ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN Rapporteur on Torture Nils Melzer exposes propaganda and censorship in Assange reporting

சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸர், அசான்ஜ் குறித்த அறிக்கையில் பிரச்சாரத்தையும் தணிக்கையிடலையும் அம்பலப்படுத்துகிறார்

By Chris Marsden 
1 July 2019

சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸரின் மே 31 அறிக்கை உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கிய ஜூலியன் அசான்ஜ் மீதான “கூட்டு துன்புறுத்தலை” உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர கோருகிறது.

அசான்ஜ், “கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான வகையில் நடத்தப்படுதல் அல்லது தண்டனைக்குட்படுத்தப்படுதல் என படிப்படியாக கடுமையான துன்புறுத்தல்களுக்கு பல ஆண்டுகளாக வேண்டுமென்றே உட்படுத்தப்பட்டது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, இதன் ஒட்டுமொத்த விளைவுகளை உளவியல் சித்திரவதை என்று மட்டுமே விவரிக்க முடியும்” என்று மெல்ஸர் குறிப்பிட்டார்.

“போர், வன்முறை மற்றும் அரசியல் துன்புறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் 20 ஆண்டுகளாக பணியாற்றியதில், மனித கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக அக்கறை காட்டாததோடு, ஒரு தனி நபரை வேண்டுமென்றே இவ்வளவு நீண்ட காலமாக தனிமைப்படுத்துவதற்கும், பூதாகரமாக அவரை சித்தரிப்பதற்கும் மற்றும் துன்புறுத்துவதற்கும் ஜனநாயக நாடுகள் இவ்வாறு ஒரு கும்பலாக கூட்டு சேர்வதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சென்ற புதன்கிழமை சர்வதேச தினம் அனுசரிப்பதற்கான முன்னேற்பாடுகளில், மெல்ஸர், “ஜூலியன் அசான்ஜ் மீதான சித்திரவதையை அம்பலப்படுத்துதல்” என்று ஒரு தலையங்க எதிர்ப்புறக் கட்டுரை எழுதினார். மேலும், கார்டியன், டைம்ஸ், ஃபினான்சியல் டைம்ஸ், சிட்னி மார்னிங் ஹெரால்ட், ஆஸ்திரேலியன், கான்பெர்ரா டைம்ஸ், டெலிகிராஃப், நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுன்டேசன், மற்றும் நியூஸ்வீக் உள்ளிட்ட முன்னணி செய்தி வெளியீடுகளுடன் சமரசமற்ற எதிர்ப்புச் செய்தியை வழங்கினார்.


சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளரான பேராசிரியர் நில்ஸ் மெல்ஸர் நியூ யோர்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் ஒரு செய்தியாளர்கள் மாநாட்டில் பேசுகிறார் [ஐக்கிய நாடுகள் சபைக்கு நன்றி]

சித்திரவதை தொடர்பான உலகின் முன்னணி சட்ட வல்லுநர்களில் ஒருவரான மெல்ஸரின் கட்டுரையை Medium என்ற இணைய தள வலைப் பதிவு தவிர அனைவரும் பிரசுரிக்க மறுத்துவிட்டனர்.

அவரது தலையங்க எதிர்ப்புறக் கட்டுரை நிராகரிக்கப்பட்டதற்கு செய்தியிதழ் ஆசிரியர்கள் வேறுபட்ட காரணங்களை அவரிடம் கூறியதாக RT க்கு மெல்ஸர் தெரிவித்தார். “அவர்களில் சிலர் அவர்களது செய்தி திட்ட நிரலுக்கு இது அவ்வளவு போதுமானதாக இல்லை என்றனர், மேலும் சிலர் அவர்களது ஆர்வத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதியாக இது இல்லை என்றனர்,” என்று கூறினார்.

அவர்களது சாக்குப்போக்குகள் குறித்து மெல்ஸர் அலட்சியத்தை வெளிப்படுத்தி, அதே ஊடக நிர்வாகிகள் தான் அசான்ஜ் பற்றிய கதைகளை மகிழ்ச்சியாக வெளியிட்டனர், அதாவது “அவரது பூனை மற்றும் அவரது ஸ்கேட்போர்ட் பற்றிய… அவர் சுவர்களில் சாணத்தைப் பூசினார் என்ற குற்றச்சாட்டுக்கள் பற்றிய… கதைகளாக அவை இருந்தன. ஆனால், இந்த பொது கதையை பகிரங்கப்படுத்துவதற்கு உண்மையில் முயற்சிக்கின்ற மற்றும் அதன் பின்னால் உள்ள உண்மைகளை உண்மையில் எடுத்துக்காட்டுகின்ற ஒரு தீவிரமான செய்தியை நீங்கள் வழங்கும்போது அது குறித்து அவர்கள் அக்கறை கொண்டிருப்பதில்லை” என்று குறிப்பிட்டார்.

கிரகத்தின் மிகவும் பிரபலமான அரசியல் கைதியைப் பாதுகாப்பதற்காக எழுதப்பட்ட மெல்ஸரின் செய்திக்கு இருந்த “செய்திகளுக்கான நன்மதிப்பு” பற்றி சந்தேகம் இல்லை. பெருநிறுவன மற்றும் அரசு ஊடக செய்தி வெளியீடுகள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க் குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை, அவர்கள் வெளியிட முடியாத செய்திகளை வெளியிட்ட ஒரு செய்தியாளருக்கு எதிராக உருவாகிக் கொண்டிருக்கும் அணி வரிசையை மட்டும் தான் நிராகரிப்பு அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

அசான்ஜ் குறித்த ஊடகங்களின் பாத்திர படுகொலையின் தாக்கத்தை அம்பலப்படுத்துவதில் மெல்ஸரின் தலையங்க எதிர்ப்புறக் கட்டுரை விதிவிலக்கான முக்கியத்துவம் வாய்ந்தது.

“பெரும்பாலான பொதுமக்களைப் போலவே, பல ஆண்டுகளாக பரப்பப்பட்டு வந்த இடைவிடாத அவதூறு பிரச்சாரங்களால், [அசான்ஜூக்கு எதிராக] அறியாமலே விஷம் குடித்தேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், “ஒருமுறை இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை உற்றுநோக்கினேன், நான் கண்டறிந்தது எனக்கு விரக்தியையும் அவநம்பிக்கையையும் அளித்தது. அசான்ஜ் ஒரு “கற்பழிப்புவாதி,” அல்லது ஒரு “தரவுத் திருடர்” அல்லது ஒரு “ரஷ்ய உளவாளி” அல்ல. ஏன், பிணை மீறலுக்காக தண்டனை வழங்கிய தலைமை நீதிபதி எமா ஆர்பத்நோட் அழைத்தது போன்று அவர் ஒரு “சுயநலமிக்க தன்னை போற்றிப்புகழ்பவர்” கூட கிடையாது.  

“அசான்ஜ் அம்பலப்படுத்திய குற்றங்களின் மீதான கவனத்தை திசைதிருப்ப திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டதையும், அந்தப் பிரச்சாரத்தால் நான் கண்மூடித்தனமாக இருந்தேன் என்பதையும் இறுதியில் நான் உணர்ந்தேன். ஒருநேரத்தில் தனிமை, ஏளனம் மற்றும் அவமானம் போன்றவற்றினால் அவர் ஒரு மனிதராகவே கருதப்படவில்லை என்ற நிலையில், மந்திரவாதிகளைப் போல வெறுமனே எரிப்பதற்கு நாம் பழகினோம், அது உலகெங்கிலுமான பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டாமல் அவரது மிக அடிப்படையான உரிமைகளை அவரிடமிருந்து பறிப்பதற்கு எளிதாக இருந்தது. அதனால், எங்களது மனநிறைவின் பின்புற கதவு வழியாக ஒரு சட்ட முன்மாதிரி அமைக்கப்பட்டுள்ளது, இது எதிர்காலத்தில் கார்டியன், நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் ஏபிசி செய்திகளின் வெளிப்பாடுகளுக்கும் பயன்படுத்தபடலாம்.

மெல்ஸர், “இது அசான்ஜை பாதுகாப்பது மட்டுமல்ல, மாறாக மேற்கத்திய ஜனநாயகத்தின் தலைவிதியை முடிப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை தடுப்பதும் ஆகும்” என்று நிறைவு செய்தார். மேலும் அவர் இவ்வாறு தெரிவித்தார்: “உண்மையைச் வெளிப்படுத்துவது ஒரு குற்றமாக மாறியதும், சக்திவாய்ந்தவர்கள் தண்டனையை அனுபவிக்காத நிலையில், இந்த போக்கை சரிசெய்ய மிகவும் தாமதமாகிவிடும். நமது குரலை தணிக்கை செய்வதற்கும், நமது தலைவிதியை தடையற்ற கொடுங்கோன்மையிடமும் கைவிட்டிருப்போம்.”

அதற்கு, தங்களை “தாராளவாதிகள்” என பிரகடனம் செய்பவர்கள் உட்பட, உலகின் சில பிரதான செய்தியிதழ்களின் தலையங்கப் பிரிவு பணியாளர்கள் கதவை படாரென ஓங்கியறைந்து மெல்ஸரின் முகத்தில் அடிப்பது போல ஒரு கூட்டுக் குரலில் பதிலிறுத்தனர்.

இத்தகைய சூழ்நிலைகளில், வெளியீட்டுக்கான உத்தியோகபூர்வ தடையை விலக்க முடியாது. இங்கிலாந்தில், உலக சோசலிச வலைத் தளம், பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஊடக ஆலோசனை அறிவிப்பு (அல்லது D-Notice) குழுவில் பணியாற்றிய கார்டியன் துணை ஆசிரியர் போல் ஜோன்சன் ஆற்றிய பங்கை சுயாதீன ஊடகவியலாளர் மாட் கென்னார்ட் வெளிப்படுத்தியதில் கவனத்தை ஈர்த்தது. பாதுகாப்பு அமைச்சகம், D-Notice ஐ பயன்படுத்துவதற்குப் பொறுப்பானது, இது ஊடகங்களால் சுய தணிக்கை செய்யும் செயல். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் செய்திகள் வெளியிடுவதை தடுக்க D-Notice பயன்படுத்தப்படுகின்றன.

இந்த இழிவான தணிக்கை செயல்பாட்டில் கார்டியன் பங்கேற்பது தனித்துவமானது அல்ல. இந்த தற்போதைய குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கொள்கைக்கான இயக்குநர் ஜெனரல் டொமினிக் வில்சன் தலைமை வகிக்கிறார், மேலும் இக்குழு தனிப்பட்ட தொலைக்காட்சி செய்திகள் அமைப்பின் இணக்கத் தலைவர் ஜோன் பேட்டில் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் துணை இயக்குநரான இயன் முர்ரே ஆகிய துணைத் தலைவர்களையும் உள்ளடக்கியது.

குழுவின் புள்ளிவிபரங்கள் பெரும்பாலான பிரதான தொலைக்காட்சி மற்றும் செய்தியிதழ் குழுக்களை உள்ளடக்கியது. அவர்களில், தலையங்க கொள்கை மற்றும் தரங்கள் குறித்த பிபிசி இயக்குநர் டேவிட் ஜோர்டான்; செய்திகள் சேகரிப்புக்கான ஸ்கை நியூஸ் துணைத் தலைவர் சாரா வைட்ஹெட்; நடப்பு விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, ITV செய்தி இயக்குநர் மிக்கேல் ஜேர்மி; பத்திரிகை கழக ஆசிரியர் பீட்டர் கிளிஃப்டன்; டைம்ஸ் மற்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் கிரைக் ட்ரெகுர்தா; டெய்லி டெலிகிராஃப் பத்திரிகையின் துணை ஆசிரியர் ரோபர்ட் வின்னெட்; ஹஃபிங்டன் போஸ்ட் செய்தித் தலைவர் ஜெஸ் பிராமர்; டெய்லி மெயில் பத்திரிகையின் உதவி ஆசிரியர் சார்லஸ் கார்சைட்; மற்றும் டிரினிட்டி மிரர் பத்திரிகையின் டேவிட் ஹிக்கெர்சன் ஆகியோர் அடங்குவர்.

முறையான அல்லது முறைசாரா, ஊடக நிர்வாகிகளுக்கும் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கும் இடையிலான இதையொத்த சந்திப்புகள், சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கிலும் நடைபெறுகிறது.

செய்திகளை பின்தொடருபவர் அல்லது வெறுமனே கூகுள் தேடல் செய்பவர் எவரும், அசான்ஜ் பற்றிய கதைகள் வெளிவருவதில் கூர்மையான சரிவு நிகழ்ந்துள்ளதை கவனிக்க வேண்டும். பிப்ரவரியில் அமெரிக்காவிற்கு நாடுகடத்துவது குறித்த ஒரு ஐந்து நாள் விசாரணையை அவர் எதிர்கொள்வார் என்று ஆர்பத்நோட் அறிவித்தபோது, ஜூன் 14 முதல் பிரதான செய்தி நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டு விட்டன. செய்தித்துறையையும் மற்றும் பேச்சுரிமையையும் கடுமையாக குற்றப்படுத்தும் வகையில், அசான்ஜூக்கு எதிராக விதிக்கப்பட்ட 175 ஆண்டு சிறை தண்டனை மற்றும் மரண தண்டனையை உள்ளடக்கிய உளவுச் சட்டக் குற்றச்சாட்டுக்கள் பற்றி பரவலாக பொதுமக்கள் அறிவதையும் அதுபற்றி விவாதிப்பதையும் தடுப்பதற்கு அவர்கள் தீர்மானித்துவிட்டனர்.

"செய்தி நிரலாக்கத்தில்" இனிமேல் அசான்ஜூக்கு “உயர்” முக்கியத்துவம் இருக்காது என்று மெல்சருக்கு அளித்த அறிக்கை, அவரது விதி குறித்து ஊடக மவுனத்திற்கான ஒரு சுவரை எழுப்புவதன் மூலம் அவரை எப்போதும் மவுனமாக்குவதற்கான அமெரிக்க திட்டங்களை எளிதாக்க ஒரு உத்தியோகபூர்வ வீட்டோவின் சான்றாக இருக்கக்கூடும். அல்லது அசான்ஜை விடுதலை செய்யக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுத்த ஜூன் 2018 பேரணியில் ஜோன் பில்ஜர் உரையாற்றியது அநேகமாக சரியாக இருக்கலாம்: “முரண்பாடு என்னவென்றால், இந்த பத்திரிகையாளர்கள் எவரும் பத்திரிகையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. போர்க்கால பிரான்சின் ஜேர்மன் ஆக்கிரமிப்புக்கு உதவிய மற்றும் உறுதி செய்த விச்சி அரசாங்கத்தின் பத்திரிகையாளர்கள் என்று நான் அவர்களை அழைக்கிறேன்”.

இந்த அரசு-ஊடக சதி தகர்க்கப்பட வேண்டும். ஜூன் 20 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு, “ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்காக! அவரது சுதந்திரத்தைப் பாதுகாக்க ஓர் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்குவதற்காக!” என்ற தலைப்பிலான கட்டுரையில் அழைப்பு விடுத்தது. சோசலிச சமத்துவக் கட்சி (இங்கிலாந்து) ஜூலை 3, இந்த புதனன்று, இலண்டனில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் அனைவரும் அதில் கலந்துகொள்ள யோசிக்குமாறு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.