ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European powers endorse US war provocations against Iran

ஐரோப்பிய சக்திகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் ஆத்திரமூட்டல்களை ஆமோதிக்கின்றன

By Alex Lantier
25 September 2019

பேர்லின், இலண்டன் மற்றும் பாரீஸூம் ஈரானுக்கு எதிராக இராணுவ ஆக்ரோஷத்திற்கான அமெரிக்காவின் சாக்குப்போக்கு காரணங்களை ஆமோதித்து நேற்று ஓர் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டன. டொனால்ட் ட்ரம்ப் நியூ யோர்க் ஐ.நா. பொது சபையில் ஈரான் மீதான அவரது கண்டனங்களை அமைதிக்கு ஓர் இரத்தவெறிபிடித்த அச்சுறுத்தலாக தயாரித்திருந்த நிலையில், இந்த மிகப்பெரிய மூன்று ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் அரசாங்கங்களும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் ஆத்திரமூட்டல்களை சுய-நிரூபண உண்மைகளாக அறிவித்தன.

அவற்றின் "பகிர்ந்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு நலன்களை, குறிப்பாக உலகளாவிய ஆயுதப்பரவல் தடுப்பு முறையைத் தாங்கிப்பிடித்தும் மற்றும் மத்திய கிழக்கில் ஸ்திரப்பாட்டைப் பேணுவதற்காகவும்" என்று குறிப்பிட்டு, அவை சமீபத்தில் சவூதி எண்ணெய் ஆலைகள் மீது குண்டுவீசப்பட்டது சம்பந்தமான வாஷிங்டனின் சொல்லாடல்களுடன் வரிசைக்கட்டி நிற்கின்றன: "செப்டம்பர் 15, 2019 இல், சவூதி பகுதியில் அப்குயைக் மற்றும் குரைஸ் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை நாங்கள் கடுமையான வார்த்தைகளோடு கண்டிக்கிறோம், மற்றும் இந்த சூழலில் சவூதி அரேபிய முடியாட்சி மற்றும் அதன் மக்களுக்கு எங்களின் முழுமையான ஆதரவை மீளவலியுறுத்துகிறோம்.”

இம்மூன்று ஐரோப்பிய சக்திகளும், அந்த குண்டுவீச்சை ஈரான் நடத்தியதாகவும் மற்றும் ஓர் இராணுவ விடையிறுப்புக்குத் தகுதியுடைய போர் நடவடிக்கை என்றும் வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்களை ஆதரிக்க எதற்காகவேனும் எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை. அவை சர்வசாதாரணமாக தொடர்ந்து குறிப்பிட்டன, “இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் பொறுப்பாகிறது என்பது தெளிவாக உள்ளது. அங்கே வேறெந்த நம்பத்தகுந்த விளக்கமும் கிடையாது. மேற்கொண்டு விபரங்களை ஸ்தாபிக்க நாங்கள் தொடர்ந்து நடந்து வரும் புலன்விசாரணைகளை ஆதரிக்கிறோம்.”

“ஒரு பெரும் மோதல் அபாயம்" குறித்து குறிப்பிட்டு, பேர்லின், இலண்டன் மற்றும் பாரீஸூம் போர் அபாயத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளான — 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை அது கைதுறந்ததில் இருந்து ஈரான் மீது குண்டுவீசுவதற்கான அதன் இந்தாண்டு அச்சுறுத்தல் வரையில் — அவற்றின் மீது பழிசுமத்தாமல், மாறாக தெஹ்ரான் மீது பழிசுமத்தி, சூழ்நிலையைத் தலைகீழாக்கிக் காட்டின. கடந்தாண்டு ட்ரம்ப் ஒதுக்கித் தள்ளிய அந்த அணுசக்தி உடன்படிக்கையுடன் ஈரான் முழுமையாக இணங்கி செயலாற்ற வேண்டும் என்றும், “தீவிரப்படல் மற்றும் ஆத்திரமூட்டலைத் தேர்ந்தெடுப்பதைக் கைவிட" வேண்டுமென்றும் அவை கோரின.

ஈரானுக்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்ய வாஷிங்டன் சவூதி அரேபியாவுக்கும் துருப்புகளையும் பாரசீக வளைகுடாவுக்கு போர்க்கப்பல்களையும் அனுப்பி உள்ள நிலையில், இந்த அறிக்கையின் உள்ளடக்கம் குழப்பத்திற்கிடமின்றி உள்ளது. முன்னணி ஐரோப்பிய ஏகாதிபத்திய அதிகாரங்கள் 2015 உடன்படிக்கையை ட்ரம்ப் ஒதுக்கித் தள்ளியது மீதான அவற்றின் ஆரம்ப விமர்சனங்களைக் கைவிட்டு வருகின்றன. 2003 இல் ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான போரில் வைக்கப்பட்டதைப் போல அதேபோன்ற அரசியல் பொய்களின் அடிப்படையில், மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான ஒரு புதிய போரைக் கட்டமைப்பதை ஆமோதித்து, அவை இம்முறை அதுபோன்றவொரு போரை ஆதரிப்பதையும், சாத்தியமானால் இணைந்து கொள்ளவும் சமிக்ஞை செய்கின்றன.

வாஷிங்டன், அதன் தரப்பில் இருந்து, ஈரானுக்கு எதிரான அதன் நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஆதரவைப் புகழ்ந்துரைத்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ பின்வருமாறு ட்வீட் செய்தார்: “சவூதி அரேபியாவுக்கு எதிரான போர் நடவடிக்கை மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் உலகமெங்கிலும் அதன் தாக்கத்திற்கும் ஈரானே முழுவதுமாக பொறுப்பாகிறது என்று தெளிவாக வெளிப்படுத்தியதற்காக, எங்களின் நெருங்கிய நண்பர்களான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு அமெரிக்கா நன்றி தெரிவித்துக் கொள்கிறது.” பொம்பியோ அவரின் இரண்டாவது ட்வீட் செய்தியில், பெரும் பொய் உத்தியை பயன்படுத்தி ஐரோப்பிய அறிக்கையைத் தொடர்ந்து பாராட்டினார்: “இது இராஜாங்க விவகாரங்களையும் அமைதி நடவடிக்கைகளையும் பலப்படுத்தும். ஈரான் நடவடிக்கைகள் மீதான இந்த கண்டனத்தில் ஒவ்வொரு தேசமும் இணைய வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல்களை ஐரோப்பா ஆமோதிப்பது, அமைதியைப் பலப்படுத்தாது, மாறாக ட்ரம்ப் நிர்வாகம் அதன் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை அதிகரிப்பதற்கு அதை ஊக்குவிப்பதுடன், ஒரு பேரழிவுகரமான போர் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அனுமானிக்கத்தக்கவாறு, ட்ரம்ப் நேற்று ஐ.நா. பொதுச்சபையில் ஆற்றிய அவர் உரையை சோசலிசத்தைக் குறைகூறுவதற்காக மட்டுமல்ல, மாறாக மிரட்டும்ரீதியில் ஈரானை அச்சுறுத்தவும் பயன்படுத்தினார். “ஈரானிய ஒடுக்குமுறை ஆட்சி தான், இன்று அமைதி-விரும்பும் நாடுகள் முகங்கொடுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது,” என்று அறிவித்த அவர், ஈரானுக்கு எதிராக ஆதரவுக்கு முறையிட்டார்: “எல்லா நாடுகளுக்கும் செயல்பட வேண்டிய கடமை உள்ளது. எந்த பொறுப்பான அரசாங்கமும் ஈரானின் இரத்த தாகத்திற்கு விட்டுக் கொடுக்கக்கூடாது. ஈரானின் அச்சுறுத்தும் நடத்தைத் தொடரும் வரையில், தடையாணைகள் நீக்கப்படாது. அவை இறுக்கப்படும்.”

அமெரிக்க ஜனாதிபதியின் வாதங்களும் அவற்றை ஆதரிக்கும் ஐரோப்பிய அதிகாரங்களின் அறிக்கைகளும் பொய்களின் பொதிமூட்டையாக உள்ளன. மூன்று தசாப்தங்களாக, 1991 இல் அமெரிக்க தலைமையிலான வளைகுடா போர் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்குப் பின்னர் இருந்து, ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவைச் சீரழித்துள்ளன. ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் யேமனில் அவர்களின் போர்கள் மில்லியன் கணக்கானவர்களைப் பாதித்தது, ஒட்டுமொத்த சமூகங்களையும் சீரழித்தது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராணுவத் தளங்களின் வளையத்தை கொண்டு ஈரான் சுற்றி வளைக்கப்பட்டது. அமைதிக்கான முக்கிய அச்சுறுத்தலே வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளின் சதிகளில் இருந்து வருகிறது.

வாஷிங்டன் ஆகட்டும் அல்லது சவூதி முடியாட்சி ஆகட்டும் அப்குய் மற்றும் குரைஸ் மீதான குண்டுவீச்சுக்களை ஈரான் தான் நடத்தியது என்பதற்கு எந்த ஆதாரமும் முன்வைக்கவில்லை. அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று வெளியான ஓர் அறிக்கை, சவூதி தலைமையிலான மற்றும் நேட்டோ ஆதரவிலான போரால் இலக்கு வைக்கப்பட்ட ஒரு நாடான யேமனின் ஹௌதி படைகள் மீது அதை சாட்டுகிறது, அங்கே 2015 இக்கு பின்னர் இருந்து பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் உட்பட 90,000 இக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தபட்சம் 84,701 குழந்தைகளைப் பட்டினிக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த அறிக்கை உண்மை என்றாலும் கூட, ஹௌதி படைகள் சவூதிகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக வாதிடக்கூடும்.

2003 அமெரிக்க போர் முனைவுகளுக்கான ஐரோப்பிய சக்திகளின் விடையிறுத்ததற்கும் அவற்றின் இன்றைய விடையிறுப்புக்கும் இடையே கூர்மையான முரண்பாடு உள்ளது. ஈராக் பாரிய பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாலும் அணுஆயுத பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த அவற்றை அல் கொய்தாவுக்கு வழங்க திட்டமிடுவதற்காகவும் ஈராக் மீது அது படையெடுக்க இருப்பதாக 2003 இல் புஷ் நிர்வாகம் பொயுரைத்த போது, ஜேர்மனியும் பிரான்சும் கூட்டாக அதை எதிர்த்தன. ஈராக்கிற்கு எதிராக இராணுவ ஆக்ரமிப்பை அங்கீகரிக்கும் அமெரிக்க தீர்மானங்களைப் பாதுகாப்பு அவையில் வீட்டோ தடுப்பதிகாரம் கொண்டு தடுக்க பிரான்ஸ் அச்சுறுத்தியது.

அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் டு வில்பன் பெப்ரவரி 14, 2003 இல் ஐ.நா. பாதுகாப்பு அவையில் வழங்கிய உரையில், வாஷிங்டன் அதன் போரை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்திய அதே பொய்களுடன் முரண்பட்டார். “பத்து நாட்களுக்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர், திரு. பவுல், அக் கொய்தாவுக்கும் பாக்தாத் ஆட்சிக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக குற்றஞ்சாட்டி கருத்துரைத்தார். எங்களின் ஆராய்ச்சி மற்றும் உளவுத்துறையின் தற்போதைய நிலை ஒருபுறம் இருக்க, அதுபோன்ற தொடர்புகளை ஸ்தாபிக்க எதுவுமே எங்களை அனுமதிக்கவில்லை. மறுபுறம், நாங்கள் சர்ச்சைக்குரிய இராணுவ நடவடிக்கை ஏற்படுத்தும் பாதிப்புகளை மதிப்பிட்டே ஆக வேண்டும் ... “ என்றார்.

இன்று, ஐரோப்பிய சக்திகள் சவூதி அரேபியா மீதான தாக்குதல்கள் குறித்து எந்தவொரு "கூடுதல் விபரங்களும்" தெரிய வருவதற்கு முன்னரே தீர்மானத்திற்கு வர முண்டியடிக்கின்றன என்பது மட்டுமல்ல, ஆனால் எந்த "நம்பத்தகுந்த" மாற்றீடும் இல்லை என்று கூறி ஈரான் மீது பழி சுமத்துவதற்காக ட்ரம்பின் ஓட்டத்துடன் ஒவ்வொருவரும் உடன்பட வேண்டும் என்று வாதிடுகின்றன.

வில்பன் உரையாற்றி 16 ஆண்டுகளுக்குப் பின்னர், வாஷிங்டனின் ஏகாதிபத்திய போட்டியாளர்களை ஆதரிப்பதன் அடிப்படையில், போரை எதிர்க்கும் முயற்சிகளின் திவால்நிலைமை மீது ஒரு கசப்பான படிப்பினை பெறப்பட்டுள்ளன. வாஷிங்டன் ஈராக்கை தாக்கியது என்பது மட்டுமல்ல, ஆனால் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கில் அவற்றின் வர்த்தக மற்றும் மூலோபாய நலன்களைக் கணக்கிட்டு மற்றும் சர்வதேச அளவில் ஏகாதிபத்திய-எதிர்ப்புணர்வு அதிகரித்து வருவதையும் கணக்கிட்டு, விரைவிலேயே 180 பாகை திரும்பிவிட்டன. பாரீஸூம் பேர்லினும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எண்ணெய் நிறுவனங்களை அனுப்பியும் துருப்புகளை நிலைநிறுத்தியும் புஷ் நிர்வாகத்துடன் உறவுகளைச் செப்பனிட்டன.

போருக்கு எதிரான ஓர் இயக்கத்திற்கு ஒரு சமூக அடித்தளத்தை வழங்கும் ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும், அங்கே போர் மீது ஆழமாக அதிகரித்து வரும் விரக்தியும், முதலாளித்துவம் உருவாக்கி உள்ள சமூக சமத்துவமின்மை மீது வெடிப்பார்ந்த கோபமும் நிலவுகிறது.

பேர்லினும் பாரிஸூம் அவற்றின் பங்கிற்கு பிரிட்டன் பிரதம மந்திரி போரீஸ் ஜோன்சனுடன் வரிசையில் நிற்கின்றன. 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை நேற்று குறைகூறிய இவர், ஈரான் உடனான அமெரிக்க போர் "சூழ்நிலைக்கு அவசியமான விதத்தில் உதவாது" என்று குறிப்பிட்ட அதேவேளையில், ஈரானுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை ஐரோப்பா ஆதரிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

“ஜனாதிபதி ட்ரம்ப் சரியாக கூறியதைப் போல, யதார்த்தம் என்னவென்றால், அதுவொரு மோசமான உடன்படிக்கை,” என்று ஜோன்சன் தெரிவித்தார். “அதில் பல கோளாறுகள் உள்ளன. ஈரான் அப்பிராந்தியத்தில் தொந்தரவூட்டும் வகையில் நடந்து கொண்டது மற்றும் அவ்வாறே நடந்து வருகிறது. ... ஒரு சிறந்த உடன்படிக்கையை மேற்கொள்ள அங்கே ஒரேயொருவர் தான் இருக்கிறார், இந்த நிலையில் ஈரானுடன் எவ்வாறு ஒரு சிக்கலான பங்காண்மை பெறுவது என்பதை ஒரேயொருவர் தான் புரிந்து வைத்துள்ளார், அவர் தான் அமெரிக்க ஜனாதிபதி,” என்றார்.

ஒரு பேரழிவுகரமான மோதலின் மிகப்பெரும் அபாயம் குறித்து சர்வதேச தொழிலாள வர்க்கம் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதே மிகப்பெரும் ஆபத்தாக உள்ளது. யேமனில் இருந்து, சிரியா வரையில் ஆப்கானிஸ்தான் வரையில் மத்தியக் கிழக்கு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சுக்கு இலக்கு பட்டியல்களை மீளாய்வு செய்து வரும் ட்ரம்ப், அணு ஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவுடன் மற்றும் அணுசக்தி போர் அபாயத்துடன் ஒரு மிகப்பெரிய தீவிர மோதலாக மாறக்கூடிய பிராந்தியம் தழுவிய போரைத் தொடங்குவதில் இருந்து வெறும் ஒருசில அடி தூரத்தில் மட்டுமே நிற்கிறார்.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளோ அவற்றின் பிற்போக்குத்தனமான அறிக்கையுடன், பேரழிவை நோக்கி வாஷிங்டன் கண்களை மூடியவாறு சென்று கொண்டிருக்கையில் அதனுடன் இணைந்து வருகின்றன.