ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Julian Assange’s lawyer briefs Australian parliamentarians on his persecution

ஜூலியன் அசான்ஜ் மீதான துன்புறுத்தல் குறித்து அவரது வழக்கறிஞர் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குகிறார்

By Oscar Grenfell
1 August 2019

நேற்று, கான்பெர்ரா பாராளுமன்ற அவையில் அங்கத்தவர்களுக்கு மட்டுமான ஒரு சந்திப்பில் ஜூலியன் அசான்ஜின் வழக்கறிஞர் ஜெனிஃபர் ராபின்சன் வழங்கிய சட்டபூர்வ விளக்கத்தில் 30 கூட்டாட்சி ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பழமைவாத கட்சிகள், தொழிற் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்குவர்.    


பசுமைக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் லுட்லம் (இடது) மற்றும் செனட்டர் விஷ்-வில்சன் ஆகியோருடன் ஊடகங்களுக்கு ராபின்சன் உரையாற்றுகிறார் [நன்றி: @BrettMasonNews]

உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர், அமெரிக்க தலைமையிலான அசான்ஜ் மீதான துன்புறுத்தல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஏற்படுத்தும் கொடிய தாக்கங்களைப் பற்றி அடிக்கோடிட்டுக் காட்டியதாக கூறப்படுகிறது. ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் மற்றும் ஊடகவியலாளர் என்ற வகையில் அசான்ஜை பாதுகாப்பதற்கு தலையிடுமாறும், மேலும் வருடாந்திர ஆஸ்திரேலிய-அமெரிக்க அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பொம்பியோவும் மற்றும் பாதுகாப்பு செயலர் மைக் எஸ்பரும் இந்த வார இறுதியில் வருகை தரும்போது அவர்களிடம் அவரது அவல நிலை பற்றி எடுத்துக் கூறவும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

சீனாவுடனான வாஷிங்டனின் ஆக்கிரோஷமான மோதலுக்கும், சர்வதேச ரீதியிலான அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களுக்கும் ஆதரவைத் திரட்டும் வகையில் பொம்பியோவும் எஸ்பரும் இந்த பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

2017 இல், மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவராக பொம்பியோ, விக்கலீக்ஸ் ஒரு “அரசு சாரா விரோதமான உளவுத்துறை அமைப்பு” என்று அதை கண்டனம் செய்ததுடன், அசான்ஜை ஒரு “பேய்” என்று முத்திரை குத்தினார். இவ்வாறு அசான்ஜை தொடர்ச்சியாக பின்தொடர்வதில் பொம்பியோ முக்கிய பங்கு வகித்தார், இது, அதிகபட்சம் 175 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு வழிவகுக்கும் உளவுச் சட்ட குற்றச்சாட்டுக்கள் உட்பட, விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிராக 18 அமெரிக்க குற்றச்சாட்டுக்களை வெளியிடுவதில் உச்சக்கட்டத்தை அடையச் செய்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஊடகங்களுக்கும் ராபின்சன் விநியோகித்த ஒரு உண்மை அறிக்கை, “செல்சியா மானிங் வெளிப்படுத்திய இரகசிய தகவல்களை” பிரசுரித்தது உட்பட, அசான்ஜ் மேற்கொண்ட “வழமையான பத்திரிகை நடவடிக்கைகளுக்காக” அவர் மீது வழக்கு தொடர அமெரிக்கா முயலுகிறது என்று குறிப்பிட்டது.

“அமெரிக்க அரசாங்கமும் அதன் முகவர்களும் செய்த இந்த விரிவான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவை, திருப்புமுனையான கூட்டுக் கொலை காணொளி, ஈராக் போர் பதிவுகள், ஆப்கான் போர் பதிவுகள், கேபிள்கேட் மற்றும் குவாண்டனாமோ விரிகுடா கைதிகள் கையேடு போன்றவற்றை உள்ளடக்கியது.”

அசான்ஜ் ஒரு “ஊடகவியலாளர்” இல்லை என்று கூறிய ஊடகங்களை ராபின்சன் கண்டித்தார். மேலும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அமெரிக்க சட்ட மூலோபாயத்தால் மட்டுமே உந்தப்படும் அவரது இந்த ஊடகவியலாளர் என்ற நிலையை கேள்விக்குரியதாக்கும் எந்தவொரு முயற்சியும், முதல் அரசியலமைப்பு உரிமையின் கீழ் அவருக்கு வழங்கப்படும் முக்கிய பாதுகாப்பை சூறையாடுகிறது. திரு அசான்ஜ் பாதுகாக்கப்படுவதற்கு பதிலாக அவர் பற்றி அவதூறாக பேசப்படுவதுடன், ஒரு “தரவுத் திருடர்” போன்று அவரை தோற்றமளிக்க செய்யப்படும் நிலையில், ஒரு ஊடகவியலாளர் மற்றும் வெளியீட்டாளராக திரு அசான்ஜின் தொழில் திறனை இது ஏற்க மறுத்து அழிக்கிறது என்பதுடன், விக்கிலீக்ஸூக்கு செல்சியா மானிங் வழங்கிய தகவல்கள் சட்டவிரோதமானவை என்ற கட்டுக்கதைக்கும் இது பங்களிக்கிறது.”

இந்த அவதூறு, “போர்க்குற்றங்கள் மற்றும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ஏனைய வெட்கத்திற்குரிய விடயங்களில் இருந்து கவனத்தை திருப்பும்” நோக்கம் கொண்டது.

மேலும் ராபின்சன் இவ்வாறு எச்சரித்தார்: “திரு அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டால் அவரது மனித உரிமை மீறப்படும் பெரும் அபாயத்தில் உள்ளார். எனவேதான்  ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் கடப்பாடுகளின்படி இந்த விடயத்திற்கு அவசர அரசியல் நடவடிக்கைகள் மிகவும் பொருத்தமானவையாகவும் அவசியமானவையாகவும் உள்ளன.

அசான்ஜை ஆஸ்திரேலியாவிற்கு நாடுகடத்த “தற்போது இங்கிலாந்து ஒரு நாடுகடத்தல் அறிவிப்பை” விடுத்துள்ளதாக இந்த உண்மை அறிக்கை தெரிவிக்கிறது. பிரிட்டன் அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்தவில்லை என்றால், “ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரை நாடுகடத்தப்பட்டவராக ஏற்றுக்கொள்ளும் படி கேட்கப்படும். அதன் பின்னர், அமெரிக்க/ஆஸ்திரேலிய நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியாவிலிருந்து அவரை நாடுகடத்துவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதற்கான சாத்தியம் உள்ளது.”

2010 இல் அசான்ஜ் மீதான வாஷிங்டனின் துன்புறுத்தலுக்கு ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகமும் கையெழுத்திட்டதன் பின்னர், அவர் பற்றி விவாதிப்பதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகப்பெரிய ஒன்றுகூடலாக இந்த விளக்கக் கூட்டம் இருந்தது.

சட்டவிரோதப் போர்கள், வெகுஜன உளவுபார்ப்பு மற்றும் உலகளாவிய இராஜதந்திர சதித்திட்டங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதில் அசான்ஜ் கொண்டிருந்த பங்கு குறித்து அவர் மீது வழக்குத் தொடர்வதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு இருக்கும் மக்கள் எதிர்ப்பு குறித்து ஆளும் உயரடுக்கின் மத்தியில் நிலவும் கவலைகளை இந்த நிகழ்வு பிரதிபலித்தது.

ஏப்ரல் 11 அன்று அசான்ஜ் ஈக்வடோர் தூதரகத்திலிருந்து வெளியே இழுத்துவரப்பட்ட பின்னர், பிரிட்டனிலிருந்து அமெரிக்காவிற்கு அவர் நாடுகடத்தப்படுவதை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது சாமானிய மக்களின் சீற்றம் அதிகரித்துவருவதற்கான அறிகுறிகள் அங்கு நிலவுகின்றன.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், மாணவர்களும் மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டதான ஆஸ்திரேலியாவில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சி பேரணிகள், அசான்ஜை பாதுகாக்க மறுக்கும் தொழிற் கட்சி மற்றும் பசுமைக் கட்சி உட்பட உத்தியோகபூர்வ கட்சிகளை குற்றம்சாட்டியது, மேலும் இப் பேரணிகளை பல்லாயிரக்கணக்கானோர் இணைய தளத்தில் பார்த்தனர். அப்போது அவர்கள், அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படமாட்டார் என்ற உத்தரவாதத்துடன், அசான்ஜின் விடுதலையை பாதுகாப்பதற்கும், அவர் ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தனது சட்ட விவேகத்தையும் இராஜதந்திர அதிகாரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கோரினர்.

165,000 க்கும் அதிகமானோர் ஆஸ்திரேலியாவின் இணைய தள மனுவில் கையெழுத்திட்டுள்ளனர், இது அசான்ஜின் உடனடி விடுதலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

விக்கலீக்ஸ் ஸ்தாபகர் அசான்ஜின் சட்ட ஆலோசகரான கிரெக் பார்ன்ஸும் மற்றும் அவரது தந்தை ஜோன் ஷிப்டனும் கான்பெர்ராவில் நடத்திய பிரச்சாரத்தை தொடர்ந்து ராபின்சனின் இந்த விளக்கக் கூட்டம் நடந்தது. இதற்கு, பசுமைக் கட்சியின் செனட்டர் பீட்டர் விஷ்-வில்சனும், தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சூசன் டெம்பிள்மேனும் இணைந்து நிதியுதவி செய்தனர்.

விளக்கக் கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுடன் பேசுகையில், அசான்ஜ் மீதான தாக்குதல்கள் அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் “மிகுந்த கவலை” அளிப்பதாக இருப்பதாக வேண்டும் என்று ராபின்சன் கூறினார். “இது அனைத்து ஊடகங்களுக்கும் ஆபத்தானதொரு முன்மாதிரியாகவும், ஒரு ஆஸ்திரேலிய குடிமகனுக்கு எதிரான ஆபத்தானதொரு முன்மாதிரியாகவும் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

ஈக்வடோரிய தூதரகத்தில் சூரிய ஒளியை அணுக இயலாது தனிமையில் ஏழு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையின் பின்னர், அசான்ஜின் உடல்நலம் குறித்து தனக்கு “கடுமையான கவலைகள்” இருப்பதாக ராபின்சன் கூறினார். மேலும், பிரிட்டனின் அதிகபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையின் மருத்துவமனை பிரிவில் தொடர்ந்து அவர் இருக்கிறார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். “அவரது உடல்நிலை வெளிப்படையாக கணிசமாக மோசமடைந்துள்ளது, மேலும் தூதரகத்தில் நீண்ட காலம் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதால் அவரது உடல்நிலையில் நிரந்தர சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும்.”

சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸர் அசான்ஜ் “உளவியல் சித்திரவதையால்” பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதினார் என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார். அசான்ஜ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் அவரது சட்டபூர்வ பாதுகாப்பிற்கான தயாரிப்புக்களுக்கு தடையாக இருக்கின்றன என்றும் ராபின்சன் சேர்த்துக் கூறினார்.

மேலும், “அவர் நடத்தப்பட்ட விதத்திற்கு அவர் தகுதியானவரே இல்லை என்பதால், இது ஆஸ்திரேலிய அரசாங்கம் அது பற்றி பேச வேண்டிய நேரம் இது” என்றும் ராபின்சன் அறிவித்தார்:

ஊடக கூட்டத்தில் ராபின்சன் உடனிருந்த விஷ்-வில்சன், பிரதமர் ஸ்காட் மோரிசனும் வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்னும் பொம்பியோ மற்றும் எஸ்பரிடம் “அசான்ஜ் பற்றிய பிரச்சினையை எழுப்ப வேண்டும்” என்று கூறினர். “அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட வேண்டும்” என்று செனட்டர் தெரிவித்தார்.

அசான்ஜின் அவல நிலை குறித்த எந்தவொரு பொது விவாதத்தையும் ஒடுக்குவதற்கு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்கள் எடுக்கும் நீடித்த முயற்சிகளை இந்த நிகழ்வு சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் மீறியது. ஆயினும், ராபின்சனின் விளக்கக் கூட்டம் பற்றி பாராளுமன்ற கட்சிகள் எதுவும் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. அவரது கருத்துக்கள் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

பாராளுமன்ற ஸ்தாபகம் அசான்ஜை பாதுகாக்க மறுப்பது தகவல் பரிமாற்ற குறைவினால் ஏற்பட்ட விளைவு அல்ல. இது, அமெரிக்காவின் போர் தயாரிப்புக்களில் ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைப்புக்கான அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளின் ஆதரவு, மேலும் பெருகிவரும் சமூக அதிருப்தியை எதிர்கொள்வதற்கு இன்னும் கூடுதலான சர்வாதிகார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவர்களது அர்ப்பணிப்பு ஆகியவற்றிலிருந்து உருவாகிறது.

பசுமைக் கட்சி ஆதரவிலான ஜூலியா கில்லார்ட்டின் தொழிற் கட்சி அரசாங்கம் விக்கிலீக்ஸை ஒரு குற்றவியல் அமைப்பு என்று கண்டித்ததுடன், அதை அழிக்க அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு உதவுவதாகவும் உறுதியளித்தது. இது, மூத்த அமெரிக்க அரசியல்வாதிகள் அவர்களது போர்க்குற்றங்களை அசான்ஜ் அம்பலப்படுத்திய காரணத்தால் அவரை படுகொலை செய்வதற்கு அவர்கள் அழைப்பு விடுத்தபோது நடந்தது.

ஒவ்வொரு அரசாங்கமும் அப்போதிருந்து அசான்ஜை துன்புறுத்துவதில் இந்த குற்றவியல் ஒத்துழைப்பை தொடர்கிறது. மிக சமீபத்தில், தாராளவாத தேசிய கூட்டணியும் மற்றும் தொழிற் கட்சி தலைவர்களும் அவருக்கு குறிப்பிடப்படாத “ஆலோசனை உதவி” வழங்குவதற்கு பேசியுள்ளனர், ஆனால் அவர் மீது நடத்தப்பட்டுவரும் துன்புறுத்தலைத் தடுக்க எதையும் செய்யவில்லை.

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான இந்த அணிதிரள்வு, அவரது சுதந்திரத்தை பாதுகாக்கவும், அனைத்து ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூக மற்றும் அரசியல் சக்தியை சர்வதேச ரீதியில் அணிதிரட்டுவதற்கான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த முக்கியமான போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காகவே, உலக சோசலிச வலைத் தளமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அசான்ஜையும் மற்றும் துணிச்சல்மிக்க இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங்கையும் விடுதலை செய்வதற்கென ஒரு உலகளாவிய பாதுகாப்புக் குழுவை சென்ற மாதம் உருவாக்கியது. அனைத்து தொழிலாளர்களும், இளைஞர்களும் மற்றும் ஆதரவாளர்களும் இன்றே இதில் இணைந்திடுமாறு அழைக்கிறோம்.