்.

இடைகாலத் தேர்தல்களுக்குப் பின்னர், ட்ரம்ப், போர் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சிப்பாய்களை மன்னித்து விட முன்மொழிந்தும், கடற்படையின் சிறு போர்க்கப்பலான —ட்ரம்பிடமிருந்து பிரிந்துபோன குடியரசுக் கட்சி போட்டியாளரின் பெயரில் பகுதியாக பெயரிடப்பட்ட— USS ஜோன் மெக்கெயினை ஜனாதிபதியின் பார்வையிலிருந்து அகற்றி நகர்த்துவதற்கு கோரியும், இராணுவத்தின் மீதான அவரின் தனிப்பட்ட அதிகாரத்தைத் தொடர்ந்து சோதித்து பார்த்து வந்தார்.

எவ்வாறிருப்பினும் ட்ரம்ப் வெறுமனே நெறிபிறழ்ந்த விதிவிலக்கானவர் இல்லை வேறுவிதத்தில் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கானவரும் இல்லை. அவர் ஒரு நீடித்த நிகழ்வுபோக்கின் பிற்போக்குத்தனமான விளைபொருளாவார்.

ஜூன் 1991 இல் தான் கடைசி முறையாக வாஷிங்டன் வழியாக டாங்கிகளும் துருப்புகளும் சென்றன, அப்போது 8,000 சிப்பாய்கள் ஈராக் மீதான முதலாம் அமெரிக்க படையெடுப்பு நிறைவுற்றதைக் குறிக்கும் வகையில், "தேசிய வெற்றி விழா" என்றழைக்கப்பட்டதில் அணிவகுத்தனர். அப்போதும், இப்போது போலவே, இராணுவ அணிவகுப்பு நனவுபூர்வமாக அரசியல் முனையை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்தது. 1991 அணிவகுப்பு சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு மத்தியில் நடந்தது, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒட்டுமொத்த உலகின் மீதும் அதன் சவாலுக்கிடமற்ற புவிசார் அரசியல் மேலாதிக்கத்தை, "ஒருமுனை தருணம்" என்று முத்திரையிட்டு, அறிவித்தது.

அந்த இராணுவ அணிவகுப்புக்கு முந்தைய சில வாரங்களில், ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யு. புஷ் குறிப்பிடுகையில், கூடவோ குறையவோ ஓர் இராணுவ வெற்றியானது பேரழிவுகரமான வியட்நாம் போருக்குப் பிந்தைய தசாப்தங்களில் பரந்தளவில் நிலவிய போர்-எதிர்ப்புணர்வை நீக்கிவிட்டது என்ற நம்பிக்கையைக் குறிப்பிடும் வகையில், “இறுதியில் நாம் வியட்நாம் நோயின்சுவடை அழித்துவிட்டோம்,” என்றார். வியட்நாம் போரில் மூன்று மில்லியன் வியட்நாமியர்களும் 55,000 அமெரிக்க சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.

அந்த அணிவகுப்பானது அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வின் அனைத்து கூறுபாடுகளிலும் திட்டமிட்டு இராணுவத்தை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியின் தொடக்கத்தைக் குறித்தது. முப்பதாண்டுகால நிரந்தர போருக்குப் பின்னர், அமெரிக்கா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா எங்கிலும் சமூகப் படுகொலைகளை நடத்தியுள்ளதுடன், ஒரு சீரழிவு மாற்றி ஒரு சீரழிவை உருவாக்கி உள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய அந்தஸ்தில் நீண்டகால வீழ்ச்சியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா ஒவ்வொரு முனையிலும் போட்டியாளர்களைக் காண்கிறது மற்றும் கவனிக்கிறது, அதேவேளையில் உள்நாட்டில் அதிகரித்து வரும் சமூக அமைதியின்மையை முகங்கொடுக்கிறது. ஆளும் வர்க்கம் வெறித்தனமாக உலக போருக்கும் உள்நாட்டு ஒடுக்குமுறைக்கும் தயாரிப்பு செய்து வருகிறது.

ட்ரம்ப் வெறுமனே ஒரு நெறிபிறழ்ந்த விதிவிலக்கானவர் இல்லை என்பதை எதிர்கட்சிகளின் பெயரளவிற்கான விடையிறுப்பே எடுத்துக்காட்டுகிறது. ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே, தலைநகரில் இராணுவத்தை அணிதிரட்டுவதற்கான ட்ரம்பின் முயற்சிகள் முன்நிறுத்திய அபாயத்தை ஜனநாயகக் கட்சி பொதுமக்களிடம் குறைத்துக் காட்டியது.

இடைக்கால தேர்தல்களுக்குப் பின்னர் பென்சில்வேனியா வீதியில் இராணுவம் அணிவகுப்பதை ட்ரம்ப் முன்மொழிந்த போது, ஜனநாயக கட்சியினர் அதுபோன்ற இராணுவ நடவடிக்கைகளின் அரசியல் உள்நோக்கங்கள் மீது கவனம் குவிக்க மறுத்தது, அது குறித்து அவர்கள் மிகவும் நன்றாக அறிந்திருந்தார்கள். ஆனால் அதற்கு பதிலாக ஜனநாயகக் கட்சியினர் அந்த அணிவகுப்புக்கு "அதிக செலவு" செய்யப்படுவதாக வாதிட்டார்கள்.

பெருநிறுவன ஊடகங்கள் கடமை உணர்வோடு இந்த நேர்மையற்ற சொல்லாடலை ஒட்டிச் சென்றன, வீதிகளில் டாங்கிகள் செல்வது அந்நகரின் சாலைகளை சேதப்படுத்துமென அவை அதை எதிர்த்தன! நேற்று, ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான அந்நகர கவுன்சில், “டாங்கிகள் ஆனால் டாங்கிகள் இல்லை,” என்று வெற்றுத்தனமான வார்த்தை நகையாடலை ட்வீட்டரில் பதிவிட்டது.

ட்ரம்ப் நகர்வுகளின் சர்வாதிகார தன்மையை ஜனநாயகக் கட்சியினர் குறைத்துக் காட்டுவதற்கான நிஜமான காரணம், அடிமட்டத்திலிருந்து வரும் எதிர்ப்பைக் குறித்த அவர்களின் அச்சமாகும். ட்ரம்பின் ஜூலை 4 ஆம் தேதி திட்டங்களைப் பொறுத்த வரையில், நியூ யோர்க் டைம்ஸ் எழுதுகையில் "ஒரு ஜனநாயகக் கட்சியாளரும் பிரதிநிதிகள் சபையில் கொலம்பியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவருமான எலினொர் ஹோல்ம்ஸ் நோர்டன் கூறுகையில், ஜனாதிபதியின் பிரசன்னம் ட்ரம்ப்-விரோத போராட்டங்களைத் தூண்டக்கூடிய அளவுக்கு ஒரு குடும்ப நிகழ்வாக அந்தளவுக்கு அரசியல்மயப்படுத்தப்படுமோ என்று அவர் கவலை கொண்டிருந்ததாக தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டது.

டைம்ஸ் பத்திரிகை ஹோல்ம்ஸ் நோர்டனை மேற்கோளிட்டது: “மக்கள் கோபமடைவார்கள். இது முன்னொருபோதும் இல்லாத மிகக் கோபமான ஜூலை 4ஆக இருக்கப் போகிறது. ஓர் அரசியல் பிரமுகர் ஜூலை நான்கைக் கைப்பற்றப் போகிறார் என்பதை இட்டு மக்கள் மிகவும் கோபமடைய போகிறார்கள், ஆகவே தங்களின் வெறுப்புக்கு ஓர் அரசியல் வெளிப்பாட்டைக் காண வேண்டுமென நம்பும் பலரை நீங்கள் காணப் போகிறீர்கள்.”

நியூ யோர்க் டைம்ஸ் ஆசிரியர் குழு உறுப்பினர் Michelle Cottle இன் ஒரு ஜூன் அறிக்கையில் அவரும் இதே போல கவலை வெளியிட்டார், ட்ரம்ப் "மக்கள் ஒற்றுமை குறித்து முற்றிலும் அக்கறை கொள்ளவில்லை" என்பதோடு, அவரது நடவடிக்கைகள் "தேசிய பிளவுகளைத் தூண்டி" விட்டு வருகிறது. இதுபோன்ற அறிக்கைகள் ட்ரம்பின் பாசிசவாத நகர்வுகளுக்கு உடந்தையாய் உள்ள ஜனநாயகக் கட்சியையும் அம்பலப்படுத்துகின்றன.

பத்து மில்லியன் கணக்கானவர்கள், மிகச் சரியாகவே, ட்ரம்ப் நிர்வாகம் நடத்திய வரலாற்று குற்றங்களுக்காக "கோபமாக" உள்ளனர் என்பது உண்மையே. அவரின் சிறிய ஆதரவு அடித்தளத்திற்கு அப்பாற்பட்டு, ட்ரம்பின் சர்வாதிகார அச்சுறுத்தல்கள் மக்களின் பரந்த பெரும்பான்மை மக்களிடையே வெகுக் குறைந்த ஆதரவையே காண்கிறது.

வாஷிங்டனில் ஓர் இராணுவ அணிவகுப்புக்கான ட்ரம்பின் முன்மொழிவு, மக்கள் செல்வாக்கிழந்த, அதிகரித்தளவில் ஓர் எதேச்சதிகார ஆட்சி முறையின் பாகமாக உள்ளது. 2020 தேர்தல்களில் அவர் தோல்வி அடைந்தால் அந்த முடிவுகளை அவர் ஏற்கப் போவதில்லை என்று மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி உள்ளார்—இந்த உண்மையை முன்னணி ஜனநாயகக் கட்சியினர் நேர்மையின்றி ஒரு "நகைச்சுவையாக" குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் ட்ரம்ப், அமெரிக்காவை மற்றொரு நாசகரமான போருக்குள் இழுக்கும் விதத்தில், ஈரானை "துடைத்தழிக்க" “பெரும் படைகளை" பயன்படுத்த அச்சுறுத்தினார். அவர் நிர்வாகம், பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது அமெரிக்கா நடத்திய போர் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜை நாடு கடத்தி கொண்டு வந்து சிறையில் அடைக்க முயன்று வருகிறது.

ட்ரம்பின் ஜூலை 4 நிகழ்வானது, புலம்பெயர்ந்தோர் மீது 10 நகரங்களில் இராணுவ-பாணியிலான சோதனைகளைத் தொடங்க ஜூன் மாத மத்தியில் ட்ரம்ப் அமைத்த இரண்டு வாரகால இறுதிக்கெடு காலாவதி ஆவதற்கு முன்னதாக வருகிறது.

“தேசிய அவசரகாலநிலை" என்ற குடையின்கீழ் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட ஆயிரக் கணக்கான சிப்பாய்களுடன் சேர்ந்து, தேசியளவில்-ஒருங்கிணைக்கப்பட்ட சோதனைகள் இராணுவ நிலைநிறுத்தல்களுக்கான பேராபத்தையும், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, ஹோஸ்டன், நியூ ஓர்லென்ஸ், டென்வெர், சான் பிரான்சிஸ்கோ, அட்லாண்டா மற்றும் பால்டிமோர் உட்பட நாட்டின் மிகவும் மக்கள்தொகை நிறைந்த சில நகரங்களில் இராணுவ சட்டங்களை நிலைநிறுத்துவதற்கான பேராபத்தையும் உயர்த்துகின்றன.

பத்தாயிரக் கணக்கான புலம்பெயர்ந்த குழந்தைகள் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர், இதை மருத்துவர்களும் வழக்கறிஞர்களும் "கொடூர தடுப்பு சிறைமுகாம்கள்" என்றும் "சித்திரவதை மையங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளனர். புலம்பெயர்ந்த குடும்பங்களின் சடலங்கள் ரியோ கிராண்ட் கடற்கரை ஓரத்தில் ஒதுங்கி கிடக்கின்றன. ஆயிரக் கணக்கான எல்லை பாதுகாப்பு படையினர் முற்றிலும் பாசிசவாதிகளாக உள்ளதையும், நல்லதொரு வாழ்க்கைக்காக தங்களின் உயிரைப் பணயம் வைத்து வரும் நிராதரவான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் படுகொலை செய்வதைக் குறித்து எள்ளி நகையாடுவதையும் காட்டும் பேஸ்புக் பதிவுகளை நேற்று Propublica வெளியிட்டது.

ஜனநாயகக் கட்சியோ இராணுவ அணிவகுப்புகள் மீதான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை ஜனநாயக அடித்தளங்களில் எதிர்க்கவில்லை, மாறாக ட்ரம்பின் தனிநபர் ஜனாதிபதி ஆட்சிமுறையும் அவரின் முன்னுக்குப்பின் முரணான நடத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார்அரசியல் மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு தடைகளாக இருக்கின்றன என்பதற்காக எதிர்க்கிறது. ட்ரம்பை ரஷ்யாவின் கைக்கூலி என்று சித்தரிக்கவும் மற்றும் சமூக ஊடகங்களைத் தணிக்கை செய்யவும், இராணுவ-உளவுத்துறை முகமைகளது மற்றும் ஜனநாயகக் கட்சியினரினது நவ-மக்கார்த்தியிச முயற்சிகளும் சம அளவில் ஜனநாயக-விரோதமானவையே ஆகும்.

சர்வாதிகாரத்திற்கான முனைவை மிகைசுமையேற்றப்பட்ட மின்சுற்றுடன் ஒப்பிடலாமென ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். “மிகவும் அதிக ஏற்றம் பெற்ற வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளது தாக்கத்தின் கீழ், ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகள் எரிந்து போகும் அல்லது வெடித்துவிடும்,” என்றார். அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் உலகளாவிய மற்றும் உள்ளார்ந்த மோதல்கள் தான் அமெரிக்க ஜனநாயகத்தைப் பேராபத்தானரீதியில் பலவீனப்படுத்தி வருகிறது.