ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Rally in Melbourne demands freedom for Julian Assange

மெல்போர்னில் நடந்த பேரணி ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்யக் கோருகிறது

By our reporters 
15 July 2019

மத்திய மெல்போர்னில், அண்ணளவாக 130 பேர் அணிவகுத்த நேற்றைய பேரணியில் சிறையிலிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸின் செய்தி வெளியீட்டாளர் ஜூலியன் அசான்ஜையும் மற்றும் அமெரிக்க இராணுவ-உளவுத்துறை இரகசிய ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங்கையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரினர்.

இந்த நிகழ்வு, அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலைக்காக போராட உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளும் நடத்தும் சர்வதேச பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சிட்னியில் நடந்த பேரணியைத் தொடர்ந்து இது நடத்தப்பட்டுள்ளது, மேலும் சோசலிச சமத்துவக் குழு (நியூசிலாந்து) நியூசிலாந்தின் வெலிங்டனில் ஒரு போராட்டத்தை நடத்திய அதே நாளில் இது நடத்தப்பட்டது.

மெல்போர்ன் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தொழிலாளர்கள், ஓய்வுபெற்றவர்கள், மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்குவர். சிலர், அசான்ஜ் மற்றும் மானிங்கிற்கு ஆதரவாக தங்களது முதலாவது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர், அதே வேளையில் ஏனையோர், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக முன்னர் சோ.ச.க. ஒழுங்கமைத்த பேரணிகளுக்கு ஆதரவளித்து அவற்றில் பங்கேற்ற பின்னர் இதிலும் பங்கேற்றிருந்தனர்.

250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியூ சவுத் வேல்ஸின் எல்லைக்கு அருகிலுள்ள பிராந்திய நகரமான ஜீலோங் மற்றும் வாங்கரட்டாவிலிருந்து வந்த மாணவர்கள் உட்பட பல பங்கேற்பாளர்கள், நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருந்தனர். குளிரும் மழையும் அங்கு இருந்தபோதிலும், பங்கேற்பாளர்கள் முழுபேரணியிலும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், சர்வதேச பார்வையாளர்கள் முகநூல் நேரலை ஊடாக பங்கேற்றனர், இது தற்போது 3,600 முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் ட்விட்டரிலும், மற்றும் பிற சமூக ஊடகங்களிலும் தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.


பாட்ரிக் ஓ’கோன்னோர்

சோ.ச.க. தேசிய குழு உறுப்பினர் பாட்ரிக் ஓ’கோன்னோர் பேரணிக்கு தலைமை தாங்கினார். அசான்ஜ் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவதை தடுக்க ஒரு உலகளாவிய பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் விடுத்த அழைப்பு பற்றி குறிப்பிட்டு பேரணியை அவர் தொடங்கி வைத்தார்.

பங்கேற்பாளர்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தி, ஓ’கோன்னோர் இவ்வாறு விவரித்தார்: “சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் பாரிய ஆதரவை கொண்டுள்ள அசான்ஜை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காக பாரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அதனை அணிதிரட்டுவதே இக் குழுவின் நோக்கமாகும்.”

மேலும், ஜூலியனின் தாய் கிறிஸ்டின் அசான்ஜ் சோ.ச.க.வுக்கு அனுப்பியதான பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தையும், அத்துடன் குவாண்டனாமோ விரிகுடா முன்னாள் கைதி டேவிட் ஹிக்ஸின் தந்தை டெர்ரி ஹிக்ஸ் மெல்போர்ன் மற்றும் சிட்னி பேரணிகளுக்கு வழங்கிய ஆதரவளிக்கும் அறிக்கையையும் ஓ’கோன்னோர் அப்போது வாசித்தார்.

சோ.ச.க. உறுப்பினரும் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் (IYSSE) தலைவருமான எவ்ரிம் யாஸ்ஜின், அமெரிக்க மற்றும் சுவீடன் அதிகாரிகளால் அசான்ஜிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் ஜோடிக்கப்பட்டத் தன்மை பற்றி பேசினார்.


எவ்ரிம் யாஸ்ஜின்

பிரிட்டிஷ் ஒப்படைப்பு விசாரணைகளுக்கு “கங்காரு நீதிமன்றம்” தயார் செய்யப்பட்டதை அவர் கண்டித்து இவ்வாறு தெரிவித்தார்: “அதற்கு நீதிபதி எமா ஆர்பத்நோட் தலைமை தாங்குவார், அவருடைய கணவர் ஒரு பிற்போக்குத்தனமான டோரி அரசியல்வாதியாவார். 2005 மற்றும் 2014 ஆண்டுகளுக்கிடையில், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிரிட்டனின் ஆயுதப்படைகளை மேற்பார்வையிடும் அமைப்பான, பாதுகாப்பு தேர்வு குழுவின் தலைவராக அவர் இருந்தார். இந்த காலகட்டத்தில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்து கொண்டிருந்த இராணுவ நடவடிக்கைகளிலும், அத்துடன் லிபியாவிலும் சிரியாவிலும் நடந்த ஆட்சி மாற்றத்திற்கான போர் நடவடிக்கைகளிலும் பிரிட்டன் ஈடுபட்டு வந்தது.

“விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் 50 க்கும் அதிகமான முறை ஜேம்ஸ் ஆர்பத்நோட் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அசான்ஜ் அவர் அம்பலப்படுத்தியவர்களால் விசாரிக்கப்படவுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2018 இல் வெளியிடப்பட்ட “நீதித்துறை நடத்தை வழிகாட்டி” இன்படி, ஆர்பத்நோட் ஒரு சுயாதீனமற்ற தனிநபராக அசான்ஜின் விசாரணைக்கு தலைமை தாங்க முடியாது என்ற நிலையில் அதனடிப்படையில், தானாகவே அவர் விலகிக் கொள்ள வேண்டும் – அதாவது, தவிர்த்துக் கொள்ள வேண்டும்.”


ஜேசன் வார்ட்லீ

விக்டோரியா பல்கலைக்கழகத்தின் IYSSE இன் தலைவரும், கடந்த கூட்டாட்சி தேர்தலுக்கான விக்டோரியாவில் உள்ள சோ.ச.க.வின் செனட் வேட்பாளர்களில் ஒருவருமான ஜேசன் வார்ட்லீ, இளைய தலைமுறையினர் மீது விக்கிலீக்ஸ் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி பேசினார். அவர், “எனது தலைமுறையினரில் பலரும், ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை வீரமிக்க மற்றும் தைரியமான நபர்களாகப் பார்க்கிறோம்,” என்று கூறினார். மேலும், “மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை நமக்கு வெளிப்படுத்துவதற்காக அவர்கள் இருவரும் எல்லாவற்றையும் தியாகம் செய்யத் தயாராகவுள்ளனர். அரசாங்கங்களும் பெருவணிகங்களும் நமது பார்வையில் இருந்து மறைக்க முயன்ற மோசமான போர்க்குற்றங்கள் மற்றும் பெருநிறுவன முறைகேடுகளின் விவரங்களை இளைஞர்கள் தற்போது அறிந்து கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு நன்றி.”


மெல்போர்ன் பேரணியின் ஒரு பகுதி

மெல்போர்ன் விக்கிலீக்ஸ் ஆதரவுக் குழுவைச் சேர்ந்த ஜேக்கப் கிரெச் என்பவரும் பேரணியில் உரையாற்றினார், அப்போது, அதே நாளில் முன்னதாக பேசியிருந்த அசான்ஜின் தந்தை ஜோன் ஷிப்டன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார். ஷிப்டன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெல்மார்ஷ் சிறைக்குச் சென்று ஜூலியனைப் பார்க்க முடிந்தது, அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து ஆபத்தில் இருந்து வருவதையும் காணமுடிந்தது. “இங்குள்ள அனைவருக்கும் நன்றி,” “ஏனென்றால் இந்த காலநிலையில் கூட மெல்போர்னில் இதுபோன்ற நிகழ்வுக்கு வெளியில் வருவது ஜூலியன் அசான்ஜிற்கு பலமளிக்கும். அதாவது, இதன் அர்த்தம் ஏதோவொரு வகையில் அவருக்கு ஆதரவிருப்பதைக் காட்டுகிறது.”

அசான்ஜை பாதுகாப்பது என்பது ஒரு “தொழிலாள வர்க்க பிரச்சினை,” என்று கிரெச் தெரிவித்ததுடன், இதையும் சேர்த்துக் கூறினார்: “இது, உழைக்கும் மக்களின் கைகளில் தகவல்களை கிடைக்காது செய்து, உயரடுக்கின் கட்டுப்பாட்டைப் பராமரிக்கும் அதிகார கட்டமைப்புகளை அங்கீகரிப்பது பற்றியது.”

இந்த பேரணியின் பிரதான பேச்சாளர் சோ.ச.க. உதவி தேசிய செயலர் செரில் கிறிஸ்ப் ஆவார், இவர் அசான்ஜ் ஈக்வடோர் தூதரகத்திலிருந்து கட்டாயமாக வெளியே இழுத்து வரப்பட்டதன் பின்னர் அசான்ஜ் கடந்து கொண்டிருக்கும் அசாதாரண, ஜனநாயக விரோத பாதையை விரிவாக மீளாய்வு செய்தார்.

“குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளிலிருந்து தெளிவாகத் தெரிவது என்னவென்றால், ஏப்ரல் 11 அன்று அசான்ஜ் வெளியேற்றப்பட்டதும் கைது செய்யப்பட்டதும் பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரம் மற்றும் ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான வழிகளை திறந்துவிட்டுள்ளன,” என்று கிறிஸ்ப் விவரித்தார். மேலும், “அசான்ஜ் மற்றும் மானிங் மீதான இடைவிடாத பின்தொடர்தலும் மற்றும் துன்புறுத்தல்களும், இந்த இரண்டு வர்க்க போர் கைதிகளை அச்சுறுத்துபவையாக இருந்தன, மேலும் இந்த இருவரும் உண்மையைக் கூறியது மட்டுமல்லாமல், அந்த உண்மை உலக மக்கள் அனைவரையும் சென்றடையும் படி செய்துள்ளனர்” என்றும் கூறினார்.


செரில் கிறிஸ்ப்

மேலும் அவர் இவ்வாறு தெரிவித்தார்: “இது அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா உட்பட அதன் கூட்டாளி நாடுகளின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதையும், அது இந்த அரசாங்கங்களை கோபமூட்டியதையும் நாம் மறந்துவிடக் கூடாது. போருக்கு எதிரான போராட்டத்தின் வளர்ச்சி ஒடுக்கப்படுவதையும் மவுனமாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக அவர்கள் வேட்டைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். [ஈராக் போர்] ‘கூட்டு படுகொலை’ காணொளியில், ஊடகவியலாளர்களும் மற்றும் பிற அப்பாவிகளும் கொல்லப்பட்டது குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் அது வெளியிடப்பட்டது மற்றும் அம்பலப்படுத்தப்பட்டது பற்றி மட்டும்தான் கவலை.”

ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள் குறித்தும், மற்றும் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் அணுவாயுதங்களை உருவாக்க வேண்டுமா என்பது பற்றி கான்பெராவில் ஆளும் வட்டங்களுக்குள் தற்போது நடந்து கொண்டிருக்கும் விவாதம் குறித்தும் கிறிஸ்ப் சுட்டிக்காட்டினார்.

“உண்மையை அறிவதற்கான, தகவல்களை அறிவதற்கான உரிமை என்பது ஒரு புரட்சிகர கேள்வியாக உள்ளது. ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங் ஆகியோரின் அனுபவம் நமக்கு அதைத்தான் கூறுகிறது,” என்று அவர் நிறைவு செய்தார். “உங்கள் பணியிடங்களுக்கு, உங்கள் சமூகங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு, உங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு, ஏன் உங்களுக்கு இதுவரை தெரியாதவர்களுக்கு கூட ஜூலியன் அசான்ஜை விடுவிப்பது தொடர்பான ஆழ்ந்த குறிப்பிடத்தக்க பணியை பற்றி விளக்கவும், கற்பிக்கவும் மேலும் நம்ப வைக்கவும் நாங்கள் உங்களை அழைக்கிறோம். இதன் அர்த்தம், அசான்ஜ் ஒரு பத்திரிகையாளர் அல்லர், அவர் ஒரு வெளியீட்டாளர் அல்லர் மற்றும் விக்கிலீக்ஸ் ஒரு ஊடக அமைப்பு அல்ல என்பவை உட்பட அவருக்கு எதிராக பரப்பப்பட்டுள்ள பொய்களை எதிர்ப்பதாகும்.

“அவரது சுதந்திரத்திற்கான போராட்டம் மில்லியன் கணக்கானவர்களின் கூட்டு அழைப்பாக மாற வேண்டும், ஏனென்றால் அவர் விட்டுக் கொடுக்காமலும் உறுதியுடனும் நிலைத்து நிற்கிறார், வேறுவழியில் எதையாவது செய்வது என்பது அவரை மட்டுமல்லாமல், அவருக்காக போராடும் உலகளவிலான பெரும்திரளான மக்கள் அனைவரையும் பலவீனப்படுத்தும் என்பதை அவர் அறிந்துள்ளார். அசான்ஜ் மற்றும் மானிங்கின் சரியான சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு பெல்மார்ஷ் சிறை மற்றும் அலெக்சாண்ட்ரியா தடுப்புக்காவல் மையத்தின் கதவுகளை தீவிரமாக திறக்க செய்வதற்கான ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைக்க முடியும் மற்றும் கட்டமைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

அதன் பின்னர், பேரணியில் கலந்து கொண்ட பலரும் ஜூலியன் அசான்ஜிற்கான உலகளாவிய பாதுகாப்புக் குழுவில் சேர கையெழுத்திட்டனர், மேலும் இலக்கியங்களையும், மேலங்கிகளையும் வாங்கியதுடன், உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் கலந்துரையாடினர்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

Melbourne rally participants speak in defence of Assange and Manning
[15 July 2019]