ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Jeremy Corbyn and the coming to power of Boris Johnson

ஜெர்மி கோர்பினும், போரிஸ் ஜோன்சன் பதவிக்கு வருவதும்

Chris Marsden
30 July 2019

“இது எப்படி நடந்தது?” என்று கேட்பதுதான், போரிஸ் ஜோன்சன் பழமைவாத கட்சியின் தலைமையை ஏற்றதன் மீதும் மற்றும் பிரதம மந்திரி ஆனதன் மீதும் தொழிலாளர்களிடைய நிலவும் ஒரு பொதுவான எதிர்வினையாக உள்ளது.

வேலைகள், கூலிகள் மற்றும் வேலையிட நிலைமைகள் மீது நாசகரமான பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து "உடன்படிக்கை எட்டப்படாமல்" வெளியேறுவதற்காக அர்ப்பணித்துள்ள, பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் வலதுசாரி அரசாங்கத்திற்கு ஜோன்சன் தலைமை தாங்குகிறார். “கீழ்மட்டத்தினர்" மீது அவரின் வெறுப்பை மூடிமறைக்க முடியாத ஒரு வயதான எத்தோன் மாணவரான அவர், மில்லியன் கணக்கான தொழிலாளர்களால் வெறுக்கப்படுகிறார். இருப்பினும் இப்போது அவர் உயர் அரசியல் பதவியை ஏற்றுள்ளதுடன், சில வெற்றி வாய்ப்புகளுடன், அக்டோபர் 31 இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரத்தை பாதுகாத்து, பின்னர் பெருவணிகங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கான அவரின் வரி வெட்டு திட்டநிரலை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு முன்கூட்டிய தேர்தல் குறித்து சிந்தித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் டவுனிங் வீதி அலுவலகத்தை வந்தடைகிறார் [படம்: ப்ளிக்கர் - நம்பர் 10 டவுனிங் வீதி]

ஜோன்சன் மற்றும் அவரது மந்திரிசபையின் தாட்சரிச சிந்தாந்தவாதிகளது ஏறுமுகத்திற்கான அரசியல் பொறுப்பை ஜெர்மி கோர்பின் மீது சுமத்த வேண்டியுள்ளது. இவர் தான் ஜோன்சன் அரசாங்கத்திற்கு அரசியல் செவிலித்தாயாக செயல்பட்டுள்ளார், பெருவணிகங்கள் மற்றும் அதன் அரசியல் பாதுகாவலர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தைத் தொடுப்பதற்கான தொழிலாளர்களின் அனைத்து முயற்சிகளையும் அவர் நசுக்கியதற்கு அவர்கள் நன்றி கூறுவார்கள்.

தொழிற் கட்சி தலைவராக கோர்பினின் நான்காண்டுகள் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மூலோபாய படிப்பினையாகும். ஆளும் வர்க்கத்தின் சார்பாக வர்க்கப் போராட்டத்தின் மீது பொலிஸ் வேலை செய்யும் தொழிற் கட்சி மற்றும் தொழிற் கட்சி அதிகாரத்துவத்திற்கு எதிரான எந்தவொரு அரசியல் சவாலையும் தடுப்பதில் "இடது" என்று கூறப்படுபவை வகிக்கும் முக்கிய பாத்திரத்தை அவை உறுதிப்படுத்துகின்றன.

அவர், அவரின் மூன்று பிளேயரிச எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் மற்றும் அவர்களின் "மிதமான சிக்கன நடவடிக்கை" கொள்கை மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிராகவும் நிலவிய ஓர் அரசியல் எதிர்வினையிலிருந்து, பெருவாரியாக 59.5 சதவீத முதல்தர வாக்குகளுடன் 2015 செப்டம்பரில் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 2016 இல் பிளேயரிசவாதிகள் 172 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையில்லா வாக்குகளைக் கொண்டு அவரைப் பதவியிலிருந்து நீக்க நகர்ந்தபோது, அது திருப்பித் தாக்கியது. கோர்பின் 2015 ஐ விட 62,000 இக்கும் அதிகமான வாக்குகளுடன், 61.8 சதவீத வாக்குகளைப் பெற்று ஜெயித்தார். 2017 வாக்கில் தொழிற் கட்சி அரை மில்லியனுக்கும் அதிக உறுப்பினர்களுடன் ஐரோப்பாவின் மிகப்பெரிய கட்சியாக ஆகும் வகையில், நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அதில் இணைந்தனர்.

2017 இல், பிரதம மந்திரி தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஓர் ஆதாயமான பிரெக்ஸிட் உடன்படிக்கையைப் பெறுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆதரவை அணிதிரட்ட முடியுமென கணக்கிட்டு, ஒரு முன்கூட்டிய பொது தேர்தலுக்கு அழைப்புவிடுத்தார். ஆனால் அதற்கு தலைகீழாக தொழிற் கட்சியின் வாக்குகள் 40 சதவீதம் அதிகரித்தன — இது 1947 இல் கிளெமென்ட் அட்லிக்குப் பிந்தைய மிகப்பெரியளவிலான பத்து சதவீத அதிகரிப்பாகும். டோரி கட்சியினர், ஜனநாயக ஒன்றியக் கட்சியின் (DUP) 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைச் சார்ந்துள்ள ஒரு சிறுபான்மை அரசாங்கமாக சுருங்கிப் போனார்கள்.

பிளேயரிச வலதுக்கு எதிராக ஒரு போராட்டத்தைத் தொடுக்கவும் பின்னர் டோரிக்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கவும், தொழிற் கட்சியினது வேறெந்த தலைவருக்கும் இதுபோன்றவொரு மிகவும் சாதகமான சூழ்நிலை அமைந்ததில்லை. சிக்கன நடவடிக்கைக்கு எதிரான மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஓர் இடதுசாரி உணர்வலையின் மீது கோர்பின் அமர்ந்திருந்தார், அது அவரை பதவிக்குக் கொண்டு சென்றிருக்கும். ஆனால் சிரியப் போர் மீது சுதந்திர வாக்கெடுப்புக்கு அனுமதித்தும், நேட்டோ அங்கத்துவத்தை மற்றும் முப்படைகளுக்கான அணுஆயுத ஏவுகணை அமைப்பை ஏற்றுக் கொண்டும், தொழிற் கட்சி நிர்வகிக்கும் உள்ளாட்சி நிர்வாகிகள் விசுவாசமாக டோரி-கட்டளையிட்ட வெட்டுக்களை திணிக்க வலியுறுத்திய கோர்பின், பிளேயரிச வாதிகளின் அவ்வப்போதைய வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டதுடன், அவர்களை வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தடுப்பதே அவரின் மத்திய நோக்கமாக இருந்தது.

செல்வாக்கின் உச்சத்தில் இருந்த கோர்பின், பிளேயரிசவாதிகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் நிறுத்த நகர்ந்தார். 2018 இல், அவர் பிளேயரிச நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டாய மறுதேர்வுக்கான கோரிக்கைகளை எதிர்க்க தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டார், அதேவேளையில் நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னல் இலண்டன் நகர ஆதரவை வெல்வதற்கு முனைந்தார்.

இந்தாண்டு ஏப்ரலில் பிரெக்ஸிட் மீதான டோரி நெருக்கடி, மே இன் வீழ்ச்சியை அச்சுறுத்திய போது, கோர்பின் அவர் அரசாங்கத்தைக் காப்பாற்ற முன்நகர்ந்தார். ஒரு பொது தேர்தலுக்கான அழைப்புகளை நிராகரித்த கோர்பின், “தேசிய நலனை" பாதுகாக்கும் பெயரில் மே உடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். அது கடுமையாக வெளியேறுவதை ஆதரிக்கும் மேயின் சொந்த கட்சியினது கன்னை மேக்கு மரண அடி வழங்க செய்து, இறுதியில் 2016 இக்குப் பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இரண்டாவது டோரி பிரதம மந்திரியாக ஜோன்சன் பதவியேற்றதில் போய் முடிந்தது.

இப்போதும் பிரெக்ஸிட் மீது ஆழமாக பிளவுபட்டுள்ள வெறும் மூன்று ஆசனங்களின் பெரும்பான்மையில் உள்ள ஓர் அரசாங்கத்திற்குத் தான் ஜோன்சன் தலைமை கொடுக்கிறார். ஆனால் கோர்பினோ அவரது சொந்த கட்சியின் அரசியல் முன்முயற்சிகளைப் பிளேயரிசத்திடம் ஒப்படைத்துள்ளார், இவர்கள் யூத-எதிர்ப்புவாதம் என்ற மோசடி கூற்றுகளின் அடிப்படையில் இடது நோக்கி சாயும் தொழிற் கட்சி உறுப்பினர்களை வேட்டையாடுவதிலும் மற்றும் கோர்பினை வெளியேற்ற செயலூக்கத்துடன் சதித்திட்டம் தீட்டுவதிலும் மும்முரமாக உள்ளனர். தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரூபேர்ட் முர்டோக்கின் The Sun பத்திரிகைக்கு "தனிப்பட்டரீதியில் கூறியதாவது", திரு ஜோன்சன் எண் 10 அலுவலத்தில் நுழைந்திருப்பது ஏறத்தாழ நிச்சயமாக தொழிற் கட்சி தலைவரை மாற்றுவதற்கான சதி முயற்சிகளை 'வேகப்படுத்தும்'. ஒருவர் கூறினார்: 'போரிஸை வைத்திருப்பது எங்களுக்கு நன்மையாக அமையும் ஏனெனில் என்ன நடக்க வேண்டுமோ அதை அது வேகப்படுத்தும்.'”

தொழிற் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருப்பதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென பிளேயரிசவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் வேல்ஸ் கட்சியான Plaid Cymru ஆகியவற்றுடன் இணைந்த ஒரு தேசிய நல்லிணக்க அரசாங்கம் என்பதே அவர்களின் முன்னோக்காக உள்ளது. இது, 2016 கருத்து வாக்கெடுப்பை "வெஸ்ட்மின்ஸ்டர் உயரடுக்கு" காட்டிக்கொடுத்ததன் மீதான வெறுப்பை மையமாக கொண்ட ஒரு தேசியவாத பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, நைஜல் ஃபாராஜின் பிரெக்ஸிட் கட்சி உடனான ஒரு கூட்டணியில், டோரிக்கள், ஒரு முன்கூட்டிய இலையுதிர்கால தேர்தலில் வெற்றி பெற அனுமதிக்கும்.

வெளியேறலாம் என்று 26 இல் இருந்து 34 சதவீதத்தினர் வாக்களிக்கப்பட்டிருந்த போதினும், அதிலேயே தங்கியிருக்கலாம் என்று வாக்களித்த பெரும்பாலான தொழிற் கட்சி ஆதரவாளர்கள் பெரும்பாலும் வடக்கில் தொழிலாள வர்க்க பகுதிகளில் உள்ளனர், அப்பகுதி பிரெக்ஸிட் கட்சியால் இலக்கு வைக்கப்படலாம். கோர்பின் உருவாக்கிய குழப்பமும் நோக்குநிலை பிறழ்ச்சியும் சேர்ந்த கலவை மே 26 ஐரோப்பிய தேர்தல்களில் எடுத்துக்காட்டப்பட்டது, அதிலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் தொகுதிகளைத் தாராளவாத ஜனநாயகவாதிகளிடமும், பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் பகுதிகளை ஃபாராஜின் வெளிநாட்டவர்-விரோத வெறியூட்டும் கட்சியிடமும் தாரைவார்த்ததால், தொழிற் கட்சியின் வாக்குகள் 15 சதவீதம் அத்தேர்தல்களில் சரிந்தது.

பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் 40 இக்கும் அதிகமான தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பில் ஜோன்சன் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடும் என்ற கரோலைன் ஃபிளின்ட் இன் வாதத்தின்படி பார்த்தால், ஜோன்சன் ஒருவேளை ஒட்டுமொத்தமாக தேர்தல்களுக்கு அழைப்பு விடுப்பதையே கூட தவிர்க்கக்கூடும். கோர்பின் தலைமையின் கீழ் என்ன இல்லை என்றால், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முகங்கொடுக்கும் ஆட்சிக்கான மிகப்பெரிய நெருக்கடியில் தொழிலாள வர்க்கத்தினது அதன் சொந்த நலன்களுக்கான தலையீடு இல்லை.

கோர்பின் வகிக்கும் பாத்திரத்தில் தனித்துவம் ஒன்றுமில்லை. அவர் கிரீஸில் சிரிசாவின் அரசியல் அடியொற்றி செல்கிறார், அது ஐரோப்பிய ஒன்றிய பின்புலத்திலான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்கு சூளுரைத்து ஜனவரி 2015 இல் அதிகாரத்திற்கு வந்ததும், அதற்கு முன்பிருந்த வலதுசாரி புதிய ஜனநாயக கட்சியை விட ஆழ்ந்த வெட்டுக்களை மட்டுமே திணித்தது. பிரிட்டனில் கோர்பின் ஆகட்டும் அல்லது அமெரிக்காவில் பேர்ணி சாண்டர்ஸ் ஆகட்டும், உத்தியோகபூர்வ "இடது" என்பது ஒவ்வொரு இடத்திலும் வர்க்க போராட்டத்தை நசுக்கவும் மற்றும் அரசியல் வெற்றியை வலதிடம் ஒப்படைக்கவும் செயலாற்றுகின்றன—அவ்விதத்தில் தான் பிரிட்டன் இப்போது டொனால்ட் ட்ரம்புக்கு இணையான 10 டவுனிங் வீதியில் அமர்ந்திருக்கும் அதன் அரசியல் நபரைக் கொண்டுள்ளது.

ஒவ்வொன்றும், தொழிலாள வர்க்கம் அவசியமான அரசியல் தீர்மானங்கள் எடுப்பதைச் சார்ந்துள்ளது.

தொழிற் கட்சியானது ஏகாதிபத்திய ஆட்சிக்கான ஒரு கட்சி என்பதோடு, சாமானிய கட்சி தொண்டர்களினது அழுத்தத்தைக் கொண்டு அதை சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போரை எதிர்க்கும் ஒரு கருவியாக மாற்றிவிட முடியாது. கோர்பின் போன்ற "இடதுகள்" முதலாளித்துவ வர்க்கத்தின் விசுவாசமான பாதுகாவலர்கள் ஆவர். அவர்களின் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறி சென்று விடக்கூடிய தொழிலாள வர்க்க இயக்கத்தை அணிதிரட்டும் அபாயத்தை எடுப்பதைக் காட்டிலும் அவர்கள் அவர்களின் சொந்த ஆதரவாளர்களை வெளியேற்றுவதை வேண்டுமானால் ஒழுங்கமைப்பார்கள்.

கோர்பின் பாதுகாக்கும் பலவீனமான சீர்திருத்த உதிரித்திட்டங்களோ, அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் அல்லது வெளியேறலாம் என்பதை ஆதரிப்பதோ, தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் கடுமையான சமூக நெருக்கடிக்கு விடையளிக்காது. ஒட்டுமொத்த உலகையும் இராணுவ மோதலுக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்ற தீவிரமடைந்து வரும் வர்த்தக போரில் அமெரிக்காவுடன் கூட்டு சேரலாமா அல்லது ஜேர்மனி மற்றும் பிரான்சுடன் கூட்டு சேரலாமா என்பது தான் பிரெக்ஸிட் சம்பந்தமாக ஆளும் வட்டாரங்களில் நடக்கும் மோதலாகும். உலகளாவிய போட்டித்தன்மைக்காக என்ற பெயரில், சிக்கன நடவடிக்கைகளை அதிகரிப்பதும் மற்றும் அதிவலதின் வளர்ச்சியுமே இதற்கான விலையாக இருக்கும்.

சோசலிசத்திற்காக பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த இயக்கம் மட்டுமே ஒரு முன்னோக்கிய பாதையை வழங்குகிறது. வர்க்க போராட்டம் நசுக்கப்பட்டு வந்துள்ள பல தசாப்தங்களுக்குப் பின்னர், உலகம், ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் நடக்கும் வேலைநிறுத்த அலையில், மதிப்பிழந்த இந்த சமூக ஜனநாயகவாத கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஓர் அரசியல் கிளர்ச்சியின் ஆரம்ப வெளிப்பாடுகளைக் கண்டு வருகிறது. ஓர் இடது மாற்றீட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கோர்பினின் கூற்று அப்பட்டமாக அம்பலமாவது, இந்த மேலெழுந்து வரும் இயக்கத்தில் சோசலிச சமத்துவக் கட்சி தலைமையின் கீழ் பிரிட்டன் தொழிலாளர்கள் அவர்களின் இடத்தை எடுக்க அவர்களுக்குப் பாதையைத் திறந்து விடுகிறது.