ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Stop the right-wing conspiracy! Defend the SGP against the Verfassungsschutz secret service!

வலதுசாரி சதியை தடுத்து நிறுத்துவோம்! அரசியலமைப்பு பாதுகாப்பு இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாப்போம்!

By Socialist Equality Party (Germany)
26 July 2019

இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP), பேர்லின் நிர்வாக நீதிமன்றத்தில் கூட்டரசாங்க உள்துறை அமைச்சகத்துக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு அரசியலமைப்பின் பாதுகாப்பு குறித்த 2017 அறிக்கையில், SGP ஐ “இடது-சாரி தீவிரவாத” அமைப்பாக வரையறுத்த ஜேர்மன் உள்துறை அமைச்சகத்தின் இரகசிய சேவையான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் (Verfassungsschutz) அறிக்கையை எதிர்ப்பதற்காக தொடுக்கப்பட்டது. இவ்வாறாக வரையறுத்ததன் மூலமாக, அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் கண்காணிப்புக்கு SGP இலக்காக்கப்பட்டிருக்கிறது.

அறிக்கையில் தன்னை சேர்க்கப்பட்டுள்ளதும், இரகசிய சேவை மூலமாக அது கண்காணிக்கப்படுவதும், அதன் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பாரிய ஒடுக்குமுறையைக் குறித்ததாக இருக்கிறது, இதற்கு எந்த சட்டபூர்வ அடித்தளமும் இருக்கவில்லை என்ற அடிப்படையில் SGP தனது தரப்பு நியாயத்தை முன்வைத்திருந்தது. SGP வன்முறையானது என்பதற்கோ அரசியல் அமைப்புக்கு விரோதமானது என்பதற்கோ நிரூபணமளிப்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் இரகசிய சேவையான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் (Verfassungsschutz) ஒரு முயற்சியும் கூட செய்யவில்லை, மாறாக, அக்கட்சி சட்டபூர்வமான வழிமுறைகளின் மூலமாக அதன் இலட்சியங்களைப் பின்தொடர்கிறது என்பதை வெளிப்படையாகவே அது ஒப்புக்கொண்டுள்ளது. SGP ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை பரிந்துரைக்கிறது, முதலாளித்துவத்தை விமர்சனம் செய்கிறது என்ற உண்மையை மட்டுமே முழுமையான அடிப்படையாகக் கொண்டு அது கண்காணிப்படுவதை அரசாங்கம் நியாயப்படுத்தியது.

இப்போது உள்துறை அமைச்சகம், Redeker Sellner Dahs என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர். வொல்ஃப்காங் ரோத் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு விரிவான அறிக்கையை SGP இன் புகாருக்கான பதிலாக முன்வைத்திருக்கிறது. இந்த பதில், சாரத்தில், ஒரு சட்ட ஆவணமாக இல்லை, மாறாக மார்க்சிசத்திற்கும் சோசலிச, இடது-சாரி மற்றும் முற்போக்கு சிந்தனைகளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் எதிரான ஒரு வெஞ்சின பழியுரையாகவே இருக்கிறது. ஒருவேளை இப்பதிலானது நவ-பாசிச ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சியின் தலைமையகத்தில் எழுதப்பட்டிருக்கலாம். Verfassungsschutz எந்த மட்டத்திற்கு அதிவலதுகளின் ஒரு ஊதுகுழலாக மாறி விட்டிருக்கிறது என்பதை, இந்தப் பதில் வெளிப்படுத்துகிறது.

உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி, “ஒரு ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமுதாயத்திற்காக வாதிடுவது” மற்றும் “‘ஏகாதிபத்தியம்’ ‘இராணுவவாதம்’ எனக் கூறப்படுவதற்கு எதிரான கிளர்ச்சியூட்டல்” கூட அரசியலமைப்பிற்கு-விரோதமானது. “வர்க்க அடிப்படையில் சிந்திப்பது” மற்றும் “சமரசமற்ற முறையில் எதிரெதிரான போட்டி வர்க்கங்கள் இருப்பதை நம்புதல்” ஆகியவை உள்ளிட்ட சிந்தனைகளை தடைசெய்வதற்கு அரசாங்கம் விரும்புகிறது.

ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) ஒரு உறுப்பினரான அரசியல்வாதி வால்ட்டர் லூப்க்க (Walter Lübcke) மீதான நவ-நாஜித் தாக்குதலுக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, உள்துறை அமைச்சகத்தின் இந்த ஆவணம், நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. ஜேர்மனியில் வலது-சாரி பயங்கரவாத வலையமைப்புக்களை நிறுவுவது எந்த அளவுக்கு முன்னேறிய அளவில் உள்ளது என்பதை அந்தக் கொலை வெளிப்படுத்தியது. கடந்த காலத்தில் பலமுறைகள் குற்றம் உறுதி செய்யப்பட்டிருந்த நபரான Stephan E. இக்கொலைக்கான உடனடியான சந்தேக நபராக இருந்தார். இருபத்தைந்து வருடங்களாக வன்முறையான நவ-நாஜி அமைப்புகளது ஒரு வலைப்பின்னலில் அவர் உறுப்பினராய் இருந்து வந்திருக்கிறார். இந்த வலைப்பின்னலில் Verfassungsschutz இன் டஜன்கணக்கான தகவல்வழங்குபவர்கள் ஊடுருவி இருந்திருக்கின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் ஒன்பது பேரையும் ஒரு பெண் போலிஸ் அதிகாரியையும் கொன்ற நவ-நாஜி பயங்கரவாத NSU (தேசிய சோசலிச தலைமறைவு இயக்கம்) இந்த வலையமைப்பின் பகுதியாக இருந்தது.

Verfassungsschutz, பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டும் தனது சொந்த அதிகாரிகளைக் கொண்டு வலது-சாரி தீவிரவாத வட்டங்களுக்கு நிதியதவி வழங்கிக்கொண்டும் அதை வழிநடத்திக்கொண்டும் இருக்கும் அதேவேளையில், ஜேர்மன் அரசியல் வலது நோக்கி நகர்வதையும், வலதுசாரி கொலைக் கும்பல்கள் மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சி (AfD) ஐயும் எதிர்க்கின்ற எவரும் இந்த இரகசிய சேவையின் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றார்கள். இது SGP க்கு மட்டுமல்ல, இடது-சாரி இசைக்குழுக்கள், இளைஞர் குழுக்கள், கெம்னிட்ஸ் நகரில் உள்ள வலதுகளுக்கு எதிரான ராக் இசைக்குழுவும் கூட —இது சக்சோனி மாநிலத்தின் Verfassungsschutz ஆல் “இடது-சாரி தீவிரவாத” அடைமொழி கொண்டு அவதூறு செய்யப்பட்டது— இதே கதிக்கே இலக்காக்கப்படுகின்றன.

SGP இராணுவவாதத்தின் வளர்ச்சியையும், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் பாரிய விதத்தில் வலதுநோக்கி நகர்வதையும் எதிர்க்கின்ற காரணத்தினாலும், அதன் மூலமாக மக்களிடத்தில் இந்த நிகழ்வுகளுக்கு உண்டாகியிருக்கும் பரந்த எதிர்ப்பை வெளிப்படுத்தி காட்டும் காரணத்தினாலும் அது Verfassungsschutz இனால் குறிவைக்கப்பட்டிருக்கிறது. SGP, அரசு அமைப்புகளின் வலதுசாரி சதியை அம்பலப்படுத்தியிருப்பதோடு தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும் அது போராடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஹேர்பிரிட் முங்க்லர் மற்றும் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி போன்ற பேராசிரியர்கள் மூலமாக பல்கலைக்கழகங்களில் வலது-சாரி தீவிரவாத மற்றும் இராணுவவாத சித்தாந்தங்களுக்கு புத்துயிரளிக்கப்படுவதை அது எதிர்த்து வந்திருக்கிறது.

இந்தப் போராட்டத்தின் காரணத்தினால், கட்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரந்த ஆதரவை வென்றெடுத்திருப்பதோடு அதன் இளைஞர் அமைப்பான சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பின் (IYSSE) வேலைகளை மிகப்பெரும் அளவில் விரிவுபடுத்துவதற்கும் அதனால் இயலுமானதாக இருந்திருக்கிறது. சமீப ஆண்டுகளில், அது ஆளும் வர்க்கத்திடம் இருந்து அதிகரித்த தாக்குதல்களுக்கு இலக்கானது. கட்சியினதும் மற்றும் IYSSE இன் பொதுக் கூட்டங்கள் மீது அடையாள இயக்கம் (Identitarian Movement) மற்றும் AfD ஐச் சேர்ந்த வலது-சாரி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; முன்னணி பழமைவாத செய்தித்தாளான Frankfurter Allgemeine Zeitung போன்ற வலது-சாரி ஊடகங்களும், மற்றும் செல்வாக்கான அரசியல் இதழான சிசரோவும் (Cicero) எமக்கு எதிரான அவதூறு கட்டுரைகளை பிரசுரித்திருக்கின்றன.

இப்போது ஒட்டுமொத்த அரசு எந்திரமும் SGP க்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளது. கட்சியை அரசியலமைப்புக்கு விரோதமானதாக முத்திரை குத்துவதற்கு உள்துறை அமைச்சகம் ஏராளமான வளங்களை செலவிட்டுள்ளது. SGP மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலுள்ள அதன் சகோதரக் கட்சிகளது அரசியல் அறிக்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்வதன் அடிப்படையில் கட்சிக்கு எதிரான ஒரு 56 பக்க ஆவணம் ஒன்றைத் தயாரிக்க ஒரு உயர்-மட்ட சட்ட நிறுவனம் ஒன்றை அது பணிக்கு அமர்த்தியது.

ஆயினும் SGP மீதான தாக்குதலானது, மிகப் பரந்த அளவில், அனைத்துவிதமான முற்போக்கான இயக்கத்திற்கும் எதிரானதாகும். இத்தாக்குதல் ஜேர்மனியில் எதேச்சாதிகாரம் மற்றும் பாசிசத்தின் மிகமோசமான பாரம்பரியத்தின் வழியை தொடர்கின்றது அரசாங்கத்தின் இந்த வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமானால், அது ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை அமைக்கும். சமூக சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் அழிவு, அரசு ஒடுக்குமுறை, இராணுவ கட்டியெழுப்பல் மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் எந்தவொரு அநீதிக்கு எதிராக போராடும் எவரொருவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு அது பயன்படுத்தப்படலாம்.

எனவே, அதி-வலதுகளின் வளர்ச்சியை ஏற்காத மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாய் எழுந்து நிற்கும் அனைவரும் Verfassungsschutz இன் இந்தத் தாக்குதலை எதிர்க்க வேண்டும் என்றும், SGP தாக்கல் செய்திருக்கும் இந்த சட்டரீதியான புகாரை ஆதரிக்க வேண்டும் என்றும், நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். SGP மற்றும் பிற அத்தனை இடது-சாரி அமைப்புகளின் மீதுமான கண்காணிப்பை Verfassungsschutz நிறுத்த வேண்டும் என்றும், அத்துடன் வலது-சாரி ஜனநாயக-விரோத சதிகளின் விளைநிலமாய் திகழும் இந்தப் பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.

கூட்டரசாங்கம் எதை தடைசெய்ய விரும்புகிறது?

SGP இன் புகாருக்கான பதிலிறுப்பில், ஜேர்மன் அரசாங்கம் எவ்விதமான குற்றங்களுடனும் தொடர்பற்ற, அபிப்பிராயங்களின் (Gesinnungsstrafrecht) அடிப்படையில் சட்ட வழக்கினை நடத்தும் தனது பாரம்பரியத்திற்கு திரும்புகின்றது. இது நாஜிக்களின் படி, ஒரு குற்றத்தை செய்ய சிந்திப்பதற்கான தண்டனையில் (Willenstrafrecht) அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது. அரசாங்கம் SGP மீது, சட்டவிரோத நடவடிக்கைகள், வன்முறையைத் தூண்டுவது அல்லது எந்தவிதமான தீவிரவாத செயல்கள் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை. ஒட்டுமொத்த ஆவணத்திலும் இதுபோன்றதொரு ஒரேயொரு குற்றச்சாட்டும் கூட முன்வைக்கப்படவில்லை. SGP இன் முயற்சிகளும் நோக்கங்களும் தாராளவாத ஜனநாயக ஒழுங்கிற்கு எதிரானதாக இருக்கின்றன என்கிறதான குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க சமூகம் குறித்த அதன் பார்வை, வரலாறு குறித்த அதன் பார்வை, அதன் அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் அவற்றில் இருந்து அது எடுக்கப்படுகின்ற வேலைத்திட்ட முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில், இடது சிந்தனையின் எந்த வடிவமும் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படுவதற்கு இலக்காகக் கூடும். “ஒரு ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமுதாயத்திற்கான போராட்டமானது” “அடிப்படைச் சட்டத்தின் மையமான விழுமியங்களுக்கு” முரணாய் அமைந்திருப்பதாக ஆவணத்தின் தொடக்கத்திலேயே அரசாங்கம் கூறி விடுகிறது. அதனையொட்டிய 40 பக்கங்கள், கூட்டரசாங்கத்தின் கருத்துப்படி அரசியலமைப்பை மீறுவதாய் அமைந்திருக்கும் கண்ணோட்டங்களது ஒரு நெடிய பட்டியலைக் கொண்டிருக்கின்றன.

1. கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் ஏங்கெல்ஸ், விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி, கார்ல் லீப்னெக்ட், ரோஸா லுக்செம்பேர்க் அல்லது வேறு எந்த செவ்வியல் மார்க்சிஸ்டுகளையும் நோக்கிய எந்த சாதகமான குறிப்பும், அரசாங்கம் மற்றும் அதன் வழக்கறிஞர்களின் கருத்துப்படி, அரசியலமைப்புக்கு விரோதமானதாகும். குறிப்பாக, மார்க்ஸால் எடுத்துரைக்கப்பட்ட சமுதாயம் மற்றும் வரலாறு குறித்த சடவாதக் கருத்தாக்கத்திற்கு இது பொருந்தும். இப்போது அரசியலமைப்புக்கு விரோதமான செயலாக கருதப்பட்டு வருகின்ற, 1956 இல் KPD (ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி) தடை செய்யப்பட்டதை குறிப்பிட்ட இந்த ஆவணம், “வர்க்கங்களாலான ஒரு சமூகம் குறித்த சிந்தனையும்.... வர்க்க சிந்தனையாலும் மற்றும் அதனால் விளையக் கூடிய வர்க்கப் போராட்டத்தில் வேரூன்றியதாக இருக்கின்ற அரசு மற்றும் சமூகம் குறித்த மார்க்சிச-லெனினிச கருத்தாக்கமும், தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கிற்கும், மனிதனைக் குறித்த அதன் கருத்தாக்கத்திற்கும் இணக்கமற்றதாய் இருக்கிறது” என்று வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.

2. முதலாளித்துவம் வர்க்கங்களை படிப்படியாக நல்லிணக்கப்படும் நிலைக்கு கொண்டுசெல்லும் என்பதான கருத்தை சந்தேகிப்பதும் கூட அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்கிறது அரசாங்கம். KPD ஐ தடை செய்த தீர்ப்பில் இருந்தான ஒரு வார்த்தைமாறாத மேற்கோளில், ஆவணம் தெரிவிக்கிறது: “தாராளவாத ஜனநாயகமானது குடிமக்களின் சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை படிப்படியாக முன்னெப்போதினும் மிகப்பெரும் பலனளிக்கும் நிலைக்கு விருத்தி செய்வதும் இந்தக் கோட்பாடுகளை சாத்தியமான உயரிய அளவுக்கு உயர்த்துவதும் சாத்தியம் என்ற கண்ணோட்டத்தால் நிரப்பப்பட்டுள்ளது.”

வர்க்கங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் குறித்த அரசினால் திணிக்கப்படுகின்ற இந்த நம்பிக்கையை எதிர்க்கின்ற, மற்றும் பல தசாப்தங்களாய் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்திருக்கும் சமூக சமத்துவமின்மைக்கு கவனத்தை ஈர்க்கும் எவரொருவரும் அரசியலமைப்பின் எதிரியாக அறிவிக்கப்படுகிறார். இந்த அடிப்படையில், தோமஸ் பிக்கெட்டி போன்ற தாராளவாத சமூகவியலாளர்களின் புத்தகங்கள், வறுமை மீதான ஜேர்மன் அரசாங்கத்தினது அறிக்கையும், அத்துடன் வறுமையிலும் சமூக சமத்துவமின்மையிலும் ஒரு பாரிய அதிகரிப்பைக் காட்டுகின்ற எண்ணிலடங்கா புள்ளிவிவரங்கள் அனைத்தும் கூட தடைசெய்யப்பட வேண்டும்.

3. இடது கட்சி (Die Linke) உள்ளிட்ட ஸ்தாபகக் கட்சிகளுக்கு SGP காட்டுகின்ற சமரசமற்ற எதிர்ப்பு, இந்தக் கட்சிகளுடன் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அதன் அடிப்படையான மறுப்பு ஆகியவையும் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி அரசியலமைப்புக்கு விரோதமானவை.

SGP, “மற்ற வர்க்கங்களின் பிரதிநிதிகளுடன் ‘தொழிலாள வர்க்கம்’ சமரசங்கள் செய்வதை’ நிராகரிக்கிறது” என்ற காரணத்தாலும் “இராணுவவாதம், ஆயுதப்பெருக்கம் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளது” நோக்கத்துடன் “மக்களுக்கு எதிரான ஒரு சதியில்” ஈடுபடுவதாக ஸ்தாபகக் கட்சிகள் மீது அது குற்றம்சுமத்துகின்ற காரணத்தாலும் SGP மீது இந்த அறிக்கை தாக்குதல் நடத்துகிறது. மேலும் SPD ஐ “பிரத்யேகமாக வங்கிகள், பெரும் நிறுவனங்கள், உளவுப் பிரிவுகள் மற்றும் Bundeswehr ஆகியவற்றின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற வலதுசாரி அரசு கட்சி” என்று வரையறை செய்வதும், அது “அமுல்படுத்திய அல்லது ஆதரித்த சீர்திருத்தங்களுக்கு கிடைத்த பொருத்தமான வெறுப்பையே” முகம்கொடுப்பதாகக் கூறுவதும் கூட அரசியலமைப்பை மீறிய செயலாகக் கூறப்படுகிறது.

வர்க்க நல்லிணக்கம் குறித்த இந்த அரசினால் திணிக்கப்படும் நம்பிக்கையானது Volksgemeinschaft (மக்கள் சமூகம்) குறித்த நாஜி சித்தாந்தத்தை ஒத்திருக்கிறது. பின்வரும் “நெருப்பு சத்தியப்பிரமாண” சகிதமான 1933 மே புத்தக எரிப்புகளுக்கு இயக்கமளித்த அதே உத்வேகத்தால் இது ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் “வர்க்கப் போராட்டம் மற்றும் சடவாதத்திற்கு எதிராக, Volksgemeinschaft க்கும் சிறந்த வாழ்விற்குமாக! மார்க்ஸ் மற்றும் கவுட்ஸ்கியின் எழுத்துக்களை நான் தீயிலிடுகிறேன்.”

4. ஆனால் உள்துறை அமைச்சகம் மார்க்ஸ் மற்றும் கவுட்ஸ்கியுடன் நின்றுவிடவில்லை. நாஜிக்கள் எப்படி எழுத்தாளர் கூர்ட் துசோஸ்ஸ்கி (Kurt Tucholsky) மற்றும் பத்திரிகையாளர் கார்ல் ஃவோன் ஓஸியெட்ஸ்கி (Carl von Ossietzky) ஆகியோரது புத்தகங்களையும் கூட எரித்தார்களோ, அதைப்போலவே இப்போது அரசாங்கமானது ஆயுதப்பெருக்கத்தை மற்றும் போர்வெறி கூச்சலை விமர்சனம் செய்கின்ற அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கின்ற எவரொருவரையும் அரசியலமைப்பின் எதிரியாக அறிவிக்கிறது. மற்றவற்றுடன் சேர்த்து, “’முதலாளித்துவத்தை’ தூக்கியெறிந்து சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கை”, “’ஏகாதிபத்தியம்’ மற்றும் ’இராணுவவாதம்’ எனச் சொல்லப்படுவனவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்” மற்றும் “தேசிய அரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிராகரிப்பு” ஆகியவற்றையும் “தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கிற்கு எதிரான முயற்சிகள்” என்று அது விவரிக்கிறது.

5. நாஜி ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்துகின்ற எவரொருவரும் கூட, ஜேர்மன் அரசாங்கத்தின் பார்வையில், ஒரு இடதுசாரி தீவிரவாதி. SGP வன்முறையைப் பயன்படுத்த தயாராக இருப்பதாகக் காட்டுவதற்காக, இந்த ஆவணம், மற்ற எல்லாவற்றினும், 1938 நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில், “பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில்” “பாட்டாளி வர்க்கம் ஆயுதபாணியாக்கப்பட” அறிவுறுத்துகின்ற பகுதியை மேற்கோளிடுகிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி பார்த்தால், நாஜிக்களுக்கு எதிரான கிளர்ச்சியின் தலைவர்கள், கிஜோர்க் எல்ஸ்னர் மற்றும் தோல்வியடைந்த 1944, ஜூலை 20 சதியின் அங்கத்தினர்கள் உள்ளிட ஹிட்லரைக் கொல்ல முயன்றவர்கள் அனைவரும் இன்று தூக்குக்கயிறுக்கு முகம்கொடுக்க வேண்டியதாயிருக்கும்.

உள்துறை அமைச்சகத்தின் தடைப் பட்டியலினது தர்க்கரீதியான இறுதிவிளைவு ஒரு பாசிச சர்வாதிகாரமாகும். மக்களின் பெரும்பான்மையினர் அரசியல் நிகழ்வுகளில் செயலூக்கத்துடன் தலையிடுவதையும் சோசலிசக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை அவர்கள் உருமாற்றுவதையும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தடுப்பதையே இது அர்த்தமளிக்கிறது. ஆகவே தான் உள்துறை அமைச்சகம், ஒரு சோசலிசப் புரட்சியானது, “மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடாக இருக்க முடியாது, ஏனென்றால் [புரட்சியில்] மக்களின் அநேக பகுதியினர் தங்களது சிந்தனைகளை நடைமுறைப்படுத்துகையில், அதேநேரத்தில் மக்களின் பிற பகுதிகளது அரசியலமைப்பு ரீதியான உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன” என்று கூறுகிறது. இது “சோசலிசப் புரட்சியின் பாதையில் வன்முறை பயன்படுத்தப்பட்டாலும் அல்லது பயன்படுத்தப்படாவிட்டாலும் சரி” இது பொருந்தும் என்று ஆவணம் தெரிவிக்கிறது.

இவ்வாறாக, வங்கிகளையும் உற்பத்தி சாதனங்களையும் உடைமையாக்கிக் கொள்வதற்கு ஒரு பெரும்-செல்வந்த உயரடுக்கு கொண்டுள்ள உரிமை ஒரு மிகச்சிறந்ததாக அறிவிக்கப்படுகிறது, அதன்மீதான எந்த விமர்சனமும் ஒரு நடத்தைமீறலாக ஆக்கப்படுகிறது. இதுமாதிரியான வாதத்தில் இருந்தான இறுதி விளைவுகளை ஹிட்லர், பிராங்கோ மற்றும் பினோசே போன்ற சர்வாதிகாரிகளே வரைந்துள்ளனர்: பெரும்பான்மை மக்கள் சோசலிச சிந்தனைகளை நோக்கிச் சாய்ந்தாலும், முதலாளித்துவத்தைப் பாதுகாக்கப்பதற்கான மிகக் கொடூரமான ஒடுக்குமுறை வழிமுறைகளைப் பயன்படுத்துவதும் கூட நியாயப்படுத்தப்படுகின்றது. “தாராளவாத ஜனநாயக ஒழுங்கமைப்பு” என்று கூறுவதில் ஜேர்மன் அரசாங்கம் அர்த்தப்படுத்துவது, அடிப்படைச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட விட்டுக்கொடுக்கமுடியாத ஜனநாயக உரிமைகளை அல்ல, மாறாக முதலாளித்துவ சொத்துக்களையும் அதனைப் பாதுகாக்கின்ற அரசு எந்திரத்தையும் ஆகும்.

அதேநேரத்தில், உள்துறை அமைச்சகம் முதலாளித்துவத்தை தூக்கிவீசும் நோக்கமுடைய ஸ்தூலமான நடவடிக்கைகளுடன் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. “பொது நிகழ்வுகள், பிரசுரங்களை வெளியிடுதல் மற்றும் தேர்தல்களில் பங்கெடுத்தல்” ஆகியவையும் கூட அவை சோசலிச கருத்துக்களைப் பரப்ப சேவைசெய்யுமாயின் அவையும் அரசியலமைப்புக்கு விரோதமானவையே. அதற்கு பின்வரும் காரணம் கொடுக்கப்படுகின்றது: “பிரதிவாதியை [SGP] போன்ற ஒரு அமைப்பு, அதன் இலக்குகளில், தாராளவாத ஜனநாயக ஒழுங்கிற்கு எதிராக செலுத்தப்படுவதாக இருக்குமாயின், அப்போது அதுதொடர்பான செயலூக்கமான நடத்தையானது தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கிற்கு எதிரான முயற்சிகளைக் கொண்டதாய் இருக்கிறது.”

“செயலூக்கமிக்க நடத்தை”க்கான உதாரணங்களாக, ஜேர்மன் அரசாங்கம் குறிப்பாக, “உலக சோசலிச வலைத் தளத்தில் உலக அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் குறித்த அன்றாட பகுப்பாய்வுகள் வெளியிடப்படுவது” மற்றும் “ஜேர்மன் பேசும் உலகின் மிகப்பெரும் ட்ரொட்ஸ்கிச புத்தக பதிப்பகமாக” இருக்கும் கட்சியின் பதிப்பகம் Mehring Verlag “ட்ரொட்ஸ்கியின் படைப்புகளையும் அத்துடன் டேவிட் நோர்த்தின் படைப்புகளையும்” பிரசுரம் செய்வது ஆகியவற்றை குறிப்பிடுகிறது. கட்சியின் வலைத் தளம், முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்குகள் மற்றும் யூடியூப் சானல் ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன.

சோசலிச-விரோதச் சட்டங்களும், Willenstrafrecht சட்டமும் மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தடையும்

ஒருவர் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தின் அடிப்படையில் (Gesinnungsjustiz) தண்டனை கொடுக்கும் இத்தகைய வழக்காடல்களின் மூலம், ஜேர்மன் அரசாங்கம் 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பின்நோக்கிச் செல்லக் கூடிய ஒரு ஜனநாயக-விரோத பாரம்பரியத்தில் தன்னை அமர்த்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 1851 கொலோன் நகர கம்யூனிஸ்ட் விசாரணையிலும் 1872 ஆகஸ்ட் பேபலுக்கு எதிரான லைப்ஸிக் நகர அதியுயர் துரோக விசாரணையிலும் மார்க்சிஸ்டுகள் பிரத்தியேகமாக அவர்கள் கொண்டிருந்த தீர்க்கமான அபிப்பிராயங்களுக்காக மட்டுமே கூட தண்டிக்கப்பட்டனர். 1878 முதல் 1890 வரையான காலத்தில், சோசலிச-விரோத சட்டங்கள் ஒட்டுமொத்த ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியையும் (SPD) சட்டவிரோத நிலைக்குள் தள்ளின. “பொது அமைதிக்கு, குறிப்பாக மக்களின் வெவ்வேறு வர்க்கங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு, அபாயமேற்படுத்துகின்ற ஒரு விதத்தில், அப்போதுள்ள அரசினை அல்லது சமூக ஒழுங்கினைத் தூக்கிவீசுவதற்கு, சமூக ஜனநாயக, சோசலிச அல்லது கம்யூனிச முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வெட்டவெளிச்சமான” அத்தனை அமைப்புகளுக்கும் எதிராய் இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.

Willensstrafrecht (குற்றத்தின் விளைவு அல்லாது குற்றம் செய்வதற்கான விருப்பத்தின் அடிப்படையில் தண்டனை வழங்குதல்) இன் இந்த பிற்போக்கு சட்ட பாரம்பரியம், நாஜி சட்ட அமைப்புமுறையில் ஒரு இன்றியமையாத பாத்திரம் வகித்தபோது அதன் உச்சகட்டத்தை எட்டியது. ஒருவரைத் தண்டிப்பதற்கு, அவர் உண்மையில் குற்றமிழைத்திருக்க வேண்டும் என்பது இனியும் அவசியமில்லாமல் ஆனது. மாறாக, குற்றம் சுமத்தப்பட்டவரின் தரப்பில் “குற்றமிழைப்பதற்கான விருப்பம் (verbrecherischer Willen)” இருந்ததை நிரூபித்தாலே போதுமென்றானது. அரசாங்கம் அரசியல் எதிரிகள் அனைவரையும் அழித்தொழிப்பதற்கு, அவர்களை வதை முகாம்களில் அடைத்துக் கொலைசெய்வதற்கு இயலும் விதத்தில், குற்றவியல் வழக்குமுறையானது குற்றம்சாட்டப்பட்டவர் எந்தவிதமான ஸ்தூலமான நடவடிக்கைகளை எடுப்பதிலும் இருந்தும் அதிகமான அளவில் பிரிக்கப்பட்டு விட்டது.

ஏற்கனவே 1930களில், புதிதாக உருவாக்கப்பட்டிருந்த நாஜி மக்கள் நீதிமன்றம் (Volksgerichtshof), கம்யூனிஸ்டுகள் இறுதியாக அவர்களது தீர்க்கமான நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே தண்டிக்கப்பட முடியும் என்ற ஒரு விதத்தில் அரசதுரோகப் பத்திக்கு பொருள்விளக்கம் கொடுத்தது. 1940களுக்குள்ளாக, எந்தவிதமான அதிருப்தியும் அரசுக்கான எதிர்ப்பாக பொருள்விளக்கம் கொடுக்கப்பட்டு, அதுவே ஒரு அரக்கத்தனமான தீர்ப்புக்குப் போதுமென்றான நிலை வந்திருந்தது. “தலைவர்” குறித்த ஒரு நகைச்சுவை, இறுதி வெற்றி குறித்த ஒரு சந்தேகம், இன்னும் காலக்கிரமமாய் தாமதமான இரயில்களை குறித்த ஒரு கருத்தும் கூட மரணகரமான பின்விளைவுகளைக் கொண்டுவர முடியும் என்றானது.

நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், இதன் தொடர்ச்சியானது மேலோட்டமாக மட்டுமே  முறிவடைந்தது. ஒரு குறுகியகால “நாஜிமய அகற்ற”த்திற்குப் பின்னர், உயரடுக்கினர் மறுபடியும் நீதித்துறையிலும், போலிஸிலும், நிர்வாகத்திலும், பல்கலைக்கழகங்களிலும் மற்றும் வணிகத்திலும் தமது பழைய அலுவலகங்களுக்குத் திரும்பினர். நூரெம்பேர்க் இனச் சட்டங்கள் (Nuremberg Race Laws) இன் இணை ஆசிரியரான ஹான்ஸ் குளோப்க, போருக்குப் பிந்தைய மேற்கு ஜேர்மனியின் முதல் சான்சலரான கொன்ராட் அடினோவர் இன் கீழ், சான்சலர் அலுவலகத் தலைவராக ஆனார். இந்த பதவியில், ஆள்நிர்வாகக் கொள்கை அத்துடன் BND (வெளிநாட்டு உளவு) மற்றும் Verfassungsschutz (உள்நாட்டு உளவு) ஆகிய உளவு சேவைகளின் உருவாக்கம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை குளோப்கவின் பொறுப்பின் கீழ் இருந்தன.

1950 ஆம் ஆண்டில், ஒரு விரிவான குற்றவியல் சட்டத்திலான திருத்தம், ஒருவர் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தின் அடிப்படையிலான தண்டனையை (Gesinnungsjustiz) மறுபடியும் அறிமுகப்படுத்தியது. மூன்றாம் ரைய்ஹ்கில் நீதித்துறை அமைச்சகத்தில் ஒரு துறைத் தலைவராக இருந்த வகையில் அரசியல் குற்றவியல் சட்டத்திற்கு பொறுப்பானவராய் இருந்திருந்த Dr. Josef Schafheutle மூலம் இந்தத் திருத்தம் செதுக்கப்பட்டிருந்தது. நாஜிக்களுக்கு கீழே அநீதியாக தீர்ப்பளித்த அதே நீதிபதிகள்தான் இப்போது மறுபடியும் கம்யூனிஸ்டுகளை அவர்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கினர். கம்யூனிஸ்டுகள் மீதான வேட்டை 1956 இல் இழிபுகழ்பெற்ற விதத்தில் ஜேர்மன் கூட்டரசாங்க அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் KPD தடை செய்யப்பட்டதில் உச்சமடைந்தது. இப்போது அந்தத் தடையானது பழைய காப்பகங்களில் இருந்து எடுத்து வரப்பட்டு இப்போதைய கூட்டரசாங்கத்தினால் SGPக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சகத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஆவணத்திற்கு மிக முக்கியமான சட்டரீதியான கட்டமைப்பாக இது சேவைசெய்கிறது.

KPD தீர்ப்பு ஒருபோதும் முறைப்படியாக திரும்பப்பெறப்படவில்லை என்றபோதும் கூட, அது அவமதிப்பை சம்பாதித்த விடயமாய் நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கிறது. கூட்டரசாங்க அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைவரான, ஜூட்டா லிம்பாஹ், 1996 இல் கூறுகையில், அரசியலமைப்பு குறித்த இப்போதைய கண்ணோட்டங்களின் அடிப்படையில் என்றால், தடையை நான் நிராகரித்திருப்பேன் என்றார். அரசு ஆவணக் காப்பகங்களில் முன்னர் அணுகக்கிடைக்காதிருந்த கோப்புகளின் அடிப்படையில் KPDக்கு எதிரான வழக்குவிசாரணை மீதான ஒரு முழுமையான ஆய்வு செய்திருப்பவரான வரலாற்றாசிரியரான ஜோசெப் ஃபோஸ்போத், 2017 இல் வெளியான அரசியலமைப்புக்கு விரோதம்! (Verfassungswidrig!) என்ற அவரது புத்தகத்தில், KPD தீர்ப்பானது அப்பட்டமான அரசியலமைப்பு மீறல் என்றும் அது அரசியல்ரீதியான காரணங்களால் ஊக்குவிக்கப்பட்டதாக இருந்தது என்றும் முடிவு கூறியிருந்தார். “இந்த வழக்கு விசாரணையில், சட்டவாக்க, சட்டநடைமுறைப்படுத்தல், நீதித்துறை என்ற மூன்று அதிகாரங்களுக்கு இடையிலான பங்கீடு அங்கே இருக்கவில்லை, மாறாக கூட்டரசாங்கத்திடம் இருந்தான அழுத்தத்தின் கீழ், KPD தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஒரேயொரு அரசு மட்டுமே இருந்தது” என்று ஃபோஸ்போத் எழுதுகிறார்.

இந்த வழக்குவிசாரணையில், நாஜிக்களின் கீழ் கம்யூனிஸ்டுகளை தண்டிப்பதில் ஒரு செயலூக்கமான பாத்திரத்தை வகித்த தீவிரப்பட்ட வலதுசாரிகளின் அதே வட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களே அடினோவர் அரசாங்கத்தின் தரப்பில் வழக்காடினர். அரசாங்க சட்ட அலுவலகத்தின் (Prozessführungsstelle) தலைவராக இருந்தவர் Hans Ritter von Lex; இவர், பவேரிய மக்கள் கட்சியைச் சேர்ந்த (BVP) நாடாளுமன்ற (Reichstag) உறுப்பினராக இருந்தசமயத்தில், அனைத்து சட்ட அதிகாரங்களையும் அடோல்ஃப் ஹிட்லருக்கு இயல்பாக கையளிக்கும் 1933 மார்ச் 23 வழிவகைச் சட்டத்திற்கு (Enabling Act) தனது கட்சியின் சம்மதத்தை அறிவித்திருந்தார். அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக ஹிட்லருடான ஒரு தனிப்பட்ட உரையாடலில், “ஜேர்மனியில் மார்க்சிசத்தை அழித்தொழிப்பது” என்னும் அவரது இலட்சியத்தை தானும் பகிர்ந்து கொள்வதாக அவருக்கு உறுதியளித்திருந்தார்.

“கடுமையான வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலமாய் உள்ளிட, இந்த மாசுபாட்டில் இருந்து ஜேர்மன் மக்களை விடுதலை செய்திட வேண்டும் என்பதே, தேசப்பற்று சிந்தனையுடைய அத்தனை வட்டங்களின் ஒரு பொதுவான கோரிக்கையாக இருக்கிறது” என்றார் அவர்.

ஒரு வலது-சாரி தீவிரவாத சதி

ஒருவர் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தின் அடிப்படையிலான வழக்காடலுக்கு (Gesinnungsjustiz) திரும்புவது மற்றும் KPD மீதான தடையை மீண்டும் செயலுக்குக் கொண்டுவருவது ஆகியவற்றின் மூலம் ஆளும் வர்க்கம் இந்த பழுப்பு நிற மரபுகளை, பாசிச பாரம்பரியங்களை கையிலெடுத்துக் கொண்டிருக்கிறது. Verfassungsschutz அறிக்கையும் உள்துறை அமைச்சக வழக்கறிஞர்களது ஆவணமும் பொதுக் கருத்தை மிரட்டுவதையும் முதலாளித்துவம், தேசியவாதம், ஏகாதிபத்தியம், இராணுவவாதம் மற்றும் AfDக்கான அத்தனை எதிர்ப்பையும் “இடது-சாரி தீவிரவாதம்” மற்றும் “அரசியலமைப்பு விரோதம்” என்று கூறி குற்றமாக்குவதையும் நோக்கமாய் கொண்டு அரசு எந்திரத்தில் நடத்தப்படுகின்ற ஒரு வலது-சாரி தீவிரவாத சதியின் விளைபொருட்களாய் இருக்கின்றன.

2017 இன் Verfassungsschutz அறிக்கையை வரைவு செய்ததில் வலதுசாரி தீவிரவாத வட்டாரங்கள் பங்குபெற்றன என்பது இப்போது தெரிந்த விடயமாகி விட்டது. அப்போது Verfassungsschutz இன் தலைவராக இருந்த ஹான்ஸ்-கியோர்க் மாஸன் AfD கட்சியின் முன்னணிப் பிரதிநிதிகளை பலமுறை சந்தித்திருந்தார், அறிக்கையை அவர்களுடன் கலந்தாலோசித்திருந்தார். 2018 நவம்பரில், கெம்னிட்ஸ் நகரில் நடைபெற்றவை தீவிர வலதுசாரிக் கலவரங்கள் என்பதை அவர் மறுத்ததையும் “SPDக்குள்ளாக இடதுசாரி தீவிரவாத சக்திகள்” இருப்பதாக அவர் கண்டனம் செய்ததையும் அடுத்து மாஸன் தற்காலிக ஓய்வுக்கு அனுப்பப்பட்டார். இப்போது ஆளும் CDU இன் ஒரு வலது-சாரி உறுப்பினராக மாஸன், AfD உடன் அரசாங்கக் கூட்டணிகளை உருவாக்குவதற்கு பகிரங்கமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்.

Verfassungsschutz, அதன் புதிய தலைவரான தோமஸ் ஹால்டன்வாங் இன் கீழும் அதே பாதையை தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஆகவே, புதிய 2018 Verfassungsschutz அறிக்கையிலான வலது-சாரி தீவிரவாதம் குறித்த அத்தியாயத்தில் AfD குறித்தோ, அதன் தலைவர்களில் ஒருவரான Björn Höcke தலைமையிலான அதன் பாசிச பிரிவு குறித்தோ அல்லது அக்கட்சியை சூழ்ந்திருக்கும் நவ-நாஜி வட்டாரத்தைக் குறித்தோ ஒரேயொரு வார்த்தையும் கூட மறுபடியும் அங்கே காணவில்லை. அவர்கள் “இடது-சாரி தீவிரவாதி”கள் என்று கூறப்படுவோருக்கு “பலியானவர்”களாக மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர். அந்த அறிக்கை வசனம்மாறாமல் இவ்வாறு தெரிவிக்கிறது: “2018 இல், இடதுசாரி தீவிரவாதிகளால் பொதுவாக வலதுசாரி தீவிரவாதிகளாக அறிவித்து வந்திருக்கிற AfD (Alternative für Deutschland) இனையும் மற்றும் வலது-சாரி தீவிரவாதக் கட்சிகளது அங்கத்தவர்களை விட, இடது-சாரி தீவிரவாதிகளது தீவிரமயமாக்கலே தொடர்ந்தும் கவனப்புள்ளியாக இருந்தது.”

இந்த அறிக்கை, காவல்துறையிலும் ஜேர்மன் இராணுவத்திலும் (Bundeswehr) இருக்கும் விரிந்த வலது-சாரி பயங்கரவாத வலைப்பின்னல்களை திட்டமிட்டு கண்டுகொள்ளாமலும் தவிர்த்தும்விடுகிறது. ஜேர்மன் இராணுவத்தில் ஒரு பாசிச சதிக்குத் தலைவராய் இருந்த பிராங்கோ ஏ. அல்லது அதி-வலது பயங்கரவாத NSU வலைப்பின்னலின் தொடர்ச்சியான NSU 2.0 போன்ற வார்த்தைகளை அறிக்கையில் தேடினால் களைத்து ஓய வேண்டியது தான். வெளிநாட்டினரையும் அரசியல் அதிருப்தியாளர்களையும் தாக்கியதுடன் மட்டுமின்றி, 2018 ஜேர்மன் ஒற்றுமை தினத்தில் ஆயுத “நடவடிக்கை”க்கும் வலது-சாரி தீவிரவாத கவிழ்ப்புக்கும் கூட திட்டங்களைக் கொண்டிருந்த கெம்னிட்ஸ் புரட்சி (Revolution Chemnitz) பயங்கரவாதக் குழுவை வெறுமனே ஒரு “போராளிக்குழு”வாக Verfassungsschutz தணித்துக் காட்டுகிறது. NSU உடன் நெருக்கமான உறவுகளைப் பராமரித்து வந்ததும் Lübcke ஐ கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படுபவர் நெருக்கமான தொடர்பில் இருந்ததுமான “Combat 18” வலது-சாரி தீவிரவாத பயங்கரவாத வலைப்பின்னல் புதிய Verfassungsschutz அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

இதற்கு பதிலாக, SGP மறுபடியும் “இடது-சாரி தீவிரவாதக் கட்சி”யாகவும் “கண்காணிப்பு இலக்காகவும்” பட்டியலிடப்பட்டிருக்கிறது. அரசியல் சிந்தனைகள் மீது சட்டரீதியான துன்புறுத்தலை நடத்துகின்ற உணர்வுடன், இரகசிய சேவையானது இந்த பொருத்தமான அத்தியாயத்தில், SGP போன்ற “வறட்டுசித்தாந்த இடது-சாரி தீவிரவாத” அமைப்புகள், அவற்றின் “விரிவான பகுப்பாய்வுகளது” துணையுடன், வன்முறை நோக்கம் கொண்ட குழுக்களுக்கு சித்தாந்த உத்வேகம் அளிக்கக் கூடிய ’புத்திஜீவித தீமூட்டுவோராக’ (geistige Brandstifter) செயல்படும் “சாத்தியவள”த்தை கொண்டிருக்கின்றன என்ற கருத்தையும் சேர்த்துள்ளது. 

மார்க்சிச பகுப்பாய்வுகளையும் சோசலிச சிந்தனைகளையும், “தீமூட்டுவது” மற்றும் “வன்முறை”க்கு ஒப்பிடுகின்ற Verfassungsschutz, அதேவேளையில் நவ-பாசிச கொலைக் கும்பல்களை கட்டியெழுப்பிக் கொண்டும் மூடிமறைத்துக் கொண்டுமிருக்கிறது! NSU ஐ சுற்றிய வட்டத்தில் மட்டும், பாதுகாப்பு அதிகாரிகள் Verfassungsschutz க்காக 40க்கும் அதிகமான ஊடுருவலாளர்களை பணியமர்த்தியுள்ளனர். அப்படியானதொரு ஊடுருவலாளர் NSU இன் கொலைக் களம் ஒன்றில் பிரசன்னமாகவும் இருந்தார். உள்நாட்டு உளவு முகமையானது “ஜேர்மனியின் மிக அபாயகரமான அரசாங்க முகமை”யாக இருக்கிறது என்றும் அது “சீர்திருத்த இயலாதது” என்றும் ஜேர்மன் தினசரியான Die Welt இன் பத்திரிகையாளர் டெனிஸ் யூசெல் ஜூலை தொடக்கத்தில் ஒரு பொது உரையாடலில் அறிவித்தார். Verfassungsschutz “அரசுக்குள் ஒரு அரசாக” வளர்ச்சி கண்டிருப்பதாலும் “கட்டுப்படுத்த முடியாததாக நிரூபணமாகி” இருப்பதாலும் அதனை ஒழிக்க வேண்டும் என்று வார இதழான Stern அழைப்பு விடுத்திருக்கிறது.

SGP மீதான தாக்குதல் மூலமாக, இந்த குற்றவியல் அரசாங்க முகமையானது, நடப்பு பிற்போக்கு சமூக மற்றும் அரசியல் சூழலை விமர்சனம் செய்கின்ற எவரொருவர் மீதும் சட்ட நடவடிக்கைக்கு அடிப்படையை வழங்கக் கூடிய விதத்தில் சிந்தனைக் குற்றங்கள் (thought crimes) மீதான ஒரு புதியவகை சட்ட வழக்காடலுக்கு முன்னுதாரணம் உருவாக்க விரும்புகிறது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் முதல் மார்க்சிச இலக்கியங்களை பதிப்பிக்கும் புத்தக விற்பனையாளர்கள், அல்லது விமர்சனக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் வரை சட்டத் துன்புறுத்தலுக்கு இலக்காவார்கள்.

நாஜிகளின் வதை முகாமுக்கு தான் சென்ற விதத்தை விவரிக்கும் புரொட்டஸ்டண்ட் மதக்குருவான மார்ட்டின் நிமோல்லர் (Martin Niemöller) இன் பிரபல கவிதையை பலர் அறிந்திருப்பார்கள்.

முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் அமைதியாக இருந்தேன் — ஏனென்றால் நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை.

பின் அவர்கள் சமூக ஜனநாயகவாதிகளைக் கைது செய்தார்கள், நான் அமைதியாக இருந்தேன் — ஏனென்றால் நான் ஒரு சமூக ஜனநாயகவாதி இல்லை.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடிவந்தார்கள், பின்பும் நான் அமைதியாக இருந்தேன் — ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி இல்லை.

அதன்பின் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், அப்போதும் நான் அமைதியாக இருந்தேன் — ஏனென்றால் நான் ஒரு யூதனில்லை.

இறுதியில் அவர்கள் என்னைத் தேடி உள்ளே வந்தார்கள் — அப்போது என்னை காப்பாற்ற அங்கு யாருமே இருக்கவில்லை.

இந்தக் கேள்வி இன்று மீண்டும் எங்கள் முன்நிற்கிறது. அரசு எந்திரத்தின் வலது-சாரி சதி தடுத்து நிறுத்தப்பட்டு SGP பாதுகாக்கப்படாது போகுமானால், இன்னும் ஆழமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கான தடுப்பு அணை உடைக்கப்பட்டு விடும். ஆகவே தான் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்புகின்ற மற்றும் வலதுகளின் வளர்ச்சியை எதிர்க்கின்ற அனைவரிடமும் நாங்கள் மறுபடியும் கோரிக்கை விடுகின்றோம்: Verfassungsschutz இன் தாக்குதலுக்கு எதிர்ப்பு காட்டுங்கள்; SGP ஐ பாதுகாத்து நில்லுங்கள்.

SGP மற்றும் அத்தனை பிற இடது-சாரி அமைப்புகளின் மீதான கண்காணிப்பை Verfassungsschutz கைவிட வேண்டும் என்றும் வலது-சாரி ஜனநாயக-விரோத சதிகளின் விளைநிலமாய் இருக்கும் அது கலைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.