ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India’s Hindu supremacist government abrogates Kashmir’s autonomy

இந்தியாவின் இந்து மேலாதிக்க அரசாங்கம் காஷ்மீரின் சுய அதிகாரத்தை நீக்குகிறது

By Keith Jones
6 August 2019

இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம், அந்நாட்டின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திங்களன்று சட்டவிரோதமாக நீக்கியதுடன், அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஒன்று இப்போது கலைக்கப்பட்ட மாநிலத்தின் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை உள்ளடக்கி இருக்கும், மற்றொன்று மக்கள் நிறைந்த, ஆனால் புவிசார் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் கொண்ட, லடாக் பகுதியைக் கொண்டிருக்கும்.

இந்திய அரசு, அரசியல் அமைப்புக்கு எதிரான சதிக்கு ஒப்பான நடவடிக்கைகளைக் கொண்டு, இந்திய அரசியல் அமைப்பின் ஷரத்து 370 மற்றும் 35 (A) பிரிவுகளின் கீழ் குறைந்தபட்சம் காகிதத்திலாவது ஜம்மு மற்றும் காஷ்மீர் கொண்டிருந்த பரந்த சுய-அதிகாரத்தை மட்டும் பறித்துவிடவில்லை. இருகூறாக ஆக்கப்பட்ட அம்மாநிலத்தின் புதிய அரசாங்கங்களுக்கு, இந்தியாவின் யூனியனின் எஞ்சிய 28 மாநிலங்களுக்கு உள்ள அந்தஸ்தை, விட குறைவான அந்தஸ்து தான் வழங்கப்பட்டுள்ளது, இது அப்பிரதேசங்களின் விவகாரங்களில் காலவரையின்றி புது டெல்லி பரந்த அதிகாரங்களைச் செலுத்த அனுமதிக்கிறது.

திங்கட்கிழமை நடவடிக்கைகள் வெடிப்பார்ந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு பின்விளைவுகளைக் கொண்டுள்ளன. அவை பாகிஸ்தானுடன் கூடுதலாக பதட்டங்களைத் தூண்டும் என்பதுடன், எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி இந்திய ஆளும் உயரடுக்கு திருப்பமெடுப்பதிலும் மற்றும் இந்து வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை ஊக்குவிப்பதிலும் மற்றொரு படியாக அமைகின்றன.

அதன் நடவடிக்கைகளுக்கு பெருமளவிலான மக்கள் எதிர்ப்பு இருக்கும் என அஞ்சி, பிஜேபி அரசாங்கம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்தாயிரக் கணக்கான கூடுதல் துருப்புகளை நிறுத்தியதுடன், ஜம்மு மற்றும் காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகர் உட்பட அப்பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் இணையம், செல்பேசி மற்றும் தரைவழி தொலைபேசி சேவைகளை வெட்டியுள்ளது மற்றும் முக்கிய எதிர்கட்சி அரசியல்வாதிகளைக் கைது செய்துள்ளது. நேற்று நள்ளிரவு வரையில், ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு உட்பட பல மாவட்டங்களில் குற்றவியல் சட்டம் பிரிவு 144 ஐ அமல்படுத்தி உள்ளது, அதாவது இதன் அர்த்தம் நான்கு நபர்களுக்கு அதிகமானவர்கள் ஒன்று கூடுவதற்குத் தடைவிதிக்கப்படுகிறது.

காஷ்மீரும் இந்திய-பாகிஸ்தானிய இராணுவ-மூலோபாய போட்டியும்

வெளிப்படையான முஸ்லீம் பாகிஸ்தான் என்றும் பெருவாரியான இந்து இந்தியா என்றும் செய்யப்பட்ட தெற்காசியாவின் 1947 வகுப்புவாத பிரிவினையில் இருந்தே, முன்னாள் பிரிட்டிஷ் இந்திய சமஸ்தான மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரையும் உள்ளடக்கிய பிராந்தியங்கள் மீதான கட்டுப்பாடு என்பது, புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையிலான பிற்போக்குத்தனமான இராணுவ-மூலோபாய போட்டியின் மையத்தில் இருந்து வந்துள்ளது.

1947-48 இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக, காஷ்மீரி பேசும் மக்கள் இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு & காஷ்மீருக்கும் மற்றும் பாகிஸ்தான் வசமிருக்கும் ஆசாத் ("சுதந்திர") காஷ்மீருக்கும் இடையே பிரியும் விதத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிக்கப்பட்டது. அப்போதிருந்தே, இரண்டு நாடுகளும் மற்றொன்றின் வசமிருக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை "மீளஉரிமை கோருவதற்கு" சூளுரைத்து வந்துள்ளன.

ஜம்மு & காஷ்மீரின் சட்டரீதியான சுய-அதிகாத்தைப் பறித்து அதை இந்திய ஒன்றியத்துடன் முழுமையாக "ஒருங்கிணைத்து" கொண்டமை இந்திய -பாகிஸ்தானிய மோதலை புது டெல்லி அதன் வரையறைகளில் முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் கடந்த மூன்று தசாப்தங்களில் அரசை அதிர வைத்துள்ள இந்திய-விரோத கிளர்ச்சியை விரைவாகவும் இரத்தக்களரியுடனும் முடிவுக்குக் கொண்டு வரவும் புது டெல்லி தீர்மானகரமாக இருப்பதை எடுத்துக்காட்டும் நோக்கம் கொண்டுள்ளது. அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்கள் —அது காங்கிரஸ் கட்சி, பிஜேபி ஆகட்டும் அல்லது ஜாதிய மற்றும் பிராந்திய கட்சிகளின் ஒரு "மூன்றாம்" அணி தலைமையிலானது ஆகட்டும்— அந்த கிளர்ச்சிகளுக்குப் மிகப்பெருமளவிலான அரசு வன்முறையைக் கொண்டு விடையிறுத்துள்ளன, கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகத்திற்குரியவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் நீதிவிசாரணையின்றி படுகொலைகள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான பரந்தளவிலான சித்திரவதை ஆகியவையும் அதில் உள்ளடங்கும். வெறும் 14 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் அரை மில்லியனுக்கும் அதிகமான இந்திய இராணுவத் துருப்புகள் மற்றும் துணை இராணுவப்படையினருடன், காஷ்மீரில் இந்திய அரசின் ஒடுக்குமுறை சக்திகளை அணித்திரட்டியமை, மேற்கு கரையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் செய்ததுடன் சமமாக ஒப்பிடக்கூடியதாக உள்ளது.

பாகிஸ்தான், அதன் பங்கிற்கு, அதன் சொந்த பிற்போக்குத்தனமான திட்டநிரலை முன்னெடுப்பதற்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லீம்கள் மத்தியில் அவர்கள் புது டெல்லியிலிருந்து மிகப்பெருமளவில் அன்னியப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அதனை தனக்கு சாதகமாக திசைதிருப்பும் சதியில் ஈடுபட முனைந்துள்ளது. மதசார்பற்ற காஷ்மீர் தேசியவாதிகளை ஓரம் கட்டுவதும், அதேவேளையில் இந்திய-விரோத இஸ்லாமியவாத காஷ்மீரி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளவாட உதவிகளை வழங்குவதும் அதில் உள்ளடங்கும்.

நரேந்திர மோடி மற்றும் அவரின் பிஜேபி புது டெல்லியில் பதவிக்கு வந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர், 2016 இல், ஜம்மு மற்றும் காஷ்மீரில் மிகப்பெரும்  போராட்டங்களின் ஒரு புதிய அலை வெடித்தது. பிஜேபி அரசாங்கத்தின் விடையிறுப்பு இரட்டைத்தன்மை கொண்டிருந்தது: ஒன்று, ஒரு வக்கிரமான ஒடுக்குமுறைக்கு உத்தரவிடப்பட்டது, இதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்கள், அவர்களில் பெரும் பெரும்பான்மை இளைஞர்கள் குருடாக்கப்பட்டனர், மற்றொன்று, பாகிஸ்தானுடன் பதட்டங்களை தூண்டிவிடுவது. முதலில் செப்டம்பர் 2016 இலும் மற்றும் மீண்டும் இந்த பெப்ரவரியிலும், மோடி அரசாங்கம் பாகிஸ்தானுக்குள் இராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டது, இதை அது பாகிஸ்தான்-ஆதரவிலான பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கை என்று கூறியது. இரண்டாவது நடவடிக்கையான "துல்லிய தாக்குதல்" என்பது பாகிஸ்தானிய எதிர்தாக்குதல் மற்றும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் மீது விமானப் போரில் போய் முடிந்தது, அவை தெற்காசியாவின் அவ்விரு அணுஆயுத போட்டியாளர்களையும் 1971 இக்குப் பின்னர் முழு அளவிலான போருக்கு நெருக்கத்தில் கொண்டு சென்றது.

புது டெல்லியின் எந்தவொரு "ஒருதலைபட்சமான" நடவடிக்கையும் "ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களில் பொதியப்பட்டுள்ளவாறு, [அதன்] சர்ச்சைக்குரிய அந்தஸ்தை" மாற்ற முடியாது என்று கூறி, இஸ்லாமாபாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான இந்தியாவின் இறுக்கமான கட்டுப்பாட்டைக் கண்டித்ததுடன், அதை பின்வாங்கச் செய்ய சூளுரைத்து வருகிறது. “இந்த சர்வதேச பிரச்சினையின் ஒரு தரப்பினராக,” பாகிஸ்தான் "[இந்தியாவின்] சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ள சாத்தியமான அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்தும்,” என்று கடுமையான வார்த்தைகளைக் கொண்ட ஒரு வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கை குறிப்பிட்டது.

இதனை அடுத்து, பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலர் இந்திய உயர் ஆணையருக்கு (தூதர்) நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, "இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தையும் மற்றும் பல்வேறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் மீறுவதால் அவற்றை பாகிஸ்தான் ஐயத்திற்கிடமின்றி நிராகரிப்பதை தெரிவித்துக் கொள்கிறது,” என்று இஸ்லாமாபாத் எதை ஒரு பலமான அரசியல் அறிக்கையாக குணாம்சப்படுத்தியதோ அதை அவரிடம் ஒப்படைத்தது.

இதற்கிடையே, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அனைத்து தரப்பினரையும் "கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு" வலியுறுத்தியதாக அவரின் செய்தி தொடர்பாளர் Stephane Dujarric தெரிவித்தார். ஐ.நா. இராணுவ கண்காணிப்பு குழு இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீரைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டி "இராணுவ நடவடிக்கையின் அதிகரிப்பு அறியப்பட்டுள்ளது மற்றும் செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன" என்பதையும் Dujarric சேர்த்துக் கொண்டார்.

அதிகார கட்டளைகளைக் கொண்டு அரசியலமைப்பைத் திருத்துதல்

பிஜேபி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளின் உள்நாட்டு பிரதிவிளைவுகள் எவ்வகையிலும் குறைவில்லாமல் மோசமானதாக உள்ளது.

ஒரு ஜனாதிபதி உத்தரவாணை மூலமாக, ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, துண்டாடப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக அது மாற்றப்பட்டது, அது அரசியலமைப்பின் சில பிரிவுகளைச் சட்டவிரோதமாக கைவிட்டு ஏனையவற்றைத் மாற்றி எழுதியது, அதனை திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஒரு சில மணி நேரங்களில் இரண்டு தீர்மானங்கள் மூலமாக விரைவாக நிறைவேற்றியது.

நேற்றைக்கு முன்னர், அரசியலமைப்பு குறிப்பிடுகையில், “ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில அரசின் முழு ஒப்புதல்" உடன் மட்டுந்தான் ஷரத்து 370 நீக்கப்படும் என்று குறிப்பிட்டது. ஆனால் அம்மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை ஜூன் 2018 இல் கலைத்துவிட்டு அதற்குப் பின்னர் இருந்து மத்திய அரசு நியமிக்கும் ஆளுநரைக் கொண்டு ஜம்மு & காஷ்மீரில் ஆட்சி செய்து வரும் இந்தியாவின் பிஜேபி அரசாங்கம், அரசு உத்தரவு மூலமாக, அதை ஆளுநரின் "முழு ஒத்துழைப்புடன்" என்று குறிப்பிடும் விதத்தில் —அதாவது அதன் சொந்த உள்நாட்டு சேவகரின் "முழு ஒத்துழைப்புடன்"— என்று மாற்றியது. இவை எல்லாம் ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு மிகவும் அதிகம் தான்!

அம்மாநில மக்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல. திங்கட்கிழமை பிஜேபி அதன் அரசியலமைப்பு சூழ்ச்சியைத் தொடங்கிய அந்த தருணம் வரையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்பு அந்தஸ்தை வரவிருக்கும் நாட்களில் மாற்றுவதற்கான எந்த நகர்வுகளும் இல்லை என்று அரசாங்கம் பகிரங்கமாக வலியுறுத்திக் கொண்டிருந்தது. அம்மாநிலத்தில் ஆயிரக் கணக்கான கூடுதல் துருப்புகள் நிலைநிறுத்தப்படுவதும் மற்றும் அமர்நாத் குகைக் கோயிலுக்கான வருடாந்தர இந்து புனிதப்பயணத்தை இரத்து செய்வதும் பாகிஸ்தான்-ஆதரவிலான கிளர்ச்சியாளர்களிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பாக செய்யப்பட்டதாக அது வாதிட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தைக் கலைத்து விட்டு அதை இந்திய ஒன்றியத்திற்குள் முழுமையாக "ஒருங்கிணைத்து" கொண்டமை இந்து வலதுசாரிகளின் நீண்டகால கோரிக்கைகளாக இருக்கின்றன, உத்தியோகபூர்வ மதசார்பற்ற இந்திய குடியரசை ஒரு "இந்து ராஷ்ட்ரியமாக" (அரசாக) மாற்றுவதென்பது அதன் முன்நகர்வில் உள்ளார்ந்த பாகமாக உள்ளன.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு எதிரான பிஜேபி அரசாங்கத்தின் இந்த அரசியலமைப்பு சதிக்கு கூடுதல் உந்துதலாக இருப்பது என்னவென்றால், நுகர்வோர் தேவையில் வீழ்ச்சி, பரந்தளவில் விவசாய துயரங்கள், மற்றும் பெருநிறுவன வாராக் கடன்களால் சுமையேறிய வங்கித்துறை என இவை உட்பட பல்வேறு நெருக்கடிகளால் இந்திய பொருளாதாரம் சூழப்பட்டிருக்கும் நிலைமைகளின் கீழ் மற்றும் சமூக எதிர்ப்பு, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்குள், அதிகரித்து வரும் நிலைமைகளின் கீழ், வகுப்புவாத பிற்போக்குத்தனத்தைத் தூண்டுவிடுவதும் மற்றும் போர் வெறி கொண்ட இந்திய தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதும் ஆகும்.

உத்தேசித்தவாறு, RSS மற்றும் சிவ சேனா போன்ற அதிதீவிர தேசியவாத மற்றும் முற்றுமுதலான பாசிசவாத சக்திகள், இதுவரையில் இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக இருந்த அதன் மாநில அந்தஸ்தையும் மற்றும் சிறப்பு அந்தஸ்தையும் பிஜேபி நீக்கியதைப் புகழ்பாடுவதற்கு வீதிகளில் இறங்கின.

அரசாங்கத்தின் சட்டவிரோத அதிகார விளையாட்டு வெளிவேடத்திற்கு எதிர்கட்சிகளாக காட்டிக்கொள்ளும் பரந்த பிரிவுகளின் ஆதரவையும் வென்றது, தெற்காசியாவில் இந்திய மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு முனைவானது, எந்தளவுக்கு பொறுப்பற்று இருந்தாலும் கவலையின்றி, அது இந்திய ஆளும் வட்டாரங்களுக்குள் பலமான ஆதரவைப் பெறுகிறது என்பதை அடிக்கோடிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி (BSP), ஆம் ஆத்மி கட்சி (AAP), பிஜூ ஜனதா தளம் (BJD) மற்றும் தெலுங்கு தேசம் (TDP) ஆகியவை அரசியலமைப்பு மீதான மோடியின் "துல்லிய தாக்குதலை" ஆதரித்த கட்சிகளில் உள்ளடங்குகின்றன.

நீண்டகால மற்றும் அபாயகரமான விளைவுகள்"

இந்தியாவுக்கு ஆதரவான காஷ்மீர் முஸ்லீம் உயரடுக்கின் இரண்டு கட்சிகளின் தலைவர்களும், திங்கட்கிழமை நடவடிக்கைகள் பிரிவினைவாத உணர்வை மட்டுமே எரியூட்டும் என்று எச்சரித்து அறிக்கைகள் வெளியிட்டனர். மெஹ்பூபா முஃப்தி, இவரின் PDP கட்சி 2018 வசந்தகாலம் வரையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிஜேபி ஆதரவிலான கூட்டணி அரசாங்கத்திற்குத் தலைமை வகித்திருந்த நிலையில், “ஷரத்து 370 ஐ நீக்குவதென இந்திய அரசின் தன்னிச்சையான முடிவு சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது, இது இந்தியாவை ஜம்மு & காஷ்மீரில் ஓர் ஆக்கிரமிப்பு படையாக ஆக்கும். இது துணைகண்டத்தின் மீது பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்,” என்று ட்வீட் செய்தியில் கூறினார்.

முஃப்தியைப் போலவே ஒரு முன்னாள் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதலமைச்சரும் தேசிய மாநாட்டின் தலைவருமான ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், பிஜேபி இன் நடவடிக்கைகள் "இந்தியா மீது ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் முழுமையான காட்டிக்கொடுப்பு ... இது நீண்டகால மற்றும் அபாயகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்,” என்றார்.

அவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டு மோடி அரசாங்கம், முஃப்தி மற்றும் அப்துல்லாவின் கருத்துக்களுக்கு விடையிறுத்தது.

காஷ்மீர் மக்களை மூர்க்கமாக ஒடுக்குவதிலும் மற்றும் அவர்களின் உரிமைகளை மீறுவதிலும் அதன் சொந்த நீண்ட வரலாறைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, அரசியலமைப்பை பிஜேபி திருத்தி எழுதியதை "சட்டவிரோதமானது" என்று கண்டித்ததுடன், மத்திய அரசு இந்திய மாநிலங்களின் அதிகாரங்கள் மற்றும் எல்லைகளை மாற்றுவதற்கான உரிமையை அதன் விருப்பப்படி பறித்துக் கொள்கிறது என்று குற்றஞ்சாட்டுவதில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்தது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி. சிதம்பரம் கூறுகையில், “ஒரு தவறான  சாகசம் நடக்கும் என்று நாங்கள் ஊகித்தோம்,” “ஆனால் அவர்கள் இதுபோன்றவொரு பேரழிவுகரமான நடவடிக்கையை எடுப்பார்கள் என்பதை பயங்கரமான கனவிலும் கூட நாங்கள் நினைக்கவில்லை. இன்று இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு கறுப்பு தினம்,” என்றார்.

இதேபோல இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய ஸ்ராலினிசவாத நாடாளுமன்ற கட்சிகளும், பிஜேபி இன் நடவடிக்கைகளை அரசியலமைப்பு மற்றும் மாநில உரிமைகள் மீதான தாக்குதல் என்று கண்டித்தன ஆனால் அவை வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை ஊக்குவிப்பது மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்பது  அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களுக்கு எதிராக குறிவைக்கப்பட்டவை என்று எந்த எச்சரிக்கையும் விடுக்கவிலை,. தசாப்தங்களாக இந்திய ஸ்தாபகத்தின் உள்ளார்ந்த பாகமாக விளங்கும் ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் வர்க்க போராட்டத்தை ஒடுக்கியதன் மூலமாகவும், நவதாராளவாத சீர்திருத்தம் மற்றும் வாஷிங்டனுடன் ஒரு "மூலோபாய பங்காண்மைக்கு" பொறுப்பேற்றிருந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஏனைய வலதுசாரி கட்சிகளுடன் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப்போட்டதன் மூலமாகவும் இந்து வலதின் வளர்ச்சிக்கு உதவி உள்ளன மற்றும் துணை போயுள்ளன.

வகுப்புவாதத்தை பிஜேபி தூண்டிவிடுவதும் மற்றும் பகிரங்கமாக அதிகரித்தளவில் சட்ட-அரசியலமைப்பு விதிமுறைகளுடன் முறித்துக் கொள்வதும் உள்நாட்டில் ஒரு சூறாவளியை உண்டாக்கி விடும் என்றும், அதேவேளையில் வெளிநாடுகளில் இந்தியாவின் நன்மதிப்பையும் மற்றும் காஷ்மீருக்கான சட்டரீதியிலான உரிமைகோரல்களையும் அது சேதப்படுத்தும் என்றும் அஞ்சுகின்ற ஆளும் வர்க்கத்தின் அந்த பிரிவுகளுக்காக காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது.

மோடி அரசாங்கம், எவ்வாறாயினும் காஷ்மீரில் அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு, மேற்கத்திய ஆட்சிகள், அவற்றில் அனைத்திற்கும் மேலாக சீனாவுக்கு ஓர் இராணுவ-மூலோபாய எதிர்பலமாக இந்தியாவை விடாப்பிடியாக ஊக்குவித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், கையைப் பிசைவதை தவிர அதற்கு மேல் எதையும் செய்யப்போவதில்லை என்று கணிக்கிறது. செய்திகளின்படி, புது டெல்லி, இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கான கட்டமைப்பை வழங்கும் வகையில் வாஷிங்டனுடன் மூன்றாவது மற்றும் இறுதி "கட்டமைப்பு" (foundational) ஆவணங்களில் கையெழுத்திடும் விளிம்பில் உள்ளது. இந்தியா, ஏற்கனவே அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் பயன்படுத்துவதற்காக அதன் இராணுவத் தளங்களைத் திறந்துவிடுவதற்கு உடன்பட்டுள்ளது.