ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US scrapping of INF treaty heightens threat of nuclear war

மத்திய-தூர அணு ஆயுத உடன்படிக்கையை அமெரிக்கா முறிப்பதானது, அணுஆயுத போர் அபாயத்தை உயர்த்துகிறது

By Bill Van Auken
3 August 2019

உலகை அணுஆயுத போர் நெருக்கத்திற்குக் கொண்டு வரும் ஒரு மிகப்பெரிய படியாக, மத்திய-தூர அணுஆயுதங்கள் (Intermediate-range Nuclear Forces - INF) மீதான உடன்படிக்கையை வெள்ளிக்கிழமை வாஷிங்டன் உத்தியோகப்பூர்வமாக முறித்தது.

30 ஆண்டுகளுக்கு முன்னர், உலகம் மயிரிழையில் ஓர் அணுஆயுத மோதல் தூண்டிவிடப்படக்கூடிய இடத்தில் நின்றிருந்த போது, அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் மற்றும் சோவியத் தலைவர் மிக்கையில் கோர்பச்சேவ் ஆல் கையெழுத்திடப்பட்ட அந்த உடன்படிக்கை ஒட்டுமொத்தமாக அந்த ரக ஆயுதங்களுக்குத் தடைவிதித்தது. 500 இல் இருந்து 5,000 கிலோமீட்டர் (310 இல் இருந்து 3,417 மைல்கள்) வரையிலான தரையிலிருந்து ஏவப்படும் மற்றும் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த பிரயோகத்தை நிறுத்திக் கொள்ள அவ்விரு நாடுகளும் உடன்பட்டன.

அந்த INF உடன்படிக்கையால் முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து ஏவும் அந்த தூரங்களுக்கான புதிய ஏவுகணையை பென்டகன் ஒருசில வாரங்களுக்குள் பரிசோதனை செய்யுமென CNN குறிப்பிட்டது. அமெரிக்க இராணுவம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஆயுதங்கள் மீது செயலாற்றி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய வான்வழி பாதுகாப்பு அமைப்புமுறையை ஜெயிக்கக்கூடிய ஐரோப்பியப் பகுதிகளில் அந்த ஆயுதங்களை நிலைநிறுத்தவும் மற்றும் "அந்நாட்டின் துறைமுகங்கள், இராணுவ தளங்கள் அல்லது முக்கிய உள்கட்டமைப்புகள்" மீது தாக்குதல் நடத்தவும் வாஷிங்டன் நோக்கம் கொண்டிருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் அந்த தொலைக்காட்சி செய்தி வலையமைப்புக்குத் தெரிவித்தார்.

பெர்ஷிங் II மற்றும் எம்ஜிஎம் லான்ஸ் ஏவுகணைகள் உட்பட (Pershing II and the MGM Lance), குறுகிய-தூர மற்றும் மத்திய-தூர தரையிலிருந்து தரைக்குச் சென்று தாக்கும் ஏகவுணைகளை அமெரிக்கா 1980 களின் தொடக்கத்தில் மேற்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்தியது, அதேவேளையில் சோவியத் ஒன்றியம் அதன் எஸ்எஸ்-20 (SS-20) ரக இடம்விட்டு இடம் நகர்த்தும் ஏவுகணை ஏவுகளங்களைச் சோவியத் ஒன்றியத்தின் மேற்கில் நிலைநிறுத்தியது. இந்த ஆயுதங்கள், மேற்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மிகவும் பிரதான நகரங்களை ஒருசில நிமிடங்களில் தாக்கும் தகைமை கொண்டிருந்தன. அக்கண்டம் மீதான ஓர் அணுஆயுத மோதல் அச்சுறுத்தல் அமெரிக்க ஏகவுணை நிலைநிறுத்தலுக்கு எதிராக, குறிப்பாக மேற்கு ஜேர்மனியில், பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது.

உடன்பாட்டை வாஷிங்டன் வழக்கொழித்திருப்பதானது, ரஷ்யா மற்றும் சீனாவுடனான "வல்லரசு மோதலை" நோக்கிய வாஷிங்டனின் திருப்பத்துடன் பிணைந்துள்ளது, இதில் ரஷ்யாவைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகையாகவும் மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கம் மீதான அதற்கான சவாலை எதிர்கொள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் இராணுவ பலத்தையே நிறைவேற்றும் சாதனமாக பயன்படுத்த முயன்று வருகிறது.

அந்த உடன்படிக்கையை அமெரிக்காதான் முறித்துள்ளது என்றாலும் கூட, அது கைவிடப்படுவதற்கான முழுப் பழியையும் ரஷ்யாவின் மீது சுமத்தி, அமெரிக்கா அந்த உடன்படிக்கையை கைத்துறப்பதைக் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ வெளியிட்டார். “ரஷ்யா அந்த ஏவுகணை அமைப்புமுறை உடன்படிக்கைக்கு இணங்க நடந்து கொள்ளாமல் அதை சீரழித்து அதற்கிணங்க முழுமையாகவும் சரியான விதத்திலும் நடந்து கொள்ளவில்லை,” என்றார்.

மாஸ்கோ மீண்டும் மீண்டும் இந்த கூற்றை மறுத்துள்ளதுடன், வாஷிங்டன் கூறுவதைப் போல, அந்த உடன்படிக்கைக்கு உட்பட்ட இல்லை என்று கூறப்படும் அதன் SSC-8 கப்பலில் இருந்து தரையைத் தாக்கும் ஏவுகணை எந்த விதியையும் மீறவில்லை என்று வலியுறுத்துகிறது. அந்த ஆயுத அமைப்பைப் பரிசோதிக்க அமெரிக்கா மற்றும் ஏனைய சக்திகளுக்கும் அத்துடன் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும் அழைப்புவிடுக்கின்ற நிலையில், வாஷிங்டனோ அது கூறுவதை ஏற்க முடியாதென ரஷ்யாவுக்கு இறுதி எச்சரிக்கைகளை விடுத்து, பேச்சுவார்த்தைக்கான அனைத்து முறையீடுகளையும் மறுத்தளித்துள்ளது.

இதற்கிடையே கப்பலில் இருந்து செலுத்தக்கூடிய மத்திய-தூர டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளை ஏவுவதற்குத் தகைமை கொண்ட அமெரிக்க போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படுபவைக்கு ஒத்த ஏவுகணை செலுத்திகளைக் கொண்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புமுறைகளை அமெரிக்கா போலாந்து மற்றும் ரோமானியாவில் நிலைநிறுத்தி இருப்பதாக கூறி, அமெரிக்கா தான் அந்த உடன்படிக்கையைப் பின்பற்றி இருக்கவில்லை என்று ரஷ்யா வலியுறுத்துகிறது. அக்கண்டத்தில் ஆயுதமேந்திய டிரோன்களை அமெரிக்கா நிலைநிறுத்தி மேற்கொண்டும் உடன்படிக்கையை மீறியிருப்பதாக அது குற்றஞ்சாட்டுகிறது.

அந்த உடன்படிக்கையையும் மற்றும் மத்திய-தூர ஏவுகணைகளை அபிவிருத்தி செய்வதன் மீதான அதன் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதென்ற அமெரிக்க அரசின் தீர்மானம், வெறுமனே ரஷ்யாவுக்கு எதிராக அதன் இராணுவ முற்றுகையைத் தீவிரப்படுத்துவதை மட்டும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை, மாறாக மிகவும் அடிப்படையாக அது சீனாவுடன் "வல்லரசு" மோதலுக்கான தயாரிப்பாகும்.

சீனா மீதான அமெரிக்க சுற்றிவளைப்பு மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட "ஆசிய முன்னெடுப்பின்" பாகமாக பசிபிக் பிரதேசத்தில் பாரியளவில் கடற்படை மற்றும் விமானப்படை பலத்தை நிலைநிறுத்தியதற்கான விடையிறுப்பாக பெய்ஜிங், INF உடன்படிக்கையில் கையெழுத்திட்டிராத இது, அதன் சொந்த மத்திய-தூர ஏவுகணைகளை அபிவிருத்தி செய்தது.

பென்டகன், சீனாவின் பிரதான நகரங்களை இலக்கு வைத்து அப்பிராந்தியத்தில் அதன் சொந்த தாக்கும் ஏவுகணை அமைப்புமுறைகளை நிலைநிறுத்துவதன் மூலமாக இந்த அபிவிருத்திக்கு பதிலளிக்க விரும்புகிறது. அதுபோன்றவொரு நிலைநிறுத்தலைத் தடுக்கும் அந்த உடன்படிக்கையை முறிப்பது, சீனாவுக்கு எதிரான அமெரிக்க வர்த்தக போர் நடவடிக்கைகள் கூர்மையாக தீவிரப்படுத்தப்பட்டு வருவதுடன் பொருந்தி வருகின்றன என்பது தற்செயலானதல்ல.

அந்த உடன்படிக்கையை விட்டொழிப்பது என்ற முடிவு ட்ரம்ப் நிர்வாகத்தால் கடந்த பெப்ரவரியிலேயே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த உடன்படிக்கையின் உத்தியோகபூர்வ மறுத்தளிப்பு மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் இரண்டிடம் இருந்தும் கண்டங்களைத் தூண்டியது.

“அணுஆயுத மோதல் வரையில் மீதமுள்ள நேரத்தைக் காட்டும் பிரபல அடையாள கடிகாரத்தில், துரதிருஷ்டவசமாக நாம் நள்ளிரவை நோக்கி இன்னொரு நிமிடத்தை கடந்துவிட்டோம்,” என்று ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி ரியப்கோவ் RT உடனான ஆங்கில மொழி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். “ஆயுத போட்டியிலோ இராணுவ தளவாட முதலீட்டிலோ அர்த்தமே இல்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறினாலும் கூட, இது தொடரும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இதற்கிடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் Hua Chunying கூறுகையில், “இதுபோன்ற நடவடிக்கைகளை சீனா எதிர்க்கிறது,” என்று கூறியதுடன், “அமெரிக்கா அதன் கடமைப்பாடுகளுக்குக் கீழ்படிந்து நடக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

“மூலோபாய ஆயுதங்களில் மேலாதிக்கம்” செலுத்த முயல்வதாக வாஷிங்டனைக் குற்றஞ்சாட்டும் அளவுக்குச் சென்ற அப்பெண்மணி, இது "ஸ்திரப்பாட்டைத் தீவிரமாக பாதிக்கும் என்பதோடு,” “பல பிராந்தியங்களில் பாதுகாப்பை" அச்சுறுத்தி, "உலகளாவிய அதிகார சமநிலையைப் பலவீனப்படுத்தும்,” என்று எச்சரித்தார்.

பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்களும் நேட்டோவும், அந்த உடன்படிக்கை தோல்வியுறுவதற்கு ரஷ்யா தான் பொறுப்பு என்ற வாஷிங்டனின் வாதங்களையே எதிரொலித்தன என்றாலும், அங்கே கவலைக்கான வெளிப்பாடுகளும் இருந்தன. ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிடுகையில், “INF உடன்படிக்கை வழக்கொழிக்கப்படுவதில், ஐரோப்பா அதன் பாதுகாப்பில் பகுதியை இழக்கிறது,” என்றார். “ஒரு புதிய அணுஆயுத போட்டியைத் தடுப்பதற்காக, நாம் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக்குறைப்புக்கான விதி[களுக்கு] உடன்படுவதில் மீண்டும் நாம் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இதற்கிடையே பெல்ஜிய வெளியுறவுத்துறை அமைச்சர் Didier Reynders ட்வீட்டரில் குறிப்பிட்டார்: “INF உடன்படிக்கை விட்டொழிக்கப்படுவதைக் குறித்து நான் வருந்துகிறேன், அது 30 ஆண்டுகளாக நமது பாதுகாப்புக்காக சேவையாற்றி உள்ளது. அணுஆயுத கட்டுப்பாடு மற்றும் ஆயுதக்குறைப்புக்கு பெல்ஜியம் அதன் பொறுப்பை மீளவலியுறுத்துகிறது என்பதோடு, அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டுமென அழைப்புவிடுக்கிறது,” என்றார்.

நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி மற்றும் துருக்கியுடன் சேர்ந்து, பெல்ஜியம், அமெரிக்க அணுகுண்டுகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நாடுகளில் ஒன்றாகும்.

வாஷிங்டனின் மேற்கு ஐரோப்பிய கூட்டாளிகளில் எதுவுமே, மத்திய-தூர ஏவுகணைகளை அவற்றின் எல்லைக்குள் நிலைநிறுத்துவதை ஏற்றுக் கொள்ள அவை தயாராக இருப்பதற்கான எந்த அறிகுறியும் காட்டவில்லை. அதுபோன்ற எந்தவொரு ஏவுகணை நிறுவுதல்களும் உடனடியாக இலக்குகளாக ஆக்கப்படும் என்பதை மாஸ்கோ தெளிவுபடுத்தி உள்ளது.

ஐரோப்பாவின் பாதுகாப்புக்குக் குழிபறிக்கும் INF உடன்படிக்கையை இரத்து செய்வது குறித்த அறிக்கைகளுக்குப் பின்னால், பிரதான ஐரோப்பிய சக்திகள், குறிப்பாக ஜேர்மனி, அமெரிக்காவிடம் இருந்து சுதந்திரமாக மீள்இராணுவமயப்படுவதை தீவிரப்படுத்துவதை நோக்கிய ஒரு திருப்பம் உள்ளது.

INF உடன்படிக்கை முறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்னும் அதிக முக்கியத்துவம் பொருந்திய 2021 இல் காலாவதி ஆக உள்ள, புதிய START உடன்படிக்கையும் (மூலோபாய ஆயுதக்குறைப்பு உடன்படிக்கையும்), புதுப்பிக்கப்படாமல், முடிவுக்குக் கொண்டு வரப்படுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இரண்டினதும் நிலைநிறுத்தப்பட்டுள்ள மூலோபாய அணுஆயுத குண்டுகளின் எண்ணிக்கை 1,550 க்குள் இருக்க வேண்டுமென வரம்பு விதிப்பதுடன், அவ்விரு நாடுகளது கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணைகளின் எண்ணிக்கையிலும் இதேபோன்ற வரம்புகளை வகுத்துள்ளது.

ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தை, “ஒபாமா நிர்வாகம் பேரம்பேசி செய்து கொண்ட மோசமான பல உடன்படிக்கைகளில் ஒன்று” என்று விவரித்துள்ளார், அதேவேளையில் அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஊடகங்களுக்குக் கூறுகையில் அது அனேகமாக புதுப்பிக்கப்படாமல் போகலாம் என்று கூறியுள்ளார். இதன் அர்த்தம், அணுஆயுத போர் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தும் எந்த உடன்படிக்கைகளும் எஞ்சியிருக்காது என்று ஆகிறது.

பென்டகன் அதுபோன்றவொரு மோதலுக்குப் பகிரங்கமாக தயாரிப்பு செய்து வருகிறது. ஜூன் மாத மத்தியில் இணையத்தில் சிறிது காலத்திற்குப் பதிவிடப்பட்டிருந்த அணுசக்தி நடவடிக்கைகள் மீதான ஒரு "கூட்டறிக்கை" குறிப்பிட்டதாவது: “அணுஆயுதங்கள் இறுதி விளைவுகளை மற்றும் மூலோபாய ஸ்திரப்பாட்டை மீட்டமைக்கும் நிலைமைகளை உருவாக்கும். மிகவும் குறிப்பாக, அணுஆயுதங்களின் பயன்பாடு அடிப்படையில் போரின் போக்கை மாற்றி, தளபதிகள் வெற்றிக்கு அழைப்புவிடுப்பதற்கான நிலைமைகளை உருவாக்கும்,” என்று குறிப்பிட்டது.

பென்டகன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "வல்லரசு" போட்டியாளர்களுடனான போர் மோதல் அலையைத் திருப்புவதற்குப் பிரயோகிக்க, குறைந்த சேதம் உண்டாக்கும் "தந்திரோபாய" "பயன்பாட்டுக்கு உகந்த" அணுஆயுத குண்டுகளைத் தயாரிக்க செயல்பட்டு வருகிறது. புவி மீது வாழ்வதையே முடிவுக்குக் கொண்டு வரும் அளவுக்கு ஒரு முழு அளவிலான அணுஆயுத பரிமாற்றங்களைத் தூண்டிவிடாமல் இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்பது, பெரிதும் நடக்கவியலாத சூழலாகும்.

INF உடன்படிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து முன்நிறுத்தப்பட்ட ஆழ்ந்த அபாயங்கள் மற்றும் அணுஆயுதப் போருக்குக் குறிப்பிடத்தக்களவில் நெருக்கமான சென்றிருப்பது ஆகியவை, அதன் பாசாங்குத்தனமான அரசியல் எதிர்ப்பாளரான ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எந்த விடையிறுப்பையும் கொண்டு வரவில்லை.

சாதனையளவுக்கு 738 பில்லியன் டாலர் அமெரிக்க இராணுவ வரவு-செலவுத் திட்டத்திற்காக பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இரண்டிலும் பெருவாரியாக வாக்களித்ததன் மூலமாக, ஜனநாயகக் கட்சியினர் முழுமையாக ஓர் அணுஆயுத பெருவெடிப்பை நோக்கி அணிவகுப்பதற்குப் பொறுப்பேற்றுள்ளனர். ட்ரம்ப் வெள்ளை மாளிகையுடன் வரவு-செலவு திட்டக்கணக்கு உடன்படிக்கையைப் பேரம்பேசிய பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி ஆகட்டும், அல்லது செனட் சபையின் சிறுபான்மை தலைவர் சக் சூமர் ஆகட்டும், INF உடன்படிக்கை வழக்கிலிருந்து ஒழிக்கப்பட்டது குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவரின் பங்கிற்கு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள ஜோ பைடன், அமெரிக்கா, சீன-விரோத கருத்துக்களுடன் "சுதந்திர உலகிற்குத் தலைமை கொடுக்க வேண்டும்" என்று ட்வீட் செய்தார். இதேபோன்று, அந்த உடன்படிக்கை முறிக்கப்பட்டமை குறித்து வாய்மூடி இருந்த எலிசபெத் வாரென், அமெரிக்கா "சீனா மீது கடுமையாக செல்ல வேண்டும்" என்று ட்வீட் செய்தார், அதேவேளையில் பேர்னி சாண்டர்ஸ் ஒன்றுமே கூறவில்லை.

மிகத் தெளிவாக அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள் எந்தவொரு போர்-எதிர்ப்பு கன்னையும் இல்லை என்பதுடன், ஓர் உலகளாவிய அணுஆயுத பெரும்போர் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைக் குறித்து அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கையூட்டுவதில் ஜனநாயகக் கட்சி அல்லது பெருநிறுவன ஊடகங்களின் பாகத்திலும் எவ்வித ஆர்வமும் இல்லை.

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் அடிப்படையில், ஒரு புதிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே இந்த அச்சுறுத்தலுக்கு விடையிறுக்க முடியும்.