ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The socialist answer to Brexit: For the United Socialist States of Europe

பிரெக்ஸிட்டுக்கான சோசலிச பதில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளே!

Chris Marsden
27 September 2019

பிரெக்ஸிட் மோதல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆட்சி நெருக்கடியைத் தூண்டியுள்ளது, இது சில வரலாற்று முன்மாதிரிகளைக் கொண்டுள்ளது. ஆங்கில உள்நாட்டு போர் பற்றிய குறிப்புகள் உட்பட, வன்முறை மற்றும் மோதல்களின் பாணியில் பிரெக்ஸிட் தொடர்பாக அதிகரித்தளவில் வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடுமையான ஆபத்துக்கள் நிறைந்த இந்த சூழ்நிலை, தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக, அதன் சொந்த நலன்களுக்காக தலையீடு செய்ய வேண்டிய அவசரமான தேவையை முன்வைக்கிறது.

பாராளுமன்ற ஆட்சியின் இறுதிகட்ட சிதைவை அம்பலப்படுத்தவே பிரெக்ஸிட் சேவையாற்றியுள்ளது. பழமைவாதக் கட்சி பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்தை ஐந்து வார காலம் இடைநிறுத்தி வைத்தமை “நமது ஜனநாயகத்தின் அடிப்படைகளின் மீது ஏற்படுத்திய விளைவு தீவிரமானது” என்ற நிலையில், அது “சட்டவிரோதமானது, செல்தகமையற்றது, மேலும் எந்த விளைவையும் ஏற்படுத்தாதது என்பதால் அது இரத்து செய்யப்பட வேண்டும்,” என்று ஏகமனதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அறிவித்தது. ஒட்டுமொத்த வர்த்தகத்தில், பாதியளவிற்கான சந்தைகளை இங்கிலாந்து அணுகுவதில் பாதிப்பை ஏற்படுத்தும், வடக்கு அயர்லாந்தில் புனித வெள்ளி ஒப்பந்தத்தை பாதிக்கும், இங்கிலாந்தின் உடைவுக்கு அச்சுறுத்தும், மேலும் தவிர்க்க முடியாமல் அரசியல் மற்றும் சமூக மோதலைத் தூண்டக்கூடிய பொருளாதாரச் சீர்குலைவிற்கு அச்சுறுத்தும் வகையிலான எந்தவித ஒப்பந்தங்களையும் பிரெக்ஸிட் ஊடாக ஏற்படுத்தாமல் இருப்பதற்கான திட்டங்களை தடுத்து நிறுத்துவதே இத்தீர்ப்பின் அரத்தமாகும்.


ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் (இடது) ஆகியோர், பிரான்சின் பியாரிட்ஸில் ஜி7 மாநாட்டின் ஒருபுறம் ஹோட்டல் டு பாலாயிஸில் நடந்த பணிநிமித்த காலை உணவு கூட்டத்திற்கு முன்னர் ஊடகத்தில் பேசுகின்றனர் ((நன்றி: Erin Schaff, New York Times, Pool))

அதற்கு மாறாக, புதனன்று மீண்டும் கூட்டப்பட்ட பாராளுமன்ற நிகழ்வுகள், இந்த மோசமான குண்டர்களையும் மற்றும் அரசியல் வன்முறை கும்பல்களையும் எதிர்ப்பதில் பாராளுமன்றம் எவ்வளவு பயனற்றதாக உள்ளது என்பதை மட்டும் நிரூபித்துள்ளன. ஜோன்சன், தனக்கு முன்மாதிரியாக கருதும் டொனால்ட் ட்ரம்பின் சிறிய மறுபதிப்பு போல பாவனை செய்வதால் இதை எதிர்க் கட்சிகளின் மீது பழிசுமத்த முடிந்தது, ஏனென்றால் அவர்களைப் பற்றிய மதிப்பீடுகளை அவர் அறிந்துள்ளார். அதிலும் குறிப்பாக மிகுந்த அரசியல் கோழையான, தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் பற்றி அவர் நன்கு அறிந்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் “அடிப்படையில் ஒரு அரசியல் கேள்வி என்பது எது என்று கூறுவதில் தவறு செய்தது,” என்று அறிவித்து, அக்டோபர் 31 அன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதில் எதுவும் அவரைத் தடுக்காது என்று அவர் வலியுறுத்திக் கூறினார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்துவதற்கும் மற்றும் பொது தேர்தலை துரிதப்படுத்துவதற்கும் “உயிரற்ற பாராளுமன்ற”த்தில் கோர்பினுக்கும் மற்றும் சிறிய அரசியல் கட்சிகளுக்கும் —கோர்பின் அவ்வாறு செய்யமாட்டார் என்று அறிந்தே— அவர் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தார். ஜோன்சன் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்ற தனது பிளையரிசவாத வலதுசாரிகளின் கோரிக்கையை கோர்பின் ஒப்புக் கொண்டார், மேலும் அதற்கு மாறாக, ஒப்பந்தமில்லா பிரெக்ஸிட்டைத் தடுப்பதற்கு, தங்கியிருப்பதை ஆதரிக்கும் டோரிக்கள், சுதந்திர ஜனநாயகவாதிகள், ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்கவும் அவர் கவனம் செலுத்தினார்.

இது, கோர்பினின் நாடாளுமன்றத் தொகுதி பற்றிய ஒரு குறிப்பான “இஸ்லிங்டன் ஒன்றை விடுவித்தல்” என்ற அவரை தனது சொந்த கட்சியின் கைதி என்று வர்ணிக்கும் பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கும் வாய்ப்பை ஜோன்சனுக்கு வழங்கியது. ஒரு பொது தேர்தலுக்கு கோர்பினால் கோரிக்கை விடுக்க முடியாது, ஏனென்றால் பொதுத் தேர்தலில் தனது தோல்விக்கான சாத்தியத்தை பற்றி அச்சம் கொள்வதை விட தனது வெற்றி குறித்து அவரது சொந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர் என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

“கௌரவமான காரியத்தை” செய்து இராஜினாமா செய்யும் படி, அல்லது குறைந்தபட்சம் “இராணி மற்றும் நாட்டிடம்” மன்னிப்புக் கேட்கும் படி ஜோன்சனை வற்புறுத்தும் அளவிற்கு கோர்பின் தரமிறக்கப்பட்டார்.

இது, தொழிற் கட்சி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை பரிதாபகரமான எதிர்தாக்குதலுக்கு திட்டமிடும் நிலைக்குத் தள்ளியது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்களுக்கு இது வழிவகுத்தது என்று கூறி, பிரெக்ஸிட்டின் எதிர்ப்பாளர்களைப் பற்றி “சரணடைதல்” மற்றும் “துரோகம்” போன்ற சொற்களை ஜோன்சன் பயன்படுத்தினார் என்று பவுலா ஷெரிஃப் விமர்சித்தார். 2016 பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் இறுதி நாட்களில் ஒரு பாசிசவாதியால் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸின் நினைவுகூரலுக்கு பதிலளித்து, அவரது நினைவை கௌரவிக்க சிறந்த வழி “பிரெக்ஸிட்டை நடைமுறைப்படுத்துவதே” என்று தெரிவித்து வேண்டுமென்றே ஜோன்சன் பதட்டங்களைத் தூண்டினார்.

ஒன்றியத்தில் தங்கியிருப்பதை ஆதரிக்கும் அவையின் சபாநாயகர் ஜோன் பெர்கோவ் நேற்று அவையை ஆதிக்கம் செய்த வார்த்தைகள் நச்சுத்தன்மையான “கலாச்சாரத்தை” கொண்டிருந்தது என்று விவரித்தார். ஜோன்சனுக்கு எதிராக தார்மீக கண்டனங்களை விடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை அடுத்து மற்றொருவர் வரிசை கட்டினர், அதன்பின்னர், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை எதிர்த்து மேலெழுந்தவாரியான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார், அதே நேரத்தில் எந்தவொரு ஒப்பந்தமும் ஒப்புக் கொள்ளப்படாத நிலையில், பிரெக்ஸிட் காலக்கெடுவை நீட்டிப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் Benn Act மசோதாவை ஒரு “சரணடைதல் மசோதா”வாக விவரிக்க தனக்கு உரிமை இருப்பதாக அவர் வலியுறுத்தினார். இதற்காக “பாராளுமன்றத்தில் துரோகிகளை” கண்டித்த கேட்டி ஹாப்கின்ஸ், டாமி ராபின்சன் மற்றும் பிரிட்டன் முதல் அமைப்பின் ஜெய்தா ஃபிரான்சன் உள்ளிட்ட தீவிர வலதுசாரி நபர்களால் அவர் ஒரு வீரராக பாராட்டப்பட்டார். ஜோ காக்ஸின் கொலைகாரன் தாமஸ் மெய்ர், “பிரிட்டன் முதல்” என்று கத்தியவாறே கத்தியால் குத்தியும் சுட்டு வீழ்த்தியும் அவரை கொன்றான்.

ஜோன்சனின் பேரினவாதம், சட்ட ஒழுங்கு குறித்த வாய்சவடால், மற்றும் பாராளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கு எதிராக “மக்களை” அணிதிரட்டவிருப்பதாகக் கூறுவது போன்றவை அதிகரித்தளவில் சர்வாதிகார ஆட்சி நோக்கிய திருப்பத்திற்கான மிகவும் வெளிப்படையான வெளிப்பாடாக உள்ளன. ஆனால் இந்த அச்சுறுத்தல் அவரிடமிருந்து தோன்றவில்லை. ஜோன்சன் தனது முன்மாதிரியாகக் கருதும் டொனால்ட் ட்ரம்பின் பாசிச உளறல்கள் உட்பட, உலகெங்கிலும் இதேபோன்ற நடைமுறைகளைக் காணலாம்.

வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் திருப்பம் மட்டுமே மீண்டும் போராடுவதற்கான வழியை வழங்குகிறது. ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு கன்னையும் ஜனநாயக உரிமைகள் குறித்து உண்மையான அக்கறை கொண்டிராத நிலையில், பாராளுமன்றம் உண்மையில் ஒரு அழுகும் சடலமாக இருக்கின்றது. பாராளுமன்ற இறையாண்மையின் பாதுகாவலர்களாகவும், நீதிமன்றங்களுக்கு கீழ்ப்படிபவர்களாகவும் ஐரோப்பிய ஒன்றிய சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் காட்டிக்கொள்வது, பிரிட்டனின் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய நலன்களை —ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்ததன் மூலம் அல்லது ஒரு ஐரோப்பிய கூட்டினுள் இங்கிலாந்தின் நிலையை பராமரிப்பதன் மூலம்— மேம்படுத்துவதில் ஒரு வர்த்தகப் போரையும் இராணுவ மோதலையும் நடத்துவதற்கான சிறந்த வழி குறித்த கசப்பான உள் பிரிவு போராட்டத்தால் மட்டுமே தூண்டப்படுகிறார்கள்.

தனது சொந்த இராணுவ தகமைகளை வளர்த்து வரும் மற்றும் இந்த வாரம் தான் ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளுக்கு தனது ஆதரவை சமிக்ஞை செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி திரும்புவதன் மூலமாக பிரெக்ஸிட்டின் பிற்போக்குத்தன தேசியவாத திட்டநிரலை எதிர்க்க முடியாது. அதே நேரத்தில் இது புலம்பெயர்ந்தோருக்கான எல்லைப்புற சுவர்களையும், சித்திரவதை முகாம்களையும் கட்டியெழுப்புவதோடு, பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக திட்டமிட்டதைப் போல வெறுமனே தனது சிக்கன நடவடிக்கைகளுடன் தொடர்கிறது. உலக ஆதிக்கத்திற்கான போராட்டத்தின் வடிவம் எதுவாக இருந்தாலும், அது பொலிஸ் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் மீதான மேலதிக தாக்குதலுக்கு கோரிக்கை விடுக்கின்றது.

புதன்கிழமை, பாராளுமன்றம் "ஆபரேஷன் யெல்லோஹாம்மர்" பற்றி விவாதித்தது, இது ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை கையாளுவதற்கான அரசாங்கத்தின் அவசரத் திட்டமாகும். இந்த திட்டம் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை, பாரிய விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார எழுச்சிகள் இருக்கும் என்று கருதுகிறது, தோமஸ் குக்கின் சரிவு இதன் முன்னறிவிப்பு மட்டுமே. ஆனால் "பொது அமைதியின்மை" மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக போராட 50,000 துருப்புக்களையும் 10,000 கலவர போலீசாரையும் பயன்படுத்த திட்டமிட்டதை எதிர்க்கட்சி இருக்கைகளில் இருந்து யாரும் எதிர்க்கவில்லை. உண்மையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அடக்குமுறை தயாரிப்புகளுடன் முற்றிலும் உடன்படுகிறார்கள்.

இந்த திட்டங்களுக்கு எந்தவொரு எதிர்ப்பும் கோர்பினிடமிருந்து வரப்போவதில்லை, ஏனென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் போராட்டமும் நடைபெறாது இருப்பதை உறுதி செய்வதே அவரது ஒரே செயல்பாடாக உள்ளது. இன்று அவர் ஒரு “காபாந்து” அரசாங்கத்தின் வருங்கால பிரமுகராகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மீட்பதற்கு தகுதியுடையவராகவும் வெளிப்படையாகப் பேசுகிறார். 10 டவுனிங் தெருவில் கோர்பின் காலடி வைப்பதற்கு முன்பே, வங்கிகளின் மையமான இலண்டன் நகரத்தின் வர்க்கநலன்களுக்கு விசுவாசமாக அவர் சேவையாற்றுவார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்போது அத்தியாவசியமானது என்னவென்றால், தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக மற்றும் சோசலிசத்திற்காக அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டும். பிரெக்ஸிட் நெருக்கடிக்கான பதில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்படுவது அல்ல, மாறாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக ஐரோப்பாவின் அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிரான கண்டம் தழுவிய போராட்டத்தில் காணப்படும் வர்க்க ஐக்கியத்தில் தான் அதற்கான பதில் உள்ளது.

அத்தகைய போராட்டத்திற்கான புறநிலை நிலைமைகள் தினமும் கனிந்து கொண்டிருக்கின்றன. பெரு வணிகங்களின் பல தசாப்த கால தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம், ஒரு நாட்டையடுத்து மற்றொரு நாடு என தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் இறங்கிய வண்ணம் இருக்கிறார்கள்: குறிப்பாக, அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம்; ஓய்வூதியங்கள், கல்வி, போக்குவரத்து மீதான ஜனாதிபதி மக்ரோனின் தாக்குதலுக்கு எதிராக பிரான்சில் பாரிய வேலைநிறுத்தம்; சூடான், அல்ஜீரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் அரசாங்க எதிர்ப்பு இயக்கங்களின் வெடிப்பு; மேலும் மில்லியன் கணக்கிலான மக்கள் ஈடுபடும் பூகோள அளவிலான காலநிலை ஆர்ப்பாட்டங்கள், மற்றும் “அரபு வசந்தகால”த்தினால் ஏற்பட்ட இரத்தக்களரியான பின்னடைவுகளுக்குப் பின்னர் எகிப்தில் உருவெடுத்த இராணுவ ஆட்சிக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு திரும்பியது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இது இப்போது, பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானிகளின் வேலைநிறுத்தங்கள் 1,700 விமானங்களை ஸ்தம்பித்ததோடு, 120,000 தபால் ஊழியர்களும் 100,000 இற்கு அதிகமான கல்வித்துறை ஊழியர்களும் வேலைநிறுத்த வாக்கெடுப்புகளை நடத்தி வரும் நிலையில் இங்கிலாந்தில் அதன் எதிரொலியைக் கண்டு கொண்டிருக்கிறது. இந்த இயக்கங்கள் அனைத்தையும், சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்த சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கை அடிப்படையாக கொண்டு, தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு நனவான அரசியல் கிளர்ச்சியால் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும்.