ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Donald Trump’s fascist strategy

டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத மூலோபாயம்

By Eric London
17 July 2019

காங்கிரஸ் சபையில் ஜனநாயகக் கட்சியின் நான்கு புதிய பெண் உறுப்பினர்களான Rashida Tlaib, Alexandria Ocasio-Cortez, Ilhan Omar மற்றும் Ayanna Pressley ஆகியோரைக் குறித்து "மோசமான இஸ்ரேல்-விரோதமானவர்கள், அமெரிக்க-விரோதமானவர்கள், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள்" என்று ட்வீட் செய்து, டொனால்ட் ட்ரம்ப் நேற்று அவர்கள் மீதான அவரின் பாசிசவாத தாக்குதல்களை நீடித்தார். “தீவிர இடதைக்" கண்டித்து, காங்கிரஸ் சபையின் அந்த பெண்மணிகளை "கம்யூனிஸ்டுகள்" என்று குறிப்பிட்ட ட்ரம்ப், “தேசத்தை வெறுக்கிறீர்கள் என்றால், அல்லது இங்கே மனநிறைவாக இல்லை என்றால், நீங்கள் வெளியேறலாம்!” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

காங்கிரஸின் அந்த நான்கு பெண் உறுப்பினர்களும் —அவர்கள் அனைவரும் அமெரிக்க பிரஜைகள்— "அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த குற்றங்கள் நிறைந்த இடங்களுக்கே" “திரும்ப செல்லட்டும்" என்று ட்வீட் செய்து, ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அந்த ஆத்திரமூட்டலை தொடங்கி இருந்தார். பொதுவாக சமூக எதிர்ப்பையும் குறிப்பாக சோசலிச எதிர்ப்பையும் "பயங்கரவாதத்திற்கான" ஆதரவுடன் சமாந்தரப்படுத்தி, அவர் ட்வீட் செய்தார், “நாம் ஒருபோதும் ஒரு சோசலிச அல்லது கம்யூனிச நாடாக இருக்கமாட்டோம்.”

நேற்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு தலையங்க அறிக்கை, ட்ரம்பின் கருத்துக்கள் "அவரின் கொள்கை குழப்பங்கள், அவரின் நீதிமன்ற தோல்விகள், அவரின் அரசியல் தோல்விகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் தந்திரங்கள்" என குறிப்பிட்டது. இலக்கு வைக்கப்பட்ட அந்த நான்கு பெண் காங்கிரஸ் உறுப்பினர்களும், திங்களன்று மதியம் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், ட்ரம்பின் ஆத்திரத்தை "கவனக்குறைவான கருத்து" என்பதாக குறிப்பிட்டு அதேபோன்ற கருத்துக்களை வெளியிட்டனர்.

இது, திங்கட்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் எழுதி எடுத்து வந்த "உரை குறிப்புகளைக்" கொண்டு பேசியதை புகைப்படக்காரர்கள் படமெடுத்திருந்தனர் என்ற உண்மையுடன் முரண்பட்டிருந்தது. “சொல்லப் போனால் அது அபாயகரமானது—ஏனென்றால் அவர்கள் அமெரிக்காவை வெறுப்பதாக தெரிகிறது,” என்று அந்த முன்தயாரிக்கப்பட்ட குறிப்புகள் குறிப்பிடுகின்றன. “அவர்கள் அமெரிக்கா சோசலிசமாக இருக்க விரும்புகிறார்கள்.”

இந்த குறிப்புகளை விரிவாக்கி, ட்ரம்ப் "அல் கொய்தா மீதான அவர்களின் அன்பை" குறிப்பிட்டதுடன், அந்த காங்கிரஸ் பெண் உறுப்பினர்கள் "யூதர்களை வெறுப்பதாக" வாதிட்டார். அவரது ட்வீட்கள் மீது "வெள்ளையின தேசியவாதிகள்" உற்சாகமடைந்திருப்பது கவலை அளிக்கிறதா என்று வினவிய போது, ட்ரம்ப், “பலரும் என்னுடன் உடன்படுகிறார்கள் என்பதால் அது எனக்கு கவலையில்லை,” என்று பதிலளித்தார்.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் ஒடுக்குமுறையை வடிவமைத்த ஸ்டீபன் மில்லர் உட்பட வெள்ளை மாளிகையின் பாசிசவாத மூளை ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்ட ஓர் ஆழ்ந்து ஆராய்ந்த அரசியல் மூலோபாயத்திற்கு ஏற்ப, ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார். அவர் பாசிசவாத மற்றும் அதிவலது அரசியல் இயக்கங்களால் பகிரப்பட்ட அரசியல் கருத்துருக்களை மீண்டும் மீண்டும் கூறியவாறு, அந்த நான்கு பெண் காங்கிரஸ் உறுப்பினர்களையும் வழக்கமாக தாக்கி வருகிறார்.

அவரது நிர்வாகத்திற்கான எதிர்ப்பையும் அவரின் தனிப்பட்ட ஆட்சி மீதான விமர்சனங்களையும் பயங்கரவாதத்திற்கான ஆதரவுடன் சமாந்தரப்படுத்தி, பேச்சு சுதந்திரம் மற்றும் விமர்சனபூர்வ சிந்தனைகளை குற்றகரமாக்க வழி வகுக்கிறார். அரசாங்க கொள்கைகளைக் "குறைகூறுவது" தேசதுரோகம் என்றரீதியில், எதிர்ப்பாளர்களை "அபாயகரமானவர்கள்" என்றும், தேசத்தை "வெறுப்பவர்கள்" என்றும் அவர் குறிப்பிடுகிறார். அவர் சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தை அமெரிக்க மக்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட வெளிநாட்டு சித்தாந்தங்கள் என்பதாக சித்தரிக்கிறார்.

இத்தகைய சிந்தனைகள், நாஜி சர்வாதிபத்திய ஆட்சியை நியாயப்படுத்த “விதிவிலக்கான நிலை” என்ற கருத்துருவை உருவாக்கிய சட்ட வல்லுனர் கார்ல் ஷிமித் போன்ற நாஜி தத்துவவியலாளர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டவையாகும். “மனநிறைவோடு இல்லாதவர்கள்" மற்றும் "அமெரிக்கா சோசலிசமாக விரும்புபவர்கள்" அமெரிக்காவை விட்டு "வெளியேற" வேண்டும் என்ற ட்ரம்பின் வலியுறுத்தல்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்னவென்றால், அவர்கள் சுயமாக முன்வந்து அதை செய்யவில்லை என்றால், படைகளைக் கொண்டு அவர்களைச் சுற்றி வளைத்து அரசாங்கம் அதை மெய்பிக்கும் என்ற சூசகமான குறிப்பாகும்.

ட்ரம்பின் அறிக்கைகளின் கணக்கிடப்பட்ட மூலோபாய தன்மை, அவை முன்வைக்கப்பட்டு வரும் சூழலால் அடிக்கோடிடப்படுகிறது. அந்நிர்வாகம் குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்தவர்களைக் கழிவறை வசதி கூட இல்லாத அடைப்பு முகாம்களில் சிறை வைத்து வருகிறது என்று வலியுறுத்தியதற்காக, ட்ரம்ப் நேற்று "அதி இடதை" கண்டித்தார். “அவை தடுப்பு முகாம்கள் இல்லை, அவை நிஜமாகவே சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன,” என்றார்.

இலக்கு வைக்கப்பட்ட 10 நகரங்களில் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பகுதியாக விளங்கும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தவர்கள், இம்மாத தொடக்கத்தில் ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட அடுத்து நடத்தப்படவிருக்கின்ற தேடல்வேட்டைகளைக் குறித்த அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பில் குடியுரிமை அந்தஸ்து மீதான கேள்வியை உள்ளடக்குவதற்கு அவருக்கு தடை விதித்த ஓர் உச்சிநீதிமன்ற முடிவு மீறப்படுமென கடந்த வாரம் அவர் அச்சுறுத்தினார். மத்திய அமெரிக்கர்கள் அமெரிக்காவில் தஞ்சம் கோருவதை நடைமுறையளவில் தடுக்கும் ஒரு புதிய மத்திய அரசு நெறிமுறையைத் திங்களன்று அந்நிர்வாகம் திணித்தது—இது தெளிவாக ஒரு சர்வதேச விதிமீறலாகும்.

இந்த நடவடிக்கைகள், பணியில் உள்ள ஆயிரக் கணக்கான துருப்புகளை அவர் அமெரிக்க-மெக்சிகன் எல்லையில் நிலைநிறுத்தி இருப்பதைத் தொடர்ந்தும், அவரின் எல்லைச்சுவர் கட்டமைப்பதற்காக பென்டகன் நிதியை ஒதுக்குவதில் காங்கிரஸ் கட்டுப்பாடுகளை நீக்க ஓர் அவசரகாலநிலை பிரகடனத்தைத் தொடர்ந்தும் வருகின்றன.

ட்ரம்ப் இத்தகைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும், அடிப்படை அரசியலமைப்பு விதிகளை மீறுவதற்கும் மற்றும் உத்தரவாணைகளைக் கொண்டு சட்டங்களை ஸ்தாபிப்பதற்கும் புலம்பெயர்வோர்-விரோத வெறியூட்டலைப் பயன்படுத்தி உள்ளார்.

ட்ரம்பும் அவரது ஆலோசகர்களும், அவரின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை ஆதரிக்கும் சிறுபான்மை வாக்காளர்களுடன் சேர்ந்து —குடிபெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மற்றும் சுங்க-எல்லை பாதுகாப்பு ஆணையத்தின் பத்தாயிரக் கணக்கான முகவர்கள் உள்ளடங்கலாக— அரசுக்குள் பாசிசவாத கூறுபாடுகளை இணைத்து அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க முயன்று வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்போ, அதன் குறிப்பிடத்தக்க அலட்சியத்துடன் சேர்ந்து ட்ரம்ப் மூலோபாயத்திற்குச் சாதகமாக இனவாத அடிப்படையிலான முறையீட்டை கொண்ட ஒரு வழமையான கலவையாகும். ட்ரம்பின் கருத்துக்களுக்காக அவரை முறைப்படி கண்டிப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்குழுக்குள் இருந்து வந்த அழைப்புகளை அது எதிர்ப்பதாக ஜனநாயகக் கட்சி தலைமை நேற்று அறிவித்தது, அதற்கு பதிலாக அது ரோனால்ட் ரீகனை அமெரிக்க ஜனநாயகத்தின் உருஅடையாளமாக தாங்கிப்பிடிக்கும் ஒரு மிருதுவான, கூடுதல் இணைப்பு ஏதுமற்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டு ட்ரம்பை எரிச்சல்படுத்துவதை தேர்ந்தெடுக்கிறது.

ட்ரம்பின் சர்வாதிகார நகர்வுகளுக்கு ஜனநாயகக் கட்சி எந்த தீவிர எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதோடு, புலம்பெயர்ந்தவர்கள் மீதான அவரின் போருக்கு நிதி வழங்க கூடுதலாக 4.6 பில்லியன் டாலரை அவருக்கு வழங்குவதற்கு கடந்த மாதம் வாக்களித்தது.

ஜனநாயகக் கட்சி தரப்பில் அணிசேர்ந்த பத்திரிகைகள், பொதுவாக "வெள்ளையினத்தவர்களையும்" குறிப்பாக தொழிலாள வர்க்க வெள்ளையினத்தவர்களையும் வக்கிரமாக குறைகூறியதன் மூலமாக ட்ரம்பின் பழியுரைக்கு விடையிறுத்துள்ளன. “வெள்ளையின அடையாள அரசியல் ட்ரம்பை வழிநடத்துகிறது, குடியரசுக் கட்சி அவரின் கீழ் உள்ளது,” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், வாஷிங்டன் போஸ்ட் நேற்று ட்ரம்பின் சமீபத்திய கருத்துக்களை "வெள்ளையினத்தின் மனக்குறைகள்" என்று பழிசுமத்தியது.

“வெள்ளையின அமெரிக்கர்களில் பெரும்பான்மையினர் தேர்தல்-ஆண்டு கருத்துக்கணிப்புகளில் சில இனவாத மனக்கசப்புகளை வெளிப்படுத்துகின்றனர்,” என்று வலியுறுத்திய போஸ்ட், “வெள்ளையின அடையாளத்தின் உணர்வு கல்லூரி படிப்பு பெற்ற வெள்ளை இனத்தவர்களை விட கல்லூரி படிப்பு முடித்திராத வெள்ளை இனத்தவர்கள் மத்தியில் பலமாக இருப்பதாக" விவாதிக்க ட்யூக் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை மேற்கோளிட்டது.

“ட்ரம்பின் அமெரிக்கா ஒரு 'வெள்ளை இன மனிதனின் நாடு'” என்று தலைப்பிட்ட நியூ யோர்க் டைம்ஸ் இன் திங்கட்கிழமை கட்டுரை ஒன்றில், ஜனநாயகக் கட்சியினர் வெள்ளை இனத் தொழிலாளர்களுக்கான எந்தவொரு முறையீட்டில் இருந்தும் முற்றிலுமாக தங்களைத் தொலைவில் நிறுத்தி கொள்வதன் மூலமாக, இனவாத வெள்ளையின வாக்காளர்களைத் தண்டிக்க வேண்டுமென Jamelle Bouie கோரினார்.

“ஜனாதிபதியின் இரத்தமும்-தேசமும் (blood-and-soil) இனவாதத்தை விட எது மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது என்றால்,” அவர் எழுதினார், “ஜனநாயகக் கட்சியின் உயரடுக்குகள் —அல்லது குறைந்தபட்சம் அவர்களில் ஒரு குழு— எவ்வாறு இதேபோன்ற அனுமானங்களோடு செயல்படுகின்றன என்பதுதான். இல்லை, அவர்கள் வெள்ளை இன உழைக்கும் சொத்துரிமையாளர் மட்டுமே மதிப்புடைய பிரஜைகள் என்று பாசாங்கு செய்யவில்லை, ஆனால் அந்த வாக்காளர்களை தம் பக்கம் வென்றெடுக்கவேண்டுமென்ற ஆவேசம் அவர்களுக்கு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

தொழிலாள வர்க்கம் மீதான வெறுப்புடன் செறிவூட்டப்பட்ட இதுபோன்ற கருத்துக்கள், ஜனநாயகக் கட்சியின் இனவாத அரசியலுக்கு அதிவலதிடம் இருந்து ஓர் இனவாத விடையிறுப்பு அவசியப்படுவதாக வாதிட பாசிசவாதிகளுக்கு வளமான களத்தை வழங்குகின்றன. 2017 இல் ஸ்டீபன் பானன் கூறியதைப் போல, “அடையாள அரசியலைக் குறித்து [ஜனநாயக கட்சியினர்] எவ்வளவு காலத்திற்கு பேசுகிறார்களோ, அது எனக்கு வசதியாக இருக்கும்,” என்றார்.

ட்ரம்ப் அரசாங்கம் மக்கள்தொகையில் பெரும் பெரும்பான்மையினரால் வெறுக்கப்படும், தூற்றப்படும் மற்றும் நீடித்த நெருக்கடியில் சிக்கிய ஓர் அரசாங்கமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக அது, ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற வேலைநிறுத்தங்களின் அலையில் ஆரம்ப நிலையில் எடுத்துக்காட்டப்பட்டவாறு அமெரிக்காவுக்குள் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியைக் குறித்து அஞ்சுகிறது.

அது குறைந்த அபாயத்தையும் ஏற்படுத்தாது. அதன் பிரதான சொத்திருப்பே ஜனநாயகக் கட்சியின் பெயரளவிலான எதிர்ப்பாகும். ஜனநாயகக் கட்சியினரும் பாரிய சமூக எதிர்ப்புக்கான சாத்தியக்கூறால் பீதி கொண்டுள்ளனர், அவர்கள் அவர்களின் அனைத்து முயற்சிகளையும், ட்ரம்ப் மற்றும் அவரின் பெருநிறுவன-சார்பு, போர்-வெறி கொள்கைகளுக்கான எதிர்ப்பைத் தணிப்பதற்கும் மற்றும் அடைத்து வைப்பதற்கும் அர்ப்பணித்துள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி பாசிசவாத அச்சுறுத்தலுக்கு ஒரு வர்க்க விடையிறுப்புக்காக போராடுகிறது. உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவில் சமீபத்திய அபிவிருத்திகளால் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவில் குழந்தைகளைக் கூண்டுகளில் அடைப்பதற்கும் மற்றும் நிர்வாக கட்டளை ஆட்சிக்கும் அங்கே பெருந்திரளான மக்கள் ஆதரவு இல்லை. ட்ரம்பின் சொந்த வாக்காளர்களில் பெரும்பான்மையினரே கூட ஒரு பாசிசவாதியை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.

சமூக சமத்துவத்திற்கான ஒரு பொதுவான, சர்வதேச போராட்டத்தில் அனைத்து இனங்கள் மற்றும் தேசியங்களையும் சேர்ந்த தொழிலாளர்களின் சமூக சக்தியை அணிதிரட்டுவதே தலையாய பணியாகும். தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை ஸ்தாபிப்பதற்கு, இனவாத மற்றும் அடையாள அரசியல், உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களின் விஷத்திற்கு எதிராக ஒரு சளைக்காத போராட்டம் அவசிப்படுகிறது.

இந்த ஜனாதிபதியின் பாசிசவாத துவேசமானது, ட்ரம்ப் என்ற தனிநபரின் மூளையில் இருந்து உதித்ததல்ல. அது, தனது செல்வவளத்தைப் பாதுகாக்க சர்வாதிகாரத்தை நோக்கி வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவினது கண்ணோட்டமாகும். பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அதன் மூலவேரான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டம் அவசியப்படுகிறது.